வெனிஸ் கருமூர்க்கன்
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++
தாழ்ச்சி காயப் படுத்திச்
சீர்குலைந்த ஆத்மா,
அழுவது கேட்டால்
அமைதி செய்ய முயல்வார் !
வலித்துயர் மிகுந்து பாரம்
அமுக்கி விட்டால்
புலம்புவோம் அதிகமாய்,
அன்றி இணையாய்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ]
நற்பெயர் மாந்தர்க்கு
உதவும் அணிகலன்,
அவர் ஆத்மா வுக்கு….
ஆயினும் என் நற்பெயர்
கெடுப்போன்
தான் இழந்ததை
என்னிடம் திருடி
என்னை வறியன்
ஆக்குவ துண்மை.
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]
+++++++++++++++++++
முன்னுரை : உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது. கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன. அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு, விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர். தானே நாடங்கள் எழுதியவர். நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளார். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.
மோனிகா & ஒத்தல்லோ
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் :
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது. நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள். அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது. முற்போக்குச் சிந்தனை யுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன். வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீரன்.
மோனிகா, ஒத்தல்லோ, வில்லன் புரூனோ
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூல நிகழ்வு, வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி. எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக, அதில பல மாற்றங்களைச் செய்துள்ளார்.
20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும் நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம் [American and the Son of a Slave] அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத் துள்ளது ! அவ்வித இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில் இப்போது, 21 ஆம் நூற்றாண்டிலும் பெருகிப் பன்முறை பெரும் இனப்போர் நேர்ந்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய தொடர் நிகழ்ச்சி !
+++++++++++++++++++
புரூனோ & ஷைலக்
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
[ வெனிஸ் கருமூர்க்கன் ]
அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு
++++++++++++++++++
ஒத்தல்லோ & மோனிகா
அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1
இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.
நேரம் : மங்கிய மாலைப் பொழுது.
அமைப்பு : தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது செல்வந்த நண்பன் ஷைலக் வருகிறான்.
ஷைலக் : புரூனோ ! யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?
புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன். என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு ! என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !
ஷைலக்: யாரந்தக் கருப்பன் ? எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?
அழகி மோனிகா
புரூனோ : அந்த தடித்த உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன். பிளாரென்ஸ் நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி கொடுத்த ஆப்பிரிக்க மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் ! அண்டங் கறுப்பன் !
ஷைலக் : யார் ? அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ? நம்ப முடியவில்லையே ! யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?
புரூனோ : ஆம் ! எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க “மூர்” இனத்தவன்தான் ! காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுதைக்குத்தான் உயர்பதவி அளித்துள்ளான் ! எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான். எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு தரலாம் ? அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும். எந்தப் போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.
ஷைலக் : ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?
புரூனோ: அவன் என் மேலதிகாரி. மூர்க்கன் ! முரடன் ! காமாந்தகன் ! கருப்பன் ! கன்னிப் பெண் மோனிகாவைத் தூக்கிச் சென்ற குற்றவாளி ! கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் ! ஆப்பிரிக்க “மூர்” இனத்தைச் சேர்ந்தவன் ! அவன் ஒரு முசுடன் ! அதனால் கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.
ஷைலக்: என்ன ? இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா ? மோனிகா என்னுரிமைப் பெண். என்னருமைக் காதலி அல்லவா ? என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கல்யாணம் செய்து கொள்ள நீயெனக்கு உதவி செய்ய வேண்டும் புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் ! அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நீதான் தெரிவிக்க வேண்டும் ! அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க நீ முயல வேண்டும் !
புரூனோ : நான் கருமூர்க்கனை அறவே வெறுக்கிறேன். மோனிகா வெண்ணிலா போன்ற வெள்ளைப்புறா ! அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ? அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் தேவதை ! அவள் சிறு வடிவம். அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் ! அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தை மூட்டிடு ! மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை ஊற்றிடு ! தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு ! ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடுத்திடு ! தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் மூர்க்கணுக்கும் பிளவை உண்டாக்கு ! தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !
வில்லன் புரூனோ
ஷைலக் : எதிரில்தான் மோனிகா இல்லம் ! இருட்டி விட்டது ! விளக்கில்லை ! உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !
புரூனோ : திடீரென இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் ! இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் பற்றிச் சொல் ! கன்னி மகள் கருப்பனுடன் ஓடி விட்டாள் என்று உரக்கச் சொல் !
ஷைலக் : [மோனிகா வீட்டு முன் சென்று, கதவைத் தட்டி உரத்த குரலில் ] ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் ! உமது வீட்டில் களவு போயிருக்குது ! தெரியுதா ? பெருங்களவு !
புரூனோ : [மோனிகா வீட்டு முன் சென்று] விழிதெழுவீர் கிழவரே ! உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் ஒரு கரு மூர்க்கன்! கள்ள மூர்க்கன் ! உங்கள் வீட்டுக்குள் மகளைத் தேடிப் பாரீர் ! பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! பணம் களவு போயிருக்கா ? கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !
[ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே ஓடி வருகிறார்]
+++++++++++++++++++++++++++++++++
தகவல்:
- Othello By William Shakespeare, Folger Shakespeare Library [1993]
ஷேக்ஸ்பிரின் ஒத்தல்லோ
வெனிஸ் கருமூர்க்கன் நாடகம்
அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2
++++++++++++++++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு
++++++++++++++++++
இடம் : வெனிஸ் நகரத் தெரு
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : சிசாரோ குடும்பத்தார், ஷைலக், புரூனோ
சிசாரோ : என்னை விளித்தது யார் ? என்ன செய்தி ? (ஷைலக்கைப் பார்த்து) எதற்காக நீ வீட்டு வாசல் முன் நிற்கிறாய் ? உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை.
ஷைலக் : மேன்மை மிகு செனட்டரே ! நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம் ! உங்கள் வீட்டுக்குள் பாருங்கள், எல்லாரும் உள்ளாரா வென்று !
புரூனோ : உங்கள் வீட்டுக் கதவு, பலகணிகளைப் பாருங்கள் ! ஏதாவது ஒன்று திறந்துள்ளதா வென்று தேடுங்கள்.
சிசாரோ : எதற்காக அப்படிக் கேட்கிறாய் ?
புரூனோ : உங்கள் வீட்டில் களவு போயுள்ளது. உங்கள் மானம் போயுள்ளது ! கருங்கடா ஒன்று வெள்ளைப் பசுவைக் கூடிச் சினையாக்க வீட்டுக்குள் திருடியுள்ளது !
ஷைலக் : விழித்துப் பாருங்கள். வேதாளம் வெள்ளைப் பசுவை விழுங்கப் போகிறது. பிடியுங்கள் பிசாசை !
சிசாரோ : நீ அறிவோடுதான் பேசுகிறாயா ? குடித்து விட்டுக் கூத்தடிக்கிறாயா ? நீ யாரடா ? உன்னைப் பற்றிக் கூறடா ?
ஷைலக் : என்னைத் தெரிய வில்லையா ? நான்தான் உங்கள் அருமைப் புதல்வி மோனிகாவை மணக்க வந்த மாப்பிள்ளை. உங்கள் வருங்கால மருமகன் !
சிசாரோ : கயவனே ! என் மகள் உனக்கில்லை என்று முன்பே நான் உன்னை விரட்டியது தெரியாதா ? வீட்டு வாசல் முன் நில்லாதே, போடா போ ! என் புதல்வி ஒரு செனட்டர் மகள் ! நீ யார் ? இரவில் வந்து பயமுறுத்தி எங்கள் தூக்கத்தை ஏன் கெடுக்கிறாய் ?
ஷைலக் : ஐயா ! ஐயா ! ஐயா ! அப்படிச் சொல்லாதீர். நான் இந்த வெனிஸ் நகரப் பெரும் சீமானின் ஒரே மகன் ! செனட்டர் வீட்டில் களவு போனது தெரியுமா ?
சிசாரோ : இது வெனிஸ் நகர் மையத்தில் பாதுகாப்பாக உள்ள செங்கல் வீடு. செனட்டர் வீடு. குப்பத்துக் குடிசையல்ல ! இப்படிப் பேசும் உன்னைத் தண்டிக்க எனக்குப் பேராற்றல் உள்ளது. நான் அரசாங்க அதிகாரி !
புரூனோ : ஐயா செனட்டரே ! உங்கள் மீது பரிவு கொண்டு களவு போன பொருளை நினைவூட்ட வந்தோம். கயவர் என்று நீங்கள் எம்மைத் திட்டலாமா ? கள்வர் என்று எம்மைக் குற்றம் சாட்டலாமா ? கருப்பன் ஒருவன், ஆப்பிரிக்க மூர்க்கன் உங்கள் புதல்வியைக் கடத்திப் போனது தெரியுமா ?
சிசாரோ : மூடரே ! என்ன வார்த்தை சொன்னீர் !
புரூனோ : நான் சொல்றேன், மூர் இனத்தைச் சேர்ந்த அந்தக் கருப்பன், இந்த இரவு நேரத்தில் உங்கள் அருமை மகளைக் கற்பழித்திருப்பான் ! கன்னிப் பெண்ணைக் கட்டி அணைத்து உடல் உறவு கொண்டிருப்பாரன் !
சிசாரோ : நீ ஒரு அயோக்கியன் !
புரூனோ : நீங்கள் ஒரு செனட்டர் ! மோனிகா ஒரு செனட்டர் புதல்வி ! கடத்திச் சென்ற காதலன் மூரினத்தைச் சேர்ந்த ஒரு கருப்பன் ! கரு மூர்க்கன் !
சிசாரோ : இப்படி அவதூறு பேசியதற்கு நீவீர் பழிவாங்கப் படுவீர் ! நீவீர் யாரென்று எனக்குத் தெரியும் !
ஷைலக் : செனட்டரே ! கேளுங்கள் ! உமக்குத் தெரியாமல் நடுராத்திரி வேளையில், உமது மகள் வீட்டை விட்டு ஓடி விட்டள் ! அவளைக் கடத்திச் சென்றவன், ஒரு நீர்ப்படகோட்டி [Gondolier] ! அவள் நாடித் தழுவச் சென்றது காமாந்தகன் ஒருவனை ! மூர் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கக் கருப்பன் அவன் ! இவை எல்லாம் உமது அனுமதியில் நடந்தவைதான் என்றால், நாங்கள் மெய்யாகவே கயவர்தான் ! உமக்குத் தெரியாமல் இவை நடந்தவை என்றால், நீவீர் எம்மீது கோபம் கொண்டது தப்பு, தவறு, தகாதது ! இவற்றை நீவீர் அனுமதிக்க வில்லை என்றால், உமது மகள் உமக்கெதிராய்க் கிளம்பி விட்டாளா ?
சிசாரோ : [கோபத்துடன்] தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வாரீர் ! தேட வேண்டும் அந்த மூர்க்கனை ! பிடிக்க வேண்டும் என் புதல்வியை. எல்லாம் கனவில் நடப்பது போல் காணுது. இவை உண்மை போல் தோனுது ! தீப்பந்தம் கொண்டுவா !
[சிசாரோ பரபரப்புடன் குடும்பத்தாருடன் வெளியேறுகிறார்]
புரூனோ : [ஷைலக்கைப் பார்த்து] நான் மூட்டிய தீ பற்றிக் கொண்டது ! நான் போய் வருகிறேன் ஷைலக் ! மூர் இனத்தோன் முன் நான் காணப்படுவது ஆபத்தாய் முடியும். வெனிஸ் அரசாங்கம் கருப்பனுக்கு கடிந்துரை அனுப்பும். தண்டிக்கும். ஆனால் அரசாங்கம் அவனை விலக்கி வெளியே தள்ளாது ! ஏனென்றால் வரப்போகும் சைப்பிரஸ் போருக்கு அவன் உதவி அவசரத் தேவை. படை வீரரை முன்னின்று நடத்திச் செல்ல அவனைப் போல் பேராற்றல் படைத்த வேறொரு ஜெனரல் கிடைப்பது அரிது. கருப்பனை நான் வெறுக்கிறேன் எனக்கவன் தளபதி ஆயினும் ! ஆனால் பாசாங்கு செய்தாலும் நானவன் ஆணைக்கு அடங்கி நடக்கும் நம்பிக்கையான சேவகன் ! அவனை நீ காண வேண்டு மென்றால், சாகிட்டேரியஸ் விடுதியில் இருப்பான். நானும் அங்குதான் படை வீரர் கூட இருப்பேன். போய் வருகிறேன் ஷைலக்.
[புரூனோ வெளியேறுகிறான்]
[சிசாரோ தீப்பந்தங்கள் தூக்கிய தன் வேலையாட்களுடன் கோபத்துடன் மீண்டும் வருகிறார்]
சிசாரோ : [பதட்டமுடன்] உண்மைதான் மகள் ஓடிவிட்டாள் ! செனட்டர் குடும்பப் பேரைக் கெடுத்து விட்டாள். எஞ்சிய எனது முதிய வாழ்வில் நஞ்சைக் கலந்து விட்டாள். ஷைலக் ! எங்கே நீ அவளைப் பார்த்தாய் ? கட்டறுந்து, மதியிழந்த காதகி, கருப்பனுடன் ஓடியதைக் கண்டாயா ? யார் அவளுக்குத் தந்தையாய் இருப்பான் ? அவள் என் மகள்தான் என்று நீ அறிவாயா ? எளிதில் என்னை ஏமாற்றி விட்டாளே ! உன்னிடம் ஏதாவது உரைத்தாளா ? எழுப்புங்கள் என் உறவினரை. இன்னும் தீப்பந்தங்கள் எடுத்து வாரீர். ஷைலக் ! அவள் கருப்பனைத் திருமணம் செய்து கொண்டாளா ? அது நிச்சயமாய் உனக்குத் தெரியுமா ?
ஷைலக் : ஆம், கருப்பனை உமது மகள் திருமணம் செய்து கொண்டாள். இன்று காலையில்தான் திருமணம் நடந்தது.
சிசாரோ : ஐயோ தெய்வமே ! வீட்டிலிருந்து எப்போது வெளியேறினாள் ? என் உதிரம் கொதிக்குதே ! என் இதயம் துடிக்குதே ! என் தலை வெடிக்குதே ! தந்தைமார்களே ! தாய்மார்களே ! உமது புதல்வியரை எப்போதும் நம்பாதீர் ! குனிந்து கொண்டு, பணிந்து கொண்டு, பரிவுடன், பாசாங்கு செய்யும் பாவை என்னை ஏமாற்றினாள் ! உம்மையும் ஏமாற்றுவாள் ! ஷைலக் ! கன்னிப் பெண்ணை மயக்கிக் கைக்கொள்ளும் மாய வித்தை ஏதும் இருக்கிறதா ? அதைப் பற்றி உனக்குத் தெரியுமா ?
ஷைலக் : ஆம் செனட்டரே ! எனக்குத் தெரியும்.
சிசாரோ : அழைத்துவா என் தம்பியை. இப்போது எனக்குத் தெரியுது , நானுனக்கு முன்பே அவளைத் திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும். உனக்குத் தெரியுமா ? எங்கே பார்க்க முடியும் என் மகளையும் அந்தக் கருப்பனையும் ?
ஷைலக் : மேதகு செனட்டரே ! அவர்கள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆயுதம் ஏந்திய காவற்படை வீரர் சிலரோடு என் பின்னால் வாருங்கள் !
[ஷைலக் பின்னால் சிசாரோ தன் ஆட்களுடன் போகிறார்]
+++++++++++++++++