அன்புள்ள நண்பர்களே,
“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.
கனிவுடன்,
ஜெயபாரதன், கனடா
+++++++++++++
https://jayabarathan.wordpress.com/seethayanam
தீண்டப்படாத சீதா
~ சீதாயணம் ~
(ஓரங்க நாடகம்)
சி. ஜெயபாரதன், கனடா
முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.
உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!
உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.
உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.
லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.
ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப் போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!
++++++++++++
நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….
[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]
+++++++++++
முதலாம் காட்சி:
சீதா நாடு கடத்தப்படல்
****
இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,
நேரம்: பகல் வேளை.
பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.
[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]
இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?
இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?
இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?
இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!
பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவுமில்லை.
இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?
பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.
இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?
இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!
மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?
இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!
இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!
இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.
இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!
இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?
இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!
இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?
இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!
பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.
இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனிதத்தை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.
பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?
இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.
சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?
இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!
இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?
இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!
இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘
இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.
பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?
இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!
இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!
இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.
(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)
(முதல் காட்சி முற்றும்)
****
(இரண்டாம் காட்சி தொடரும்)
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
7. https://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]
8. http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]
9. http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]
10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]
11. http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]
12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana [[Ramayana By : Vivekananda] [April 16, 2012]
13. http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
14. http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
15. http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
16. http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014) [R-3]
https://jayabarathan.wordpress.com/
காட்சி இரண்டு
வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.
நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]
[அரங்க அமைப்பு:
இரதத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!
சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?
இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?
சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!
இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!
சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!
இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!
சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!
இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!
சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?
இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.
சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!
இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?
சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!
இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!
சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?
இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.
சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?
இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!
சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?
இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.
சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?
இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!
சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!
இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!
சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).
இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.
[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]
மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.
சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.
இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.
[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]
++++++++++
காட்சி மூன்று
ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு
இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.
பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.
வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?
சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?
சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?
வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனார் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!
சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.
வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.
வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)
சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).
வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!
சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!
வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!
சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்!
வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது!
சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).
வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?
சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!
வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.
சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?
வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.
சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.
வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.
சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!
வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)
[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள் பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]
***********
காட்சி நான்கு
அயோத்திய புரியில் ஆரம்பித்த
அசுவமேத யாகம்
இடம்: அயோத்திய புரி அரண்மணைநேரம்: மாலைபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.
[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.
அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. ‘பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு வேந்தன் இராமனுக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தைக் காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும்’. போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]
சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.
லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!
சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?
லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை இழந்து போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!
[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].
சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!
[எச்சரிக்கை அம்பைக் கவணாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].
லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]
சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்கு கிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இலங்கா புரியில் இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.
************
காட்சி ஐந்து
லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
இடம்: காட்டுப் போர்க்களம்.
நேரம்: மாலை.
பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.
அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப் போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்து விட்டன! இராமப் பிரபுவின் சின்னஞ் சிறு கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.
இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?
லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.
இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மாமன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியவன் நான்தான்!
லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதிலை நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்! ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!
லவா: என் பெயர் லவா! இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டைச் சகோதரர்! அன்னை வால்மீகி ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.
இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?
லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் மன்னரே ? [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்!
இராமன்: [சிரித்துக் கொண்டு] பாலர்களே ! உங்கள் யுத்த தர்மத்தை நான் மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடனும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?
லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், நீங்கள் ஏன் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார். நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? ஏன் வில்லைக் கீழே போட்டீர் ? சிறுவருடன் போரிடக் கூடாது என்று எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?
இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது சரியன்று. முறையன்று.
லவா, குசா: அது சரி மாமன்னரே! அப்படியானால் எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?
இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!
லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்யப் பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும் இந்த அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையை ஈடுபடுத்த வேண்டாம் மாமன்னரே ! … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள். பார்க்கலாம் !
இராமன்: பாலர்களே ! அதில் ஒரு சிக்கல் உள்ளது! நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை. அது அவசியம் எனக்குத் தேவை. அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?
லவா, குசா: மாமன்னா ! தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை! அவருக்கு நேரமுமில்லை! அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம். அவர் பெரிய பராக்கிரமசாலியாம்! கனமான வில்லை ஒடித்து, என் தாயை மணந்தவராம் ! அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … [கோபமுடன்] ஆனால் ஒரு கொடுமை ! தாங்க முடியாத கொடுமை. அவர்தான் எங்கள் அருமைத் தாயை, விலக்கிக் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்! கடும் கல்நெஞ்சக்கார மனிதர்! கர்ப்பமான எங்கள் தாயை அவர் காட்டுக்குத் தனியே அனுப்பியது அநியாயம், அதர்மம், அநீதி !
இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அந்த மன்னனை நேரே காண நேரிட்டால் என்ன செய்வீர் ? என்ன தண்டனை கொடுப்பீர்கள் ?
லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து ஆவேசமாய்] இந்த கூரிய அம்புகளால் அவரது நெஞ்சைத் துளைப்போம், பிளப்போம், துண்டு துண்டாக்குவோம் ! ….
[அப்போது சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று சீதை அவதியுடன் ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சில சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] ….
லவா: அதோ எங்கள் அன்னை! எங்களை நோக்கி வருகிறார். ….
[சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப் பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா இருவரும் தாயைத் தொடர்கிறார்கள்]
சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ? இந்த உத்தமனை மரத்திலே இப்படிக் கட்டலாமா ? உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்!
[லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து கண்ணீர் பொங்கச் சீதாவைக் கும்பிடுகிறான். அவளது காலில் விழுந்து கண்ணீரால் கழுவுகிறான். ]
அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?
சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.
லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!
அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.
சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?
அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]
சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.
லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]
இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.
சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!
சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!
சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!
சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!
சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?
இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.
சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!
+++++++++++++++
காட்சி ஆறு
முடிவை நோக்கிச் சீதா
இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.
நேரம்: மாலை வேளை
பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.
(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)
லவா, குசா: [தரையில் கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.
இராமன்: [கனிவுடன்] அருமைப் பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத் தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும் அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!
லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ? போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது! எடுங்கள் உங்கள் வில்லை!
இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.
லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ? எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?
[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]
வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!
லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே போடுகிறார்கள்)
இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.) வணக்கம் மகரிஷி!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள் அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள் கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள் அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால், தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும் தவிர்த்திருப்பேன்!
லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத் தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ? எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான் யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள் பிதாவா ?
இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத் தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.
குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக் காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்! [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா ? வெட்கமா ? உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]
வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர் உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!
இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என் புதல்வர்களா ?
வால்மீகி: ஆமாம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு] சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும் தந்தைக்குக் குறைய வில்லையே!
வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே! அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என் ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக் கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும் இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!
[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன் முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]
மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல், சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின் எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன் எங்கள் சந்திப்பு!
இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில் பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச் சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார் ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும் எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள் அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உமது தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன், அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன் பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின் இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!
லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன் அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.
வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.
லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக் கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ? எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?
இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!
லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின் கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன், இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)
வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம் முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.
சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள் ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி! இதுவரை அவரது விழிகள் என்னை நோக்க வில்லையே !
வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள் உன் மடிமீது விளையாட வேண்டியவர், இந்தக் காட்டுப் புழுதி மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது! நீங்கள் சேர்ந்து கொள்ள இறைவன் அடுத்தோர் வாய்ப்பை அளித்துள்ளான். அழைத்துச் செல் மூவரையும் மாமன்னரே !
இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய் உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும் எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ? இதுவரை கொடுத்த தண்டனை போதும். எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.
பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.
இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! இம்முறை லவா, குசா இருவரையும் நிச்சயம் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறேன்.
இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவுள்ளம், கண்ணியம், கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்த போது ஜனக மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும் அறத்துடன் நடப்போம்.
லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால் அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப் போவதில்லை. இதுவரை நாங்கள் தந்தையைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக் காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ? தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல் என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!
இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள் வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!
லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர் எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள் கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.
வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.
இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ? என்னை மீண்டும் அவமானம் செய்ய வேண்டுமா ?
சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப் படாதவள் ஆகிவிட்டேன்! அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்! (கோவென்று அழுகிறாள்)
லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள் பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால் உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண் தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும் தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?
சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல் மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல் படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது! ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச் சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக அரண்மனையில் காட்சி தரக் கூடாது!
இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை அகற்றி விடுகிறேன்.
வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?
சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர் விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர் என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை! அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப் போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான் முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம் அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில் போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான் கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப் பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி! கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும் இடம்பெற முடியவில்லை இதுவரை! ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சியே !
வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?
இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி! மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப் போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத் துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள் வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன். மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! .. ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப் பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில் இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ? நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!
வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று நான் கனவு கூடக் காண வில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப் பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவுக்குக் கொடுத்த தண்டனை, பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில் அதிகம்!
சீதா: வேண்டாம் மகரிஷி! பெயரை மாற்ற வேண்டாம். என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில் என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே இருக்கட்டும்.
பரதன்: [கோபத்தில்] அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டீர்கள்! அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்! அன்னையிடமிருந்து பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்! உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும் புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.
அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம் இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத் திரும்பப் போகிறேன்.
லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால் உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும் வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் நங்கள் தங்கிக் கொள்கிறோம்.
வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள் புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று சொல்லி சீதாவை அழைத்துச் செல்லுங்கள்.
சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம் என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்! அப்போது எல்லாரது பிரச்சனை களும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) …. அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்…. நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!.. நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான் தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … மீளாத உலகுக்கு !
[வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக் குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாதாளப் பாறையில் அடிபட்டு அவளது ஆத்மா பிரிகிறது].
லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?
[அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இராமன் கண்களில் நீர் பொங்கிச் சொட்டுகிறது]
வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான் நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை சாய்கிறார்].
[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி அழுகிறார்கள்]
இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப் பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர் துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்! வாழப் பிறந்தவர் நீங்கள் சாக வேண்டுமா ?
பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும் உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள் நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தம பதி என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் போகலாம்.
அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர் துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?
[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].
வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின் துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.
[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா, குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]
(நாடகம் முற்றிற்று)
********
சீதாயணம்
ஓரங்க நாடகத்தின் பின்னுரை
பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!
உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.
சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.
வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?
இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!
மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.
இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.
இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றி யுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதார மாகச் சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருத வில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !
கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில் இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள். முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!
பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை! தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன், வாலி ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். வால்மீகி இராமாயண ஆங்கில மொழிபெயர்ப்பில் [நூல் பெயர் கீழே குறிப்பிடப் பட்டுள்ளது], ஆசிரியர் ரமேஷ் தத் 89 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளது : நீலகிரி மலைப் பகுதியில் இராமன் சீதையைத் தேடிவரும் போது, முதன்முதல் மலைவாசியான சுக்ரீவனைச் சந்தித்தது, உதவி செய்ய ஒப்பந்தம் செய்தது பற்றி எல்லாம் எழுதப் பட்டுள்ளது. வால்மீகி அப்போது ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி அப்போது வசித்த மலைவாசிகள் வானரங்கள் என்று எப்படிக் கூறலாம் ? பேசும் வானரம், பறக்கும் வானரம் அப்போது வாழ்ந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது ? வானரம் என்று குறிப்பிடப்பட்ட அனுமான், சுக்ரீவன், அங்கதன், வாலி அனைவரும் மானுடர் என்பது என் அழுத்தமான யூகிப்பு.
சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக் கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் அழுத்தமான கருத்து!
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.
ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.
கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!
சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது, பிரச்சனை யான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி!
**********
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
7. https://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]
8. http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]
9. http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]
10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]
11. http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]
12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana [[Ramayana By : Vivekananda] [April 16, 2012]
13. http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
14. http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
15. http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
16. http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/ [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]
17. The Ramayana and The Mahabharta by Romesh C. Dutt, [1969 Edition] [First Edition 1910] Everyman’s Library, Dent, London [335 pages]
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (February 8, 2016) [R-4]
சீதாயணம் அற்புதமான கதை பாராட்டுகள் இதுபோல் பல உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
i am a newbie in SEO but i consider which the distribution of articles in report websites is one of the very best approaches to acquire one way links.
Great write-up and proper to the point. I don’t know if this is actually the very best stick to ask but do you people have any idea exactly where to make use of most professional writers? Give thanks to you
பாராட்டுக்கு நன்றி நண்பர் சீனிவாசன்.
நமது இந்திய புராணக் கதைகள் உள்ளே உன்னத கலைக் களஞ்சியம் ஒளிந்திருக்கிறது. அவற்றின் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தால் அவை புத்துயிர் பெற்று மீண்டும் எழுகின்றன.
சி. ஜெயபாரதன்
இதையும் வாசித்துப் பாருங்களேன்.
http://directorram.blogspot.com/2008/06/blog-post_22.html
//அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. //
அந்தக் குறளிலிருந்து எப்படி இந்த விவாதத்தை வைக்கிறீர்கள் என்பது புரியவில்லையே…
அன்புள்ள திரு ஜெயபாரதன்,
மதுரை வலைப்பதிவர் தருமியின் கடவுள் என்றொரு மாயை தொடர் பதிவின் ஏழு பகுதிகளையும் அதில் உங்களுடைய பின்னூட்டங்களையும் சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. இந்தத் தொடர்பதிவின் முதல் பகுதியில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள், எப்படித் திசை மாறிப் போயின என்பதையும் பார்க்க முடிந்தது. தருமியுடன் பேசிக் கொண்டிருந்த போது உங்களுடைய சீதாயணம் பதிவு நன்றாக இருக்கும் என்று சொன்னார்; இங்கே வந்து படித்த பிறகு தான், எதன் அடிப்படையில் அவர் அது பிடித்திருக்கிறது என்று சொன்னார் என்பதும் புரிந்தது.
அதில் கண்ட அனுபவங்களைக் கொண்டு, இப்போது அதன் ஏழாவது பகுதியின் மீது கருத்துப் பரிமாற்றங்களை, தொடங்கியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு விருப்பமிருந்தால்,உங்களுடைய கருத்து என்ன என்பதையும் பதிவு செய்யுங்கள்.
தருமியுடைய வலைப்பதிவில் பின்னூட்டங்களோடு, இந்த விவாதத்தைப் பற்றிய எனது கண்ணோட்டங்களையும், கேள்விகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கலாம்,
இங்கே மற்றும் இங்கே
அன்புள்ள நண்பர் திரு. கிருஷ்ண மூர்த்தி,
வணக்கம்.
உங்கள் கடிதம் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். ஆன்மீகச் சிந்தனை சிறிதும் இல்லாத வெறும் விஞ்ஞானம் பெரும் பாலை வனமே. அதில் தாகம் தீர்க்கும் பசுஞ்சோலைதான் ஆன்மீக மலர்ச்சி.
தருமியும் அவரது முகமூடி மூர்க்கரும் பாதிக் கிணறு தாண்டிய பகுத்தறிவுவாதிகள் என்பது என் கருத்து.
“உயிர்” என்றால் இரசாயனக் கலவை என்று ஆரம்பப் பள்ளி மாணவராய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
“உயிர், ஆத்மா, கடவுள்” என்றால் என்ன வென்று அவரது சிறு மூளைக்குப் புரிவ தில்லை. அவரது மூளையில் ஓர் ஊற்று அடைத்துப் போய் உள்ளது.
ஆன்மீகம், விஞ்ஞானம் ஆகிய இரண்டும் சேர்ந்துதான் பிரபஞ்ச நியதிகளை விளக்க முடியும் என்று விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறுகிறார்.
வெறும் விஞ்ஞானம் மட்டும் போதாது.
இன்றைய விஞ்ஞான அறிவு பூரணமற்றது, குறைபாடுகள் கொண்டது, தர்க்கத்துக்கு உரியது. தொடர்ந்து மாறி விருத்தியடைவது.
உங்கள் ஆன்மீக வலைத்தளம் ஒரு பசுஞ்சோலை. பாராட்டுகள். என் குருநாதர் விவேகானந்தர்.
உங்கள் பதில்களைப் படித்து என் கருத்தைக் கூறுகிறேன். என் படைப்புகள் திண்ணையில் ( http://www.thinnai.com ) தொடர்ந்து வருகின்றன.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
அன்பு நண்பருக்கு,
மாலை வணக்கங்கள்.
“சீதாயணம்” மிகச் சிறந்த படைப்பு. பாரதி “தெய்வம்” என்று உடைத்துச் சொன்ன உண்மை, அதில் இருக்கிறது.
சீதையின் வாதங்கள் மிகக் கூர்மை. சிந்தனையைத் தூண்டுவதாகவே, முழுப் படைப்பும் உள்ளதுடன், ராமன் குறித்த எனது மதிப்பீட்டினை உறுதி செய்கிறது.
கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மட்டுமின்றி, முன்னுரை மற்றும் முடிவுரை இவற்றில், தங்கள் கருத்து வெளிப்பாடுகளில், மத ஒற்றுமை குறித்த தங்களின் ஆதங்கமும், “விட்டுக் கொடுத்தலே வாழ்தலின் சாரம்” என்ற நிலையும் தெரிய வருவதில், நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
பெண் விடுதலையைத் தன் விடுதலையாகக் கருதி போராடிய பெருமக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் வரிசைப் பட்டியலில், நம்முடைய “சீதாயணம்” உறுதியாக இடம் பெறும்.
நேரம் கிடைக்கும்போது, மற்ற படைப்புக்களையும் படித்து, எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.
வாழ்த்துக்களும், நன்றிகளும்.
சிவா.
நீண்ட கால இதிகாசத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுக் கருத்துக்களுடனும் வித்தியாசமன கோணத்தில் புனையப்பட்ட நாடகம் சீதாயணம். நன்றாக உள்ளது. பேசாமல் சீதாயணத்தை ஒரு குறும்படமாக எடுத்து விடுங்கள். அயோத்தியில் கோவில் கட்ட வேண்டுமா, இல்லையா, எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்பது இரு மதங்களையும் சார்ந்த ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எது எப்படியோ கடவுளின் பெயரால் இருப்பவர்கள் யாரும் தண்டிக்கப்பட கூடாது. பேசாமல் கோவில், மசூதி இரண்டையும் விடுத்து அந்த இடத்தை வசதியே இல்லாத மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் கல்வி கற்பிக்கும் இடமாகவோ அல்லது உண்மையான சிறந்த சமுக நல திட்டங்களுக்கோ பயன்படுத்த இரு மதத்தினரும் சேர்ந்தே முயற்சிக்கலாம். இனிமேலும் இதற்கான பூசல்களும் உயிரிழப்பும் நடக்காமல் தடுக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
அன்புள்ள வேணி,
சீதாயணத்தை எப்படிக் குறும்படமாக எடுப்பது ? கனடாவில் இருந்து கொண்டு செய்ய இயலாது.
நீதிபதிதான் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் ஆலயம் எழுப்பக் கூடாதென்று தடை விதித்துள்ளார்.
மதம் பிடித்தோடும் அடிப்படை இந்து, முஸ்லீம் மூர்க்க வர்க்கத்தினர் மிருகக் குணம் படைத்தவர். அவர் பிறர் கூறும் ஆக்கமுறை வழிகளை ஏற்றுக் கொள்ள மாடார்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++++
Hey this is a great looking site, is wordpress? Forgive me for the foolish question but if so, what theme is? Thanks!
rajamranjini@gmail.com
வணக்கம் சார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.
பாராட்டுகள் சார்.
அன்புடன்,
க.ராஜம்ரஞ்சனி
I’ve been surfing online more than three hours these days, yet I never found any attention-grabbing article like yours. It is beautiful worth enough for me. In my view, if all web owners and bloggers made excellent content as you probably did, the internet will be a lot more helpful than ever before.
பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
This weblog appears to get a great deal of visitors. How do you get traffic to it? It gives a nice unique twist on things. I guess having something useful or substantial to give info on is the most important factor.
high log you get
This weblog appears to recieve a good ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.
bull logbook you compass
This post appears to get a great deal of visitors. How do you promote it? It gives a nice unique twist on things. I guess having something real or substantial to post about is the most important factor.
This page appears to recieve a great deal of visitors. How do you advertise it? It offers a nice individual spin on things. I guess having something authentic or substantial to say is the most important thing.
really like the article you wrote . it really isn’t that simple to find good posts to read (you know.. READ! and not just going through it like some uniterested and flesh eating zombie before going to yet another post to just ignore), so cheers man for not wasting my time! :p
It’s hard to find knowledgeable people about this topic, but you appear to be guess what happens you’re discussing! Thanks
continue with the the good work on the site. Do like it! :p Could use some more frequent updates, but i am sure you got other things things to do like we all do. =)
Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.
Amazing! Your post has a ton readers. How did you get so many readers to see your site I’m envious! I’m still studying all about posting articles on the web. I’m going to look around on your blog to get a better understanding how to get more visable. Thanks!
What a nice theme, where did you get it?
அன்பின் திரு.செயபாரதன் ஐயா,
தங்களின் இந்த நாடகம் என் நெஞ்சைப் பிழிந்த ஒன்று.
அமைதியான ஆனால் அழுத்தமான தமிழில் உருக்கியிருக்கிறீர்கள்.
நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தங்களின் படைப்புகள் பல்லாயிரமாய்ப் பரவவேண்டும். என்னைக் கவர்ந்த எழுத்துக்கள் பல உள்ளன உங்கள் நாடகத்தில்.
//அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! //
இந்த இடம் என்னைத் தாக்குறச் செய்த இடம். நாடகத்தின் அடிநாதமாக இதனைச் சொல்வேன். ஆணாதிக்க உலகில் நல்ல பெண்களின் வேதனையின் உச்சம் என்றால் மிகையல்ல.
//வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்!
//
இதேபோலத்தான் கோவலன் மாதவியைக் குறித்து “நான் வா என்றால்
வருவாள் போ என்றாள் போவாள்” என்று ஆணவமாகப் பேசுவான். மாதவியின் உயர்ந்த மனதைப் பழித்துப் பேசுவான்.
இதில் பெரிய கொடுமையாக நான் கருதுவது வால்மீகி முனிவர் சீதையிடம் கீழ்க்கண்டவாறு சொன்னதுதான்:
//
பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல்.
//
சிறிதும் அவளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எண்ணாமல்
இராமனின் காதையை எழுத ஆரம்பித்ததில், அவரும் அவரின் இலக்கியத்திற்குச் சீதையைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்றே கருத முடிகிறது.
//சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.//
இந்த இடம் சற்று நெருடுகிறது. சீதை இராமனைப் பிரிந்து 12 ஆண்டுகள் ஓடியபின்னர் செய்த அசுவமேதயாகத்திற்கு வரும் சனகன், அப்போதுதான் சீதை இராமனைப் பிரிந்து வாழ்கிறாள் என்று அறிவதாக இருப்பது நம்பும்படி இல்லை.
மேலும் பிடித்த வரிகள்:
//
வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார்
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை!
மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன்.
கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!
//
கண்ணகியின் முடிவையும் சீதையின் முடிவையும் ஒப்பிட்டிருக்கும் பாங்குக்கு எனது வணக்கங்கள்.
அருமையானதொரு நாடகம். அழகான படைப்பு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
மதிப்புக்குரிய நண்பர் நாக. இளங்கோ,
சிலம்புச் செல்வர் மா.போ.சியின் வாரிசான சிலம்புச் சிற்பி ஒருவர் எழுதிய நுணுக்கமான, விளக்கமான நாடக அணிந்துரையாக நான் எடுத்துக் கொள்கிறேன்.
ஒரு சிறு நாடகத்தை இத்தனை ஆழமாக, ஊன்றி ஆராய்ந்து இதுவரை யாரும் இப்படி விமரிசனம் செய்ததில்லை.
பதிவுகளில் முன்பு வெளிவந்த உங்கள் சிலப்பதிகார விளக்கப் பகுதிகள் ஒரு நூலாக வெளியிடப் பட்டுள்ளதா ?
அவற்றை மீண்டும் தமிழ்மன்றத்தில் தொடர்ந்து இடுவீர்களா ?
உங்கள் பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றி
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++++
jayashree shankar ✆ to anbudan, tamizhsiragugal, thamizhthendral, tamilnanban, amudhae_thamiz., me
show details 10:
சீதாயணம்..பின்னூட்டம்..
பெருங்காவியத்தின் கதாநாயகனை ஓரங்கட்டி நாயகிக்கு ஓட்டுப் போட்டு அவள் நிற்கும் இரண்டாம் இடத்தைக் காலி செய்து முதல் இடம் தந்திருப்பதில் பெண்களுக்கே பெருமை சேர்த்திருப்பது போல் இருக்கிறது. சீதைக்கு அயனம் எழுதும் முன்பே விளக்கமாக முகவரை சொல்லி எல்லோரிடமும் அட்சதை வாங்கிக் கொண்டீர்கள்.(அனைத்து இறைவனிடமும் ஆசீர்வாதம்) மிக அழகான, அடக்கமான, படிக்கப் படிக்க ..ஆம்…ஆம்….சரிதான்…சரிதான்….என்று சொல்லிக்கொண்டே மனம் மேற்கொண்டு படிக்கத் தூண்டும் எழுத்து நடை…இதெல்லாம் சீதாயனத்திர்க்கு ஒரு பச்சைக்கொடி.
பல யுகங்கள் கடந்தும் நடந்ததாக சொல்லும் மஹா சரித்திரம். சாதாரணமாக, ஒரு நன்றாக சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு ஐந்து தலைமுறைக்கு முன்னே யார் இருந்தார்கள் என்றால் கூட சொல்லத் திணறிப் போகவேண்டும். அப்படி இருக்கையில் யுகம் பல கடந்தும் “ராமன்” என்ற பெயர் இனி வரும் நூற்றாண்டுகளிலும் அழியாமல் இருக்கும் ஆச்சரியம். அதற்கு பெறும் பங்கு “ராமாயணம்” மாகத் தான் இருக்க வேண்டும். ராவணனின் கடத்தலுக்குப் பிறகு தான் சீதைக்கே ஒரு முக்கிய இடம் கிடைத்தது. அதன் பின்பு நடந்து தான் அனைவரும் படித்து, பார்த்து அறிந்தது..ஆனால் இங்கு நீங்கள் அதன் பின்பு நடந்த சீதையின் மனப்போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவளுக்கென்று ஒரு பகுதி ஒரு உணர்ச்சி காவியமாய் நடையோடு ..எழுதி இருக்கிறீர்கள். யோசிக்க வேண்டிய விஷயம். இதுவரை..யாரும் கையில் எடுத்துக் கொள்ளாத வில் இது.வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். நான் கூட யோசித்ததுண்டு, சீதை ராவணனிடம் பட்ட வேதனையை விட ராமனோட சேர்ந்ததும் ராமன் பட்ட சந்தேகத்தில் தான் அதிகம் துவண்டிருப்பாள் . அதனால்தானோ என்னவோ பூமாதேவியே…தன் மகளை வாரி அணைத்து தழுவிக் கொண்டாள்.(தாய்ப் பாசம் மண்ணானாலும் இருக்கும் போலிருக்கு)..
மஹாகவி பாரதியாரின் மனைவி கண்ணம்மாவிற்கு நேர்ந்த நிலை, பகவான் ராமகிரிஷ்ணரின் மனைவி அன்னை சரதாம்பாளுக்கு நேர்ந்த நிலை, ராயர் ராகவேந்தரரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, கணிதமேதை திரு ராமானுஜரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் அன்னைக்கு இது போல் பல பெறும் மேதைகளின் மனைவிகளின் நிலைமை ஏனோ மனதளவில் சந்தோஷப் படும் நிலையில் இல்லை. இது அவர்கள் வாங்கி வந்த வரம் போலவும். (அவர்களுக்கே அப்படி என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்..). இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.
தங்களின் “சீதாயணம்” என்ற இந்த நாடகத்தை வரவேற்று எனக்குத் தெரிந்ததை என் பாணியில் எழுதி விட்டேன். விடாது படித்து நிறை சொல்வேன். தாங்கள் அனைத்து துறையையும் கரை கண்டவர் அதனால் குறை இருக்க வாய்ப்பில்லை.முதல் காட்சி மிகுந்த விறுவிறுப்போடு சென்றது..சீக்கிரம் திரை விழுந்து விட்டது. காத்திருப்போம்.அதுவரை பொறுமையோடு.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சீதாயண நாடகத்துக்கு ஓர் உன்னத பின்னோட்டம் வடித்த ஜெயஶ்ரீக்கு மிக்க நன்றி.
சி. ஜெயபாரதன்
Elangovan N ✆ to tamilmanram
show details 12:32 PM
அன்பின் ஐயா,
கனிவு கண்டு மகிழ்ந்தேன்.
சீதையின் குணநலன் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசகுலத்தில் இருக்கக்கூடிய உயர்ந்த பெண்களின்
ஆன்மாவின் அலறலுக்கு வேகம் அதிகம் என்றே கருதுவதுண்டு. அரசன் வெற்றிபெற்றால் மேலும்
இரண்டு பெண்களை மணந்து கொள்வான். தோற்றுப் போனால் இருக்கும் மனைவியரை இழந்துவிடுகிறான்.
இராமன் தன் மனைவியை மீண்டும் கண்டும் கூட அரச வாரிசுகளில் மட்டும் அக்கறை காட்டி
சீதையைக் கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் வலிக்க வைக்கிறது. நாடு, செல்வம் போன்றே “நல்ல பெண்களும்” ஒரு பொருளாக ஆகிவிடுகிறார்கள். சீதைக்கு மணமானதில் இருந்து
அவள் மகிழ்ச்சியாக இருந்தது சில கவிதை வரிகளில் மட்டும்தான் போல. பந்தயப்பரிசு என்று நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற ஒரு
வரியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மேடைகள் நிறைய பேசிவிட்டன :-) (எனக்கும் அந்த ஒரு வரிதான் தெரியும்). இந்த வரிக்குள் தமிழ்ப்பண்பாட்டைத் தேடுபவர்களும் ஏராளம். அதற்குள் இருக்கும் வலி மிக அதிகம் என்றே தோன்றுகிறது.
சிலம்பு மடல்கள் என்று ஒரு 10/12 வருடத்திற்கு முன்னர் எழுதினேன். அதனை 2001ல் நூலாகக் கூட வெளியிட்டேன். இளங்கன்று பயமறியாது என்பது போல முதல்தடவை சிலம்பைப் படித்த வேகத்தில்
ஏதோ எழுதியது அது. பின்னர் மீண்டும் ஒருகாலத்தில் சிலம்பைப் படித்தபோது “என்னத்தைப் பெரிதாய் எழுதிவிட்டோம்” என்றே எண்ணினேன். பின்னர் வேறொரு கோணத்தில் எழுதத் துவங்கிய போது
நிறைய படிக்க வேண்டும் என்ற தேவையே இருந்தது தெரிந்தது. இன்னும் சில காலம் சில முக்கிய நூல்கள்
படிக்க வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் புதிய படைப்பாக ஏதேனும் எழுதவேண்டும் என்ற எண்ணமே
மனதில் எழுகிறது. இலக்கியங்களில் சிலம்பு ஒரு சுவை மிக்க இலக்கியம். வாய்ப்பு கிடைக்கும்போது மேலும்
எழுதுகிறேன்.
மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
jayashree shankar ✆ to me
show details
23 ஆகஸ்ட், 2011 11:50 pm அன்று, jayashree shankar எழுதியது:
நாடகம் என்று ஒற்றை சொல்லாய் சொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. உங்களுள் ஒளிந்திருக்கும் பெண் மனம் , சீதையின் வாழ்வில் ஒரு அர்த்தம் வேண்டுமென அவளுக்காக ஒரு காவியம் படைத்ததாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். எழுத்தில் ஒரு வீரியம், போர் வாள் போன்ற ஒரு தீர்க்கம் , சொல்ல வந்ததில் நேர்மை,நியாயம்..!!, சீதையின் நிலைமை இது தான் என அறிந்ததும் ராமன் மீது இருக்கும் பக்தி மெல்ல தரை இறங்கி வெளி நடந்துவிடும் கண்ணியமாக..உங்கள் நினைவு போல் ராமன் யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை. மகா கோழையாக இருந்திருக்கிறார். பதவி மோகம் கண்ணை மறைத்து விட்டது போலும். படிக்கப் படிக்க புதுமையாகவும், புரட்சியாகவும், மேலும் பிரமிப்பாகவும் இருந்தது. சரித்திரத்தையே திருப்பி போட்ட உமது சிந்தனை மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. வாழ்நாள் பூரா தனியாகவே வாழ்ந்த சீதாவுக்கு ஏன் ஒரு தனியான கோவில் இருக்கக் கூடாது.? ஒருவேளை சீதாயணம் படித்த பின் தோன்றும்….நல்ல விதை விதைத்திருகிறீர்கள். தங்களின் சீரிய எழுத்துப் பணி போற்று தலுக்குரியது.
சீதாயணம் ஒரு எழுத்தோவியம்.! படங்களும் மிக மிக அருமை.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சீதாயணத்துக்கு ஒரு சிறந்த கருத்தோவியம் பின்னோட்டமாய் இட்டமைக்கு என் உளங்கனிந்த நன்றி ஜெயஶ்ரீ.
சி. ஜெயபாரதன்.
Amazed to read SEETHAYANAM! Such a bold attempt to reverse the original Ramayanam ! A masterpiece in Tamil drama and an eye opener for the future generation. This should be given wide publicity in the Tamil community! The words used are poetic and weighty. ” Muthal vanavaasathukku kaaranam en vithi! Aanal irandam vanavaasathukku karanam en pathi! ” The sufferings of Seethai which are hidden in Ramayanam are aptly highlighted in SEETHAYANAM! Congratulations!
நண்பர் தரணிமைந்தன்,
உங்கள் பாராட்டுக்கு என் பணிவான நன்றி. நீங்கள் எங்கு வசித்து வருகு என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள் ? உங்களைப் பற்றி விபரம் அறிய பேரவா.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
From: K.Ranjini
Date: 2010/3/15
Subject: சீதாயணம்
To: jayabarat@tnt21.com
வணக்கம் ஸார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.
பாராட்டுகள் ஸார்.
அன்புடன்,
க.ராஜம்ரஞ்சனி
அன்புமிக்க திருமதி ராஜம்ரஞ்சினி,
வணக்கம். உங்கள் உயர்ந்த பாராட்டுரைக்கு என் உளங்கனிந்த நன்றி.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
From: Seethaalakshmi Subramanian
Date: 2012/10/28
Subject: Got your book Seethayanam
To: Jay Jayabarathan
மதிப்பிற்குரிய அய்யா
வணக்கம்
தங்கள் புத்தகம் வந்து சேர்ந்தது. முதலில் அட்டைப்படம் கண்ணைக் கவர்ந்தது. ஓவியம் அழகாக உள்ளது.
உள்ளேயும் படங்கள். சீதாயணம் ஓர் பெண்ணியம் பேசும் சித்திரம். புத்தகம் மிக அழகாக வந்துள்ளது.
வைய்யவனுக்கு முதல் பாராட்டு. தங்கள் அரிய எழுத்தைச் சுமக்கும் பாத்திரம் அழகாக வடிவமைத்துள்ளார். அவரிடம் என் பாராட்டுதல் களைக் கூறவும். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓர் விஞ்ஞானியின் தமிழ்ப் படைப்பு. அதுவும் ஓர் காவியத்திற்கு இன்னொரு வடிவம். வால்மீகியும் உங்களைப் பாராட்டிக் கொண்டிருக் கின்றார். சீதையின் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீர். இந்த மண்ணின் பெண்களுக்கும் மன நிறைவு. இன்னொரு சக்தியைக் கிளப்பி விட்டிருக்கின்றது ஆமாம் . எனக்குள் ஒரு பொறி. ஓர் இலக்கியக் கட்டுரைக்கு ஓர் வித்து. பாரதமும் இராமாயணமுமின்னும் சில காப்பியங்களும் என்னிடம் வந்து பேசிவிட்டுச் சென்று விட்டார்கள். உங்கள் எழுத்தின் வலிமை. அவசரப்படாமல் சான்றுகளுடன் படைப்பேன்
பாராட்டுதல்கள். வாழ்த்துக்கள்
சீதாம்மா
சீதாம்மா
அன்பு ஜெயபாரதன் ஐயா,
உங்கள் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை உங்களுக்கு வழங்கி இருக்கிறது. அது இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.
வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அராசனின் வாழ்வை உதாரணமாகக் காட்டியிருக்க உத்தேசித்திருக்கலாம். ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் இராமாயணம் ….சிலப்பதிகாரம் போல.
கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டைரௌடிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நீங்கள் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி உங்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இது மகிழ்ச்சியைத் தருகிறது.
படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நீங்கள் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அதிலும் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் தன் தாய்வீடு செல்வதை தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்தியது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. மனைவிக்காக முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஒரே மனைவியுடன் வாழ்த்தும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிந்தாலும், இக்காலத்திலும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே உண்மை.
நீங்கள் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்தி குளிர்காயும் சுயநல மதவாதிகளை அடையாளம் காட்டுகிறீர்கள். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறீர்கள். உங்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.
சீதாயணத்தை women study பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளுக்கு இந்த நாடகத்தை நடத்த வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.
“ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”
இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நீங்கள் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
பெண்களின் சார்பில் உங்கள் சீதாயணம் படைப்பிற்கும், விழிப்புணர்வு கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கும் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
என்றும் அன்புடன்,
தேமொழி
அன்புமிக்க தேமொழி,
சீதாயண நாடகப் புத்தகம், தவறி விடாது உங்களுக்கு வந்து சேர்ந்தது பற்றி மகிழ்ச்சி.
உங்கள் நாடகத் திறனாய்வு உன்னத முறையில் எழுதப் பட்டுள்ளது. அடுத்த சீதாயணம் பதிப்பில் உங்கள் தனிப்பட்ட அணிந்துரையும் நான் இணைக்கலாமா ?
அணிந்துரை நீளமாய் இருப்பினும் ஆழ்ந்த கருத்துடன் ஆவேசமாய் எழுதப்பட்டதால் படிக்கும் நேரம் ஓடுவது தெரியவில்லை. இந்திய இதிகாசப் புராணக் கதைகளில் சில மனித ரூபத்தில் / செயலில் எழுதப் பட்டால் பஞ்ச தந்திரக் கதைகள் போல் படிக்க இனிதாய் இருக்கும்.
பாஞ்சாலியைப் பற்றி பாரதி பாக்களாய் எழுதி யிருக்கிறார். அபலை சீதாவின் கதை நாடகமானதுபோல் போல், சூதர்கள் சபைதனிலே அவமானப் பட்ட மாதின் கதையை நாடகமாய் அமைக்க இயலுமா என்று சிந்திக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.
இனிய அணிந்துரை எழுதியதற்கு உளங்கனிந்த நன்றி.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற குறட்பா தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. தொழுகை என்றால் பிரார்த்தனை என்றே பொருள் கொள்ளவேண்டியதில்லை. எதொனொன்றின் மீதாவது கவனம் செலுத்துவதும் தொழுகைதான். காலையில் விழிப்பு வந்தவுடன் தன் கொழுநன் மீது தன் கவனத்தைச் செலுத்தி அவன் நினைவில் மூழ்குவதன் மூலம் தன்னுடைய அன்பினைப்புதிப்பித்துக்கொண்டு அதன் மூலம் தன்னை மிக சக்தியுள்ளவளாக உணர்ந்து நாளைத்துவக்குபவள் என்று பொருள். கூட ஒருவர் துனையாக நின்றால் நாம் பலம் உள்ளவராக உணர்வது இயல்புதானே. அதிலும் அவர் கணவர் போன்று நமக்குக் கடமைப் பட்டவர் என்றால் சொல்லவா வேண்டும். மழை கூட தன்னுடைய ஆணைக்குக்கட்டுப்படுமென்று அவள் நினைப்பதில் தவறென்ன இருக்க முடியும்?
நண்பர் வெங்கடாசலம்,
பெண்ணுக்கு ஆண் துணை அவசியம் என்பது போல் ஆணுக்குப் பெண் துணை முக்கியம் அல்லவா ? உங்கள் பொருளில் ஆணுக்குப் பெண் அடிமை என்னும் பொருள் தெரிகிறது. ஆணுக்குப் பெண் அடிமைபோல் வாழ்ந்தால் பெருத்த வெகுமதி கிடைக்கும் என்பது கழுதைக்கு கண்முன் காரட் காட்டும் கதையாக வருகிறது. ஆணாதிக்கவாதிகளுக்கு எழுதப் பட்டது.
உங்கள் கருத்துப்படி பெண்டிர் இரண்டாம் வகுப்பு சேவகியர் என்னும் பொருள் படுகிறது. பெண்ணுக்கு முதல் குறிப்பணி குடும்பம், தன்னைப், பிள்ளைகளைப் பேணுவது. கணவனுக்கு முதன்மை தந்து கும்பிட்டு வலம்வந்து முத்தம் கொடுப்பதல்ல.
காலையில் முதலாகத் தெய்வம் தொழுவது பெண்ணுக்கு எல்லா நெறியும் புகட்டுகிறது. பைபிள், குர்ரான், பகவத் கீதை எல்லாம் இறை வணக்கத்தையே முதன்மையாக்குகிறது, அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
இறைவனே எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவன். பெரும்பான்மையான கணவர் கண்ணிய மின்றிப் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் ஆணாதிக்கவாதியாக உலகில் எங்கும் உலவி வருகிறார். எல்லாக் கணவனும் வணங்கத் தக்கவனா ?
சி. ஜெயபாரதன்
தொழுகை என்ற சொல் தொழுத கையுள்ளும் என்றும் தொழுதுண்டு என்றும் பிற இடங்களில் திருக்குறளில் வருகிறது. தொழுத கையென்று சொல்லும்போது ஒருவர் கைகூப்பி வணங்கினால் மற்றவரும் அதையே செய்வார் என்பது தொக்கி நிற்கிறது. தொழுது உண்டு என்ற இடத்திலும் உணவு தரும் உழவனை நன்றியுடன் நினைந்து பார்த்து அவனுக்கு மானசீகமாக நன்றி சொல்லிய பிறகு உண்ணுதல் என்றே பொருள். உழவனை நோக்கிப்பிரார்த்தனை செய்வது என்று கூற இயலுமா?
ஆகவே தொழுது என்றால் இறைவன் முன் நின்று தொழுதல் என்பதைப்போன்ற பொருளில் திருக்குறளில் வரவில்லை என்பதே என்னுடைய கருத்து.
மேலும்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலள் பெண்
என்ற குறள் இல்லக்கிழத்தியை இல்லம் என்ற நிறுவனத்தின் இணை த் தலைமை அதிகாரியாகத்தன்(Joint CEO) காட்டுகிறதென்பேன். எவ்விதம்?
தன்னைக்காத்து அதாவது தன் உடல் வளத்தையும் மன நலத்தையும் காக்க ஆவன செய்து கொண்டு கனவன் அவற்றை இழக்கும் தறுவாயில் ஒரு செவிலி நோயாளிக்குச் செய்வது போல (பேணுதல்) செயல்பட்டு இது நல்ல குடும்பம் என்ற தகுதியை, சொல்லை பாதுகாத்து (நற்பெயர் முகவர்=brand amassidor) இவற்றில் தொய்வு (சோர்வு) இல்லாமல் செயல்படுபவள் மனைவி.
அப்படிச் செயல்பட்டு நற்பயர்பெற்றால் அவளுக்கு என்ன கிட்டும். புத்தேளிர் உலக குடியேற்றம் கிட்டும் என்று கூறும் குறள் கீழே:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டீர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு 58
.
இன்னொரு செய்தி இறைவனைத் தொழச்சொல்லி திருக்குறள் கூறவே இல்லை. இறைவனிடம் சரண் அடைய மட்டுமே கூறுகிறார். இவ்வுலக வாழ்வு ஒரு ஆன்ம பயிற்சிக்களம் அதன் பொருள்கள் பயிற்சிக்கான பொருள்கள். ஆகவே அவற்றின்மீது பற்று வைக்காமலேயே ஆனால் அறவழியில் துய்த்து வாழ்வதே ஆன்ம மேம்பாட்டினை நல்கும். முற்றிலும் மேம்பாடுற்ற ஆன்மா கடவுளர் உலகு புகும். மனித வாழ்வின் நோக்கம் கடவுளர் உலகு புகுவதற்குத் தன்னைத் தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்வதே. இதை எப்படிச்செய்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் நூல் திருக்குறள் .
நண்பர் வெங்கடாசலம்,
தெய்வம் தொழாத, தெய்வ நம்பிக்கையற்ற நாத்திவாதிப் பெண்ணொருத்தி காலையில் எழுந்து கணவனைத் தினம் தொழுது வந்தால் பெய்யென்றதும் மழை பெய்யுமா ?
முதலதிகாரம் கடவுள் வாழ்த்தின் அர்த்தம் என்ன ?
சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++++++++++++++
மழைபொழியும் என்பதை அப்படியே லிட்ரலாக எடுத்துக்கொள்ள இயலாது. ஒரு கருத்தை ஆழுத்தம் திருத்தமாகக் கூற விழையும் திருவள்ளுவர் அதை மிகவும் ஒங்கிக்கூறுவது குறளெங்கும் காணக்கிடக்கும் ஒன்று. ஞாலம் கருதினும் கைகூடும் என்று அவருடைய கூற்று அத்தகைய ஒன்றே. மிக அதிகமான ஆற்றலுடன் அவளுடைய செயல்பாடுகள் இருக்குமென்பதே கருத்து.
கடவுள் நம்பிக்கைஅற்ற ஆனால் திருக்குறள் காட்டும் மன நலம் கொண்டு வாழுமொருவன் வீடுபேறு அடைய இயலும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் நான் மன நலம் கொண்டவனாக வாழ விரும்புகிறேன் எனக்கூறுபவர்களுக்கும் உதவும் நூல் திருக்குறள். இப்படி ஒரு அற்புதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழில்; ; ; ஆனால் தமிழர்கள் இந்நூலைக் கண்டுகொள்ளவேயில்லை.அல்லது இதனையும் பஜனை மடத்தில் சேர்த்து விட்டார்கள்.
தங்களுடைய சீதாயணம் ஈ புத்தகமாகப் படித்து முடித்து உள்ளேன். ஆனால் அதனைப்பற்றி உடனடியாகக் கருத்துக் கூறமாட்டேன். எவ்வளவு உழைப்பு தந்திருக்கிறீர்கள்! அதே போன்ற உழைப்பினை நானும் தந்து அதனை நன்றாக நுட்பமாகப் படித்த பிறகு உரைக்கிறேன். அதற்குள் தாங்கள் அனுப்பி உள்ள(?) பிரிண்ட் புத்தகம் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.
2013/6/11 veeramani k
திரு. ஜெயபாரதன் அவர்கள்,
வணக்கம். தங்களது மின்அஞ்சல் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி!
துணிச்சலான தங்களது ‘சீதாயணம்’ ஒரு புதிய சிந்தனை. இராமாயணம் நடந்த கதை என்பதை எங்களைப் போன்றவர்களால் ஏற்க முடியாது என்றபோதிலும், தங்களது கருத்து வடிவம், எழுத்து நடை எல்லாம் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்துள்ள நிலையில் இவ்வளவு சிறப்புடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
அந்நூல்பற்றி நான் விரைவில் சென்னை பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் விளக்கி உரையாற்றவிருக்கிறேன்.
நிறைய இதுபோல் சுதந்திர சிந்தனையுடன் எழுதுங்கள்.
இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.
தங்களன்புள்ள,
கி.வீரமணி
From: veeramani k
Date: 11 June 2013 16:40
Subject:
To: “vannan.1935@gmail.com”
Dear Thiru K.V. Vannan,
Vanakkam. Happy to receive your mail along with Mr.S.JayaBarathan.
It is really very enjoyable to hear from a old friend and that too as an alumni of Annamalai University.
Please furnish more details about your present position, residence etc.
We enjoyed JayaBarathan’s ‘Seethayanam’ – a very original, bold thinking. We appreciate it inspite of some of the disagreeable aspects in it.
Really it is a new approach to the literary world.
We are to give prominent coverage for the book in ‘Periyar Library reader’s circle’ which is a popular association – an organisation conducting weekly meetings regularly.
With kind regards,
Yours fraternally,
K. Veeramani
From: jawahar premalatha
Date: 2014-04-11 14:20 GMT-04:00
Subject: Re: Seethayanam Drama Books Sent to you today by Airmail
To: “சி. ஜெயபாரதன்”
ஸார், தங்களின் சீதாயணம் கிடைத்தது.ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். அப்படி ஒரு வேகமான விறுவிறுப்பான நடை. கரை புரண்டோடும் வெள்ளப்பெருக்கினைப்போல் நாடகம் முழுவதும் ஒரே உணர்ச்சிவெள்ளம். அது உண்மையின் வேகம். நியாயத்தைத் தேடிக் கண்டு பிடித்துத் தூய்மையைக் கண்டறிந்தவுடன் அதை உலகிற்கு வெளிப்படுத்தி விடத் துடிக்கும் ஆத்மாவின் வேகம்.
சரியான ஆதாரங்களினடிப்படையில் எங்கும் சறுக்கிவிடாமல் மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு கூடியமிகவும் நேர்மையான பதிவுகள். .
தாங்கள் சீதாதேவியின் பாத்திரமாகவே மாறி விட்டிருந்தீர்கள். மிகவும் துணிவோடு துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை எல்லாம் நீக்கி விட்டு உண்மைத்தரவுகளை நம்பகத் தன்மையோடு வெளியிட்டுள்ளீர்கள்.
இலக்கிய ஆய்விலும் அறிவியல் அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்துவோம். தாங்கள் அடிப்படையில் விஞ்ஞானியாக அமைந்து விட்டதும், அதுவும் இந்திய பெண்மணிகளில் தலைசிறந்தவளாகக் கருதப்படுகிற பெண்மணியான சீதாதேவியின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் ஆய்வினைப்போல் நடுநிலையோடு நின்று உண்மையை வெளியிட்டுள்ளதும், ஆணாதிக்கப்போக்கினால் சீதாதேவியின் கதை இராமனின் கதையாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதும் பெண்ணிய ஆய்வுகளுக்கு வலிமையைக் கூட்டியுள்ளது. பெண்ணிய ஆய்வில் இந்த நாடகம் ஒரு மைல்கல். பெண்ணியலாளர்கள், புராண இதிகாச மாந்தர்களை இதுபோல் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை இந்த நாடகம் சிறப்பாக உணர்த்தியுள்ளது. பெண் என்பவள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறாள் என்ற கூற்று எவ்வளவு உண்மை. எல்லா வல்லமையும் உடைய பெண், திருமணம் என்ற பெயரால் வலிமையற்று அன்பிற்காக ஏங்கி இறுதிவரை அந்த அன்பு கிடைக்காத சூழலில் மரணத்தைத் தஞ்சமடையும் இழிநிலை இன்னும் தொடர்வதுதான் வேதனையிலும் வேதனை.
அனுமனை மனிதன்தான் என்று தாங்கள் ஆணித்தரமாகக் கூறி யுள்ள கருத்தும், இராமனின் வெற்றுச் சமாதானங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போன்ற தெளிவும், மனைவியைக் கைவிட்ட இராமனோடு சீதாவையும் இணைத்து ஆதர்ச தம்பதி களாக வணங்கிவரும் பக்களின் பேதமையைத் துகிலுரித்துக் காட்டியிருக்கிற பாங்கும் , இந்த இராமனுக்கு கோயில் எழுப்புவதற் காகப் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி, அதற்குத் தீர்வும் கூறிச் சென்றுள்ள சமூக அக்கறையும் மிகமிக சிறப்பாக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘அன்பில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே‘ என்ற மாணிக்கவாசகரின் வரிகளில் ஒலிக்கும் அச்சம் சீதாவின் அவலக்குரலிலும் நாடகம் முழுவதும் ஒலித்து கொண்டே யிருக்கிறது.. இந்த உலகில் உள்ள மனிதர்களெல்லாம், வளங்களெல்லாம் பெண்ணின் கொடைகளே. ஆனால் பெண்ணிற்கு எதுவும் சொந்தமில்லை.அவள் வாழ்க்கை கூட அவளுக்குச் சொந்தமில்லை.அவளை மனிதப் பிறவியாகக் கூட கருதாத நிலைதான் உள்ளது என்பதை சீதாதேவியின் வாழ்க்கை மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நானும் சீதை தற்கொலைதான் செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணம் கொண்டிருந்தேன். அதை தங்கள் படைப்பில் படித்தபோது வியந்துபோனேன்.
அன்னை சீதைக்கே அந்நிலையென்றால்…இன்று பெண்ணைக் கருவிலேயே கொன்றுவிடும் மாக்கள் நிறைந்த இந்த உலகில் பெண்களின் நிலை ?
வால்மீகி, சீதாயணம் என்று தான் பெயர் வைத்து இருப்பார் என்றும், இராமனை சாதாரண னாகத்தான் அவர் படைத்திருக்கிறார், பின்னால் வந்தவர்கள்தான் இராமனுக்குக் கடவுள் சாயம் பூசி விட்டார்கள் என்ற கசப்பான உண்மையையும் உண்மையான மனிதராக (மதம்கடந்து) இருந்து வெளியிட்டுள்ளத் தங்களை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.அட்டைப் படமும் உள் படங்களும் மிக அருமை. தங்கள் நாடகத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.நல்ல கட்டமைப்பு. கைக்கு அடக்கமான வடிவத்தினால் எளிதில் படிக்க முடிந்தது.வடிவத்தில் சிறியது என்பதினால் குறளை குறைத்து எடைபோட்டுவிட முடியுமா? அதுபோல்தான் .சீதாயணமும்.
தாங்கள் தொலைதூரத்திலிருந்து பிரதிகளை சிரமம் பாராமல் அனுப்பி வைத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை். 2 பிரதிகளை நாளை துறை நூலகத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்.
என்றும் அன்புடன்
ஜ.பிரேமலதா
Dr.J.Premalatha,
Tamil Professor,
Govt.Arts College,
Salem-7.
9488417411
http://www.vallamai.com/?p=29618.
நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)
Wednesday, December 12, 2012, 4:51Featured, இலக்கியம்2 comments
முனைவர். தேமொழி
முனைவர். தேமொழி
எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
கலிஃபோர்னியா, அமெரிக்கா
திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.
“சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.
நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகி விட்டது.
நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.
கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.
இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை.
அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.
நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.
சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.
“ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”
நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.
https://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)
சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
கிடைக்குமிடம்:
Mr. S. P. Murugesan (Vaiyavan)
vaiyavan.mspm@google.com
Editor Innaiyaveli
Dharini Pathippagam
1. First Street, Chandra Bagh Avenue,
Mylapore, Chennai : 600004
Phone: 99401-20341
ஜெயஸ்ரீ ஷங்கர். wrote on 12 December, 2012, 18:59
அன்பின் முனைவர்.தேமொழி அவர்களுக்கு,
“சீதாயணம்” என்னும் திரு ஜெயபாரதன் அவர்கள் எழுதிய நாடகத்தை படித்து தங்களின் கருத்துக்களை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்தியதற்கு மகிழ்வடைகிறேன்.
ஒரு புத்தகம் வெளிவந்து அது படிக்கபெற்றதும் அதை படித்தவர் ரசித்து எழுதிய ”நூலுக்கான மதிப்புரை” தான் அந்த நூலை எழுதிய எழுத்தாளருக்குக் கிடைக்கும் கேடயம். தங்களின் அழகான பதிப்புரை அதற்குச் சான்றாக உள்ளது.
பெண்களின் சார்பாக “சீதாயணத்தின்” சாரத்தை மதிப்புரையைப் படித்ததும்..தாங்கள் அதைப் படைத்த விதம் கண்டு பாராட்டுகிறேன்.
அழகான ஒரு சீதாயணக் காவியத்தைப் ஒரு பெண்ணின் மனநிலையைக் கொண்டு படைத்து காலங்காலமாகப் பெண்ணின் நிலையை உணர்த்தி இனிமேலாவது இது போன்ற நிலைமை மாற வேண்டும் என்னும் எதிர்பார்போடு பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் எழுதப்
பட்ட நாடகம் எனலாம்.
திரு.ஜெயபாரதன் அவர்களின் அறிவியல் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்களுக்கு நடுவில் ரத்தினம் போன்ற படைப்பாக “சீதாயணம்” திகழ்கிறது.
”சீதாயணம்” புத்தகம் என்னிடமும் இருப்பதால் படிக்க விருப்பம் இருப்பவர்கள் புத்தகம் வேண்டுமென்றால் என்னிடமும் தெரிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைக்க சித்தமாக இருக்கிறேன்.
சீதாயண புத்தகத்தைப் பற்றிய விளக்கங்களோடு தங்களின் கருத்துக்களை ஆசிரியரைப் பாராட்டி வல்லமையில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.
Pingback: சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14 | திண்ணை
Pingback: | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 1 6 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 17 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 18 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 1 9 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 20 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 22 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 23 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 2 6 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 27 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 28 | திண்ணை
Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 29 | திண்ணை
Pingback: சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு | திண்ணை
Read through your Seetayanam. Gripping story. Thank you for it. I have written a story with a similar title Seetayana – The Untold Journey, on my blog at http://umasun1973.wordpress.com. Please do let me know your thoughts after reading it. Enjoyed your story a lot.
Dear Mrs. Uma Sundaam,
I just started reading your well-presented sentimental journey of Seetha. It is eloquent indeed and heart-breaking. Please give me time to read the whole write up.
Thanks for the compliments.
Regards,
S. Jayabarathan
சீதாயணம் முழுநாடகத்தை புத்தகமாகவே வாங்கி படித்து இப்போது மறந்தும் விட்டது. ஆனால் ராமன் சீதையின் கணவன் என்பதை விட நாட்டின் அரசன் அந்த நோக்கில் கோடானுகோடி மக்களின் நலனுக்குப் பொறுப்பானவன். ஆகியால் நாடா சீதையா என்று பார்த்தால் நாடுதான் என்று அவன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் அவன் சீதைக்கு அநீதி இழைக்க நேரிடுகிறது என்பது தங்களுடைய நூலைப்படித்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்.
தங்கள் உண்மையுள்ள
அர.வெங்கடாசலம்
Thank you!!! :-)
2015-01-12 10:44 GMT-05:00 shylaja :
சீதையை நாடு கடத்தலில் ஆரம்பித்து அழகான நாடகமாகக் கொண்டுபோய் வால்மிகி சீதா பேசுவதை நல்ல உரையாடல்களில் கொண்டுவந்த விதமும் சீதையின் பிடிவாதமும் அருமையாக செதுக்கபட்ட வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். சீதையின் வார்த்தைகளின் அழுத்தமும் ஆழமும் நெகிழ்வாக உள்ளன. பல கதா பாத்திரங்கள் வாயிலாக வசனங்கள் செறிவு.
புரட்சிகரமான முடிவுதான் ..சீதாயணம் எனக்குப் பிடித்திருக்கிறது..
பாராட்டுக்கள் ஜேபி சார்.
Pingback: சீதாயணம் (முழு நாடகம்) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: சீதாயணம் (முழு நாடகம்) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: சீதாயணம் [முழு நாடகம்] | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: சீதாயணம் [முழு நாடகம்] | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: சீதாயணம் [முழு நாடகம்] | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய
Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை
அக்கினிப் பிரவேசம் !
Posted by சீதாலட்சுமி On February 20, 2010 0 Comment
This entry is part of 32 in the series 20100220_Issue
சீதாலட்சுமி
நெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு.
என் கேள்விக்குரிய களம் இராமாயணம்.
என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன்.
பலம். பலஹீனம் இவைகளின் கலவையாக ஓர் நாயகன் வரின், கேள்விக்கணைகளின் தாக்குதல் ஏற்படுதல் இயல்பு. இப்படித்தான் வாழவேண்டு மென்பதற்கு இலக்கணமாய் விளங்கும் இராமன், விளையாட்டுப் பிள்ளையாய், குறும்புக்காரனாய்ச் செய்யும் செயல்களை நாம் பெரிது படுத்தாமல் சமாதானம் கூறிக்கொள்ளலாம். அமிலமாய் கடுஞ்சொற்களைக் கொட்டி, பெண்ணைக் காயப்படுத்துவதை, களங்கப்படுத்துவதைக் காணப் பொறுக்கவில்லை. நாமும் மனிதர்கள். மனித நேயம் வதைக்கப்படும் பொழுது மெளனமாக இருக்க முடியவில்லை. புதிதாக என்ன புலம்பல் என்று சிலர் முணங்குவது கேட்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இக்காட்சிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை. இராமாயணத்தில் அன்று முதல் இன்று வரை வாலி வதைக்கும், சீதையின் அக்கினிப்பிரவேசத்திற்கும் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இராமாயணம் எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் இதிகாசம். சோதனைகள்வரினும் நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் ஓர் மனிதனின் காவியன் என்று கூறப்படுகின்றது. அந்த மனிதன் அசாதாரணமாகக் கீழிறங்குவது, பாத்திரப்படைப்புடன் பொருந்தவில்லை. அதற்குரிய காரண காரியங்களை அலசிப் பார்ப்பதில் தவறில்லை. இயல்பாக அக்காட்சி சேர்க்கப்பட்டதா அல்லது இடைச்செருகலா என்று ஆராய்வது அர்த்தமுள்ளது. பெரிய ஆராய்ச்சியாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இதுவரை என் கேள்விக்கு விடை காணாத ஒன்றினையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இராமாயணத்தை இலக்கியமாகக் கருதியே என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பரிவும். பக்தியும் ஒதுக்கி வைத்து, நடுநிலையின் நின்று பார்க்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
Fig. 1
Seetha’s Agni Piravesam
இராமன், இராவணன் போர் முடிந்துவிட்டது. சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். மாயச்சூழ்நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதா, செய்தியை நம்பவேண்டும். ஏற்கெனவே தூது சென்றவன் அனுமன். சொல்லின் செல்வன் அவன். அனுமனைக் கூப்பிட்டு நடந்தவைகளைச் சொல்லிவிட்டு வரும்படி கூறுகின்றான். செவ்வனே சிந்திக்கும் நிலையில் அப்பொழுது இராமன் இருந்தான்.
சீதையைச் சிறை எடுத்தவன் இலங்கை மன்ன்ன். சிறை பிடிக்கப்பட்டவளை அந்நாட்டு மன்னனே மீண்டும் உரியவனிடம் சேர்ப்பதே சிறப்பு. தற்போது நாட்டுமன்னனாக இருப்பது விபீஷணன், இராமன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான. விபீஷணனை அழைத்து, “வீடணா, சென்றுதா, நம் தோகையை சீரோடும்” என்கின்றான். அப்பப்பா, மனைவிமேல் எவ்வளவு அக்கறை; அசோகவன வாழ்க்கையில் நைந்து போயிருக்கும் சீதையைக் காண அவன் மனம் துணியவில்லை. அதனால் தன் அன்புக்குரியவளைச் சீராகக் கூட்டிவரும்படி சொல்லுகின்றான். எப்பேர்ப்பட்ட கணவன். சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையால் தொடாதவன் இராமன். கம்பனாயிற்றே… நாயகனின் உயர்வைக் காட்டும்விதம் மிக மிகச் சிறப்பானது. இராவணன் எத்தனையோ உருமாறி சீதையைக் கவரமுயற்சிக்கின்றான். இராமன் வடிவில் சென்றபொழுது “இவள் மாற்றான் மனைவி அணுகுவது தவறு” என்று உணர்ந்ததாக இராவணனையே சொல்லவைத்தானே கவிஞன்.. கோசலை மைந்தன் குணம் மாறிப் பேசப் போகின்றான். அதனால் குறை கூறுவார்களே என்ற தவிப்பிலே தாயைப் போல அந்த நீலவண்ணச் செம்மலை உயரத்தில் காட்டுகின்றானோ… இராமனின் தெளிவு எப்பொழுது கலக்கமுற்றது…? ஏன்…?
அசோகவனத்திற்குச் சென்ற விபீஷணன் இராமனின் செய்தியைச் சீதையிடம் கூறியபொழுது தான் இருக்கும் நிலையிலேயே வருவது சாலச்சிறந்தது என்கின்றாள். உற்றவனைப் பற்றியும், உலகைப்பற்றியும் தெரிந்த பெண்ணாகப் பேசுகின்றான். அதனால்தான் முதலில் அனுமன் தூது வந்த பொழுதே, தன்னை இராவணன் நிலத்துடன் பெயர்த்து அவளை எடுத்து வந்ததாகக் கூறினாள். வால்மீகியினின்றும் கம்பன் மாற்றி அமைத்த காட்சி இது. கணவனின் குறிப்பு என்று விபீஷணன் கூறவும் சீதையால் மறுக்க முடியவில்லை. தன்னைச் சீராக்கிக் கொண்டு புறப்படுகின்றாள். இனி தொடரும் காட்சிகளைக் கவிஞனின் ஓவியத்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆயக் கைச்சிலை நின்றானைக் கண்ணுற்றாள். உடனே அப்பெண்ணரசியின் ஏக்கம் நீங்குகின்றது. “இனி இறப்பினும் நன்று” என நினைக்கின்றாள். அசோக வனத்தில் சீதை இருந்த நிலை உருக்கமானது.
“விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துவங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்”
எப்பேர்ப்பட்டத் தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி, தன் கைபிடித்த காவலனைக் காணவும் “கண்டதே போதும்” என எண்ணுவது அந்தச் சோர்ந்து போன மனத்தின் இயல்பாகத்தானே இருக்க முடியும்…? இது பெண்மனம்.
இராமனின் நிலை என்ன…?
”கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை ” அத்தலைவனும் நோக்கினான்.
அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று பார்வைகள் மோத தீப்பொறி பிறந்தது. துடிப்புடன், தூய்மையுடன் ஏற்பட்ட சந்திப்பில் குழப்பம் எப்பொழுது நிகழ்ந்தது…? அவனைக் கொதிக்க வைத்தது எது…? நெருப்பு மொழிகள் உதிர்க்க ஆரம்பித்தானே, ஏன்…?
“அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?” என்று குற்றம் சாடுகின்றான். அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப்பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன…? ஒழுக்கம் எங்கே பாழ்பட்டது…? இராவணன் மேல் பட்ட காற்று அவள் மேல் பட்ட்தால் அவள் கற்பு போய்விட்ட்தா..? இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா…? அம்ம்மா, எப்பேர்ப்பட்ட பழி. சீதை செத்திருக்கலாம். உலகம் என்ன கூறியிருக்கும், “என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம். அதனால் அவள் செத்திருக்கலாம்” என்று பழி சுமத்தாதா…? இறுதி மூச்சுவரை கற்பினைக் காட்டவல்லவோ உயிர் வைத்திருந்தாள்..? சீதையை மீட்க அவன் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறைகூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான். தொடர்ந்து பேசுகின்றான்.
“மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை
அருந்தினையே, நறவு அமை உண்டியே;
இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன
விருந்து உளவோ? உரை”
அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். சீரோடு கூட்டிவரச் சொன்ன சிந்தை எங்கே போயிற்று…? அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், கண்களில் கண்ணாளரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக் கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, “இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?” என்று நச்சுப் பாணத்தால் அம்மலர்க்கொடியை அடித்து வீழ்த்திவிட்டான்.
இவ்விடத்தில் இன்னொரு நிகழ்வினை நினைவு கொளல அவசியமாகின்றது.
மிதிலைக்கு நுழையும் முன்னர் அகலிகைப் படலம் வருகின்றது. கெளதமனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள் மீது ஆசை பிறந்துவிட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த்தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகையைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை விரைவில் உணர்ந்தபொழுதும் அவனை ஒதுக்கவில்லை.
“புக்கவ ளோடும் காமப் புதுமணத் தேறல்
ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்”
அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.
“நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக”
“மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து”
அன்று நடந்தது என்ன. இன்று நடப்பது என்ன…? மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை. அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான். இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர்.
[முன் தொடர்ச்சி]
ஒரு வார்த்தையல்ல, காட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான்…? கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லில் மட்டுமல்ல எழுத்திலும் விளையாடும் வித்தகன், வல்லினத்தில் தாடகை வருகை, மெல்லினத்தில் ஆற்றின் ஓட்டம் காட்டுபவன். பின்னால் இராமன் செய்யப் போகும் தவறை பெரிது படுத்தாமல் இருக்க அவன் பெண்ணிட்த்தில் கருணை உள்ளவன் என்பதைக் காட்ட இக்காட்சி ஒட்டிக்கொட்தோ…? அதிலும் சரியாக மிதிலைக்காட்சிக்கு முன் இதை அமைத்திருப்பது கவிஞனின் சாமர்த்தியம்.
“கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்”
இராமனுக்குப் புகழாரம் சூட்டப்படுகின்றது. அந்த மைவண்ணன் மனநிலை பாதிக்கப்பட்டு இன்று அவன் கொட்டும் நெருப்பு மழையைப் பார்ப்போம்.
“கலத்தினின் பிறந்த மா மணியின் காந்தறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.”
சீதை எல்லோரும்போல் கர்ப்பத்தில் உதித்துப் பிறக்காதவள். மண்ணில் கிடைக்கப் பெற்றவள். அவள் ஒரு புழு. அவன் உயர்க்குலமாம். அவள் தாழ்ந்த பிறப்பாம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அப்பொழுது தெரியாத வேற்றுமை இப்பொழுது தெரிகின்றது.
பெண்மையும், ப்ருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
பெண்மை இல் மன்னவன் புகழின், மாய்த்தலால்.
மகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரம் இதைவிடக்கொடியதாக இருந்திருக்க முடியாது, தவமாய் வாழ்ந்த பெண்ணரசியைத் தன் சொல்லம்புகளால் துளைத்துவிட்டான். மீண்டும் தொடர்ந்து பேசிகின்றான்.
”அடைப்பர் ஐம்புலன்களை; இடை ஒரு பழிவரின் அது துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகை மார்” உயர்குடியில் பிறந்தோர் பழிவரின் உயிர் துறப்பராம். உயர்குடியில் பிறந்த பெண்கள்தான் ஒழுக்கமுடையவர்களா…? ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா…? பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா…? ஒரு மன்ன்னாகப் போகின்றவன் வாயில் இத்தகைய வார்த்தைகள் வரலாமா..? இராமன் திருமாலின் அவதாரம். மனித அவதாரம் என்று கூறுவர்ல் மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம். மனித பலஹீனத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டான்.
ஆசையின் பல குழந்தகளில் கோபமும் பொறாமையும் அடங்கும். இங்கும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக் காட்டவிரும்புகின்றேன். நாயகர்களை ஒப்பிடவில்லை என்று முதலிலேயே கூறிவிடுகின்றேன். உணர்வுகளின் போக்கைத்தான் விளக்குகின்றேன்.
சிலப்பதிகாரத்தில் இந்திர விழாக்காட்சி.
மாதவி மேடைக்கு வரவும் வந்தவர்களின் பார்வைகள் அவள் மேனியழகில் படர்கின்றது. கோவலன் கொதித்துப் போகின்றான். அவள் ஒரு ஆடல் கணிகை. மன்னனின் சட்டப்படி அவள் பொது மக்களின்முன் ஆடியாக வேண்டும். ஆட ஆரம்பித்தவுடன் அந்தக் கலையுடன் ஒன்றிப்போகின்றாள். அதுவும் கலைஞனின் இயல்பு. அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள், அவள் அழகு, ஆடல், பாடல் எல்லாம் அவன் மட்டும் ரசிக்க வேண்ட்ம். ஆடி முடித்து வருகின்றாள், கோவலனும் அவள் மனம் மகிழவே அவளிடமிருந்து யாழ் வாங்கிக் கானல்வரி பாடுகின்றான். குழம்பிய மனம். பொறாமையில் கொதித்துப் போயிருக்கும் இதயம். அங்கிருந்து இனிய நாதமாக ஆரம்பித்து, குழப்பங்களைக் கொட்டி, இறுதியில் அன்னத்தை நோக்கி,
”:ஊர்திரை நீர்வேலி உழக்கித்திரிவாள்பின் சேரல் நடை ஒவ்வாய்” என்று மாதவியின் பிறப்பைச் சுட்டிக்காட்டி முடிக்கின்றான். கற்புக்கரசி மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கின்ரான். மணிமேகலை என்ற பெண் மகவைப் பெற்று பெரு விழாவும் நடத்தியுள்ளான். அப்பொழுது காணாத குலக்குணத்தை இப்பொழுது என்ன புதிதாகக் கண்டுவிட்டான் மனிதன் கோபவயப்படும்பொழுது தன் சுய அறிவை இழந்து விடுகின்றான்.
இன்றும் நம்மிடையே காணும் காட்சி… கணவனுக்குக் கோபம் வந்தவுடன் “உன் குடும்ப லட்சணம் தெரியாதா…? உன் ஊர் புத்தி தெரியாதா…?” என்று மனைவியைக் கடிந்து கொள்வது தொடர்து வரும் கதை.
அன்பு மனிதனைச் செம்மைப்படுத்தும். ஆனால் ஆசை மிஞ்சும்பொழுது மனிதனை விலங்காக்கிவிடும். ஆசையின் பிள்ளைகள்தான் கோபமும், பொறாமை, வெறுப்பு எல்லாம்.
சீதையைக் காணும் முன் அன்பின் பிடியில் இராமன் இருந்தான். அக்கறையுடன் அவளைச் சீரோடு கூட்டி வரச் சொலின்றான். அழகு மயிலாய் வந்தபொழுதோ ஆத்திரப் பேய் பிடித்துக்கொண்டது. “இந்த அழகை இராவணனும் ரசித்துவிட்டான். எத்தனை மாதங்கள் சிறை வைத்திருந்தான்… ஓடி ஓடிப் பார்த்திருக்கின்றான். நெஞ்சிலே அவளைச் சுமந்திருந்தானே… மேனியழகில மயங்கி எவ்வாறெல்லாம் கற்பனை செய்திருப்பான்….” இராமனின் மனம் குரங்காய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டது. குரங்கினமே அவனைத் தொழுது நிற்க, அவன் தன மனத்தை அடக்கத் தவறிவிட்டான்.
இராமனின் மனநிலையை மண்டோதரி வாயிலாகக் கம்பன் வெளிப்படுத்துகின்றான்.
மாண்டுவிட்ட மணாளனைக் காண இராவணன் மனைவி மண்டோதரி போர்க்களம் வருகின்றாள். விழுந்து கிடக்கும் கணவனைக் கண்டு கதறுகின்றாள். இராவணன் உடபில் எப்பகுதியிலும் சீதையின் நினைவு இருக்கக்கூடாதென்று உடலையே சல்லடையாக்கி இருந்தான் இராமன்.
”கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குமோ எனக்கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி”
மண்டோதரியின் வார்த்தைகளில் இராமனின் மனத்தைப் படம் பிடித்துக்காட்டிவிட்டான் கவிஞ. சாதாரண மனித நிலையிலும் தாழ்ந்துவிட்டான் இராமன். சீதை சிறை பிடிக்கப்ப்பட்ட மூல காரணம் யார்…? சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஓர் உரையாடல் நிகழ்த்தியது யார்…? சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார்…? மூக்கரிபட்டு, முலையிழந்து ஓர் சகோதரி முன் வந்தால் அண்ணனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்…? அவனுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி ஏற்பட முதல் காரணம் யார்…? எதையும் சிந்திக்கும் நிலையில் இராமன் இல்லை. விசாரணை இல்லை. பார்த்த்தும் பழி சுமத்திவிட்டான். கட்டிய கணவனே மனைவியை மான பங்கப்படுத்தும் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நெருப்புக் குழியில் இறங்குகின்றாள். கொதித்துப் போயிருந்த அவள் இதயச் சூடீனில் அக்கினிக்கடவுள் தாங்க முடியாமல் அந்தக் கற்புக் கனலைத் தாங்கிவந்து இராமன் முன் சேர்க்கின்றான். அப்பொழுதும் இராமன் வாத்தைகளைக் கொட்டுகின்றான். சுற்றி நிற்கும் தேவர்கள், முனிவர்கள் சீதைக்காகப் பரிந்து பேசும் சூழ்நிலை பாராட்ட்த்தக்கதல்ல.
இந்த அரங்க நிகழ்வுகளுக்குச் சிலர் கூறும் சமாதாங்களைப் பார்க்கலாம்.
இராமனின் பதட்ட்த்திற்குக் காரணம் ஊர்ப் பழி. வனவாசம் முடியவும் மன்ன்னாகப் போகின்றவன். தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாத பதவி. ஊர் கூடியிருக்கின்றது. பலர் முன்னிலையில் பிரச்சினை பேசவேண்டி வந்துவிட்டது. வந்திருப்பவள் ஓர் பெண். அதிலும் சிறை பிடிக்கப்பட்டு பல மாதங்கள் துன்பத்தில் உழன்றவள். மென்மையான அணுகுமுறை வேண்டும். இராமன் மன்னன் மட்டுமல்ல. அவள் கணவன். இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கக் கடமைப் பட்டவன். இத்தனை பொறுப்புகள் அவன் மீது இருக்க அவன் இதனை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்…? கணவன் மனைவி உறவில் நம்பிக்க்கைதான் அச்சாணி.
சீதை வந்தவுடன், “பெண்ணே, நான் உன் கணவன். உன் கற்பில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சிறிது காலம் மாற்றான் வீட்டில் சிறை இருந்துவிட்டாஉ. உன்னை என் மனைவி என்று ஏற்றால், நீ அரசு பீடத்தில் அமரவேண்டியவளும் ஆகின்றாய். அதற்கு உன்னைத் தகுதியானவள் என்று நீ ந்ரூபிக்கவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றாய். நீ குற்றமற்றவள் என்று நிரூபித்தால் மட்டுமே உன்னை நான் ஏற்க இயலும் ” என்று இராமன் பேசியிருக்க வேண்டும்.
மனம், காயம் இரண்டிலும் மாசடைந்த அகலிகையை அவள் கணவன் ஏற்றுக்கொள்ள, “நெஞ்சினால் பிழைபில்லாளை நீ அழைத்திடுக ” என்று வேண்டிக்கொள்கின்றான். அகலிகையை மாசு அறு கற்பின் மிக்க அணங்கினாள் என்கின்றான். ஒரு சமயம் இராமன், சீதையை இழந்தாலும். இலக்குவனை இழந்தாலும், ஏன் தன் உயிரை இழந்தாலும் சத்தியம் தவற மாட்டேன் என்று கூறியவன். அன்று அகலிகையைக் கற்பு மிக்கவள் என்று சொன்னதும், இன்று கற்புக்கனலை எல்லாம் இழந்தவள் என்று கூறுவதும் இராமனைப் பொய்யனாக்காதா…? உலகப் பழிக்குப் பயந்தவ, தன் மனைவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா..? சிறை பிடிக்கப்பட்ட்து ஊர்ப்பழிக்கு வித்தானால் அவன் பேச்சும், அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா…? “நெருப்பில்லாமல் புகையுமா” என்று முணுமுணுக்கும் மனத்திற்குத் துணை போனதால்தான் மீண்டும் புரளி ஏற்பட்டு, கர்ப்பிணிப் பெண் காட்டிற்குப் போக நேர்ந்தது. மகாபாரதத்தில் திரெளபதியைத் துச்சாதன்ன் சபைக்கு இழுத்து வருகின்றான்/ இங்கே சிங்காரித்து மரியாதையுடன் அழைத்து வரப்ப்படுகின்றாள்/ பலி மேடைக்குச் செல்லும்முன்னர் ஆட்டினைச் சிங்காரித்து அழைத்து வருவதைப் போல் அழைத்து வந்து ஓர் அபலைப் பெண் அவமானப்படுத்தப்பட்டாள். மானமிழந்தவள் என்ற குற்றச்சாட்டிற்காக திரெளபதி சபைக்கு வரவில்லை. அவள்மேல் கணவன் குற்றம் சுமத்தவில்லை. அங்கு குற்றவாளி தர்மர். அதாவது அவள் கணவன், இங்கு நிலையே வேறு. தேவரும் முனிவரும் மற்ற பெரியவர்களும் ஊர்ப் பொது மக்களும் கூடியிருக்கும் சபையில் திருமணம் நிகழலாம். ஆனால் கணவனே, “நீ எல்லாம் இழந்துவிட்டாய். எனக்களித்த மிச்சம் ஒன்றும் இல்லை. நீ செத்திருக்கவேண்டும். நீ மண்ணில் நெளியும் புழு. நாங்கள் உயர் குலம். பெண்ணின் பெருமை, கற்பின் திண்மை, ஒழுக்கம், சீர்மை எல்லாம் உன் ஒருத்தியால் பாதிக்கப்பட்டுவிட்டது .” என்று ஊர்ச் சபையில் கூறும் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும்…? மகாபாரதத்தில் கண்ணன் துயில் கொடுத்து மானம் காத்தான். மனைவி மீது அங்கு களங்கம் சுமத்தப்படவில்லை. இங்கு கணவனே மானபங்கப்படுத்திவிட்டான்.
இன்னொருசாரார் கூறும் சமாதானம்… கானகத்தில் சீதை இலக்குவனைச் சொல்லால் சுட்டாள். சொல்லின் வலிமையை சீதை உணரவேண்டுமென்றுதான் இராமன் அவ்வளவு கடுமையாகப் பேசினான் என்பது. சீதை-இலக்குவன் உரையாடல் இருவர் மத்தியில் நடந்தது. இதற்குப் படிப்பினையாக இதனைக் கூறுவது சரியல்ல. இது நடுத்தெரு நிகழ்ச்சி. பல மனங்களில் விஷ வித்து விதைக்கப்பட்ட களமாகிவிட்டது. தீர ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதற்குத் தன் உயிரை நீக்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஓர் அவதாரப் புருஷன் அல்ல. மிகச் சாதாரணமான மன்னன். இங்கு உதாரண புருஷன் முறையாக விசாரிக்காமல் தீர்ப்பு கூறிவிட்டான்.
ஆக, இராமன் தன் மன்னன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்படுதுடன், பல ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைப் புரிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனே பெண்மைக்குப் பாதகம் செய்த கணவனும் ஆகிவிட்டான்.
இன்னொருவர் என்னிடம் நேரில் கூறியது, “தசரதன் உயிர்விடும்பொழுது கைகேயி, பரதன் உறவுகளை உதறிவிட்டதாகக் கூறி மறைந்தார். இராமன் ஆளும் இராச்சியத்தில் யாரும் மனக்குறையுடன் இருக்கக்கூடாது என்று இராமன் நினைத்தான். தயரதன் மீண்டும் மண்ணுலகம் வந்து நடந்துவிட்ட தவறுகளை மன்னிப்பதுடன், வெறுப்பு மாறி மீண்டும் அவர்களைக் குடும்பத்தில் சேர்க்கவேண்டும் என்ற விருப்பத்தாலும் தொடர்ந்து சீதையக் காயப்படுத்தினான்” என்று கூறுவது பொருந்தவில்லை. மனப்புண்ணுடன் சீதை வாழ்ந்த்தால்தான் பூமி வரண்ட்து. ஆனால் அப்பழியும் சீதைமேல் விழுது கானகத்திற்குக் கர்ப்பிணிப் பெண்ணாக நுழைய நேரிட்டது. எல்லோருக்கும் முன்னும் வசைச் சொற்களை ஒரு கணவன் உதிர்த்தது அவளைச் சிதற அடித்துவிட்டது. மனிதத்தன்மையற்ற செயலை மறக்க முடியாது.
அக்கினிப்பிரவேச அரங்கினுள் நுழைந்து வந்திருக்கின்றோம்.
இராமன் இப்படி பேசியிருக்க முடியுமா.. என்ற கேள்வியுடன் நம் சிந்தனையைத் தொடர்வோம். சில குறும்புத்தனம் செய்திருக்கின்றான். சின்னத் தவறுகளும் செய்திருக்கின்றான். துன்பம் நேர்ந்தபொழுது துவண்டு போயிருக்கின்றான். அவன் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்குப் போகவேண்டும் என்று அறிந்தபொழுதும் அவன் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் மலர்ந்தே இருந்தது. வாலியை வதைக்கு முன்னர் அவன் தயன்ங்கினான். விழுந்து கிடந்த வாலி சொல்லம்புகளால் இராமனைத் தாக்கியபொழுது பொறுமையாகப் பதிலிறுத்தான். உயிர்போகும் முன்னரே தந்தைக்கு நிம்மதி தர் அங்கதனை கெளரவமாக ஏற்றுக்கொண்ட கருணை மனம் படைத்தவன் இராமன். சரணம் என்று வந்தவர்களை அணைத்துக் கொள்ளும் பண்பாளன். ஓடக்காரன் குகனோ, வானர சுக்கிரீவனோ, எதிரி முகாமிலிருந்து வந்த விபீடனோ, எல்லோரையும் தன் சகோதர்ர்களாக ஏற்றுக்கொண்ட பாசமனம் படைத்தவன், தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு கிடையாது. தாடகை ஓர் அரக்கியென்ராலும் ஓர் பெண் என்பதால் கொல்லத்தயங்கிய மென்மை இதயம் கொண்டவன். பக்தனை அணைத்து ஆசியளிப்பதாக இறைவனைக் காட்டுவதைப் பார்த்திருக்கின்றோம். இராமனோ அனுமனின் பிடிகளுக்குள் இன்பம் கண்டவன். அனுமனிடம் எப்பொழுது கடனாளியாக இருக்க விருப்பம் தெரிவித்தவன். நன்றியுணர்விற்கு அவன் கொடுத்த மரியாதை. அவன் செய்த சிறு பிழை சூர்ப்பனகையை இலக்குவனிடம் அனுப்பியது. அரக்கியின் தொடர்ந்த பயமுறுத்தலில் அஞ்சிப்போன சீதையைப் பார்க்கவும் அவசரப்பட்டுவிட்டான். ஆசையில் ஏற்பட்ட சறுக்கல். போர்க்களத்தில் கூட எல்லாம் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து “இன்று போய் நாளை வா” என்று கூறிய பெருந்தகையாளன். கதையின் ஆரம்பித்திலிருந்து எங்கும் அவன் கொதித்து எழுந்து நாம் பார்க்கவில்லை. கடுஞ்சொல் பேச்சும் கேட்கவில்லை. அமைதியானப் பாத்திரப் படைப்பாய்க் கதை முழுவதும் இயங்கிவந்த இராமன், இந்த அக்கினிப்பிரவேசக் காட்சியில் பொருந்தவில்லை. குறைகளை மொத்தக் குத்தகை எடுத்த ஓர் ஆத்திரக்காரனை, அன்பே வடிவான சீதாராமனுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க இயலாது. இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த முரண்பாடு நன்கு புரியும். தவறு நிகழ்ந்திருக்கின்றது. அதனையும் முடிந்தமட்டில் பார்க்கலாம்.
இராம கதை, நிகழ்ந்த ஒன்றா அல்லது கற்பனையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் இராமன் வாழ்ந்த காலமும் வால்மீகி வாழ்ந்த காலமும் வேறாக இருக்கலாம். மூலக்கதை முன் வைத்தவர் வால்மீகி. மகாபாரதப்போர் நடந்த காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எழுதியதைப் பார்க்கின்றபொழுது ஏறத்தாழ கி.மு.3139 என்று குறித்துள்ளார்கள். இதற்கும் முன் வேதம் தோன்றிய காலம், அதற்கும் முன் இராமாயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சமுதாய அமைப்பு, அவர்களிடையே இருந்த கலாச்சாரங்களை இராமாயண நிகழ்வுகளுடன் முடிந்த அளவு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மனிதன் விலங்கினைப்போல் வாழ்ந்து பின்னர் படிப்படியாய் நாகரீகம் அடைந்து, கூட்டு வாழ்க்கை சமுதாயமாக மாறி, தனக்கென ஓர் நிறுவனம் அமைத்துக் கொண்டான். அதுவே குடும்பம் என்று ஆயிற்று. தன் உழைப்பின் பலனைத் தன்னுஐய வாரிசுகளுக்குச் சேரவேண்டுமென்ற கருத்தில், பொது நிலையிலிருந்த பெண்ணை உற்பத்திக் காரணியாய் மாற்றி, குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவியாகும் தனி நிலை பெற்றாள். குடும்பத்தலைவிக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன் கணவனின் குறைகளைக் கடவுளிடம் கூறினால்கூட அவள் கற்புக்குக் குறைவு. சங்க இலக்கியத்தில் ஓர் பெண் எந்த அளவு பேசலாம் என்று பல பாடல்களில் குறிப்பு வருகின்றது. அதே போன்று உயர்குலப் பெண்டிற்குக் கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பிறப்பில் பிரிவினைகளும் காணப்படுகின்றன.
இராமனின் கதை நிகழ்வுக்குப் பின்னர் மகாபாரதக் கதை தொடர்கின்றது. அப்பொழுது இருந்த சமுதாய அமைப்பை அக்கதை கொண்டே பார்க்கலாம். மன்னர் திருதராட்டிரரும், பாண்டுவும் வியாசருக்குப் பிறந்தவர்கள். பாண்டவர்களும் பாண்டுவிற்குப் பிறந்தவர்களல்ல. திரெளபதிக்குக் கணவர்கள் ஐவர். அக்காலத்தில் இவைகள் உயர்குடியில் நடந்தவைகள். அப்பொழுது ஊர் அவர்களைப் பழிக்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பினை வைத்துக் கருத்துக் கூறவேண்டும். இராமாயணம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கின்றது. மாற்றான் சிறையில் இருந்த்தால் மாசுபட்டவளாக ஊர் பழி சுமத்தி இருக்காது. துச்சாதனன் திரெளபதியைத் தொட்டு, பிடித்து இழுத்து வந்தான். அதனால் அவள் கற்பு போய்விட்டதாகக் குறை கூறவில்லை. அதனால்தான் வால்மீகியும் சீதையைத் தொட்டுத்தூக்கிச் சென்றதாக எழுதியுள்ளார். “கற்பு” எனும் கட்டுப்பாடு மகாபாரதக் காலத்திற்குப்பின் வந்திருக்கவேண்டும். எனவே அக்கினிப் பிரவேச அரங்கத்தில் பிற்காலச் சேர்க்கைகள் இருப்பது புலனாகின்றது. வால்மீகி இராமாயணத்தில்
“இனி உன்னைச் சேர்த்துக்கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். காலத்தை ஒட்டிய பேச்சு.
சீதை இராமனைப்போல் அமைதியான பெண்ணல்ல. நினைத்ததைப் பேசிவிடுவாள், இராமன் காட்டிற்குப் புறப்படும் தருணத்தில் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கின்றாள். இராமன் தயங்கியபொழுது “நீங்கள் ஆண்வேடம் தரித்த பெண்ணென்று அறியாமல் என் தந்தை உங்களுக்கு என்னை மணமுடித்து வைத்துவிட்டார் ” என்று கூறுகின்றாள். இலக்குமனிடம் வரம்பு மீறிக் கடுமையாகப் பேசுகின்றாள். அக்கினி பிரவேசக் காட்சியில் இராமனுக்கு விடைகள் அளித்தபின் முடிவில் “பெண் மனத்தை இவ்வுலகில் எந்த ஆண்மகனுக்கும் புரிந்து கொள்ளத் தெரியாது ” என்று பலருக்கு முன்னிலையில் தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றாள். பெண்ணுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லாக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இத்தகைய உரையாடல்கள் இருந்திருக்க முடியாது.
வானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வரும்பொழுதே காற்றில் உள்ள தூசுகளுடன் கலந்து, மண்ணிலே ஆறாய் ஓடும்பொழுது பாதையில் இருப்பவைகளையும் அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகின்றது. கதை நிகழ்ந்த காலத்திலிருந்து செவிவழிப் பயணமாகப் புறப்பட்டு கவிஞனிடம் வந்து சேரவும், கதையில் மனம் பறிகொடுத்தவன், அதனை அலங்கரித்துக் காவியமாக உருவாக்கிவிடுகின்றான். கதை என்றால் உச்சக்கட்டம் வேண்டாமா…? அக்கினிப்பிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப்படிருக்கலாம். சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச் செய்தியுண்டு. சீதையின் மேலுள்ள பரிவிலே காட்சியை மிகைப்படுத்தியிருக்கலாம். எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்துவிடக்கூடாது. இராவணன் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாரா…? எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக் கதையை அமைத்துவிட்டாரா..? தன்னையும் ஒரு பாத்திரமாகக் கதையில் அமைத்துக் கொள்வது படைப்பாளிக்குள்ள சலுகை. உத்திரகாண்டங்கூட ஒட்டப்பட்ட பகுதியாக இருக்கலாம்.
தந்தை-பிள்ளை உறவிற்கு இராமாயணம் என்றாலும், இல்வாழ்க்கையில் ஏகபத்தினிவிரதன் என்பதற்கு இராமன் ஒருவன் தான் இன்றும் எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டுவருகின்றது. அன்றும் இன்றும் ஆணாதிக்க உலகில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வைத்துக்கொண்டு உலா வரும்பொழுது, எடுத்துக்காட்டாய் விளங்கும் இராமனை இந்த அக்கினிப் பிரவேசக் காட்சியில் அமிழ்த்திவிடக்கூடாது. ஆழ்ந்து சிந்திக்கும் தலைமுறை உருவாகிவிட்டது. இதுபோன்ற இதிகாசத்தில் கேள்விக்குரிய காட்சிகளுக்குச் சரியான விளக்கங்களை ஆராய்ந்து தரவேண்டியது சான்றோர்களின் கடமையாகும். இன்றும் நம்மிடையே சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். இதிகாச இராமன் தன் மனைவியை இப்படி பொது இடத்தில் கேவலப்படுத்தியிருக்கமாட்டான். இது என் உணர்வு சொல்லுகின்றது. உண்மையை உணர்த்த சான்றுகள் வேண்டும். கண்ணில் துரும்பு இருந்தால் உறுத்திக்கொண்டிருக்கும். கண்ணில் துரும்புடன் இருப்பது பொறுக்க முடியவில்லை. அறிஞர்கள் முயன்றால் துரும்பை எடுத்துவிடமுடியும். என் பணிவான வேண்டுகோளைச் சான்றோர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”
நன்றி திண்ணை
சி. ஜெயபாரதன், கனடா