நரபலி நர்த்தகி ஸாலமி

Solame Cover

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)
(Based on Oscar Wilde’s Play Salome)
(1854-1900)

சி. ஜெயபாரதன், கனடா

காட்சி -1 பாகம் -1

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=czi6qt9s_qg ]

‘கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட் சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது தவறு. அழகு வடிவுகளில் எழிலைக் காண்பவர் அனைவரும் நாகரீகப் பண்பாளர். எந்தக் கலைஞனும் எதையும் நிரூபிப்ப தில்லை! எந்தக் கலைஞனுக்கும் ஒழுக்க நெறி மீது பரிவு கிடையாது! கலைஞன் எதையும் வடித்துக் காட்ட முடியும். எல்லாக் கலைகளும் ஆழமற்று அறிவிக்கும் மேல்முகப்புச் சின்னங்களே! எல்லாக் கலைகளும் அறவே பயனற்றவை! ‘

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

 

image (6)

எழுத்தாள மேதை:

 

ஆஸ்கர் வைல்டின் வரலாறு

எழுத்தாள மேதை ஆஸ்கர் வைல்டு டப்ளின் அயர்லாந்தில் (அக்டோபர் 16, 1854) பிறந்து, பெர்னாட்ஷா வாழ்ந்த காலத்தில், கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிப் புகழ் பெற்றவர். கலைப் படைப்பு கலைத்துவப் பண்புக்கே (Art for Art ‘s sake) என்னும் நியதியில் காவியங் களைப் படைத்தவர் ஆஸ்கர் வைல்டு. அறிவு நூல் களஞ்சியங்கள் பலவற்றைப் படைத்து, இலக்கிய நகைச்சுவை ததும்பும் நாடகங்கள் எழுதிய நாகரீகக் கலைஞர் அவர். டப்ளின் டிரினிடி கல்லூரியிலும், ஆக்ஸ்போர்டு மெக்தாலன் கல்லூரியிலும் மேன்மையுடன் கற்று முதல் வகுப்பில் தேறி B.A. பட்டம் பெற்றவர். நடை, உடை, கலை யுணர்ச்சி ஆகியவற்றில் சற்று முரணான திரிந்த புத்தியும் கொண்டவர் அவர். வால்டர் பீட்டர், ஜான் ரஸ்கின் ஆகியோரின் அழகுணர்ச்சிக் கலை நயங்களில் ஆழ்ந்த பற்றும், ஆர்வமும் கொண்டு அவரது படைப்புக்களால் ஊக்கப் பட்டவர்.

அவரது முதல் வெளியீட்டுக் கவிதை நூல் (1881) பேரளவில் வரவேற்கப் பட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று உரையாற்றினார். அங்கு தான் அவரது நாடகம் வீரா [1883] படைப்பானது. 1884 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்னும் மாதை மணந்து அவர்களுக்கு சிரில், விவியன் [Cyril, Vyvyan] என்னும் இரண்டு புதல்வர் பிறந்தனர். பிறகு 1891 இல் கோமகனார் ஆர்தர் ஸாவில்லின் குற்றம், மற்ற கதைகள் [Lord Arthur Savile ‘s Crime & Other Stories], 1888 இல் பூரித்த இளவரசன் [The Happy Prince], 1891 இல் முதல் நாவல்: டோரியன் கிரேயின் படம் [The Picture of Dorian Gray], 1892 இல் மாதுளைகளின் மாளிகை [The House of Pomegranates] ஆகியவை பின்னால் வந்த அவரது கதைப் படைப்புகள்.

ஆஸ்கர் வைல்டின் கதைகளும், கட்டுரைகளும் பலரால் மிகவும் பாராட்டப் பட்டன. அவரது உன்னத ஆக்கத் திறமை அவர் எழுதிய நாடகங்களில் வெளிப் பட்டது. லேடி விண்டர்மியரின் விசிறி [Lady Winermere ‘s Fan (1892)], படுவாவின் கோமகள் [The Duchess of Padua (1892)], ஸாலமி [Salome (1893)], ஏது மதிப்பில்லா ஒரு மாது [A woman of No Importance (1893)], ஒரு பரிபூரணக் கணவன் [An Ideal Husband (1895)], மகத்தான படைப்பாகக் கருதப் படும், மெய்யுறுதியின் முக்கியம் [The Importance of Being Earnest (1895)] ஆகியவை ஆஸ்கர் வைல்டு எழுதிய அரிய நாடகப் படைப்புகள். ஆஸ்கர் வைல்டு அக்கால மாந்தர் வெறுக்கும் ஓரினப் பாலுறவு முறைகளில் ஈடுபட்டு, குற்றம் சாட்டப்பட்டு (1895) ஈராண்டுகள் சிறையில் தள்ளப் பட்டார். அப்போது அவர் தன்னரிய பெயரையும், புகழையு மிழந்து சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டார்! சிறையில் உள்ளபோது அவர் எழுதிய சிறை அனுபவக் கவிதைப் படைப்பு, ‘சிறை அனுபவப் பாடல் ‘ [The Ballad of Reading Gaol] என்னும் நூலில் 1898 ஆம் ஆண்டில் வெளியானது. இங்கிலாந்தில் தீண்டப்படாத மனிதராய் ஒதுக்கப்பட்டு நிதிவசதி யில்லாமல் நோய்வாய்ப் பட்டு பிரான்ஸில் கடைசிக் காலங்களைக் கழித்து 1900 நவம்பர் 30 இல் ஆஸ்கர் வைல்டு காலமானார்.

 

image (4)

ஜொஹானன், புனித நீராட்டி ஜான்

பைபிள் வரலாற்று நூலில் கூறப்படும், புனித நீராட்டி ஜான் [Prophet: John, The Baptist] யூதப் போதகரின் மரணத்தைப் பற்றிய ஓரங்க நாடகம், ஸாலமி. ஜொஹானன் என்று அழைக்கப்படும் ஜான், கி.பி. முதல் நூற்றாண்டில் ஏசு நாதர் காலத்தில் தோன்றி, ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டப் பிறந்த தீர்க்க தரிசியாகப் புதிய நெறிவாக்கில் [New Testament] காணப் படுகிறது. மிகவும் பயங்கரமாகக் கொடூர முறையில் கொலை செய்யப் பட்ட, யூத மதஞானி ஜானின் நாடகம் ஸாலமியை, முதலில் ஆஸ்கர் வைல்டு பிரெஞ்ச் மொழியில் எழுதினார். 1894 இல் அதன் ஆங்கில வசனம் எழுதப் பட்டது. ஆனால் ஸாலமி முதன்முதல் பெர்லினில் 1903 ஆண்டு அரங்கேறியது! நாடகம் அங்கே வரவேற்கப் பட்டு 200 தடவைகள் காட்டப் பட்டது. ஆனால் அந்த அரிய நாடகத்தை ஆக்கிய ஆசிரியரான ஆஸ்கர் வைல்டு ஒருதடவை கூட, அப்போது காண அவர் உயிரோடு வாழவில்லை!

********

நரபலி நர்த்தகி ஸாலமி
(ஓரங்க நாடகம்)

காட்சி -1 பாகம் -1

நாடக நபர்கள்

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டு மன்னன்

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொஹானன் (Johanan): புனித நீராட்டி, ஜான்
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

 

 

image (9)
ஜொஹானன்,  புனித நீராட்டி ஜான்

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் அரச மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 

image (7)
John baptizing Jesus

*******************************

ஸிரியா வாலிபன்: மேலே என்னைக் கவரும் நிலவின் முகம் எப்படிக் கீழே தெரிகிறது! பொங்கி வரும் பெரு நிலவா ? புது நிலவா ? பொன்னிலவா ? எந்த நிலா எழிலாக உள்ளது ? கீழே உலவும் உயிருள்ள நிலவா ? அல்லது மேலே நகரும் உயிரில்லாத நிலவா ? உயிருள்ள நிலவைத்தான் என் ஆத்மா நாடுகிறது! ஸாலமி! ஸாலமி! ஸாலமி! எங்கிருந்து உனக்கு இத்தனை அழகு இன்று வந்தது ? என்னிரு விழிகள் இமை தட்டாமல் உன்னைத்தான் நோக்கிய வண்ணம் உள்ளன! என் நெஞ்சம் என்னை விட்டுப் போய் உன்னிடம் அடைக்கல மாகிறது! என்னுயிர் உனக்காக நீங்கவும் எத்தனிப்பு செய்கிறது! இதோ பார், என்னை! எல்லா வற்றையும் உனக்காக அர்ப்பணித்துக் கற்சிலையாய் நிற்கிறேன் கவர்ச்சி அணங்கே! திரும்பிப் பார் என்னை! ஒருமுறை பார் என்னை! ஸாலமி என் கண்மணி!

 

image (8)

 

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியைப் பார்க்காதே! அது ஓர் சுறாமீன்! காதல் புரிவதற்கு ஏற்ற மாதில்லை அவள்! முழு நிலாவைப் பார்த்தால் உனக்குப் பெண்ணைப் போல் தெரிகிறது! ஆனால் சற்று கூர்ந்து பார்! அடிவானில் பரிதி சிந்திய செந்நிறக் குருதி, வானத்தின் மீது தெறித்துள்ளது! பார்த்தாலே எனக்குப் பயமாகத் தோன்றுகிறது! ஏதோ கேடு வரப் போகிறது! ஏனோ இன்று விசித்திரமாகத் தெரிகிறது எனக்கு! பிரேதக் குழியிலிருந்து எழுவது போல் நிலா தலை நீட்டுகிறது! செத்த பெண் போல விழுந்து கிடக்கிறது, நிலா! சாகும் பிறவியை நோக்குவது போல் விழிக்கிறது சந்திரன்! கேதம் விசாரிக்க வரும் பேதை மாதைப் போல் சோகமாய் உள்ளது நிலா! உனக்குத் தெரிய வில்லையா ?

ஸிரியா வாலிபன்: எனக்கு அப்படித் தெரியவில்லை! ஸாலமி ஓர் திமிங்கலம் என்றாலும் நான் அஞ்சப் போவ தில்லை! விசித்திரப் பார்வை வெண்ணிலவுக் கில்லை! ஆனால் ஸாலமியின் வேங்கை விழிகளில் ஏதோ வேதனை தெரிகிறது! தனிமையின் கனலில் வேகிறாள் ஸாலமி! அது காதலைத் தேடும் வேதனை! கன்னிப் பெண்டிர் நெஞ்சில் கனல் பற்றி எரியும் வயதல்லவா, ஸாலமிக்கு ? அவளது விழிகள் மேலே நாடும் என்னை நோக்காமல் கீழே ஏன் சுற்றித் திரிகின்றன ? என்னை விடக் கம்பீரமான ஆடவர் மீது அவள் விழிகள் அம்புகளை ஏவுகின்றன! ஸாலமியின் கண்கள் நர்த்தனம் ஆடிப் பிறரை மயக்குகின்றன! கண்கள் வலைவீசி ஆண்களைப் பிடிக்க ஓடுகின்றன! என்னைப் பார்த்தும் பாராததுபோல் ஸாலமி நடிக்கிறாள்! அவள் கண்களின் பட்டொளி படாத ஆயிரம் பேரில் நானும் ஒருவன்!

 

image (1)

 

ஏரோதியாஸின் காவலன்: செத்த நிலவை மெதுவாகத் தூக்கி வருவது போல், மேகங்கள் ஏந்தி வருகின்றன, பார் வாலிபனே! ஏதோ கேடு விளையத்தான் வானத்தில் அப்படித் தெரிகிறது!

முதல் படையாளி: [கீழே விருந்து மாளிகையில் ஆரவாரம் கேட்கிறது] என்ன ஆரவாரம் அது! யார் போடும் கூக்குரல் அவை ? கேடு விளைவது கீழேயா அல்லது வானத்தின் மேலேயா ?

இரண்டாம் படையாளி: குடி குடித்தவர் குடில் அழிவது இடியிலே என்பது பழமொழி! குடிகாரக் கோமான்கள் போடும் கூத்தாட்டம் அவை! யாரென்றா கேட்கிறாய் ? அவர்கள் யூதர்! சிலர் பார்ஸிக்காரர், சிலர் சாதுஸீக்கள்! ஏசு கிறிஸ்துவை சிறிதும் நம்பாதவர்! ஏசு நாதர் தேவ தூதர் அல்லர் என்று புறக்கணிப்பவர்! மூச்சு விடாமல் மதச் சண்டை போடு வதில் வல்லவர்! யூதப் போதகர் ஜொஹானன் தெருவில் நின்று ஞான உரையாற்றினால், செவிகளை மூடி வீட்டுக் கதவைச் சாத்துபவர்!

முதல் படையாளி: யூதர் எதற்காக மதச் சண்டை போடுகிறார் ?

 

image (2)

 

இரண்டாம் படையாளி: எனக்குத் தெரியாது! எப்பவும் அவர்களுக்குள் சண்டைதான். கேட்பது எதனையும் ஆழ்ந்து கேட்காது மேலாகக் கேட்டு, விதண்டா வாதம் செய்பவர்! பார்ஸிக்காரர் மேலோகத் தேவதைகள் இருப்பதை நம்புகிறார்! ஆனால் சாதுஸீக்கள் தேவதைகளே கிடையா தென்று அவருடன் சண்டை செய்வார்! இப்படி தெரியாத ஒன்றை வைத்துச் சண்டை போடுவது வேடிக்கையாகத் தோன்றுகிறது எனக்கு.

ஸிரியா வாலிபன்: சண்டையால் பயனில்லை! பார்க்கிறேன் நிலவை! நோக்குவேன் ஸாலமியை! நெஞ்சில் அவள் அழகைப் படமெடுத்து நீண்ட நேரம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன்! தூங்காமல் இரவு வேளைகளில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்! பகலில் நேரே அவளைப் பார்த்து மீண்டும் நெஞ்சில் படமெடுத்துக் கொள்கிறேன்!

 

image (5)

 

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! நீ பகலிரவு தூங்காமல் ஸாலமியை நினைத்துக் கொண்டே கிடந்தால், சிறிது நாட்களில் பைத்தியமாய்த் தெருவில் சுற்ற ஆரம்பித்து விடுவாய்!

ஸிரியா வாலிபன்: அப்பனே! எப்போதும் அவளை நினைக்கும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும்!

ஏரோதியாஸின் காவலன்: ஸாலமி ஓர் அரச குமாரி! இளவரசி! நீ ஓர் குடிசைவாசி! நீ எங்கே ? அவள் எங்கே ? எப்போதும் நீ அவளையே பார்க்கிறாய்! அப்படி அவளை நீ இச்சையுடன் பார்ப்பது தவறு! நல்ல வேளை! நீ இன்னும் அந்த முற்றிய நிலைக்குப் போக வில்லை! பைத்தியம் முற்றுவதற்குள் கற்றுக்கொள் வாலிபனே! ஒரு பெண்ணை அப்படி உற்றுப் பார்ப்பது தவறு! பட்டும் படாமலும் பார்த்து அகல வேண்டும்!

 

image (3)

 

ஸிரியா வாலிபன்: நான் ஸாலமியைப் பார்ப்பது ஏன் தவறு ? நான் திருமணம் ஆகாத வாலிபன்! ஸாலமியும் மணமாகாத எழில் மங்கை! எழிலரசியை ஏழை ஆயினும் பார்ப்பது ஏன் தவறு ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் தின்று விடுவது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே, அது நியாயமா ? அதுதான் தப்பு! ஸாலமி மனைவியின் மகள்! ஸாலமி மாற்றாந் தாயிக்குப் பிறந்த சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயோதிகரான ஏரோத், தம்பி மகள் மீது வைத்த விழி வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது தவறில்லை!

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகை மீது நின்று கொண்டு, அரசர் விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி உன் கையிலே கொடுத்து விடுவேன்.

[காட்சி-1, பாகம்-2]

****
தகவல்:

Picture Credits : Salome The Richard Opera By Richard Strauss DVD

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. http://www.ncregister.com/blog/jimmy-akin/who-was-john-the-baptist-11-things-to-know-and-share [August 28, 2013]
9. http://en.wikipedia.org/wiki/Beheading_of_St._John_the_Baptist
10. http://en.wikipedia.org/wiki/John_the_Baptist
11. http://www.pravoslavie.ru/english/52051.htm

12. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE

13.  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

*********************

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)
(Based on Oscar Wilde’s Play Salome)
(1854-1900)

சி. ஜெயபாரதன், கனடா

காட்சி -1 பாகம் -2

Oscar Wilde -1

‘கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கம் தவறிய நூல் என்பது கிடையாது!  நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப் படும். அவ்வளவுதான். கலைஞன் தான் பின்பற்றும் நெறி வாழ்க்கை எனப்படுவது அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது.  ஆனால் கலையின் நெறிமுறை குறைபாடான ஓர் ஊடகத்தின் மூலம் பூரணத்துவப் பயன்பாட்டைப் பெற எதிர்பார்க்கிறது!  எந்தக் கலைஞனுக்கும் நெறித்துவம் மீது இரக்கம் கிடையாது.  கலைஞனிடம் உள்ள ஒழுக்கவியல் பரிவு மன்னிக்க முடியாத ஓர் எழுத்து நடைப் பண்பாடு! கலைஞன் எவனும் மனக் கோளாறுடன் எப்போதும் இருப்ப தில்லை! எதையும் அவன் தனது மொழியில் படைத்துக் காட்ட முடிகிறது. சிந்தனையும், மொழியும் கலைஞனின் இரண்டு கலையாக்கக் கருவிகள்.

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

 

Baptizing Jesus

 

ஏசுவுக்குப் புனித நீராட்டும் ஜான் 

கலைப் படைப்புக்கு நற்பண்பும், துர்க்குணமும் கலைஞனின் இருகைச் சாதனங்கள்.  கலை வடிவ ஆக்கங்களை ஆழ்ந்து நோக்கினால், எல்லாத விதக் கலைகளும் ஓரிசை ஞானியின் கலைத்துவப் படைப்புகளை ஒத்தவையே.  கலைத்துவம் உண்டாக்கும் உணர்ச்சியை நோக்கினால், அது நடிகனின் நடிப்புத் திறனைப் போன்றதுவே!  அனைத்துக் கலைகளும் தோற்றத்தில் பளிச்செனக் கவரும் வெளிப்பகட்டுச் சின்னங் களே!   அவற்றின் அடித்தளத்தில் மூழ்கி ஆய்ந்திடுவோர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார். சின்னங்களை மட்டும் படித்து அறிபவரும் விபத்தில் மாட்டிக் கொள்வர்!  கலைத்துவப் படைப்பு ஒன்றின் மீது பலவித முரண்பாடான கருத்துகள் எழுந்து எறியப் பட்டால் அந்தப் படைப்பு புதிதானது, சிக்கலானது, முக்கியமானது என்று குறிப்பிடலாம்! கலைத்துவம் காட்டுவது வாழ்க்கை யன்று; அது காண்பவர் பிம்பத்தைக் காட்டும் காட்சிக் கண்ணாடி!

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

 

John the Baptist -1

புனித நீராட்டி ஜான் ஏரோத் மன்னர் முன்

பாவங்களை விலக்கிப் புனித நீராடுவீர்!

தேவன் உமது பாவத்தை மன்னிப்பார்!

தயாரித்து வைப்பீர், பிரபுவின் பாதம்பட!

யாரோ ஒருவர் சாலையில் முழக்குவார்!

நேராக்குவீர் பயணத்துக் கேற்ற பாதைகளை!

நிரப்புவீர் பள்ளத்தை! தணிப்பீர் மேடுகளை!

நேர்பாதை ஆக்குவீர், நெளிந்து போனதை!

கரடு முரடான பாதை வழுவழுப் பாகட்டும்!

காண்பர் அனைத்து மாந்தரும்,

கடவுளின் பாவத் தீர்ப்பு!

++++++++++++

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)

காட்சி-1, பாகம்-2

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

 

John preaching

John the Baptist Preaching the Public.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகை யில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

**************

 

 

ஸிரியா வாலிபன்: ஸாலமியை நான் கண்களால் பார்ப்பது ஏன் தவறு ? திருமணம் ஆகாத வாலிபன் நான்! ஸாலமியும் மணமாகாத ஓர் எழில் மங்கை!  நானோர் ஏழை ஆயினும் எழிலரசியைப் பார்ப்பது தவறா ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் கொத்தித் தின்பது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே அது மட்டும் நியாயமா ? அதுதான் தவறு! ஸாலமி அவரது குருதியில் முளைக்காத புதல்வி! மாற்றான் ஒருவனுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த வேற்றுப் புத்திரி! ஸாலமி மாற்றாம் தாய் வயிற்றுச் சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயது மூத்த ஏரோத், தனயன் மகள் மீது வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு!  நான் பார்ப்பது நேர்மையானது.  அதில் ஏதும் தவறில்லை. ஸாலமியை நான் மனதார நேசிக்கிறேன்! ஏரோதின் காமக்கனல் விழிகள் அவரது உடற்பசிக்கு ஓர் இளமானைத் தேடுகின்றன!

 

John the Baptist in Jail

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகையில் இருந்து கொண்டு, அரசர் அளித்த விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி வீதியிலே வீசி விடுவேன்.

முதற் காவலன்:  அதோ பார்! கணவர் வைத்திருக்கும் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார், மகாராணி!  நிரம்பக் குடித்து நிலை தடுமாறி நெளிகிறார் மன்னர்! மதுக்கிண்ணம் மட்டும் எப்படிக் கையிலிருந்து தவறி விழாமல் உள்ளது ?

கப்பதோசியன்: யார் மகாராணி, தெரியவில்லையே ? தங்கக் கிரீடம் தலையில் மின்னும் மாதா ? முத்து மாலை மார்பில் ஊஞ்சலாடும் முதிய மாதா ? கூந்தலில் நீலப் பொடியைத் தூவி யிருக்கும் கோமகளா ?

 

John baptizing Jesus

 

முதற் காவலன்: ஆம், ஆம் அந்த கோமகள்தான் நாட்டரசி! கலிலீ நாட்டின் ஆளுநர் ஏரோதின் இரண்டாம் மனைவி! புள்ளிமான் போல் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டு அனைவர் விழிகளையும் ஈர்த்துக் கொண்டிருப்பவள்தான் வாலிப எழில் இளவரசி ஸாலமி!  கோமகளின் ஏக புத்திரி! ஆனால் ஸாலமியின் நிஜத் தந்தை ஏரோத் மன்னரில்லை!

இரண்டாம் காவலன்: ஏரோத் மன்னருக்கு ஒயின் என்றால் உயிர்!  அவர் எத்தனை வகையான திராட்சை ரசம் சுவைப்பவர் தெரியுமா ? ஆனால் அவற்றில் அவருக்குப் பிடித்தது மூன்று ரகங்கள். ஒன்று ஸமத்ராஸ் தீவிலிருந்து வரவழைக்கப் பட்டது! அது ரோமானியத் தளபதி ஸீசர் மேலங்கியைப் போன்று பழுப்பு நிறத்தில் உள்ளது!

கப்பதோசியன்: என்ன ஸீசரின் மேலங்கியைப் போன்ற பழுப்பு நிறமா ? நான் ஸீசரைப் பார்த்தது மில்லை! ஸீசர் மேலங்கியைப் பார்த்தது மில்லை!

இரண்டாம் காவலன்: இரண்டாவது ஒயின் தனிச்சிறப்பாக ஸைப்பிரஸ் நகரத்திலிருந்து மன்னருக்கு வருவது. அந்த திராட்சை ரசம் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறத்தி லிருக்கும்.

கப்பதோசியன்: எனக்குத் தங்கம் பிடிக்கும்! எந்த அங்கத்தை ஈந்தும் நான் தங்கத்தை வாங்கத் தயார். ஆனால் மஞ்சள் நிறம் எனக்குப் பிடிக்காது! கடவுள் ஏன் தங்கத்திற்கு மங்கிப் போகும் மஞ்சள் நிறத்தை அளித்தார் ? தங்கத்துக்கு உகந்த ஊதா வண்ணத்தைக் கடவுள் பூசி யிருக்கலாம் ?

இரண்டாம் காவலன்: மன்னருக்குப் பிடித்த மூன்றாவது திராட்சை ரசம் ஸிசிலியிலிருந்து வருகிறது! அந்த ஒயின் குருதிபோல் செந்நிற முள்ளது! ஏன் அது சிவப்பாக இருக்கிற தென்று என்னைக் கேட்காதே! பால் வெள்ளையாக உள்ளது ஏன் என்று வினாவை எழுப்பும் ஆய்வாளன் நீ! யாருக்குத் தான் தங்கத்தின் மீது ஆசை யில்லை ?

 

 

நியூபியன்: என் நாட்டுத் தெய்வங்கள் நரபலி கேட்பவை! மானிடக் குருதி யென்றால் நாக்கு நான்கு முழம் நீண்டு தொங்கும்! ஆண்டுக்கு இருமுறை தெய்வத்துக்கு கோர நரபலி யிடுகிறோம்!  எங்கள் தெய்வங்களுக்கு ஐம்பது ஆண்கள், நூறு பெண்களை வருடந் தோறும் பலியிட்டுச் சமர்ப்பிக்கிறோம்! ஆயினும் எங்கள் தெய்வங்களுக்கு அவை போதா! தெய்வச் சீற்றத்தால் நாங்கள் கேட்பது எங்களுக்குக் கிடைப்ப தில்லை! நாங்கள் தெய்வ வெறுப்புக்கு ஆளாகி விட்டோம்!

கப்பதோசியன்:  என் தாய் நாட்டில் எந்த தெய்வமும் விட்டு வைக்கப்பட வில்லை! ரோமானியப் படையினர் எங்கள் எல்லா தெய்வங்களையும் நகரை விட்டே விரட்டி விட்டார்! கவலையே யில்லை! நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக் கிறேன், இப்போது! மலைப் பிரதேசங்களில் தெய்வங்கள் ஒளிந்துள்ளதாகக் கூறப் பட்டது! ஆனால் நானந்தக் கதைகளை நம்புவ தில்லை! மூன்று நாட்கள் மலைமுகப்பில் தங்கி எல்லா இடங்களிலும் தேடினேன். மனதார வேண்டி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்! தெய்வங்கள் என் கண்ணில் படவில்லை! பிறகு தெய்வங்களை நான் வாயாரத் திட்டினேன்! அப்போதும் என் வாயை மூடக் கடவுள் வரவே வில்லை! எனது நாட்டில் தெய்வம் யாவும் மறைந்து போய் விட்டன! அவை எதுவும் மனிதனின் ஊனக் கண்களுக்குக் காட்சிச் சிலையாய் வரப் போவதில்லை!

Arrest of John  the baptist

கைது செய்யப்படும் புனித நீராட்டி

 

முதல் காவலன்: யூதர் யாவரும் கண்ணிலே காண முடியாத கடவுளைத்தான் வணங்கி வருகிறார். ஒருவருக்கும் புரியாத ஒன்றின் மீதுதான் அவர் மிக்க நம்பிக்கை வைக்கிறார்!

கப்பதோசியன்: எனக்குப் புரிய வில்லை அது. அவரது குருட்டு நம்பிக்கை நகைப்பிடமாக உள்ளது!

[கீழே பாதாளாச் சிறையிலிருந்து புனித நீராட்டி ஜானின் (ஜொஹானன்) ஆங்காரக் குரல் அழுத்தமாகக் கேட்கிறது]

ஜொஹானன்: [சிறைக் கதவை ஆட்டிப் பெருங் கூச்சலுடன்] கேளுங்கள் மானிடரே!  நீவீர் என்னைப் புறக்கணிக்கலாம்! என் வார்த்தைகளை மீறலாம்! ஆனால் அடுத்து எனக்குப் பின்னால் அதோ வீதியில் வந்து கொண்டிருக்கிறார், பாரீர்! என்னை விடப் பராக்கிரமசாலி! பெரிய தீர்க்க தரிசி! அவரது காலணியின் கயிற்றை அவிழ்க்கக் கூடத் தகுதி யில்லாதவன், நான்! அந்தப் புனிதர் வரும் போது, புறக்கணிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவு கிடைக்கும்! அவர்கள் அனைவரும் ரோஜா பூக்கள் போன்று மலர்ச்சி அடைவார்! குருடாய்ப் போனவருக்குக் கண்ணொளி கிடைத்துப் பகலிரவு மாறுபாடு தெரியப் போகிறது! செவிடாய்ப் போனவருக்குக் காதொலி செம்மையாய்க் கேட்கப் போகிறது! கைசூப்பும் கைக் குழந்தை தீயைக் கக்கும் அசுர முதலை [Dragon] வாழும் குகைமீது கை வைக்கத் துணியும்! புனிதப் போதகர் [ஏசு மகான்] பிடரி மயிரைப் பிடித்து சிங்கத்தை இழுக்கும் பேராற்றல் படைத்தவர்!

 

 

இரண்டாம் காவலன்:  புலம்புபவன் வாயை அடக்கு! அவன் ஒரு கிறுக்கன்! பித்துப் பிடித்தவன்! தாறு மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக எப்போதும் பேசுபவன்! சிறையிலே அவனைப் போட்டாலும், வாயைக் கட்ட முடிய வில்லை! அவன் குரலை ஒடுக்க அறுக்க வேண்டும் அவன் நாக்கை! அல்லது ஊசியால் தைக்க வேண்டும் அவன் வாயை!

முதற் காவலன்: [மனம் வெகுண்டு] அப்படிச் சொல்லாதே! அவர் ஓர் உன்னதப் போதகர்! ஒரு புனித மகான்!  அவர் ஆங்காரமாய்க் கத்தினாலும் அர்த்தமுள்ள பேச்சு.  அவருக்கு நெஞ்சில் கனிவு, பரிவு மிகுதி! அவர் ஒரு தீர்க்க தரிசி! தினமும் அவருக்கு நான்தான் தட்டிலே உணவு தருபவன். அன்போடு எனக்குத் தவறாமல் நன்றி சொல்வார்! மனிதர் அறநெறிகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும்; அறிவு வெள்ளம் கரை புரண்டு செல்லும். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்!

கப்பதோசியன்: அத்தகைய புனித மனிதருக்கு ஏனப்பா சிறைவாசம் ? அவர் பேரென்ன ? ஊரென்ன ? ஏன் அவரை அந்தப் புலிக் குகையில் அடைத்துக் கத்த விட்டிருக்கிறார் ?

முதற் காவலன்: அவரது பெயர் ஜொஹானன். போதகர் ஏசு நாதருக்குப் புனித நீராட்டிய ஜான் என்று அழைக்கப் படுகிறார். பாலை வனத்தில் எங்கோ ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். ஸெக்கரையா என்னும் பாதிரியின் ஒரே மகன் அவர். தாயார் பெயர் எலிஸபெத். வாலிப வயதில் பிள்ளை யில்லாமல் முதிய வயதில் பெற்றோருக்குப் பிறந்த ஞானக் குழந்தை அவர்! பிள்ளை யில்லாத வேளையில் தெய்வ சன்னதியில் தேவதை காபிரியல் தோன்றி, பிறக்கப் போகும் குழந்தை, பின்னால் ஏசு பிரபுக்குக் கால் தடமிட முன்பாதை விரிக்கு மென்று சொன்னது! மேலும் அந்தக் குழந்தைக்கு ஜான் என்று பெயர் வைக்கும்படிக் கூறியது.

கப்பதோசியன்: எல்லாம் ஒரு பெரிய புனை கதை போல யிருக்கிறதே! யாரிந்த ஏசு பிரபு ?

முதற் காவலன்: நானின்னும் ஜானைப் பற்றிச் சொல்லி முடிக்க வில்லை. ஏசு பெருமானைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஒட்டகத் தோல் உரோமத்தில் உடுத்தி யுள்ள உடை! இடுப்பில் ஓர் பட்டை! உண்ணும் உணவு என்ன வென்று தெரியுமா ? பெரிய விட்டில் பூச்சி, காட்டுத் தேன்! அவ்வளவுதான். மனிதர் திடகாத்திரமாக இருக்கிறார்! நல்ல உயரம்! கண்களில் எப்போதும் அறிவுக்கனல் பறக்கும்! ஆனால் பார்க்கச் சற்று விகாரமாகத் தோன்றுவார்! அவரைப் பின்பற்றிச் செல்லும் சீடரோ கணக்கில் அடங்கா.

 

குடி மயக்கத்தில் ஏரோத் மன்னன்

 

கப்பதோசியன்: புனித நீராட்டி என்ன சொல்கிறார் ? ஏன் ஆங்காரமாய்க் கத்துகிறார் ?

முதற் காவலன்: என்ன சொல்கிறார் என்பது எனக்கு முழுவதும் புரிய வில்லை. யாரையோ திட்டுகிறார்! கேட்டால் அச்சத்தை ஊட்டுகிறது! அடிவயிற்றைக் கலக்குகிறது நமக்கு! அவரது சொல்லடி யார் மீது படுகிறதோ, அவருக்கு நெஞ்சடிப்பு ஏற்பட்டு மயக்கத்தில் விழுந்து விடுவார்!

கப்பதோசியன்: அவரை நான் காண விரும்புகிறேன். பார்க்க முடியுமா அவரை ?

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், அவரை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ?

 

காட்சி-1, பாகம்-3

சி. ஜெயபாரதன், கனடா

 

‘புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற உங்கள் செய்கைக் கனிகளை அவர்முன் கொண்டு வாரீர்! நமது கடவுள் ஆப்ரஹாம் இருக்கிறார். நான் சொல்கிறேன் உங்களுக்கு: கடவுள் அந்தத் தளத்துடன் பாலகரைத் தூக்கி, ஆப்ரஹாம் வசம் அளிப்பார். அதோ, அடிமரத்தை வெட்டக் கோடரி, தயாராய் உள்ளது! நற்கனிகள் முளைக்காத ஒவ்வொரு மரமும் வெட்டிக் கீழே தள்ளப்பட்டுத் தீக்கிரையாகப் போகிறது!

இரண்டு அங்கிகள் கொண்டவர், இல்லாதவருக்கு ஒன்றை அளிக்க வேண்டும்! உண்ண இரைச்சி மிகுதியாய் உள்ளவர், இல்லாதவருக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! உணவுச் சாலை நடத்துவோர், தகுதிக்கு ஏற்பப் பிறரிடம் பெற்றுக் கொள்வீர்! படை வீரர் யாருடனும் வன்முறையில் நடக்காதீர்! யார் மீதும் பொய்க் குற்றம் சாட்டாதீர்! உமக்குக் கிடைக்கும் ஊதியத்தில் திருப்தி அடைவீர்! நிச்சயம் நீரை ஊற்றி உமக்கு நான் புனித நீராட்டுவேன். ஆனால் என்னை விடப் பராக்கிரசாலி ஒருவர் [ஏசுநாதர்] வரப் போகிறார்! அவரது காலணிக் கயிறைக் கூட அவிழ்க்கத் தகுதி யற்றவன் நான்! தனது புனித ஆன்மீக சக்தியால், அவர் உமக்குத் தீயால் புனித நீராட்டப் போகிறார். ‘

 

 

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johannan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. பொங்கி எழும் பூரணச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரோத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

********************

 

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், ஜொஹானனை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ? எதற்காக நீ ஜான் போதகரைப் பார்க்க விரும்புகிறாய் ?

கப்பதோசியன்: போதகரை நான் காண வேண்டும். கடவுளைப் பற்றி நான் அவருடன் சற்று உரையாட வேண்டும்.

முதற் காவலன்: உன்னாசை ஒருபோதும் நிறைவேறாது! மெதுவாகப் பேசு! நீ உரக்கப் பேசினால், உன்னைப் பிடித்துக் கொண்டு ஜொஹானன் கிடக்கும் சிறையில் தள்ளி விடுவார்! இது எச்சரிக்கை உனக்கு!

கப்பதோசியன்: நல்ல ஆலோசனை அது ! அப்போது சிறைக் குள்ளே ஜொஹானன் கூட, நான் பேசத் தடையிருக்கா தல்லவா ? அவரிடம் கடவுளைப் பற்றி உரையாடலாம் ! சிறைக்குப் போனாலும், ஒரு போதகரின் நிழல் என்மேல் படுவதில் பூரிப்படைவேன்! அவரது அருள்வாக்கு செவியில் படுவதைப் புண்ணியமாகக் கருதுவேன்.  அவரது நெறி மொழிகள் என் ஆத்மாவைக் கழுவினால், அதுவே எனக்குப் பாப மன்னிப்பாகும்.

முதற் காவலன்: நீ சாகும் வரை அவரோடு பேசலாம்! அல்லது ஜொஹானன் சாகும் வரை அவரோடு நீ உரையாடலாம்! கைகளைக் கட்டினாலும் உன் வாயைக் கட்ட மாட்டார்! கவலைப் படாதே. மேலும் ஜொஹானன் பேச ஆரம்பித்தால், உமது செவிகளுக்குத்தான் வேலை! வாயிக்கு வேலை யில்லை! ஆனால் உன்னாசை நிறைவேறாது! சிறைக்குப் போக வாய்ப்பில்லை உனக்கு!

 

ஸிரியா வாலிபன்: ஸாலமியின் மீன்விழிகள் ஏனோ வலை விரிக்கும் எனக்கு ! அவளது விழிக் கணைகள் ஒரே ஒருமுறை மேல் நோக்கி என் நெஞ்சைக் காயப் படுத்தி விட்டன! அந்தக் காயத்திற்கு அவள்தான் மருந்திட்டு ஆற்ற வேண்டும்!  எழில் கன்னி  ஸாலமியின் பட்டாம் பூச்சி விழிகள் படபடக்கும் போது, என்னிதயம் ஏனோ தடதட வென முரசடிக்கிறது!

ஏரோதியாஸின் காவலன்: புலம்பாதே வாலிபச் சிங்கமே! அந்தப் புள்ளிமான் மீது ஆசை வைக்காதீர் ! அவள் ராஜ நர்த்தகி !  அவ மீது கொள்ளும் ஆசை உனக்குப் பேராபத்தை உண்டாக்கும்! அவளது தீக்கண் பார்வை மனிதரைச் சுட்டெரிப்பவை!  உமது தீராக் காதல் ஒருதலைக் காதல்! ஒருதலைக் காதல் உனக்குத் தலைவலி தருவது!  உறக்கத்தைக் கெடுப்பது!  உயிரைச் சிறுகச் சிறுக உண்பது! உடலை எலும்புக் கூடாய் உருக்குவது! உன்னைப் போல் பலரது உயிர்களை உருக்கி விட்டவள் ஸாலமி! உன்னுயிரை அவளிடம் இழந்து விடாதே! ஸாலமி காதலிக்கத் தகுதி யற்றவள்! உன் கண்களால் அவளைத் தீண்டாதே! அவள் நிற்கும் திசையைக் கூட கண்ணால் நோக்காதே!

ஸிரியா வாலிபன்: ஸாலமி ஓரிளம் மங்கை!  பேரழகி ! வாலிபன் ஒருவனின் காதலுக்கு உகந்தவள்! அந்த ஆடவன் ஏன் நானாக இருக்கக் கூடாது ? இராப்பகலாக என் நெஞ்சில் கனலைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாள்!  ஒன்று ஸாலமியோடு பேச வேண்டும் இன்று; அல்லது பாதாள சிறைக் கைதியோடு பேச வேண்டும்.

கப்பதோசியன்:  இரண்டும் நிறைவேறாது வாலிபனே ! என்ன பயங்கரமான சிறை அது தெரியுமா ? மிருகங்கள் கூட வாழத் தகுதியற்ற குகைக் கூண்டு!  உயிரோ டிருப்பவர் தானாகச் சாவதற்கு ஏற்ற நச்சுச் சிறை அது!

இரண்டாம் காவலன்: மெய்யான வாசகம் அது! சாவதற் கேற்ற நச்சுச் சிறை! நல்ல பெயர்! உனக்குத் தெரியாது! ஏரோதின் மூத்த சகோதரர் ஃபிளிப் அந்தப் பாழும் இடத்தில்தான் சிறைப் பட்டுக் கிடந்தார்! எத்தனை வருடம் தெரியுமா ? பனிரெண்டு வருடங்கள்! அவர்தான் மகாராணி ஏரோதியாஸின் முதற் கணவர்!  பேரழகி ஸாலமியின் அருமைத் தந்தை! ஆனால் அந்தப் பாழும் சிறை அவரைக் கொல்ல வில்லை தெரியுமா ?

கப்பதோசியன்: யார் ? ஏரோதின் சகோதரரா ? ஏரோதியாஸின் முதற் கணவரா ? அவரின்று உயிரோடில்லையா ? எப்படிச் செத்தார் என்று விளக்கமாகச் சொல்!  அவருக்குப் பரிதாபப் படுகிறேன்.

இரண்டாம் காவலன்: பனிரெண்டு வருட முடிவில் என்ன செய்தார்கள் தெரியமா ? அவரது கழுத்தை நெரித்துக் கொன்று விட்டான், ஒரு காட்டுமிராண்டி!

கப்பதோசியன்: [வருத்தமுடன்] அடப் பாவிகளா ? கழுத்தை நெரித்தா கொலை செய்தான் ? யார் அந்த பயங்கரவாதி ?

இரண்டாம் காவலன்: [சிறைக்கருகே நின்ற ஒரு நீக்ரோவைக் காட்டி] அதோ நிற்கிறானே! அந்தக் கறுப்புக் குடிகாரன்தான்! காட்டுமிராண்டி! அந்த அரக்கன்தான் ஸாலமியின் தந்தையைக் கொன்றவன்!  ஏரோதியாஸின் முதற் கணவரைக் கொன்றவன்!

கப்பதோசியன்: அந்தக் கோர மரணம் மகாராணிக்குத் தெரியமா ? சகோதரர் ஏரோது மன்னருக்கு அந்தப் பயங்கரக் கொலையைப் பற்றித் தெரியுமா ?

இரண்டாம் காவலன்: [காதில் குசுகுசுத்து] ஏரோதுதான் தன் முத்திரை மோதிரத்தை அனுப்பி ஏற்பாடு செய்தவர்.

கப்பதோசியன்: என்ன ? முத்திரை மோதிரமா ?

இரண்டாம் காவலன்: அதுதான் மரண மோதிரம்! பயங்கர வாதிக்கு மரண மோதிரத்தை அனுப்பிச் சகோதரனைக் கொல்ல ஏற்பாடு செய்தது, ஏரோத் மன்னர்தான்! மனைவி ஏரோதியாஸ் அதற்கு உடந்தை!

கப்பதோசியன்: என்ன பயங்கரக் கொலை அது ? என்ன பயங்கர சகோதரர் ? என்ன பயங்கர மனைவி ? என்ன பயங்கர உலகம் இது ?

[ஸாலமி அப்போது எழுந்து படியேறி மாடிக்கு வருகிறாள்]

 

ஸிரியா வாலிபன்: பார், எழிலரசி ஸாலமி எழுந்து நகர்கிறாள்! விருந்து மாளிகையை விட்டுக் கோபத்துடன் சட்டென வெளி யேறுகிறாள்! முகத்தைப் பார்த்தால் கொந்தளிப்பு தெரிகிறது! படியில் ஏறி நம்மை நோக்கித்தான் வருகிறாள்!  முகம் ஏனோ வெளுத்துப் போயிருக்கிறது ? ஒருபோதும் இப்படி முகம் தெளிவற்றுச் சோகமாய்ப் போக நான் கண்டதே யில்லை!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியை உற்று நோக்காதே! அவளுக்குப் பிடிக்காது! அவளது அன்னைக்கும் பிடிக்காது! அவளை நேசிப்பவர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்!

ஸிரியா வாலிபன்:  ஸாலமி ஒரு வெள்ளி நிலா போல ஒளியை வீசுகிறாள் ! முறிந்து விழப் போகும் வெண் புறாவைப் போல, மெல்ல நடந்து வருகிறாள்!  புல்லின் இலை போல மெல்லிய தென்றலில் நடுங்குவது போல் தெரிகிறது எனக்கு!

[ஸாலமி மாடியில் வந்து நின்று பேசுகிறாள்]

ஸாலமி: [ஆங்காரமாய்] நான் தங்கப் போவதில்லை இங்கே. நின்று பேச எனக்கு நேர மில்லை. என்னையே பார்க்கிறார், ஏரோத் மன்னர்! ஏனென்று தெரியவில்லை! அருவருப்பாய் உள்ளது எனக்கு! கீழே என்னால் நிற்க முடிய வில்லை! பூச்சி போன்ற மன்னர் விழிகள் என்னை நோக்கும் போது, என் மேனியில் புழு ஏறுவது போல் புல்லரிப்பு உண்டாகிறது! உற்று நோக்கும் அவரது முட்டைக் கண்கள் ஊசி முனை போல் என்னுடலைக் குத்துகின்றன! வியப்பாக உள்ளது எனக்கு! என் அன்னையின் கணவர் எனக்குத் தந்தை போன்றவர்! என் தந்தையின் தனயன் எனக்குச் சிற்றப்பன்! ஆனால் கனிவாய்ப் பார்க்க வேண்டிய கண்கள் ஏன் கழுகாய் மாறி என்னை வட்டமிட்டுச் சுற்றுகின்றன ? இமை தட்டாமல் அவரது கண்கள் ஏன் வேட்டைக்குக் கிளம்பி விட்டன ? குள்ள நரி ஆட்டை விரட்டுவது போல், அவர் விழிகள் என்னைத் துரத்துகின்றன. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை! கீழே நான் நானாக நிற்க முடிய வில்லை! மேலே நான் மூச்செடுக்க முடிகிறது!  இப்போது என் உள்ளத்தில் எனக்கோர் ஐயம் எழுகிறது. அது உண்மையாக இருக்குமோ ?

ஸிரியா வாலிபன்: [ஸாலமி அருகில் கனிவுடன் வந்து] ஸாலமி! நிலவையும் மிஞ்சி நீ மிக்க ஒளி வீசுகிறாய்! பொங்கிவரும் பெருநிலவும் உன் முன் மங்கித்தான் தோன்றுகிறது! நீ வந்த பிறகு இந்த மாடித் தளத்தில் பளிச்சென வெளிச்சம் தெரிகிறது. வாலிபன் ஒருவன் உன் வாசலில் வீணை மீட்டிய வண்ணம் உனக்காக நின்று கொண்டிருக்கிறான்!

ஸாலமி: எங்கே அந்த வாலிபன் ? வீணையின் ஓசை என் காதில் படவில்லையே! நான் அவனைப் பார்க்க வேண்டும்! மாடி மீது வீசும் இளந் தென்றல் இனிமையாக உள்ளது! முள்ளம்பன்றிகளின் ஊசிப் பார்வையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறேன்! இங்கே நான் மூச்செடுக்க முடிகிறது! துள்ளிடும் தென்றல் என் மேனியைத் தழுவி இன்னிசை பாடுகிறது! ஜெருசலப் பகுதிலிருந்து வந்த யூதர்கள் கீழே ஆடம்பரச் சடங்குகள் வேண்டுமென்று சண்டை யிட்டு ஒருவரை ஒருவர் பிய்த்துக் கிழிக்கிறார்! காட்டுமிராண்டிகள் குடித்துக் கொண்டு ஒயினை ஒருவர் வாயில் ஒருவர் ஊற்றிக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்! ஓவியப் பொம்மை போன்ற கிரேக்கர் சிலைகள் போல் மாந்தர் மெளனமாய் அமர்ந்துள்ளார்! எகிப்தியர் நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டு பூதங்களைப் போலத் திரிகிறார்! திமிர்பிடித்த ரோமானியர் கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறார்! ஏதோ தாங்கள் பெரிய செல்வக் கோமான் போல, நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்கிறார்! அவரைப் பார்க்கவே அருவருப்பாக உள்ளது எனக்கு! முற்றிலும் நான் வெறுக்கிறேன் ரோமானியரை!

ஸிரியா வாலிபன்: [கையில் வீணையை எடுத்து] இளவரசி! இந்த ஆசனத்தில் அமர்வீரா ? நான் வீணை வாசிக்கிறேன். இந்த வீணையின் இன்னிசை உங்கள் எழிலை இன்னும் மிகையாக்கும்!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே ! இளவரசியிடம் அப்படி நீ பேசாதே! இளவரசியை வைத்த கண் வாங்காமல் அப்படிப் பார்க்காதே! ஏதோ இன்று பெரும் இன்னல் நேரப் போவதாய்த் தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [வானில் நிலவை உற்று நோக்கி] நிலவைப் போல் நானும் மேக மண்டலத்தில் மிதக்க வேண்டும்! பொங்கும் நிலா எப்படிப் பொலிவுடன் தெரிகிறது இன்று ? தங்க நாணயம் போல் தகதக வென்று மிளிர்கிறது, பொங்கு நிலா! வானத் தெப்பத்தில் மிதக்கும் மோன நிலா உள்ளத்தில் தேனைப் பொழிகிறது! வெண்ணிலா ஒரு தூய கன்னியாகத் துலங்குகிறது! நிச்சயம் நிலா ஒரு பச்சிளம் கன்னிதான்! ஆம் அதில் சற்றேனும் ஐயமில்லை! நிலவும் என்னைப் போலொரு தனித்த கன்னியே! என்னைப் போல் நிலவும் கறையற்ற ஓர் கன்னியே! நிலவும் என்னைப் போல் ஆடவருக்குத் தன்னை அர்ப்பணிக்காத ஓரிளம் கன்னியே!

 

[கீழே சிறையிலிருந்து மறுபடியும் ஜொஹானன் கூக்குரல் முழங்குகிறது]

ஜொஹானன்: [உரத்த குரலில்] யாவரும் கேளீர்! அதோ! புதுப் போதகர் உம்மை நோக்கி வருகிறார்! கடவுளின் புத்திரர் அருகே வந்து விட்டார்! மனிதக் குதிரைகள் [Centaurs (A Horse with a Man’s Head)] நதிக்குள்ளே ஒளிந்து கொள்ளும்! கடற் தேவதைகள் [Nymphs (Sea Goddesses)] காட்டு வனாந்திர மரங்களில் ஒளிந்து கொள்ளும்! மானிடருக்குப் புனித நீராட்டத் தகுதி யுடையர் அவர் ஒருவரே!  ஆம், அவர் ஒருவரே !

ஸாலமி: [வியப்போடு] யாரது அப்படி உரக்கப் பேசுவது ? யார் வரப் போவதாய் அறிவிக்கப் படுகிறது ?

இரண்டாம் காவலன்: ஓ! அவர்தான் போதகர்! சிறைக்குள் மன்னர் அடைத்திருக்கும் ஜொஹானன்! ஏரோத் மன்னருக்கு அச்சம் ஊட்டும் ஜான், போதகர்! ஏரோதியாஸ் தூக்கத்தைக் கெடுக்கும் ஜான் போதகர்! அவர் புனித நீராட்டிய ஏசுப் போதகர் வரப் போவதை அறிவிக்கிறார்!

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் நான் அந்த ஞானியை!

ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி! வேண்டாம்! அவரை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! நீ பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்டால் நீயும் பாபம் செய்யத் துணிவாய்!

ஸாலமி:  நான் அவரைக் காண வேண்டும் இன்று !

 

****

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4)

 

‘வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்ச் சிந்தனை !  சிலுவையிலே அறையப் பட்ட எளியவரை விட, அவ்விதம் ஆணியடித்த வலியவர் மீது நான் மிகவும் கவலைப் படுகிறேன். ‘

டேவிட் பார்க்கின்ஸ் கைச்சுவடி (மார்ச் 4, 1934)

‘நீதி வழங்கும் நாள் வரும்போது, பீடத்தின் மேலிருந்து ஒருவரின் பாபச் செயல்கள் யாவும் உரக்க வாசிக்கப் படும் என்று மாந்தர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!  அவ்விதம் பலமாக முழக்கி ஒருவரின் பாபத்தை உலகுக்கு வெளியிடுபவர் தேவலோக விசாரணை வழக்காளர் அல்லர்! ஆனால் பாபிகளின் அந்தரங்க ஆத்மாவே அவருக்கு அறிவுரை புகட்டும் என்பதை நான் தெளிவாக நம்புகிறேன்! ‘

‘கடந்து போன வாழ்க்கையை ஒருவர் மீண்டும் வாழ ஏங்குவது மாபெரும் தவறு!  குதிரை திசைபோக்குக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒருவர் குதிரையைப் பின்புறம் நோக்கிச் சவாரி செய்ய முயல்வது முடியாத செயலாகும் ! ‘

டேவிட் பார்க்கின்ஸ்.

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee]

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

***********************

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் இதுவரைப் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை!  காண வேண்டும் நான் அந்த ஞானியை! யார் போய் அவரை மாடிக்கு அழைத்து வர முடியும் ?

ஸிரியா வாலிபன்: வேண்டாம்  ஸாலமி !  வேண்டாம்! புனித நீராட்டி ஜானை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! உனக்குப் புனித நீராட்டம் தேவை யில்லை! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! அவர் கரத்தால் புனித நீராட வேண்டுவோர், அவரைக் காணலாம்! நீ விரும்பினாலும், அவர் புனித நீரூற்ற மறுத்து உன்னைப் புறக்கணிப்பார்! நீ  அவரைப் பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்ட கவர்ச்சியில் நீயும் பாபம் செய்யத் துணிவாய்! அவரைத் தேடி நீ செல்லாதே!

DVD Image -16

ஸாலமி: நானவர் முகத்தை ஒருமுறைக் காண வேண்டும்! அவர் வாலிபரா அல்லது ஏரோத் போல் வயோதிகாரா என்று அறிய வேண்டும்!  அவர் ஓர் அழகான ஆடவரா என்று காண ஆவல் உள்ளது எனக்கு ! திருமணமாகி அவருக்கோர் மனைவி யிருந்தால், அவர் திருமுகத்தைப் பார்க்க மாட்டேன்!

[கீழே சிறையிலிருந்து மீண்டும் ஜொஹானன் கூக்குரல் உரக்கக் கேட்கிறது]

ஜொஹானன்: [பலத்த குரலில்] அறிவு கெட்ட மாதே! இது துரோகம்! கட்டிய கணவனின் கழுத்தை நெரித்து விட்டு, மாற்றான் மார்பில் தலை வைக்கும் உனக்கு எப்படித் தூக்கம் வருகிறது ? துரோகிகளே! உங்கள் கை அளிக்கும் உணவைத் தொடமாட்டேன்! உங்கள் கை ஊற்றும் நீரை அருந்த மாட்டேன்! எனக்கும் பெரிய போதகர் இங்கே வரப் போகிறார். உங்களைத் தராசில் வைத்து நிறுக்கப் போகிறார் அவர்! பாவிகளே! புனித நீராட்டுவதற்குப் பதிலாக உம்மைத் தீயால் குளிப்பாட்டப் போகிறார்! அவர் முன்னே வராதீர்! அவர் வருவதற்கு முன்பே துரோகிகளே, எங்காவது ஓடிப் போவீர்!

DVD Image -17

ஸாலமி: [ஐயத்துடன், பரபரப்புற்று] யாரைத் திட்டுகிறார் போதகர் ? கட்டிய கணவரின் கழுத்தை நெரித்தவள், யாரவள் ? மாற்றான் மார்பில் தலை வைத்துக் கிடப்பவள், யாரவள் ? ஓ! என் அன்னையைத் திட்டுவது போல் தெரிகிறது! நியாய மற்ற பழிகளை என் அன்னை மீது போடுகிறார்! என் தந்தையின் கழுத்தை என் தாய் நெரிக்க வில்லை! அபாண்டப் பழி அது! என் தாயை ஏனவர் வெறுக்கிறார் ? சொல்லால் அடித்து என் தாயை ஏன் கொல்லாமல் கொல்கிறார்!

இரண்டாம் காவலன்: உண்மைதான் இளவரசி! போதகர் பழியை மகாராணி மீது போடுவது தவறு! நியாய மற்றது! உங்கள் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்றவன் ஓர் வன்முறைக் கருப்பன்!

ஸாலமி: கிரேக்க, ரோமானியர், யூதர், எகிப்திய விருந்தினர் முன்பாக, என் தாய் மீது பழிசுமத்தி இழிவு படுத்துவது நியாமா ?

DVD Image -18

[அப்போது அரண்மனைச் சேவகன் வந்து, ஒருவன் ஸாலமியை வணங்குகிறான்]

அரண்மனைக் காவலன்: இளவரசி! தங்களை ஆடலரங்கு வரும்படி மன்னர் வேண்டிக் கொள்கிறார்.

ஸிரியா வாலிபன்: இளவரசி! போகாதீர் அங்கே என்று வேண்டுகிறேன்! ஆடலரசி ஆடும் அரங்க மில்லை அது! ஆடு மாடுகள் ஆடும் வன அரங்கு! போகாதீர் அங்கே! போனால் ஆபத்து நேருமென்று தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [சேவகனைப் பார்த்து] நான் வர விரும்ப வில்லை என்று மன்னருக்கு எடுத்துச் சொல்! போ! நானங்கு வரப் போவதில்லை! [சேவகன் திரும்பிச் செல்கிறான்]  ஜான் போதகர் கூன் விழுந்த வயோதிகரா ? அல்லது நெஞ்சம் நிமிர்ந்த வாலிபரா ? உடல் உறுதி பெற்ற மனிதரா ?

DVD Image -19

இரண்டாம் காவலன்: ஜொஹானன் முதுகு வளைந்த வயோதிகர் அல்லர்! தலை நரைத்துத் தள்ளாடும் கிழவர் அல்லர்!  ஆம், அவர் ஓர் வாலிபர்தான்! உடல் உறுதி மட்டுமில்லை, மன உறுதியும் பெற்றவர்!  அவர் மண்டைக்குள்ளே ஓர் அரிய அறிவுக் களஞ்சியம் உள்ளது! பாபிகளைப் பம்பரமாக ஆட்டிப் பாபங்களை நீக்குபவர்! அவரது ஊசிக் கண்கள் யாருடைய உள்ளத்தையும் ஊடுருவிச் சென்று, உண்மைகளைக் குத்தூசி போல் இழுத்து வரும் கூர்மை கொண்டவை!

ஸாலமி: வாலிபர் என்றால் அந்தப் போதகர் கவர்ச்சியைப் பார்க்க விரும்புகிறேன்.

ஸிரியா வாலிபன்: இளவரசி!  உங்களை மன்னர் அழைக்கிறார். போதகரா ? அல்லது வேந்தரா ? யாரைப் பார்ப்பது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். சிறையில் கிடப்பது செம்மறி ஆடு!  ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்வது சிங்கம்! இந்த இரண்டில் எது பாதுகாப்பானது என்று நான் சொல்கிறேன். ஆட்டோடு நரகத்தில் அடைபடுவதை விட சிங்கத்துடன் சொர்க்கத்தில் வாழ்வது மேல்!  சிங்கம் உங்களுடைய எழிலை ஆராதனை செய்கிறது!  ஆடு உங்கள் பாவங்களை ஆழ்ந்து கணக்கெடுத்து, தீக்குளிக்க வைத்து விடும்! மீண்டும் சொல்கிறேன்.  போதகரைக் காண வேண்டாம் இளவரசி! காலை வாரி விழ வைப்பவர் போதகர்! அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏரோத் மன்னர் முன் ஆடுங்கள்! உங்கள் காலில் பூக்களை இட்டு பூஜிப்பவர் ஏரோத் மன்னர்!

DVD Image -22

ஜொஹானன்: [உரத்த குரலில்] நெறி கெட்ட மாந்தரே! கூத்தடிக்க வேண்டாம்! கும்மாளம் போட வேண்டாம்! குடியும், கொண்டாட்டமும் வேண்டாம்! உங்களை அடித்தவன் கோல் உடைந்து விட்டது! பாம்பு வயிற்றில் பிறந்த பூரான்கள், பறவை யினத்தைக் கொத்திக் தின்னப் போகின்றன! குடித்த வெறியில் மனமாறி அடுத்தவன் மனைவிமேல் காமப்படும் அறிவிலிகளே! உங்களுக்கு அறிவு புகட்ட அதோ வருகிறார் ஒரு மகாத்மா! உங்கள் பாவக் குருதியால் அவர் கால்களைக் கழுவிப் புனிதம் பெறச் செல்லுவீர்!

ஸாலமி: [மனம் மகிழ்ந்து] என்ன புனிதமான போதனை! என் தாயை அவர் வெறுத்தாலும், பிறரை அவர் நேசிக்கிறார். அந்தப் போதகரை நான் நிச்சயம் காண வேண்டும்! [முதற் காவலனைப் பார்த்து] அழைத்து வா அந்த மகாத்மாவை! கண்குளிரக் காண வேண்டும் அந்த கண்ணியவானை!

முதற் காவலன்: [மிகுந்த பயத்துடன்] இளவரசி! அப்படிச் செய்தால், ஏரோத் மன்னர் என் தலையை வாளால் அறுத்து விடுவார்! யாரும் போதகருடன் பேசக் கூடாது, யாரும் அவரைத் தொடக் கூடாது என்பது அரசரின் ஆணை! அதை மீறச் சொல்ல வேண்டாம், இளவரசி! [ஸாலமி காலில் விழுகிறான்] என்னை மன்னித்து விடுங்கள்.

DVD Image -20

ஸிரியா வாலிபன்: இளவரசி! மன்னர் உத்தரவை மதிக்கும்படி வேண்டுகிறேன். அவரது அழைப்பை ஏற்று விருந்து மாளிகைக்குப் போவதுதான் நல்லது! மன்னர் கட்டளையை மதித்து, போதகரைப் பாராது செல்வது மிகவும் நல்லது! அரசரது கோபத்திலிருந்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

ஸாலமி: அரசருக்குப் பயந்தவர் நீவீர்! எனக்குச் சிறிதும் பயம் கிடையாது! [இரண்டாம் காவலனைப் பார்த்து] நீ போ! நீ போய் அந்த போதகரை அழைத்துவா!

இரண்டாம் காவலன்: [மண்டியிட்டு] இளவரசி! காலில் விழுந்து வேண்டுகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது! நாங்கள் உயிரோடும், உடலோடும் வீடு திரும்ப வேண்டும்!

ஸாலமி: [படியில் பாதி தூரம் இறங்கி, குனிந்து சிறைையைக் கண்ணோட்ட மிட்டு] எத்தகைய இருட்டுச் சிறையாக உள்ளது ? அனுதாபப் படுகிறேன்! இந்தக் கருங்குகையில் மிருகம் கூட வாழாது! போதகரை இந்தப் புதைப்பு பூமியிலா அடைப்பது ? [காவலனைப் பார்த்து] உன் செவியில் விழுகிறதா ? போதகரை அந்த குகையிலிருந்து வெளியே அழைத்து வா. அவர் இன்னும் உயிரோடு உள்ளாரா என்று பார்க்க வேண்டும்! அவரது கண்கள் இன்னும் குருடாகாமல் உள்ளனவா என்று காண வேண்டும்! அவரது உடம்பு எலும்புக் கூடாக நடமாடி வருகிறதா வென்று நோக்க வேண்டும்!

dvdimage -21

முதற் காவலன்: இளவரசி! போதகரை அழைத்து வந்தால், எங்கள் தலையற்ற முண்டம்தான் இன்று வீடு திரும்பும்! உத்தரவின்றி தனியே நாங்கள் செய்யும் பணி யில்லை இது! அரசர் ஆணையை நாங்கள் மீற முடியாது! மீறவும் கூடாது. சிறைக் கதவைத் திறக்க அனுமதி அளிப்பவர் அரசர். அவரைத் தயவு பண்ணிக் கேளுங்கள்! எங்கள் அற்ப உயிர் உங்கள் கையில் உள்ளது! எங்கள் அற்ப உயிருக்கு சொற்ப ஆயுளைத் தராதீர்!

ஸாலமி: [ஸிரியா வாலிபனைக் கனிவுடன் பார்த்து] வாலிபனே! என்னை மகிழ்விக்க நீ வீணை மீட்கிறாய். உன் வீணையின் கானம் ஒளிந்திருக்கும் என் பெண்மையை வெளிப்படுத்தி விட்டது! என் கண்கள் மறுபடியும் காதலனைத் தேடுகின்றன! என்னை மகிழ்விக்கப் போதகரை அழைத்து வருவாயா ? உனதினிய வீணை இசைவெள்ளம் காய்ந்து போவதற்குள், அந்த மகாத்மாவை அழைத்து வருவாயா ? எனது காந்த விழிகளுக்கு நீ காத்திருப்பது எனக்குத் தெரியாம லில்லை! எனக்காக அதைச் செய்வாயா ? என் அன்னை போதருக்கு அஞ்சுகிறாள்! என் சித்தப்பா போதகரைக் கண்டு நடுங்கிறார்! அவரைப் போல் நீயும் போதகருக்குப் பயப்படுகிறாயா ? என்னைக் காதலிப்பவன், என்னை வேண்டுபவன் ஒரு வீரனாகத்தான் இருப்பான்! நீ ஒரு மாவீரன் அல்லவா! நீயுமா அரசருக்கு அஞ்சுகிறாய் ? நான் உன்னருகில் உள்ள போது நீ யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை! உன் தலைக்குக் கத்தி வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! போ, போதகரை அழைத்து வரச் செல்வாயா ?

DVD Image -23

ஏரோதியாசின் காவலன்: [நடுங்கிக் கொண்டு] அந்தோ! வேண்டாம் இளவரசி! போதகரை அழைத்து வந்தால், பேராபத்து நிகழக் போவதாய்த் தோன்றுது எனக்கு!

ஸிரியா வாலிபன்: அரசருக்கு அஞ்ச வில்லை இளவரசி! நான் யாருக்கும் அஞ்சாதவன்! ஆனால் இளவரசிக்கு அஞ்சுகிறேன் நான்! அவளது சுடர்விழிகள் பட்டால் சுடப்பட்டு விழும் ஓர் ஆண் பறவை நான்! அந்தச் சிறைக் கதவை யாரும் திறக்கக் கூடாது என்பது ஏரோதின் கட்டளை! மன்னருக்கு அஞ்சா விட்டாலும், மன்னரின் ஆணைக்குக் கட்டுப் படுபவன் நான்!

ஸாலமி: மன்னருக்கு அஞ்சாத வாலிபனே! என்னை மகிழ்விக்க நீயிதைச் செய்ய வேண்டும்! நீ மெய்யாக என்னை நேசித்தால் நீயிதைச் செய்ய வேண்டும்! உனக்கு என் வெகுமதி கிடைக்கும்! என்ன வெகுமதி அளிப்பேன் என்பதை நாளை உன்னைத் தனியே சந்திக்கும் போது சொல்வேன்! அங்காடி வழியே மாலையில் நான் போகும் போது, வழி நெடுவே பூக்களை சிந்திச் செல்வேன், உனக்காக! என்னிருப்பிடம் அறிந்து என்னைச் சந்திக்க வா! மறக்காமல் வா, நாளை மாலை!

ஸிரியா வாலிபன்: இளவரசி! நானிதைச் செய்ய மாட்டேன்! செய்ய மாட்டேன்! செய்யவே மாட்டேன்! ஆனால் உங்களைத் தனியே சந்திக்க ஆவல்! போதகரை அழைத்து வராவிட்டால், என்னைச் சந்திக்க விரும்புவீரா ?

DVD Image -24

ஸாலமி: [அழுத்தமாக] வேலை முதலில், கூலி பின்னால்! பணியை மறுத்தால் கூலியும் நிறுத்தப்படும்! [கனிவுடன்] மன்னருக்கு அஞ்சாத நீ ஒருவன்தான் ஆணையை மீறி அப்பணியைச் செய்ய முடியும் எனக்கு! நிச்சயம் நீ எனக்குச் செய்வாய் என்பதை நான் அறிவேன். நாளை நான் தூக்கு ரதத்தில் முகத்திரை யிட்டுச் செல்லும் போது, நீ உன் வீட்டு வாசல் முன் நில்! நான் முகத்திரை நீக்கி உன்னைப் பார்த்துப் புன்னகை செய்வேன்! பார்! என்னைப் பார்! வாலிபனே! உன்னைப் பார்க்கும் என்னைப் பார்! என் காந்த விழிகளைப் பார்த்துச் சொல்! நீ எனக்காகச் செய்வாய் என்று உன்னிதயம் சொல்கிறது! நீ என் வேண்டுதலை மறுக்கக் கூடாது என்று உன்மனம் எதிர்க்கிறது மெய்யாக!

ஸிரியா வாலிபன்: [தாளில் எழுதிக் கையெழுத்திட்டு, மூன்றாம் காவலனிடம்] போ! வாயில் காப்போனிடம் காட்டிப் போதகரை மேல் மாடிக்கு அழைத்து வா! மாண்புமிகு இளவரசி மன்றாடி வேண்டுகிறார்! வேறு யாரிடமும் இதைக் காட்டாதே! சீக்கிரம் போ! யாருக்கும் தெரியாமல் அழைத்து வா! இளவரசியின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்.

ஸாலமி: [புன்னகையுடன் ஓடிப் போய்க் கனிவுடன் வாலிபன் கண்ணத்தில் முத்தமிட்டு] நீதான் என் உண்மைக் காதலன்! உயிருக்கு அஞ்சாதவன்! மன்னருக்கு அஞ்சாதவன்! மாவீரன்! நீ என் கனவுகளில் வந்து எனக்கின்பம் அளிப்பாய்! உன் பெயர் என்ன, வாலிபனே! உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.

DVD Image -26

ஸிரியா வாலிபன்: [பூரிப்படைந்து, கண்ணத்தைத் தடவி] வெகுமதி இப்போதே கிடைத்து விட்டது! ஸாலமி நேசிக்கிறாள் என்னை! என் பெயரைக் கேட்கிறாள்! சொல்கிறேன், என் பெயர் நாராபாத்! நாராபாத் ஸாலமியின் காதலன்! நினைக்கும் போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது! யாரும் இதுவரை என்னை முத்த மிட்ட தில்லை! ஸாலமி! உனக்காக நான் எதையும் செய்வேன்! என் உயிரையும் உனக்காகக் கொடுக்கத் தயார்!

ஏரோதியாஸின் காவலன்: காரிருள் மேகம் கப்பி வெண்ணிலவு கருநிலவாய்ப் போனது! ஏதோ ஓர் அபாயம் நேரப் போவது எனக்குத் தெரிகிறது! பொன்னிலவு என் கண்களுக்குப் புண்ணிலவாய்த் தோன்றுகிறது!

வாலிபன் நாராபாத்: அப்படியில்லை நண்பனே! முகத்திரை யிட்ட வெண்ணிலவு திரைநீக்கி என்னை முத்த மிடுகிறது! மேகத்தில் மறைந்தாலும், பொன்னிலவின் ஒளித்திரட்சி குறைவ தில்லை!

[ஜொஹானன் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்டு மாடி மீது மெதுவாய் ஏறி நடந்து வருகிறார். ஸாலமி பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்குகிறாள்.]

DVD Image -25

ஸாலமி: [பயந்து பரிவுடன்] போதகரே! இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டார்! காரிருட் சிறையில் மூடிய உங்கள் கண்களுக்கு ஒளியேறட்டும்! முடமாய்ப் போன உங்கள் கால்கள் விடுதலைப் பூமியில் நடமாடட்டும்! குடிப்பதற்கு ஏதாவது பானம் வேண்டுமா ? உண்பதற்கு ஏதாவது உணவு வேண்டுமா ? கேளுங்கள்.

ஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே! எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை! நான் வேண்டுவது விடுதலை! செய்ய வேண்டிய அருட் பணிகள் எனக்கு அநேகம் உள்ளன! உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார்! தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன! ஒரு குடம் நீரைக் கொண்டு வா! குடித்தது போக எஞ்சியதை நான் என் தலையில் ஊற்றிப் புனித நீராட வேண்டும்! குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன! யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசிய தில்லை! கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா அழைத்து வந்தாய் ? உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் ? உன்னருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது ?

++++++++++++

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.