(1910-1997)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
படைப்பு உறுதியில் கிறித்துவ பணிமாது.
– அன்னை தெரேஸா
என்றும் தன்நலம் பேணி,
ஏது காரண மின்றி
எவ்வித நியாயமு மின்றி
தாறுமாறாய்
ஒவ்வாது நடப்பர் மாந்தர்!
ஆயினும்
மன்னித்து விடுக மாந்தரை!
அருட்பணி செய்து நீ வருகையில்,
சுயநலம் பேணி முடிவில்
செல்வம் சுருட்டப் போவதாய்
உன்மேல் பழி
சுமத்துவர் மாந்தர்!
ஆயினும்
அருட்பணி ஒன்றே மேற்கொள்!
சாதனை புரிந்து
வெற்றி நீ பெற்றால்,
போலித் தோழர் சிலர் ஒட்டுவார்!
பொய் வேடப்
பகைவர் சிலர் கிட்டுவார்!
ஆயினும்
வெற்றியை நோக்கியே முற்படு!
நேர்மையாய் நடந்து
வெளிப்படை யாய்ப் பேசி
வேலை செய்யும் உன்னை
மானிடர் உடனே
ஏமாற்றி விடுவர் !
ஆயினும்
நேர்மையாய் நட!
வெளிப்படையாய்ப் பேசு!
பல்லாண்டு கட்டிய உனது
பணி மாளிகையை
யாராவது ஒருவர் இடித்து
தூளாக்கி விடுவர் ஓரிரவில் !
ஆயினும்
மேலாக்கி விடு மீண்டும்
உன்னருள் மாளிகை
தன்னை !
பணியில் மூழ்கி உன் நெஞ்சில்
அமைதி நீ காணும் போது,
ஆனந்தம் மேவும் போது
உன் மீது
பொறாமைப் படுவர் மாந்தர்!
ஆயினும்
ஆனந்தம் அடைவாய் நீ உன்
அருட்பணியில்!
இன்று புரிந்த உனது
நல்வினைப் பணிகளை எல்லாம்
அடுத்த
நாளே மறப்பர் மாந்தர்!
ஆயினும்
நல்வினைப் பணியே மேற்கொள்!
உன் முழுத்திறப் பணியைத் தினமும்
உலகுக் களித்த போதும்
இன்னும் தேவை பணிக்கு
இருந்தே தீரும் புவிக்கு!
ஆயினும்
உன்னால் இயலும் அருட்பணியை
முழுத் திறமுடன்
உலகுக் களிப்பாய் நீயே!
***********
- http://en.wikipedia.org/wiki/Mother_Teresa [May 10, 2014]
- http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html [September 5, 1997]
- http://www.biography.com/people/mother-teresa-9504160#awesm=~oEQ5Ymt76MENH7
- http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html
+++++++++++++++
jayabarathans@gmail.com [October 17, 2018] [R-3]