சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

வைகைச் செல்வி

வனம்பாடி, வானம்பாடி, வனராணி

சி. ஜெயபாரதன், கனடா

***************

இந்த பூமி நமதே
இந்த வானம் நமதே
இந்த நீர்வளம் நமதே
முப்பெரும் சூழ்வளத்தை
துப்புரவாய் வைக்கும்,
ஒப்பற்ற பொறுப்பு நமதே.

இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங் களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளை உலகப் பேரவைகளில் உரையாற்றிக் காட்டி வருபவர், வைகைச் செல்வி. ‘கூடுவிட்டுக் கூடு பாயத் தனிப் பறவைக்குக் காலெதற்கு ? சிறகெதற்கு ? ‘ என்று கேட்கும் வானம்பாடி வைகைச் செல்வி, தமிழகத்தில் திருச்சி, நெய்வேலி, மதுரை, சிவகாசி, சென்னை, கரூர், கோவை, திருப்பூர், நாகை போன்ற தளங்களுக்கு அடிக்கடிச் சென்று சூழ்வெளி மாசுப் பிரச்சனைத் தீர்வுகளில் பங்கெடுத்தும், பெண்டிர் உரிமை பற்றிக் கருத்தரங்கு களில் உரையாற்றியும் வருகிறார். தனிப் பறவையாகக் காலில் சக்கரங்கள் பூட்டிக், கைகளில் இறக்கைகளைக் கோர்த்து, இப்பணிகளைக் கனிவோடும், பூரிப்போடும், அயராது, அலுக்காது செய்து வரும் வைகைச் செல்விக்கு இணை எவருமில்லை. ‘செவிக் குணவில்லாத போது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘ என்ற வள்ளுவர் வாக்குப்படி வைகைச் செல்வி, ஊழியப் பணிபுரிந்து ஓய்வான வேளைகளில், எழுத்துப் படைப்புகளில் ஈடுபட்டுக் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வருகிறார். பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்று, வைகைச் செல்வியின், ‘அம்மி ‘ என்னும் ‘கவிதைகள் நாற்பது ‘ புதுயுகத் தமிழ்க் காவியப் பூங்காவில் பூத்த வாடா மலர்கள்!

வைகைச் செல்வியின் சாதனைகள்

வைகைச் செல்வி என்னும் புனைப்பெயர் போர்த்திய ஆனி ஜோஸ்ஃபின் மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரையில் மேற் படிப்பை முடித்து மூன்று கல்லூரிப் பட்டங்கள் [M.A.(Eng.Literature), M.Com., M.B.A.] பெற்றவர். அவற்றிலும் திருப்தி அடையாமல் மேலும் சிறப்பு நுட்பங்களைப் பயின்று வேறு சில மேல்நிலை டிப்ளோமாக் களையும் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) வாங்கியவர். ‘கற்றது கடுகளவு! கல்லாதது கால் பந்து அளவு ‘, என்னும் கல்வி நெறியை மேற்கொண்டு, முனைவர் பட்டப் படிப்புக்குத் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] தன்னைப் பதிவு செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.  சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரி யாகப் பணியாற்றி வந்தவர்.  மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய பின் தற்சமயம் கல்வியாளராக உருவெடுத்து ஒரு பொறியியல் கல்லுாரியில் பணியாற்றி வருகிறார்.

பள்ளிப் பருவம் முதலே கவிதைகள் எழுதத் துவங்கி கடந்த 20 வருடங்களாகக் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள் சிலவற்றிலும், உலக சூழ்மண்டலப் பேரவைகள் சிலவற்றிலும், தமிழ்நூல்கள் வெளியீடுக் கூட்டங்களிலும் பெண்டிர் நிலை மேம்பாடு பற்றிப் பலமுறை உரை யாற்றி யிருக்கிறார். 2005 ஜூன் முதல் உதயமாகி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும், ‘வானகமே, வையகமே ‘, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் ‘இது நம்ம பூமி ‘ என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கெளரவ ஆசிரியராகப் பணிபுரிந்து அதற்கு மெருகேற்றி, ஒளியேற்றி வருகிறார்.

2002 டிசம்பரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இவரது முதற் காவியம், ‘அம்மி ‘ என்னும் கவிதைத் தொகுப்பு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக மதிப்புப் பெற்றுள்ளது! பணிபுரியும் பெண்டிர் பாலியல் சீண்டல் இன்னல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி வைகைச் செல்வி ‘பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு ‘ என்னும் ஒரு நூலில் எழுதியுள்ளார். தமிழகத்தின் சில கவிஞர்களைச் சூழ்வெளியைப் பற்றி எழுத வைத்து ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2003 இல் அந்நூல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொண்டுள்ளது. அந்தத் தமிழ்நூல் 2013 இல் “Echo of Nature”  [இயற்கையின் எதிரொலி] என்னும் பெயரில் சி. ஜெயபாரதனால் மொழிபெயர்க்கப் பட்டு ஓர் ஆங்கில வெளியீடாக வந்துள்ளது.   அவரது கதைகளை எல்லாம் ஒன்று திரட்டிக் ‘கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும் ‘ என்னும் தலைப்பு நூலைக் காவ்யா பதிப்பகம் 2004 டிசம்பரில் வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டில் ‘ஊழியப் பணிபுரியும் பெண்டிர் படும் பாலியல் சீண்டல்கள் ‘ பற்றி அவரது கைநூல் ஒன்றும் வெளியானது.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2002 ஆண்டில் வைகைச் செல்வியைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பரிசும் அளித்தது. சிறந்த பெண் எழுத்தாளியாகச் சக்தியின் 2003 ஆண்டுப் பரிசும் அவருக்குக் கிடைத்தது. திருப்பூர் லயன்ஸ் கிளப் 2003 இல் அவரைப் பாராட்டிச் சிறந்த பெண் கவிஞர்ப் பரிசைக் கொடுத்தது. 2006 பிப்ரவரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய, ‘சூழ்வெளியும், சுத்தமய நிலைப்பாடும் ‘ [Environment & Sustainability] எனப்படும் உரை அரங்கில் அவர் வாசித்த, ‘பாரதத்தில் சூழ்வெளிப் பாதுகாப்பு நிலைப்பாடு ‘ என்னும் கருத்துரைப் பத்துச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திருச்சி ஸெயின்ட் ஜோஸஃப் கல்லூரி ஏற்படுத்திய, ‘விஞ்ஞானத் தமிழ் தேசீயச் சொற்பொழிவு விழாவில் ‘ [National Seminar on Scientific Tamil] வைகைச் செல்விக்குச் ‘சூழ்வெளிக் கவிஞர் ‘ [Environmental Poet] என்னும் சிறப்பு விருதை அளித்துள்ளது. திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் அவரை வெற்றிப் பெண்மணி என்று பாராட்டிக் கெளரவித்துள்ளனர். 2006 மார்ச் 8 ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள ‘மாதர் பொதுத்துறைப் பணியகம் ‘ வைகைச் செல்விக்குப் ‘பெண் சாதிப்பாளி ‘ என்னும் விருதைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர், ‘வைகைச் செல்வியின் கவிதைகளில் பெண்ணியம் ‘ பற்றிய ஒரு தெளிவுரையைத் [Thesis] தயாரித்துள்ளார். 2004 டிசம்பரில் நேர்ந்த தெற்காசிய சுனாமிப் பாதிப்பு பற்றிய ஓர் ஆய்வுரையை, 2005 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி முதலாண்டு நினைவுப் பூர்த்தி விழாவில் வைகைச் செல்வி உரையாற்றி வெளியிட்டார். மாதம் ஒருமுறை அண்ணா பல்கலைக் கழக வானொலி நிலைய ஒலிபரப்பில், ‘சக்தி அறிவாயடி ‘ என்னும் வழக்கமான வாயுரையில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சூழ்வெளி மாசுகள் சம்பந்தமாகக் குட்டித் திரைப்பட வெளியீடுகள் சிலவற்றைத் தயாரித்துள்ளார். அவரது கவிதைகளைச் சென்னைப் பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளன. பாமரக் கலைக்கூத்து மூலம் [Folk Arts] தமிழகம் எங்கும் பரப்பும் பயிரின, உயிரினச் சூழ்வெளிக் கலாச்சாரக் குழுப் [Eco Cultural Awareness Team] படைப்புநரும் அவரே.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வைகைச் செல்வியின் சிறப்புப் பணியை மெச்சி அவரை மூன்று மாத மேற்பயிற்சி பெற டென்மார்க் தேசத்திற்கு  2001 ஆண்டு அனுப்பியது. அந்த மகிழ்ச்சியான பயிற்சி சமயத்தில் நோய்வாய்ப்பட்ட அவரது அருமைத் தந்தையார் சென்னையில் எதிர்பாராது காலமாகி, வைகைச் செல்விக்கு அதிர்ச்சி அளித்து ஆறாத துயரை, நெஞ்சில் அழியாதவாறு பதித்து விட்டது!

வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

மதுரை வைகை ஆற்றங்கரையில் துவங்கி, சென்னைக் கடற்கரை வரையில் என் கவிதைகள் பயணம் செய்கின்றன என்று வைகைச் செல்வி தனது ‘அம்மி ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முச்சங்கம் வைத்து, முத்தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்களின் பாதம் பட்ட மதுரை மாநகரில் பிறந்து, வளர்ந்து, கன்னித்தமிழில் புலமை பெற்று, ஒளவையார், ஆண்டாள் வழித்தோன்றலாய் அரியதோர் காவியம் படைத்ததில் பெருமிதம் கொள்கிறார். வெள்ளமோ அல்லது வெற்று மணலோ எது காணப்பட்டாலும், தன் கற்பனைக்கு ஊற்றாய் இருந்ததோடு பெரும்பாலான துயரங்களையும், ஏமாற்றங்களையும் கவிதைகளாக மாற்றயதே அந்த வைகை ஆறுதான் என்று மனதின் உள்ளோட்டத்தைக் காட்டிக் கொள்கிறார்.

பல்வேறு வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், போர்க்கள அவசரத்தில் ஏற்படும் வேதனைக்கு நடுவில் எவ்வித முயற்சியும் செய்யாமலே பல சமயங்களில் தானாக முகையவிழ்ந்த வரிகளே கவிதைகளாகப் பரிணமிதுள்ளன என்று சொல்கிறார். பூவைத் தொடுவது போல், பூவாசத்தை எப்படி ஈர்ப்பது ? கவிதை வரிகளுக்குள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒருமணம் இழையோட வேண்டும் என்று கூறுகிறார் வைகைச் செல்வி. சொல்ல நினைப்பதைச் சொல்ல இயலாமல் ஏற்படும் நெஞ்சுத் துடிப்பைப் போல், கவிதையின் தாக்க மிருக்க வேண்டும். நிரம்ப மெய்ப்பாடும், சிறிது கற்பனையும் கலந்தவை அவரது கவிதைகள். வைகைச் செல்வியின் படைப்புக்கு வித்திட்டவை வானவில், மழை, இலைகள், மரங்கள், மலர்கள், காதல், கனவு, காட்டு வெளி, காலம், நட்பு, சினம், மோதல், அநீதி, சுயநலம், அடிமைத்தனம், பதவி உயர்வு, பொய்வாசம் போன்றவை. அம்மி கூடத்தான் அவரது கவிதைப் பூக்களில் ஒன்றாக மலர்கிறது. படைப்புகள் உள்பட தனது எல்லா முயற்சி களுக்கும், தேடல்களுக்கும் சேர்ந்து உழைத்து, காயம் பட்டபோது மனதைத் தேற்றிப், போராட்டங்களில் தனக்கு உதவியாகத் தோள் கொடுத்து, மேம்பட்ட கல்வியையும், இறைப்பற்றையும் ஊட்டி, உன்னத நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்தவர், அருமைத் தந்தை திரு. ஆபிரகாம் ஞானமுத்து இஸ்ரேல் என்று தனது முன்னுரையில் போற்றுகிறார், வைகைச் செல்வி.

எது கவிதை ? என்ன செய்யும் கவிதை ?

கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு கவிதையும்… பல கவிதைகளும் ‘ என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல், வரிகள் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிக் கொண்டு உட்கருத்து விளங்காமல் சிக்கலானவை; படிப்போருக்குப் பொருள் மயக்கம் அளிப்பவை; வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார் வைகைச் செல்வி. கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோடிக் கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாகத் தாளமுடன் நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும். வெறும் சொற்களை மட்டும் சுடவிட்டுப் பட்டாசு போல் வெடிக்க விட்டால் பார்க்க விந்தையாகவும், வேடிக்கையாகவும் மனதைத் துள்ள வைக்கும்! ஆனால் அவை எல்லாம் ஒளியற்று விண்ணில் புகையாக மறைந்து, மண்ணில் குப்பையாக நிறைந்து மாசுகளாக மண்டிக் கிடப்பவை!

மரபில் விளையாடி
புதுமைப் பூச்சூடி,
நடந்த இளங் கவிதை
நவீனப் புயலில் சிக்கி விட்டது!….

நவீனத்தில், மேலும்
இடியாப்பச் சிக்கல்கள்!
மடக்கிய வரிகளுக்குள்
அடங்குமோ ஓர் கவிதை ?

என்று சுட்டிக் கேட்டபின் வைகைச் செல்வி தொடர்கிறார்,

பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துருக்கி,
வார்த்தை விதை ஒன்று,
மூளைக்குள் தெறிக்க,
முளை விட்டு உணர்வுக்குள்
கணுக் கணுவாய்ப் பயிர் வளர,

செங்குருதிப் புனல் பாய,
மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
மனசெல்லாம் சர்க்கரையாய்,
நெஞ்சுக் குழிக்குள்ளே,
இறங்கி வழிந்தோடி
உறங்கும் உயிர்ப் பந்தை,
(உசிப்பிப்)
புரட்டுவது கவிதை

என்று ஓர் அரிய விளக்கம் தருகிறார்.

எது கவிதை என்னும் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலிதுதான்: கவிதை என்பது,

உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

பொய்யுலகைக் கண்முன்னே காட்டுவது!
பூரணத்துவம் நோக்கிக்கை நீட்டுவது!
மெய்யுலகைத் தூண்டிலிட்டு மீட்டுவது!
மேம்பாட்டை மின்னல்போல் ஊட்டுவது!

கவிஞர் திலகம் புகாரியின் ‘அன்புடன் ‘ வலையிதழில் எழுந்த ‘எது கவிதை ‘ என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலுடன் பின்னாங்கு வரிகளைச் சேர்த்துள்ளேன்.

கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல். காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு. பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்! தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அவற்றின் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது! நேரமின்றி நோக்கும் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது!

மூச்சை எடுத்துக் கொண்டு கடைசியாக ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்துபோய்த் தொடர்ச்சி அறுபடுகிறது! முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது! அவ்விதச் சிரம மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக் கடலில் மூழ்கி எடுத்தெழுதிய சின்னஞ்சிறு முத்துக்கள்! உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்! உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்! பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது! அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் காவியக் கவிதைகள்! அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் வெறும் குட்டிக்கரணம் போடவில்லை! சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை! வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!

வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை. வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன! கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன! கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு சொல்கின்றன! புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை! காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகப் பதுங்கிக் கொண்டிருப்பதால்தான்! தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை; ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம். படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது கவிதைக் காவியம் படைக்கபட வில்லை!

வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை. கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன. கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன. வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் பிறருக்கு உபதேசிக்க வில்லை! ஒரு கவிதை சங்கை வாயில் வைத்துக் கொண்டு சிங்கம் போல் உறுமிக் கர்ஜிக்கும் போது அதன் சப்தம் செவிப்பறையில் விழுவதற்குப் பதிலாக அதைக் கிழித்துப் போட்டு மூளையில் பதியாமல் நழுவுகிறது. சொல்லாமல் சொல்லும் நெறியும், செய்யாமல் செய்த உதவியும் என்னாளும் மறக்கப் படுவ தில்லை. வைகைச் செல்வியின் வரிகள் வாழ்க்கை நெறியைச் சொல்லாமல் சொல்கின்றன. ஒவ்வொரு கவிதையும் அவரது மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. ‘அம்மி ‘ என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் மின்னல்போல் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது! ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது! சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது!

வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன! மெய்த்துவ வாழ்க்கை முறைகளை மெல்லிய நடையில் சொல்லுகின்றன. சில கவிதைகளில் முடிவில் வரும் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது! சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

பெண்மையும், விடுதலையும்

கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் வைகைச் செல்வி, ‘உள்ளே ஒரு வானவில் ‘ என்னும் கவிதையில்:

தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்,
இல்லையெனில்
மரண வேதனை!
தாழ் திறக்கா விட்டாலும்
மரண வேதனை!

அந்திப் பொழுதின் வானவில்!

பரிதி மறையும் போது செவ்வானின் சிவப்பொளி பட்டால், அந்திப் பொழுதின் வானவில் எந்த நிறத்தில் ஒளிக்கும்! நிச்சயம் ஏழு நிறங்களைக் காண முடியாது! வெண்ணிற ஒளி ஒன்றுதான் மழைத்துளிகளின் ஊடே நுழையும் போது பன்னிற வானவில் தோன்றும். செந்நிற ஒளியில் வானவில்லின் கண்சிவந்து போகும், கதவு திறக்கும் என்று காத்திருக்கும் மங்கையின் விழிகளைப் போல்!

பகலென்று தெரிந்தால்,
சிறகுகளை விரிக்கலாம்!
இரவென்று தெரிந்தால்
கூட்டுக்குள் ஒடுங்கலாம்!

அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
சில்லென்ற குளிர்காற்றும்,
சிங்காரப் பூமணமும்,
உன் முத்தம் தந்திடுமோ ?

கால மயக்கத்தில்
கண் விழித்துப் பார்க்கையில்
பகலா, இரவா ஏதும் புரியவில்லை!
அந்திப் பொழுதின் வானவில் ….

செந்நிறத்தில் மங்கிக் கலங்கிப் போயிருக்கும் மங்கையின் மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.

பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

பாரதத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்! காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன! ஆனால் இந்திய சமூதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்க வில்லை! உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே! அதுவும் யாருக்குக் கிடைத்தது ? பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே! மீதித் தொகையானப் பெண்டிருக்கு ? விடுதலைப் பதில் ஆடவரின் தடுதலை பெண்ணுக்குக் கிடைத்தது! பெண்களின் விடுதலை களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகள் ஆக்கப் பட்டார்! அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவருக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இவ்வுலகம் ஆடவரின் உலகம்! ஆடவர்களால் உண்டாக்கப் பட்ட உலகம்! ஆடவருக்காக உண்டாக்கப் பட்ட உலகம்! பாரத தேச வீடுகளின் கூரையைப் பிரித்துப் பார்த்தால் இப்போதும் பெரும்பான்மையான வீடுகளில், பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். பிறருக்குத் தெரியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் பல்லாயிரக் கணக்கான பாரதப் பெண்டிர், ஆடவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு அடிமைகளாய், சேடிகளாய்ப் பணிசெய்து மெளனக் கண்ணீர் விட்டு ஊமைகளாய் நெஞ்சுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள்!

அன்று

அடிமைச் சிறையில் இருந்தோம்.
காந்தியும், நேருவும், பட்டேலும், ….
பாரதியாரும்,
வீர சுதந்திரம் வேண்டிப்
(போராட)
(சிறைக்) கதவுகள் திறந்தன!
தலைமறைகள் கடந்தோட
(பெண்களாகிய) நாங்கள்,
இன்றும் சிறையில்தான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
சாவி
எங்களிடமே உள்ளது!

பாரத தேசத்தில் பூரண சுதந்திரம் அடைந்தவர் மெய்யாக ஆடவர் மட்டுமே! தேவையான மானிட உரிமைகளுக்குப் போராடி ஏமாற்றம் அடையும் பெண்டிருக்கு எப்படிக் கிடைக்கும் விடுதலை ? எப்போது கிடைக்கும் உரிமைகள் ? அடிமைப் பட்ட பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை படாரென்று உடைக்கவோ அல்லது பூட்டைக் கிளிக்கென்று திறக்கவோ அவரிடமே உறுதியும், சாவியும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவது அவரது புரட்சி மனதை வெளிப்படுத்துகிறது. ஆனால் வல்லமை பெற்ற ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடி, நெஞ்சுறுதியை நசுக்கி வருகிறது என்பது கட்டுரையாளர் கருத்து!

‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ? ‘ என்னும் கவிதையில் வாழ்வின் இன்ப துன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் கூறுகிறார். தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு, வெகு அழகாகக் கூறுகிறார்! வாழ்க்கையில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் அன்னிய ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது, உலவி வருவது முற்றிலும் தவறு; அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது! ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதோடும் தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனிதப் பண்பு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் [ ‘தாயின் மடியில் ‘] கனிவாக வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

‘சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிபோம்! ‘

‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! ‘
‘செந்தீ யணைக்க நீருண்டு!
சினத்தீ யணைக்க யாருண்டு ?

‘மங்கையராகப் பிறப்பதற்குப் பெரும்
மாதவம் செய்திட வேண்டு மம்மா! ‘

என்று கவிமணி பாடினார்.

ஆனால் வைகைச் செல்வி பெற்ற தாயைப் பார்த்துப் பெண்ணைப் பெறுவதற்கு நீ மாதவம் செய்யத் தேவையில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்! பெண்ணென்று உளவிப் பெண்கருவை நீக்கும் கண்ணிய மனிதர் வாழும் இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பதே பாபமாகக் கருதப்பட்டுப் பெண்டிர் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

என் தாயே! ..
என்னைப் பெற நீ
மாதவம் செய்திருக்கத்
தேவை யில்லை!
அந்தக் கூட்டத்தில்
எந்தன் பிரிய நண்பன் இருக்கிறான்.
பகற் பொழுதினிலேயே
அவனுடன் நானமர இயல வில்லையே!
(ஆனால்) இவ்விரவில்… ?
அவன் ஓர் ஆணாம்!
நானோர் பெண்ணாம்!
என் மனத்தின் ஆண்மை
யாருக்குப் புரியும் ?
ஆதாமுக்குப் பிறகு ஆடவனு மில்லை!
ஏவாளுக்குப் பிறகு பெண்டிரு மில்லை!
இது இங்கே யாருக்குப் புரியும் ?

நட்பு, சுமை, சுயநலம், மெளனம்!

‘நட்பு ஓர் அழகிய கண்ணாடிக் கிண்ணம்! அது ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்! ஆனால் எளிதில் உடைந்து ஒட்டாமல் போகும் கண்ணாடிக் கிண்ணம் ‘ என்று ஓர் இனிய சிறு கதையைத் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார் நமக்கு.

ஒரு முரட்டுக் குதிரை முட்செடி ஒன்றை மிதித்த பின் கூறுகிறதாம்: ‘தளிர்ச் செடியே! உனது முள் என் காலை யிடறிக் காயப் படுத்தியது; எனக்கு வலித்தது உண்மைதான்! ஆனால் அந்த முள்ளில்லா விட்டால், நான் உன்னைக் கடந்தல்லவா போயிருப்பேன், ‘ என்று தணிவாய்ச் சொன்னது.

குதிரைக் கால் நசுக்கிய முட்செடி கால்பட்டுக் கசங்கினாலும், கசிந்த இலைகள் ஒளியுடன் பலபலக்க, ‘குதிரையே! உன்னைத் தெரியாமல் குத்தி விட்டேன் நான். மன்னித்துவிடு என்னை ‘ என்று கனிவாய் சொல்லியது.

குதிரை வெட்கத்துடன் தலைகவிழ்ந்து, ‘தளிர்ச் செடியே! நானும் உன்னைத் தெரியாமல் மிதித்து விட்டேன், என்னை நீ மன்னித்து விடு ‘ என்று பணிவாய்ச் சொன்னதாம்.

இதுதான் நட்பு என்று தன் குட்டிக் கதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! அவனும் நானும் ஆணும் பெண்ணுமாக அல்லாமல், என்றென்றும் தோழர்களாய், அருகருகே நிற்கிறோம்! ஆயினும் எங்களுக்குள் ஓர் சிறு இடைவெளி, முகக்கண்களின் இடைத்தூரம், எமக்கு நடுவில்! அச்சிறு அகலத்திலே காலநதி கரை புரண்டோடுகிறது, ‘ என்று ஆண்-பெண் இடையே நேரும் புனித நட்பைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்! கணவனின் பிணைப்பிலோ, நண்பனின் உறவிலோ அல்லது ஆண்-பெண் நட்பிலோ பழக்க, வழக்க முறைகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது வெகு வெகு அபூர்வம்! பிரச்சனைகள் தீவிரமாய்ப் பற்றி எரியாமல் இருப்பதற்கு யாராவது ஒருவர் ஊமையாகவோ, செவிடாகவோ அல்லது குருடாகவோ இருக்க வேண்டும்! குதிரையும், முட்செடியும் எதிர் எதிரே நின்று தானிழைத்த தவறை உணர்ந்து வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்வது, ஒரு மகத்தான சமூகக் காட்சி! மெய்யான தம்பதிகளோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ யாரும் அவ்வித அமைதி வழியில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அபூர்வம்!

வாழத் தெரியாத தோழன் ஒருவனுக்கு, ‘மெளனம் ‘ என்னும் கவிதையில் பெண்ணொருத்தி ஓர் ஊசி போடுகிறாள். அவனுக்கு கடிதத்தில் என்ன எழுதுவது ? புறக்கணிக்கும் தன் மனதை எழுத்தில் தோழனுக்கு எப்படிக் காட்டுவது ? கண்ணெதிரே காணும் போது, உறவை முறிக்கப் போகும் பெண்ணொருத்தி எப்படி அதைத் தெரிவிப்பாள் ?

நானுனக்கு
என்ன எழுத வேண்டுமென்று
தெரியவில்லை!
ஆனால் (உனக்கு)
என்ன எழுதக் கூடாதெனத்
தெரிகிறது!

உன்னிடம் நான்
என்ன பேச வேண்டும் என்று
இதுவரையில் தெரிய வில்லை!
ஆனால் (உன்னிடம்)
என்ன பேசக் கூடாதெனத்
தெரிகிறது!

அதனால்தான் நீ
நேரில் இருக்கையில் பேசாமலும்,
தூரப் போய்விட்ட பிறகு
எழுதாமலும் இருக்கிறேன்!

இவ்விதம் வாழத் தெரியாத தோழன் மீது வாளெடுத்து வீசாமல், எளிய வாதத்தின் மூலமாக மெளன ஊசி போட்டு வெளியே தள்ளும் பெண்ணை எவராவது பார்த்ததுண்டா ? தோழனைக் காயப் படுத்தாமல், ‘போயொழி, திரும்பி வராதே ‘ என்று புறக்கணிப்பதை இத்தனை மென்மையாக, மெழுகு மொழியில் எந்தப் பெண்கவி சொல்லி யிருக்கிறார் ?

‘உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும், ‘ என்று கவிஞர் கண்ணதாசன் வெள்ளித் திரைப் படமொன்றில் பாடல் புனைந்தார். பிரியப் போகும் நண்பன் ஒருவன் தனது தோழி மீது பூவை வீசி விட்டாலும், பூவிலுள்ள முள் அவளது கண்ணைக் குத்தி விடுகிறது! அவன் அவளிடம் சொல்லாமல் போகிறான். பிரிவுத் துயரைச் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் மிருகத்தைப் போல் நீங்குகிறான். அதைக் கண்டு மனம் வருந்துகிறாள் ஒரு மாது! படிப்போர் நெஞ்சைத் தொடுகிறது, அவரது பாடலின் பரிவு வரிகளும், ஊசிமொழி நடையும்!

நண்பனே!

எந்நேரத்திலும், எதற்காகவும் நீ
என்னைப் பிரிந்து போகலாம்! அது
உன்னுடைய சுதந்திரம்!
பிறரைப் போல நீயும்,
என் மீது
கல்லெறியலாம்! ….

என்னைக்
காயப் படுத்தலாம்!
கூழாங் கற்கள் முதல்
பாறாங் கற்கள் வரை, எனக்குப்
பரிச்சயமே!
அன்பின் மிகுதியால்
பளிங்குக் கற்களை வீசியவரும் உண்டு!
ஆனால்
உனக்கு உரிமை அதிகம்..!

நண்பனே! நீதான்
கதவைத் திறந்து
(என்னை) எட்டிப் பார்த்தாய்!
ஆச்சரிப் பட்டாய்!
அன்பு காட்டினாய்!
முகம் தெரியாத போதும்,
பெயர் சொல்லி அழைத்தாய்!
பிறகென்ன ?
எல்லா வற்றையும், நீயே மூடலாம்!
ஆயினும்
நீ திறந்தது சாளரக் கதவுதான்!

யாரென்று அறிவதற்குள்
பிரிந்திட்டாய்!
கற்களை வீசியவர்
மத்தியில்
நீயோ பூவை வீசினாய்!
முள்ளொன்று
கண்ணில் தங்கி விட்டாலும்,
என்னில்
ஒருகணம் மென்மை (உணர்ச்சி)!
கண்ணிமைக்க மறந்தது
என் குற்றம்தான்!

என்னைப் போல் நிறமுடைய
அத்தூதனைத் தவிர
வேறெவனும்
எனக்குச் சொந்த மில்லை!
சொல்லாமல் பிரிந்திட்டாய்!
தண்ணிலவும், செங்கதிரும்
யார் அழைத்து வந்தன ?
யார் சொல்லிப் போயின ?
நீயும் பிரிந்து செல்லலாம்,
அது உன் சுதந்திரம்!

என்று கசப்பு மொழிகளை உதிர்த்து, நண்பனுக்கு நிரந்தர ஓய்வை அளிக்கிறார், வைகைச் செல்வி!

சினமென்னும் கொல்லியைப் பற்றிக் கூறும் போது, ஒளவை மூதாட்டி போல் முதுமொழியில் கூறுகிறார்:

செந்தீ யணைக்க நீருண்டு!
சினத்தீ யணைக்க யாருண்டு ?

என்று தீப்பறக்கச் சொல்லும் சொற்கள் மனப்பாறையில் அழுத்தமாகப் பொறிக்கப் படுகின்றன!

எரிமலை வெடிக்க
அக்கினிப் பொறிகள்
சரமாய்ச் சொரியும்! …
மல்லிகை பந்தலில்
அனற் கங்குகள்! …
வெள்ளை உள்ளம்,
மெல்லிய தளிர்க்கொடி எல்லாம்…
கோபத் தீயில் ..
உருகி யோடும்! …
அறிவு மயங்கி, ஆன்மா மறைய
உணர்ச்சிக் கொதிப்பில்… ஆட்டம் போடுது
மனித மிருகம்!

வேரை அழிக்கும் செந்தீக்கு
உன்னில் அசையும்,
உயிர்ப்பூத் தென்றலைச்
சுவைத் தறிய வழியேது ?

தொழிற் துறைகளில் பெண்டிர் பணியாற்றும் போது, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் என்பது பாலைவனக் கனவுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதையில் வருந்துகிறார். ஆடவருக்கு ஊழியப் பயிற்சி அளித்த மூத்த அனுபவப் பெண்ணுக்கு முன்பாக, அதே வாலிபர் பதவி உயர்வு பெற்று அதே பெண்ணுக்கு அதிபதியாக ஆவது, ஆடவர் உத்தியோக உலகில் வழக்கமாக நேரும் அதிர்ச்சி நிகழ்ச்சிகள்.

ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும்… கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் ….!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க ….
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!

காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள் ….
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் ….
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னையும் மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!

என்று மனவேதனைப் படுகிறார்!

‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு ? அதே அந்தப் பெண்களுக்குத்தான்!

‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்!

என் வீட்டு ரோஜாப்பூ
யாருடைய வீட்டு மேஜையிலோ ?
நான் கோர்த்த மணிமாலை
எந்தப் பொம்மை கழுத்திலோ ?
என் தோட்ட மருதாணி
யாருடைய விரல்களிலோ ?
என் வீட்டுத் தென்னங் கீற்று
யார் வாசல் தோரணமோ ?

ஆனால்
யார் யாருக்கோ வரவேண்டிய
வலியும், துக்கமும்
ஒட்டுமொத்தமாய்
(வருவது)
எனக்கு மட்டும்தான்!

பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.

காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே!

என்னைப் பார்த்து
ஊர் கூடிச் சொல்கிறது:
‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘
அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
என் தட்டு மட்டும்
தாழ்ந்தி ருக்கிறது!
நான் மறைந்து விட்டேனாம்!

கட்டைகள் மிதக்கையில்,
கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!….
மலைதான் என்னை இடறிற்று,
கூழாங்கற்கள் அல்ல! ….

ஏறிக் கொண்டிருக்கையில்
ஏணியை எடுத்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்பேன்!

மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.

ஆணவத் தேரேறி

(என்னை)
ஒடுக்கப் பார்த்தாலும்,
கண்ணாடிக் குப்பிக்குள்
(வெடித்து விடும் பெண்மை எனும்)
புயல்காற்று ஒடுங்குமோ ?

என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.

‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.

அச்சம் எனக்கில்லை!
தாழ்வும் எனக்கில்லை!
எதிராளி பலம் பார்த்து (நான்)
போருக்கு வரவில்லை!
இந்நெருப்பில் கைவைக்க
எவர் வந்தால் என்ன ? ….

தொடர்ந்து விழுகின்ற
சம்மட்டி அடிகள்…
உலைக் களத்தில் புரள்கையில் ….
வலியின் கீற்றுகள்
உடலெங்கும் பரவும்!
சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
பறக்கையில்
எனக்கெதற்கு மரக்கால்கள் ?

என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.

ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ?

‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!

உணர்ச்சி முழக்கங்கள்

தீக்குச்சி போலாகி,
மனத்தை உரசுகையில்
(கனல் பற்றி எரிந்து விளைபவை)
ஆறாத ரணங்கள் அம்மா! ….
சமுதாய இருட்டிற்கு
வெளிச்சம் தேவைதான்!

அதற்காக
உன்னை நானும்,
என்னை நீயும்
எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? ….
ரயில்பெட்டி எரித்துச்
சவப்பெட்டி செய்யலாமா ?

என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.

புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.

இனிய இந்தியனே!
பிறனை நேசித்துப்
பிறனைப் புரிந்து கொண்டால்
(உறுதியாய்) நமக்குள்
ஓர் வல்லரசு தோன்றாதா ?

இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.

‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்!

உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா ? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு ? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா ? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று ?

இப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! …தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா ? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!

பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!

‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ? தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.

பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.

‘சென்ற நிமிடம் வரை
நீயும் நானும் காதலித்தது….
உண்மை!
(திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)

இப்போது நீ சொல்கிறாய்,
அண்ணன் ஒரு தண்டச் சோறு,
அவன் வேண்டாமாம்! ….
அணியணியாய்க் கழற்றி
(பொன் நகைகள்)
அத்தனையும் விற்று
என்னைப் படிக்க வைத்த
என்னருமை அம்மா வேண்டாமாம்!
எட்டு விரல்களைத்
தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
என் அக்காள் வேண்டாமாம்!
ஓய்வு பெற்ற பின்னும்
ஒன்னே கால் லட்சத்தை
அன்பளிப்பாய்த் தந்த
(என்னருமை)
அப்பாவும் வேண்டாமாம்!

‘அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே!

கேளடா அறிவு கெட்டவனே!
கல்யாணம் ஆகிவிட்டால்,
கல்லாகி விடுவேனா ?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கை யெனில்
எனக்குப்
பந்தக்கால் தேவை யில்லை!
சொந்தக்கால் போதுமடா!

என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.

வனம்பாடி, வானம்பாடி, வனராணி

வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார்.  2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது.  அந்தத் தமிழ்நூல் 2013 இல் “Echo of Nature”  [இயற்கையின் எதிரொலி] என்னும் பெயரில் சி. ஜெயபாரதனால் மொழிபெயர்க்கப் பட்டு ஓர் ஆங்கில வெளியீடாக வந்துள்ளது.  வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி!

‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.

நிலையற்ற இன்பத்தில்
நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
போதை தெளிந்த பின்னும்
புறப்பட மனமில்லை! ….
போதி மரத்தின் கீழ்
பொழுதெல்லாம் தூங்கியதால்
‘நான் ‘ மட்டும்
என்னில் விசுவரூபம் எடுத்தது!
நீதியும், நேர்மையும் ….
ஓங்கி அழைத்தாலும்,
மரத்தின் நிழலே
சுகமாய்ப் போயிற்று!

‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா! தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்!

நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
மனித நாற்றுகளை
மெளனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!

நாள்தோறும் பேருந்து,
வாகனங்கள், வண்டிகளின்
கரிய புகையால்
வெளியை நிரப்பும்! ….
ஓங்கியுயர்
மரங்களை வெட்டி விட்டார்.
மழையும்தான் பொய்க்காதோ
மண்ணுலகம் தன்னில் ? ….

ஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்
சாலைகள் வைத்தார்!
ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
மாணவருக்கு
அங்கே இலவசமாய் அளிக்கப்படும்!

மனிதரால் மாசுபட்ட
வாயு மண்டலத்துக்கோர்
முகமிருந்தால்
அம்மைத் தழும்புகள்
நிறைந்திருக்கும்! ….
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
சத்தமின்றி வருவதால்
யாருக்கும் கவலை யில்லை!
ஊருக்கும் புரிய வில்லை!

சுற்றுப்புறம் என்பது
எங்கோ யில்லை!
என்னைச் சுற்றி …. உன்னைச் சுற்றி
நம்மைச் சுற்றித்தான்.

சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிப்போம்!

வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி! மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.

‘மரங்களே!… ஓ மரங்களே! ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.

மரங்களை நேசிக்கிறேன்,

மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
இனிய வசந்தத்தில்
இலைகள்
பகலில்.. பல்வேறு நிறத்தில்
மெல்லிய மஞ்சலில், ..
அரக்கு வண்ணத்தில்
கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
கண்சிமிட்டிச் சிரிக்கும்!
என்னை அருகே அழைக்க ..
தவம் செய்கின்றன.
அருகிருக்கையில்

தாழக்கிளை பரப்பி, (என்னைத்)
தொட்டுவிடத் துடிக்கும்!
தூரத்தி லிருந்தாலும்
கரமசைத்துக் கூப்பிடும்! ….
என்னைப் போல
நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்!
இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
என்னை நேசிக்கின்றன!

அதனால் சொல்கிறேன்,
மரங்களை வெட்டாதீர்!
வெட்டுகையில்
இதயத் துடுப்பு எனக்கு
மெல்ல, மெல்லக் குறையும்!

இறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து.

இறைவா! ஒரு
வரம் வேண்டும் எனக்கு.
மரமாய் மாற வரம் வேண்டும்!

அந்த மரத்தில்
ஆயிரம் கரங்கள் வரும்!
எதற்கு ? … (கனிகள் பறிக்க)
ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
காக்கை, குருவி தேடி வரும்!
கவிதை சொல்லக் கூடு கட்டும்!

வெட்ட வெளியில் நின்றாலும்,
பட்ட மரமாய் ஆனாலும்,
பூங்கதவாய் உருவெடுப்பேன்!
வெட்ட வரும் மனிதனை
விரட்டிப் பிடித்து
உயரே தொங்க விடுவேன்!

ஏ மனிதா!
நீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,
நீ கட்டிய ஆலைப் புகையால்
மூச்சு முட்டும்!
நீ ஓட்டும்
வாகனக் கரிப் புகையால்,

வாயு மண்டலம் மாசுபடும்!

நானோ
தென்றல் காற்றைத் தவழ விட்டுக்
கொண்டல் தொட்டு
மழை பெய்து,
சுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்!
இறைவன் படைத்த பூமியிது!
இதைத்
தூசுபடுத்த, மாசுபடுத்த
எவர்க்கு மிங்கே உரிமை யில்லை!

மரத்தை வளர்த்திடுவாய்,
பரம்பொருள் கட்டளை
இது வென்பேன்.

(மரத்தை)
வெட்டிப் போட எத்தனித்தால்,
கட்டிப் போடுவேன்
காலமெல்லாம்!

கடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்! ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.

காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது ?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!

‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.

‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை! ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.

உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து எங்கே போனாய் ? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது! அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ? ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை! மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.

என் கூடு எதுவெனத் தெரிய வில்லை!

‘கல்லும், வில்லும்…புல்லாங்குழலும் ‘ என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.

எல்லாப் பறவைகளும்
கூடுகளுக்குப் போய்விட்டன!
அந்தி மயங்கும் வேளையில்
தனிப் பறவையாய் அலைந்தும்
என் கூடு எதுவென
எனக்குத் தெரிய வில்லை!
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?

அத்துவானக் காட்டில்
வேடரைத் தவிர யாருமறியேன்!
உன் கையில்
வில்லையும், கல்லையும்
எதிர்பார்த்தேன்!
(ஆனால் நீ)
புல்லாங் குழலுடன்
வந்தாய்!
கூடு விட்டுக் கூடு செல்ல
காலெதற்கு ? சிறகெதற்கு ?
கலைந்த கூடுகள்
காணாமல் போய்விட்டால்,
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?

நானுனக்குப் பல்லக்குத் தூக்கியல்லவா ?

‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!

நான் உன் நாட்டுக்குத்
திரும்பி வந்த அகதி!
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றைச் சுவாசிக்கிறேன்.
ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
ஒரு குவளை நீருக்கும்
கையேந்தி நிற்கையில்
கட்டிப் பிடித்தென்னை
(நீ) முத்த மிடுகையிலே,
நெஞ்சக்குழி
கண்ணீரால் நிரம்பியது!

உன் சன்னதியில்
நின்றாலும்,
தூபக் காட்டும்
(தீபப் பூசாரி) அல்ல நான்!
நாயகன் பொற்பாதம் கழுவிட
வாசற் படியோரம்
(என்னேரமும்)
காத்திருக்கும் அடிமை நான்!

என் அரசே!
கம்பீரமாக நீ உலா வருகையில்,
உன்னோ டிருப்பதற்கு
கட்டாயத் தகுதி….
(என்ன எனக்கு ?)
பட்டத்து ராணியா ?
ஆமென்று சொல்லாதே!
(பாமரனே!)
பல்லக்குத் தூக்கி யன்றோ ?
எந்நாளும் நானுனக்கு ?

அடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:

பக்கத்தில் வந்தால் …
பல்லிளிக்கும் பச்சோந்தி…!
விரட்டிப் பயனில்லை!
ஒன்று பலவாய்ப் பெருகி
கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
போராடிப் போராடி
எதிர்க்கப் பலமின்றிச்
சடலம் சரியும்!
காக்கையும் காத்திருக்கும்,
நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

பெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.

கேட்பாரற்ற தொரு
அழுக்கு மூட்டையாக,
வேண்டாத குப்பையாகத்தான்
ஒரு மூலையில் கிடக்கிறேன்!
கப்பலின் சுமை
மிதமிஞ்சிப் போனாலும்
என்னை.. நடுக் கடலில்
எறிந்து விடாதே! …
பிணைப்புக் கயிறை
அறுத்து விடாதே!

‘கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ ? ‘

என்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.

பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர்! ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான்! ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்!

ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:

மனிதன் படைக்கப் பட்டதோ
தேவ சாயலில், அவன்
உருமாற்றம் ஆனதோ
ஹிட்லராய்,
முசோலினியாய்!
இன்றவன்
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை!

மனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்!

கடவுளும், மனிதனும்
ஒன்றிணைந்த அற்புதம்,
என்பதை நினை வூட்டவே
இன்று [கிறிஸ்மஸ் தினத்தில்]
மறுபடி பிறக்கிறது,
பெத்லகேம் குழந்தை.

என்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.

அம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.

இறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள்! ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்! நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.

தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++

வைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,
[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை: 600 024

+++++++++++++++
S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  (July 8, 2013) [R-2]

https://jayabarathan.wordpress.com

13 thoughts on “சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

  1. Excellent review of Ms Selvi and her writings. She is an unusual person with unusual skills as exemplified in her writings. You have done an excellent job of condensing her write ups.

  2. மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் .. எழுதியவர் பாரதி அல்ல.கவிமணி அல்லவா.
    வைகை செல்விக்கு வாழ்த்துகள்.

    அன்புடன்,
    பொன்.கந்தசாமி.

  3. When I read few stanzas you have referred above,I am fully convinced with whatever you have expressed about Madam Selvi’s writings. While I was reading this review even I thought it may be little exaggerated. But you made me to go in search for her Books. Her way of handling the Tamil language is powerful like BULLETS while they are in a simple language which even any lay man can understand. I enjoyed reading.
    I thank you for introducing this REVOLUTIONARY LADY POET VAIGAI SELVI. May GOD BLESS her with good health and spirit to continue her mission to serve the Nation.

    -S.M.Guptha.Bangalore.

  4. அன்பின் திரு ஜெயபாரதன்,

    வைகைச்செல்வியின் முத்தான படைப்புகள் அத்தனையையும் வெகு அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஐயா. பெண் விடுதலை பற்றியும் , பெண்களின் இன்றைய நிலை குறித்தும் , தாமரை இலை தண்ணீர் போன்ற ஆண், பெண் நட்பு போன்ற பல்வேறு விசயங்களை கருத்தாய் வழங்கியுள்ள வைகைச்செல்வி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

  5. Respected Sir ,Ithink that this ironic lady is as per the wishes of Mahakavi Bharathi.In some cases,she uses AK47.that attacks those who will be the deeds done Your analytical is just like the old song words (Kaithal uvthalakatri oru perulkan aythal arudaiar kannathae).I think this poet has participated in a few pattimantram also with Soloman Poppiah.Plz send this view to that madam.God will give her enormous power,health ,and ideas,she carry over her issues.With kind regards DK

  6. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  7. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

  8. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.