ஜோன் ஆஃப் ஆர்க்

Joan of Arc

சூனியக்காரி  ஜோன் ஆஃப் ஆர்க்

joan-of-arc-pmd-final-part-1

முன்னுரை

சி. ஜெயபாரதன், கனடா

ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய வரலாற்று நாடகங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது, ஜோன் ஆஃப் ஆர்க் நாடகம். அது ஸெயின்ட் ஜோன் என்னும் தலைப்பில் உருவானது. பத்தொன்பது வயதான, கல்வி அறிவற்ற பாமரப் பெண்ணியப் பிறவியான வாலிப ஜோன், ராஜ தந்திரங்களும், போர்த்துறை யுக்திகளும் கல்லாமல் தெரிந்து, நூற்றுக் கணக்கான படை வீரர்களை நடத்திச் சென்று அனுபவம் நிறைந்த பிரிட்டீஷ் ராணுவத்துடன் துணிந்து போரிட்டுத் தோற்கடித்து பிரான்சைக் காப்பாற்றிய உண்மைக் கதையை யாரும் நம்ப முடியாது.  சிறிது காலமே வாழ்ந்த ஜோன் ஆஃப் ஆர்க்கின் சோக வரலாற்றுக் கதை மெய்யானது.   இது கற்பனை நாடக மில்லை. ஒரு வரலாற்று நாடகமே.

பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடி வெற்றி பெற்றவள்.  கல்வி ஏதும் கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சி களுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

பெர்னாட் ஷா நாடகங்கள் பொதுவாகப்  படிப்பதற்கும், நடிப்பதற்கும், திரைப்பட எடுப்புக்கும் எழுதப் பட்டவை.  இவற்றின் காட்சிகள் தொடர்ந்து திண்ணை வலையிதழில் வெளியிடப் பட்டன.  முதற்கண் திண்ணை வலை ஆசிரியர்கள் ராஜாராம், துக்காராம் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நாடகத்தில் இடையிடையே அரிய வாய்மொழிகள்  வருகின்றன.  அவற்றைத் தகுந்த படத்துடன் இணைத்த பெருமை பதிப்பாசிரியர் வையவனைச் சாரும்.   இந்த வரலாற்று நாடகத்தைச் சிறப்பாக வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் அவர்களுக்கு அடுத்து என் நன்றி உரித்தாகுக.

சி. ஜெயபாரதன்

கிங்கார்டின், அண்டாரியோ

கனடா

(ஜனவரி 27, 2015)

 

சூனியக்காரி

ஜோன் ஆஃப் ஆர்க்

பெர்னாட் ஷாவின் ஸெயின்ட் ஜோன்

நாடகத்தைத் தழுவியது

சி. ஜெயபாரதன், கனடா

 

‘கடவுளின் மகளே! செல்! முன்னே செல்! முன்னேறிச் செல்! எனது உதவி உனக்குக் கிடைக்கும்! முன்னேறிச் செல்! இந்த அசரீரி குரலைக் கேட்டதும், எப்போதும் அக்குரலைக் கேட்க வேண்டுமென்று என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கித் துடிக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனிதத் தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப் போவதில்லை! ‘

வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) 

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஜோன் ஆஃப் ஆர்க் கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது, கோரமான வரலாற்று நிகழ்ச்சியாகும். அவளது குறுகிய வாழ்வின் தீவிரக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொர்ரேன் ஷாம்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள டோம்ரெமி கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். வைர நெஞ்சமும், மன வைராக்கியமும் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறு வயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து எளிய நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், கூரிய சிந்தனா சக்தியும், தளராத மன உறுதியும் மக்களை முன்னடத்திச் சென்று, அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்குக் காரணமாயின. மக்களை ஒன்று திரட்டிப் போரிட முன்வழி நடத்தும் திறமை ஜோன் ஆஃப் ஆர்க் கொண்டிருந்தது, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. மேலும் பிரான்ஸின் பல பகுதிகளை ஆண்டு வந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க மக்களைத் தூண்டியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

கதைச்சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது, கோரமான வரலாற்று நிகழ்ச்சியாகும். அவளது குறுகிய வாழ்வின் தீவிரக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொர்ரேன் ஷாம்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள டோம்ரெமி கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். வைர நெஞ்சமும், மன வைராக்கியமும் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறு வயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து எளிய நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், கூரிய சிந்தனா சக்தியும், தளராத மன உறுதியும் மக்களை முன்னடத்திச் சென்று, அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்குக் காரணமாயின. மக்களை ஒன்று திரட்டிப் போரிட முன்வழி நடத்தும் திறமை ஜோன் ஆஃப் ஆர்க் கொண்டிருந்தது, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. மேலும் பிரான்ஸின் பல பகுதிகளை ஆண்டு வந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க மக்களைத் தூண்டியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

 

பிரான்ஸின் கிறித்துமத ஆலயம் ஜோனைக் கைது செய்து, சூனியக்காரி என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணைக்குக் கொண்டு வந்தது. சார்லஸைப் பட்டம் சூட வைத்த அவளது அசையாத, அழுத்தமான மத நம்பிக்கைகளே குற்றங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன. சூனியக்காரி என்றும், மந்திர வித்தைக்காரி என்றும், கிறித்துவ திருச்சபைக் குருவை எதிர்த்தவள் என்றும் பிரான்ஸை ஆக்கிரமித்திருந்த பிரிட்டாஷ் அதிகார வர்க்கம் பழிசுமத்தி 1430 மே மாதம் 30 ஆம் தேதி கம்பத்தில் கட்டி, ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரிக்கப்பட்டாள். ஜோன் மறைந்து 500 ஆண்டுகள் கழித்து, இருபதாம் நூற்றாண்டில் கிறித்துவ திருச்சபை 1920 ஆம் ஆண்டில் ‘புனித அணங்கு ‘ என்று கெளரவத்தை அளித்தது!

+++++++++++++++++

 

முதல் காட்சி

காலம்: கி.பி.1429

இடம்: வெளகோலர் கோட்டை (Castle of Vaucouleurs)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ராபர்ட் ஆஃப் பெளட்ரிகோர்ட் (Robert De Baudricourt) இராணுவக் காப்டன்
 2. ஜோன் ஆஃப் ஆர்க் (பதினெட்டு வயது கிராம இள நங்கை)
 3. பெர்டிராண்டு ஆஃப் பெளலஞ்சி [(Bertrand De Poulengey) Polly] 36 வயது பிரென்ச் இராணுவ அதிகாரி
 4. ராபர்டின் பணியாள் 20-25 வயது.

அரங்க அமைப்பு: கோட்டை அறையில் இராணுவக் காப்டன் ராபர்ட் காலை உணவு அருந்திட நாற்காலியில் அமர்ந்துள்ளான்.

ராபர்ட்: (மேஜையைத் தட்டி) எப்படித் தின்பது இதை ? முட்டை யில்லை! உன் தலையில் இடி விழ! முட்டை யில்லை என்று நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.

பணியாள்: காப்டன் ஸார்! முட்டை யில்லை என்பது என் தவறில்லை! கடவுள் செய்த தப்பு!

ராபர்ட்: நீ முட்டை இல்லை என்று சொல்லிப் பழியைக் கடவுள் மீது ஏன் போடுகிறாய் ?

பணியாள்: ஸார்! முட்டை கிடையாது. என்னால் முட்டை இட முடியாது! முட்டை கிடைத்தால் சமைப்பேன்.

ராபர்ட்: முட்டாள். யார் உன்னை முட்டையிட வேண்டினார்கள் ?

பணியாள்: யாரும் சொல்லவில்லை ஸார்! உண்மையாகக் கடவுளுக்குத்தான் தெரியும். உங்களைப் போல் எங்களுக்கும் இன்று முட்டை கிடையாது! கோழிகள் இன்றைக்கு வேலை நிறுத்தம்! அவை முட்டையிடப் போவதில்லை!

ராபர்ட்: சொல்வதைக் கேள்! முதலில் நான் யார் தெரியுமா ? ராபர்ட் ஆஃப் பெளடிரிகோர்ட்! இந்தக் கோட்டையின் தளபதி! நீ யார் தெரியுமா ?

பணியாள்: ஸார்! இங்கே அரசரை விடப் பெரியவர் நீங்கள்! வெறும் வேலைக்காரன் நான்! என் கடன் தொண்டு செய்வது! என் பெருமை, உங்களுக்கு ஊழியம் செய்வது!

ராபர்ட்: போதும் பெருமையைப் பீற்றிக் கொள்ளாதே! பிரான்சிலே உன்னைப் போன்று வேலை சரிவரத் தெரியாத முட்டாள் வேறு ஒருவன் கிடையாது! முட்டை இல்லை என்று பொய் சொல்கிறாய்! கொழுத்த கோழிகள் நான்கு இருக்கும் போது, அவை இட்ட முட்டைகள் எங்கே போயின ? யார் திருடினார் அவற்றை ? சொல்லடா! சொல்! முட்டைகள் களவு போயிற்றா ? அல்லது கைச் செலவுக்கு விற்று விட்டாயா ? கழுத்தைப் பிடித்து உன்னை வெளியே தள்ளுவதற்கு முன் உண்மையைச் சொல்! நேற்றுப் பாலும் குறைவாக இருந்தது! பாலைப் பூனை குடித்ததா ? அல்லது நீ குடித்தாயா ? என்ன நடக்கிறது உன் சமையல் புரியில் ?

பணியாள்: இல்லை ஸார்! யாரும் பாலைக் குடிக்கவும் இல்லை! யாரும் முட்டையைத் திருடவும் இல்லை! நம் கோட்டை மேல் ஏதோ ஒரு சூனிய வசியம் உள்ளது!

ராபர்ட்: அப்பனே! அந்தக் கதை இங்கு அரங்கேறாது! காப்டன் ராபர்ட் மாந்திரீகரை எரித்திடுவான்! திருடரைத் தூக்கிலிடுவான்! போ! ஓடிப் போ! நான்கு டஜன் முட்டைகளும், இரண்டு காலன் பாலும், இங்கு பகலுக்குள் கொண்டு வர வேண்டும்! இல்லாவிட்டால் உன் முதுகு எலும்பை முறித்து விடுவேன்! என்னை முட்டாளாக்குவதற்கு உனக்குப் பாடம் கற்பிக்கிறேன்!

பணியாள்: ஸார்! நான் சொல்கிறேன், முட்டையே இல்லை! உங்களைக் கும்பிடுகிறேன்! என்னைக் கொன்று போட்டாலும் சரி சொல்கிறேன், முட்டையே கிடைக்காது …. கோட்டை வாசலில் அந்த பணிமாது நிற்கும் வரை!

ராபர்ட்: பணிமாதா ? எந்தப் பணிமாது ? நீ என்னப்பா சொல்கிறாய் ? விளக்கமாய்ச் சொல்!

பணியாள்: ஸார்! அந்த இள நங்கை லொரேன் நகரைச் சேர்ந்தவள். டோம்ரெமி கிராமத்துக்காரி.

ராபர்ட்: ஆயிரம் இடி விழட்டும் உன் தலையில்! ஆயிரம் பேய்கள் எழட்டும் உன் படுக்கை அறையில்! முரட்டுப் பிடிவாதமாய் என்னைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாள் முன்பு வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை சொல்கிறாயா ? நான் அவளை இழுத்துக் கொண்டு போய் அவள் அப்பனிடம் ஒப்படைக்கச் சொல்லி யிருந்தேன். அவளைக் குடிசையில் ஒளித்து வைக்கும்படி உத்தரவு இட்டிருந்தேன்! அவளா இன்னும் இங்கு காத்திருக்கிறாள் ?

பணியாள்: அவளைப் போகச் சொன்னேன். அவள் போக மறுக்கிறாள் ஸார்! நான் என்ன செய்யட்டும் ?

ராபர்ட்: அவளைப் போகச் சொல்லி நான் கட்டளை இடவில்லை! அவளைத் தூக்கி வெளியே எறியத்தான் உத்தரவிட்டேன்! ஐம்பது காலாட் படைகள், ஒரு டஜன் வேலைக்காரத் தடியன்கள் இருந்தும், என் உத்தரவு என்ன ஆயிற்று ? அத்தனை பேரும் அந்தப் பிடாரிக்குப் பயப்பட்டுகிறார்களா ?

பணியாள்: ஸார்! நிச்சயம் உங்களைக் காண வேண்டும் என்று கற்தூண் போல் கால் வலிக்க நிற்கிறாள்! நைந்த நங்கை போல் தோன்றினாலும், நம்மை விட உறுதியோடு இருக்கிறாள். அவளை தூக்கி எறிய என்னால் முடியாது! உங்களால் ஒருவேளை முடியலாம்! அவளைப் பயமுறுத்திப் பாருங்கள் ஸார்!

ராபர்ட்: எங்கே இருக்கிறாள் அந்தப் பிடிவாதக்காரி ?

பணியாள்: காவல் படையினருடன் பேசிக் கொண்டே இருக்கிறாள், பிரார்த்திக்கும் நேரத்தைத் தவிர!

ராபர்ட்: பிரார்த்தனை வேறா பிடிவாதக்காரி செய்கிறாள் ? முட்டாள்! அவள் பிரார்த்தனையை நம்புகிறாயா ? இந்த மாதிரி மந்திரக்காரிகளை எனக்குத் தெரியும்! போ! அழைத்து வா அவளை! இல்லை! அவளைத் தூக்கிப் போடுங்கள் என் முன்னால்!

பணியாள்: [முணங்கிக் கொண்டே போகிறான்] ஸார்! பெண் பிறவியா அது ? அவளுக்குப் படையில் சேர்ந்து போரிட ஆசை! படைகள் அணியும் உடைகள், நீங்கள் தர வேண்டுமாம் அவளுக்கு! உடற் கவசம், ஒரு போர்வாள் வேறு வேண்டுமாம்! அடாடா! ஆணாய்ப் பிறக்க வேண்டிய பெண்! பெண்ணாய்ப் பிறந்து ஆணாக மாற இங்கு வந்திருக்கிறாள்! இதோ அழைத்து வருகிறேன் ஸார்! [கோட்டைக் கதவைத் திறந்து வெளியே செல்கிறான்]

[18 வயதுடைய கிராமத்து நங்கை ஒருத்தி உள்ளே நுழைகிறாள். சிவப்பு நிற உடையை ஒழுக்கமாக அணிந்திருக்கிறாள். அசாதாரண முகம். கூர்மையான நோக்கு. நிமிர்ந்த பார்வை. அகன்று அமைந்த கண்கள். அம்சமான மூக்கு. அகன்ற நெற்றி. எடுப்பான தோற்றம். ஆண்கள் போன்று கம்பீரமான நடை. பார்த்தாலே ஆடவரும், பாவைகளும் மதிக்கும் தோற்றம்.]

ஜோன்: [முகத்தில் புன்முறுவலுடன் வணங்கி, அழுத்தமாக] மதிப்புக்குரிய காப்டன் அவர்களே! வந்தனம்! ஒரு குதிரை, ஒரு கவசம், சில காலாட் படையினரை எனக்குக் கொடுத்து, என்னை நீங்கள் மன்னர் தெளஃபின் அரண்மனைக்கு அனுப்ப வேண்டும். எனது பிரபு உங்களுக்கு அளித்த உத்தரவு அது!

ராபர்ட்: [கோபப்பட்டு] உனது பிரபுவிடமிருந்து எனக்குக் கட்டளையா ? .. நீ பிரபு என்று சொல்லும் அந்தப் பிடாரன் யார் ? அவனிடம் போய் இதைச் சொல்! அவன் கட்டளை யிடும் காலாட் படை அல்லன் நான்! அரசனைத் தவிர வேறு யாருடைய உத்தரவையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் இந்த ராபர்ட்!

ஜோன்: [அழுத்தமுடன்] அதுசரி காப்டன் ஸார்! எனது பிரபும் ஓர் அரசனே! மேல் உலகத்தின் அரசன்!

ராபர்ட்: (தலையில் கையை வைத்து) இவள் ஒரு பைத்திகாரி! [பணியாளைப் பார்த்து] களிமண் தலையா! இதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை!

பணியாள்: ஸார்! அவளைக் கோபப் படுத்த வேண்டாம்! கேட்டதைக் கொடுத்து விடுங்கள்!

ஜோன்: [பொறுமை இழந்து நட்புடன்] நான் சொல்லும் முக்கிய செய்தியைக் கேட்காத வரை, அவர்களும் என்னைப் பைத்தியம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் பாருங்கள் ஸார்! கடவுள் என்னிடம் கூறியபடிதான் நீங்கள் செய்ய வேண்டும் என்பது கடவுளின் விதி!

ராபர்ட்: இல்லை பெண்ணே! கடவுளின் கட்டளை, உன்னை உன் அப்பனிடம் மீண்டும் சேர்ப்பது! உன்னை

வீட்டுக்குள் தள்ளி கதைவைப் பூட்டி, உன் பைத்தியத்தை தெளிய வைப்பது! அதற்கு என்ன சொல்கிறாய் பெண்ணே ?

ஜோன்: அப்படிக் கட்டளை என்பது உங்கள் விளக்கம்! எப்படி நடக்கும் என்பது எனக்குத் தெரியும்! என் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று முதலில் மறுத்தீர்! என்ன ஆயிற்று ? இப்போது நான் உங்கள் முன்பாக நிற்கிறேன்! எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா, காப்டன் ஸார்!

பணியாள்: [முந்திக் கொண்டு] பார்த்தீர்களா! அவள் உங்களை மடக்கிப் போடுவதை! என்ன சாமர்த்தியம்! அடடா! .. இவள் பெண்ணல்ல! ஆணே தான்! ஆணு மில்லை! பெண்ணுருவில் ஆணை விடப் பெரியவள்!

ராபர்ட்: [கோபமாக] வாயை மூடுடா! அதிகப் பிரசங்கி! [ஜோனிடம்] சரி இப்போது சொல்வதைக் கேள். நான் என்ன செய்யலாம் என்று பண மதிப்பீடு செய்கிறேன்.

ஜோன்: [வேகமாக] செய்யுங்கள் காப்டன் ஸார்! குதிரை வாங்க 16 பிராங்க் தேவைப்படும். அதுவே மிகையான பணம்! எனக்குகந்த உங்கள் காலாட் படையின் கவசத்தைத் தாருங்கள் கடனாக. அதிக படைகள் எனக்குத் தேவையில்லை. ஆர்லியன்ஸ் கோட்டையை முற்றுகையிடப் போதுமான படை

வீரர்களை நான் தெளஃபின் அரசரிடம் பெற்றுக் கொள்கிறேன்.

ராபர்ட்: [அதிர்ச்சி அடைந்து] என்ன ? ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடிக்கப் போகிறாயா ? அவ்வளவு பெரிய திட்டமா ? (முணுமுணுப்புடன்) … பெரிய பைத்தியமாகத் தெரிகிறது!

ஜோன்: [எளிதாகப் பேசி] ஆம் காப்டன் ஸார்! அதற்குத் தான் கடவுள் என்னை அனுப்புகிறார்! மூன்று வீரர்கள் போதும், உறுதியானவர்கள், என்மீது கனிவுள்ளவர்கள். அப்படி என்னுடன் வரச் சிலர் ஒப்புக் கொண்டுள்ளனர். … பாலி, ஜாக் போன்றவர்!

ராபர்ட்: [சினத்துடன்] என்ன அவமரியாதை உனக்கு ? பாலி என்றா விளிக்கிறாய் ? பாலி யார் தெரியுமா ? படைத் தளபதி பெட்ரெண்டு ஆஃப் பெளலின்ஜி அவர்களையா பாலி என்று சொன்னாய் ?

ஜோன்: [சாதாரணமாக] எல்லாரும் அவரைப் பாலி என்றுதான் அழைக்கிறார்! அவருக்கு வேறு பெயர் இருப்பது எனக்குத் தெரியாது! … காப்டன் ஸார்! அடுத்தவர் ஜாக். அவருக்கு வேறு பெயர் என்ன ?

ராபர்ட்: மறுபடியும் பெயரைச் சுருக்காதே! திருவாளர் ஜான் ஆஃப் மெட்ஸ் தான் அவர் என்று நினைக்கிறேன்.

ஜோன்: ஆம் காப்டன் ஸார்! ஜாக் நிரம்ப நல்லவர். கனிவும் இரக்கமும் கொண்டவர். ஏழை எளியவருக்குக் கொடுக்க எனக்குப் பண உதவி செய்பவர். … அப்புறம், ஜான் காட்சேவ் என்னுடன் வருவார்; மேலும் வில்வீரர் ரிச்சர்டு, அவரது வேலைக்காரர் ஜான் ஆஃப் ஹோனிகோர்ட், ஜூலியன் அனைவரும் என் பின்னால் வருவார்கள்.

ராபர்ட்: [முணுமுணுத்து] .. எல்லாரையும் வசப்படுத்தி முன்பே பிடித்து விட்டாயா ? .. என் கோட்டை கெட்டுப் போச்சு! எனக்கு வேலை போயிடும்! … எனக்குத் தெரியாமல் என் படை ஆட்களை இவள் எப்படி மயக்கினாள் ? அவள் பின்னே வருவார்கள் என்று என்ன அழுத்தமாகச் சொல்கிறாள்! [மனதிற்குள்] .. அடி! சூனியக்காரி!

(முதல் காட்சி தொடரும்)

+++++++++++++++++++

‘கடவுள் பெயரில், நாம் பகைவரை விரட்டப் போரிட வேண்டும். ஆங்கிலேயர் மேகத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், நாம் அவரைப் பிடித்து விடுவோம். அவரைத் தண்டிக்கவே கடவுள் நம்மை அனுப்புகிறார். கனிவுள்ள நம் தெளஃபின் மன்னருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு மாபெரும் வெற்றி கிடைக்கப் போகிறது. பகவரை விரட்டி விடுவோம் என்று அசரீரிக் குரல் எனக்குச் சொல்லியிருக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

முதல் காட்சியின் தொடர்ச்சி

காலம்: கி.பி.1429

இடம்: வெளகோலர் கோட்டை (Castle of Vaucouleurs)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ராபர்ட் ஆஃப் பெளட்ரிகோர்ட் (Robert De Baudricourt) இராணுவக் காப்டன்
 2. ஜோன் ஆஃப் ஆர்க் (பதினெட்டு வயது கிராம இள நங்கை)
 3. பெர்டிராண்டு ஆஃப் பெளலஞ்சி [(Bertrand De Poulengey) Polly] 36 வயது பிரென்ச் இராணுவ அதிகாரி
 4. ராபர்டின் பணியாள் 20-25 வயது.

அரங்க அமைப்பு: கோட்டை அறையில் இராணுவக் காப்டன் ராபர்ட் காலை உணவு அருந்திட நாற்காலியில் அமர்ந்துள்ளான். பணிமாது ஜோன் ராபர்ட் முன்பாக நின்று கொண்டிருக்கிறாள்.

ராபர்ட்: (கோபத்துடன்) என்ன கேட்கிறாய் ? இது நடக்கவே நடக்காது. காட்சேவ், ஹோனிகோர்ட், ஜுலியன் இவர்கள் எல்லாரும் உன் பின்னால் வருவார் என்று கனவு காணாதே, பெண்ணே! அவர்கள் யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஜோன்: (உறுதியாக) கவலைப் படாதீர்கள், காப்டன் ஸார்! கடவுள் கருணை யுள்ளவர். அவர்கள் எல்லோரும் என்னுடன் வரக் கனிவோடு ஒப்புக் கொண்டு விட்டார்கள்! நீங்கள் எதுவும் சிரமப்பட வேண்டியதில்லை! தினமும் என்னுடன் பேசும் புனித அணங்கு மார்கரெட்டும், புனித அணங்கு காதிரைனும் எனக்காக உங்களிடம் கேட்பார்கள். உங்களுக்குச் சொர்க்க புரி திறந்திருக்கும்! எனக்கு முதன் முதலாக உதவி புரிந்தவர் நீங்கள் என்று உங்கள் பெயர் நினைக்கப்படும்!

ராபர்ட்: (பணியாளைப் பார்த்து) திருவாளர் பெளலிஞ்சியைப் பற்றி இவள் கூறுவது உண்மையா ?

பணியாள்: (ஆர்வமாக) முற்றிலும் உண்மை ஸார்! திருவாளர் மெட்ஸைப் பற்றி ஜோன் சொன்னதும் உண்மையே! அவர்கள் இருவரும் ஜோன் கூடப் போவதற்கு இசைந்துள்ளார்கள்.

ஜோன்: (சிரித்துக் கொண்டு) ஜோன் பணிமாது என்றும் பொய் பேசமாட்டாள்! [பணியாளைப் பார்த்து] உண்மையை உண்மையாகச் சொன்ன உங்களுக்கு நன்றி! மிக்க நன்றி!!

ராபர்ட்: (பணியாளைப் பார்த்து அதட்டலுடன்) வெளியே போய் பெளலஞ்சியை உடனே வரச் சொல்! விரைவாகப் போ! (பணியாள் வெளியேறுகிறான்). (ஜோனைப் பார்த்து) நீ சற்று வெளி காத்திரு. நான் பெளலஞ்சிடம் தனியாகப் பேச வேண்டும்.

ஜோன்: (சிரித்துக் கொண்டு) உத்தரவின்படி வெளியே காத்திருக்கிறேன் ஸார். [ஜோன் வெளியேறுகிறாள்]

[பெளலஞ்சியும், பணியாளும் உள்ளே நுழைகிறார்கள். 36 வயது இராணுவ அதிகாரி ஒருவர் ராபர்ட்டுக்கு வந்தனம் செய்கிறார்.]

ராபர்ட்: [எதிர் நாற்காலியைக் காட்டி] பாலி உட்கார்! போரைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நட்பு முறையில் சும்மா சில கேள்விகள். …. இதை முதலில் கேட்க வேண்டும். நீங்கள் கண்டு பேசிய அந்த பணிப்பாவையைப் பற்றிதான்! நானும் பார்த்துப் பேசினேன். அசல் பைத்தியம்! பட்டிக் காட்டுப் பாவை! நடுத்தரக் குடும்ப நங்கை! எனக்குத் தெரியும், அவள் அப்பன் ஒரு குடியானவன்! நல்ல பணம் சேமித்து வைத்திருக்கிறான். ஆனாலும் சமூகத்தில் தரமற்ற கீழ்நிலை மனிதன்! முரசடிக்கும் அவள் புளுகு மூட்டையை நம்பி, மன்னரைப் பேட்டி காண நீங்களும் அவளுடன் போவதாய்க் கேள்விப் பட்டேன்! உங்கள் திட்டம் வெற்றி பெற்றால், மன்னருக்கு ஆபத்து! திட்டம் சீர்கேடாகிப் போனால், என் வேலைக்கு ஆபத்து! அவளுக்கும் ஆபத்து! .. நான் சொல்கிறேன் பாலி! அவள் திட்டத்தில் மண்ணைப் போடு! அவளைப் புறக்கணித்து உன் வேலையைப் பார்!

பெளலிஞ்சி: [அழுத்தமுடன்] காப்டன்! அவளா பைத்தியகாரி ? அவளைப் பைத்தியம் என்றால், புனித மேரியைப் பைத்தியம் என்று சொல்வதுக்குச் சமமானது. அவள் ஓர் ஆழ்ந்த அறிவாளி! சந்தேகமில்லை.

ராபர்ட்: நீ, ஜாக், ரிச்சர்டு மூவரும் அவளுடன் சார்லஸ் மன்னரைப் பார்க்க ஒப்புக் கொண்டதாக அவள் கூறுவது உண்மைதானா ? அவளது மடத்தனமான திட்டப்படி நீங்களும், மன்னரைக் காணப் போவீர்களா ?

பெளலிஞ்சி: [உறுதியுடன்] ராபர்ட்! அவள் பேச்சில் ஒரு மகிமை உள்ளது! அவள் பெண்ணென்றோ, பட்டிக்காடென்றோ, குடியானவன் மகள் என்றோ நாங்கள் யாரும் நினைக்கவில்லை! அசிங்கமாகப் பேசுபவர் கூட அவள் முன்பு வாயைச் சுத்தமாக வைத்துக் கொண்டு, அவள் சொல்வதைக் கூர்ந்து கேட்கிறார்கள்! அவள் பேச்சில் ஒரு மகத்துவம் தெரிகிறது! பிரான்ஸின் விடுதலையைப் பற்றி தெளிவாகப் பேசுகிறாள். அவள் ஓர் அசாதாரண மங்கை! அதிசய ஞானமுள்ள நங்கை அவள்! அவள் சொற்படி முயல்வது சரியென்று எனக்குத் தோன்றுகிறது! பிரான்ஸின் விடுதலைப் பற்றி மன்னர் கூடப் பேசியதில்லை!

ராபர்ட்: ஞானத்தோடுதான் நீ பேசுகிறாயா ? பொது அறிவு உனக்கு என்றைக்கும் இருந்ததில்லை!

பெளலிஞ்சி: பொது அறிவு எனக்கு இல்லைதான்! பிரென்ச் இராணுவரான நமக்குப் பொது அறிவு இருந்தால், பர்கண்டியின் தளபதியுடன் இணைந்து, பிரிட்டாஷ் மன்னருக்குப் பணி செய்வோமா ? ஆங்கிலேயர் பாதி பிரான்ஸ் நாட்டைக் கைபற்றி ஆண்டு வருகிறார்! பாரிஸ் அவரது கையில்! ஏன், நீங்கள் இருக்கும் இந்தக் கோட்டை அவரது கையில்! அடுத்து நாம் இழக்கப் போவது ஆர்லியன்ஸ்! நமது மன்னர் தெளஃபின், சினான் நகரின் மூலையில், ஓர் எலியைப் போல் அடைபட்டுக் கிடக்கிறார்! அவருக்கு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட ஆர்வம் இல்லை! ஆற்றல் இல்லை! ஆத்ம தாகமும் இல்லை! அவர் தெளஃபின் அரசர் தானா என்று நமக்கும் தெரியாது! மகாராணி அன்னையாரே மகனைத் தெளஃபின் இல்லை என்று சொல்கிறார்! விந்தையாக உள்ளதல்லவா! தாயிக்குத் தெரிய வேண்டாமா ? சொந்த மகனின் பிறப்புரிமையைக் கூட மகாராணி மறுக்கிறார்!

ராபர்ட்: நன்றாகத்தான் உள்ளது! மகாராணி சொந்த மகளை ஆங்கில மன்னனுக்கு மண முடித்து வைத்திருக்கிறார்! வேறென்ன செய்வார், மகாராணி ? அவரைப் பழிப்பதில் அர்த்தமில்லை!

பெளலிஞ்சி: யாரையும் நான் பழிக்கவில்லை! உண்மையை ஒத்துக் கொள்வோம்! மகாராணியின் மூடச் செயலால், தெளஃபின் மன்னர் கீழே விழுந்து மண்ணைக் கவ்வினார்! ஒருநாள் அரண்மனையை விட்டு வெளியே ஓடப் போகிறார்! நாசமாகும் நமது எதிர்காலத்தை ஏற்றுக் கொள்வோம்! அடுத்து ஆங்கிலேயர் பிடுங்கப் போவது, ஆர்லியன்ஸ்! தூங்கிக் கொண்டிருக்கும் மன்னர் அதை நிறுத்தப் போவதில்லை! வேங்கை போன்ற அவரது காலாட் படைகள், வாலாட்ட முடியாது செம்மறி ஆடுகளாய் மேய்ந்து கொண்டிருக்கின்றன! அற்புத நிகழ்ச்சியோ அல்லது தெய்வீக நிகழ்ச்சியோ ஏற்பட்டால்தான் ஆர்லியன்ஸைக் காப்பாற்ற முடியும்!

ராபர்ட்: அற்புதங்களா, அவற்றை விட்டுத்தள்ளு பாலி! கனவில் கூட அவை காணப்படாதவை. அற்புதங்களின் உண்மை என்ன, தெரியுமா ? இந்தக் காலத்தில் அற்புதம் நிகழ்வதில்லை! அதுதான் உண்மை!

பெளலிஞ்சி: நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்! அதுதான் சரியென்று சொல்ல மாட்டேன். இந்தச் சமயத்தில், எந்த வழியையும் நிராகரிப்பது முறை யில்லை! அந்த இளநங்கையிடம் ஏதோ ஓர் அற்புத சக்தி உள்ளது! தீர்க்க தெரிசிபோல் அவளுக்கு எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது! அந்த அற்புத சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராபர்ட்: (கேலியாக) பாலி! அற்புத மாயங்கள் செய்வாள் அந்த மாது என்று நம்புகிறாயா நீ ?

பெளலிஞ்சி: (உறுதியாக) ஆம் அதை நம்புகிறேன் நான்! அந்த நங்கையே ஓர் அற்புதப் பிறவியாக எனக்குத் தோன்றுகிறது! அற்புதப் பிறவிகள் எல்லோரும் அற்புதங்கள் செய்வார் என்று என் கற்பனையில் உதிக்கவில்லை! இந்த இளநங்கை அற்புதம் செய்வாள் என்று உறுதியாக நம்புகிறேன். இவளுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அதைத் தவிர இப்போது நம் கைவசம் வேறு ஆயுதம் இல்லை! அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாமல், தூக்கி எறிவது அறிவுடைமை ஆகாது!

ராபர்ட்: [ஆத்திரமோடு] பாலி! என் பதவியில் நீ இருந்தால் என்ன செய்வாய் சொல் ?

பெளலிஞ்சி: [அழுத்தமாக] குதிரை வாங்க அவளுக்கு பதினைந்து பிராங்க் பணம் கொடுப்பேன். அவளது கட்டளைக்குக் காது கொடுப்பேன். ஆணைகளைப் பின்பற்றுவேன். என் நெஞ்சில் கனலை எழுப்புகின்றனஅவளது இராணுவப் போர் தீர்க்கமும், கடவுள் மீதுள்ள உறுதியும்!

ராபர்ட்: [கேலியாக] பாலி! அந்தப் பட்டிக்காட்டுப் பாவைபோல் நீயும் பைத்தியமாய் இருக்கிறாய்!

பெளலிஞ்சி: [கோபமாக] காப்டன்! இப்போது நமக்குச் சில பைத்தியகாரர் தேவை! பிரான்ஸில் அறிவுள்ளவர் நம்மை எக்கேடான அடிமை நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார், பார்த்தீர்களா ?

ராபர்ட்: நம் எல்லோரையும் அந்த பைத்தியக்காரி முட்டாள் ஆக்குவதாக எனக்குத் தோன்றுகிறது!

பெளலிஞ்சி: [அழுத்தமாக] சின்னான் நகருக்கு மன்னரிடம் அவளை அழைத்து செல்ல நான் முடிவு செய்து விட்டேன், நீங்கள் என்னைத் தடுத்து நிறுத்தா விட்டால்!

ராபர்ட்: [கோழைத்தனமாக] இந்த புத்தி கெட்ட பெண் சொல் கேட்டு பின்னால் போவது எனக்கு அவமானம்! உங்களுக்கும் அவமானம்! … சரி …சரி [பணியாளியைப் பார்த்து] அந்த நங்கையை உள்ளே வரச் சொல்.

[பணியாளி வெளியேறி ஜோனை அழைத்து வருகிறான்]

ஜோன்: [ஆர்வமோடு பணியாளியிடம்] காப்டன் ஸார் சம்மதித்து விட்டாரா ? .. ஜாக் பாதி விலைக்குக் குதிரையை விற்பதாகக் கூறுகிறார்!

பெளலிஞ்சி: [கனிவோடு] இங்கே உட்கார் ஜோன்.

ஜோன்: [ஆச்சரியம் அடைந்து, தயக்கமுடன்] பணிமாது நான் இங்கே உட்காரலாமா ?

ராபர்ட்: [சற்று சினத்துடன்] .. சொன்னபடி செய்! [ஜோன் ஒரு நாற்காலியில் அமர்கிறாள்] உன் பெயர் என்ன ? .. உன் குடும்பப் பெயர் என்ன ? .. நீ எந்த ஊர்க்காரி ?

ஜோன்: லொர்ரேன் கிராமத்தில் என்னை ஜென்னி என்று கூப்பிடுவார். பிரான்ஸில் என்னை ஜோன் என்று அழைப்பார். படை வீரர் என்னைப் பணிமாது ஜோன் என்று விளிப்பார். குடும்பப் பேரா ? அது என்ன ? எனக்குத் தெரியாது. என் தந்தை தன்னை தி ‘ ஆர்க் என்று சொல்லிக் கொள்வார். அதைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. காப்டன் ஸார்! நீங்கள் என் தந்தையைச் சந்தித்தது உண்டு.

ராபர்ட்: ஆமாம், உன் தந்தையைச் சந்தித்திருக்கிறேன். இப்போது நினைவுக்கு வருகிறது.. நீ லொர்ரேனில் உள்ள டோம்ரெமி கிராமத்தைச் சேர்ந்தவள் அல்லவா ?

ஜோன்: ஆம், அதில் என்ன இருக்கிறது ? நாமெல்லாரும் பிரென்ச் மொழியில் பேசுவோர்தானே!

ராபர்ட்: [சினத்துடன்] எங்களை நீ கேள்வி கேட்காதே! பதில் மட்டும் சொல்! … ஆமாம், உன் வயதென்ன ?

ஜோன்: பதினேழு வயது! அப்படி என்று சொல்லக் கேள்விப் பட்டேன்! பதினெட்டு, பத்தொன்பது கூட இருக்கலாம்! எனக்கு சரியாகத் தெரியாது.

ராபர்ட்: ஜோன்! புனித அணங்கு மார்கரெட்டும், புனித அணங்கு காதிரைனும் உன்னிடம் தினமும் பேசுவதாகச் சொல்கிறாயே, அதை விளக்கமாகச் சொல்வாயா ? எனக்குப் புரியவில்லை.

ஜோன்: அவர்கள் இருவரும் தினமும் என்னுடன் பேசுவது உண்மையே! …. ஆனால் அதைப் பற்றி நான் எதுவும் உங்களிடம் சொல்லப் போவதில்லை! அதைப் பற்றிப் பேச எனக்கு அனுமதி தரவில்லை, அவர்கள்.

ராபர்ட்: உண்மையாக நீ அவர்களை நேரில் காண்கிறாயா ? நான் இப்போது உன்னுடன் பேசுவது போல், அவர்களும் உன்னுடன் உரையாடுகிறார்களா ?

ஜோன்: இல்லை! அது முற்றிலும் வேறானது! நான் சொல்ல மாட்டேன்! எனக்கு மட்டும் கேட்கும் அந்த அசரீரிக் குரலைப் பற்றி, நீங்கள் பேசக் கூடாது!

ராபர்ட்: எப்படி அதை அசரீரிக் குரல் என்று சொல்கிறாய் ?

ஜோன்: என்ன செய்ய வேண்டும் என்று அசரீரிக் குரல் எனக்கு ஆணை யிடுகிறது! அது கடவுள் இடும் கட்டளை!

ராபர்ட்: அது உன் கற்பனையில் தெரிகிறது அல்லவா ?

ஜோன்: உண்மைதான்! அவ்விதமே கடவுளின் கட்டளை எல்லாம் நமக்கு வருகிறது!

ராபர்ட்: [சற்று ஏளனமாய்] … அதாவது கடவுள் உன் காதில் சொல்கிறார்! … நீ போய் ஆங்கிலேயர் பிடித்திருக்கும் ஆர்லியன்ஸ் கோட்டையை முற்றுகை இட்டுப் போரிடு என்று..!

ஜோன்: [ஆர்வமுடன்] …. அதற்குப் பிறகு நமது அரசர் தெளஃபின் அவர்களுக்கு ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் மகுடம் சூடு வென்றும் சொல்கிறார்.

ராபர்ட்: [மூச்சுத் திணறி, நாற்காலியில் சாய்ந்து போய்] .. என்ன ? .. என்ன சொன்னாய் ? தெளஃபின் மன்னருக்கு மகுடம் சூடவா ? … அட கடவுளே!

ஜோன்: அது மட்டுமில்லை! பிரான்ஸை விட்டு ஆங்கிலேயரைத் துரத்து என்றும் கட்டளை இடுகிறார்.

ராபர்ட்: பைத்தியகாரப் பெண்ணே! … கோட்டை முற்றுகை இட்டுப் பகவரை விரட்டுவது, பசு மாட்டைப் புல்வெளியிலிருந்து ஓட்டுவதைப் போலென்றா நினைத்தாய் ? படை திரட்டிப் போரிடுவது, யாரும் செய்யலாம் என்பது உன் நினைப்பா ?

ஜோன்: போரிடுவது ஒன்றும் சிரமமில்லை, கடவுள் உன் பக்கம் இருந்தால்! போரிடுவது ஒன்றும் கடினமில்லை, உயிரைக் கடவுளிடம் ஒப்படைக்க விருப்பம் இருந்தால்! முழு மனமோடு மெய்வருந்திப் போர் புரிவோருக்குக் கடவுள் உதவி கிடைக்கும். அரை மனதில் போரிட்டால் கடவுள் அவரைத் தண்டிக்கிறார்! படையில் உள்ள மாந்தர் பலர் சாதாரண மனிதர்தான்!

ராபர்ட்: [ஆச்சரியமுடன்] என்ன சொன்னாய் ? படையில் உள்ளவர் சாதாரண மனிதரா ? ஆங்கிலப் படை வீரர்கள் போரிடுவதை எங்காவது பார்த்திருக்கிறாயா ?

ஜோன்: ஆங்கிலேயரும் மனிதரே! நம்மைப் போலவே கடவுள் அவரையும் படைத்திருக்கிறார். கடவுள் அவருக்கு அவரது நாட்டையும், அவரது மொழியையும் அளித்திருக்கிறார். ஆனால் அவர்கள் நம் நாட்டுக்குள் புகுந்து, நமது மொழியைப் பேசுவது கடவுளுக்குச் சற்றும் விருப்பமில்லை!

ராபர்ட்: இந்த மூடத்தனத்தை உன் மூளையில் திணித்தது யார் ? ஆட்சி செய்யும் நாட்டு மன்னருக்கு இங்குள்ள படைவீரர் அடிமைகள்! பிரிட்டாஷ் மன்னர், பிரான்ஸ் மன்னர் யார் ஆண்டால் என்ன ? அவரது மொழிக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் ?

ஜோன்: [ஆத்திரமுடன்] நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை! ஆங்கில மன்னரை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது! நாம் யாவரும் கடவுளின் குடிமக்கள்! கடவுள் நமது நாட்டையும் நமது மொழியையும் நமக்கு அளித்து, அவற்றை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார். அப்படி இல்லை என்றால், ஓர் ஆங்கிலேயனைப் போரில் கொல்வது கொலை செய்வது போலாகும்! காப்டன் ஸார்! உங்கள் பேச்சும், போக்கும் பிரென்ச் மக்களுக்குக் கேடு விளைவிக்கும்! பிரிட்டாஷ் மன்னரா உங்கள் பிரபு ? ஆங்கில மொழியா உங்கள் மொழி ? பிரிட்டாஷ் மன்னர் ஆண்டால் என்ன ? பிரென்ச் மன்னர் ஆண்டால் என்ன ? இப்படி நீங்கள் சொன்னது தப்பு! என் நெஞ்சம் கொதிக்கிறது! நீங்கள் பிரிட்டாஷ் மன்னருக்குக் கடமைப் பட்டவரா ? இல்லை! பேராற்றல் உடைய கடவுளுக்குக் கடமைப் பட்டவர்!

பெளலிஞ்சி: [கடுமையுடன்] ராபர்ட்! அவளுடன் நீங்கள் வாதாடிப் பயனில்லை! அவளை எதிர்த்து நீங்கள் எது சொன்னாலும், ஒவ்வொரு முறையும் மடக்கி உங்கள் கழுத்தை நெரித்திடுவாள்!

ராபர்ட்: பெண்ணே! நாமிங்கே கடவுளைப் பற்றி கதை பேசவில்லை! வெறிபிடித்த போர் வீரர்களைப் பற்றிப் பேசுகிறோம்! கொடூரமான ஆங்கிலப் படை போரிடுவதைப் பார்த்திருக்கிறாயா ? அவர்கள் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்துவதைப் பார்த்திருக்கிறாயா ? அவர்கள் கொள்ளை அடிப்பதைக் கண்டிருக்கிறாயா ? ஊர்களை நாசமாக்கி பாலை வனமாக்கும் ஆங்கிலப் பிசாசுகளைப் பார்த்திருக்கிறாயா ? பிளாக் பிரின்ஸ் என்னும் இளவரசுக் கருப்பனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா ? அந்தக் கருப்பன் அடுப்புக் கரிப் பிசாசை விடக் கருமை நிறம்! அவன்தான் ஆங்கில மன்னரின் அப்பன்!

ஜோன்: காப்டன் ஸார்! அஞ்சாதீர்கள் ஆங்கிலப் பிசாசுகளுக்கு! எங்கள் கிராமத்தைத் தீயிட்டு ஆங்கிலப் படையினர் அழித்த போது, நாங்கள் எல்லோரும் அடுத்த ஊருக்கு ஓடினோம்! காயப்பட்ட மூன்று ஆங்கில பராக்கிரம வீரர்களை எனக்கு நன்றாகத் தெரியும்! அந்தக் கயவர்களுக்கு என் பலத்தில் பாதி கூட இல்லை! காப்டன் ஸார்! நீங்கள் கூறும் பிளாக் பிரின்ஸ், இளவரசுக் கருப்பனைப் பற்றிப் பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். நம் நாட்டு எல்லையில் அவன் கால் வைத்த உடனே, பிசாசு அவன் உடம்பில் ஏறி விட்டது! ஆனால் கடவுள் அளித்து, ஆண்டு வந்த அவனது ஊரில் அவன் யோக்கியனாக வாழ்ந்தான். அது அப்படித்தான் நடக்கிறது! கடவுள் விருப்புக்கு எதிராக நான் இங்கிலாந்து சென்று, அதைக் கைப்பற்றிக் குடியேறி, அவரது மொழியைப் பேச ஆரம்பித்தால், நிச்சயம் பிசாசு என் உடம்பிலும் புகுந்துவிடும்! வாலிபம் போய் கிழமாகிய பிறகு, நானிழைத்த கேடுகளை நினைத்துச் சாகாமல் சாவேன்!

ராபர்ட்: பெண்ணே! பிசாசுகள் உடலில் சேர்ந்திருப்பது நல்லது! எத்தனை பிசாசுகள் உடம்பில் ஏறுகின்றனவோ, அத்தனை பேராற்றல் சேர்ந்து நீ ஆங்காரமாய்ப் போரிட முடியும்! ஆகவே பிசாசுகள் பிடித்த பிரிட்டாஷ் படை ஆர்லியன்ஸ் கோட்டையை அப்படி எளிதாக உனக்கு விட்டுவிடாது! உன்னைப் போல் பத்தாயிரம் படை வீரர் தாக்கினாலும், கோட்டை உன் வசப்படாது!

ஜோன்: [ஆங்காரமாய் எழுந்து நின்று] காப்டன் ஸார்! என்னைப் போல் ஆயிரம் பேரே போதும்! ஆர்லியன்ஸ் கோட்டையைக் கைப்பற்றி விடலாம். உங்களுக்கு இது தெரியவில்லை ஸார்! ஒவ்வொரு சமயத்திலும் நமது படையினர் வீழ்த்தப்பட்டு தோற்றுப் போவதற்குக் காரணம் என்ன ? அவர்கள் எப்போதும் தமது உடம்பைக் காத்துக் கொள்ள மட்டுமே போரிடுகிறார்! அதற்குக் குறுக்குவழி போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடுவது! நமது படைத் தளபதிகள் பலர் பணமுடிப்புக்குத் தவமிருப்பவர்! போர்க் களத்தில் கொல் அல்லது கொல்லப்படு என்பது அவரது கொள்கை யில்லை! கையேந்திப் பணமுடிப்பைப் பெறு! அல்லது கைநீட்டிப் பணமுடிப்பைக் கொடு! இதுதான் நம்மவர் போரிடும் விதிமுறை! பிரான்ஸில் கடவுளின் கட்டளைப்படி நிறைவேற, எப்படிப் போரிடுவ தென்று எனக்குத் தெரியும். அந்த முறையில் நான் பயிற்சி அளிப்பேன் அவருக்கு! நமது அதே பிரென்ச் படையினர் கொதித்தெழுந்து, ஆங்கில வேங்கைகளை ஆட்டுக்குட்டி போல் விரட்டுவதைக் காணப் போகிறீர்! ஆங்கில ஆதிக்கம் அறவே ஒழிந்து, ஓர் ஆங்கில நாட்டான்கூட பிரென்ச் மண்ணில் நடமாடாத ஒருநாளை நீங்களும் பாலியும் காணப் போகிறீர்கள்! கடவுள் நமக்களித்த நமது பிரென்ச் மன்னர் நாடாள்வாரே தவிர, குடியேறிய அன்னிய தேச அரசர் அல்லர். காப்டன் ஸார்! உடனே அனுமதி கொடுங்கள் எங்களுக்கு. கடவுளின் கட்டளை நிச்சயம் நிறைவேறும்.

பெளலிஞ்சி: ராபர்ட்! ஜோன் சொல்வதை முயன்று பார்ப்பதில் தவறில்லை. நமக்கு அதனால் எந்த இழப்புமில்லை!

ராபர்ட்: சரி! என் முடிவைக் கேளுங்கள் இருவரும். [ஜோனைப் பார்த்து] கொஞ்ச நேரம் குறுக்கே எதுவும் பேசாதே! [பெளலிஞ்சியை நோக்கி] உங்களுக்கு நானிடும் கட்டளை இதுதான்! ஜோனுக்குத் துணையாக நீங்களும், உங்கள் மூன்று நண்பரும் கவசமணிந்து ஆயுதங்களுடன் குதிரையில் செல்ல வேண்டும். நீங்கள் நேராகச் சின்னான் நகரை அடைந்து நான் அனுப்பியதாகக் கூறி, தெளஃபின் மன்னரைக் காண்பீர். ஜோன் மன்னரிடம் தன் திட்டத்தை விளக்கட்டும். முடிவில் என்ன நடந்தது என்பதைப் பின்னால் எனக்கு அறிவிக்க வேண்டும் நீங்கள்.

ஜோன்: (வெற்றி பெற்ற முக மலர்ச்சியுடன்) நன்றி! காப்டன் ஸார் நன்றி! உங்கள் தலைக்கு மேல் ஓர் ஒளிவளையம் புனிதர்களுக்கு எழுவதுபோல் உண்டாகட்டும்! கடவுள் கட்டளையை வரவேற்கும் நீங்கள் உன்னத மனிதர்.

பெளலிஞ்சி: ராபர்ட்! ஜோன் சின்னான் அரண்மனையில் எப்படி மன்னரைக் காண அணுக வேண்டும் ?

ராபர்ட்: என்னைக் காண எப்படி இங்கு நுழைந்தாள் ஜோன் ? அப்படித்தான்! ஆனால் மன்னர் சினமுற்று அவளை வெளியே தள்ளினால், அவரை அறிவு உள்ளவர் என்று போற்றுவேன். … ஆயினும் ஜோனை நான் அனுப்பியதாக மன்னரிடம் சொல்! …. என்ன விளைந்தாலும் சரி! அந்தப் பொறுப்பை என்மீது விட்டுவிடு.

ஜோன்: (கெஞ்சி) காப்டன் ஸார்! எனக்குத் தேவைப்படும் இராணுவக் கவச உடையைத் தருவீர்களா ?

ராபர்ட்: பெண்ணே! உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கோட்டையில் எடுத்துக் கொள்! …. (பாலியை நோக்கி) நான் செய்வது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை! நடப்பது நடக்கட்டும் பாலி! நானொரு அபாய முயற்சியில் என் தலையை விடுகிறேன்! சிங்கம் எனது தலையை விட்டுவிடுமா அல்லது துண்டிக்குமா என்பது எனக்குத் தெரியாது! என்னைப்போல் எந்த இராணுவ அதிகாரியும் துணிந்து இதைச் செய்ய மாட்டான். … ஆயினும் பாலி! நீ சொல்வதுபோல் ஏதோ ஒரு மாயசக்தி இவளிடம் உள்ளது! நீ அவளது கவர்ச்சிக் கட்டளையில் இழுக்கப் பட்டதுபோல், நானும் இப்போது இழுக்கப் படுகிறேன்.

பெளலிஞ்சி: சந்தேக மில்லாமல் ஒரு கவர்ச்சி ஒளி ஜோனிடம் உள்ளது. அந்த ஒளி உங்கள் மீதும் பட்டது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். … சரி, போய் வருகிறேன் ராபர்ட்! [வெளியேறுகிறான்]

ஜோன்: வெற்றியோடு வருவேன் காப்டன் ஸார்! கடவுள் உங்கள் மூலம் எனக்கு உதவி செய்கிறார்! நன்றி போய் வருகிறேன். [மகிழ்ச்சியுடன் வெளியே போகிறாள்]

[ராபர்ட் கதவு வரை சென்று வழி அனுப்பியபின், தலையைச் சொரிந்து கொண்டு மீண்டும் நாற்காலியில் பெருமூச்சு விட்டுச் சாய்கிறார். …. அப்போது பெருங்கூடை ஒன்றை ஏந்திக் கொண்டு பணியாள் ஓடி வருகிறான்]

ராபர்ட்: என்னடா, தலை தெறிக்க ஓடி வருகிறாய்! சமையல் புரி அடுப்பில் மீண்டும் தீப்பற்றி விட்டதா ?

பணியாள்: [பல்லெல்லாம் தெரிய இளித்துக் கொண்டு] ஸார்! … ஸார்! .. வேலை நிறுத்தம் முடிந்தது! கோழிகள் முட்டைகளை இடுகின்றன! … இதோ பாருங்கள்! [கூடையைக் காட்டுகிறான்]

ராபர்ட்: [ஆச்சரியமோடு] அட கடவுளே! .. ஆமாம்! … அடி! சூனியக்காரி ..! ஜோன்! நீ உண்மையாக கடவுளின் தூதாக இந்தக் கோட்டைக்கு வந்தவளா ? … போ! முட்டையைச் சமைத்துக் கொண்டு வா! பச்சை முட்டையை ஏன் கொண்டு வந்தாய் ? … போ! [பணியாள் சமையல் அறைக்கு ஓடுகிறான்]

(முதல் காட்சி முடிவு)

++++++++++

‘கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்! நமது உன்னத பிரபுவின் ஆலோசனை உனது அறிவை விட உயர்ந்தது; மக்களுக்கு மிகவும் பாதுகாப்பளிப்பது. என்னை நீ ஏமாற்ற நினைத்தாய்! இறுதியில் ஏமாற்றப் பட்டவன் நீ! நான் உனக்கு அனுப்பும் படை உதவி போல், எந்த பிரென்ச் இராணுவ ஜெனரலுக்கும் இதுவரைக் கிடைத்த தில்லை. ஏனென்றால் என் உதவிகள் யாவும் கடவுளின் மூலமாக வருகின்றன. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

ஜோன் ஆஃப் ஆர்க்கின் பிறப்பு, இளவயதுச் சூழ்நிலை, மதக்கல்வி, இளமை, பெண்மை, படிப்பின்மை, பட்ட இடையூறுகள் ஆகியவற்றை ஆழ்ந்து நோக்க வேண்டும். அபாரப் போர்த் திறமையைக் கைக்கொண்டு போர்க்களத்தில் படைகளைச் செலுத்தி வெற்றிபெற அவள் பயன்படுத்திக் கொண்டது, நீதி மன்றத்தில் தனியாக நின்று ஆணாதிக்கத்தை எதிர்த்து அவள் வாதாடியது போன்ற தீரச் செயல்களைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவளைப் போன்ற மிக உன்னத பெண்ணினப் பிறவி இதுவரை உலகில் படைக்கப் படவில்லை!

அமெரிக்க எழுத்தாள மேதை: மார்க் டிவைன் (1835-1910)

இரண்டாம் காட்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. தெளஃபின் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]
 2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]
 3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.
 4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.
 5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.
 6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்.
 7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் கோட்டை அரண்மனையில் தெளஃபின் அரசர் தனது தனி மாளிகையில் ஓய்வாக இருக்கிறார். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைன் பிரபுவும் மன்னரைக் காண வெளி மாளிகையில் காத்திருக்கிறார்கள். ஆங்காரத் தோற்றத்தில் ஆர்ச்பிஷப் இங்குமங்கும் நரம்புத் துடிப்போடு நடந்து கொண்டிருக்கிறார். நாற்காலியில் சாம்பர்லைன் கர்வமாய் அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

சாம்பர்லைன்: [பொறுமை இழந்து ஆவேசத்துடன் எழுந்து] ஏன் நமது பொறுமையைச் சோதிக்கிறார், மன்னர் ? அவருக்கு ஏதேனும் பிசாசு பிடித்து விட்டதா ? எத்தனை நேரம் இப்படிக் காத்துக் கிடப்பது ? நாமென்ன கற்சிலையா ? வரவர மன்னர் நம்மை மதிப்பதே இல்லை! மதித்திருந்தால் இப்படி நம்மை மணிக்கணக்கில் காக்க வைப்பாரா ? மன்னருக்கு என்ன மமதை ? என்ன செருக்கு ?

ஆர்ச்பிஷப்: ரோமன் காத்திலிக் பாதிரிகளின் அதிபதி, நான்! சின்னான் நகர் மரியாதைக்குரிய மதச் சின்னம் நான்! மதாதிபதித் திலகன் நான்! மன்னர் கற்றுக் கொள்ளாத பாடங்களில் இது ஒன்று! ரோமானிய மதத் தளபதிக்கு முதலில் மதிப்பளி என்று யார் அவரது கழுத்தில் மணிகட்ட முடியும் ? சிறு வயது முதலே இறுமாப்பும், ஏளனப் புத்தியும் இவருக்கு உண்டு! துள்ளித் திரிகின்ற காலத்திலே யார் அவரது துடுக்கை அடக்கி ஒழுக்கத்தை பழக்கப் படுத்தினார் ? மதாதிபதிகளிடம் பணிவில்லாத மன்னனுக்குப் பண்பு இனிமேலா உண்டாகப் போகிறது ? பெரியவாளைத் தெரிந்து கொண்டும் வீணாய் இப்படிக் காக்க வைப்பது, அரச சம்பிரதாயம் அல்லவா ? இப்படி நம்மை அவமதிப்பது அரசனின் சிறப்புரிமையா ? அல்லது பிறப்புரிமையா ?

சாம்பர்லைன்: அரசனின் இறப்புரிமையாக எனக்குத் தெரிகிறது! அழிவு வரும் பின்னே! அகங்காரம் வரும் முன்னே! உங்களுக்குத் தெரியுமா, அரசர் எவ்வளவு பணம் என்னிடம் கடன் வாங்கி யிருக்கிறார் என்று ? வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதும், உங்களுக்குத் தெரியமா ?

ஆர்ச்பிஷப்: ஓ! உங்கள் கதை அப்படியா ? இப்போது எனக்கு தெரிகிறது, உங்களைக் காக்க வைப்பதின் காரணம்! மக்கள் கட்டும் வரிப்பண வருவாய் எல்லாம் பிரிட்டாஷ்காரனுக்குப் போகிறது! பாவம், ஏழை மன்னர் என்ன கூழையாக குடிப்பார் ? உங்களைப் போன்ற செல்வந்தரை நாடித்தான் அரசர் வாழ முடியும்! கடனை மறந்து விடுங்கள்! இந்தப் பிறவில் கிடைக்காது! பொம்மை ராஜா உண்மை ராஜாவாகப் போவதில்லை! நிம்மதியாக இருங்கள்! நாமிருவரும் ஒரே படகில்தான் போகிறோம்! [காதில் மெதுவாக] மன்னர் என்னிடமும் கடன் வாங்கி இருக்கிறார்! கவலைப் படாதீர்கள்! எனக்கும் என்பணம் கிடைக்காது.

சாம்பர்லைன்: எப்படி நிம்மதியாக இருப்பேன் சொல்லுங்கள் ? எனக்கு இராப்பகலாகத் தூக்கம் கிடையாது! நான் கொடுத்த தொகை கொஞ்சமல்ல, அஞ்சாமல் இருக்க! போனவாரம் மட்டும் தந்தது, இருபத்தி ஏழாயிரம் பிராங்க்! இதுவரைக் கொடுத்தது மொத்தம், எழுபத்தி ஏழாயிரம் பிராங்க்! நெருப்புப் பற்றி எரியும் நெஞ்சில் நிம்மதி எங்கே ? கடன் கொடுத்தார் நெஞ்சம் போல், கடன் பட்டார் நெஞ்சம் துடிப்பதில்லை!

ஆர்ச்பிஷப்: உங்களைப் போன்ற செல்வந்தர் இவ்விதம் நன்கொடை அளிக்கா விட்டால், மன்னர் கதி என்னாவது ? அரசரும் இல்லா விட்டால், ஆளும் பரம்பரையே அழிந்து விடாதா ? அரசருக்கு உண்டியும் உயிரும் அளிக்கும் உங்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும்!

சாம்பர்லைன்: எனக்கு மோட்சம் கிடைத்தாலும் சரி, கிடைக்கா விட்டாலும் சரி, கடனைத் தராத மன்னர் நரகத்திற்குப் போக வேண்டும் என்று சாபம் போடுங்கள்!

ஆர்ச்பிஷப்: (தயக்கமுடன்) மன்னருக்கு நான் சாபமிட முடியாது! உங்களுக்கு மோட்ச புரியில் ஓரிடம் ஒதுக்க வேண்டிக் கொள்ள முடியும்! … ஆமாம் இத்தனை பணமும் எங்கேதான் போகிறது ? … மன்னர் ஒரு புதிய ஆடை அணிந்ததை நான் பார்த்ததில்லை! மாளிகையில் மதாதிபதிகளுக்கு ஒரு விருந்து அளித்ததை நான் கேள்விப் பட்டதில்லை! ஆனாலும் அவரைப் பார்த்தால் சிக்கன மன்னராகவும் தெரியவில்லையே!

சாம்பர்லைன்: பணத்தை விழுங்குவது அவரல்ல! அவரது ஆடம்பர அன்னையும், பிரிட்டிஷ் அரசனை மணந்திருக்கும் அவரது அழகிய தங்கையும் சரியான பணம் தின்னிகள்! [அப்போது ஒரு காவலர் வருகிறார்] …. யார் வருகிறார் பாருங்கள் ? … மன்னரா ?

காவலர்: மன்னர், இல்லை பிரபு! வருபவர் திருவாளர் கில்லெஸ் திரைஸ்.

சாம்பர்லைன்: வாலிபர் புளுபியர்டு [கில்லெஸ் திரைஸ்] வருவதை ஏன் அறிவிக்கிறாய் ?

காவலர்: கில்லெஸ் கூட காப்டன் லாஹயரும் வேகமாக வருகிறார்! ஏதோ முக்கியமாக நடந்திருக்கிறது! அவர்கள் வேக நடையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது!

[கில்லெஸ் விரைவாக உள்ளே நுழைந்து, ஆர்ச்பிஷப்பை அணுகுகிறார். காவலர் வெளியேறுகிறார்]

கில்லெஸ் (புளுபியர்டு): வந்தனம் பாதிரியாரே! பணியைச் சிரமேற் கொண்டு உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான செம்மறி ஆடு நான்! … காப்டன் லாஹயருக்கு என்ன ஆனது, தெரியுங்களா ?

சாம்பர்லைன்: யாரையாவது வழக்கப்படிக் கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார்! வாரி வழங்கும் அவரது அசிங்கமான வாயைக் கட்டுபவர் இந்த ஊரில் யாரும் கிடையாது!

கில்லெஸ்: அது அந்தக் காலம் ஸார்! இப்போது காப்டன் லாஹயர் வாயிக்குக் கட்டுப் போட்டவர் ஒரு சாதாரண படையாளி!

லாஹயர்: நல்ல வேடிக்கை! என் வாயிக்குப் பூட்டுப் போட்டவர், சாதாரணப் படையாளி இல்லை! படையாளிபோல் உடையணிந்த ஒரு பெண் தேவதை!

ஆர்ச்பிஷப், சாம்பர்லைன், கில்லெஸ்: (மூவரும் ஒருங்கே) தேவதை…! என்ன தேவதையா ? உன் வாயைக் கட்டியது ஒரு பெண் தேவதையா ?

லாஹயர்: ஆம்! அவள் ஒரு தேவதையே! லொர்ரேன் நகரிலிருந்து, அரை டஜன் படை வீரர்களுடன் தனியாக அஞ்சாமல் வனாந்திரம் வழியாக வந்திருக்கிறாள்! பர்கண்டியைத் தாண்டிக் கொலைகாரர், கொள்ளைக்காரர் கூடப் போரிட்டு உயிர்தப்பி, மன்னரைக் காண வந்திருக்கிறாள். அவளுடன் வரும் பாலி என்னும் பெளலிஞ்சியை எனக்குத் தெரியும். மிகவும் பண்புள்ளர்! பாலியே சொல்கிறார், அவள் ஒரு தேவதை என்று! அவர் கூறினால் அது உண்மை யாகத்தான் இருக்க வேண்டும். பெண்ணென்று தெரியாமல் நடுவீதியில் நான் அசிங்கமாகப் பேசிச் சண்டை யிட்டது தப்பு! இனி அப்படிப் பேசினால், என் வாய் வெந்து போகும்!

[அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னர் வரப் போவதை அறிவிக்கிறான்.]

காவலன்: வருகிறார்! வருகிறார்! மேன்மை தங்கிய நமது மன்னர் வருகிறார்.

[எல்லாரும் பேச்சை ஒடுக்கி நிமிர்ந்து நிற்கிறார்கள். அமர்ந்துள்ளவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவையில் முழு அமைதி நிலவுகிறது. தெளஃபின் மன்னர் (சார்லஸ் VII), கையில் ஓர் அறிக்கைத் தாளை ஏந்திக் கொண்டு அரசவை அரங்கினுள் நுழைகிறார். அதிக உயரமும், குள்ளமும் இல்லாது சற்று மெலிந்த உடம்பு. தந்தை மகுடம் சூட்டிய அரசனாக வாழ்ந்து மாண்டு போனபின், வெறும் பெயரில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பட்டம் சூடாத மன்னனாய்க் காலந் தள்ளி வருபவர். தாடி மயிரைச் சரிவர நீக்காமல், பழைய அரச உடையில் ஆர்ச்பிஷப்பின் அருகே கேலிப் புன்னகையுடன் வந்து நிற்கிறார். மன்னர் என்னும் பளிச்செனக் கவராத கோழைத் தோற்றம் கொண்டவர். நோக்கினால் அறிவுள்ள பார்வையோ அல்லது மூடத்தனமான பார்வையோ தெரியவில்லை.]

சார்ல்ஸ் மன்னர் (தெளஃபின்): (கேலி நகைப்புடன் ஆர்ச்பிஷப்பை நோக்கி) காப்டன் ராபர்ட், வெளகோலர் கோட்டையிலிருத்து எனக்கு என்ன அனுப்பியுள்ளார் தெரியுமா ?

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] உங்கள் புதிய விளையாட்டுப் பொருள்களில் எனக்கு விருப்பம் கிடையாது!

சார்லஸ் மன்னர்: [சினத்துடன்] இது விளையாட்டுப் பண்டமில்லை! .. சரி! உங்களுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், நான் இனி மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் சொல்கிறேன்.

ஆர்ச்பிஷப்: [சற்று தணிந்து] மேன்மை மிகு மன்னர் நான் சொன்னதை எல்லாம் குற்றமாக எடுத்துக் கொள்கிறார்!

சார்லஸ் மன்னர்: மிக்க நன்றி. உடனே நீங்கள் எனக்குப் பெரிய சொற்பொழிவைத் தயாரிக்க வேண்டாம்.

சாம்பர்லைன்: [சற்றுக் கடுமையாக] ஏன் இத்தனை தாமதம் ? உள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர் ? நான் காத்திருப்பது தெரிந்துதான் ஒளிந்து கொண்டாரா ?

சார்லஸ் மன்னர்: [மீறிய தொனியில்] நான் என்ன செய்தேன் என்று உங்களுக்கு சொல்லத் தேவை யில்லை. தேவை இல்லாத வேலைகளில் மூக்கை விடாதீர்.

சாம்பர்லைன்: பணம் தேவைப்படும் போது மட்டும், நான் தேவைப்படும்! பணம் என்றைக்காவது தேவையில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்! இப்போது உங்களுக்கும், காப்டன் ராபர்ட்டுக்கும் இடையே என்ன தகவல் போக்குவரத்து நடக்கிறது என்பது எனக்குத் தெரிய வேண்டும்! … [படக்கென்று மன்னர் கையில் இருக்கும் அறிக்கைத் தாளைப் பிடுங்கி வாசிக்கிறார்.]

சார்லஸ் மன்னர்: [அதிர்ச்சி அடைந்து, தணிவான குரலில்] என்னை இவ்விதம் அவமானப் படுத்துவது நான் உங்களிடம் கடன்பட்டதால், இல்லையா ? என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவது, நான் எதிர்த்துச் சண்டை போடச் சக்தி அற்றவன் என்பதால், இல்லையா ? என்னுடம்பு இரத்தக் குழல்களில், அரச பரம்பரைக் குருதி ஓடுகிறது என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்.

ஆர்ச்பிஷப்: [கேலியாக] மேன்மை மிகு மன்னரே! போதும் பீற்றிக் கொள்வது! உங்கள் இரத்தக் குழல்களில் அரச பரம்பரைக் குருதி ஓடுவது கூட இப்போது ஐயப்பாட்டில் உள்ளது! யாரும் உங்களை மாமேதை ஐந்தாம் சார்லஸ் வேந்தரின் பேரன் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது!

சார்லஸ் மன்னர்: [கோபத்துடன்] என் பாட்டனாரைப் பற்றி யாரும் பறைசாற்ற நான் கேட்கப் போவதில்லை! அவர் மாவேந்தர்! மாமேதை! மாவீரர்! உண்மைதான்! ஐந்து பரம்பரைகளுக்கு உரிய அபாரத் திறனை ஒரே பிறப்பில் பயன்படுத்தி, என்னைப் போன்றவனை ஏழையாக்கி, மூடனாக்கி விட்டுப் போய்விட்டார்! இப்போது உங்களைப் போன்றவரால் இகழப்பட்டும், மிரட்டப்பட்டும் அவமதிக்கப் படுகிறேன்!

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] மனதைக் கட்டுப் படுத்துங்கள் மன்னரே! இந்த வெடிப்புச் சீறல்கள் உங்கள் தகுதி நிலைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை!

சார்லஸ் மன்னர்: [ஆத்திரமாக] அடுத்தொரு சொற்பொழிவா ? மிக்க நன்றி பாதிரியாரே! உங்கள் நிலை எத்தகைய ஏளன நிலையில் உள்ளது, தெரியுமா ? ரைம்ஸ் பகுதியின் ஆர்ச்பிஷப்பாக நீங்கள் பீடத்தில் இருந்தாலும், உங்களைத் தேடி தேவதைகளோ, புனித அணங்குகளோ யாரும் வருவதில்லை!

ஆர்ச்பிஷப்: [வெகு ஆங்காரமாய்] என்ன சொன்னீர் மன்னரே ?

சார்லஸ் மன்னர்: [சாம்பர்லைனைச் சுட்டிக் காட்டி] அதோ! அந்த வீறாப்புக்காரரைக் கேளுங்கள்!

சாம்பர்லைன்: [சினம் மிகுந்து] வாயை மூடுங்கள் மன்னரே! நான் சொல்வது கேட்கிறதா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] நன்றாகவே கேட்கிறது! கூச்சலிடத் தேவையில்லை. நான் மூடனாகத் தோன்றினாலும், செவிடன் இல்லை! உமது சிம்மக் குரல் கோட்டை முழுவதும் கேட்கிறது! எனக்காக அந்த ஆங்கிலேயர் மீது பாய்ந்து, இப்படி மிரட்டி நீங்கள் ஏன் அடித்து விரட்டக் கூடாது ?

சாம்பர்லைன்: [கைமுட்டியை ஓங்கிக் கொண்டு] …. சின்ன வயது மன்னனான உங்களை ….!

சார்லஸ் மன்னர்: [கூர்ந்து நோக்கி] கையை உயர்த்தாதீர் என்முன்! அது ராஜ துரோகம்! தண்டிப்பட வேண்டிய குற்றம் அது!

காப்டன் லாஹயர்: [சாந்தமுடன்] டியூக் ஸார்! அமைதி! அமைதி! ஆத்திரம் கொள்ளாதீர்.

ஆர்ச்பிஷப்: [பெருந்தன்மையாக] சாம்பர்லைன் ஸார்! இந்த தர்க்கம் போதும்! இதனால் எப்பயனும் விளையாது! தயது செய்து நமக்குள் சிறிது ஒழுக்கம் தேவை! கட்டுப்பாடு வேண்டும்! நாம் காட்டு மிராண்டியாய் மாறக் கூடாது! [மன்னரை நோக்கி] உங்களுக்குச் சொல்கிறேன்! இந்த நாட்டைக் கட்டுப் படுத்தி ஆள முடியாமல் போனாலும், ஓரளவு உங்களையாவது கட்டுப் படுத்தலாம் அல்லவா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] அடுத்தொரு சொற்பொழிவா ? மிக்க நன்றி!

சாம்பர்லைன்: [ஆத்திரமுடன் அறிக்கைத் தாளை ஆர்ச்பிஷப் கையில் திணித்து] இந்த அருவருப்பான கடிதத்தைப் பாருங்கள்! கோழி கிறுக்கியது போல் எழுதிய இந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிய வில்லை! இரத்தக் கொதிப்பை அது என் மூளைக்கு ஏற்றுகிறது! என்ன தலை எழுத்தோ தெரியவில்லை!

சார்லஸ் மன்னர்: [ஆர்ச்பிஷப் அருகில் நடந்து] வயதான டியூக்குக்கு கண் தெரியவில்லை! கொடுங்கள் நானே வாசித்துக் காட்டுகிறேன்! என்னால் அந்த எழுத்துக்களைப் படிக்க முடியும்.

சாம்பர்லைன்: [கேலியாக] ஆமாம்! உங்களுக்குப் படிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் ? நீங்கள் வாசிக்க வேண்டாம். [ஆர்ச்பிஷப்பை நோக்கி] அந்தக் கோணல் எழுத்துக்களை நீங்கள் வாசிக்க முடியுமா ?

ஆர்ச்பிஷப்: [அறிக்கைத் தாளைக் கூர்ந்து பார்த்து] வேடிக்கையாக இருக்கிறதே! அறிவுள்ள காப்டன் ராபர்ட்டிடமிருந்து இப்படி மூடத்தனமான ஒரு கடிதத்தை நான் எதிர்பார்க்க வில்லை! கிராமத்துக் கிறுக்கி ஒருத்தியை ராபர்ட் அனுப்பி வைத்திருக்கிறார்! எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை ? புத்தி உள்ளவன் பைத்தியகாரியை அனுப்புவானா ? முத்திப் போன புத்திக் கோளாறு ராபர்ட்டுக்கா அல்லது அந்த படிப்பற்ற பட்டிக்காட்டுக்கா என்பதை நான் முதலில் அறிய வேண்டும் ?

சார்லஸ் மன்னர்: [சட்டெனக் குறுக்கிட்டு] இல்லை! அவள் பைத்திய மில்லை! ராபர்ட்டும் பைத்திய மில்லை! காப்டன் என்னைச் சந்திக்க அறிவோடுதான் ஒரு புனித மாதை அனுப்பியுள்ளார். ஒரு தேவதை அவள்! என்னைக் காண வருகிறாள், அவள்! மன்னனைக் காண வருகிறாள் அவள்! உங்களைக் காண வரவில்லை, தெரிகிறதா ? புனித மானிடராகிய ஆர்ச்பிஷப்பைக் காண வரவில்லை, அவள்! வருகிறாள், வருகிறாள், என்னை மட்டும் காண! அரச இரத்தம் ஓடும் மன்னரை அவள் ஒருத்திக்கு மட்டும் தெரிகிறது.

ஆர்ச்பிஷப்: [செருக்குடன்] ஆனால் மன்னரே! எச்சரிக்கை செய்கிறேன், நான்! அந்தக் கிறுக்கி உங்களைக் காண நீங்கள் அனுமதி தரக் கூடாது!

சார்லஸ் மன்னர்: [பொறுமை இழந்து, பிடிவாதமாக] நான் மன்னன்! நான் அனுமதிப்பேன்! நீங்கள் யார் என்னைத் தடுக்க ? என் தாய் தடுத்தாலும், நான் அவளை அனுமதிப்பேன்! நீங்கள் ஏன் அவளை இப்படி அவமதிக்க வேண்டும் ?

சாம்பர்லைன்: [கோபத்துடன்] எவளோ ஒரு குடிசைக்காரி! பிரெஞ்ச் நாட்டின் மன்னர் இந்த பெண்ணைப் பார்க்கலாமா ? உங்கள் உன்னத மேல்நிலை என்ன ? அவளின் தாழ்ந்த கீழ்நிலை என்ன ?

கில்லெஸ்: [கேலிப் புன்னகையுடன்] கோமாளித்தனமாக உள்ளது! உங்கள் பாட்டனார் ஐந்தாம் சார்லஸ் இருந்தால், இதைப் பார்த்து என்ன சொல்வார் ?

சார்லஸ் மன்னர்: [சட்டெனக் குறுக்கிட்டு] புளுபியர்டு! உன் அறியாமை நன்றாகவே தெரிகிறது. என் பாட்டனார் அரசவையில் ஒரு புனிதமாது இருந்தாள் என்பது உனக்குத் தெரியாது. அவள் கடவுளைத் துதித்து, பாட்டனார் அறிய வேண்டிய அனைத்தையும் அப்படியே சொல்லி விடுவாளாம்! என் தந்தையார் ஆறாம் சார்லஸ் அவையில் இரட்டைப் புனித மங்கையர் இருந்தனர்! ஒருத்தி பெயர், மேரி திமைலி. அடுத்தவள் பெயர், காஸ்குவே தி ஆவிங்டன். அது எங்கள் சம்பிரதாயம். நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவ தில்லை. என்னவையில் நானும் ஒரு புனித நங்கை ஒருத்தியை வைத்துக் கொள்வேன்! அவளைத்தான் காப்டன் ராபர்ட் கண்டுபிடித்து என்னிடம் இப்போது அனுப்பியுள்ளார்.

ஆர்ச்பிஷப்: [ஆவேசமுடன்] அந்தச் சிறுக்கி ஒரு புனித மாதா ? அவள் கீழ்க்குடி இனத்தவள்! மன்னர் வரவேற்கத் தக்க மதிப்புடைய மங்கையா அவள் ? அவள் பெண்ணே இல்லை! அவள் பெண்டிர் உடையைக் கூட உடுத்துவ தில்லையாம்! இப்படி எழுதி யிருக்கிறார், காப்டன் ராபர்ட்! படைவீரர் உடை அணிந்து குதிரையில் ஏறிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றிவரும் ஏதோ ஒரு நாடோடி! அந்த நாடோடி நங்கையை நாடாளும் மன்னர் முன்னின்று வரவேற்பதா ? வேடிக்கையாக இருக்கிறது, உங்கள் பிடிவாதம்!

(இரண்டாம் காட்சி தொடர்ச்சி)

****

‘கனிவுள்ள சார்லஸ் மன்னரே! நான்தான் பணிமாது ஜோன். ஆர்லியன்ஸ் கோட்டை, பிரான்ஸிலிருந்து அன்னிய ஆங்கிலேயரை விரட்டி ஓட்டவும், ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் உங்களுக்கு முடி சூடவும் என்னை அனுப்பி யிருக்கிறார், கடவுள். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘போர்த் துறையில் ஜோன் ஆஃப் ஆர்க் மிகுந்த நெஞ்சழுத்தமும், துணிச்சலும், நீதி நெறிகளும் கொண்டவள். இராணுவத் தளபதியாகக் கருதும் போது, ஜோன் தவறு காண முடியாத தெளிவும், உறுதியும் ஆயிரக் கணக்கான படை வீரர்களை முன்னடத்தும் வல்லமையும் பெற்றிருந்தாள். கிறித்துவ மதப்பற்றை எடுத்துக் கொண்டால், திருச்சபைக்கு அடிபணியாது, கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரிட்ட கட்டளையை நிறைவேற்றி பிரான்ஸை விடுவித்தாள்! சார்லஸ் மன்னர் முடி சூட வழி வகுத்தாள். தேசப் பற்று மிகுந்து பிரென்ச் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டி, சிதறிக் கிடந்த பிரான்ஸை ஒன்று படுத்தி ஒரு தேசமாக்கியவள், ஜோன் ஆஃப் ஆர்க். ‘

அமெரிக்க கலை மேதை: கிரிஸ்டபர் ரஸ்ஸல்

பிரான்ஸ் அதன் வரலாற்றில் பல்லாண்டுகள் அடிமைப்பட்டு இருண்டதோர் காலத்தில் மீண்டு எழமுடியாமல் உழன்று வருகிறது! அதை ஒரே ஒரு சம்பவம்தான் இப்போது காப்பாற்ற முடியும். அற்புத நிகழ்ச்சி!

இரண்டாம் காட்சி தொடர்ச்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. சார்லஸ் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]
 2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]
 3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.
 4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.
 5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.
 6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்கள்.
 7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் அரண்மனைக் கோட்டை. அரச முன்னவை முன்பு ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும், மன்னர் கிராமத்து நங்கையைப் பார்க்கக் கூடாது என்று வாதாடுகின்றனர்! சார்லஸ் மன்னன் ஜோன் ஆஃப் ஆர்க்கைச் சந்திக்கப் போவதாய் அவர்களிடம் அழுத்தமாகக் கூறுகிறார்.

ஆர்ச்பிஷப்: [ஆவேசமுடன்] அந்தச் சிறுக்கி ஒரு புனித மாதா ? அவள் கீழ்க்குடி இனத்தவள்! மன்னர் வரவேற்கத் தக்க மதிப்புடைய மங்கையா அவள் ? அவள் பெண்ணே இல்லை! அவள் பெண்டிர் உடையைக் கூட உடுத்துவ தில்லையாம்! இப்படி எழுதி யிருக்கிறார், காப்டன் ராபர்ட்! படைவீரன் உடை அணிந்து குதிரையில் ஏறிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றிவரும் ஏதோ ஒரு நாடோடி! அந்த நாடோடி நங்கையை நாடாளும் மன்னர் முன்னின்று வரவேற்பதா ? வேடிக்கையாக இருக்கிறது, உங்கள் பிடிவாதம்!

லாஹயர்: [மேல்நோக்கி] கடவுளே! என்னை மன்னிப்பீர்! உண்மையாக அவள் ஒரு தேவ மாது! அவள்தான் கெட்ட வார்த்தைக் கொட்டும் ஊசி நாக்கு பிராங்க்கின் வாயை அடக்கியவள்! அவளுக்கு வந்த கோபத்தை நேராகப் பார்த்தவன் நான்! சினம் வரும்போது, அவளது கண்களிலிருந்து தீக்கனல் பறக்கிறது! மற்றவர் சினத்தைக் கண நொடியில் அடக்கி விடுகிறாள்! ஆனால் அவளது சினத்தை எந்த போக்கிரியும் அடக்க முடிய வில்லை! அவள் சொல்வதை ஒருவன் எதிர்த்தால், அவன் கழுத்தை முறித்து விடுவாள்! அவள் ஓர் அரக்கிதான்! பெரியவாளுக்கு ஓர் எச்சரிக்கை.

ஆர்ச்பிஷப்: அரக்கி என்றுதான் நீ சொல்கிறாய் ? அவள் தேவதை இல்லை என்று நான் சொல்கிறேன்.

கில்லெஸ் (புளுபியர்டு): அவள் தேவமாதா இல்லையா என்று வெகு எளிதில் கண்டுபிடித்து விடலாம். [சார்லஸ் மன்னரைப் பார்த்து) எனக்கொரு யோசனை உதயமாகிறது. அவள் அரசவை முன்பாக வரும் போது, நம் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். உங்கள் அரச அங்கியை நான் அணிந்து கொண்டு, தலை கிரீடத்தையும் வைத்து அரசனைப் போல் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன். நீங்கள் எல்லாருக்கும் பின்னே சற்று மறைவாக நிற்க வேண்டும்! நான் அரசனில்லை என்று புறக்கணிக்கிறாளா வென்று பார்ப்போம்! உண்மை அரசரான உங்களைத் தேடிக் காண்கிறாளா என்று சோதிப்போம்!

சார்லஸ் மன்னர்: (மகிழ்ச்சியுடன்) நல்ல யோசனை அது! அப்படியே நாமிருவரும் நடிப்போம்! அரச இரத்தம் ஓடும் என்னை ஞானக் கண்ணில் கண்டுபிடிக்கா விட்டால், அவள் வெறும் போலிச் சூனியக்காரி என்பது பளிச்செனத் தெரிந்து விடும்! பிறகென்ன பேச்சு வேண்டிய திருக்கிறது ? உடனே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடலாம், அவளை. புளுபியர்டு! நீ சிறந்த ராஜ தந்திரி! மெச்சுகிறேன் உன் யோசனைக்கு!

ஆர்ச்பிஷப்: [ஆத்திர மடைந்து] இது என்ன சிறு பிள்ளை நாடகம் ? இந்த அரசவையில் கண்ணாமூச்சி விளையாட்டா ? நல்ல வேடிக்கை ? …. நான் கிறித்துவ ஆலயத்தின் சார்பாக ஆணை இடுகிறேன்! அந்தப் பட்டிக்காட்டு மாது, அரண்மனைப் படியில் கால் வைக்கக் கூடாது! … உங்கள் நெஞ்சில் உறுதி இருந்தால், ஆலயத்தின் ஆணையை மீறி, … அரசரே! .. நீவீர் அவளை வரவேற்கப் போகிறீரா ?

சார்லஸ் மன்னர்: [சிறிது நடுக்கமுடன்] பாதிரியாரே! என்னை பயமுறுத்த வேண்டாம்! இந்த ஆணை இப்போது தேவையில்லை! இது மிகச் சிறிய சம்பவம்! என்ன ? என்னைக் கிறித்துவ ஆலயத்திலிருந்து வெளியே தள்ளப் போகிறீரா ? …. பொறுமையை இழைக்காதீர்! …. பாதிக் கடிதத்தை மட்டும் படித்து விட்டு, ஆத்திரத்தில் நீங்கள் மீதிக் கடிதத்தைக் கூட படிக்க வில்லை! கடைசி வரிகளைச் சற்று கூர்ந்து வாசித்துப் பார்க்கும்படி நான் வேண்டுகிறேன். ராபர்ட், இப்படி கடிதத்தில் எழுதி முடித்திருக்கிறார்: அந்த மங்கை ஆர்லியன்ஸ் கோட்டையைத் தாக்கி, ஆங்கிலப் பட்டாளத்தை விரட்டப் போகிறாளாம், மன்னர் படை உதவி செய்தால்! இதுதான் முக்கியத் தகவல்! நாமிதை இன்று முடிவு செய்ய வேண்டும்.

சாம்பர்லைன்: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதா ? நாடோடி நங்கையின் மூடத்தனம் நன்றாகவே தெரிகிறது. பேராற்றல் கொண்ட பிரிட்டாஷ் சிங்கப் படையை, செம்மறி ஆடு மேய்ப்பவள் தனது மந்திர சக்தியில் நசுக்கப் போகிறாளா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] ஏன் ? உங்கள் வாய்ச் வீச்சைப் பயன்படுத்தி கொண்டு, நீங்கள் ஏன் ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டுத் தரக்கூடாது ?

சாம்பர்லைன்: போதும்! நமக்குள் இந்தக் கேலிப் பேச்சு வேண்டாம்! எமது போர்த் திறமை உமது போலித் திறமையை விட உயர்ந்தது! உங்களை விட அதிகப் போரில் யாம் ஈடுபட்டிருக்கிறோம்! மறந்து விடாதீர் அதை! ஆர்லியன்ஸ் கோட்டையை அந்த மந்திரக்காரி பிடிக்கப் போவதில்லை! ஆனால் தனது மந்திர சக்தியால் உங்கள் மனக் கோட்டையைக் கைப்பற்றி விட்டாள்! மன்னரே! தேவதையை நம்பி பெருத்த ஏமாற்றம் அடையப் போகிறீர்!

ஆர்ச்பிஷப்: [மன்னர் முன் நெருங்கி] உங்களை நான் மறுமுறை எச்சரிக்கிறேன்! தேவதை என்ற போலி வேடம் பூண்டு அந்தப் பாவை இங்கு நுழைவதை என் கண்கள் காண முடியாது! கிறித்துவத் தேவாலயம் ஒன்றுதான் புனித அணங்குகள் உருவாக்கும்! மேலும் அவரைக் கண்டுபிடித்து உறுதிச் சான்று அளிக்கும்! இராணுவ அதிகாரி ராபர்ட்டும், போர் வெறியர் லாஹயரும் கண்டுபிடிக்க முடியாது! அவர்கள் பகைவரைக் கண்டுபிடிப்பதுடன் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்! கிராமத்துப் பெண்ணை தேவதை என்று சான்றிதழ் அளிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை!

சார்லஸ் மன்னர்: [கேலியாக] அந்தப் பெண் என்னைக் கண்டுபிடித்து விட்டால் புனித அணங்கு என்று சான்றிதழ் அளிப்பீரா ?

ஆர்ச்பிஷப்: [சட்டென] நீங்கள் போடும் அந்தப் புதிரில் மட்டும் அவளை அணங்காக்க முடியாது!

புளுபியர்டு: மன்னரே! மாவீரத் தளபதி ஜாக் துனாய்ஸ் ஆர்லியன்ஸ் படையின் தலைவனாக இருக்கும் போது, இந்த எழில் மங்கை போரிட்டுக் கோட்டையை மீட்டுவாள் என்பது வேடிக்கைப் பேச்சு!

சார்லஸ் மன்னர்: அது சரி! சொல்லுங்கள்! வீராதி வீரன் துனாய்ஸ் ஏன் இதுவரைப் போரிட்டுக் கோட்டையைப் பிடிக்கவில்லை ? எதற்கு அவன் அஞ்சுகிறான் ? யார் அவனைத் தடுத்து நிறுத்தினார் ?

லாஹயர்: புயற் காற்று அவனுக்கு எதிராக அடிக்கிறது!

சார்லஸ் மன்னர்: கோட்டைக்கு அரணாக இருப்பது ஆற்று வெள்ளம்! காற்றுப் புயல் இல்லை! ஆர்லியன்ஸ் அருகே ஓடும் லோயர் ஆற்றுக்குள் எங்கே காற்று எதிர்க்கிறது ?

லாஹயர்: மன்னரே! புயலடிப்பது லோயர் ஆற்றுக்குள்ளேதான்! புரிகிறதா ? லோயர் நதிப் பாலத்தின் தலைமுனைப் பகுதி ஆங்கிலேயர் வசமுள்ளது! பின்புறம் சென்று அவர்களை மடக்க தளபதி, நதியின் மேலோட்டக் கரையைக் கடக்க வேண்டும். புயற் காற்று மேலோட்ட நதியில் கிழக்கு நோக்கி அடிக்கிறது! மேற்கு நோக்கிக் காற்று அடிக்க வேண்டும் என்று துதிக்கச் சொல்லி, கிறித்துவப் பாதிரிகளுக்குப் பணம் கொடுத்துக் களைத்து விட்டார், தளபதி! அவருக்கு வேண்டியது இப்போது ஓர் அற்புதச் சம்பவம்! அதை இந்த தேவதை கொடுக்கலாம்! அதை ஏன் ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் தடுக்க வேண்டும் ? முயற்சி வெற்றி அளிக்கும்! முற்படுவதற்கு முட்டுக்கட்டை ஏன் போட வேண்டும் ?

சாம்பர்லைன்: இந்த மூடப் போரை நிறுத்த வேண்டும். தோற்றுப் போகும் போரில் ஆயிரக் கணக்கான பேர் வீணாய் உயிரிழப்பார்! ஏன் ? அந்த தேவதை கூட உயிரோடு மீள மாட்டாள்!

லாஹயர்: ராபர்ட் தலைசிறந்த போர்த் தளபதி! இந்த இளமாது ஆங்கில அரக்கரை ஓட்டுவாள் என்று அவர் நம்பினால், மற்ற படையாளிகளும் அதை நம்பிக் கொதித்து எழுவார். இளநங்கைமேல் ராபர்ட்டுக்கு அசையாத நம்பிக்கை உள்ளது!

ஆர்ச்பிஷப்: மன்னரே! கிறித்துவத் தேவாலயம் கிராமத்து மங்கையை முதலில் பரிசீலனை செய்து அங்கீகரிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் நீங்கள் போருக்குத் தீர்மானம் செய்ய வேண்டும். ஆனால் மேன்மை தங்கிய மன்னர் விரும்புவதால், அவள் அரண்மனைக்கு வர அனுமதி அளிக்கிறோம்!

சார்லஸ் மன்னர்: [கேலியாக] ஆகா! கடவுளின் தூதர் நமக்கு உத்தரவு அளித்து விட்டார்! [லாஹயரைப் பார்த்து] ஏன் நிற்கிறாய் ? போ! அந்த தேவதையை உடனே அழைத்து வா! அவள் வெகு நேரம் காத்திருக்கிறாள், என்னைக் காண! என்னைக் காணாமல் போக மாட்டேன் என்று கோட்டை வாசலில் போராட்டம் செய்கிறாள்! பார்ப்போம். என்னைக் கண்டுபிடிக்கிறாளா என்று ? அவளைக் காண வேண்டு மென்று என் நெஞ்சும் துடிக்கிறது! போ! போ! போ!

லாஹயர்: [வணங்கிய பின்] அப்படியே செய்கிறேன் மன்னரே! [வெளியேறுகிறான்].

சார்லஸ் மன்னர்: [புளுபியர்டை நோக்கி] சீக்கிரம் என்னறைக்கு வா! என் பொன் அங்கியைக் கழற்றித் தருகிறேன். என் தலைக் கிரீடத்தையும் வாங்கிக் கொள். அரசனைப்போல் நீ கம்பீரமாக என் ஆசனத்தில் அமர்ந்து பாவனை செய்! உன்னை நிராகரித்து என்னைக் கண்டுபிடிகிறாளா வென்று சோதிப்போம். [மன்னரும், புளுபியர்டும் உள்ளறைக்குச் செல்கிறார்கள்].

ஆர்ச்பிஷப்: [அருவருப்பாக சாம்பர்லைனைப் பார்த்து] படிப்பு வாசனையே மூக்கில் ஏறாத பட்டிக்காட்டுப் பாவை, மன்னரைக் கண்டுபிடிப்பாள் என்று மனப்பால் குடிக்காதீர். அரண்மனையைக் கண்டு அவள் பேதலித்து மயங்கி விழாமல் இருக்கிறாளா என்று நான் பார்க்கப் போகிறேன்.

சாம்பர்லைன்: அந்த ஒரு யூகத்தில் உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். பித்துப் பிடித்தவர் நிழல் பட்டால் மன்னரும் பித்தராகிறார்! அற்புதம் நடந்து, ஆர்லியன்ஸ் கோட்டை பிடிபடப் போவதை என்னால் கற்பனிக்க முடியவில்லை! அற்புதம், சூனிய வித்தை இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை! ஆமாம், அற்புதம் என்பது என்ன ?

ஆர்ச்பிஷப்: அற்புதம் பற்றி அறிவதில் உங்களுக்கு என்னைப்போல் அனுபவம் கிடையாது. அற்புதம் புரிவது, அற்புதம் பற்றி அறிவது, அற்புத மாந்தரை ஆக்குவது, அற்புதம் இல்லையென உளவு அறிவது அனைத்தும் எனது தொழில்! அவற்றை ஆழ்ந்து காணும் தெய்வீக ஞானத்தைக் கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். அற்புதம் என்ன வென்றா கேட்டார் ? சொல்கிறேன். அற்புதம் என்பது ஒரு சம்பவம்! அந்த தெய்வீக்க நிகழ்ச்சி நடந்தால் நமக்கு நம்பிக்கை ஊட்டும்! அதைக் கண்ணால் காண்போர் வியப்புறுவர்! காணாதோர் உங்களைப் போல் கேலி செய்வார்! செய்பவருக்கு அது எளிய செயல்! எவராலும் செய்ய முடியாத வினையை ஒருமுறைச் செய்து காட்டி உலகை நம்ப வைத்தால், அது ஓர் அற்புத நிகழ்ச்சி ஆகிறது!

சாமர்லைன்: [கேலியாக] நான் கிறித்துவ ஆலய மனிதன் அல்லன். அற்புதம் போல் புரிந்து மோசடி செய்பவரை நம்பச் சொல்கிறீரா ?

ஆர்ச்பிஷப்: [அழுத்தமாக] மோசடிக்காரர் போலி மனிதர்! அவர் மக்களை ஏமாற்றுபவர். உளவு செய்து அவரைச் சிறையில் அடைப்பது அறிவுடைமை. அவரது வாய் உருட்டலில் மயங்கி, அவர் விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்வது மடமை. மோசடிக்கும், அற்புதத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. மோசடி செய்வன் மனிதன்! அற்புதம் புரிபவன் ஆண்டவன்! மோசடி மன எரிச்சலை உண்டாக்கும்! அற்புதம் மன நிறைவைக் கொடுக்கும்! மோசடி புரிவது எளிது! அற்புதம் புரிவது அபூர்வம்!

சாம்பர்லைன்: உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை. அற்புதம் நிகழ்வதை நான் நம்ப முடியவில்லை. ஆனால் மோசடி நடப்பதை நம்புகிறேன். நான் கிறித்து ஆலயப் பக்தனில்லை. கிறித்துவ மதத்தின் அடிப்படையிலே பூதக் கண்ணாடி கொண்டு, உலக நடப்புகளை எடை போடுவது எனக்குப் பிடிக்காது!

ஆர்ச்பிஷப்: நண்பரே! மனித ஆத்மாக்களை நல்வழிப் படுத்த, இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறித்துவ மதாதிபதிகளே நாட்டு மன்னனைத் தேர்ந்தெடுத்து, நாட்டு மக்களையும் கைப்பற்றி ஆண்டு வந்திருக்கிறார்கள். நாட்டு மன்னர் ஆணையிட்டு மனித உடல்களை மட்டும் ஆள்கிறார்! ஆனால் கிறித்துவ மதாதிபதிகள் நன்னெறியில் புகுத்தி மக்களின் ஆத்மாக்களை ஆட்சி செய்து வருகிறோம்! நாங்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்தா விட்டால், மனித ஆத்மாக்கள் நாசமாகி அழுகிப் போய்விடும்! ஆனால் அழுகிப் போன ஆத்மாக்களைக் கழுவி அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க முடியும், எங்களால்! அற்புத நடப்புகள் மோசடி அல்ல! மோசடிகள் அற்புத நிகழ்ச்சிகள் அல்ல! கல்வி கற்காத அந்த இளநங்கை நிச்சயம் அற்புதங்களை ஆக்கப் போவதில்லை! புத்தி கூர்மையில் ஒருவேளை சார்லஸ் மன்னரை அவள் கண்டுபிடித்து, அற்புதம் என்று அரசர் சொன்னாலும் நான் அப்படிக் கூறமாட்டேன். தெய்வீகச் சிலிர்ப்பு ஏற்பட்டு, தான் பாவக் களிமண் பொம்மை என்பதை மறந்து, கடவுளின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் அரிய பிறவிதான் அற்புதத்தை உண்டாக்க முடியும்! ஆனால் படிப்பில்லாப் பாவை அந்த பரம்பரையில் பிறந்தவளாக எனக்குத் தோன்றவில்லை.

சாம்பர்லைன்: அற்புதம் நடக்கிறதா அல்லது மோசடி நடக்கிறதா என்று நாமிருவரும் நின்று இங்கு வேடிக்கை பார்க்க வேண்டும். மோசடி நிகழ்ந்தால் உங்களுக்கு வெற்றி! அற்புதம் நிகழ்ந்தால் அரசருக்கு வெற்றி! கிராமத்துப் பெண் வெளியே தள்ளப்பட்டால், எனக்கு வெற்றி! [அப்போது சற்று ஆரவாரம் கேட்கிறது]

[உட்கதவு திறந்து, மன்னர் சாதாரண உடையிலும், புளுபியர்டு மன்னரைப் போலும் வேடம் பூண்டு வெளியே வருகிறார்கள். அரசவையில் யாவரும் எழுந்து நிற்கிறார்கள். புளுபியர்டு முன்முறுவலுடன் கம்பீரமாக மன்னரின் தனி ஆசனத்தில் அமர்ந்ததும், எழுந்தவர் அனைவரும் உட்காருகிறார்கள். சார்லஸ் மன்னர் கூட்டத்தில் மறைந்து தெரிந்தும், தெரியாமல் நின்று கொள்கிறார். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் ஜோனை முதலில் பார்க்க வேண்டுமென்று முன்புறம் நிற்கிறார்கள். ராணி தோழியர் நடுவே ஓர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அப்போது சேவகன் ஒருவன் வந்து, ஜோன் வருகையை அறிவிக்கிறான். அரசவையினர் ஆரவாரம் மெதுவாக அடங்குகிறது.]

சேவகன்: [தலை வணங்கி] யாவருக்கும் ஓர் அறிவிப்பு! இதோ! காணீர்! பணிமாது ஜோன் ஆஃப் ஆர்க்கை, டியூக் ஆஃப் வெண்டோம் அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறார்.

[அப்போது மறைவிலிருந்து மன்னர் தலைநீட்டி ஜோனைக் கண்டபின், தலையை மீண்டும் இழுத்துக் கொள்கிறார்.

புளுபியர்டு: [கம்பீரமாக] அவள் சிங்காசனத்தின் அருகில் வரட்டும்.

[நிமிர்ந்த நடையில், நேர்கொண்ட பார்வையில் ஜோன் மூன்று படைவீரர்கள் சூழ்ந்து வர அரசவையின் மையத்தை அண்டுகிறாள். கூந்தல் குறுகி வெட்டப்பட்டு, இராணுவக் கவச உடுப்பணிந்து, வாளொன்று இடுப்பில் தொங்கிட, கையில் தலைக் கவசத்தை ஏந்திய வண்ணம் ஜோன் இங்குமங்கும் நோக்குகிறாள். அரசவையில் நிசப்தம் நிலவுகிறது. அனைவரது கண்களும் பணிமாது, ஜோனையே வட்டமிடுகின்றன! தோழியர் அரங்கை விட்டு, ஜோன் ஆடவர் பகுதிக்கு மெதுவாக நடந்து, அவர்களை உற்று நோக்குகிறாள்.]

ராணி: [சிரிப்பை அடக்க முடியாமல், பக்கத்தில் நிற்கும் தோழியின் காதருகே] அடி ஆத்தா! இவளுக்கு கொண்டை முடி மேல்நோக்கி அல்லவா வளருது!

[உடனே அத்தனை தோழிப் பெண்டிர்களும் கொல்லென்று வெடித்துச் சிரிக்கிறார்கள்]

புளுபியர்டு: [சிரிப்பை அடக்கியும், அடக்க முடியாது] … உஷ்! .. தோழீயப் பெண்டூகளா! என்ன சிரிப்பு ?

[கூட்டத்தில் சிரிப்பு மெதுவாக ஒடுங்குகிறது.]

ஜோன்: [சிறிதும் குழப்பம் அடையாமல், கலவரப்படாமல், அழுத்தமான குரலில்] நான் ஒரு படையாளி! அப்படித்தான் என் கூந்தல் குறுகி யிருக்கும்! எங்கே தெளஃபின் மன்னர் ?

புளுபியர்டு: [ஜோனை நோக்கி] நீ தெளஃபின் மன்னர் முன்பாகத்தான் இருக்கிறாய்! அவரைக் காண வந்திருக்கும் நீயே அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்!

[ஜோன் குரல்வரும் திக்கில் திரும்பி, புளுபியர்டு அமர்ந்திருக்கும் ஆசனத்துக்கு அருகில் செல்கிறாள். மேலும், கீழும் புளுபியர்டை உளவு செய்கிறாள். நிசப்தம் நிலவி, அனைவரது கண்களும் ஜோனை நோக்குகின்றன! புன்னகை மேவுகிறது, ஜோன் முகத்தில்]

ஜோன்: [ஆச்சரியமுடன்] யார் நீங்கள் ? நீங்கள் மன்னரில்லை! … எங்கே மன்னர் ? …. எங்கே மன்னர் ? அவரைக் காணத்தான் வந்திருக்கிறேன். கட்டாயம் அவரைக் காண வேண்டும். சொல்லுங்கள் மன்னர் எங்கே ?

புளுபியர்டு: மன்னர் இங்குதான் இருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்க வேண்டியது, உன் பொறுப்பு! தேடிப்பார்! சுற்றிப்பார்! அவரைக் காண முடியா விட்டால், வெளியில் விரட்டப் படுவாய்!

[ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துவரும் ஜோன் இறுதியில் சார்லஸ் மன்னரைக் கண்டுபிடித்து விடுகிறாள்.]

ஜோன்: [மன்னர் வலது கரத்தை ஏந்தி முத்தமிட்டு] … நீங்கள்..! … நீங்கள்..! நீங்கள்தான் எங்கள் மன்னர்! தெளஃபின் மன்னர்! … [மெதுவாக மண்டியிட்டு வணங்கிறாள்.]

[உடனே கைதட்டல்களும், ஆரவாரங்களும் அரசவையில் எழுகின்றன. ராணி வியப்படைகிறார். தோழிர் யாவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஆனந்தம் அடைகின்றனர்! ஆடவர் கைதட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்கிறார்.]

சார்லஸ் மன்னர்: [மகிழ்ச்சியுடன் வலது கையை உயர்த்தி] … எல்லாரும் பாருங்கள்! … எல்லாரும் பாருங்கள்! … அவளது ஞானக்கண் கூரியது! அரச இரத்தம் ஓடும் என்னை அவள் கண்டுபிடித்து விட்டாள்! …. ஏமாந்து இருப்பவர் புளுபியர்டு!

ஜோன்: [ஆனந்தக் கண்ணீர் அருவியாகச் சொரிய எழுந்து நின்று, தலை வணங்கி தன் கைகளை ஒன்றாய் இணைத்து மகிழ்ச்சியுடன்] கனிவு மிக்க, கண்ணியம் நிரம்பிய மன்னரே! .. நான்தான் பணிமாது ஜோன்! … கடவுளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்! அன்னியரான ஆங்கிலேயரை ஆர்லியன்ஸ், பிரான்ஸிலிருந்து விரட்டவும், ரைம்ஸ் தேவாலயத்தில் வேந்தராய் உங்களை முடி சூட்டவும் என்னைக் கடவுள் அனுப்பி யிருக்கிறார்.

சார்லஸ் மன்னர்: [ஜோனைக் கனிவுடன் பார்த்து] … ரைம்ஸ் தேவாலயத்தில் நான் முடி சூட வேண்டும் என்று நீ என்னிடம் சொல்லாதே! … [பாதிரியாரைச் சுட்டிக் காட்டி] அதோ, அங்கு நிற்கும் ஆர்ச்பிஷப்பிடம் சொல்ல வேண்டும்!

ஜோன்: [பின் திரும்பி ஆர்ச்பிஷப்பைப் பார்த்து, பணிவுடன் மண்டியிட்டு வணங்கி உணர்ச்சியுடன்] பிரபு! நான் ஓர் ஏழை கிராமத்துப் பெண்! தாங்கள் கீர்த்தியுள்ள கடவுளின் அருளும், ஆசியும் பெற்ற கிறித்துவ தேவர்! இந்தப் பாமர மங்கையின் சிரத்தை தங்கள் உன்னதக் கரத்தால் தொட்டு ஆசீர்வதிப்பீர்களா ? அந்த தகுதியை எனக்கு அளிப்பீர்களா ?

புளுபியர்டு: [பக்கத்தில் நிற்கும் சாம்பர்லைனைப் பார்த்து] …. பாருங்கள்! .. பாருங்கள்! ஆர்ச்பிஷப் கிழட்டு நரியின் முகம் சிவந்து போவதை!

சாம்பர்லைன்: [வியப்புடன்] அது அவள் செய்யும் அடுத்த அற்புதம்! ஆம்! அடுத்த அற்புதம்! ஆர்ச்பிஷப் கல்நெஞ்சை ஒரு நொடியில் கரைத்து விட்டாளே!

ஆர்ச்பிஷப்: [கருணையுடன், ஜோன் தலையில் கரம் பதித்து] குழந்தாய்! உனது கிறித்துவ மதப்பாசத்தை நான் மெச்சுகிறேன்!

ஜோன்: [தலையைத் தூக்கிக் அவரை உற்று நோக்கி] உண்மையாகவா ? மெய்யாக எனக்கு கிறித்துவ மதப்பாசம் உள்ளதா ? சொல்லுங்கள்! அதனால் எனக்கு எதாவது தீங்கு இருக்கிறதா ?

ஆர்ச்பிஷப்: குழந்தாய்! அதில் உனக்கு எந்த தீங்கும் இல்லை! ஆனால் அபாயம் இருக்கிறது!

ஜோன்: [வேகமாய் அதிர்ச்சியுடன் எழுந்து] என்ன சொன்னீர்கள் ? தீங்கில்லை! ஆனால் அபாயம் இருக்கிறதா ? எனக்குப் புரியவில்லை! நான் அனுதினமும் போற்றும் மதப்பாசத்தில் அபாயம் உள்ளதா ? என்ன அபாயம் ? சொல்லுங்கள்! பிரபு! சொல்லுங்கள்!

(இரண்டாம் காட்சி தொடர்ச்சி)

****

‘கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) [ஆங்கிலப் போர்த் தளபதி கிலாஸ்டேல் முன் கூறியது]

‘பத்தொன்பது வயது ஜோன் ஆஃப் ஆர்க் வெற்றி வீராங்கனை ஆனதற்கு, அவள் தன்னை ஒரு பெண் என்று கருதிப் பின்தங்காமல் முன்னேறி, கடவுள் அனுப்பிய படையாளி என்று மெய்யாக எண்ணிக் கொண்டு போரிட்டதே காரணம்! மேலும் படைவீரர்கள் ஜோன்தான் தங்களைக் காப்பாற்றப் பிறந்த லோரேன் பணிமங்கை என்று முற்றிலும் நம்பியதால், அவள் ஆணையைப் பின்பற்றி மெய்வருத்திப் போரிட்டு பிரான்ஸை விவிடுவித்தனர். அக்காலங்களில் எளிய கிராமத்து மாதர்களும், பிரான்ஸில் தம் கணவருடன் இணைந்தே போர் புரிந்தது, குறிப்பிடத் தகுந்தது! ஆர்லியன்ஸ் முற்றுகையை ஜோன் முறிக்கும் போது, ஊர்ப் பெண்கள் தாக்கும் பகைவர் மீது கொதிக்கும் எண்ணை, சூடான சாம்பலைக் கொட்டியாத அறியப்படுகின்றது. ‘

அமெரிக்க கலை மேதை: கிரிஸ்டபர் ரஸ்ஸல்

ஆங்கிலேயர் கைப்பற்றி நூறாண்டு அடிமை விலங்கில் பிணைக்கப்பட்ட பிரான்ஸை விடுவிக்க, லோரேன் பணிமங்கை ஒருத்தி வரப்போவதாக பிரென்ச் மக்கள் நம்பி வந்தனர்! ஆனால் எப்போது வரப் போகிறாள், எப்படி விடுவிக்கப் போகிறாள் என்பதை எவரும் அறிந்திருக்க வில்லை!

இரண்டாம் காட்சி தொடர்ச்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. சார்லஸ் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]
 2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]
 3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.
 4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.
 5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.
 6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்கள்.
 7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் அரண்மனைக் கோட்டை. அரச முன்னவையில் ஜோன் ஆஃப் ஆர்க் சார்லஸ் மன்னரைச் சந்தித்துத் தான் வந்த காரணத்தைக் கூறுகிறாள். அடுத்து மண்டியிட்டு வணங்கிய ஜோனை, ஆர்ச்பிஷப் ஆசீர்வதிக்கிறார்.

ஜோன்: [வேகமாய் அதிர்ச்சியுடன் எழுந்து] மாண்புமிகு பாதிரியாரே! என்ன சொன்னீர்கள் ? மதப்பாசத்தில் தீங்கில்லை! ஆனால் அபாயம் இருக்கிறதா ? எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை! நான் அனுதினமும் போற்றும் மதப்பாசத்தில் அபாயம் உள்ளதா ? என்ன அபாயம் ? சொல்லுங்கள்! பிரபு! சொல்லுங்கள்!

ஆர்ச்பிஷப்: பெண்ணே! உன் மதப்பாசத்தில் உனக்குத் தீங்கில்லை, உண்மையாக! ஆனால் அபாயம் நேரப் போவது, அரசரின் படைகளுக்கு! அவரது குடிமக்களுக்கு! கடவுள் அனுப்பியதாகச் சொல்லும் உனது பணிகள் எல்லாம் அபாயம் தருபவை! பிறரை எப்படி பாதிக்கும் அவை என்று நீ சிறிதாவது சிந்தித்துப் பார்க்கிறாயா ?

ஜோன்: [புன்முறுவலுடன்] மாண்புமிகு பாதிரியாரே! இந்த மண்ணில் பிறந்தவர் இந்த மண்ணிலே இறக்கிறார்! அதற்காக நாம் அஞ்ச வேண்டுமா ? கடவுளுடைய சொர்க்க புரியில்தான் மரண மில்லை! நாம் போரிட்டு நம்முயிரைக் கொடுத்து, நமது பூமியை மீட்டுக் கொள்ள வேண்டும். அதுவே கடவுளின் ஆணை! அல்லாவிட்டால் உள்ளே புகுந்த கொள்ளைக் கூட்டம் நம்மைக் கொன்று நமது சொத்துக்களை திருடுகின்றன. விடுதலைப் போரில் பலர் உயிரிழந்தாலும், முடிவில் பிரான்ஸ் நம் கைவசப்படும். படைவீரர் தமது உயிரைப் பலியிடாமல், பிரான்சும் நமக்கு மீளாது! சார்லஸ் மன்னரும் மகுடம் சூட முடியாது! விடுதலைப் போராட்டமா உங்களுக்கு அபாயமாகத் தெரிகிறது ? அது நமக்குச் சுதந்திரம் அளிப்பது!

ஆர்ச்பிஷப்: [சற்று விழித்துக் கொண்டு] அந்தப் போரில் நீயும் உயிரிழக்கத் தயாரா ?

ஜோன்: [சிரித்துக் கொண்டு] மாண்புமிகு பாதிரியாரே! நான்தான் முன்னின்று படைவீரரை வழிநடத்தப் போகிறேன். பிரான்ஸ் நாட்டுக்கு என்னுயிரைக் கொடுக்க நான் தயார்! சார்லஸ் மன்னருக்கு முடி சூட்ட என்னுயிரைக் கொடுக்க நான் தயார்! கடவுள் இட்ட கட்டளை நிறைவேறுவதில் என்னுயிரை இழந்தால் நான் களிப்படைவேன். [சார்லஸ் மன்னரைப் பார்த்து] …. இதைப் பற்றி நான் பேச வேண்டும். மேன்மை தங்கிய வேந்தரே! நான் தனியாக உங்களுடன் உரையாற்ற விரும்புகிறேன். மற்றவரை சற்று வெளியே அனுப்புவீர்களா ? ‘

சார்லஸ் மன்னர்: [உடன்பாடாக தலை அசைத்து, மற்ற அனைவரையும் பார்த்து] லோரேன் பணிமங்கை என்னுடன் தனியாகப் பேச விரும்புகிறாள். எல்லோரும் வெளியேறுங்கள்! கடைசியில் போவோர் கதவை மூடிச் செல்ல வேண்டும்.

ராணி: [ஆத்திரமோடு முன்வந்து] சார்லஸ்! நான் உன்னுடன் இருக்கலாம் அல்லவா ?

சார்லஸ் மன்னர்: [அழுத்தமாக] இல்லை! நீங்களும் வெளியே போவது நல்லது.

ஆர்ச்பிஷப்: நான் தேவாலயத்தின் அதிபதி! கடவுள் இட்ட கட்டளையை ஜோன் விளக்கும் போது, நான் அவசியம் அரசருடன் இருக்க வேண்டும். கடவுளின் ஆணை எனக்கும் விளக்கப்பட வேண்டும்!

சார்லஸ் மன்னர்: [குரலை உயர்த்தி] ஆர்ச்பிஷப்! அவசியம் நீங்கள் வெளியே போக வேண்டும். ஜோன் இல்லாத போதே கூக்குரல் எழுப்பியர் நீங்கள்! ஜோன் இருக்கும் போது நீங்கள் வெடிப்பீர்! தயவு செய்து வெளியே செல்லுங்கள். … [சாம்பர்லைனைப் பார்த்து] … ஏன் நின்று கொண்டிருக்கிறீர் ? உங்களுக்கும் அதே உத்தரவுதான்! ஒன்று எரிமலை! அடுத்தது பூகம்பம்! யாருடைய குறுக்கீடு மில்லாது, நாங்கள் தனியே அமைதியாகப் பேச வேண்டும். எல்லாரும் வெளியே செல்லுங்கள்.

[ராணி, ஆர்ச்பிஷப், சாம்பர்லைன், லாஹயர் அனைவரும் வெளியேறுகிறார்கள். ராணி போகும் போது, ஜோனை முறைத்துச் பார்த்துச் செல்கிறார். கடைசில் போகும் லாஹயர் கதவைச் மூடி விட்டுப் போகிறான்.]

சார்லஸ் மன்னர்: ஜோன் உட்கார்! [ஜோன் ஆசனத்தில் அமர்கிறாள்] ஆங்கிலேருடன் போரிடுவதில் விருப்பம் இல்லை எனக்கு! தளபதிகள் அணியும் இரும்புக் கவசம் கனமாகத் தெரிகிறது எனக்கு! இப்போதுள்ள போர்வாளை தூக்கக் கூட முடியவில்லை என்னால்! ஆங்கிலேய மூர்க்கருக்குள்ள முரட்டுக் குணம், மூர்க்கக் குரல், முட்டிக் கை, முதிர்ந்த தோள் எனக்கில்லை! அவர்களுக்கு யுத்தம் என்பது ஒரு பொழுது போக்கு! மரணத்தோடு சாடுவது ஒரு விளையாட்டு! நான் அமைதியை விரும்புபவன். எனக்குப் போதிய வருமானம் இல்லை! பிறரிடம் கடன் வாங்கிப் பிழைத்து வருகிறேன்! ஆங்கிலேயருடன் போரிடா உடன்படிக்கை செய்து, சமாதானமாக வாழ விரும்கிறேன்.

ஜோன்: [ஆத்திரமடைந்து] மாண்புமிகு மன்னரே! இது மிக்க கோழைத்தனம்! மிக்க அடிமைத்தனம்! அடிமைகளாக நூறாண்டுகள் வாழ்ந்த பின்பு, அதுவே சுக வாழ்வாகத் தெரிகிறது உங்களுக்கு! எங்கள் பொன்னும், பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப் படுவதை வேடிக்கை பார்க்க விரும்புகிறீர்களா ? எங்கள் தங்கை, தமக்கை, தாய்மார் ஆங்கிலப் பிடாரிகளால் பலாத்காரம் செய்யப்பட்டு பலியாவை வேடிக்கை பார்க்க விரும்புகிறீர்களா ? அச்சத்தில் அடிமைகளாய் வாழ்வதை விடப் போரிட்டுத் துச்சமாக உயிரை இழப்பதே மேல்! பிரென்ச் மன்னரே! நீங்கள் பேராண்மை ஆத்மாவை இழந்து, பிச்சை எடுக்கும் ஆத்மாவைப் பிடித்துக் கொண்டது ஏன் ? இப்படிக் கையேந்தும் வாழ்வுக்கு முடிவு செய்யத்தான், கடவுள் என்னை அனுப்பி யிருக்கிறார்! போரிட்டுத்தான் நாம் விடுதலை பெற வேண்டும்! உயிர்களைப் பலி கொடுத்துதான் நாம் பிரான்ஸின் உயிரை மீட்க வேண்டும்! அற்புதம் நிகழ்ச்சியால் பிரான்ஸைக் காப்பாற்ற முடியாது! விடுதலைக்காக நாம் மெய்வருந்திப் போராடினால்தான், நமக்குக் கிடைக்கும் கடவுளின் உதவி!

சார்லஸ் மன்னர்: [பெரு மூச்சிட்டு ஆசனத்தில் சாய்ந்தபடி] போர்! போர்! போர்! இன்னுமா போர் ? நான் போருக்குப் போக மாட்டேன்! ஜோன்! உன்னைப் போன்ற நெஞ்சு உறுதி எனக்கில்லை! பிரான்ஸ் விடுதலையில் எனக்கு நம்பிக்கை யில்லை! மன்னராக முடி சூட்டிக் கொள்ள எனக்கு ஆசையும் இல்லை!

ஜோன்: [அதிர்ச்சி அடைந்து, எழுந்து நின்று அழுத்தமாக] மன்னரே! என்ன அதிர்ச்சியான வார்த்தைகள் அவை ? அவைதான் கடவுளின் கட்டளைகள்! அவற்றில் எனக்கு நம்பிக்கை உள்ளது! நான் லோரேன் பணிமங்கை! பிரான்ஸை விடுவிக்க போகும் என்னைத் தடுக்க வேண்டாம்! உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்! எனக்கு வேண்டியது உங்கள் உத்தரவு! எனக்கு வேண்டியது இப்போது தூங்கிக் கிடக்கும் உங்கள் படைகள்! ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்கப் பத்தாயிரம் பேர் போதும்! அந்தக் கோட்டையைக் கைப்பற்றாமல் திரும்பி உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன்!

சார்லஸ் மன்னர்: [கூர்ந்து நோக்கி] மறந்து விட்டேன், நீ லோரேன் பணிமங்கை என்பதை! பிரான்ஸைக் காப்பாற்ற ஒரு பணிமங்கை வருவாள் என்று பல்லாண்டுகளாகப் பாமர மக்கள் கனவு காண்கிறார்கள்! மெய்யாக அந்தப் பணிமங்கை நீதானா என்பது எனக்குத் தெரியவில்லை! நீதான் அந்தப் பணிமங்கை என்றால், போரிடத் துணிவது சரிதான்! நீ மெய்யாகப் பணிமங்கை இல்லாவிட்டாலும், பாமர மக்கள் உன்னைப் பணிமங்கை என்று நம்பி உன் பாதத்தில் விழுவார்! நீ காலால் இடும் கட்டளையை அவர் தலைமேற் கொண்டு செய்வார். [எழுந்து நின்று, அழுத்தமாய்] இப்போதே அறிவிக்கப் போகிறேன், நீதான் லோரேன் பணிமங்கை! பிரான்ஸை மீட்கப் பிறந்திருக்கும் லோரேன் பணிமங்கை நீதான்! புறப்படு! ஜோன் புறப்படு! ஆர்லியன்ஸ் கோட்டை நோக்கிப் புறப்படு!

ஜோன்: [ஆவேசமாய் வாளை உருவி] எனக்கு ஆலயமணி அடித்து விட்டது! எனக்கு உத்தரவு கிடைத்து விட்டது! மிக்க நன்றி மன்னரே! செல்கிறேன்! கடவுள் இட்ட கட்டளையை நிறைவேற்றச் செல்கிறேன்! …. நான் இப்போது கடவுளைத் துதிக்க வேண்டும். .. [மண்டியிட்டு கைகூப்பி மெளனமாய் முணுமுணுத்துக் கடவுளைத் தொழுகிறாள்]

சார்லஸ் மன்னர்: [சற்று வெறுப்புடன்] நிறுத்து ஜோன்! கடவுளைப் பற்றி அடிக்கடிப் பேசுவதும், அவர் மீது துதி பாடுவதும் எனக்குப் பிடிக்காது. முதலில் நானிட்ட கட்டளையை நிறைவேற்று! எட்டாயிரம் படைவீரர்களைத் தருகிறேன். சீக்கிரம் புறப்படு! நேரத்தை வீணாக்காதே!

ஜோன்: கடவுளிட்ட கட்டளையை நீங்களிட்ட கட்டளையாக உரிமை கொண்டாடுவது நியாயமில்லை. மாண்புமிகு மன்னரே! எனக்கு எட்டாயிரம் படைவீரர்களைத் தரும்போது அவருக்குப் போதிய உணவுகள், கவச உடைகள், குதிரைகள், வெடி வாகனங்கள் தேவை! உணவுதான் முக்கியம். பட்டினிப் பட்டாளம், பகவரை எதிர்த்துப் போரிடாது. கடவுள் கட்டளை நிறைவேறாது.

சார்லஸ் மன்னர்: எல்லாவற்றையும் சின்னான் கோட்டையிலிருந்து அனுப்புகிறேன். மறுபடியும் நான் கடன் வாங்கித்தான் உணவுப் பண்டங்கள் வாங்க வேண்டும். கவலைப் படாதே ஜோன்! கடன்தர சாம்பர்லைன் இருக்கிறார்! ஆர்ச்பிஷப் அளிக்க மாட்டார்!

ஜோன்: இனிமேல்தான் என் கவலை ஆரம்பமாகும் மன்னரே! ஆங்கிலக் கயவர் பிடித்து வைத்திருக்கும் நமது பிரான்ஸ், கடவுளுக்குச் சொந்தமானது. இந்த நாட்டின் மன்னர் கடவுளின் தொண்டர்! இந்தப் படைவீரர்கள் கடவுளின் பணிவீரர்! இப்போதல்ல! எப்போதும்! இவற்றில் எதுவும் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தில்லை! பிரான்ஸை மீட்டு தங்களுக்கு முடி சூட்டி, உலகப் பெரும் வேந்தராய் உங்களை ஆக்குவது என் கடமை! பிரான்ஸின் புழுதிக் களிமண்ணும் இனிமேல் புனிதமாகப் போகிறது! போராட்டத்தை வெறுக்கும் நமது டியூக் பிரபுக்கள் நமக்கு எதிராகக் கிளம்பலாம். ஆங்கிலேயரை மண்டியிட வைத்து, அவரது நாட்டுக்கு விரட்டுகிறேன், பாருங்கள்! ஆனால் …ராணி தன் மகளை ஆங்கில மன்னருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார்! … ஏசு நாதரைக் காட்டிக் கொடுத்த ஜூதாவைப் போல், எனக்கும் நமது தேவனுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்களா ?

சார்லஸ் மன்னர்: [அதிர்ச்சியுற்று] அது எங்கள் சொந்த பந்தம்! … அரசக் குடும்ப ஒப்பந்தம்! … ஆனால் அப்படிச் செய்ய எனக்குத் துணிச்சல் இருக்குமா ? … எனக்கே என்னைத் தெரியாது!

ஜோன்: [அழுத்தமாக] சொல்லுங்கள் மன்னரே! கடவுள் மீது ஆணையாகச் சொல்லுங்கள்! எனக்கு எதிராக நீங்கள் எதையும் துணிந்து செய்வீர்களா ?

சார்லஸ் மன்னர்: [ஆங்காரமாக] நான் உறுதி கூற முடியாது, ஜோன்! எங்கள் குடும்ப வாய்களை நான் கட்ட முடியாது! உன்னை நான் எச்சரிக்கிறேன். பகடை ஆடும் சூதாடி நான்! சமய சந்தர்ப்பவாதி நான்! நீரில் மூழ்கத் துணிந்தும், துணியாமல் மிதக்கும் தூண்டில் முள் போன்றவன் நான்! மீன் கிடைத்தாலும் சரி அல்லது தூண்டில் போனாலும் சரி என்று எதிலும் நீந்துபவன் நான்! இப்போதும் அப்படியே உன் சொற்படித் துணிகிறேன்! …. சரி! சரி! புறப்படு! நான் எனது முடிவை இப்போது அரசவையில் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும். வா, போகலாம். [கதவைத் திறந்து மன்னர் வெளியேற, ஜோனும் அவரைப் பின் தொடர்கிறாள்]

[கதவு திறக்கப்பட்டதும் அரசவையில் ஆரவாரம் ஒடுங்கி அனைவரும் மன்னரையும், ஜோனையும் நோக்குகித் திரும்புகிறார்கள். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் மன்னனின் இருபுறத்தில் நிற்க அணுகுகிறார்கள்.]

சார்லஸ் மன்னர்: [நடந்து கொண்டு கூக்குரலில்] எல்லோரும் வாருங்கள்! [ஆசனத்தின் முன்பாக நின்று கொண்டு] கேளுங்கள் என் முடிவை! வரலாற்றில் முக்கிய இடம் பெறுவது, எனது முடிவு! உங்கள் முன் நிற்கும் இளமங்கை, பிரான்ஸை விடுவிக்கப் போகும் லோரேன் பணிமங்கை! [ஜோனை அறிமுகப்படுத்தி] இதோ! .. பாருங்கள், உங்கள் லோரேன் மங்கை!

அரசவை மக்கள்: [ஆரவாரமுடன்] லோரேன் பணிமங்கை! [ராணி, ஆர்ச்பிஷப், சாம்பர்லைன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லாரும் தலை கவிழ்ந்து வணக்கம் செய்கிறார்கள்] [சிலர் மட்டும்] வந்து விட்டாள் நமது, பணிமங்கை! பிரென்ச் விடுதலை மங்கை, வீரமங்கை ஜோன் ஆஃப் ஆர்க்!

சார்லஸ் மன்னர்: அமைதி! அமைதி! … இராணுவப் படையின் ஆணைத் தளபதியாக லோரேன் பணிமங்கையை நியமித்திருக்கிறேன். பதவியைப் பணிமங்கையும் ஒப்புக்கொண்டிருக்கிறாள்.

[அரசவையில் ஆரவாரமும் கைதட்டல்களும் எழுகின்றன. ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் கண்கள் மிரள, மிரள விழிக்கிறர்கள். லாஹயர் ஆனந்தப்படுகிறார்]

சார்லஸ் மன்னர்: அமைதி! அமைதி! பணிமங்கையின் முதற்பணி, ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையை முறிப்பது! ஆங்கிலேயரை அங்கிருந்து விரட்டுவது!

சாம்பர்லைன்: [ஆத்திரப்பட்டு, மன்னரை நோக்கி] என்ன கோமாளித்தனம் இது ? நான் அல்லவா, இராணுவ ஆணைத் தளபதி ? எனக்குத் தெரியாமல் என் பதவியைப் பிடுங்குவதா ? இப்போது நான் யார் ஆணைப்படி நடப்பது ? [மன்னரைப் பார்த்து] உங்கள் கட்டளைப்படியா ? அல்லது அந்தப் பணிமங்கை ஆணைப்படியா ? படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பாவை ஆணைத் தளபதியா ?

ஜோன்: [கோபத்தோடு கண்களில் தீப்பறக்க, சாம்பர்லைன் அருகில் சென்று] வாயை அடக்கிப் பேசுங்கள்! இது என் முதல் எச்சரிக்கை! நீங்கள் பழைய ஆணைத் தளபதி! இப்போது நான் புதிய படைத் தளபதி! பட்டிக்காட்டுப் பாவை என்று இனி ஒருமுறை வாயில் வந்தால், உங்கள் பற்களை உடைத்து விடுவேன்! மனிதரை மதித்துப் பேசாத உங்கள் வாயைக் கிழித்து விடுவேன்! கவனம் இருக்கட்டும்!

சார்லஸ் மன்னர்: [பெரிதாகச் சிரிக்கிறார். மற்ற அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.]

சாம்பர்லைன்: [பதில் பேச முடியாமல் நடுங்கிக் கொண்டு] எனக்கு இங்கு இனி வேலை இல்லை! நான் போகிறேன். [விரைவாக வெளியேறுகிறார்]

ஆர்ச்பிஷப்: [மன்னரைப் பார்த்து] அவமானம்! அவமானம்! எத்தகைய அவமானம்! மன்னரே! சிரித்துக் கொண்டு எப்படி இதை உங்களால் வேடிக்கை பார்க்க முடிகிறது ? மேரி மாதா! என் கண்களை நம்ப முடிய வில்லை! என் காதையும் நம்ப முடியவில்லை!

சார்லஸ் மன்னர்: [உறுதியாக] நான் நியமித்த புதிய தளபதிக்கு மதிப்பளிக்கா விட்டால், தண்டனை கிடைக்கும் என்பது கூடத் தெரியாமல் இருப்பது மூடத்தனம்! சாம்பர்லைன் வெளியே போனது அவருக்கும் நல்லது! எனக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!

ஆர்ச்பிஷப்: [ஜோனைப் பார்த்து] லோரேன் பணிமங்கையே! உனக்கொரு பகைவரை நீயே இன்று தேடிக் கொண்டாய்! கடவுளிடம் மன்னிப்புக் கேள்!

ஜோன்: [தலை வணங்கி] பாதிரியாரே! நான் எதற்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ? என்னைப் பலர் முன்பாக அவமானப் படுத்திய சாம்பர்லைன்தான் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

ஆர்ச்பிஷப்: சாம்பர்லைன் சொன்னதில் என்ன தப்பு ? நீ மெய்யாகக் கிராமத்துப் பெண்தானே! அப்படிச் சொன்னால் உனக்குக் கோபம் ஏன் வருகிறது ?

ஜோன்: இப்போது நான் புதிய இராணுவத் தளபதி! பட்டிக்காட்டுப் பாவை என்று அவர் என்னை அவமதித்தது தவறு! அப்படிச் சொல்வது தப்பில்லை என்று நீங்கள் சரிக்கட்டுவதும் தவறு!

ஆர்ச்பிஷப்: உனக்குப் பதவிக் கர்வம் உச்சிவரை ஏறி விட்டது! பெரியவர் மீது குற்றம் சாற்றத் தொடங்கி விட்டாய்! இப்போது நீ இரண்டாவது பகைவரை தேடிக் கொண்டாய்! நீ எப்படி ஆர்லியன்ஸ் கோட்டைப் பிடிக்கப் போகிறாய் என்று நான் பார்க்கப் போகிறேன் ? உன்னைத் தவிர உன்னைப் பின்பற்றும் அனைத்துப் படையினரும் ஆடவர் என்பதை மறந்து விடாதே! ஆடவரை அடக்கி விடலாம் என்று வேடம் போடாதே!

ஜோன்: [அழுத்தமாக] பாதிரியாரே! என்னை படைத் தளபதியாக ஏற்றுக் கொள்ளாத எந்த ஆடவனும் என் பின்னே வரத் தயங்குவான், கவலைப் படாதீர்கள்! கோட்டையைப் பிடிக்க, எனக்குத் துணை புரிவார் கடவுள்! … [வேகமாய்த் தன் வாளை உருவி அனைவரையும் சுற்றி நோக்கி] … கடவுளின் பணிக்கு, பிரான்ஸின் விடுதலைக்கு இந்தப் பணிமங்கையுடன் சேர்ந்து யாரெல்லாம் போரிடத் தயார் ? யாரெல்லாம் ஆர்லியன்ஸ் முற்றுகையை முறிக்க என்னுடன் வருகிறீர்கள் ? யாரெல்லாம் தயார் ? கை தூக்குங்கள்!

லாஹயர்: [தன் வாளை உருவி] படை வீரர்களே! நாமெல்லாம் செல்வோம்! ஆர்லியன்ஸ் நோக்கிச் செல்வோம்! கடவுள் ஆணைக்குப் படிந்து ஆர்லியன்ஸ் செல்வோம்! பணிமங்கை தலைமையில் ஆர்லியன்ஸ் செல்வோம்!

உள்ளிருந்த படையினர்: [ஆரவாரத்துடன், தம் வாளை உருவி] செல்வோம்! செல்வோம்! ஆர்லியன்ஸ் நோக்கிச் செல்வோம்! பணிமங்கை பின்னால் ஆர்லியன்ஸ் செல்வோம்.

[ஜோன் மண்டியிட்டுத் தலை கவிழ்ந்து, கடவுளைத் துதிக்கிறாள். ஆர்ச்பிஷப்பைத் தவிர அனைவரும் மண்டியிட்டு வணங்குகிறார்கள்.]

ஆர்ச்பிஷப்: [காதுகளை மூடிக் கொண்டு, ஆங்காரமோடு மன்னரைப் பார்த்து] மன்னரே! தேவாலய அதிபதி என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை! … உங்கள் அந்தரங்க இராணுவ நிபுணரிடம் ஆலோசனை கேட்க வில்லை! இந்த சூனியக்காரி வலையில் சிக்கி, ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையை முறிக்க நம் படைகளை அனுப்பப் போகிறீர்! இது அறிவீனம்! இது ஓர் அவசர முடிவு! இது ஓர் அழிவு முடிவு!

சார்லஸ் மன்னர்: [கோபத்துடன்] போதும் உங்கள் அடுத்த போதனை! இது நான் ஆழ்ந்து தீர்மானித்த முடிவே! எனக்கு யாரும் வலை விரிக்க வில்லை! ஜோன் சூனியக்காரி இல்லை! மக்கள் எதிர்பார்த்த லோரேன் பணிமங்கை அவள்! மக்கள் ஜோனை நம்புகிறார்! நானும் ஜோனை நம்புகிறேன்!

ஆர்ச்பிஷப்: [ஆங்காரமாய்] நான் அவளை நம்பவில்லை! நாட்டை இன்னும் நாசமாக்க வந்திருக்கிறாள் இந்த நங்கை! நமது படைகளை ஆங்கிலப் பிசாசுகள் நசுக்க வழிவகுத்து விட்டாள் இந்த நங்கை! இந்த சூனியக்காரி முன்பாக நீங்கள் என்னை எதிர்ப்பது, எனக்கு அவமானம்! போகிறேன் மன்னரே! போகிறேன்! [வேகமாய் வெளியேறுகிறார்]

(இரண்டாம் காட்சி முற்றும்)

****

‘துணைத் தளபதி, துனாய்ஸ்! இது என் ஆணை! படைவீரன் ஃபால்ஸ்டாஃப் இப்பாதையில் கடந்து போவதை நீவீர் அறிந்த உடனே, எனக்குத் தகவல் கொடுக்க வேண்டும்! எனக்குத் தெரியாமல் அவன் என்னைத் தாண்டிச் செல்வானே ஆகில், உன் தலை துண்டிக்கப்பட உத்தரவு இடுவேன் என்பதை உறுதியாக அறிவிக்கிறேன்! ‘

‘எ,பி,சி எழுத்துக்கள் எனக்குத் தெரியா! ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்! பிரிட்டாஷ் படை பிடித்திருக்கும் ஆர்லியன்ஸ் கோட்டையை விடுவித்து, ரைம்ஸ் மன்னராக சார்லஸை முடி சூட்டுவதற்குச் சொர்க்கபுரி வேந்தர் ஆணை இட்டு என்னை அனுப்பி யிருக்கிறார் என்பது. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘ஆடம்பர உடைகள் அணிந்து நானிருப்பதை நம்பாது, வேலைச் சுறுசுறுப்பில் நான் யாரென்பதைக் கண்டு கொள்ளாது உலவும் ஆடவர், என்னைப் பழித்தோ அல்லது என்னை வெறுத்தோ புரியம் ஒவ்வோர் எதிர்ப்புக்கும், (என் மீது கனிவு கொண்டு) நான் பதிலாக எதிரடி கொடுப்பேன்! ‘

மரீயா ஜாஸ்திரிஸிபிஸ்கா [Maria Jastrezebska in ‘Warrior Woman ‘ (1953)]

மூன்றாம் காட்சி

காலம்: ஏப்ரல் 29,1429

இடம்: பிரான்ஸின் ஆர்லியன்ஸ் கோட்டை.

நேரம்: மாலை வேளை.

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. துனாய்ஸ், ஆர்லியன்ஸ் கோட்டை முன்பாக ஓடும் லோயர் நதியின் தென்கரையில் இருக்கும் பிரெஞ்ச் துணைத் தளபதி.
 2. துனாய்ஸின் பணியாள்.
 3. ஜோன் ஆஃப் ஆர்க், பிரதம ஆணைத் தளபதி [Commander-in-chief]
 4. துனாய்ஸின் கோட்டைப் பாதுகாப்பாளர்கள்.
 5. பிரெஞ்ச் படைவீரர்கள்.

அரங்க அமைப்பு:

[ஆர்லியன்ஸ் கோட்டையின் முன்பாக ஓடும் லோயர் நதியின் தென்கரையில் இருக்கும் ஒரு சிறு கோட்டையில் துணைத் தளபதி துனாய்ஸ் சிந்தனையுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறார். நதியில் காற்று எப்புறமிருந்து அடிக்கிறது என்று இடையிடையே பார்த்துக் கொள்கிறார். சுமார் 26 வயதுடைய துனாய்ஸ் இராணுவ உடை அணிந்து, திடகாத்திரமாய் உடல் வலுப் பெற்று ஆறடி உயரத்தில் உள்ளார். பக்கத்தில் அவரது பணியாள் நதி ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ஆங்கிலப் படைகள் லோயர் நதியின் வடபுறக் கோட்டையின் மேல் நின்று கண்காணித்து வருகிறார்கள்.]

துனாய்ஸ்: (நடந்து கொண்டிருப்பதை நிறுத்தி நதியின் மேலோட்டத்தில் காற்று மேற்கு நோக்கி அடிக்கிறதா என்று வெறுப்புடன் பார்த்துவிட்டுத் தலையை அசைக்கிறார். பிறகு புலம்புகிறார்.) அட கடவுளே! மேற்குக் காற்று! எப்போது மேற்குக் காற்று அடித்து எங்களைக் கரை சேர்க்கும் ? காற்றே! உன் மூச்சை மேற்கு நோக்கி விடமாட்டாயா ? கிழக்கு நோக்கி மூச்சு விடாதே! காற்றே! உன்னை மனதாரச் சபிக்கிறேன்! ஆங்கிலத் துரோகிகளை விரட்ட வேண்டும், நாங்கள்! அடி காற்றே, அடி! மேற்கு நோக்கி அடி! நதியோட்டத்தை எதிர்க்கும் கிழக்குக் காற்றே! நீ எப்போது மூச்சு நின்று சாவாய் ? கிழக்குப் பேய்க் காற்றே! திரும்பிப் பார்! திசைமாறி அடி! மேல் நோக்கி அடி!

பணியாள்: [தாவி வந்து] அதோ! அங்கே! அதோ பாருங்கள்! அங்கே போகிறாள் அவள்!

துனாய்ஸ்: [கனவிலிருந்து விழித்துக் கொண்டு பரபரப்புடன்] எங்கே ? யார் போவது ? பணிமங்கை ஜோன் ஆஃப் ஆர்க்கா ? எங்கே ? எங்கே போகிறாள் ? எனக்குக் காட்டு!

பணியாள்: இல்லை ஸார்! அங்கே போவது மீன்கொத்திப் பறவை! நீலப் பறவை மின்னல் போல் நீருக்குள் பாய்கிறது!

துனாய்ஸ்: [ஏமாற்றம் அடைந்து] மீன் பிடிக்கும் பறவையா நான் எதிர்பார்ப்பது ? மடையா ? உன்னைத் தூக்கி நதியில் வீசி விடுவேன்!

பணியாள்: [பயப்படாமல்] அதோ பாருங்கள்! அடுத்து ஒரு மீன்கொத்தி! என்ன ஆனந்தமாய்ப் பறக்கிறது!

துனாய்ஸ்: [கோபத்துடன்] முட்டாள்! முதல்தரம் சொன்னது காதில் விழ வில்லையா ? பணிமங்கை ஜோன் வருகிறாளா என்று பாருடா! மேற்கு நோக்கிக் காற்றடிக்குதா என்று பாருடா! மீன்கொத்தி பின்னாலே போகாமல், காற்று மேற்கு நோக்கி அடிக்க வேண்டு மென்று மண்டியிட்டுக் கடவுளை வேண்டிக்கொள்!

பணியாள்: ஸார்! நான் மண்டி யிட்டாலும், மன்றாடினாலும் காற்றை நம் திசைக்கு மாற்ற மாட்டார், கடவுள்! காற்றுக்குக் கண்ணில்லை! அதற்குத் திக்கும் தெரியாது! திசையும் தெரியாது! திசை காட்டும் கருவியை அதன் காதில் மாட்டவும் முடியாது! சூரியன் விடும் வெப்ப மூச்சிலே கிளப்புகிறது காற்று! பூமி பம்பரமாகச் சுற்றுவதால் திசை மாறுகிறது காற்று! நீங்களும், நானும் காற்றைக் கட்டுப்படுத்த முடியாது!

காவலன்: [ஏதோ குதிரைக் காலடிச் சத்தம் கேட்டு] நில்! … யார் அது ? நிறுத்து குதிரையை! [ஜோன் ஆஃப் ஆர்க் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கி வருகிறாள்]

ஜோன்: [கூர்ந்து நோக்கி] … என்னைத் தெரியவில்லையா ? நான்தான் பணிமங்கை, ஜோன். பிரெஞ்ச் படையின் புதிய பிரதம ஆணைத் தளபதி! [காவலன் இரண்டு கால்களையும் ஒருங்கிணைத்து, வலது கையால் ஜோனுக்கு இராணுவ மரியாதை செய்கிறான்.]

துனாய்ஸ்: [காதில் கேட்டு உடனே] பணிமங்கையை உள்ளே அழைத்து வா!

[ஜோன் ஆஃப் ஆர்க் முழு இராணுவக் கவச உடை அணிந்து கம்பீரமாக, ஆவேசமாக உள்ளே நுழைகிறாள். கிழக்கு நோக்கி அடிக்கும் காற்று சற்று தணிந்து நிற்கிறது. துனாய்ஸ் அதைக் கவனிக்காது, ஜோனை முதலில் வரவேற்க நோக்குகிறார்.]

ஜோன்: [அழுத்தமாக] நீங்கள்தான் ஆர்லியன்ஸ் கோட்டைக் காவல் தளபதியா ?

துனாய்ஸ்: [மெதுவாகத் தன் இராணுவச் சின்னத்தைக் காட்டி] ஆமாம்! நான்தான் துனாய்ஸ். இதோ பார், எனது இராணுவச் சின்னத்தை! … நீதான், ஜோன் பணிமங்கையா ?

ஜோன்: [அழுத்தமாக] நிச்சயமாக நான்தான் பணிமங்கை!

துனாய்ஸ்: [ஆர்வமாக] எங்கே உன் படைவீரர்கள் ? நீ மட்டும் வருகிறாயா ?

ஜோன்: தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள், வீரர்கள். உங்களைத் தனியாகக் காண நான் மட்டும் முன்னால் வந்தேன். நம் படை வீரர்கள் என்னை ஏமாற்றி விட்டனர்! லோயர் நதிக்குத் தப்பான திசையில் என்னை அழைத்து வந்து விட்டார்கள்! எனக்கும் இது தெரியாமல் போனது!

துனாய்ஸ்: [அழுத்தமாக] நான்தான் அப்படி அழைத்து வரச் சொல்லி யிருந்தேன்! அவர்கள் மீது தப்பில்லை!

ஜோன்: [ஆங்காரமாக] ஏன் அப்படிச் செய்தீர் ? ஆங்கிலப் படை அந்தப் பக்கம் உள்ளது! இந்தப் பக்கம் அழைத்து வர ஏன் உத்தரவு விடுத்தீர் ?

துனாய்ஸ்: ஆங்கிலப் பட்டாளம் இரண்டு பக்கமும் உள்ளது! இங்கிருந்து தாக்குவதுதான் சரியானது!

ஜோன்: ஆனால் நதிக்கு அக்கரையில் இருக்கிறது, ஆர்லியன்ஸ்! ஆற்றுக்கு அப்புறமிருந்து நாம் போரிடுவதுதான் வெற்றி தரும். இப்போது எப்படி நாம் யாவரும் ஆற்றைக் கடப்பது ?

துனாய்ஸ்: [சற்று கடுமையாக] நதியில் ஒரு பாலம் உள்ளது. கவலைப்பட வேண்டாம்.

ஜோன்: பாலம் இருக்கிறதா ? நல்ல வசதிதான்! அப்படி என்றால் நாமெல்லாம் பாலத்தைக் கடந்து அவர் மேல் விழுந்து தாக்குவோம்.

துனாய்ஸ்: அப்படி எளிதான வழியில்லை அந்தப் பாலம்! பாலத்தின் மீது பகைவர் யாரும் பாதங்களை வைக்க முடியாது!

ஜோன்: யார் அப்படிச் சொல்வது ?

துனாய்ஸ்: நான்தான் அப்படிச் சொல்கிறேன்! என்னைவிட மூத்தவரும், மூளை உள்ளவரும் கூறுவது அப்படித்தான்!

ஜோன்: [அழுத்தமாக] அப்படியா ? உங்கள் படையில் இருக்கும் மூத்தவரும், மூளை உள்ளவரும் களிமண் தலையர்கள்! உங்களை முட்டாளாக்கி விட்டார்கள், அவர்கள்! இப்போது என்னையும் முட்டாளாக்க முயல்கிறார், நதியின் தப்பான பக்கத்தில் என்னை அழைத்து வந்து! தெரியமா உங்களுக்கு ? நான் கொண்டு வந்திருக்கும் ஆயிரக் கணக்கான படைகள்போல் இதுவரை எந்த இராணுவத் தளபதிக்கும் அளிக்கப் பட்ட தில்லை!

துனாய்ஸ்: [கேலியாக] அவர்கள் எல்லோரும் உனது படைகளா ? நீயா படை திரட்டி இங்கு கொண்டு வந்திருக்கிறாய் ?

ஜோன்: [அழுத்தமாக] இல்லை! நான் அழைத்து வரும் படைகள் அனைத்தும் கடவுள் அளித்தவை! …. அது சரி! பாலத்தை நெருங்க எப்படிப் போக வேண்டும் ?

துனாய்ஸ்: [கேலியாக] பணிமங்கையே! அவசரப்படுகிறாய் நீ! சற்று பொறுமை தேவை.

ஜோன்: [கோபத்துடன்] தளபதியாரே! பொறுத்திருக்கும் வேளையா இது ? நமது பகைவர் நம் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்! நாம் ஒன்றும் செய்யாமல், சும்மா நின்று கொண்டிருக்கிறோம். அந்தோ, என் கடவுளே! நாம் ஏன் இப்போதே தாக்காமல் சும்மா இருக்க வேண்டும் ? உங்கள் அச்சத்தை நீக்குகிறேன் நான்! சொல்வதைக் கேளுங்கள்.

துனாய்ஸ்: [கேலியாக கையை வீசிப் புறக்கணித்து] அடடா! இளநங்கையே! நீ எனது பயத்தை அகற்றப் போகிறாயா ? ஆச்சரியமாக இருக்கிறது! … வா, காட்டுகிறேன், உனக்குப் பாலத்தின் நிலையை! நதியைக் கடந்து செல்வதில் உள்ள சிரமத்தைச் சொல்கிறேன். …. அதோ, பார்த்தாயா ? ஆற்றுக்கு அப்புறமுள்ள இரு கோட்டைகள். அங்கே ஆங்கிலப் படைகள் நம்மைவிடப் பத்து மடங்கு சேனைகளை வைத்துக் கொண்டு பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.

ஜோன்: அந்தக் கோட்டைகளும், சுற்றியுள்ள வயல்களும் கடவுளுக்குச் சொந்தமானவை. கோட்டை வயல்களை ஆங்கிலப் பிடாரிகள் திருடிக் கொண்டனர்! அவற்றைக் கடவுள் நமக்கு அளித்தது. நான் போரிட்டு அவற்றை எல்லாம் கைப்பற்றுவேன்.

துனாய்ஸ்: [கேலியாக] தனியாக நீயா கோட்டையைப் பிடிக்கப் போகிறாய்!

ஜோன்: நமது படைகள் கைப்பற்றும்! நான் முன்னின்று வழிநடத்துவேன்!

துனாய்ஸ்: [ஏளனமாக] பணிமங்கையே! பார்! எந்த மனிதனும் உன்னைப் பின்பற்றப் போவதில்லை!

ஜோன்: யாரும் என் பின்னால் வருகிறாரா என்று திரும்பிப் பாராமல் நான் முன்னே செல்வேன்! ஆனால் என் பின்னால் எத்தனை பேர் வருகிறார் என்று கண்டதும், நீங்கள் மயக்கமுற்று விழாமல் இருக்க வேண்டும்!

துனாய்ஸ்: [வியப்படைந்து] பணிமாதே! நீ ஒரு சிறந்த படை வீராங்கனை! பார்த்தால் உனக்குப் போரின்மேல் காதல் என்று தெரிகிறது!

ஜோன்: இல்லை தளபதியாரே! எனக்கு மதத்தின் மீது காதல்! கடவுள் மீது காதல்! கடவுள் பாசமே எனக்கு நாட்டுப் பாசத்தை உண்டாக்குகிறது! பிரெஞ்ச் மக்கள் விடுதலை பெறவும், பிரெஞ்ச் மன்னர் மகுடம் சூடவும், கடவுளே எனக்குக் கட்டளை இட்டுள்ளார்! அதனால் போரிடப் போவது என் கடமை ஆகிவிட்டது! ஆனால் மெய்யாக எனக்குப் போரின் மீது காதல் கிடையாது! மனிதரை மனிதர் கொல்வது எனக்குப் பிடிக்காதது! ஆனால் பிரெஞ்ச் விடுதலைக்கு மனிதர் உயிர் கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டது!

துனாய்ஸ்: ஆச்சரியமாக இருக்கிறதே! எனக்கு இரட்டை மனைவிகள்! அதுபோல் உனக்கு இரட்டைக் கணவர் மீது விருப்பம் உண்டா ?

ஜோன்: [வெறுப்புடன்] சீ! என்ன பேச்சு இது ? எனக்கு ஒற்றைக் கணவன் மீதே விருப்பம் இல்லை! நான் யாரையும் மணம் செய்து கொள்ளப் போவதில்லை! நான் ஒரு படையாளி! நான் ஒரு பெண்ணாக என்னைக் கருத வில்லை! பெண்ணைப் போல் உடை அணிய எனக்கு விருப்ப மில்லை! பெண்கள் ஏங்கும் பொருள்கள் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை! பெண்கள் காதல் கணவனைப் பற்றியும், மடி நிறையப் பணம் சேர்வதைப் பற்றியும் கனவு காண்பவர்கள்! எனக்குப் படைவீரரை நடத்திச் செல்ல ஆசை! பீரங்கிகளைப் பயன்படுத்திக் குறிவைத்துப் பகைவரைத் தகர்த்த ஆசை!

துனாய்ஸ்: ஆனால் அந்த பீரங்கி யானைகள் வேகமாகச் செல்ல மாட்டா! ஆமை வேகத்தில்தான் அவை நகரும். பாதி நேரம் பீரங்கிகளோடு படைகள் மாரடிக்க வேண்டும்! பிரச்சனைகள் பெருகி முடமாகி விடும்! பீரங்கி என்றால் படைகளுக்குத் தலை வேதனை!

ஜோன்: துணைத் தளபதியாரே! குதிரைப் படைகள் கோட்டை மதிலை உடைக்க மாட்டா! பீரங்கிகள் இல்லாமல் நாம் கோட்டையை நெருங்க முடியாது! உங்கள் வசம் போதிய துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உள்ளனவா ? பீரங்கிகள் சீராக வெடிக்குமா ? பலத்த மரக்கட்டை ஏணிகள் எத்தனை உள்ளன ?

துனாய்ஸ்: முப்பது ஏணிகள் உள்ளன! இருபது பீரங்கிகளில் பாதி செம்மையாக வேலை செய்யலாம்.

ஜோன்: கோட்டையை நெருங்கியதும், நான்தான் முதலில் ஏணியில் ஏறுவேன்! பின்னால் நீவீர் ஏறி வருவீரா ?

துனாய்ஸ்: பணிமங்கையே! நீ வழி நடத்தும் தளபதி! ஏணியில் நீ ஏறக் கூடாது! அது படை வீரரின் கடமை! ஏணியில் நீ ஏறினால், முதல் அம்பால் அடிபட்டு நீ வீழ்த்தப் படுவாய்! வேண்டாம். உனக்குப் போர்க்களத்தில் அபாயம் நேர்ந்தால், உன் பின்னால் வரும் படைவீரர் அதிர்ச்சி அடைந்து மனமுடைந்து போவார்! ஜோன்! உன்னைப் புனித அணங்காக நான் வரவேற்கிறேன்! போர் வீரனாக ஏற்க முடியாது! என் ஆணைக்கு அடி பணிய, அசுரப் படைவீரர் அநேகர் இருக்கிறார். நீ இறுதி வரை உயிருடன் இருந்து, படைகளுக்கு உறுதி அளித்து, வெற்றி மாலை சூட வேண்டும்.

ஜோன்: துணைத் தளபதியாரே! நான் புனித அணங்கில்லை! நான் ஒரு போர் நங்கை! உயிரைக் கையில் பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்பவள் ஜோன் என்று நினைக்காதீர்! கடவுள் என்னைக் காப்பார். புனித தேவதை காதிரைன் ஆலயப் பீடத்தில் கிடைத்த வாள் என்னிடத்தில் இருக்கிறது. குதிரையின் மீது பகைவரைத் தாக்க முன்னேறும் போது, பயன்படுத்தும் சூலாயுதம் என்வசம் உள்ளது! என்னுயிர் பெட்டிக்குள் வைக்கும் தங்கக் கட்டி இல்லை! எல்லாரது உயிரையும் போன்ற மண்ணாங் கட்டிதான் அது! என் நெஞ்சில் சிறிதளவும் அச்சமில்லை! முன்னின்று நான் படைகளை வழி நடத்துவேன்! உன் படையினர் என்னைப் பின்பற்ற வேண்டும். நிச்சயம் நான் அப்படிச் செய்வேன்! நீங்கள் அதை நிறுத்தக் கூடாது!

துனாய்ஸ்: நமது படைகளில் பாதி, படகில் நதியைக் கடந்து, ஆங்கிலேயரைப் பின்புறமாகத் தாக்க வேண்டும். நமக்கு மேற்குக் காற்றின் உதவி தேவை! இப்போது அடிக்கும் கிழக்குக் காற்று, நதியின் மேலோட்டத்தில் ஏறும் படகுகளைக் கவிழ்த்தி விடும்!

ஜோன்: [உடனே திறமையாக] அப்படியானால் கட்டுமரங்களில் பெரிய பீரங்கிகளை ஏற்றிக் கொண்டு படைவீரர் ஆற்றைக் கடக்க வேண்டும். ஆங்கிலப் படைகளைப் பின்புறம் தாக்கப் பெரிய பீரங்கிகள் எனக்குத் தேவைப்படும். குறுகிய பாலத்தின் மூலம் பெரிய பீரங்கிகளைத் தள்ளிக் கொண்டு வர முடியாது.

துனாய்ஸ்: நல்ல யோசனை! கட்டுமரங்கள் நம்மிடம் தயார். படைகளும் நம்மிடம் தயார். ஆனால் கடவுள் தயவு இப்போது தேவை! அதற்கு உன் உதவி நிச்சயம் தேவை! காற்று மேற்கு நோக்கி அடிக்க நீ கடவுளை துதிக்க வேண்டும். வா! உன்னை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கிறேன். பணிமங்கை வேண்டிக் கொண்டால், காற்றின் திசை மாறும். கட்டுமரத்தில் படைகள் அக்கரை சேரும்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

ஜோன்: இல்லை! ஆலயத்துக்குப் போவது என் ஆசைதான். ஆலய மாதாவைத் தொழுவது என் ஆசைதான். ஆனால் இப்போது ஆலயத்துக்கு போக எனக்கு விருப்ப மில்லை. வெறும் பிரார்த்தனை மட்டும் பிரிட்டாஷ் படைகளை பிரான்ஸிலிருந்து விரட்டப் போவதில்லை. நாம் மெய்வருந்திப் போரிட்டால்தான், நமக்குக் கடவுளின் உதவி கிட்டும்!

துனாய்ஸ்: ஜோன்! நீ பிரார்த்தனை செய்தால்தான், காற்றின் உதவி கிடைக்கும். வா, ஆலயத்துக்குச் செல்வோம்.

ஜோன்: துனாய்ஸ்! இப்போது நேரமில்லை! நான் இங்கிருந்தே மாதாவைத் துதிக்கிறேன். [தரையில் மண்டியிட்டு கைகளைச் சேர்த்து வானை நோக்கிக் கடவுளைத் தொழுகிறாள்] ….

பணியாள்: [நதியைப் பார்த்து] ஸார், பாருங்கள்! நதியைப் பாருங்கள்! … பணிமாதே! பாருங்கள்!

துனாய்ஸ்: என்னடா ? அலறுகிறாய். எதைப் பார்க்க வேண்டும் ? உன் மீன்கொத்திப் பறவையா ?

பணியாள்: இல்லை ஸார்! இல்லை! காற்றைப் பாருங்கள்! காற்றின் திக்கைப் பாருங்கள்! நாம் தவம் செய்யும் காற்று! மேற்கு நோக்கி அடிக்கிறது! காற்றுள்ள போதே, கட்டுமரங்களை ஓட்டிக் கொள்வோம்! [குதித்துப் பரவசம் அடைகிறான்] காற்றடிக்குது! காற்றடிக்குது! மேற்கு நோக்கிக் காற்றடிக்குது!

ஜோன்: துனாய்ஸ்! அதோ! பாருங்கள்! எனது படைகள் வருவதை!

[அரசர் அனுப்பிய குதிரைப் படைகள், காலாட் படைகள் அனைத்தும் வருகின்றன]

துனாய்ஸ்: கடவுள் நம் வேண்டுகோளுக்கு இணங்கி விட்டார்! காற்றின் திக்கு மாறிவிட்டது! … பணிமங்கையே! நீ வழி நடத்து! ஆணையிடு! உன் படைகள் பாலத்தின் மீது செல்லட்டும்! எனது படைகள் நதியைக் கடந்து ஆர்லியன்ஸ் கோட்டைக்குப் பின்புறம் வந்து உன் படைகளைச் சந்திக்கும்.

ஜோன்: [கண்ணீர் பொங்கி, தன் குதிரையில் ஏறி உரத்த குரலில் படைவீரர் முன்பாக] என்னருமை பிரெஞ்ச் படை வீரர்களே! நமது விடுதலைப் போர் தொடங்கி விட்டது! கடவுள் கட்டளையை நிறைவேற்றுவோம்! புறப்படுங்கள்! நமது அரிய தருணம் வந்துவிட்டது! புறப்படுங்கள், ஆர்லியன்ஸ் நோக்கி! ஆங்கிலப் பிசாசுகளை நாட்டை விட்டு விரட்டுவோம்! …. புறப்படுங்கள்!

படைவீரர்கள்: [எல்லாரும் இணைந்து] பணிமங்கை ஜோனை பின்பற்றுவோம்! வெற்றி நமக்கே! வெற்றி நமக்கே! வெற்றி நமக்கே! [ஜோனைப் பின்பற்றி படைவீரர் செல்கிறார்கள்]

(மூன்றாம் காட்சி முற்றும்)

****
‘கிறித்துவப் பாதிரியாரே! நீங்கள் எனக்கு தீர்ப்பளிக்க வரும் நீதிபதி என்று கூறுகிறீர்! அதற்குத் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் என்மீது பொய்க் குற்றம் சாட்டித் தீர்ப்பளிக்கக் கூடாது என்று மட்டும் எச்சரிக்கை செய்கிறேன். அவ்விதம் எனக்குத் தீர்ப்புக் கூறினால், நீங்களே உங்களை அபாயத் துன்பத்தில் தள்ளி விடுகிறீர் என்பதை நான் அறிவிக்கிறேன். அந்த தவறுக்காக கடவுள் உங்களுக்குத் தண்டனை அளித்தால், அதை முன்னறிவித்து என் கடமையைச் செய்து முடித்ததாகச் சொல்லிக் கொள்வேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். முதல் நாள் காலில் அடிபட்டுக் காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் ஆங்கிலே யரின் தூரெல்லஸ் கோட்டையைத் [Fort Les Tourelles] தாக்கும் போது வலது நெஞ்சுக்கு மேல் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள்! உடனே அன்றைய தினப்போர் நிறுத்தமாகி, ஜோன் சிகிட்சை பெற கூடாரத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள். ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையில் எடுத்ததாக அறியப்படுகிறது! அன்றைய மாலைப் பொழுதில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜோன், பிறகு வலியைப் பொறுத்து எழுந்து கொண்டு படைகளை மீண்டும் திரட்டி ஆவேசமாகத் தாக்கி, தூரெல்லஸ் கோட்டையிலிருந்து ஆங்கிலப் பகைவரை ஓட்டினாள். ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடித்த பிறகு லோரென் பணிமங்கை ஜோனை [Maid of Lorraine], ஆர்லியன்ஸ் பணிமங்கை [Maid of Orleans] என்று பலர் அழைக்கத் துவங்கினர்.

நான்காம் காட்சி (பாகம்-1)

காலம்: மே மாதம் 10, 1429
இடம்: ஆங்கிலேயர் தங்கியுள்ள ஒரு கூடாரம்
நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. செல்வந்தப் பிரபு வார்விக் கோமகனார், [Earl of Warwick, Richard De Beauchamp]
2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England].
3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
4. கோமகனாரின் காவலன்.

அரங்க அமைப்பு:

[ஆங்கிலேயரின் காவற் கூடாரம். 50 வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர் ஸ்பென்ஸர் நாற்காலியில் அமர்ந்து கோபத்தை அடக்கிக் கொண்டு யோசனையில் இருக்கிறார். 46 வயதுடைய ஆங்கிலப் பிரபு, செல்வந்தக் கோமகனார் பைபிளை ஆத்திரமோடு புரட்டிக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.]

கார்டினல்: [நாடியில் கைவைத்து] கோமகனாரே! பைபிளைப் புரட்டி எதைத் தேடுகிறீர் ? நாற்காலியில் அமர்ந்து கொண்டு அமைதியாகத் தேடினால் தேடுவது கிடைக்கும். நின்று கொண்டு நீங்கள் தேடினால், வேண்டியது கிடைத்தாலும் தாண்டிப் போய்விடும்!

வார்விக் கோமகனார்: [பாதிரியை நோக்காமலே] சாத்தான், மந்திரவாதிகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தோண்டிப் பார்க்கிறேன்! தேவ தூதர்களைத் தவிர மற்றவர், கடவுளோடு வாக்குத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியமா என்பதுதான் என் ஐயப்பாடு!

கார்டினல்: சாத்தான், மந்திரவாதிகள் எப்படி உங்கள் கண்ணில் பட்டார்கள் ? எங்கே அவர்கள் அட்டூழியம் இழைத்து வருகிறார்கள் ? நாட்டில் அட்டூழியம், அநீதி, அழிவுகள் நேருவதெல்லாம், ஐயமின்றிச் சாத்தானின் வேலைகள்தான்!

வார்விக் கோமகனார்: பேரளவு பராக்கிரம் உடைய பிரிட்டாஷ் படையினரை, ஆர்லியன்ஸில் தோற்கடித்தது சாத்தான் வேலையா ? அல்லது மந்திர வேலையா ?

கார்டினல்: (உதட்டைப் பிதுக்கி) ஓ! ஆர்லியன்ஸ் கோட்டை வீழ்ச்சியைச் சொல்கிறீரா ? அது என்ன, நமக்குச் சிறிய தோல்வி தானே! கோட்டைக்குப் பின்புறமாகச் சென்று தாக்கினால், ஏன் அது விழாது ? இது எப்படிச் சாத்தான் கைவேலை ஆகும் ? போர்க் களத்தில் மந்திரக் கோலுக்கு வேலை ஏது ?
கோமகனார்: [ஆங்காரமுடன்] பாதிரியாரே! முதலில் தோற்றுப் போனது, ஆர்லியன்ஸில்! அது நமக்குப் பெரும் தோல்வியே! அடுத்து ஆங்கிலேயர் இழந்தது ஜர்காவ், மீயூங், பியூஜென்ஸி! அடிக்குமேல் அடி! அடுத்து அடுத்து அடி! இதுவரை ஆங்கிலப் படையினர் இப்படி மண்ணைக் கவ்விய தில்லை! இப்போது பட்டாயாவில் பிரிட்டாஷ் படையினர் கசாப்புக் கடைபோல் துண்டு துண்டாய் நறுக்கப் படுகிறார்கள், தெரியுமா ? பிரிட்டாஷ் தளபதி ஸர் ஜான் டால்பட் கைது செய்யப் பட்டிருக்கிறார், தெரியுமா! இதைவிடக் கேவல நிலை நமக்கினி வரப் போவதில்லை! என்னிதயம் கொதித்து வேகிறது! இவை எல்லாம் ஐயமின்றி அந்த சூனியக்காரி ஜோனின் மந்திர வேலையைத் தவிர, மெய்யாக ஒரு மூடப்பெண் செய்யக் கூடிய போர்த் திறமை யில்லை!

கார்டினல்: [கர்வமாக] யாம் பணிமங்கை ஜோனை தேவ மாதாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்! மந்திரக்காரிக்கு இவ்விதப் போர்த் தந்திர மிருக்குமா என்பதில் எமக்கு ஐயப்பாடு உண்டு! ஆனால் உங்கள் ஆங்காரச் சொற்கள் என்னை மிகவும் அசைத்து விட்டன! உமது இதயக் கொதிப்பு இப்போது எமது நெஞ்சைப் பற்றி விட்டது! போர்த் தளபதி ஜான் டால்பட்டை கைது செய்து விட்டார்களா ? என்னால் நம்ப முடிய வில்லை! தூங்கிக் கிடந்த பிரெஞ்ச் படை, பிரிட்டாஷ் வேங்கைப் படைகளை முறியடிப்பதை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, கோமகனாரே! எனக்கு வரும் ஆங்காரத்தில் என் புனித அங்கியைப் பிசாசின் மீது வீசி எறிந்து விட்டு, கையில் வாளேந்தி போர்க்களம் புகவேண்டும், அந்த கன்னியின் கழுத்தை என் கைகளாலே நெறிக்க வேண்டு மென்று எனக்குத் துடிக்கிறது!

கோமகனார்: [கண்களைப் பெரிதாக்கி பாதிரியை வியப்போடு நோக்கி] … பாதிரியாரே! இப்படிப் பேசுவது ஒரு கிறித்துவத் தேவதூதரா என்பதை என்னால் நம்ப முடியவில்லை! உங்கள் புனித அங்கியை வீசி எறிந்து விட்டு, உண்மையாக நீங்கள் போர் வீரனாய் ஆக முடியுமா ? ஓர் அப்பாவிப் பெண்ணை நீதி மன்றத்தில் நிறுத்தாமல், கழுத்தை நெறித்துக் கொல்ல நீங்கள் மெய்யாகத் தயாரா ? சூனியக்காரி ஜோனைப் பிடித்து நீதி மன்றம் வழக்குத் தொடர வேண்டும்! ஆனால் வெற்றிக்குமேல் வெற்றி அடைந்ததற்குக் காரணம், சூனியக்காரி இல்லை! வெற்றிக் காரண கர்த்தா, பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ்! அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அதிக காலம் பிரெஞ்ச் மண்ணில் நாம் அதிகாரம் செலுத்த முடியாது என்னும் அச்சம் என் நெஞ்சில் புகுந்து விட்டது இப்போது!

கார்டினல்: [பயந்துபோய்] … கோமகனாரே! அந்த இழிவு நிலைக்கு வந்து விட்டதா நமது படைப்பலம் ?

கோமகனார்: [சிந்தனை மிகுந்து, பைபிளைக் கையில் தூக்கி] ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஏசு நாதர் தன் மலைப் பிரசங்கத்தில் இதைச் சொல்லி யிருக்கிறார்: மாந்தர்கள் இரண்டு தலைவருக்கு ஊழியம் செய்ய முடியாது! பிரான்சில் ஒருபுறம் ஆங்கில ஆதிக்கம்! மறுபுறம் பிரெஞ்ச் அடிமை ஆட்சி! இந்த இரட்டை ஊழல் ஆட்சிகளுக்கு இடையிலே பிரெஞ்ச் மக்கள் மூச்சு முட்டிப் போராடி வருவது உமது கண்களுக்கும் தெரியாமல் போகாது! அத்துடன் கிறித்துவ மத ஆலயத்தின் கட்டுப்பாடுகள் ஒருபுறம்! நமது பாதங்களைக் கழுவும் நிலாதிபதிப் பிரபுக்களின் நெருக்கம் இன்னொரு புறம்! சூனியக்காரி ஜோன் இப்போது மூட்டி யுள்ளது முதல் பிரெஞ்ச் புரட்சி! நடப்பதை பாருங்கள்! இனி நடப்பதை நான் சொல்கிறேன்! ஆங்கில ஆட்சிக்கு வருகிறது இறுதி முடிவு! மதாதிபதிகளின் மடமைக்கு வருகிறது இறுதி முடிவு! நிலாதிபதிப் பிரபுக்களுக்கு வருகிறது இறுதி அழிவு! ஏன் எமக்கும், உமக்கும் கூட வருகிறது முடிவு காலம்!

கார்டினல்: [அழுத்தமான] என்னால் முற்றிலும் அதை ஒப்புக் கொள்ள முடியாது! கேளுங்கள், எங்களை யாரும் விரட்டவும் முடியாது! மிரட்டவும் முடியாது! எங்களுக்கு முடிவு என்னும் முற்றுப் புள்ளியே கிடையாது! உங்களுக்கு கிறித்துவ திருச்சவை ஆதிக்க வரலாறு எதுவும் தெரியாத தென்பது நன்றாகவே தெரிகிறது! நான் நம்பிக்கைத் தகுதியுள்ள கிறித்து திருச்சபைப் பணியாளர். எனக்கு மேல் ஆறு அதிகாரிகள் உள்ளார்! அத்தனை எளிதாக எங்களை அசைக்க முடியாது! ஆனால் உளுத்துப் போன பிரெஞ்ச் படைகள், களைத்துப் போன ஆங்கில வீரர்களை வெளுத்துத் துவைப்பதை நான் வேடிக்கை பார்க்கப் போவதில்லை! என் புனித அங்கியை அணிந்து கொண்டே, சூனியக்காரிக்கும் அவளைப் பின்தொடரும் தொண்டர் படைக்கும், என்னால் தண்டனை கொடுக்க முடியும்!

கோமகனார்: [ஆங்காரமோடு] பொறுங்கள் பாதிரியாரே! பொறுங்கள்! முதலில் நாமந்த சூனியக்காரியை பிடிக்க வேண்டும்! பிறகு அவளைக் கம்பத்தில் கட்டி உயிரோடு கொளுத்த வேண்டும்! பிறகுதான் தளபதி துனாய்ஸின் கழுத்தை அறுக்க வேண்டும், தெரிகிறதா! அதற்கு முன்பாக நான் மேன்மை மிகு பாதிரி பீட்டர் கெளஸானைக் கண்டு பேச வேண்டும்! சமீபத்தில் மந்திரக் காரியின் சொல்லோங்கி மேல்நிலைப் பாதிரி பீட்டர் கெளஸான் பதவியைப் பறித்து, அவரது மதாதிபதித் தொகுதியிலிருந்து நீக்கி யுள்ளனர்!

கார்டினல்: [அருகில் நெருங்கி கூர்ந்து நோக்கி] நீங்கள் எவ்விதம் சூனியக் காரியைப் பிடிக்கப் போகிறீர் ? அவளது மந்திர சக்திக்கு நீங்கள் அஞ்ச வில்லையா ? ஆங்கில வேங்கைப் படைகளை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விட்டாள் என்பதை ஒருநாளும் மறக்க வேண்டாம்!

கோமகனார்: [அழுத்தமாக] பயமுறுத்தாதீர்! பிரெஞ்ச் அதிகாரிக்கு நிதி அளித்து அவளை வாங்கிக் கொள்ளலாம்! கன்னியை வலை வைத்துப் பிடிப்பது கடினம்! பணமென்றால் பிணமும் வாய் பிளக்கும்! பேரளவில் அரசப் பணமுடிப்பை அளித்து மங்கையை விலைக்கு வாங்குவது எளிது!

கார்டினல்: அந்த ஒழுக்கம் கெட்ட இழுக்குப் பெண்ணுக்கா அத்தனை தொகை ?

 

கோமகனார்: பிரிட்டாஷ் பேரரசின் முத்திரைக்கு இழுக்கு அளித்தவள் பணிமங்கை! அவள் பெயரை வரலாற்றில் அழிப்பது நமது கடமை! சார்லஸ் மன்னர் படையில் சிலருக்குப் பணிமங்கை மீது தீராத வெறுப்புள்ளது என்று கேள்விப் பட்டேன். அவர்கள் முன்வந்து ஜோனைப் பிடித்து, பர்கண்டி பிரெஞ்ச் படைகளுக்கு விற்கத் தயங்க மாட்டார்கள்! பர்கண்டி அதிகாரிகள் நமக்குத் தோழர்கள், தெரியுமா ? பண முடிப்பென்றால் கண நேரத்தில் மாறி விடுவார்! ஆனந்தமாய் அதிகத் தொகைக்கு மங்கையை விற்க ஓடி வருவார்கள்! இரண்டு அல்லது மூன்று இடைத் தரகர்களுக்கு கையீடு தர வேண்டிய திருக்கும்! கவலை வேண்டாம். அந்த வேசியைக் காசுக்கு வாங்கித்தான் மாசு படுத்த வேண்டும்.

[அப்போது கோமகனாரின் காவலன் வருகிறான்.]

காவலன்: [கோமகனாரை வணங்கி] மேன்மை மிகு தேவதூதர் கெளஸான் அவர்கள் இங்கு வருகிறார்கள்.

[60 வயதாகும் பியூவாய்ஸ் பாதிரி, மகா மதாதிபதி பீட்டர் கெளஸான் கம்பீரமாக உள்ளே நுழைகிறார். காவலன் வெளியேறுகிறான். ஆங்கிலப் பாதிரியும், கோமகனாரும் எழுந்து நின்று வரவேற்று வணங்குகிறார்.]

கோமகனார்: [சிரித்துக் கொண்டு] என்னருமை மகா மதாதிபதி, கெளஸான் அவர்களே! உங்கள் வருகைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி, மகிழ்ச்சி, வந்தனம். உங்களைப் பற்றித்தான் உரையாடிக் கொண்டிருந்தோம்! உங்களை விரைவில் காண வேண்டுமென ஜான் பாதிரியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்! கடவுளே, ஓர் மகத்தான வினை புரிய உங்களை இங்கு அனுப்பி யிருக்கிறார். …. இதோ! [கார்டினலைக் காட்டி] இங்கிலாந்து கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர், எங்கள் வேந்தரின் சித்தப்பா! மதவியல் பட்டதாரி இவர்!

கார்டினல்: [மகிழ்ச்சியுடன் மண்டியிட்டு கெளஸான் கை மோதிரத்தை முத்தமிடுகிறார்.] எனது ஆழ்ந்த வந்தனம். உங்கள் கனிவான வருகையால் எங்கள் கூடாராம் கடவுளின் ஒளியைப் பெறுகிறது.

மதாதிபதி கெளஸான்: [நாற்காலியில் அமர்ந்து, மிக்க ஆர்வமோடு] வார்விக் கோமகனாரே! எதற்காக என் வருகைக்குக் காத்திருந்தீர் ? அப்படி என்ன அவசரச் சம்பவம் நேர்ந்திருக்கிறது ?

கோமகனார்: [எழுந்து நின்ற வண்ணமாய்] மாண்பு மிகு மதாதிபதி அவர்களே! நமது தலையில் இடி விழப் போகிறது! ஏழாம் சார்ல்ஸ் மன்னர் முடி சூடப் போகிறார்! முடி சூட வழி வகுத்தவள், மூடநங்கை லோரேன் பணிமங்கை! நாமதைத் தடுக்க முடியாது, வேடிக்கை பார்க்கப் போகிறோம்! விடுதலைப் புரட்சிக்கு வித்திட்டவள், பணிமங்கை! விடுதலைத் தீயை மாந்தர் நெஞ்சிலே மூட்டி விட்டவள் பணிமங்கை! பிரிட்டாஷார் தலையிலே தீயிட்டவள், பணிமங்கை! பிரான்ஸை விட்டு நாமெல்லாம் ஏகும் காலம் நெருங்கி விட்டது! நாமென்ன இப்போது செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்!

 

கெளஸான்: [பல்லைக் கடித்துக் கொண்டு அழுத்தமுடன்] அதில் ஏதும் ஐயமில்லை! சார்ல்ஸ் மன்னர் முடி சூடுவதை நாம் நிறுத்த முடியாது! லோரேன் பணிமங்கையின் மகத்தான சாதனை அது! நான் சிறிது கூட எதிர்பார்க்காதது! ஆர்லியன்ஸ் போரில் வில்லம்பால் அடிபட்டுக் கீழே வீழ்ந்த ஜோன் மடிந்து போவாள் என்று நம்பி யிருந்தேன்! மாந்திரீக சக்தியில் உயிர் பிழைத்து எழுந்து விட்டாள் என்று கேள்விப் பட்டதை நம்ப மறுத்தேன், நான்! சாகாமல் இருந்ததால் பிழைத்துக் கொண்டாள்! செத்திருந்தால் திரும்பிப் பிறந்திருக்க மாட்டள்! சாத்தான் காப்பாற்றி விட்டான் அவளை!

கோமகனார்: [எரிச்சலோடு, ஆத்திரமாய்] மகா பிரபு! பிரிட்டாஷ் படைகளுடன் நியாயமாகப் போரிட்டு வெற்றி பெறவில்லை இந்த பிசாசுப் படையினர்! இதுவரை முறையாக நெறியாகப் போர் புரிந்து, எவரும் பிரிட்டாஷாரைத் தோற்கடித்த தில்லை! இந்த வெற்றிகள் எப்படிக் கிடைத்தன என்பது புதிராக இருக்கிறது!

கெளஸான்: [புருவத்தை உயர்த்தி] நீ என்ன சொல்ல வருகிறாய் ? எனக்குப் புரிய வில்லை! முறையாக, நெறியாகத் தானே போர் நடந்தது!

கோமகனார்: [சட்டென குறுக்கிட்டு] இல்லை, கெளஸான் அவர்களே! பிரெஞ்ச் படையினர் ஒர் சூனியக்காரியைப் பகடைக் காயாய் உருட்டி, மந்திர சக்தியில் நம் படைகளைப் போரில் முடமாக்கி விட்டார் என்பது எனது எண்ணம்! அந்த மந்திரக்காரியை இழுத்து வந்து, மத நீதி மன்றத்தில் அவளை இழிவு படுத்திக் குற்றம் சாட்டித் தீயில் எரிக்க வேண்டியது உங்கள் கடமை! படிப்பறில்லாத அவள், போர்த் திறமில்லாத அவள், சூனியக்காரியாய் இருப்பதைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியா தென்பது என் முடிவு!

கார்டினல்: [எழுந்து நின்று] எனக்கு அதில் சிறிதேனும் ஐயமில்லை! அவள் ஒரு சூனிய வித்தைக்காரி!

கோமகனார்: [கார்டினலைத் தடுத்து] மேன்மை மிகு மதாதிபதி கெளஸானின் கருத்துக்கு நான் காத்திருக்கிறேன்.

கெளஸான்: [அழுத்தமாக] இந்த முடிவில் நமது ஏகோபித்த கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாது, பிறர் எண்ணத்திற்கும், விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்! …. சான்றாக முதலில் பிரெஞ்ச் நீதி மன்றம் அவளுக்கு என்ன தீர்ப்பளிக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியம்! லோரேன் பணி மங்கை பிரெஞ்ச் மாது என்பதை நாம் மறக்கக் கூடாது!

கோமகனார்: [திருத்தமுடன்] நீங்கள் … குறிப்பிடுவது …பிரெஞ்ச் காத்திலிக் நீதி மன்றம்! …. இல்லையா ?

(நான்காம் காட்சி முதல் பாகம் முற்றும்)

 

‘மெய்யாக நீவீர் என் உடலை அங்கம் அங்கமாக வெட்டி எனது ஆத்மாவைத் துண்டித்தாலும், இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! அவ்விதம் நான் எதுவும் உங்களுக்கு இனிமேல் உரைத்தால், கட்டாயப் படுத்தி என்னை நீவீர் கூற வைத்ததாக நான் பறைசாற்றுவேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘கிறித்துவத் தேவதூதரே! உங்களுடைய செத்த மரக்கிளையை வெட்டி எம்மிடம் ஒப்புவித்து விடுங்கள்! அதற்குத் தீ வைத்துக் கொளுத்துவதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ‘

பிரிட்டாஷ் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப்.

நான்காம் காட்சி தொடர்ச்சி (பாகம்-2)

காலம்: மே மாதம் 10, 1429

இடம்: ஆங்கிலேயர் தங்கியுள்ள ஒரு கூடாரம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. செல்வந்தப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England].
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. கோமகனாரின் காவலன்.

அரங்க அமைப்பு:

[ஆங்கிலேயரின் காவற் கூடாரம். 50 வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், 46 வயதுடைய ஆங்கிலப் பிரபு செல்வந்தக் கோமகனார் மற்றும் 60 வயது கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க் பணிமங்கையின் வெற்றியைக் கேள்வியுற்று, அதிர்ச்சி அடைந்து, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்க திட்டமிட்டுகிறார்கள்.]

கெளஸான்: [அழுத்தமாக] இந்த முடிவில் நமது ஏகோபித்த கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாது, பிறர் கருத்திற்கும், விருப்பு, வெறுப்பு களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்! …. சான்றாக முதலில் பிரெஞ்ச் நீதி மன்றம் அவளுக்கு என்ன தீர்ப்பளிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்! லோரேன் பணி மங்கை பிரெஞ்ச் மாது என்பதை நாம் மறக்கக் கூடாது!

கோமகனார்: [திருத்தமுடன்] நீங்கள் … குறிப்பிடுவது …பிரெஞ்ச் காத்திலிக் நீதி மன்றம்! …. இல்லையா ?

கெளஸான்: [சற்று சிந்தனையுடன்] எத்தகையப் புனிதப் பணி புரிந்திருந்தாலும், என்னதான் ஆன்மீக உணர்வு பெற்றிருந்தாலும் காத்திலிக் மதாலய மன்றங்களில் இருப்பவர், மற்ற நீதி மன்றங்களில் இருப்பவர் போன்று அதிசய விருப்பு, வெறுப்புகள் கொண்ட மனிதர்களே! இப்போது பிரிட்டாஷ் படைகளைப் பிரெஞ்ச் படையினர் கலக்கி அடித்துக் கவிழ்த்தி யிருப்பதால், காத்திலிக் ஆலய மன்றத்தில் உள்ள பிரெஞ்ச் மாந்தர், எப்படி ஏகமனதாக ஜோனைக் குற்றவாளியாகக் கருதுவார் ? அதிலும் அவளை எப்படி மந்திரக்காரி என்று இழிவாகப் பழி சுமத்துவார் ?

கார்டினல்: ஜோனின் மந்திர வேலையாக ஏன் இருக்கக் கூடாது ? பாராக்கிரம் கொண்ட தளபதி ஸர் டால்பட் தோற்கடிக்கப் பட்டுச் சிறைக் கைதியாகச் சென்ற அதிசயக் கதை எப்படி நடந்திருக்க முடியும் ? லொர்ரேன் பணி மடந்தையின் மாந்திரீக வேலைதான் இது! அதை நிரூபிக்க வழிகளைக் கண்டுபிடிக்கலாம்.

கெளஸான்: [அழுத்தமான குரலில்] நாம் எல்லோரும் நன்கு அறிவோம், ஸர் ஜான் டால்பட் ஒரு கடுமையான படைவீரர் என்பதை! ஆனால் அவர் ஓர் உயர்ந்த ஞானமுள்ள போர்த் தளபதியா என்பது கேள்விக் குரியது! ஆயினும் டால்பட்டை தோற்கடித்தது, படிப்பற்ற ஜோன் பணிமங்கை இல்லை! தோற்கடித்து கைது செய்தவர், போர்த்திறமை மிக்க பிரெஞ்ச் தளபதி துனாய்ஸ்.

கோமகனார்: [குறுக்கிட்டு] அது உண்மைதான். மண்டார்கிஸ் பகுதியில் துனாய்ஸ் என்னைத் தோற்கடித்ததை அடுத்து சொல்லப் போகிறீர் இல்லையா! நான் ஒப்புக் கொள்கிறேன், நமது சார்பில் போரிட்ட டால்பட் நெஞ்சுறுதி யில்லாத, முறையாகத் திட்ட மிடாத தளபதி! அவர் தோற்றது சரிதான்! பட்டாய் பகுதியில் தோற்று, பிரெஞ்ச் படையிடம் சரண் புகுந்ததும் சரிதான்! பிரிட்டாஷ் படை தவிர்க்க முடியாத தோல்வி இது! மேலும் நமக்குப் பெருத்த அவமானம் இது! நமது தோல்விக்கும், நாம் பட்ட அவமானத்துக்கும் காரணமான அந்த பணிப்பெண்ணைப் பழிவாங்க வேண்டும்! அவளது விஷப் பற்களைப் பிடுங்க வேண்டும்! பதிலுக்குப் பதில் அவளைப் பலர் முன்பாக அவமானப் படுத்த வேண்டும்!

கார்டினல்: [கோபம் மிகுந்து] கோமகனாரே! ஆர்லியன்ஸ் முற்றுகையின் போது, கழுத்தடியில் அம்பொன்று துளைத்துச் சென்று, வலி தாங்க முடியாமல் சிறு குழந்தை போல் கூக்குரல் இட்டாளாம் அந்தக் குமரிப்பெண்! அவளுக்கு அது மரணக் காயம்! அம்பை அகற்றிய பின்பு நாள் முழுவதும் அவளுக்கு வலியுடன் போராட்டம்! அத்தகைய மரணக் காயத்தோடு, மறுநாள் எப்படி போருக்குத் தயாரானாள் என்பது மர்மமாய் உள்ளது! அது மட்டு மில்லை. பிரெஞ்ச் படையின் கடும் தாக்குதல்களை ஆங்கிலப் படையினர் எதிர்க்கும் போது, கைக் கட்டுடன் கொடி ஏந்திய ஜோன் நமது கோட்டை வாயிலை நோக்கித் தனியாக நடந்து சென்றாளாம்! நமது படையினர் அனைவரும் மந்திர சக்தியால் கட்டிப் போட்டாற் போல் முடங்கிக் கிடந்தாராம்! எப்படி இருக்கிறது கதை ? பிச்சைக்கார பிரெஞ்ச் படையினர் பிரிட்டாஷ் படையைப் பாலத்தில் மடக்கித் தள்ளிய போது, பாலம் குப்பென தீப்பற்றி எரிந்ததாம்! மந்தை மந்தையாய் தீயில் மாய்ந்த ஆங்கிலப் படையினர் அடுத்து ஆற்றிலே மூழ்கினராம். எப்படிப் பாலம் தீப்பிடித்தது என்பது விந்தையிலும் விந்தை ? அது மாயத் தீயா ? அல்லது மர்மத் தீயா ? அல்லது மாந்திரீகத் தீயா ? அந்த மந்திர வித்தைக்காரி ஜோனுக்குத்தான் தெரியும்! இந்த மாய வேலைகள் எல்லாம் சாத்தானின் கைவேலைகள்! நரகத்தின் கதவைத் திறந்து, தீயை வெளியில் எறிந்தது மந்திர சக்தி! துனாய்ஸ் தளபதிக்கு எங்கே மாந்திரீகம் தெரியும் ? எல்லாம் மந்திரக்காரி பணிமங்கையின் கைவேலைகள்!

கோமகனார்: [உறுதியாக] கார்டினல் நமக்குப் பரிந்து பேசுவதை ஏற்றுக் கொள்கிறேன்! காப்டன் துனாய்ஸ் பெரும் போர்வீரர் என்பதை மெய்யென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இதுவரை ஆர்லியன்ஸ் எதிரே கோட்டையில் இருந்த மகா வீரர் துனாய்ஸ், மந்திரக்காரி வருவதற்கு முன்பாக ஏன் நம்மைத் தாக்க வில்லை ? எனது அழுத்தமான யூகம், துனாய்ஸ் பராக்கிரமம் பெற்றுப் பாய்ந்ததற்குப் பணிமங்கை முன்னின்றதே முற்றிலும் காரணம்!

கெளஸான்: [குறுக்கிட்டு] பணிமங்கையிடம் ஓரளவு தெய்வீக சக்தி இல்லை என்று நான் கூறவில்லை! பாருங்கள், அவளது கைக்கொடிப் படத்தில் சாத்தானோ அல்லது சனியனோ இல்லை! ஏசு பிரபுவின் படமும், அன்னை மேரி படமும் உள்ள கொடியைத்தான் கையில் ஏந்தி யிருக்கிறாள். …. யார் அவர் ? கிலாஸ்டா ? ஆற்றில் மூழ்கிய உங்கள் ஆணைத் தளபதி ? பெயர் சரியாகத் தெரிய வில்லை! மறந்து விட்டேன்.

கோமகனார்: [சற்று சிந்தித்து] கிலாஸ்டேல்! ஸர் வில்லியம் கிலாஸ்டேல்! பிரிட்டாஷ் ஆணைத் தளபதி கிலாஸ்டேல்! போர்க்களப் பராக்கிரமசாலி! அவரைப் போன்ற திறமைசாலி இனி பிறக்கப் போவதில்லை!

கெளஸான்: கிலாஸ்டெல்! ஆமாம், அவர்தான், நன்றி. அவரே இனி பிறப்பாரா என்பது ஐயமே! அவர் ஒன்றும் புனித மனிதரில்லை! போர்த் தீரராக இருக்கலாம்! நான் கூற வருவது அதுவன்று. ஆனால் பிரிட்டாஷ் மாந்தர் பலர் இப்படி நினைக்கிறார்! போரிடும் சமயம் கிலாஸ்டெல் ஆற்றில் விழுந்து மூழ்கிப் போனதற்குக் காரணம், பணிமங்கை ஜோனை வேசி, மூடச் சிறுக்கி, ஒழுக்க மில்லாதவள் எனப் பலமுறைக் கெட்ட வார்த்தையால் அவர் திட்டியது என்று சொல்கிறார்கள்!

கோமகனார்: [வெகுண்டு கெளஸான் முன்வந்து] மாண்பு மிகு தேவ தூதரரே! முடிவாக நீங்கள் எங்களுக்கு என்ன சொல்ல வருகிறீர் ? … நீங்கள் … சுற்றி வளைத்துப் பேசுவதைக் கேட்டால் …. மூடநங்கை மந்திரம் போட்டு உங்களையும் மாற்றி விட்டாள் என்று தெரிகிறது.

கெளஸான்: [நகைத்துக் கொண்டு] அவள் மெய்யாக என்னை மாற்றி யிருந்தால், இப்போது உங்கள் முன்னின்று இப்படி வாதாடுவேனா ? அவளுடைய போலி வித்தையில் மயங்கி யிருந்தால், இவ்விதப் புனித அங்கி அணிந்து, தேவ தூதனாய் ஆலயப்பணி செய்வேனா ? … சாத்தானோ, சனியனோ இந்தச் சூனியக்காரி வடிவத்தில் வந்து என்னை மாற்றப் பிறந்திருப்பாளே ஆகின் …. (பேசத் தடுமாடுகிறார்).

கோமகனார்: (குறுக்கிட்டு) நீங்கள் தடுமாற வேண்டாம்! தைரியமாகப் பேசலாம், எங்களிடம்! நீங்கள் எம்மைக் கைவிட மாட்டார் என்று நம்புகிறோம்! எங்கள் நெஞ்சில் துடித்தெழுவதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்று நிச்சயம் நம்புகிறோம். …. சொல்ல வந்ததைச் சொல்லுங்கள், தேவதூதரே!

கெளஸான்: சூனியக்காரியின் மர்ம சக்தி என்ன என்ன தீங்குகளை நமக்கு இன்னும் இழைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது! பிரெஞ்ச் மாந்தருக்கு இன்னும் என்ன என்ன நன்கொடைகளை வைத்திருக் கிறதோ எனக்குத் தெரியாது! அவற்றால் என்ன என்ன பங்கத்தை மங்கைக்கு விளைவிக்கப் போகிறதோ யாருக்கும் தெரியாது! சாத்தான் காரிருளின் வேந்தன்! சாத்தான் தாக்கினால் அவன் குறிவைப்பது அனைத்து ஆன்மீக பூமியான காத்திலிக் ஆலயத்தை! சாத்தான் அழிக்க விரும்புவது, அனைத்து மனித இனத்தின் ஆத்மாக்களை! அந்த பயங்கரச் சிதைவிலிருந்து மாந்தரைக் காத்திடக் கிறித்துவ ஆலயம் எப்போதும் கண்விழிப்பாக இருக்கிறது. அத்தகைய அபாய ஆயுதங்களில் ஒன்றாக அந்த நங்கை எனக்குத் தோன்றுகிறாள். ஜோனுக்குப் சூனியப் பேய் பிடித்து அவளை ஆக்கிரமித்துள்ளது!

கார்டினல்: எனக்குத் தெளிவாகத் தெரிகிறது, ஜோன் ஒரு மந்திரவாதி!

கெளஸான்: [கோபமாக] இல்லை! அவள் ஒரு சூனியக்காரி! மாந்திரீகம் புரியும் மங்கை இல்லை!

கோமகனார்: சூனியக்காரி, மந்திரக்காரி இந்த இரண்டில் என்னதான் வேறுபாடு ? நான் கூறுவது அவள் ஒரு மங்கையே இல்லை! மனித வடிவில் தோன்றும் மர்மப் பிறவி! இதுவரை வரலாறு காணாத ஒரு வானரப் பிறவி.

கெளஸான்: அவளே தான் மாய வித்தைகளோ அல்லது அற்புதச் சாதனைகளோ செய்பவளில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறாள். அவள் வெற்றிக்குக் காரணம் அவளது அழுத்தமான குறிக்கோள்! அதை வைத்துக் கொண்டு படைகளை நடத்திச் செல்லும் பேராண்மை! நிமிர்ந்த தலை! நேர் கொண்ட பார்வை! நேரடிப் பேச்சு! இப்பண்புகளில் ஒன்றுகூட கெட்ட வார்த்தை பேசும் உங்கள் கிலாஸ்டேலுக்கோ அல்லது காட்டெருமையான முரட்டு டால்பட்டுக்கோ கிடையாது. ஜோனுக்கு இருப்பது ஆழ்ந்த நம்பிக்கை! உங்கள் தளபதிக்கு இருப்பது ஆழ்ந்த சினம்! உறுதியான நம்பிக்கை, வலுவான சினத்தை வெல்லும் என்பதை ஜோன் நிரூபித்து விட்டாள்!

கார்டினல்: [ஆத்திரமுடன்] மாண்பு மிகு தேவதூதரே! அயர்லாந்துக்கு மூன்று தரம் கவர்னராக நியமிக்கப்பட்ட ஸர் ஜான் டால்பட்டா உங்களுக்குக் காட்டெருமையாகத் தெரிகிறது ?

கோமகனார்: [சாந்தமாகக் கார்டினலைப் பார்த்து] தேவதூதர் கெளஸான் காட்டெருமை என்று ஒப்புமை கூறுவதை நீவீர் ஏற்கா விட்டாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். .. ஆனால் தேவதூதரே! .. என் ஆசை! சூனியக்காரியை நீங்கள் சூட்டால் எரிக்க வேண்டும்!

கெளஸான்: [சினத்துடன்] நான் ஜோனை எரிக்க முடியாது! கிறித்துவ திருச்சபை மாந்தர் உயிரை நீக்க முயற்சி எடுக்காது! அவ்விதத் தண்டனை அளித்து உயிரைப் போக்குவது அதன் குறிக்கோள் இல்லை! பொது மக்கள் நீதி மன்றத்துக்கு இழுத்து வந்து தீர்ப்பளிக்காமல், ஒரு மனிதரைத் தண்டிப்பது கடவுளுக்குப் பொறுக்காது.

கோமகனார்: ஆனால் கிறித்துவ ஆலயம் மத நியதிகளுக்கு எதிராகப் போனவரை, புறம்பாகப் பேசியவரை திருச்சபை தண்டித்துள்ளது. பிரபஞ்சத்தில் பூமியை மையமாகக் கொண்டு, பரிதி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், பூத வியாழன், சனிக் கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், புவிமைய நியதியைத் திருச்சபை ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பின்பற்றி வருகிறது! அதனை எதிர்த்து பரிதி மையக் கருத்தை உறுதியாக நம்பி உரையாடி வந்தோரைச் சிறைப்படுத்திச் சித்திரவதை செய்து, கம்பத்தில் கட்டி எரித்தது வரலாறுகளில் உள்ளனவே!

கெளஸான்: [கோபத்துடன்] நடந்ததை மாற்ற முடியாது! நடக்கப் போவதைத் தடுக்கலாம்! எனது முதல் கடமை, பணிமங்கைக்குப் பாப விடுவிப்பு அளிப்பது! கிறித்துவ மதாலயத்தின் வழியாக நாடாமல், தனியாகக் நேரடியாகக் கடவுளை நாடுவது, துதிப்பது, அவருடன் உரையாடுவது யாவும் குற்றமானவை! கிறித்துவ திருச்சபையை அவமதித்து, அதைச் சுற்றிச் செல்வது தவறானது! அவ்வினைகள் யாவும் பாப வினைகள்! அந்தப் பாபங்களைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும், பணிமங்கையைத் தடுப்பது, எனது முதல் பணி! இதுவரை அவள் செய்த பாபங்களுக்கு விடுவிப்பு அருளி, உடலைக் காக்க முடியாது போயினும் அவள் ஆத்மாவைக் காப்பது எனது இரண்டாம் பணி!

கோமகனார்: அப்படியானல் பொது நீதி மன்றத்தின் முன்பு எப்படி பணிமங்கையை நிறுத்துவது ? அதைப் பற்றி எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்!

கெளஸான்: [கண்ணிமை கொட்டாமல் கூர்ந்து நோக்கி] அடம் பிடித்த சூனியக்காரியைக் கிறித்துவ திருச்சபை, செத்த மரக்கிளைபோல் வெட்டி, பொது நீதி மன்றத்தாரிடம் ஒப்புவித்து விடும். அதற்கு மேல் சூனியக்காரிக்கு என்ன தீர்ப்பு, என்ன தண்டனை பொது மன்றம் விதிக்கும் என்பதில் திருச்சபைக்கு எவ்வித அக்கரையு மில்லை. கவலையும் இல்லை!

கோமகனார்: கிறித்துவத் தேவதூதரே! இந்த வழக்கில் நான்தான் பொது மன்றத்தின் பிரதிநிதி! உங்களுடைய செத்த மரக்கிளையை வெட்டி எம்மிடம் ஒப்புவித்து விடுங்கள்! அதற்குத் தீ வைத்துக் கொளுத்துவதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீங்கள் திருச்சபையின் பதவியில் இதைச் செய்தால், நான் பொது மன்றப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

கெளஸான்: [கோபத்தில் உடல் நடுங்க] நான் என் பொறுப்பை ஏற்க மாட்டேன்! அதற்கு உறுதி கூற மாட்டேன்! திருச்சபை உறுப்பினர் களை என்ன வென்று நினைத்தீர் ? செல்வந்த பிரபுக்கள் கிறித்துவத் தேவாலயத் தூதர்களைத் தம் கைப் பொம்மைகளாக ஆட்ட முடியாது. அரசியல் திருவிளையாட்டில் எங்களைப் பகடைகளாக உருட்ட முடியாது! நாங்கள் வேந்தருக்கு வேந்தர்கள்! நாம் யார்க்கும் அடி பணியோம்! நாம் யார்க்கும் அஞ்ச மாட்டோம்! நாம் யார்க்கும் பின் செல்லோம்!

(நான்காம் காட்சி இரண்டாம் பாகம் முற்றும்)

****

‘ஆங்கிலேயர் மீது கடவுளுக்கு வெறுப்பா என்று கேட்டால், அதற்கு என் பதில்: நமக்கு அன்னியரான ஆங்கிலேயரைக் கடவுள் நேசிக்கிறாரா அல்லது தூசிக்கிறாரா என்பதை நான் அறியேன். ஆனால் இதை மட்டும் தெளிவாக அறிவேன்; போரில் இங்கே மாண்டு போகும் ஆங்கிலேயரைத் தவிர, மற்றவ பிரிட்டிஷார் அனைவரும் நமது பிரான்ஸ் நாட்டை விட்டுப் படையினரால் துரத்தி அடிக்கப்பட்டு ஓடிப் போவார்கள். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘ஆகா! எவ்விதம் உங்கள் தீர்ப்பு நியாயமாகும் ? நீங்கள் நீதி மன்றத்தில் என்னை நிறுத்தும் போது, எனக்கு எதிரானவற்றை எல்லாம் சேமிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தீர்! ஆனால் எனக்குச் சாதகமான என் நல்வினைகளை எல்லாம் நீவீர் அறவே புறக்கணித்து, எழுத விருப்பமின்றி வேண்டுமென்றே தவிர்த்தீர். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

.

நான்காம் காட்சி தொடர்ச்சி (பாகம்-3)

காலம்: மே மாதம் 10, 1429

இடம்: ஆங்கிலேயர் தங்கியுள்ள ஒரு கூடாரம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. செல்வந்தப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England].
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. கோமகனாரின் காவலன்.

அரங்க அமைப்பு:

[ஆங்கிலேயரின் காவற் கூடாரம். 50 வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், 46 வயதுடைய ஆங்கிலப் பிரபு செல்வந்தக் கோமகனார் மற்றும் 60 வயது கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க் பணிமங்கையின் வெற்றியைக் கேள்வியுற்று, அதிர்ச்சி அடைந்து, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள்.]

கோமகனார்: கிறித்துவத் தேவாலயத் தூதரே! நாமின்று ஓர் உடன்படிக்கை செய்வோம். இந்த வழக்கில் நான்தான் பொது மன்றத்தின் பிரதிநிதி! செத்த மரக்கிளையை வெட்டி, நீங்கள் எம்மிடம் ஒப்புவித்து விடுங்கள்! அந்த கட்டைக்குத் தீ வைத்துக் கொளுத்தி ஆராதனை செய்து வழியனுப்பும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். திருச்சபையின் சார்பில் இப்பணியை நீங்கள் செய்தால், பொது மன்றப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். உடன்படிக்கை செய்து கொள்வோமா ?

கெளஸான்: [கோபத்தில் உடல் நடுங்க] என் பொறுப்பை ஏற்க நான் விரும்ப வில்லை! அதற்கு உறுதியாக உடன்படிக்கை செய்யவும் நான் தயாரில்லை, கோமகனாரே! திருச்சபை உறுப்பினர்களை என்ன, வெறும் களிமண் பொம்மைகள் என்றா நினைத்தீர் ? செல்வந்த பிரபுக்கள் தேவாலயத் தூதர்களைத் தம் கைப் பொம்மைகளாக ஆட்ட முடியாது. அரசியல் திருவிளையாட்டில் எங்களைப் பகடைகளாக உருட்ட இயலாது! நாங்கள் வேந்தருக்கும் மேலானர்! நாமார்க்கும் பணிந்து செல்லோம்! நாமார்க்கும் அஞ்ச மாட்டோம்! நாமார்க்கும் பணி செய்யோம்! எம்மை எதிர்த்தவரை மிதிப்போம்! எம்மை மிதித்தோரை அழிப்போம்! எமக்கு அழிவில்லை! எமக்கு இழிவில்லை! எமக்கு முடிவில்லை! பிரபஞ்சத்தின் ஆதி அந்தங்களை ஊகித்து எழுதியவர் நாங்கள்! ஆதாமும், ஈவாளும் எங்கள் குலம்! எங்கள் இனம்! அவரது பரம்பரையே உலகில் பரவி நிரப்பி வருகிறது! எங்களுக்கு முன்னால் பிறந்தவரும் இல்லை! எங்களுக்குப் பின்னால் வாழப் போகிறவரும் இல்லை!

கோமகனார்: [சிரித்துக் கொண்டு] கிறித்துவ மதம் பிறப்பதற்கு முன்பே, இந்தியாவில் புத்த மதம் உதயமாகி ஆசியா வெங்கும் பரவி யிருந்தது என்பதை மறந்து விட்டார்களா ? .. இங்கிலாந்தில் அவ்வித மில்லை! நாங்கள் தேவாலயத்தை மதிப்பவர்! மாற்றம் செய்தவர், மதத்தை மதிக்காதவர் ஒரு சிலரே! வாழையடி வாழையாக நாங்கள் கிறித்துவத் தேவாலயத் தொண்டர்களே!

கெளஸான்: [அழுத்தமாக] நானதை ஒப்புக் கொள்ள மாட்டேன். இங்கிலாந்தில் காத்திலிக் தேவாலய எதிரிகள் சிலரா ? இல்லை! இல்லை! பலர்! கடவுள் சன்னதியில் இந்தக் கிராமத்து இளமாது, உங்கள் மதிப்புக்கு இணையானவள்! உங்கள் மன்னர் மதிப்புக்குச் சமமானவள்! எனது முதற்பணி அந்த இணை மதிப்பைக் காப்பது! என்னைப் பார்த்து இந்த ஏளனச் சிரிப்பு எதற்கு ? நான் பணிமங்கையை ஏமாற்றி உங்கள் கைவசம் தருவேன் என்பதை நீங்கள் கனவு காண வேண்டாம். அதை நீங்கள் மறந்துவிட வேண்டும்! நான் அரசியல் பாதிரி அல்லன்! நான் ஓர் ஆலயப் பாதிரி! ஞான நீராட்டுச் செய்த அந்த நங்கை நேரடியாக தன் ஆத்மாவைக் காத்திடத் துணிந்தால், நிச்சயம் நான் வழிகாட்டுவேன்.

கார்டினல்: [கோபத்தில் எழுந்து கெளஸானைச் சுட்டிக் காட்டி] நீவீர் ஒரு நாட்டுத் துரோகி!

கெளஸான்: [எழுந்து நின்று, மெய் நடுக்கத்துடன்] வாயை மூடி மன்னிப்புக் கேளுங்கள்! யார் துரோகி ? அந்த நாட்டுப் புறத்து நங்கை கருதுவது போல், நீவீர் நாட்டைக் காத்திலிக் தேவாலயத்திற்கு மேலாகத் தாலாட்டினால், அவளோடு நீரும் உடன்கட்டை ஏற வேண்டியதிருக்கும்! துரோகி என்று என்னைக் குறிப்பிட உமக்கு எத்தனை ஆணவம் ? எத்தனை துணிச்சல் ?

கார்டினல்: [சிந்தை தெளிந்து] …. தேவ மகனாரே! .. என் நாக்கு எனக்குத் தெரியாமல் பிறழ்ந்து விட்டது! நாக்குக் குழறித் தப்பாக வாயில் வரக் கூடாத வார்த்தை வந்து விட்டது! [கெளஸான் முன்பு மண்டியிட்டுத் தலை கவிழ்ந்து] …. அடியேன் மன்னிப்பு வேண்டுகிறேன்.

கோமகனார்: [கெளஸான் முன்னே வந்து] தேவ குமாரரே! அவர் உதிர்த்த புண்மொழியைக் கேட்டு நானும் வருந்துகிறேன்! நீங்கள் கார்டினலை மன்னித்து விடுங்கள்! பிரான்ஸில் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகள், பிரிட்டனில் வேறாகக் கருதப்படும்! உங்கள் பிரெஞ்ச் மொழியில் துரோகி என்றால், நாட்டுக்கு நயவஞ்சகம் செய்பவன், தேசத்தில் நாசவேலை புரிபவன், தேச நம்பிக்கை இழந்தவன் என்று அர்த்தம்! எங்கள் நாடான இங்கிலாந்தில் அதன் பொருள் முற்றிலும் வேறானது. துரோகி என்றால் ஆங்கிலேயர் வேட்கையில் விருப்பம் அற்றவர் என்பது பொருளாகும்.

கெளஸான்: வருந்துகிறேன் நான்! துரோகி என்பதற்குப் பொருள் புரியாமல் போனது, எனக்குத்தான். விளக்கம் அளித்தற்கு நன்றி.

கோமகனார்: பணிமங்கையைப் பற்றித் தீக் கம்பத்தில் ஏற்றுத்துவதை நான் ஒன்றும் எளிதாகக் கருத வில்லை! போருக்கு முன்னும், பின்னும் ஊர்களுக்குத் தீயிட்டுச் சளைக்காதவன் நான். கிறித்துவ மதத் துரோகிகள் பலரைக் கோரமாய் எரித்ததை நேராகப் பார்த்திருக்கும் உங்களுக்கு, அந்தக் கொடூரத் துறை பயங்கர நிகழ்ச்சியாகத் தெரியாமல், சாதாரணச் சம்பவமாகத் தெரிகிறதா ?

கெளஸான்: [கைகளைப் பிசைந்து கொண்டு] இல்லை! நிச்சயமாக இல்லை! அது ஒரு கோரத் தண்டனையே! நீங்கள் குறிப்பிடுவது போல், அது ஒரு பயங்கரச் சம்பவம்! ஆனால் அந்தக் கொடும் தண்டனை கூடச் சூனியக்காரி புரியும் கொடுமையுடன் ஒப்பிட்டால் பொருளற்றுப் போகிறது! வெந்து போகும் அந்த மங்கையின் உடம்பைப் பற்றி நான் சிந்திக்க வில்லை! அந்த உடம்பு படும் வேதனை சிறிது நேரம் மட்டும்தான்! மரண வேதனை மரணம் வந்தபின் மாய்ந்து போகும்! ஆனால் அவளது ஆத்மா, ஆத்மா மட்டும் நீண்ட காலம் துன்பக் கடலில் தாண்டவ மாடும்! நீண்ட காலம்! ஆத்மாவின் நெடுங்காலத் துன்பத்தை எப்படித் தவிர்ப்பது ? அதுதான் என்னை மிகவும் வருத்துகிறது!

கோமகனார்: அது உண்மைதான். அவளது ஆத்மா காக்கப்பட வேண்டு மென்றுதான் கடவுளும் அவளைப் படைத்திருக்கிறார். ஆனால் நமக்கு வரப்போகும் பிரச்சனை இது! அவளது உடலைக் காப்பாற்றாமல், ஆத்மாவை மட்டும் எப்படிக் காப்பது ? தேவ தூதாரே! நாம் எதிர்கொண்டு நேரடியாக இதற்கோர் முடிவு காண வேண்டும்! பிரெஞ்ச் பாமர மக்களிடம் இந்த பணிமங்கை மோகமும், தெய்வீகமும் தொடருமே ஆயின், நமக்குப் பெருத்த நட்டம்; நமது முற்பாடுகளால் என்ன பயனுமில்லை! பணிமங்கை புனிதநங்கை ஆவாள்! அவளைச் சுற்றி ஓர் புதிய ஆலயம் கட்டப்படும்! பிரான்ஸ் நாட்டில் அவளுக்கு உயர்ந்த சிலைகள் வடிக்கப்படும்! நமது பழைய தேவாலயம் குற்றக் கூண்டில் ஏற்றப்படும்! உங்களுக்கும் எனக்கும் வரலாறு சாட்டை அடி கொடுக்கும்!

கெளஸான்: [கோபமாக] நிறுத்துங்கள் உங்கள் கற்பனைக் கதையை! நிகழாத கதையை நீட்டிக் கொண்டு போக வேண்டாம். தேவாலயத் தூதர்களைக் குற்றக் கூண்டில் ஏற்ற யாருக்கு நெஞ்சழுத்தம் உள்ளது ? ஒருக்காலும் பணிமங்கை புனிதநங்கையாக ஆக்கப்படப் போவதில்லை! அவ்விதம் ஆக்க நாங்கள் விட்டுவிடுவோமா ? பணிமாதுக்கு ஒருபோதும் புதிய ஆலயமணி அடிக்காது! எவரும் மூடப் பெண்ணுக்குச் சிலை வடிக்கப் போவதில்லை!

கார்டினல்: [கோபம் தணிந்து, தடுமாறிய குரலில்] நான் ஒன்றை இப்போது கூறலாமா, கோமகனாரே!

கோமகனார்: [நாடியில் கைவைத்து] வெடித்துப் பேசும் தன்மையைக் கட்டுப் படுத்தாமல், இப்போது நீங்கள் பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது!

கார்டினல்: [பணிவான தன்மையில்] நான் சொல்ல வருவது இதுதான்! நீங்கள் அதைத் திருத்தலாம். மந்திரக்காரி ஜோன் ஓர் ஏமாற்றுக்காரி! கடவுள் மீது பக்தியும், பாசமும், பற்றும் இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்கிறாள்! அவள் தினமும் செய்யும் பிரார்த்தனைகள் எண்ணற்றவை! பாப மன்னிப்புக்கு ஏங்கும் அவளது குற்ற ஏற்புக் குமுறல்கள் கணக்கில் அடங்கா! அவளை எப்படி சூனியக்காரி நீங்கள் என்று சொல்லலாம் ? தவறாது அவள் தினமும் கடவுளைத் துதிக்கிறாள். தேவாலயத்தின் நம்பிக்கை மிக்கத் திருமகளாய், அவள் எதையும் நழுவ விடுவ தில்லையே!

கெளஸான்: [கோபத்தில் எழுந்து] என்ன சொன்னீர் ? தேவாலயத்தின் நம்பிக்கை மிக்கத் திருமகளா ? ஜோனா ? தேவாலயத்தைப் புறக்கணிக்கும் ஒரு பிற்போக்குப் போக்கிரிப் பெண்ணுக்கா, தேவாலயத் திருமகள் என்னும் பட்டம் அளிக்கிறீர் ? சிந்திக்காமல் நீவீர் பேசுவதாக எனக்குத் தெரிகிறது. போப்பாண்டவர் கூட ஊகிக்கத் தயங்கும் ஒன்றை, இந்த நாட்டுப் புறத்து நங்கை ஊகித்துக் கொள்கிறாள்! தானே கிறித்துவத் தேவாலயம் என்று எண்ணிக் கொண்டு வருகிறாள்! ஆனால் தேவாலயத் தூதுவரை மூலையில் நிறுத்தி, இவளே கடவுளின் தகவலைப் பெற்றுப் பிரெஞ்ச் மன்னன், சார்ல்ஸுக்கு வழங்குகிறாள். ரைம்ஸ் தேவாலயத்தில் சார்லஸுக்குப் பட்டம் சூடியது, தேவாலய மில்லை! பணிமங்கை ஜோன்! இங்கிலாந்து மன்னருக்குக் கடிதத்தை எழுத உரை வடிப்பவள், படிப்பு வாசமில்லாத ஜோன்! அதைப் பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்! அந்தக் கடிதங்களை வாயில் கூறியவள் ஒரு தேவாலய எதிரி! இதுவரை அவள் வாயில் சொல்லிய எந்த கடிதத்திலும், கிறித்துவத் தேவாலயம் குறிப்பிடப் படவில்லை! கடிதத்திலும், பேச்சிலும் எப்போதும் கடவுளையும், ஜோனையும் தவிர வேறெதையும் காண முடியாது!

கோமகனார்: வேறு எதை எதிர்பார்க்க முடியும் ? அவள் குதிரையில் அமர்ந்து பிச்சை எடுப்பவள்! சவாரி செய்யும் போது, அவளது தலை பின்னோக்கி இருக்கும்!

கெளஸான்: தலையை யார் திருப்பி விட்டது தெரியுமா ? பிசாசு! அந்த பராக்கிரமச் சாதனை புரிவது சாத்தான்! கடவுளைப் பற்றிக் காதில் கேட்டாளே தவிர, கடவுளை வைத்துப் பாதுகாக்கும் தேவாலயமும், தேவாலயத்தைப் போற்றிப் பாதுகாக்கும் தூதர்களும் அவள் கண்களில் படவில்லை! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு கான்ஸ்டன்ஸ் ஆஸ்டிரியாவில் மதவாதி ஜான் ஹெளஸ், மதத் துரோகி என்று கிறித்துவ மதாதிபதிகளால் குற்றம் சாற்றப்பட்டு மரக்கம்பத்தில் உயிருடன் எரிக்கப் பட்டார். உடனே அது பரவி, பொஹீமியா முழுவதிலும் ஜான் ஹெளஸ் புனிதராகக் கொண்டாடப் பட்டார். இங்கிலாந்தில் பாதிரி வைகிளீஃப் என்னும் மதவாதி தன் விஷ வித்துக்களைப் பரப்பிக் கொண்டு வந்தார். அவருடைய மத எதிர்ப்புக் கொள்கைகள் ஜான் ஹெளஸைக் கவர்ந்தது. வைகிளீஃப் பிரச்சாரப் பதிப்புக்களை எல்லாம், கிறித்துவ தேவாலயம் பறிமுதல் செய்தது! இந்த மாதிரி பிரான்ஸில் உலவும் மதத் துரோகிகளை நான் நன்கு அறிவேன்! இந்தப் பிறவிகள் யாவும் புற்றுநோய் போன்றவர். இந்தப் பிறவிகளைப் பிடித்து, வெட்டிப் பிரித்து, முத்திரை யிட்டு, எரித்திடா விட்டால், அவர்கள் மனித இனத்தைப் பாபத்தில் தள்ளிச் சீர்கேடாக்கி விடுவர்! என்ன கேடு நிகழும் நமது தேவாலயங்களுக்கு என்பதில் கவனம் செலுத்த வேண்டும்! ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாக பேரொளி பெற்ற மேதைகள் திரட்டிய ஞானச் சிந்தனை, அறிவுக் களஞ்சியம், அனுபவச் செல்வாக்கு ஆகியவற்றுக்குப் படிப்பறிவற்ற ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி சவால் விடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! அவ்விதம் நேர்வதைத் தடுக்கா விட்டால், சண்டைக்காரி ஜோனின் பரம்பரை உள்ளே புகுந்து, காட்டு மிராண்டிகளின் கற்கால யுகம் மீண்டுவிடும்! இனிவரும் எதிர்காலச் சந்ததியில் ஜோனைப் பின்பற்றி, ‘நான் ஜோனின் வாரிசு ‘, என்று கொடியைத் தூக்கிக் கொண்டு, தேவாலயம் மீது படையெடுத்தால் என்ன ஆவது ? வாழ்க்கை முழுவதும் அதை எதிர்த்து நான் போராடி வருகிறேன்! இனியும் அதற்கு முடிவு காணும் வரை எதிர்த்துத் தாக்க நான் தயங்க மாட்டேன்! பணிமங்கை ஜோனின் இந்தப் பாபம் தவிர மற்ற பாபம் யாவும் மன்னிக்கப் படலாம்! எந்தப் பாபம் மன்னிக்கப்பட மாட்டாது ? புனித ஆவிக்கு எதிராகச் செல்லும் அவளது பாபம்! மண்டியிட்டு அவளது ஆத்மாவின் ஒவ்வோர் அணுவையும் நமது புனித ஆலயத்துக்கு அர்ப்பணிக்கா விட்டால், அவளைத் தீயிக்கு இரையாக்கியே தீருவேன்! முதலில் அவள் என் கைகளில் சிக்க வேண்டும்!

கோமகனார்: [அலட்சியமாக] அடக்க முடியாத அத்தனை அழுத்தம் உங்கள் நெஞ்சில் இருக்கிறது!

கெளஸான்: [கூர்ந்து நோக்கி] ஏன் ? உங்களுக்கு அப்படி ஓர் உணர்ச்சி எரிமலையாய் குமுறி எழவில்லையா ?

(நான்காம் காட்சி மூன்றாம் பாகம் முற்றும்)

****

‘போர்க்களத்துக்கு மீண்டால், உன் கணவர் கொல்லப்பட மாட்டார், காயப்பட மாட்டார். மாதே! நீ அஞ்ச வேண்டாம்! உன்னருமைக் கணவருக்கு எந்தக் தீங்கும் விளையாது. அதற்கு உறுதி மொழி அளிக்கிறேன். மறுபடியும் அவர் இப்போது உள்ளது போல் உன்னை வந்தடைவர். ஏன் இப்போது இருப்பதை விட மேம்பட்ட நிலையில் மீண்டு உன்னைச் சந்திக்கலாம் ‘.

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) [டியூக் அலென்கான் மனைவி, தெரேஸாவிடம் கூறியது]

‘எத்தகைய அவமானம் எனக்கு ? கோமகனாரே! கடவுளின் முன்னே நீ என்னை இழிவு படுத்துகிறாய்! என்னை விடுவித்துக் கொள்ள நான் உனக்கு நன்கொடைப் பணம் தரவேண்டுமா ? என்ன கேவலத் திட்டம் இது ? அவ்விதம் என்னை விடுவிக்க மெய்யாக உனக்கு விருப்பமு மில்லை! செய்ய உனக்கு அதிகாரமும் இல்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க்

****

நான்காம் காட்சி தொடர்ச்சி (பாகம்-4)

 

காலம்: மே மாதம் 10, 1429

இடம்: ஆங்கிலேயர் தங்கியுள்ள ஒரு கூடாரம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. செல்வந்தப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு ஆஃப் பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England].
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. கோமகனாரின் காவலன்.

அரங்க அமைப்பு:

[ஆங்கிலேயரின் காவற் கூடாரம். 50 வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், 46 வயதுடைய ஆங்கிலப் பிரபு செல்வந்தக் கோமகனார் மற்றும் 60 வயது கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க் பணிமங்கையின் வெற்றியைக் கேள்வியுற்று, அதிர்ச்சி அடைந்து, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள்.]

கெளஸான்: இனிவரும் எதிர்காலச் சந்ததிகள் ஜோனைப் பின்பற்றி, ‘நான் ஜோனின் வாரிசு ‘, என்று கொடியைத் தூக்கிக் கொண்டு, தேவாலயம் மீது படையெடுத்தால் என்ன ஆவது ? வாழ்வு முழுவதும் அதை எதிர்த்து நான் போராடி வருகிறேன்! அதற்கு முடிவு காணும் வரை எதிர்த்துத் தாக்க நான் தயங்க மாட்டேன்! பணிமங்கை ஜோனின் எந்தப் பாபத்தைத் தேவாலயம் மன்னிக்காது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! புனித ஆவியை மதிக்காது அவள் எதிராகச் செல்லும் பாதை! அது பாபத்தின் மீது செல்லும் பாதை! மண்டியிட்டு ஜோன், அவளது ஆத்மாவின் ஒவ்வோர் அணுவையும் நமது புனித ஆலயத்துக்கு அர்ப்பணிக்கா விட்டால், அவளைத் தீயிக்கு இரையாக்கியே தீருவேன்! இது என் உறுதி மொழி! … ஆனால் … முதலில் அவள் பிடிபட்டு என் கைகளில் சிக்க வேண்டும்!

கோமகனார்: [அலட்சியமாக] அடக்க முடியாத அவ்வித ஆத்திரம் உங்கள் நெஞ்சில் இருக்கிறதா ?

கெளஸான்: [கூர்ந்து நோக்கி] ஏன் ? உங்களுக்கு அப்படி ஓர் உணர்ச்சி எரிமலையாய் குமுறி எழவில்லையா ? கோமகனாரே!

கோமகனார்: நானொரு படை வீரன். தேவாலயத் திருத்தொண்டன் அல்லன்! அரசாங்க ஊழியன் நான்! ஆலயக் காவலன் அல்லன்! ஆத்மாவைக் காக்கும் தேவாலயம், நாட்டுக்காகப் போரிட விரும்பாது! ஆத்மாவின் அர்ப்பணம் கோரும் தேவலாயம், அரசனுக்காக உயிரை அர்ப்பணம் செய்ய மறுக்கும். நீங்களும், நானும் வெவ்வேறு கொடிகளைத் தூக்கி, வெவ்வேறு திசைகளில் அலைபவர்! ஆனால் பணிமங்கை ஜோனைப் பிடிக்கப் பாபக் குற்றம் சுமத்துவது நீங்கள்! இங்கிலாந்தின் ஆட்சியைப் பிரான்ஸில் ஒழிக்கத் திட்டமிட்ட புரட்சிக்காரி ஜோன் என்று குற்றம் சாட்டுவது நான். முடிவு நம்மிருவருக்கும் ஒன்றே! ஜோனைப் பிடித்துச் சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்ய வேண்டும்! அதுவே நமது கடமை! அதைப் பற்றிப் பேச்சைத் தொடருவோமா ?

கெளஸான்: நமது முதற் கடமையும் வேறு. அடையும் முடிவுப் பலனும் வேறு. உங்கள் வலைக்குள் என்னைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்! முதலில் ஜோனைப் பிடித்து, தேவாலய வாசலில் கட்டிப் போடுங்கள்! நீங்கள் அதற்கு சூழ்ச்சி செய்ய வேண்டும்.

கோமகனார்: [ஆத்திரமாக] முதலில் இதையாவது ஒப்புக் கொள்ளுங்கள். நாமிருவரும் பாய்ந்து கைப்பற்ற முயல்வது, ஒரு புதிய பறவையை! காலிருந்தும் ஓட முடியாத, இறக்கை இருந்தும் பறக்க முடியாத பறவை அது! பாபத்தைப் பெருக்கும் பாவை என்றாலும், தேசீய பாசத்தைப் பரப்பும் பாவை என்றாலும், அவள் செய்து வருவது மதத் துரோகம் என்பது எனது அசைக்க முடியாத முடிவு. நாமிருவரும் தேவாலய மதவெறி முரண்களில் மோதிக் கொள்ளாமல், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும்.

கெளஸான்: [வெறுப்புடன், முகத்தைத் திருப்பி] கிறித்துவ ஆலயத்தின் மீது நாங்கள் கொண்டுள்ள வேட்கையை, மதவெறி என்று குறிப்பிடுபவரிடம் என்ன பேச முடியும் ?

கோமகனார்: அந்த மத வேட்கையைப் பற்றிக் கிழக்கிலும், மேற்கிலும் உலவி வரும் ஒரே கருத்துதான் அது!

கெளஸான்: [கசப்புடன்] அந்தக் கருத்து கிழக்கிலும் மேற்கிலும் மட்டும் தானா ? உங்களுக்கு உள்ளார காத்திலிக் ஆலயத்தின் மீதிருக்கும் வெறுப்பு இப்போது பளிச்செனத் தெரிகிறது!

கோமகனார்: மாண்புமிகு பாதிரியாரே! நான் தேவாலயத் தூதன் அல்லன்! ஆனால் நீங்கள் கிறித்துவ ஆலயத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்று! அவ்விதம் தாங்கும் நீங்கள், ஆங்கிலப் பிரபுக்களையும் உங்களுடன் இழுத்துக் கொள்ள வேண்டும். பணிமங்கை மீது நீங்கள் பழி சுமத்தி அழுத்தமாகச் சுட்டிக் காட்டுவதை, என் மனதும் உணர்கின்றது. இந்த படிப்பற்ற மங்கையைக் கண்டு எனக்கு எந்த பயமுமில்லை! கிறித்துவ மதத் துரோகியான இந்த மூட நங்கை, புத்துயிர் பெற்று வந்து புனித மங்கை ஆனாலும், நான் கவலைப்படப் போவதில்லை. நீங்கள் எதிர்காலக் காட்சியைப் பெரிது படுத்தி ஆரவாரப் படுகிறீர். அது மெய்யாக நிகழ்ந்தாலும், நான் அஞ்ச மாட்டேன்! ஜோன் சொல்லி எழுதப்பட்ட கடிதங்களைப் பார்த்தீர்களா ? சார்லஸ் மன்னரை ஜோன் கட்டாயப் படுத்தி, ஐரோப்பியால் உள்ள அனைத்து மன்னருக்கும் தனது அதிகார முத்திரையை அடித்திருக்கிறாள்! அவ்வித ஆணவச் சட்டங்கள், நாள் தோறும் கிறித்துவ மகத்துவத்தைப் பேணும், ஐரோப்பிய சமூகத்தின் அமைப்பைத் தகர்த்து விடும்!

கெளஸான்: இல்லை! கிறித்துவ ஆலயத்தைத் தகர்த்து விடுகிறாள் என்று நான் சொல்கிறேன்!

கோமகனார்: [பொறுமை இழந்து] தேவ தூதரே! தயவு செய்து தேவாலயத்தை உங்கள் திருவாய் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம்! அதைச் சற்று சிந்திக்காமல் இப்போது இருப்பீரா ? இந்த உலகில் இம்மைத் துறை மெய்த்துவ இயக்கங்களும், மறுமைத் துறை என்னும் ஆன்மீக இயக்கங்களும் இருக்கின்றன. இரண்டு துறைகளுக்கும் உட்போர் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது! நீங்கள் திருச்சபைப் பிரதிநிதியாக இருப்பது போல், நாங்கள் நிலமானிய மேற்குடி வர்க்கத்தின் பிரபுக்கள். இம்மை உலகத்தின் ஆதிக்க சக்தி நாங்கள்! எங்கள் இம்மைத் துறை மாளிகையை இந்தப் பணிமங்கை நியதி எப்படித் தாக்குகிறது என்று உங்கள் கவனத்திற்கு வரவில்லையா ?

கெளஸான்: [அழுத்தமாக] கோமகனாரே! உங்களின் தங்க மாளிகையை மங்கையின் நியதி எங்கே தாக்குகிறது ? எங்கள் கிறித்துவ ஆலயத்தின் பீடத்தை அல்லவா, அந்த மூட நங்கை ஆட்டி அசைத்துத் தகர்க்கிறாள்!

கோமகனார்: பணிமங்கை என்ன பறைசாற்றி வருகிறாள் ? மன்னர்கள் தங்கள் ஆட்சி மண்டலங்களைக் கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டுமாம்! பிறகு கடவுளின் மேற்பணி யாளராய், மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டுமாம்! எப்படி இருக்கிறது மூடப் பெண்ணின் இந்த வேடிக்கைப் பேச்சு ? பணிமங்கைக்குத் தேவ அணங்குகள் தினமும் ஆணையிடுவது போல், அரசர்களுக்கும் கடவுளின் கட்டளை வருமாம்! அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டுமாம்! மூடத்தனத்தின் முதிர்ச்சி அல்லவா இது ?

கெளஸான்: [அக்கரை யின்றி] கோமகனாரே! இது மதவியல் கோட்பாடு போல் தெரிகிறது. ஆட்சிப் பதவியில் இருக்கும் அறிவுள்ள எந்த மன்னனும் இதற்குக் காது கொடுக்கப் போவதில்லை! ஏன் உங்கள் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர் ? நடப்புக்கு ஒவ்வாத மடக் கோட்பாடு அது! அவள் பிதற்றும் வாய்ச் சொற்கள் யாவும், வெறும் வலுவற்ற பேய்ச் சொற்கள்!

கோமகனார்: [வெகுண்டு எழுந்து] அப்படி நீங்கள் சொல்வது தவறு! நிலமானிய அதிகார வர்க்கத்தைக் கீழாக்கி மிதிக்கும் சூழ்ச்சி அது! அரசரைத் தொழுது அவரை மேலதிபதியாய் உயர்த்தித் துதிக்கும் ஆலோசனை அது! அவள் கோட்பாட்டின்படி அரசர் முதல் கோமகனாரில்லை! அவர் ஏகாதிபத்திய மேலதிபதி! நாங்கள் அம்முறையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்! நாங்கள் யாரையும் மேலதிபதி என்று அழைக்க மாட்டோம்! அப்படி மதிக்க மாட்டோம்! எங்கள் கைவசம் இருக்கும் நிலமானியங்களை யாரும் அபகரிக்க விட மாட்டோம்! அவ்விதம் யாரும் அபகரித்தால், நாங்கள் வாள்போர் தொடுத்து நிலங்களை மீட்டுக் கொள்வோம்! பணிமங்கை நியதியைப் பின்பற்றினால், மன்னரிடம் எங்கள் நிலங்கள் பறி போகும்! அவை யாவும் கடவுளுக்கு நன்கொடையாய் அளிக்கப் படும்! கடவுள் நன்கொடை பிறகு மன்னர் மடியில் விழுந்து விடும்!

கெளஸான்: அப்படி உங்களுக்கு ஒரு பயமா ? ஆச்சரியப் படுகிறேன்! கோமகனாரே! பரம்பரையாய் நீங்கள்தான் வேந்தரை ஆக்குபவர்! நினைத்தால் நீங்கள்தான் வேந்தரை வீழ்த்துபவர்! உங்கள் விருப்பப்படி ஆட்சி செய்து, உங்களைத் திருப்தி செய்வதே உங்கள் மன்னரின் தீராத பணி!

கோமகனார்: உண்மைதான்! நில மானியப் பிரபுக்களை மக்கள் நேசிக்கும் வரை அப்பணி நீடிக்கும்! ஆனால் அரசனை மக்கள் பூஜிக்க நேர்ந்தால், எங்கள் உரிமை யாவும் பறிபோகும்! நாங்கள் மன்னரின் காலடியில் கிடக்கும் பணியாட்களாய் மாற்றப் படுவோம்! ஒவ்வொரு பிரபுவின் முதுகு எலும்பையும், பிறகு வேந்தர் முறித்துப் போட்டு முடமக்கி விடுவார்!

கெளஸான்: ஆயினும் கோமகனாரே, நீவீர் அஞ்ச வேண்டிய தில்லை! சிலர் மன்னர்களாய் ஆளப் பிறந்தவர்கள்! சிலர் தேசீயச் சிற்பிகளாய் ஆக்கப் பிறந்தவர்கள்! அவர்கள் இருவரும் ஒன்றாய் இருப்பது அபூர்வம்! அவ்விதம் தனக்கு அறிவு புகட்டித் திட்ட மிட்டு நிறைவேற்றும் ஆலோசர்களை மன்னர் எங்கே கண்டு கொள்ள முடியும் ?

கோமகனார்: [கேலி நட்பு நகைப்புடன்] ஏன், தேவாலயத் திருச்சபையில் இருக்கலாம் அல்லவா! மெய்யாக காத்திலிக் மதாதிபதிகள்தான் நாட்டு மன்னரின் ஆலோசனை மந்திரிகளாக எந்நாளும் இருந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் தலையிடாத நிகழ்ச்சிகள் உண்டா ? நீங்கள் தடுக்காத நெறி முறைகள் உண்டா ? நீங்கள் காதில் ஓதாத வேந்தர் உண்டா ? நீங்கள் நடமாடாத அரண்மனைப் பேரவை உண்டா ?

கெளஸான்: [தோள்களை உசுப்பி முறுவல் பூண்டு] ஆமாம்! ஆமாம்! அவை யாவும் மெய்யானவை! அவற்றில் ஐயமில்லை! ஆனால் ஒன்று மட்டும் இன்று சொல்வேன்! இப்போது நமக்குள் யார் பெரியவர் என்று வாதாடி நேரத்தை வீணாக்கினால், பணிமங்கை தப்பி ஓடிவிடுவாள். அவள் தூண்டி விட்ட புரட்சித் தீ பரவி நம்மை எரிப்பதற்கு முன்பு, நாம் அவளை மரத்தில் கட்டி தீயிக்கு இரையாக்க வேண்டும்! உலகில் இன்று மேலாதிக்க ஆக்கிரமிப்பு சக்தி ஒன்று உருவாகி யிருக்கிறது! அது நீடித்திருக்கும் வரை வேந்தருக்கும், போப்பாண்டவருக்கும் மோதல் இருக்கும்! நிலமானிய பிரபுக்களுக்கும், மன்னருக்கும் போராட்ட மிருக்கும்! செல்வந்த சீமான்களுக்கும், தேவாலயத் திருச்சபைக்கும் சண்டைகள் உண்டாகும். இவற்றை நாம் தவிர்க்க முடியாது! கோமகனாரே நீவீர் திருச்சபைக்கு நண்பன் அல்லர்! ஆனால் நான் திருச்சபையின் தூதன்! நமக்கு எதிராய் இப்போது புதிய எதிரி ஒருத்தி கிளம்பி யிருக்கிறாள். அவளுக்குப் பற்று கடவுள் மீது. கிறித்துவ ஆலயத்தின் மீதில்லை! அவள் திருச்சபையைப் புறக்கணிப்பது, மாபெரும் பாபம்! கடவுள் குடிகொண்ட தேவாலயம் அவளது குருட்டுக் கண்களில் படுவதில்லை! கடவுளையும், ஜோனையும் தவிர அவள் கையில் வேறு ஆயுதம் கிடையாது! அவளைப் பிடித்துச் சிறையில் தள்ளுவது நமது முதல் பிரச்சனை! அதற்கு நாமிருவரும் இணைந்து வேலை செய்வதுதான் முறை என்று நான் உணர்கிறேன்.

கோமகனார்: நான் முதலில் இதைத்தான் உங்களுடன் வாதாடிக் கொண்டிருந்தேன். உங்கள் குறிக்கோளும், என் குறிக்கோளும் இப்போது ஒரே பறவை மீது குறி வைக்கின்றன. நமக்கு நல்ல வாய்ப்பு வருகிறது! பார்க்கப் போனால், பணிமங்கையின் இரண்டு கருதுக்களும் அடிப்படையில் ஒன்றே! அவை அவளது ஆத்மாவின் ஆழத்திலிருந்து வருகின்றன. இதைக் கிறித்துவ மதத் திருத்தம் என்று நான் சொல்வேன். ஜோன் திருச்சபை மறுப்பாளி! கிறித்துவ மத எதிர்ப்பாளி! தேவாலயத் துறப்பாளி! முடிவாகச் சொன்னால் காத்திலிக் மத வெறுப்பாளி! போதுமா குற்றச் சாட்டுகள்!

கெளஸான்: கோமகனாரே! மெச்சுகிறேன் உங்கள் விளக்கத்தை! பணிமங்கை காத்திலிக் மதத் துரோகி என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவள் மற்றோர் அபாயகரமான பிரச்சாரத்தைச் செய்து வருகிறாள்! அது அவளது குறுகிய புத்தியைக் காட்டுகிறது! அற்பத்தனத்தைக் காட்டுகிறது! அதாவது பிரான்ஸ் பிரெஞ்ச் மக்களுக்கே என்று பறைசாற்றுகிறாள். அதுபோல் இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே என்பது! இத்தாலி இத்தாலியருக்கே! ஸ்பெயின் ஸ்பானியருக்கே! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! இவ்விதம் விடுதலைக் கூக்குரல் இடுவது! இது பயங்கரச் கூச்சல்! சுயநலக் கூச்சல்! தேசீய பாசத்தைத் திணிக்கும் ஒரு தீவிர முயற்சி! இதை முரண்பாட்டுத் தேசீய உணர்ச்சி என்று நான் சொல்வேன்! இதுவரை அவள் விதைத்து வந்துள்ளது, காத்திலிக் மதத்துக்கு முரணானது! கிறித்துவத் திருச்சபைக்கு முரணானது! கிறித்துவ ஆலயம் அறிந்து விருத்தி செய்த ஒன்றே ஒன்று, கிறித்துவ ஆட்சிக்களம்! அந்த ஆட்சிக் களத்தை தேசீயத் துண்டுகளாய் வெட்டிப் பிரித்தால், அங்கே ஏசு நாதர் பீடத்திலிருந்து தள்ளப் படுகிறார்! இப்போது நாம் ஜோனைப் பிடித்துச் சிலுவையில் அறையா விட்டால், ஜோன் நம்மைப் பற்றிச் சிலுவையில் அடித்து விடுவாள்! கொல் அல்லது கொல்லப்படு என்பது எனது கோட்பாடு!

கோமகனார்: [ஆத்திர மடைந்து] உங்கள் விருப்படியே செய்வோம், தேவ தூதரே! நீங்கள் காத்திலிக் மறுப்பாளியைத் தீவைத்துக் கொளுத்துங்கள்! நாங்கள் தேசீயப் புரட்சிவாதியைத் தீயிட்டுக் கொளுத்துகிறோம்! கார்டினல் ஜானுக்கு இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே என்னும் கூக்குரல் மிகவும் பிடிக்கும்.

கார்டினல்: [உற்சாகமாக எழுந்து] ஐயமின்றி இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே உரியது. அது ஓர் எளிய இயற்கை விதி! ஆனால் படிப்பில்லாத மங்கை, இங்கிலாந்து கடுமையாகப் போரிட்டுக் கைப்பற்றிச் சட்ட ரீதியாகக் கடவுள் தந்த நாடுகளை நமக்கு மறுக்கிறாள்! என்ன முரண்பாடான மூடப் பேச்சு ? கடவுள் தந்த நாடு எங்கள் நாடு என்று பிரெஞ்ச் பாமரருக்குப் பறைசாற்றுகிறாள் பணிமங்கை! ஆனால் ஏனோ கடவுள் ஆங்கிலேயருக்குப் போரில் கொடுத்த நாட்டைப் பிடுங்கிக் கொள்ளப் பாய்ந்து வருகிறாள்! அவளைத் தேசீயப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிய வில்லை! காத்திலிக் வெறுப்பாளி என்று நீங்கள் குறிப்பிடுவதும் எனக்குத் விளங்க வில்லை! ஒன்று மட்டும் என் பொது அறிவுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்த மூட மாது ஒரு கலகக்காரி! தண்டனை கொடுக்க அந்த ஒரு காரணம் எனக்குப் போதுமானது! அவள் ஆடவர் உடை அணிந்து இயற்கைப் பண்பாட்டை எதிர்க்கும் கலகக்காரி! தனது பெண்மைப் பிறப்பை புறக்கணித்து, ஆணைப் போல் போரிடும் கலகக்காரி! போப்பாண்டவரின் தெய்வீக ஆணைக்கு எதிராகக் கிறித்துவ ஆலயத்தை மதிக்காத கலகக்காரி! சாத்தானின் தீவினைகளைக் கைக்கொண்டு, ஆங்கிலப் படையினரைத் தாக்கிக் கொன்ற கலகக்காரி! அத்தனைக் கலகக்கார வினைகளும் அவள் இங்கிலாந்துக்கு எதிராகச் செய்ததால், அவள் தண்டிக்கப்பட வேண்டியவள். அவள் முடிவில் மாண்டு போக வேண்டும்! அவள் எரிந்து சாக வேண்டும்! அவள் பிரெஞ்ச் மக்களைத் தூண்டிக் கிளப்புவதற்கு முன்பு, நாம் அவளை ஒழித்துக் கட்ட வேண்டும்!

கோமகனார்: [எழுந்து நின்று] நாம் மூவரும் இறுதியில் ஒரே முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி தரக் கூடியது.

கெளஸான்: [ எழுந்து சற்று வெறுப்புடன்] என் ஆத்மாவுக்கு நான் தீங்கு இழைக்க மாட்டேன். தேவாலயத்தின் தீர்ப்பைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். உங்கள் முடிவைப் பற்றி எனக்குக் கவலை யில்லை! ஜோன் ஆத்மாவின் பாபக் கழிப்புக்கு முதலில் நான் முயற்சி செய்வேன்!

கோமகனார்: [மனம் வருந்தி] அந்த பாமர மங்கை ஜோனுக்காக நான் பரிதாபப் படுகிறேன்! கொடுந் தண்டனையை நான் முற்றிலும் வெறுப்பவன். என்னால் முடியுமானால், அவளை விடுவிக்க நான் பாடுபடுவேன்.

கார்டினல்: [வெகு ஆங்காரமாய்] நான் பின்பற்றும் விதி வேறு! என் கையாலே ஜோனை எரித்துச் சாம்பலாக்க முனைவேன்! என் ஆத்மா அப்போதுதான் சாந்தி பெறும்!

(நான்காம் காட்சி நான்காம் பாகம் முற்றும்)

****

‘பாலத்தைக் கடந்து ஆர்லியன்ஸ் கோட்டை மதில் மீது ஏற ஏணியை அமைத்த முதல் படையாளி நான்தான். அதை ஏற்றும் போது ஓர் அம்பு என்னை நோக்கி ஏவப்பட்டுக் கழுத்தடியில் ஊடுறுவியது. ஆனால் புனித அணங்கு காதிரைன் ஆறுதல் அளித்து என்னைக் காப்பாற்றினாள்! அதற்குப் பிறகு குதிரைச் சவாரியை நான் நிறுத்தவும் இல்லை! போர்க்களச் சண்டையைத் தொடராமலும் இல்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘உலகை இரண்டு விதமான பேராற்றல்கள் ஆதிக்கம் செய்து ஆளுகின்றன! ஒன்று ஆயுத சக்தி! மற்றொன்று ஆன்மீக சக்தி! நீண்ட காலம் தொட்டு வரலாற்றில் ஆன்மீக சக்தியே, ஆயுத சக்தியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது!

நெப்போலியன் (1769-1821)

****

ஐந்தாம் காட்சி (பாகம்-1)

 

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்
 2. ஜோன் ஆஃப் ஆர்க்
 3. போர்த் தளபதி துனாய்ஸ்
 4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.
 5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், மங்கல வாத்தியம் நிறுத்தப் படுகிறது.

துனாய்ஸ்: (மண்டியிட்டு வணங்கும் ஜோனைப் பார்த்து) எழுந்திடு ஜோன், போதும் பிரார்த்தனை! எத்தனை நேரம் தனியே இப்படிக் கண்மூடிக் கொண்டு துதிப்பாய் ? ஆலயத்தில் விடுதலை மணியோசை அடிக்கிறது! மகுடம் சூடி விட்டார், மன்னர்! மங்கல வாத்தியமும் ஓய்ந்து விட்டது! எல்லாம் நீ நினைத்தபடி முடிந்து விட்டது! மேரி அன்னைக்கு நன்றி கூறியது போதும்! எழுந்து வெளியே வா! எல்லாரும் உன்னைக் காண மீண்டும் விரும்புகிறார்கள்! மன்னரும் உன்னைக் காணக் காத்திருக்கிறார்!

ஜோன்: இல்லை! நான் வர மாட்டேன்! மகுடம் ஏந்திய மன்னரே பேரும், புகழும் பெற்றுக் கொள்ளட்டும்! நான் அவரது கொண்டாட்ட நாளைத் திருடக் கூடாது! மக்கள் எல்லோரும் மன்னரைப் பார்க்காமல், என்னைத்தான் நோக்குகிறார்கள்! இன்னும் பொதுநபர் கவனத்தை என்மீது திருப்புவது தவறு! இப்போது பாராட்டப்பட வேண்டியவர் சார்ல்ஸ் மன்னர் ஒருவரே! பணிமங்கை இல்லை! எனக்குப் பேரும், புகழ்ச்சியும் தேவை இல்லை! நான் அன்னியருடன் போரிட்டது, மன்னருக்கு மகுடம் சூடியது, எனக்குப் புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்த தில்லை! அப்படிச் செய்யக் கடவுள் எனக்குக் கட்டளை யிட்டார்! என் முதற் கட்டளை முடிந்தது! கடமையைச் செய்வோர் கொடையை எதிர்பார்ப்பது தவறு! அடுத்த கட்டளை என்ன வென்று இப்போது கடவுளை வேண்டித் தொழுது கொண்டிருக்கிறேன்!

துனாய்ஸ்: ஜோன்! தயது செய்து பொதுமக்கள் தாகத்தைத் தீர்த்திடு! தேடும் கண்களுக்குக் காட்சி கொடு! பணிமங்கை, பணிமங்கை என்று உன்னைக் காணப் பலர் துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். மன்னர் எப்போதும் போல் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார்! மகுடம் சூட்டிய மகிழ்ச்சி விழாவில், நீ மக்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும். காட்சி கொடுப்பது உன் முதற் கடமை! பிறகு உன் கடவுளை வேண்டு!

ஜோன்: [தலையை மறுப்புடன் ஆட்டி] இல்லை துனாய்ஸ்! கடவுளைத் தொழுவதே என் முதற் கடமை! நான் கூட்டத்தோடு கலந்து ஆரவாரம் செய்யும் பணிமங்கை இல்லை! தனியே துதித்துக் கடவுளிடம் கட்டளைகள் பெறுவதும், அவற்றைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவதும் பணிமங்கையின் கடமை! எனக்குத் தனிமை வேண்டும்! அப்போதுதான் புனித அணங்கு காதிரைன் என்னோடு பேச முடியும்.

துனாய்ஸ்: ஜோன்! ஜோன்! ஜோன்! சொல்வதைக் கேள்! எழுந்து வா! விடுதலை பெற்ற உன் வெளி உலகைப் பார்! மறக்க முடியாத ஆர்லியன்ஸ் போர்! உன்னதமான உன் வெற்றிகளைப் பார்! அங்கே மக்கள் உன்னைப் பாராட்டத் துடித்துக் கொண்டிருக்கிறார். வெளியே வா!

ஜோன்: [மகிழ்ச்சியுடன் எழுந்து] என்னரும் துனாய்ஸ் நண்பரே! ஆர்லியன்ஸ் வெற்றிப் பாலத்தில் நான் தனியாக வாளேந்தி நடந்து சென்ற அந்தக் காட்சி! நான் மறக்க முடியாத காட்சி! மறுபடியும் ஓடிச் சென்று அந்தப் பாலத்தில் போர் நடை புரிந்து, வெற்றி முரசடிக்கத் துடிக்கிறது என் நெஞ்சு! தூங்கிக் கிடந்த பிரெஞ்ச் படையினரை வேங்கைகள் ஆக்கியது, ஆர்லியன்ஸ் போர்க்களம்!

துனாய்ஸ்: ஜோன்! உன் பிறழாத உறுதி, தளராத நம்பிக்கை, பொங்கிய விடுதலை உணர்ச்சியே எங்கள் நெஞ்சில் கனலை மூட்டியது! ஆனால் … அந்தக் கனவுகள் மெய்யாக எத்தனை உயிர்களை நாமிழக்க நேர்ந்தது! என்னால் அதை மறக்க முடியாது!

ஜோன்: துனாய்ஸ்! போருக்குப் பாய்ந்து சென்ற நான், பிறகு போரைக் கண்டு மிரண்டேன்! போரில் கொல்லப்படும் மாந்தரைக் கண்டு கண்ணீர் வடித்தேன்! பார்த்தீரா என்னை! மெய்யாக நானொரு கோழை! போர்க்களத்தில் என் கைகள் வலுவிழந்தன! கால்கள் சக்தி இழந்தன! பூரித்த நெஞ்சு வேரற்று விழுந்தது! ஆனால் … இப்போது போரில்லாத போது, என் வாழ்வு மங்கிப் போனது! அபாயம் இல்லாத போது, என் வாழ்வு மந்தமாய்ப் போனது! கூரிய என் வாள்முனை மழுங்கிப் போனது! போரிடும் வேளை சோர்ந்திடும் மனது, போரில்லாத சமயம் ஏன் மங்கிப் போகிறது ? பாரிஸ் நகரைப் பற்ற வேண்டும், அடுத்து!

துனாய்ஸ்: எனது சிறிய புனித அணங்கே! நீ விடுதலை மாது! போரிடாமல் விடுதலை நேரிடாது! போருக்குப் பசியுடன் இருந்த நீ, இப்போது போருக்கு ஏன் பின்வாங்குகிறாய்! உன் போக்கு விந்தையாக இருக்கிறது! பாரிஸைப் பற்றப் போகும் பணிமங்கை, உயிர்களைப் பலியிடாமல் எப்படிப் போரிடப் போகிறாய் ?

ஜோன்: [வெட்கமுடன் சிரித்துக் கொண்டு] போதும் புகழ்மாலை நண்பரே! நான் ஒன்றும் புனித அணங்கில்லை! வெறும் பணிமங்கை நான்! புனித அணங்கு காதிரையன் ஒருத்திதான்! ஒரு படைவீரன் அடுத்த படைவீரனை நேசிப்பது போல், என்னை நீ நேசிக்கிறாய் இல்லையா ?

துனாய்ஸ்: [ஜோனின் கன்னத்தைத் தடவி] கடவுளின் அப்பாவிப் பெண்ணே! ஒரு படைவீரன் அடுத்த படைவீரனை நண்பனாய்ப் பாவிப்பது இயற்கை! ஆனால் உனக்கு அரசவையில் நண்பர்கள் கிடையா! மக்கள் உன்னைப் புனித மங்கையாகக் கருதுகிறார்! அதனால் கிறித்துவத் திருச்சபைக்கு நீ எதிராளி! அரசாங்க ஆதிக்க வர்க்கத்தாரும் உன்னைப் படையாளியாக நினைக்காது, பகையாளியாக நோக்குகிறார்!

ஜோன்: [நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து] ஏன் ? ஏன் துனாய்ஸ் ? திருச்சபை ஆலயவாதிகளும், அரசவை அதிகாரிகளும் ஏன் என்னை வெறுக்கிறார் ? நான் என்ன கெடுதிகள் செய்தேன் அவருக்கு ? நான் கேட்ட தெல்லாம் எனக்காக இல்லை! என் கிராமத்துக்குக் கேட்டேன்! என் கிராம மக்களுக்குப் போர்வரி போடக் கூடாது என்று வேண்டினேன். பாமர மக்கள் போர்வரி கொடுக்கும் நிலையில் இல்லை! நம் நாட்டை அன்னியரிடமிருந்து திசை திருப்பி நம் வசமாக்கினேன்! நமது மன்னர் சார்லஸ் மகுடம் சூட வழி வகுத்தேன்! அதனால் கிடைக்கும் பேரும், பெருமையும் ஆதிக்க வர்க்கத்துக்கே போயினும், என்னை நேசிக்காமல் இகழ்வதின் காரணம் என்ன ?

துனாய்ஸ்: ஜோன்! நீ உலகம் அறியாத மடந்தை! நீ முதிர்ச்சி அடையாத மொட்டு! ஆடவர் செய்ய முடியாத, ஆடவர் செய்ய முன்வராத, ஆடவருக்குப் பொறாமை அளிக்கும் பேராற்றல்களைச் செய்கிறாய்! நீ வயதுக்கு வந்தாலும், வாலிபம் அடையாத இளம் மங்கை! ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கம் செய்த ஆடவரைக் கீழே தள்ளி, அரசியல் கோட்டைக்கு அதிபதியாய் நீ அவரது சிரசின் மேல் நிற்கிறாய்! அதை அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள

முடியும் ?

ஜோன்: ஆண் அதிகாரத்தைப் பெண்டிர் ஏற்றுக் கொண்டு பணி செய்வதுபோல், ஏன் பெண்ணாதிக்கத்தை ஆடவர் சகித்துக் கொள்ளக் கூடாது ? போரிட்டு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டாலும், பெண்டிர் வீட்டுப் படியாகத்தான் இருந்து ஆடவரைத் தூக்கிவிட வேண்டுமா ?

துனாய்ஸ்: அரசாங்க அதிபதிகளின் வயிற்றைக் கலக்கி விட்டவள் நீ! இராணுவத் தளபதிகளின் தலைமேல் மிதித்து ஆடுபவள் நீ! பேராசை பிடித்த அரசியல் அதிகாரிகளுக்கு உன்மீது அனுதாபம் உண்டாகாது! பேராசை இல்லாத இராணுவ அதிபதிகளுக்கும் அச்சம் அளிப்பவள் நீ! ஆராதிக்கப்படும் பாதிரிகளுக்கும் கடவுளை நேராகத் தொழுதிடும் பணிமங்கை முதல் பகையாளியே! ஏன் எனக்கும் கூட உன் மீது பொறாமை உண்டாகலாம், பேராசை எனக்குள் தலைதூக்குமாயின்!

ஜோன்: இந்தப் பட்டாளக் கூட்டத்தில் நீ ஒருவன்தான் எனக்கு நண்பன்! நீ என் நண்பனாக இருக்கும் இந்த வேளையில் போரிட்டு பாரிஸையும் கைப்பற்ற வேண்டும். பாரிஸைப் பிடித்த பின்புதான் நான் என் கிராமத்துக்கு மீள வேண்டும்!

துனாய்ஸ்: ஜோன்! … பாரிஸைப் பிடிப்பது கடினப் போராட்டம்! முதலில் … பாரிஸைப் பிடிக்க உனக்கு உத்தரவும் கிடைக்காது! உனக்குப் படையினரும் கிடைக்காது!

ஜோன்: [திடுக்கிட்டு] என்ன ? பாரிஸைப் பிடிக்க அனுமதி கிடைக்காதா ?

துனாய்ஸ்: நானே பிடித்திருக்க வேண்டும் பாரிஸை. நல்ல வாய்ப்பை நழுவ விட்டேன். என்னை நம்பி எனக்குப் போதிய படையாட்களை அரசாங்க அதிகாரிகள் தரவில்லை! உனக்கும் அதே கதிதான் கிடைக்கும். பர்கண்டியில் இருக்கும் நம்மவர் சிலர், பாரிஸ் சண்டையில் நீ தோற்றுபோய்ப் பகைவரிடம் மாட்டிக் கொள்ள சதியும் செய்யலாம்! நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இப்போது, ஜோன்!

ஜோன்: [ஆங்காரமுடன்] துனாய்ஸ்! நாட்டில் எனது எதிரிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என்பதை நானறியேன்! பர்கண்டியில் இருக்கும் பகைவர்களும், ஆங்கிலேய மூர்க்கர்களும் எனக்கொரு முடிவைக் காணாவிட்டால், ஏன் இறுதியில் பிரெஞ்ச் அதிகாரிகளே என்னைத் தீர்த்துக் கட்ட முற்படலாம்! நான் என் பிரார்த்தனையில் இப்போது அசரீரி உரைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். அதனால்தான் நானின்று தனியே, மன்னர் முடி சூட்டிய பிறகு அன்னை மேரியைத் தொழுது வருகிறேன். பொதுவாக ஆலயமணி அடிக்கும் போது, என் காதுகளில் அசரீரிச் சொற்கள் வந்து விழும்! இன்று அடித்த ஆலய மணியோசையில் எனக்கு எந்த வாக்குரைகளும் விழவில்லை! ஆச்சரியமாக இருக்கிறது! சில சமயம் புனித அணங்கு காதிரைன் பேசுவாள்! சில வேளை புனித அணங்கு மார்கரெட் பேசுவாள்! சில நேரம் புனிதர் மைக்கேல் பேசுவார்! ஆனால் அதைப் பற்றி நான் எதுவும் முன்பாகவே சொல்ல மாட்டேன்.

துனாய்ஸ்: [நெற்றியில் கைவைத்து] ஜோன்! ஆலயமணி அடிக்கும் போது எதை வேண்டுமானாலும், கற்பனை செய்து கடவுளின் தகவலாய் எடுத்துக் கொள்ளலாம்! அசரீரி வாக்கு, புனித அணங்கு பேச்சு என்றெல்லாம் நீ சொல்லும் போது, எனக்கு மன உலைச்சலை உண்டாகும்! மன அமைதியைக் குலைக்கும். நீ சரியான காரணம் கூறா விட்டால், புனித அணங்குடன் பேசுவது, புனித அணங்கு கட்டளையைக் கடைப்பிடிப்பது என்பதெல்லாம் உன்னைப் பைத்தியகாரியாகக் காட்டுகிறது.

ஜோன்: என் அசரீரி வாக்கிரை மீது, உனக்கு நம்பிக்கை இல்லாததால் என்ன சொல்வ தென்று தெரியவில்லை! உனக்குக் கூற காரணங்களைக் கண்டுபிடிக்கிறேன். கடவுளிட மிருந்து என் காதுக்கு முதலில் அசரீரி வாக்குகள் எட்டுகின்றன. அதற்குரிய தகுந்த காரணத்தை அடுத்த நான் யூகிக்கின்றேன்! நீ இதில் எதை நம்பினாலும் சரி, நம்பா விட்டாலும் சரி.

துனாய்ஸ்: [சற்று கெஞ்சலாக] என் மீது கோபமா, ஜோன் ?

ஜோன்: இல்லை! இல்லை! உன் மீது எனக்குக் கோபம் வராது, துனாய்ஸ்! நீ ஒருவன்தான் எனக்கு நண்பன். ஏனிப்படி குழந்தைபோல் என்னிடம் குழைகிறாய் ? நீ குழந்தையாக இருந்தால் தொட்டிலில் இட்டு உனக்குத் தாலாட்டு பாடுவேன், நான்!

துனாய்ஸ்: [ஆச்சரியமுடன்] ஜோன், பார்த்தால் உன்னிடம் சிறிது பெண்மையின் கனிவு தெரிகிறதே!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] இல்லை! இல்லை! நான் பெண்ணில்லை! பெண்ணாகத் தோன்றினாலும், நெஞ்சுக்குள் நான் ஆடவன்! தாலாட்டு பாடினாலும், நானொரு தாயில்லை! குழந்தையைக் கொஞ்சினாலும், நானொரு பெண்ணில்லை! தாயிக்கு நான் பெண்ணாகப் பிறந்தாலும், தாயகத்துக்கு நான் ஆணாகவே போரிடுவேன்! நானொரு போர்ப்படை வீரன்! அதைத் தவிர வேறில்லை! படைவீரர் குழந்தைகளைக் கண்டால், பாசமுடன் கொஞ்சுவார் என்று தெரிந்து கொள்வீரா ?

துனாய்ஸ்: [சிரித்துக் கொண்டு] ஆம், அது உண்மையே!

[அப்போது சார்லஸ் மன்னர் புளுபியர்டு இடது புறமும், லா ஹயர் வலது புறமும் நெருங்கி வர, ஆலயத்துக் குள்ளே நுழைகிறார். ஜோன் ஒரு தூணுக்குப் பின்புறம் மறைந்து கொள்கிறாள். துனாய்ஸ் சார்லஸ் மன்னருக்கும், லா ஹயர் போர் அதிகாரிக்கும் இடையே நிற்கிறார்]

துனாய்ஸ்: [தலைகுனிந்து வணங்கி மன்னரைப் பார்த்து] மேன்மை தங்கிய மன்னரே! உங்கள் கிரீடம் இன்று ஒளிவீசி மின்னுகிறது! மன்னராக இப்போது தாங்கள் மகுடம் சூடிப் பொறுப்பேற்ற பிறகு, எப்படி உணர்கிறீர்கள் ?

சார்லஸ் மன்னர்: [சற்று வெறுப்பைக் காட்டி] போதும்! போதும், இந்த முடி சூட்டு விழா! சலிப்படைந்து சம்பிரதாய மந்திரம் எப்போது முடியும் என்று காத்திருந்தேன். அரச அங்கியின் கனம் என்னை அமுக்கிக் கொண்டிருந்தது! சிரசில் கிரீடத்தை வைத்ததும், தலை சுற்றியது! ஆலய வாத்தியமும், மணி ஓசையும், மக்களின் ஆரவாரமும் என் மூச்சைப் பிடித்தன! ஆர்ச்சிபிஷப்பின் புனித அங்கி, என் அங்கியை விடக் கனமாக இருந்திருக்க வேண்டும்! அவர் எப்படித்தான் அதைச் சுமந்து கொண்டு, மந்திரங்களை ஓதினாரோ ?

துனாய்ஸ்: மேன்மைமிகு மன்னரே! இனிமேல் தாங்கள் அடிக்கடி இரும்புக் கவசம் அணிந்து கொள்ள வேண்டுமே. அதற்கு ஐயமின்றி கன அங்கி தங்களுக்கு தகுந்த பயிற்சியைத் தந்தது.

சார்லஸ் மன்னர்: [வெறுப்புடன்] வேண்டாம் எனக்குக் கவச உடை! அது தேவைப் படாது எனக்கு! நான் அதை அணியப் போவதில்லை! போரிடுவது எனது ஊழிய மில்லை! … போரிட்டால் என் குடும்பம் வேருடன் அழியும்! … ஆமாம் எங்கே பணிமங்கை ஜோன் ? பணிமங்கை என்று அழைப்பதை விடப் போர்மங்கை என்று விழிப்பதுதான் பொருத்தமானது! போருக்கு ஜோன் உள்ளபோது, யாருக்கும் நான் வாளேந்த வேண்டாம்! இப்போது பணிமங்கை எங்கே ?

[ஜோன் தூண் பின்புறத்திலிருந்து மெதுவாக முன்வந்து, மன்னர் முன்பு முழங்காலிட்டு வலது கரத்தைப் பிடித்து முத்தமிடுகிறாள்]

ஜோன்: மாண்புமிகு மன்னரே! தங்களை நான் மன்னராக்கி விட்டேன். என் கடமைப் பணி முடிந்தது. நான் என் தந்தையின் வயல்புறத்துக்குத் திரும்பிச் செல்வதாக இருக்கிறேன்.

சார்லஸ் மன்னர்: [ஆச்சரியமுடன் சமாளித்துக் கொண்டு] ஓ, அப்படியா ? உன் கிராமத்துக்குப் போகிறாயா ? அது சரி! அப்படியே செய்! அது உனக்கு நல்லது.

ஜோன்: [ஏமாற்றமுடன் எழுகிறாள்] நான் போய் வருகிறேன். … ஆனாலும் என் பணி இன்னும் முடியவில்லை! என் பெற்றோரைக் கண்டு பல நாட்கள் கழிந்து விட்டன. அவர்களைக் காண வேண்டும் நான்! ஆயினும் நான் ஆரம்பித்த போராட்டம் இன்னும் முடியவில்லை!

சார்லஸ் மன்னர்: நீ முதலில் கிராமத்துக்குப் போ! அது ஆரோக்கியமான வாழ்க்கை, தெரியுமா ?

துனாய்ஸ்: ஆனால் மந்தமான வாழ்க்கை! ஜோன் மந்தமான வாழ்க்கையை விரும்புபவள் இல்லை!

புளு பியர்டு: பல மாதங்களுக்குப் பிறகு ஜோன், கெளன் பாவாடை உடுத்தித் தடுக்கி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் [சிரிக்கிறான். மற்றவர் சிரிக்காது அவனைக் கூர்ந்து பார்க்கிறார்]. கவச உடை இனி அவளுக்குத் தேவைப் படாது!

ஜோன்: [சாந்தமுடன்] கிராமத்தில் நான் பெண்ணுடையத்தான் அணிவேன். ஆனால் கவச உடை அணிந்து போரிடும் காலம் எனக்கு இன்னும் முடிய வில்லை!

லா ஹயர்: உண்மைதான்! போர்மங்கைக்கு இரவு நேரங்களில் எப்படித் தூக்கம் வரும் ? சண்டை போட்டவள் கிராமத்தில் சமாதானமாய் வாழ முடியுமா ?

சார்லஸ் மன்னர்: [ஜோனைக் கூர்ந்து நோக்கி] நீ கிராமத்துக்குப் போக விரும்பும் போது, நாங்கள் உன்னைத் தடுத்து இங்கு தங்க வைக்கப் போவதில்லை. போய் வா!

ஜோன்: [கசப்புடன்] கிராமத்துக்கு நான் திரும்பிச் செல்வதில் உங்களில் யாருக்கும் கவலை யில்லை என்பதை நன்கறிவேன்! திரும்பி நான் வரக் கூடாது என்று எண்ணத்தில் இருப்பவரும் இங்கு இருக்கிறார்! திரும்பி வந்தாலும், போருக்கு நான் போகக் கூடாது என்னும் கருத்தைக் கொண்டவரும் உள்ளார்! போருக்குப் போனாலும் திரும்பி நான் மீளக் கூடாது என்னும் நோக்கத்தில் மிதப்பாரும் இருக்கிறார்!

(ஐந்தாம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)

****

‘ஆங்கிலேயர்களே! எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது! கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள் நாட்டுக்கு மூட்டையைக் கட்டிச் செல்லுங்கள்! இல்லை யென்றால் நாங்கள் உங்களுடன் போர் தொடுப்போம்! நீங்கள் என்றும் மறக்காதபடி, உங்களை எதிர்க்கும் எங்கள் கூக்குரல் ஓங்கி எழும்! இது எனது மூன்றாவது எச்சரிக்கைக் கடிதம்! இதுவே எனது இறுதி எச்சரிக்கை! இனிமேல் நான் எழுதி உங்களை எச்சரிக்கப் போவதில்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘வலுப்படைத்த வர்க்கத்தினரைத் தாக்காத வரை, ஒருவரின் அறிவுத்திறம் (Intellect) உச்ச ஆற்றல் அடைந்ததாகக் கருதப்படுவ தில்லை. ‘

பிரெஞ்ச் எழுத்தாள மேதை: மேடம் தி ஸ்டாயல் [Madame De Stael (1766-1817)]

****

ஐந்தாம் காட்சி (பாகம்-2)

 

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்
 2. ஜோன் ஆஃப் ஆர்க்
 3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்
 4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.
 5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.
 6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர் உள்ளே நுழைகிறார்.

சார்லஸ் மன்னர்: [ஜோனை நோக்கி] நீ கிராமத்துக்குப் போக விரும்பும் போது, நாங்கள் உன்னைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. போய் வா ஜோன்! புரட்சி மங்கைக்கு ஓய்வு தேவை. உன் பெற்றோர் கரம் நீட்டி உன்னை வரவேற்பார்.

ஜோன்: [சற்று கசப்புடன்] கிராமத்துக்கு நான் திரும்பிச் செல்வதில் உங்களில் யாருக்கும் கவலை யில்லை! திரும்பி நான் வரக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவரும் இங்கு இருக்கிறார்! திரும்பி வந்தாலும், போருக்கு நான் போகக் கூடாது என்னும் கருத்தைக் கொண்டவரும் உள்ளார்! போருக்குப் போனாலும் திரும்பி நான் மீளக் கூடாது என்னும் நோக்கத்தில் மிதப்பாரும் இருக்கிறார்!

லோ ஹயர்: ஜோன்! அப்படி எல்லாம் நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதே! பிரான்ஸை விடுவிக்கப் பிறந்த உன்னைத் தேவ மங்கையாய் நினைத்து மக்கள் ஆராதனை செய்கிறார்! நெடுங்காலம் தங்கி நீ தொடங்கிய பணியை முடிக்க வேண்டும்! நீ இல்லையெனின் தலையில்லா உடம்பினராய் ஆகிவிடுவர் பிரெஞ்ச் மாந்தர்! விடுதலை மங்கை நீ என்பதை மறந்து பேசாதே!

ஜோன்: [வருத்தமுடன்] நெடுங்காலம் தங்கிப் பிரான்ஸ் முழுவதையும் விடுவிக்க எனக்குக் கடவுள் கட்டளை யிட்டாலும், அதை முடிக்கும் முன்பே மனிதர் எனது முடிவுக்கு வழி வகுக்கிறார். ஆராதிக்கும் கூட்டத்தின் அருகே, என்னை அழித்திட அன்னியர் காத்துக் கொண்டிருக்கிறார்! [துனாய்ஸை பார்த்து] … துனாய்ஸ்! நானில்லா விட்டாலும், நாம் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை, நீ தொடர்ந்து நடத்தி வருவாயா ? ஆங்கில மூர்க்கர்களை நாட்டை விட்டு விரட்ட உணர்ச்சிக் கனல் உன் நெஞ்சிக்குள், அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதா ?

துனாய்ஸ்: ஜோன், நீ இருக்கும் போதே உன்னுடன் இணைந்து அந்தப் போர்களை நான் முடிப்பேன்! நீ மூட்டி விட்ட கனல் என் நெஞ்சில் மட்டுமில்லை, படையினர் இதயத்திலும் எரியத் துவங்கி இருக்கிறது!

ஜோன்: [அரசர் முன்வந்து] மேன்மைமிகு மன்னரே! நான் கிராமத்துக்குப் போகும் தீர்மானத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.

சார்லஸ் மன்னர்: [ஆச்சரியமடைந்து] ஜோன்! ஏனிந்த மனமாற்றம் ? என்னவாயிற்று இப்போது ?

ஜோன்: [துனாய்ஸைப் பார்த்துச் சட்டென] துனாய்ஸ்! நாமிருவரும் படைகளோடு பாரிஸைப் பிடிக்கச் செல்வோம், கிராமத்துக்கு நான் போகும் முன்பாக! கிராமத்துக்குப் போவதை நான் தள்ளிப் போடலாம்! ஆனால் பாரிஸைப் பிடிக்கப் போகும் திட்டத்தை நாம் தள்ளிப் போடக் கூடாது!

சார்லஸ் மன்னர்: [பயந்து போய்] ஓ! வேண்டாம்! போர் வேண்டாம்! … ஜோன்! நாம் பெற்றவை எல்லாம் முற்றிலும் போய்விடும்! போதும்! போதும்! இந்தக் கோரமான போர்கள்! ஜோன்! நீ கிராமத்துக்குப் போவதை நிறுத்தாதே! ஆனால் போர்களை நிறுத்து! அந்த மரண வேதனைகளை என்னால் தாங்க முடியாது! மக்களும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்! பர்கண்டித் தளபதியுடன் நாம் ஓர் நல்ல உடன்படிக்கை செய்து கொள்ளலாம்!

ஜோன்: [ஆவேசமாக] என்ன ? பர்கண்டியுடன் உடன்படிக்கையா ? அதுவும் நல்ல உடன்படிக்கையா ? அடிமைத்தனத்தில் கூட நல்ல அடிமைத்தனம் என்று வேறு இருக்கிறதா ? ஆங்கிலேயர் நம்முடன் போரிட்டு நம் நாட்டைப் பற்றிக் நம்மை வாசற்தள மிதிப்புக் கம்பளங்களாய் விரித்திருக்கிறார்! தரையிலே மிதிபட்டு ஒட்டிக் கொண்ட கம்பளங்கள், இப்போது வெட்டிக் கொண்டு எழுவதற்கு வலுவிருந்தாலும், மனமில்லை! பர்கண்டியில் ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் பிரெஞ்ச் பிறவிகள் ஆயினும், ஆங்கிலேயர் காலைச் சுற்றி நிழலாகக் கிடக்கும் பிரெஞ்ச் துரோகிகள் அவர்கள்! தேசத் துரோகி களுடன் தேசப் பற்றுடையோர் சேரலாமா ? போரில் இழந்த நகரங்களைப் போரிட்டுதான் நாம் மீட்டுக் கொள்ள வேண்டும்! நாட்டு அமைதி நகரங்களை மீட்டுத் தராது! அமைதியை நாடுவோர், முதலில் வாளெடுத்துப் போரிட வேண்டும். முழு அமைதி நமக்கு இன்னும் வரவில்லை.

சார்லஸ் மன்னர்: ஜோன்! ஜோன்! ஜோன்! உடன்படிக்கை துரோகிகளை நண்பராக்கும்! இதுதான் சரியான தருணம்! மகுடம் சூட்டி எனக்கு நீ மாபெரும் சக்தியை அளித்திருக்கிறாய்! ஒன்றாகச் சேர்ந்து ஆண்டு வர உடன்படிக்கை செய்ய முயல்வதில் இப்போது நமக்குச் சிரமமில்லை!

[அப்போது ஆர்ச்பிஷப் மன்னர் குழுவை நோக்கி வருகிறார். சார்லஸ் மன்னருக்கும், லா ஹயருக்கும் இடையே நிற்கிறார்.]

ஆர்ச்பிஷப்: மாண்புமிகு மன்னரே! நமது போர்கள் நின்று விட்டனவா ? நாடெங்கும் அமைதி நிலவி விட்டதுவா ? எங்கள் மதப்பணிகளைத் துவங்கலாமா ?

சார்லஸ் மன்னர்: [ஏளனமாக] பணிமங்கை ஜோன் மீண்டும் போர் துவங்கத் திட்ட மிடுகிறாள்! பாரிஸைப் பிடிக்கப் போகிறாளாம்!

ஆர்ச்பிஷப்: [கேலியாக] அத்திட்டத்துக்கு உடனே மாண்புமிகு மன்னர் உடன்பட்டிருப்பார்! இதெல்லாம் மீண்டும் வரும் நமக்குத் தெரிந்த வரலாற்றுக் கதை தானே! ஜோன் போரறிவு புகட்டத் தகுதி அற்றவள்.

சார்லஸ் மன்னர்: [சற்று கடுமையாக] ஆர்ச்பிஷப் அவர்களே! அதுதான் இல்லை! இம்முறை வரலாறு மீள வில்லை! பணிமங்கையின் அடுத்த போர்த் திட்டத்துக்கு எனது பூரண மறுப்பு! முற்றிலும் எதிர்ப்பு! முழு மனது வெறுப்பு! அவளுக்கு உடன்படாமல், பர்கண்டி வர்க்கத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள எனக்கு ஏகோபித்த விருப்பம்! நமக்குக் கிடைத்திருக்கும் பகுதிகள் போதுமானவை! ஆயிரக் கணக்கான மாந்தரைப் பலிகொடுத்து, இனியும் நமக்கு நகரங்கள் எதற்கு ? உடன்படிக்கை ஏற்பாடு நடக்கட்டும்! நல்ல தருண மிது! நழுவவிடக் கூடாது இது! நல்ல சமயம் நம்மை விட்டுச் செல்வதற்குள், உடன்படிக்கை செய்து கொள்வோம். ஆர்லியன்ஸ் போரில் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைத்தது! நாட்டில் அமைதி நிலவ வேண்டும்! போருக்குப் பலிகொடுத்த மாதரின் கண்ணீர் உலர்வதற்குள் அடுத்தொரு போரா ?

ஜோன்: மாண்புமிகு மன்னரே! கடவுள் நம்பக்கம் போரிட்டு வெற்றி பெற்றதையா அதிர்ஷ்ட வசம் என்று ஏளனமாகப் பேசுகிறீர் ? நமது புனித பூமியில் களைகளாய் ஆங்கில மூர்க்கர் இன்னும் உள்ள போது, நான் ஆரம்பித்த விடுதலைப் போரை எப்படி நிறுத்துவது ?

ஆர்ச்பிஷப்: [சற்று சினத்துடன், அழுத்தமாக] ஜோன், ஏனிப்படிக் குறுக்கே பேசுகிறாய் ? மன்னர் என் கருத்துக்களைக் கேட்டார்! உன் கருத்துக்களை அல்ல! நீ உன்னை மறந்து விடுகிறாய்! பக்கத்தில் நிற்கும் பெரிய மனிதர் உன் பார்வையில் தெரிவதில்லை! நானிருக்கும் போது அடிக்கடி நீ என்னை இவ்விதம் அவமானம் செய்கிறாய்! தெரிந்து செய்கிறாயா அல்லது தெரியாமல் செய்கிறாயா என்பது எனக்குத் தெரியாது!

ஜோன்: [கடுமையாக] இடையில் நுழைந்த உங்களுக்கு முதலுரையும் தெரியாது! முடிவுரையும் தெரியாது. .. சரி, மன்னருக்குப் பதில் கூறுங்கள் பாதிரியாரே! ஏரிலிருந்து கையை மன்னர் எடுக்கக் கூடாதென்பது கடவுளின் கட்டளை என்று கூறுங்கள் பாதிரியரே!

ஆர்ச்பிஷப்: [அதட்டலுடன்] மன்னரிடம் நான் என்ன கூற வேண்டும் என்று நீ எனக்குப் பாடம் சொல்லித் தருகிறாயா ? நன்றாக இருக்கிறது வேடிக்கை! கடவுளை நீ சந்திக்கு இழுத்து வருவதுபோல், நான் அவரிடம் நேரடித் தொடர்பு கொள்வதில்லை! தேவாலயத்தின் மூலமாகவே நான் கடவுளிடம் உரையாடுவேன்! ஆலயத்தை மதிக்காத உன்னை போன்ற போலி நபரில்லை, நான்! கிராமத்துப் பாமரக் குடும்பத்தில் பிறந்து கல்வி அறிவற்ற நீ, நேராகக் கடவுளிடம் தொடர்பு கொள்வது மாபெரும் பாபம்! அதைப் பறைசாற்றி வருவதும் மாபெரும் பாபம்! கடவுளிடம் உரையாடும் நீ, கீழ்ப்படியும் பண்பில்லாமல் கர்வத்தோடு திரிவதும் மாபெரும் பாபம்! ….

சார்லஸ் மன்னர்: [குறுக்கிட்டு] மேலும் ஜோன் தனக்குத்தான் மற்றவரை விட மிகையாகத் தெரியும் என்ற பெருமையும் இருக்கிறது!

ஜோன்: [மன வேதனைப்பட்டு] உண்மைதான். உங்கள் அனைவருக்கும் தெரியாத சில அசரீரிக் கட்டளைகளை எனக்கு மட்டும் தான் கடவுள் ஓதுகிறார்! அதை நான் தேடிப் போகவில்லை! கடவுளே என் காதில் சொல்லிக் கட்டளை இடுகிறார்! அது என் தவறன்று! ஆனால் ஆர்ச்பிஷப் கூறுவது போல், எனக்குக் கர்வம் கிடையாது! ஆனால் நான் அதிகாரத்துத் தணிந்து செல்ல மாட்டேன். எனக்கு மெய்யாக, உறுதியாகத் தெரியாததை நான் ஒருபோதும் வெளியே சொல்வதில்லை!

சார்லஸ் மன்னர், புளு பியர்டு: [இருவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்] ஓ அப்படியா ?

ஆர்ச்பிஷப்: [அழுத்தமாக] அசரீரி எங்கிருந்து வந்தால் என்ன ? அது மெய்யென்று உனக்கு எப்படித் தெரியும் ? நீ கற்பனை செய்வதைக் கடவுளின் கட்டளை என்று பொன்முலாம் பூசுகிறாயா ?

ஜோன்: எனக்கு வரும் அசரீரிக் குரல்களை நான் நன்கு அறிவேன். அவை என் கற்பனை அல்ல! கடவுளின் கட்டளையை என் கற்பனை என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு!

சார்லஸ் மன்னர்: ஓ! உனக்கு மட்டும் ஏன் அசரீரி ஆணைகள் வர வேண்டும் ? கடவுளின் ஆணைகள் எனக்கேன் வருவதில்லை ? நான்தான் மன்னன்! நீ யன்று. உனக்குச் சொல்லும் கடவுள், எனக்கே நேரடியாகச் சொல்லலாமே!

ஜோன்: மன்னரே! அவ்வித ஆணைகள் கடவுளிடமிருந்து உங்களுக்கும் வருகின்றன. ஆனால் உங்கள் காதுகளில் அவை பட்டாலும், காதுகள் அவற்றை ஈர்ப்ப தில்லை! காரணம் நீங்கள் மனம் ஊன்றிக் கடவுளை வேண்டிக் கேட்ப தில்லை! தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் புனித நூல் பைபிள் கூறுகிறது. நீங்கள் கடவுளின் வாசற் கதவைத் தட்டுவது மில்லை! கடவுளை மெய்யாக வேண்டிக் கேட்பது மில்லை! உங்கள் ஆத்மாவின் கனல் எழும்பி, நெஞ்சுருகிக் கடவுளை வேண்டினால், அவர் உங்களுக்குக் கட்டளை இடுவார்! வழி காட்டுவார்! இரும்பு தணலில் காய்ந்து தயாராகச் சிவந்துள்ள போதுதான், அதை அடித்து வடிக்க முடியும்! நான் சொல்ல வருவது என்ன வென்றால், பகைவர் எதிர்பாராத இச்சமயத்தில் திடாரென நமது படையினர் சாம்பைன் பகுதியைத் தாக்க வேண்டும். ஆர்லியன்ஸ் கோட்டை நம்மிடம் மீண்டதுபோல், சாம்பைன் பகுதியும் விழுந்து விடும்! அது நாம் அடுத்து பாரிஸைக் கைப்பற்றக் கதவு திறக்கும்! பாரிஸ் தலைநகரை மீட்காமல், முடி சூடிய உங்கள் மகுடத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது ?

லா ஹயர்: [குறுக்கிட்டு] அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்! ஜோன் பணிமங்கை கூறும் ஆலோசனை மிகச் சிறந்த போர்ச் சூழ்ச்சி! பானையைக் கல்லால் அடிப்பதுபோல் சாம்பைனைத் தாக்கி, பாரிஸின் வயிற்றுக்குள் நுழைந்து விடாலாம்! நீ என்ன நினைக்கிறாய், துனாய்ஸ் ?

துனாய்ஸ்: [சற்று கேலியாக] நமது பீரங்கிக் குண்டுகள் உன் மண்டைபோல் சூடேறி இருக்குமே யானால், அவ்விதக் கனல் குண்டுகள் நமக்குப் போதிய எண்ணிக்கையில் கிடைக்குமானால், நாமிந்த பூமியையே பிடித்து விடலாம்! பிடுங்குவதும், வெறிபிடித்துத் தோடுவதும் போருக்குத் துணை புரிந்தாலும், அவை தோல்வி தரும் தன்மைகளே! முன்பு நாம் தோற்றுப் போனதற்கு அத்தன்மைகள்தான் காரணம். நாம் எப்போது, எதனால் அடிக்கத் தோற்றோம் என்பது நமக்குத் தெரியாது! அதுதான் நமது பெரிய தவறு.

ஜோன்: துனாய்ஸ்! நீ ஆர்லியன்ஸில் எப்போது வெற்றி பெற்றாய் என்பது உனக்குத் தெரியாது! அது உனது உச்சத் தவறு. நான் உனக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. ஆர்லியன்ஸ் முற்றுகையில் நீங்களும் உங்கள் ஆலோசனைக் குழுவினரும் பகைவர் சூழ மாட்டிக் கொண்ட பின்பு, தாக்குவதற்கு வழி தெரியாது தவித்தீர்கள்! அதற்கு வழி வகுத்தவள் நான்! போரை முதலில் தொடங்கத் தெரியவில்லை, உங்களுக்கு! அதைச் சொல்லித் தந்தவள் நான்! கோட்டை முன் பீரங்கிகளை எவ்விதக் கோணங்களில் நிறுத்தி குண்டுகளை ஏவுவது என்பது தெரியவில்லை உங்களுக்கு! அவற்றைக் கூட அமைத்துக் காட்டியவள் நான்!

துனாய்ஸ்: [சற்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து] ஜோன்! என்னருமை ஜோன்! ஜெனரல் ஜோன்! போதும், போதும் என் மானத்தை மன்னர் முன் வாங்குவது.

ஜோன்: என் போர்த் திறமையைப் பற்றி நான் புகழ்த்திக் கொள்ளக் கூடாது! என்னைப் பற்றி நீயே மன்னரிடம் சொல், துனாய்ஸ்!

****

‘ஆங்கிலேயர்களே! பிரெஞ்ச் முடியரசு நாட்டில் உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லை, உரிமையும் இல்லை. கோட்டைகளைக் கைவிட்டு உங்கள் நாட்டுக்கு ஓடிச் செல்ல ஜோன் பணிமங்கை, என்மூலம் கடவுள் உமக்கு எச்சரிக்கையும், ஆணையும் இடுகிறார். அல்லாவிட்டால் நான் அதற்காகப் போரிடுவேன்! நீங்கள் என்றென்றும் மறக்கா வண்ணம் உங்களை எதிர்த்துத் தாக்க முற்படுவேன்! இதுவே எனது மூன்றாவது எச்சரிக்கை! என் முடிவான எச்சரிக்கை! இனிமேல் நான் உமக்கு எழுதப் போவதில்லை! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். கோட்டைப் போரில் கழுத்தடியில் வில்லம்பு அடித்து, இரும்புக் கவசத்தையும் ஊடுறுவிச் சென்று ஜோன் தரையில் வீழ்ந்தாள்! ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள்! ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! வயதான ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஜோன் ஆஃப் ஆர்க்கின் முதல் வெற்றியைக் கேள்வியுற்று, அவமானப் பட்டு அவளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடுகிறார். ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடித்த பிறகு ஜோன் பாரிஸைப் கைப்பற்றத் திட்டமிடுகிறாள். ஆனால் அத்திட்டத்தில் சார்லஸ் மன்னருக்குச் சிறிது விருப்பமும் இல்லை.

ஐந்தாம் காட்சி (பாகம்-3)

 

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்
 2. ஜோன் ஆஃப் ஆர்க்
 3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்
 4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.
 5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.
 6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ணமிருக்கிறாள். ஆண்களின் கவசப் போருடையைச் சீராக ஜோன் அணிந்திருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர், ஆர்ச்பிஷப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

துனாய்ஸ்: [சற்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து] ஜோன்! என்னருமை ஜோன்! ஜெனரல் ஜோன்! போதும், போதும் என் மானத்தை மன்னர் முன் வாங்குவது.

ஜோன்: என் போர்த் திறமையைப் பற்றி நான் புகழ்த்திக் கொள்ளக் கூடாது! என்னைப் பற்றி நீயே மன்னரிடம் சொல், துனாய்ஸ்!

துனாய்ஸ்: ஜோன்! போரிடும் போது கடவுள் உன்பக்கம் இருந்தார். நான் அப்போர்களை மறக்க முடியாது. நீ கால்வைத்த இடத்தில் அனுகூலமாக எப்படிக் காற்று திசை மாறியது ? அஞ்சிய எங்கள் நெஞ்சங்கள் உன் குரல் கேட்ட பின் எப்படிப் பொங்கி எழுந்தன ? உன் வருகையால், உன் இருக்கையால் நாம் வெற்றி அடந்தோம் என்பது முற்றிலும் உண்மையே! நானொரு போர்வீரன் என்ற முறையில் சொல்ல வருவது இதுதான்: கடவுள் எந்த மனிதனின் கூலியாள் இல்லை! எந்தப் பணிமாதின் வேலைக்காரன் இல்லை! உனக்கு வாழ விதி இருக்குமாயின், மரணத்தின் கோரப் பற்களிலிருந்து கடவுள் விடுவித்து உன் காலிலே உன்னை நிற்க விடுவார்! பிறகு நீயேதான் உன் சக்தி முழுவதையும் ஈந்து சண்டையில் போராட வேண்டும். அதே சமயம் கடவுள் உன் பகைவருக்கும் நடுத்தரம் காட்டுகிறார். அதை மறக்கக் கூடாது. ஆர்லியன்ஸ் போரில் கடவுள் நமக்கு ஆதரவாக இருந்து வெற்றி அளித்து, அடுத்த போர்களிலும் வெல்லச் செய்து சார்லஸ் மன்னர் முடிசூட வழி அமைத்தார். ஆனால் அதுபோல் சாதிக்க வேண்டிய கடமைகளை நாம் மேற்கொள்ளாது, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டால், பகைவரால் நாமினி மிதிக்கப் படுவோம்! நமக்குத் தகுந்த வெகுமதி போரில் தோல்விதான்!

ஜோன்: என்னுடைய வேதவாக்கு இதுதான். கடவுளை துதித்துக் கொண்டு, கடமையே கண்ணாகக் கருதி முழு நம்பிக்கையோடு முற்பட வேண்டும். நமது கடமையச் கடவுள் செய்ய மாட்டார்! நமது போராட்டத்தில் நியாயம் இருப்பின், கடவுள் உதவி செய்வார். நமது கடமைகளை முடிப்பதற்கு நாம்தான் பொறுப்பாளிகள். கடவுள் மீது பாரத்தைப் போட்டு கடமையைச் செய்யாமல் வெற்றியை எதிர்பார்த்தால், தோல்விதான் கிடைக்கும்!

துனாய்ஸ்: ஜோன்! நமது வெற்றிக்கு நம்மன்னர் சார்லஸ் ஒரு காரணம். அதை நாம் மறக்கலாகாது. வெற்றி விழாவில் என்னைப் பற்றி, என் பங்களிப்பைப் பற்றி நீ ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை! நானதைப் புகார் செய்யப் போவதில்லை! அது போகட்டும். பணிமங்கை, பணிமங்கை என்று பாராட்டி, அவளது அற்புத வெற்றிகளைச் சீராட்டும் பொதுநபர், உணவு, உடை அளித்துப் படைகளைப் பயிற்சி செய்த தளபதி துனாய்ஸின் பெருமையை அறிய வாய்ப்பில்லைதான்! ஆனால் எனக்குத் தெரியும். பணிமங்கை மூலமாகக் கடவுள் நமக்குத் தந்த வெகுமதியும், அவர் நான் முடிக்காமல் விட்டுப் போனவையும் எனக்கு நன்றாகத் தெரியும். நான் உனக்குச் சொல்ல வருவது இதுதான்! உனது அற்புத வினைகள் முடியும் வேளை வந்து விட்டது! ஆனால் அதற்குப் பிறகு சாமர்த்தியமாகப் போரிட்டு வெல்பவரே, சாதனை வீரர்கள்! அத்துடன் அதிர்ஷ்ட தேவதையின் கண்ணொளியும் அவர் மீது பட வேண்டும்.

ஜோன்: துனாய்ஸ் தளபதியாரே! உனது போர்க் கலைத்திறன் புராதன முறையானது. உன் உதவியாளர் போரிடப் போதிய திறமை இல்லாதவர். கனமான கவசங்களை அணிந்து, விழுந்தால் எழ முடியாத நிலையில் உதவியாளரைத் தேடுகிறார். பீரங்கி முன்னால் இரும்புக் கவசங்கள் என்ன பாதுகாப்பளிக்கும் ? பிரான்ஸுக்காகப் போரிடுவோரும், கடவுளுக்காக வாளெடுப்போரும் கையில் பணமுடிப்பை வாங்கிப் பின்தங்க மாட்டார்! என்னுடன் இணைந்து போரிட்டவர் பாமர மக்கள்! அவருக்குக் கவச உடை இல்லை! பணமில்லா விட்டாலும் அவர் எவரும் பண முடிப்பைத் தேட வில்லை! பாதி உடை அணிந்த சாதாரண நபர்தான் நான் கோட்டை மீது ஏணி வைத்து ஏறிய போது கூடவே ஏறியவர்கள். ஆனால் காப்டன் போன்ற உனது மேலதிகாரிகள் ஆர்லியன்ஸ் முற்றுகையின் போது என்னைப் பின்பற்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட மறுத்தனர் தெரியுமா ?

புளு பியர்டு: [அவமானப்பட்டு] ஜோன், நீ போப்பாண்டவராக இருப்பதோடு, போர்க் களத்தில் ஜூலியஸ் சீஸராகவோ அல்லது அலெக்ஸாண்டராகவோ இருக்க வேண்டும். வெகுத் திறமையாக தளபதியைக் கீழே தள்ளி, உன் சங்கை நன்றாகவே ஊதிக் கொள்கிறாய்!

ஆர்ச்பிஷப்: [ஆங்காரமாக] உந்தன் பீற்றல், பெருமைப் பேச்சு உன்னைக் கீழே தள்ளப் போகிறது, ஜோன்! அகந்தையில் அழியும் காலம், மெய்யாக உன்னை நெருங்கி விட்டது!

ஜோன்: ஆர்ச்பிஷப் அவர்களே! பீற்றலோ, பெருமையோ அதை எப்படி வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! நமது படையினரைப் பற்றி நான் உரைத்தது மெய்யா அல்லது இல்லையா வென்று கூறுங்கள்.

ஆர்ச்பிஷப்: [சினத்துடன்] நான் இரும்புக் கவசம் அணிந்து உன்னைப் போல் போர்க்களத்தில் புரள்பவன் அல்லன்! புனித வெள்ளை அங்கி அணிந்து, மனித ஆத்மாக்களுக்குப் பாப மன்னிப்பு அளிப்பவன்!

லா ஹயர்: ஆர்ச்பிஷப் அவர்களே, ஜோன் கூறியது உண்மைதான்! நம்மில் பாதிப் படையினர் தமது அழகிய மூக்கு அறுபட்டு விடும் என்று பயந்து புறங்காட்டி ஓடினர்! மற்ற பாதிப்பேர் வீட்டுக் கடன் அடைபட வேண்டும் என்று பண முடிப்பை ஏற்றுக் கொண்டு போரிடாமல் இருந்தனர்! ஜோனுக்கு எல்லா விபரங்களும் தெரியாது. ஆனால் அவள் நியாயத்தைப் பின்பற்றி அவள் கூறுவது சரியே! பிரம்பின் சரியான நுனியைத்தான் அவள்கை பிடித்திருக்கிறது. அவளுக்குப் போர் பழக்க வழக்கங்களைப் பற்றிப் முழுமையாகத் தெரியாது. என் பொன்மொழி இதுதான்: போரைப் பற்றிச் சொற்ப அறிவுள்ளவர், அதைச் சீராக முடிப்பதில் தீரராக இருக்கிறார். அதற்குச் சான்று, பதினெட்டு வயது பணிமங்கை ஜோன்!

துனாய்ஸ்: எனக்குத் தெரியும் அது. பண்டை முறையில் நான் போரிட விரும்பினேன். அகின்கோர்ட், பாயிட்டியர், கிரிஸி போன்ற இடங்களில் போரிட்டு நிறையக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் போரில் எத்தனை உயிரிழப்பு நேரலாம் என்று ஊகித்து, அத்தனை அரிய உயிர்களைப் பலியிட்டு அந்தக் கோட்டையைப் பிடிப்பது தகுதி உடையதா என்று மதிப்பிடுவேன். ஆனால் ஜோனுக்குப் போரில் நேரும் உயிரிழப்போ அல்லது நிதியிழப்போ பெரியதாகத் தெரிவ தில்லை! கண்களை மூடிக் கொண்டு கடவுளை நெஞ்சில் வைத்து, போர்க்களம் நோக்கி விரைகிறாள். தன்னைச் சுற்றி யிருக்கும் பகைவர் ஈட்டிகளை அவள் கண்டு கொள்வ தில்லை! … அதனால் ஒருநாள் ஜோன் பகைவர் கைவசப்படலாம் என்று எனக்கோர் பயம் உண்டாகிறது! அவளைப் பிடிப்பதற்குப் பல குள்ள நரிகள் பதுங்கி இருக்கின்றன! பிரிட்டாஷ் கோமகனார் ஓவரீக் (Ouareek) ஜோனைப் பிடித்தத் தருபவருக்கு பதினாறாயிரம் பவுன்ஸ் பண முடிப்பு அளிப்பதாகப் பறைசாற்றி யுள்ளார்!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] அத்தனை ஆயிரம் நாணயங்களுக்கு நான் நிகரானவளா ? ஆச்சரியப் படுகிறேன்! ஒரு படிப்பில்லா பாவையைப் பற்ற பதினாறு ஆயிரம் பவுண்ஸ் அளிக்கும் பைத்தியகாரனும் இருக்கிறானா ?

லா ஹயர்: [சீற்றமுடன்] சிரிக்காதே ஜோன்! அப்படி உன்னைப் பிடிக்க நாங்கள் விட்டுவிட மாட்டோம்! பிரான்ஸை மீட்டுத் தந்த ஜோனை, சார்லஸ் மன்னருக்கு மகுடம் சூட்டிய ஜோனை, நாங்கள் பகைவர் பிடித்திட விட்டு விடுவோமா ? துனாய்ஸ்! ஜோனின் கடமை முடிந்து விட்டது! இப்போது நமது கடமை, முதற் கடமை. ஜோனைப் பாதுகாப்பது!

ஆர்ச்பிஷப்: [சினத்துடன்] ஆனால் நாட்டில் விடுதலை உணர்ச்சியை எழுப்பி, ஜோன் தானாகக் கோட்டைகளைப் பிடிக்கச் சென்றால், இறுதியில் பகைவர் பிடியில் ஏன் சிக்க மாட்டாள். பிறகு சார்லஸ் மன்னர் கூட அவளைக் காப்பாற்ற முடியாது! ஏன் ? அவள் அடிக்கடிப் பேசும் அந்தக் கடவுள் கூட, அவளைக் காப்பாற்ற முடியாது! அந்தக் காட்சியை பிரெஞ்ச் படையும் வேடிக்கை பார்க்கும்! அவளுடைய மேலுலகப் பிரபுவும் வேடிக்கை பார்ப்பார்!

சார்லஸ் மன்னர்: நானும் வேடிக்கை பார்ப்பேன்! என்னைப் பிரெஞ்ச் மக்கள் மன்னராக ஏற்றுக் கொண்டாலும், ஆங்கிலேயர் என்னை ஏற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை! ஜோன் பிடிபட்டால் நான் அவளை மீட்க முடியாது! அம்மாதிரி நடப்புக்குச் சமாதான நிலையை நிறுவத்தான், நான் பர்கண்டித் தளபதியுடன் உடன்பாடு செய்து கொள்ள விரும்புகிறேன்! ஆனால் ஜோன் அந்த உடன்பாட்டை வெறுக்கிறாள்! தானாகச் சென்று பகைவர் வலையில் ஜோன் சிக்கிக் கொண்டால், நான் அவருடன் போருக்குப் போக விரும்ப வில்லை!

லா ஹயர்: [மனம் நொந்து] என்ன ஒற்றுமை நமக்குள்ளே! பிரான்ஸைப் பகைவரிடமிருந்து கைப்பற்றிய பணிமங்கை ஜோனை மீட்க, ஆடவராகிய நாம் துணிவும், வலுவும் இல்லாமல் மண் புழுக்களாய் இருக்கிறோம்! நன்றி கெட்ட நாட்டினத்தவர் நாம்! ஜோன் தன்னுயிரை நாட்டுக்குக் கொடுக்க அஞ்ச வில்லை! ஆனால் அந்த நங்கையை மீட்டுவர நமக்கெவர்க்கும் துணிவில்லை! மனமில்லை! துடிப்பு மில்லை!

துனாய்ஸ்: [கோபமாக] அப்படியா ? நான் இப்போது உங்கள் அனைவரையும் கேட்கிறேன்! ஆங்கில மூர்க்கர் கையில் ஜோன் பிடிபட்டால், உங்களில் யாரெல்லாம் அவளைக் காப்பாற்ற முன் வருவீர்கள் ? நான் ஓர் படைத் தளபதி என்ற முறையில் பேசுகிறேன். பர்கண்டித் துரோகிகள் ஜோனைப் பிடித்தால், ஒரு படைவீரனைக் கூட அனுப்பி அவளை நான் மீட்க அனுமதிக்க மாட்டேன்! ஜோனை அவர்கள் சிறையில் தள்ளினால், ஜோன் துதிக்கும் காதிரைன் தேவமகளோ அல்லது மைக்கேல் தேவமகனோ சிறைப் பூட்டை உடைத்து அவளை விடுவிக்கப் போவ தில்லை! ஆனால் தனிப்பட்ட முறையில் ஜோன் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும், பாசமும் உள்ளது! தனிப்பட்ட முறையில் ஜோனைக் காத்திட நான் தாவிச் செல்வேன்! என்னுயிரைக் கொடுத்தும் அவள் உயிரைக் காப்பேன்! இது என் உறுதி மொழி!

ஜோன்: [ஏமாற்ற உணர்ச்சியுடன்] நன்றி துனாய்ஸ் நன்றி! முதலில் நீ கூறியது உண்மையே! ஒரு படைவீரன் உயிர் இழப்புக்கு நான் உகந்தவள் இல்லை! பல்லாயிரம் பவுண்ஸ் நாணய மதிப்புக்கும் நான் தகுந்தவள் இல்லை! கடவுளின் கட்டளையைத் தலைமேல் கொண்டு பிரான்ஸை விடுவித்ததற்கு எனக்கு எந்தக் கைமாறும் தேவையில்லை! நான் கூலிக்கு உழைக்கும் பேதை யில்லை! என்னால் மற்றவர் பணமுடிப்பு பெற்றுப் பலனடைந்தால், யாருமதைத் தடுக்க முடியாது! ஆனால் அன்பர்களே! என்பணி இன்னும் முடியவில்லை! நீங்கள் பகைவரின் பாபச் செயல்களைக் காட்டி, என் மனதை மாற்ற முற்படாதீர்கள்! என்னைப் பிடிக்கப் பகைவர் ஒளிந்திருக்கிறார் என்று பயமுறுத்தி என் பணியிலிருந்து என்னைத் திருப்ப முற்படாதீர்கள்! இந்த எறும்புக் கடிகளுக்கு அஞ்சி நான் கடவுளின் கட்டளையை மறப்பவளில்லை! மனிதர் கைவிட்டாலும் கடவுள் என்னைக் கைவிட மாட்டார்!

ஆர்ச்பிஷப்: [சட்டெனக் குறுக்கிட்டு] ஜோன்! உன் அருமைக் கடவுள் உனக்குக் கைகொடுக்க மாட்டார்! கடவுளை நம்பியவர் கைவிடப் படுவார்! உன்னை இப்போது காப்பாற்றக் கூடியது ஒன்றே ஒன்று! அதுதான் கிறித்துவத் தேவாலயம்!

ஜோன்: [அழுத்தமாக] தேவாலய திருச்சபை உறுப்பினரே! கடவுள் என்னைக் கைவிட்டாலும், நானவரைக் கைவிட மாட்டேன்! போதும் உம் வரட்டு உபதேசம்!

சார்லஸ் மன்னர்: [ஏளனமாக] ஜோன்! என் கையில் பணமில்லை! நீ ஏற்றி வைத்த இந்த மகுடம் நிதியை உற்பத்தி செய்யாது! நிதியை விழுங்கும்! நீ செய்த இந்தத் தவறால், என் நிதிச் சேமிப்பையும் இழந்தேன்! ஜோன்! இதை நினைவில் வைத்துக்கொள். நான் பண முடிப்பளித்து உன்னை மீட்கக் கூடிய நிலையில் இல்லை. வருந்துகிறேன் அதற்கு! என்னிலை அப்படி! உன்னைப் பின்பற்றி ஊர் ஊராய்ச் சென்று படை எடுத்துப் பற்றுவது என் கை அகராதியில் இல்லை!

ஜோன்: மேன்மை மிக்க மன்னரே! கிறித்துவத் தேவாலயம் உங்களை விட நிதிச்செல்வம் கொண்டுள்ளது தெரியுமா ?

ஆர்ச்பிஷப்: பணிமங்கையே! கடவுளை நேராகத் தொடர்பு கொள்ளும் நீ, தேவாலய நிழலைத் தேடிச் செல்ல மாட்டாய்! உன்மீது தேவாலயம் கருணை காட்டுமா என்பது என் ஐயப்பாடு! உன்னைச் சூனியக்காரி என்று குற்றம் சாட்டித் தெருத் தெருவாய் இழுத்துச் செல்ல தேவாலயம் திட்ட மிட்டுள்ளது!

ஜோன்: [வேதனையுடன்] இல்லை! இல்லை! மெய்யாக நான் சூனியக்காரி இல்லை! தேவாலயத் திருவாளரே! அப்படி என்னைச் சொல்லாதீர்கள்! எனக்கு மந்திரமும் தெரியாது, சூனியமும் தெரியாது, மர்ம வித்தைகளும் தெரியாது! நான் ஒரு பட்டி மங்கை! கடவுள் சொற்படி நடக்கும் கன்னி! கடவுள் இடும் கட்டளையை நிறைவேற்றும் கடமைக் கன்னி!

ஆர்ச்பிஷப்: ஜோன்! அதுதானே உன் தவறு! அங்குதான் பிரச்சனையே எழுகிறது! அதில்தான் முரண்பாடே உதிக்கிறது! நீ தேவாலயத்தின் சொற்படி செய்யாமல், அதற்கும் உயர்ந்த மேற்படியில் நின்று எங்களுக்கு ஆணை இடுவதை நாங்கள் எப்படித் தாங்கிக் கொள்வோம் ? பீட்டர் கெளஸானைத் தெரியுமா ? அவர் ஒரு பீரங்கி! அதற்கு முன்னால் நீ நிறுத்தப் பட்டிருக்கிறாய்! கடவுளின் கட்டளையை மேற்கொண்டு உன்னைப் போல் இருந்த ஒரு மாதைப் பாரிஸ் பல்கலைக் கழகம் உயிரோடு எரித்ததை நீ அறியமாட்டாய்!

ஜோன்: [ஆங்காரத்தில் எழுந்து] ஏன் ? ஏன் ? அந்த மாதை அப்படி எரித்தது மிருகத்தனம்! அபலைப் பெண்ணை எரித்தது காட்டுத்தனம்! தற்கால மாந்தர் கற்கால மாந்தராய் மாறிய கதையைச் சொல்லி என்னைப் பயமுறுத்த வேண்டாம்! உண்மை உரைத்த அந்தப் பெண்ணை எரித்தது நியாயமற்றது! நெறியற்றது! நீதிக்குப் புறம்பானது!

(ஐந்தாம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)

****

‘நான் இராணுவக் கூட்டத்தோடு ஓடி விடிவேன் என்று என் தந்தை அடிக்கடிக் கனவு காண்பதாக, என் தாய் என்னிடம் கூறினாள்! தந்தை என் சகோதரக்கு இட்ட உத்தரவு: ‘அவ்விதம் ஓடி விடுவாள் என்று நம்பும் என் கனவு மெய்ப்பித்தால், நீங்கள் அவளைக் குளத்தில் மூழ்க்க வேண்டும்! அவ்விதம் நீங்கள் செய்யா விட்டால், நானே என் கையால் அவளை மூழ்க்கி விடுவேன் ‘. அக்கூற்றுக்கு இரண்டாண்டுகள் கழித்துத்தான் எனக்கு அசரீரிக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன! நாட்டை விடுவிக்கக் கடவுள் எனக்குக் கட்டளை யிட்டிருப்பதால், நான் அப்பணியை முடிக்கப் போயாக வேண்டும். ஆயிரம் ஆயிரம் அப்பனுக்கும், அம்மைக்கும் நான் பிறந்தாலும் சரி, அல்லது ஓர் அரச குமாரியாக நான் அவதரித் திருந்தாலும் சரி, கடவுளின் ஆணையாக இருப்பதால் நான் வீட்டை விட்டு ஓடத்தான் போகிறேன். ஆங்கில அன்னியரைப் பிரான்ஸிலிருந்து விரட்ட என்னைப் போன்ற ஒரு பாமர மங்கை முன்வருவதில் கடவுளுக்குப் பேருவகை அளிக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆழமாய் நுழைந்த அம்பை எடுக்கப் பிறர் அஞ்சிய போது, பற்களைக் கடித்துக் கொண்டு ஜோனே தன் கையால் அகற்றினாள்! ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்ட மிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள். ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர்.

 

ஐந்தாம் காட்சி (பாகம்-4)

 

இடம்: ரைம்ஸ் கிறித்துவத் தேவாலயம்

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. மகுடம் சூடிய சார்லஸ் மன்னர்
 2. ஜோன் ஆஃப் ஆர்க்
 3. போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ்
 4. அரசாங்கப் போர் அதிகாரி லா ஹயர்.
 5. புளு பியர்டு எனப்படும் கில்லெஸ் தி ரைஸ்.
 6. ஆர்ச்பிஷப்.

அரங்க அமைப்பு: ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. ஆலய மாளிகையில் பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ்ந்து பாராட்டுகள் தெரிவிக்க, முடி சூடிய சார்ல்ஸ் மன்னர் மகிழ்ச்சியிடன் தென்படுகிறார். பிரார்த்தனை மண்டபத்தில் இரும்புக் கவச உடையில் தனியே மண்டியிட்டு, ஜோன் மேரி அன்னையைத் தொழுத வண்ண மிருக்கிறாள். தளபதி துனாய்ஸ் பிரார்த்தனை மண்டபத்தில் ஜோனுடன் உரையாடும் போது, சார்லஸ் மன்னர், ஆர்ச்பிஷப், புளு பியர்டு, லா ஹயர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

ஜோன்: [ஆங்காரத்தில் எழுந்து] ஏன் ? ஏனிந்த அநீதி ? ஏனிந்தப் படுகொலை ? அந்த மாதைப் பார்ஸில் எரித்தது ஆடவரின் மிருகத்தனம்! அபலைப் பெண்ணை எரித்தது ஆடவரின் காட்டுத்தனம்! தற்கால மாந்தர் கற்கால மாந்தராய் மாறிய கதையைச் சொல்லி என்னைப் பயமுறுத்த வேண்டாம்! உண்மை உரைத்த அந்தப் பெண்ணை எரித்தது நியாயமற்றது! நெறியற்றது! நீதிக்குப் புறம்பானது!

ஆர்ச்பிஷப்: ஜோன்! நீ நீதிபதியா ? உன்னகென்ன தெரியும் ? பயங்கரமான அத்தண்டனை பாரிஸில் நிறைவேற்றப் பட்டது! நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குச் சொன்னேன்! உனக்கு எச்சரிப்பாக இருக்கட்டும் என்பதற்குச் சொன்னேன்!

ஜோன்: ஆனால் நிச்சயம் உங்களுக்குத் தெரியும் அவள் நிரபராதி என்று. அப்படி நான் தண்டிக்கப் பட்டால், நீங்கள் அதைத் தடுத்து என்னைப் பாதுகாப்பீரா ? என்மீது அருள் கூர்ந்து எனக்கு எச்சரிக்கை செய்யும் நீங்கள், சிங்கத்தின் வாயிலிருந்து என்னை மீட்கச் சிரமப் படுவீரா ?

ஆர்ச்பிஷப்: [ஆவேசமாக] நான் சர்கஸ் வித்தைக்காரன் அல்லன்! சிங்கத்தின் வாயில் நீ சிக்கிக் கொண்டால், நான் அருகில் கூட அண்ட முடியாது! சிங்கம் தின்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர, ஆயுத மற்ற பாதிரியால் வேறு என்ன செய்ய முடியும் ? நான் ஆயுதங்களைக் கையால் தொடுபவனும் அல்லன்.

ஜோன்: நீங்கள்தான் தேவாலயத் திருச்சபையின் மேலாதிக்க அதிபர்! நாட்டு மன்னரும், பாமர மக்களும் உங்கள் முன் மண்டி இட்டு நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவார்! நாட்டில் நெறிகளை, ஆன்மீக உணர்வை மாந்தருக்கு ஊட்டி வருபவர் நீங்கள்! உங்களால் பாதுகாக்க முடியா தென்றால் பின் யாரால் முடியும் ? என்னைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு! உங்கள் ஆசீர்வாதத்துக்குக் காத்துக் கிடப்பவள் இந்தப் பணிமங்கை ஜோன். [ஆர்ச்பிஷப் முன் மண்டி யிட்டு மனமுடைகிறாள்.]

ஆர்ச்பிஷப்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] என் கரங்கள் உன்னை ஆசீர்வதிக்கா! பணிவில்லாத, அடக்க மில்லாத, கர்வம் பிடித்த ஒரு பாவைக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டார், பாதிரி. உன்னைக் காப்பாற்றக் கூடியவர் நீ மகுடம் சூட்டிய மன்னர் ஒருவர்தான். என் கால்களில் உன் கண்ணீர்த் துளிகளை விடுவதை விட, மன்னர் கால்களைப் பிடித்து மன்றாடு! அல்லது நீ தினமும் பேசிக் கொள்ளும், உன் கடவுளிடம் போய் மன்றாடு!

ஜோன்: [மண்டி யிட்ட நிலையில்] தேவாலயத் திருமகனே! ஏன் மீண்டும், மீண்டும் அவ்விதம் என்னை அவமதிக்கிறீர் ? நான் கர்வக்காரியும் இல்லை! பணிவில்லாப் பாவையும் இல்லை! நானொரு பாமர மங்கை! பட்டி மங்கை! பள்ளிக்குச் செல்லாத படிப்பறி வில்லாத பாவை! ஏயிக்கும், பியுக்கும் வேறுபாடு தெரியாது எனக்கு! நான் எவ்விதம் கர்வக்காரி ஆக முடியும் ? நான் பணிவு கொண்டவள்! பணிவில்லாத பாவையுடன் கடவுள் அடிக்கடித் தொடர்பு கொள்வாரா, பாதிரியாரே ? கடவுளின் எனக்கிடும் கட்டளையை என்றும் மீறாத ஒரு பணிவு மங்கை நான்!

ஆர்ச்பிஷப்: எனக்குத் தெரியும். தேவாலயம் மூலமாகத்தான் கடவுளின் கட்டளைகள் பூமிக்கு வருகின்றன! உன்னிடம் மட்டும் கடவுள் ஏன் நேராகப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை! தேவாலயத் திருச்சபையின் தூண்களாகிய எங்களிடம் கடவுள் ஏன் பேசுவதில்லை ? நேராகக் கடவுள் உன்னிடம் பேசுவதாக நீ கூறி வருவதை நான் நம்ப மாட்டேன்! உன் மனத்தில் எழும் எதிரொலியைத்தான் கடவுளின் கட்டளை என்று எமக்கும், பிறர்க்கும் சொல்லி ஏமாற்றி வருகிறாய்!

ஜோன்: [சட்டென எழுத்து அழுத்தமாக] நீங்கள் சொல்வதில் சிறிது கூட உண்மை இல்லை! நம்பினாலும் சரி, நம்பா விட்டாலும் சரி, கடவுளின் கட்டளைகள் என் குரல்கள் அல்ல! படிப்பில்லாப் பாவை ஒருத்தி பிரான்ஸின் தலைவிதியை இவ்விதம் மாற்ற முடியுமா ? கடவுள் வழிகாட்டி என்னை நடத்தாமல், தனியே கனவு கண்டு நானொருத்தி இப்படிச் செய்ய முடியும் எப்படி நீங்கள் நம்பலாம் ?

ஆர்ச்பிஷப்: [கோபத்துடன்] அடக்கமற்ற பெண்ணே! நீ எப்படி தேவாலயத் திருச்சபை அதிபதியைப் பொய்யன் என்று மிடுக்காகக் கூறலாம் ? உன் செருக்கு இன்னும் அடங்க வில்லை! பெண்ணாக இல்லாமல் நீ ஓர் ஆணாக இருந்திருந்தால், இப்போது உன் கன்னத்தில் ஓர் அறை விழுந்திருக்கும்!

ஜோன்: [பணிவாக, அழுத்தமாக] திருச்சபை அதிபதியைப் பொய் யுரைத்தவர் என்று இகழவில்லை நான்! என் அசரீரிக் குரலின் மூலத் தலைவனை நம்பாது, ஏளனப் படுத்தியவர் என்றுதான் கூறினேன். கடவுளின் வாக்காக நம்பா விட்டாலும், என் வாக்காக இருந்தவை மெய்யாக நடந்தனவா இல்லையா ? படிப்பில்லாதவள் அவற்றை மெய்யென்று நிரூபிக்க வில்லையா ? அதன் பலாபலன் களை மன்னரும், மக்களும், ஆலயமும் அனுபவிக்கும் போது, பாதிரியார் மட்டும் ஏன் வேதனைப்பட வேண்டும் ? மேலும் ஆண்கள் பெண்களைக் கன்னத்தில் அறைவது வழக்கமற்ற செயலா ? நீங்கள் நாட்டு நிலவரம் தெரியாத பாதிரி என்பதைக் காட்டிக் கொண்டீர்கள்! ஒரு கன்னத்தில் நீங்கள் அறைந்தால், நான் அடுத்த கன்னத்தைக் காட்டுபவள் என்று நினைக்காதீர். அவ்விதம் நீதிநூல் கூறுவது ஒருவரின் பணிவைக் காட்ட வில்லை! அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைபவன் ஒரு கீழ்த்தர மனிதன்! அடியைத் தாங்கிக் கொண்டு, எதிர்க்காமல் அடுத்த கன்னத்தைக் காட்டுபவள் மேல்தர மாதாக இருக்க முடியாது!

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] நீ ஒரு பெண்ணில்லை, ஆண் என்று மறுபடியும் நிரூபிக்கிறாய்! உனக்கு அறிவுரை புகட்டுவதும், எச்சரிக்கை செய்வதும் வீண் வேலை. எது சொன்னாலும், நீ வேங்கை போல் பாய்கிறாய்!

சார்லஸ் மன்னர்: செக்கு மாடுபோல் உன் உரலையே சுற்றிச் சுற்றி வருகிறாய்! நீ சொல்வது எல்லாம் உண்மை. ஆனால் மற்றவர் சொல்வது எல்லாம் தவறு. அப்படித்தானே.

ஆர்ச்பிஷப்: இதை எனது இறுதி எச்சரிக்கையாய் எடுத்துக்கொள். ஆன்மீகப் புனிதரின் ஆணைகளை மீறி, உன் தனிப்பட்ட நியாயத்தை நீ நிலைநாட்டினால், தேவாலயம் உன்னை அறவே புறக்கணிக்கும்! விதி தள்ளிச் செல்லும் பாதையில் நீ பாதிக்கப்பட உன்னை விட்டுவிட்டுத் திருச்சபை ஒதுங்கிக் கொள்ளும்! மேலதிகாரிகள் சொற்படி நடக்காது, போராசைப் பிடிவாதம் கொண்டு நீ போரைத் தொடர்ந்தால், தேவாலயம் உனக்கு ஆதரவு அளிக்காது.

துனாய்ஸ்: [குறுக்கிட்டு] ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையில் உன் கைவசம் படையினர் மிக்க எண்ணிக்கையில் இருந்தனர். காம்பைன் பகுதியின் பகைக் கூட்டத்தை [Garrison in Compiegne] எதிர்க்க, அவ்விதம் போதிய படைகள் இல்லாவிட்டால், நமக்குப் படுதோல்வி நேரும்! நம்மில் பலர் கொல்லப் படுவார். அல்லது கைதி செய்யப் படுவார்.

ஆர்ச்பிஷப்: துனாய்ஸ் சொன்னதைக் கேட்டாயா, ஜோன் ? தேவாலயம் மட்டுமன்று, இப்போது இராணுவமும் உன்னைப் புறக்கணிக்கப் போகிறது! பகைவரிடம் நீ சிக்கிக் கொண்டால், உன் படையாளிகளும் உனக்கு உதவி செய்யப் போவதில்லை! மேன்மை தங்கிய நம் மன்னரும் கூறி விட்டார், பணமுடிப்பு அளித்து உன்னை மீட்க அரசாங்கத்தில் நிதிவளமும் இல்லை என்று!

சார்லஸ் மன்னர்: [கையை விரித்து] ஆம் ஜோன்! கையில் ஒரு பிராங்க் நாணயம் கூடக் கிடையாது! அது முற்றிலும் உண்மை! தவறிப் போய் பகைவரிடம் போய்ச் சிக்கிக் கொள்ளாதே!

ஆர்ச்பிஷப்: மன்னர் சொன்னதைக் கேட்டாயா ஜோன்! நீ இப்போது தனிப்பட்டுப் போனாய்! போன மாதம் உனக்கிருந்த செல்வாக்கு இப்போது மறைந்து போனது! உன் பிடிவாதத்தால் படையினர் எதிர்ப்பையும் பெற்றுக் கொண்டாய்! உன் மூடத்தனத்தால் ஆலயத்தின் பாதுகாப்பை இழந்தாய்! உன் கர்வத்தால் மன்னரின் உதவியும் கிடைக்காது போனது! இத்தகைய பாபங்களைச் செய்து, கடவுளின் பற்றுப் போர்வைக்குள் மறைத்துப் பலரை நீ மயக்கி வந்திருக்கிறாய்! ஆனால் கவச உடையில் கைக்கொடி ஏந்தி, நீ தெரு வெளியே செல்லும் போது, பொதுமக்கள் ஈக்கள் போல் உன்மேல் விழுந்து போற்றுவர்! உன்மீது பூக்களைத் தூவுவர்! உன் காலைத் தொடுவர்! உன் கையைத் தொட்டு முத்தமிடுவர்! குழந்தைகளைத் தூக்கி வந்து உன்னைக் காட்டுவர்! நோயாளிகளைக் குணமாக்கச் சொல்லி உன்னை வேண்டுவர்! இப்படி எல்லாம் பொதுநபர் உன்னைச் சிரமேல் கொண்டு, புனித மங்கையாக்கி உனக்கு மதிப்பு அளித்து, நீ குப்புற விழுந்து மண்மூடிப் போக குழிபறிப்பர்! அவர்கள் விரும்பினாலும் உன்னை ஒருவர் காக்க முடியாது! மலர் தூவும் மக்கள் மையத்திலும், நீ தனிமையில்தான் தவிப்பாய்! உனக்கும் தீக் கம்பத்துக்கும் இடையே உன்னைக் காப்பாற்றக் கூடியது திருச்சபைக் குழு ஒன்றுதான்!

ஜோன்: [ஆங்காரமாய்] கடவுளைப் பின்பற்றும் ஒருத்தியைப் பாபம் செய்பவள் என்று பழி சுமத்துவதில் பரவசம் அடையும் பாதிரி நீங்கள் ஒருவர்தான்! தலைநகர் பாரிஸைக் கைப்பற்றாமல், மன்னர் மகுடம் சூடிக் கொண்டாலும், அதன் மதிப்பு பாதிதான்! நான் பாரிஸைப் பிடிக்கப் போரிடக் கூடாது என்பதற்குத் திருச்சபைப் பாதிரியார் போடும் தடைகளும், தண்டனைகளும் என் காதில் விழுந்தன! உங்கள் ஆலோசனைகளை விட மேலான ஆலோசனைகளை எனக்கு அளிக்கும் நண்பர் இருக்கிறார். எனக்கும் கடவுளுக்கும் இடையே எந்த தேவலாயமோ அல்லது திருச்சபைத் தூதுவரோ நிற்க நான் இடம் கொடுக்கப் போவதில்லை!

ஆர்ச்பிஷப்: பார்த்தீர்களா மன்னரே! நாம் எவ்வித எச்சரிக்கை அளித்தும் அவை ஜோனின் கல்நெஞ்சில் பாயவில்லை! ஜோன்! எங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்! உன் வரட்டுப் பிடிவாதத்தால், உனக்கு எதிராக எம்மைத் திருப்பிப் பகைவராய் ஆக்கி விட்டாய்! இனிமேல் உதவி கேட்டு நீ எங்களை நெருங்காதே! கடவுள் உன் ஆன்மா மீது கருணை காட்ட வேண்டுகிறோம்.

துனாய்ஸ்: அதுதான் உண்மை ஜோன். உன்னை நீதான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோன்: [அழுத்தமாக] ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடிக்க நான் கடவுளின் ஆணையைப் பின்பற்றும் போதும் இதேபோல்தான் நீங்கள் முட்டுக்கட்டை போட்டீர். அதற்கு நான் உடன்பட்டு ஒதுங்கி இருந்தால் என்னவாகி யிருக்கும் ? நாமின்னும் ஆங்கிலேயரின் அடிமைகளாக, அவர்கள் மிதிக்கும் தரை விரிப்பாகக் கிடப்போம்! உங்களில் ஒருவருக்குக் கூட ஒருதுளி விடுதலை உணர்ச்சி கிடையாது! ஆம் நான் தனியாகச் சிந்திப்பவள்தான்! இப்போது தனிப்பட்டுப் போனவள்தான்! பிரான்ஸ் அடிமை நாடாக உழலும் போது, ஆடு மேய்க்க மறுத்து நான் வெளியே ஓடியதால், குளத்தில் என்னைக் மூழ்க்க வேண்டுமென்று என் சகோதரருக்கு உத்தரவு இட்டார் என் தந்தை! நமக்கு ஆடு வேண்டுமா, அல்லது பிரான்ஸ் நாடு வேண்டுமா ? மகுடம் சூடிய மன்னரது பேரவையில், எனக்கு நண்பர்கள் இருப்பார் என்று நம்பி ஏமாற்றம் அடைந்தேன். அதற்குப் பதிலாக பிரெஞ்ச் நாட்டைத் துண்டுகளாக்கிப் பங்கிட்டுத் தின்னும் கழுகுகளும், நரிகளும் பெருகியதைக் கண்டு வெட்கப்படுகிறேன்! நான் பாபம் செய்கிறேன் என்றும், தனிப்பட்டுப் போனேன் என்றும் நீங்கள் பயமுறுத்த வேண்டாம்! கடவுள் தனியாக உள்ளார்! பிரான்ஸ் தனியாக உள்ளது! நாடு தனியாக வாடும் போது, நான் ஏன் தனிமையைப் பற்றி வருந்த வேண்டும் ? என் தனிமைப்பாடுக்கு நீங்கள் ஏன் கண்ணீர் விட வேண்டும் ? உங்களுக்கு என் தனிமை பலவீனமாகத் தோன்றலாம்! உண்மையில் தனிமைதான் எனக்கு உறுதி அளிப்பது! எனக்கு வலுவளிப்பது! என் மீது கடவுள் கொண்டுள்ள நட்பு என்றும் தளராது! தணியாது! அவரது வல்லமையில் நான் இயங்கி வருகிறேன்! கடவுளின் பணிகளான எனது கடமைகள் இன்னும் முடியவில்லை! ஆயுள் விளக்கு அணைவதற்குள், நான் பிரான்ஸ் விடுதலை விளக்கில் சுடர் ஏற்ற வேண்டும்! வாழ்க்கை குறுகியது! காலம் குன்றியது! நான் போகிறேன்! போகும் போது பொது மக்களின் கனிவும், கலகலப்பும் உங்கள் வெறுப்புகளுக் கிடையே என் இதயத்தைக் குளிர்விக்கும்! நான் தனியாகவே இவ்வுலகுக்கு வந்தேன்! தனியாகவே உலகை விட்டு நீங்குவேன்! ஆனால் பிரான்ஸின் தனிமைத் தளை நிரந்தரமாக நீங்கும்! [வேகமாக வெளியேறுகிறாள். எல்லாரும் அவள் போவதை அமைதியாக நோக்குகிறார்கள்].

புளு பியர்டு: இப்படி அடம்பிடித்த ஒரு கொடும் குறிக்கோள்வாதியை நான் பார்த்ததே இல்லை! அசையாத, தளராத ஜோனை ஏன் மக்கள் தழுவிக் கொள்ள மாட்டார்கள் ? அவள் நெஞ்சில் சுடர் விட்டெரியும் விடுதலை உணர்ச்சியைப் போற்றாமல் ஒருவன் இருக்க முடியாது! ஆனால் நெருங்க முடியாத எரிமலையின் நிழலில் நாம் எப்படி குளிர்காய முடியும் ?

சார்லஸ் மன்னன்: [அழுத்தமாக] துனாய்ஸ்! ஜோன் கூறியதில் ஓர் அழுத்தமான உண்மை இருக்கிறது! தலைநகர் பாரிஸைக் கைப்பற்றாது, இந்த தங்கக் கிரீடத்தைத் தலையில் வைக்க எனக்கு எப்படித் தகுதி இருக்கிறது ? ஆனால் பாரிஸைப் பிடிக்க நாம் பல உயிர்களைப் பலி கொடுக்க வேண்டும்! என்ன செய்வது இப்போது ?

துனாய்ஸ்: மாண்புமிகு மன்னரே! பாரிஸைப் பிடிக்க எத்தனை படைவீரர்களை அனுப்பத் தயாராயாக இருக்கிறீர் ? முதலில் அதைத் தீர்மானிக்க வேண்டும்!

சார்லஸ் மன்னன்: [மேலே பார்த்த வண்ணம்] ஆழ்ந்து யோசித்துச் சொல்கிறேன். முதலில் என் மாமியாரைக் கலந்து பேச வேண்டும். அவளிடம்தான் பணப்பெட்டிச் சாவி இருக்கிறது. பணப்பெட்டியை அவள் திறக்கா விட்டால், பாரிஸின் கதையே மாறிப் போகலாம்!

லா ஹயர்: பாரிஸைப் பிடிக்கப் போகும் ஜோனைப் பாதுகாப்பது என் முதல் கடமை! அவள் என்ன பாபம் செய்து நரகத்தில் தள்ளப்பட்டாலும், திரும்பிப் பாராமல் நான் அவளைப் பின்பற்றிச் செல்வேன்!

துனாய்ஸ்: கடவுள் எனக்கு நீதி வழங்கட்டும்! ஜோன் லோயர் நதிக்குள் விழுந்தால், என் கவச உடையோடு குதித்து அவளைக் காப்பாற்றி இழுத்துக் கொண்டு கரை சேர்ப்பேன்! ஆனால் காம்பைன் நகரப் போரில் அவள் ஏதாவது தில்லுமுல்லு பண்ணிப் பகைவரிடம் சிக்கிக் கொண்டால், அவளது சீர்கேட்டில் அவளே நாசமடைய அப்படியே விட்டுவிடுவேன்.

லா ஹயர்: நன்றியுள்ள பிரெஞ்ச் தளபதி துனாய்ஸ் பேசும் பேச்சா இது ?

ஆர்ச்பிஷப்: ஜோன் அகந்தையில் அழியும் வேளை வந்துவிட்டது! அதிர்ச்சி யூட்டும் அவளது ஆவேசப் போக்கில் அபாயம் நிகழப் போகிறது, அவளுக்கும், நமக்கும்! அவளது பாதையில் ஆழ்குழி ஒன்று வாயைத் திறந்து கொண்டிருக்கிறது! நமக்கு நல்லதோ அல்லது கெட்டதோ, அவள் குழியுள்ளே விழப் போவதை யாரும் தடுக்க முடியாது!

[அனைவரும் பிரார்த்தனை மாளிகையை விட்டுப் போகிறார்கள்]

(ஐந்தாம் காட்சி முற்றும்)

****

‘திருச்சபைக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டுமென ஆலயவாதிகள் என்னைக் கட்டாயப் படுத்துகிறார். தேவாலயத் தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது கூடாதா வென்று என்று அறிவுரை புகட்டும் என் அசரீரிக் குரலைக் கேட்டேன். வேண்டாமென எனக்கு உடனே அசரீரி பதில் அளித்தது. கட்டாயப் படுத்தி அவர்கள் என்னைச் செய்யத் தூண்டும் தவறுகளை நான் கடவுளுக்குச் சமர்ப்பிக்க முடியாது. கடவுள் எனக்கு உதவி செய்திட நான் விரும்பினால், எனது கடமைப் பணிகள் அனைத்தையும் அவர் முன்பாக நான் அர்ப்பணம் செய்யத் தகுதி உடையதாக இருக்க வேண்டும். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்ட மிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள். ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். அவளுக்கு விசாரணை நடத்த வழக்கு மன்றம் தயாராகிறது.

ஆறாம் காட்சி (பாகம்-1)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor)]
 6. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. மதாதிபதிகள், நீதிபதி இடையே, வார்விக் கோமகனார் வேகமாக நுழைகிறார்.

மன்றப் பணியாள்: [கோமகனாரை நோக்கி] மதச்சார்பான தேவாலய வழக்கு மன்றம் இது! நமக்கு இங்கு வேலை யில்லை என்பதைக் கோமகனார் அறிவாரோ ? நாம் திருச்சபையின் மதச் சார்பற்ற நபர்கள்! வேடிக்கை பார்க்க வந்திருக்கும் ஆங்கில அரசாங்க அதிகாரிகள்.

கோமகனார்: [கோபத்துடன்] எமக்குத் தெரியும்! நன்றாகத் தெரியும்! அறிவுரை புகட்டாமல் எனக்கொரு பணி புரிவாயா ? வழக்கு துவங்குவதற்கு முன் மாண்பு மிகு பீட்டர் கெளஸான் என்னுடன் முதலில் பேச ஏற்பாடு வேண்டும், அவர் என்னுடன் உரையாட விரும்பினால்! உடனே ஏற்பாடு செய்வாயா இப்போதே சென்று ?

பணியாள்: [நகர்ந்து கொண்டே] அப்படியே செய்கிறேன், பிரபு!

கோமகனார்: [செல்பவனை நடுவே நிறுத்தி] கவனமாகப் பேச வேண்டும், கெளஸான் பாதிரியிடம்! கனிவுடனும், பணிவுடனும் உரையாடு! தெரியாமல் அவரைப் புனிதர் பீட்டர் என்று விளித்துப் பேசி விடாதே! மாபெரும் மலை போன்ற பிரெஞ்ச் மதாதிபதி கெளஸான் முன்பு மதிப்புடன் மண்டியிட்டு என் வேண்டுகோளைக் கூறு. கெளஸானின் கண்ணோட்டம் நம்மீது பட வேண்டும்.

பணியாள்: [திரும்பி நின்று] அப்படியே செய்வேன் பிரபு! கனிவுடன், பணிவுடன் உங்கள் கட்டளையை நிறைவேற்றுவேன். ஏனெனில் பணிமங்கையை இங்கே காவலர் கைவிலங்கிட்டு இழுத்து வரும்போது, புனிடர் கெளஸான் தீர்ப்புக் கூறி, நாம் பின்னிய வலைக்குள் ஜோனைத் தள்ள வேண்டும்.

[திடாரெனக் கெளஸான் இளம் பாதிரிகள் மூவர் சூழ உள்ளே நுழைகிறார். மூவரில் ஒருவர் கையில் காகிதக் கட்டுகளுடன் தொடர்கிறார்]

பணியாள்: பூதத்தை நினைத்துக் கொண்டிருந்தோம்! பூதமே நம்மை நோக்கி வருகிறது! மாண்பு மிகுந்த கெளஸான் மதாதிபதியே நேராக இங்கு வந்து விட்டார்.

கோமகனார்: [அவசரமாக] சீக்கிரம் வெளியேறு! கதவை இழுத்து மூடிச் செல்! நாங்கள் பேசுவதை யாரும் ஒட்டுக் கேட்கா வண்ணம் பார்த்துக் கொள்.

பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு. [கதவை மூடி வெளியேறுகிறான்]

கோமகன்: மாண்புமிகு பாதிரியாரே! எமது இனிய வணக்கம். உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு முன்பு கிடைக்க வில்லை. அவர்களை அறிமுகப் படுத்துவீர்களா ?

கெளஸான்: கோமகனாரே! வணக்கம். இவர்தான் சகோதரர் ஜான் லெமைட்டர், புனித டாமினிக் விருது பெற்றவர். அவர் வழக்கு உளவாளி, பிரெஞ்ச் சூனியக்காரி ஜோன் விளைவித்த சீர்கேட்டை உளவ வந்திருக்கும் தலைமை உளவாளி. [கோமகனாரைக் காட்டி] இவர்தான் வார்விக் கோமகனார், ரிச்சர்டி தி பியூகாம்ப்.

கோமகனார்: உங்கள் வருகைக்கு எமது இதய பூர்வ வரவேற்புகள். இங்கிலாந்திலிருந்து எங்கள் உளவாளி வராததற்கு யாம் வருந்துகி றோம். இம்மாதிரித் தேவையான சமயங்களில் முன்வந்து அவர் புரிய வேண்டிய முக்கிய வழக்கிது! அவர்கள் உதவியாக எமக்கு இல்லாமை எம்மை மிகவும் வருத்துகிறது.

[தலைமை உளவாளி புன்னகையுடன் தலை சாய்க்கிறார்.]

கெளஸான்: இவர்தான் மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி.

கோமகனார்: ஓ! இவர்தான் வழக்குத் தொடுப்பாளியா ? உங்கள் தொடர்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. …. [கெளஸானைப் பார்த்து] எந்தக் கட்டத்துக்கு இப்போது வழக்கு வந்திருக்கிறது என்று எனக்கு எடுத்துச் சொல்வீர்களா ? காம்பைன் பகுதியில் பர்கண்டி படையினரால் ஜோன் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. நான் பணமுடிப்புக் கொடுத்து ஜோனை வாங்கிச் சிறைப் படுத்தி, திருச்சபை வழக்கு மன்றத்துக்குக் கொண்டு வர நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மாண்புமிகு பாதிரியாரே! நான் ஜோனை உங்கள் வசம் ஒப்பிவித்து, ஆலயச் சிறையில் உங்கள் கண்காணிப்பில் மூன்று மாதம் இருந்திருக்கிறாள்.

ஜோனை மதத்துரோகி என்று குற்றம் சுமத்தி, வழக்காட வேண்டும் என்று யோசனை அளித்தவரே நீங்கள்தான்! எளிதான, நேரான இந்த வழக்கு ஏன் இத்தனை மாதங்கள் எடுத்தன ? என்று பணிமங்கை தீக்கம்பத்தில் கட்டப் படுவாள் ? என்று முடியு மிந்த சூனியக்காரி வழக்கு ?

வழக்குளவாளி: [சிரித்துக் கொண்டு] திருச்சபை வழக்கு மன்றமே இன்னும் ஆரம்பமாகக் கூடவில்லை! ஏனிப்படி நீங்கள் நீரிலிருந்து வெளியே தாவிய மீனைப்போல் துடித்துக் கொண்டிருக்கிறீர் ?

கோமகனார்: [சினத்துடன்] பெண்புலியைப் பிடிக்க பணமுடிப்பைக் கொடுத்துக் கூண்டில் அடைத்தவன் நான்! அதைக் கூண்டோடு மேலுலகுக்குச் சீக்கிரம் அனுப்பக் காத்திருப்பவன் நான்! எனக்கிருக்கும் துடிப்பு திருச்சபைக்குச் சிறிது கூட இல்லை.

கெளஸான்: [பணிவாக] எமது மதிப்புக்குரிய கோமகனாரே! ஆம் எங்களுக்குத் துடிப்பில்லைதான்! ஆனால் உங்களைப் போல் நாங்களும் அதை நிறைவேற்ற, இராப்பகலாக மன்றாடிக் கொண்டிருக்கிறோம். யாரும் சோம்பிக் கிடக்க வில்லை! பதினைந்து தடவைகள் பணிமங்கை ஜோனை நாங்கள் சோதித்திருக் கிறோம். அவற்றில் ஆறு முறைப் பொதுநபர் முன்னிலையிலும், ஒன்பது தடவைத் தனிப்பட்ட முறையிலும் வழக்குகள் நடத்தினோம்.

வழக்குளவாளி: [பொறுமையாகப் புன்முறுவல் புரிந்து] கேளுங்கள் கோமகனாரே! நான் சென்ற இரண்டு வழக்கு விசாரணையில் மட்டும் பார்வையாளனாக இருந்தேன். அந்த நீதி மன்றங்களைப் பாதிரியார் நடத்தினர். புனித திருச்சபை நடத்தவில்லை! இப்போது புனித திருச்சபை, பாதிரியார் விசாரணைகளில் ஈடுபடவும், பங்கெடுக்கவும் எனக்குப் பேராவல்! முதலில் இதை மதத்துரோக வழக்கென நான் கருத வில்லை! அரசியல் கேளிக்கை வழக்கு என்பது எனது மதிப்பீடு! மேலும் பணிமங்கை ஜோனை நானொரு போர்க் கைதியாகத்தான் காண்கிறேன்! அவளை ஒரு மதத்துரோகியாக எப்படி முடிவு செய்யலாம் ? எந்த மந்திர வித்தையோ, மாய நிகழ்ச்சியோ இதுவரைப் புரியாத பணிமங்கை எப்படி சூனியக்காரியாகக் குற்றம் சாட்டப் பட்டாள் என்பது வியப்பாக இருக்கிறது!

கோமகனார்: [கோபத்துடன்] வழக்குத் தொடுக்கும் நமது உளவாளி யார் பக்கமிருந்து பேசுகிறார் ? வழக்கறிஞருக்கு ஜெமினி போல் இருதலை! பணம் கொடுப்பவர் யாரோ அவர் பக்கம் பேச வேண்டும். எமக்கு ஒருதலை வழக்கறிஞர் தேவை! நீவீர் ஜோன் பக்கத்தில் நின்று வழக்காடத் தகுதி பெற்றவர்! பண முடிப்பளித்து பணிமங்கையை மரக் கம்பத்தில் கட்டித் தகனம் செய்ய விரும்பும் எமக்குத் தகுதி அற்றவர் நீங்கள்! தவறிப்போய் உங்களை யாரோ ….!

கெளஸான்: இல்லை! இல்லை! அப்படி முடிவு செய்யாதீர், கோமகனாரே! இப்போது இவர் புத்துயிர் பெற்ற வழக்கறிஞர்! அவர் அடுத்துக் கூற இருப்பதைத் தடுத்து விட்டார். வழக்குளவாளி முழுக்கு முழுக்க நம்மவர்! நம் பக்கத்தில் இருந்து வழக்காடும் உன்னத வழக்கறிஞர்! ஒப்பற்ற உளவாளி!

வழக்குளவாளி: [பணிவாக] என்னை மன்னிக்க வேண்டும் கோமகனாரே! என் பழைய முகத்தைக் காட்டாது, முதலில் புதிய முகத்தை காட்டி இருக்க வேண்டும்! தற்போதைய இரண்டு விசாரணை களைப் பார்த்த பிறகு நான் புதிய மனிதனாக மாறி இருக்கிறேன். ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் மதத்துரோக வழக்கிது என்று முழக்குவேன் நான்! முழுக்க முழுக்க இது மதத்துரோக வழக்கு என்பதை நான் ஒப்புக் கொண்டு விட்டேன்! எல்லா விசாரணை ஏற்பாடுகளும் அப்பாதையில் செல்லத் தயாராக உள்ளன. இன்று காலையில் அந்த முறையில்தான் வழக்காடப் போகிறேன், கோமகனாரே! என் நாக்கில் நரம்பிருந்தாலும் எலும்பில்லை! அது முரணாகத் திரிந்து பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன்.

கோமகனார்: [அழுத்தமாக] யாரிடம் பேசுகிறீர் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். மதத்துரோகம் என்னும் ஒரு வலையில்தான் ஜோனைப் பிடித்து எரிக்கம்பத்தில் நிறுத்த முடியும் என்பது என் கருத்து! வேறெந்தக் குற்றம் சாட்டினாலும், ஜோன் என்னும் மீன் நம் வலையிலிருந்து நழுவித் தப்பிவிடும்!

கெளஸான்: கோமகனாரே, எங்கள் திருச்சபை வலையிலிருந்து பணிமங்கை தப்பிக் கொண்டாலும், உங்கள் ஆதிக்க வலையிலிருந்து ஜோன் தப்பிக் கொள்ள முடியுமா ? ஆனால் நான் கேள்விப்பட்ட ஒரு பயங்கரச் செய்தி என்னை மிகவும் வருத்துகிறது. பணிமங்கை ஜோனுக்குப் பரிவு காட்டும் திருச்சபைத் தூதுவரை, நீரில் மூழ்க்கி விடப் போவதாக உமது இராணுவப் படையினர் பயமுறுத்தி யுள்ளனர். எங்கள் திருச்சபை ஒரு சர்க்கஸ்! அதில் தீவிர வேங்கைகளும் உள்ளன! தீங்கிழைக்காத ஆடுகளும் உள்ளன! எங்கள் செம்மறி ஆடுகளை உங்கள் சிறுத்தைகள் தின்று விடக் கூடாது!

கோமனார்: [ஆச்சரியமடைந்து] அப்படி இருக்க முடியாதே! திருச்சபை மதவாதிகளிடம் அவர்கள் மதிப்பும், பணிவும் கொண்டவர்கள் ஆயிற்றே!

கெளஸான்: [அழுத்தமாக] ஜோனின் மீது பரிவும், பாசமும் காட்டும் பாதிரிகள், பாமர மக்கள் பலர் இருக்கிறார்! ஆதலால் திருச்சபை பணிமங்கைக்கு நியாய முறையில் மிகக் கவனமாக வழக்காடி நீதி வழங்கும். தேவாலயம் வழங்கப் போகும் நியாயத் தீர்ப்பைக் கேலிக் கூத்தாக நினைக்க வேண்டாம், கோமகனாரே!

வழக்குளவாளி: கோமகனாரே! இப்படிப்பட்ட சுமுகமான வழக்காடல், மத மன்றத்தில் இதுவரை யாருக்கும் அளிக்கப் படவில்லை. பணிமங்கை சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அவளது ஆழ்ந்த நண்பர்களே அவளுக்கு எதிராக வழக்காடி, நரகத்தில் தள்ளப்படும் பாபத்தி  லிருந்து அவளின் ஆத்மாவைக் காப்பாற்றி அவளுக்குத் தீர்ப்பு வழங்கப் போகிறார்கள்.

வழக்குத் தொடுப்பாளி: ஜோன் மீது குற்றம் சாட்டுபவன் நான். ஜோனுக்கு எதிராக வழக்கைத் தொடர்வது வேதனை தரும் கடமைப் பணி. என்னை நம்புங்கள். என் மேலதிகாரிகள் ஜோன் கையாளும் அபாயகரமான போக்கை விளக்கச் சொல்லி என்னை அனுப்பா திருந்தால், ஜோன் எவ்விதம் எளிதாக அபாயத்தைத் தவிர்க்கலா மென்று சொல்ல என்னை அனுப்பாதிருந்தால், இந்த குற்றச் சாட்டு வழக்கைத் தூக்கி எறிந்து விட்டு, ஜோனுக்குப் பக்கத்தில் இன்று அவளுக்காக வாதாடச் செல்வேன்.

+++++++++++

 

“எம்மை ஆக்கிரமித்த பகைவர் கையில் நான் சிக்காது, திருச்சபையினர் பிடித்து அடிபணியும் தேவலயச் சிறையில் நான் அடைபட்டிருந்தால், இத்தகைய வேதனையான கோர முடிவுக்கு என் நிலைமை வந்திருக்க மாட்டாது. உலக நீதிபதியான மாபெரும் கடவுளிடம் இவ்விதம் நடந்த பெரிய தவறுக்கும், ஆதிக்க வர்க்க மிதிப்புக்கும் ஆளான நான் கண்ணீர் விட்டு முறையிடுகிறேன்.”

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

****

ஆறாம் காட்சி (பாகம்-2)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள்.

வழக்குத் தொடுப்பாளி: ஜோன் மீது குற்றம் சாட்டுபவன் நான். ஜோனுக்கு எதிராக வழக்கைத் தொடர்வது தலை வேதனை தரும் கடமைப் பணி. என்னை நம்புங்கள். என் மேலதிகாரிகள் ஜோன் கையாண்ட அபாயகரமான போக்கை விளக்கச் சொல்லி என்னை அனுப்பா திருந்தால், ஜோன் எவ்விதம் எளிதாக அபாயத்தைத் தவிர்க்கலா மென்று சொல்ல என்னை அனுப்பாதிருந்தால், இந்த குற்றச் சாட்டு வழக்கைத் தூக்கி எறிந்து விட்டு, ஜோனுக்குப் பக்கத்தில் இன்று நான் அவளுக்காக வாதாடத் தயாராக இருப்பேன். [கெளஸான் வெறுப்புடன் நோக்க, கோமகனார் விழி பிதுங்க] நாம் எப்போதாவது ஜோனைக் கொடுமைப் படுத்தினோமா ? இல்லை! நாம் ஜோனுக்கு நன்னெறி புகட்டத் தவறினோமா ? இல்லை! தன்மீதே ஜோன் இரக்கப்பட நாம் தாழ்ந்து வேண்டாமல் இருந்தோமோ ? இல்லை! தேவலயத்தின் முன்பு ஒரு பாப ஆத்மாவாக வராமல், அதன் செல்லக் குழந்தையாக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தோமா ? இல்லவே இல்லை!

கெளஸான்: [சினத்துடன்] சற்று கவனம் வைத்துப் பேசுங்கள்! சிந்தித்துப் பேசுங்கள்! நீங்கள் நிற்கும் தளம் திருச்சபை மண்டபம் என்பது நினைவில் இருக்கட்டும்! தேவாலய அதிபதிகள் நாங்கள் பேசப் போவதை நீவீர் தெரிவிக்கக் கூடாது! நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பினும், நாங்கள் தீர்மானிக்கப் போவதை நீங்கள் முன்னதாக வெளியிடுவது தவறு! கோமகனாரின் கோபத்தைக் கிளறுவது இந்த ஆலயத்தில் நடக்கக் கூடாத நிகழ்ச்சி! உமது கடமையை மறந்து, மற்றவர் கடமைக் குள்ளே தலை இடாதீர்! உமது மதிப்புக் கீழாவதுடன், எனது மதிப்பும் சரிகிறது!

கோமகனார்: [சற்று வெறுப்புடன்] மாண்புமிகு கெளஸான் அவர்களே! உங்களுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் மீது ஆங்காரம் உள்ளது. பணிமங்கையைப் பாபத்திலிருந்து விடுவிக்கப் போகும் உங்கள் திருச்சபை இரக்கப் பணியில் பங்கு கொள்ள எங்களுக்கு எவ்வித விருப்பமும் கிடையாது! ஜோனுக்கு மரண தண்டனை தருவது எங்கள் அரசாங்கம் தீர்மானித்த முடிவு! அதற்கு நான் வருந்துகிறேன்! ஆனால் அந்த முடிவை யாரும் மாற்றுவதற்கில்லை. தேவாலயம் மன்னித்து ஜோனை விடுவித்தால் …. !

கெளஸான்: [கோபமாக] திருச்சபை நீதி மன்றம் ஜோனை விடுவித்தால், மனிதருக்குக் கெட்ட காலம்! பிறகு உங்கள் ஆங்கிலப் பேரரசர் கூட அவள் மீது ஒரு விரலை வைக்க முடியாது. கோமகனாரே! உங்கள் அரசாங்கத் தீர்ப்பை எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டாம். தேவாலயத் திருச்சபை உங்கள் கட்டாயத்துக்கு என்றும் அடிபணியாது!

வழக்கறிஞர்: கோமகனாரே! வழக்கு முடிவைப் பற்றி நீங்கள் மனமுடைய வேண்டிய தில்லை. இவ்வழக்கு வில்லங்கத்தில், கண்ணுக்குப் புலப்படாமல் உங்களுக்கு உதவி செய்யக் கூட்டாளிகள் உள்ளார். ஜோனை எரித்துச் சாம்பலாக்க உங்களை விட ஆணித்தரமாக உதவ இருக்கும் நபர் இங்கே உள்ளார்!

கோமகனார்: ஓ அப்படியா ? மிக்க மகிழ்ச்சி! நானறிந்து கொள்ளலாமா, யாரவர் ? நமக்கு ஒத்துழைத்து, நம் தீர்ப்பை ஆமோதிக்கும் அந்த நபர் யார் ? உடனே சொல்லுங்கள்.

வழக்கறிஞர்: [சிரித்துக் கொண்டு] யார் ? வேறு யாருமில்லை! ஜோன் பணிமங்கையே நமது முடிவுக்கு உதவப் போகிறாள். கவலைப் படாதீர்கள். வாயில் துணியை வைத்து அடைத்தாலும், அவள் வெளிவிடும் வார்த்தை களைத் தடுக்க முடியாது! ஒவ்வொரு தரமும் அவள் தன் வாயைத் திறக்கும் போது அவளே தன்னைத் தண்டிக்க பல வழிகளை நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள்!

தி எஸ்டிவெட்: அது முற்றிலும் மெய்யானது, கோமகனாரே. என் தலை மயிர்கள் செங்குத்தாக எழுந்து நிற்கின்றன, ஜோன் ஆலயத்தை அவமதிக்கும் போதும், திருச்சபையை எதிர்க்கும் போதும். அவள் வாயே அவளைப் பிடித்துக் கொடுக்க போகிறது என்பது மெய்யான வாசகம்.

கோமகனார்: அப்படியானால் அதை நான் வரவேற்கிறேன். ஜோன் வாயைக் கிண்டிவிட்டு, தண்டனைக்குச் சான்றுகள் வெளிவரட்டும்! [கெளஸானைப் பார்த்து] திருச்சபையின் ஆசிகளின்றி வெல்ல முடியா தென்று தெரியாமல் போனதற்கு என்னை மன்னித்தருள வேண்டும் மாண்புமிக்க பாதிரியாரே.

கெளஸான்: [சற்று கோபமாக] உங்கள் விதி முறையில் சென்று நீங்கள் என்ன பாபத்தையும் செய்து நாசம் அடையுங்கள். எங்களுக்குக் கவலை யில்லை, கோமகனாரே! உங்கள் கொடூர முடிவைக் கேட்டு எனக்கே அச்சமாக இருக்கிறது! நான் அந்த வழியில் போய் நரகத்தில் தள்ளப்பட எனக்கு விரும்பவில்லை.

கோமகனார்: பிரதம பாதிரி அவர்களே! நாங்கள் கொடூரத்துக்கு அஞ்சிக் கிடந்திருந்தால், இங்கிலாந்தை ஆண்டு வந்திருக்க முடியாது. … நான் செய்ய வந்த பணி முடிந்தது! இப்போது நீங்கள் துவங்க விருக்கும் நீதிமன்றம் வழக்காடட்டும். சரி நான் போகிறேன்.

[கோமகனார் தன் பணியாளர் பின்தொடர வெளியேறுகிறார். கெளஸான் நீதி மன்ற ஆசனத்தில் அமர்கிறார். தி எஸ்டிவெட் அடுத்த பக்கத்தில் அமர்ந்து தன் குறிப்புத் தாள்களை விரிக்கிறார்.]

கெளஸான்: [கோமகனார் தலை மறைந்ததும்] எப்படிப்பட்ட கயவர் இந்த ஆங்கிலக் கோமகனார் என்று தெரியுமா ? ஆங்கிலக் கூட்டத்தார் அனைவரும் கயவர்கள்! கல்நெஞ்சக்காரகள்! கடுங் கொலையாளிகள்! வழக்கைத் தொடர்வதற்கு முன்பே, தீர்ப்பை எழுதிப் பைக்குள் வைத்திருக்கிறார்கள்! இவர்களுக் கெல்லாம் நரகத்தின் கதவு எப்போதும் திறந்து வரவேற்கத் தயாராக இருக்கிறது!

திருச்சபை வழக்கறிஞர்: [கெளஸான் அருகில் அமர்ந்தபடி] மதச்சார் பற்ற ஆங்கில ஆதிக்க வர்க்கத்தில் கயமைத்தனம், கடுமைத்தனம் இல்லாமல் எப்படி இருக்க முடியும் ? இம்மாதிரி வழக்கு விசாரணையில் ஆங்கிலப் பிரபுக்களுக்கு எவ்வித அனுபவமும் கிடையாது.

தீர்ப்பு மன்றத்தில் சூனியக்காரி

[நீதி மன்றம் கூடுகிறது. கெளஸானுக்கு உதவி செய்ய மூவர் [பாதிரி தி ஸ்டோகும்பர், வழக்கறிஞர் தி கோர்ஸெலஸ், முப்பது வயது இளம் பாதிரி] தாள் கட்டுகளுடன் வந்து பின்னால் நிற்கிறார்கள்.

கெளஸான்: [எழுந்து நின்றதும் மன்றத்தில் அமைதி நிலவுகிறது] எல்லோருக்கும் எனது வந்தனம். இங்கு இருப்பவர் திருச்சபை வழக்கறிஞர் திருவாளர் தி ஸ்டோகும்பர், இங்கிலாந்து கார்டினல் பாதிரி.

இங்கிலாந்து பாதிரி: [கெளஸானைத் திருத்தி] என்னை மன்னிக்க வேண்டும். நான் விஞ்செஸ்டர் பாதிரி.

கெளஸான்: திருத்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

இங்கிலாந்து பாதிரி: எனக்கு உதவி செய்ய வழக்கறிஞர்களும் வந்திருக்கிறார்கள். இதோ, இவர் திருவாளர் தி கோர்ஸெலஸ், இவர் பாரிஸின் பாதிரி. வழக்காளி கோர்ஸெலஸ் அவர்களே! நீங்களே பணிமங்கை ஜோனின் குற்றப் பட்டியலைப் படிக்க ஆரம்பிக்கலாம்.

வழக்காளி தி கோர்ஸெலஸ்: [எழுந்து நின்று] ஜோன் பணிமங்கை மீது பழி சுமத்த மிகவும் பாடுபட்டேன். குற்றப் பட்டியல் எண்ணிக்கை அறுபத்தி நான்கு தலைப்புகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சபை உளவாளி: வழக்கறிஞர் தி கோர்ஸெலஸ் அவர்களே! ஜோன் மீது அறுபத்தி நான்கு பழிகள் சுமத்தி இருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன். முக்கியமாக ஜோனை மதத்துரோகி என்று மாபெரும் குற்றத்தைச் சாட்டிய பிறகு மற்ற எந்த பழிக்கும் அர்த்த மில்லை! இங்கிருக்கும் மாந்தருக்கு உம்மைப் போன்று ஆழ்ந்த வழக்கறிவில்லை! ஆகவே சின்னஞ் சிறு குற்றங்களை நீக்கிவிட்டு அறுபத்தி நான்கு எண்ணிக்கையை பனிரெண்டு தலைப்புகளில் கொண்டு வந்தால் நல்லது.

தி கோர்ஸெலஸ்: [வெறுப்புடன்] என்ன பனிரெண்டா ? அறுபத்தி நான்கை எப்படி நான் பனிரெண்டாகச் சுருக்குவது ? இப்போது அதற்கு நேரம் இல்லை.

திருச்சபை உளவாளி: நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்கள் வாதத்திற்கு பனிரெண்டு போதுமானது.

பாதிரி ஒருவர்: [குறுக்கிட்டு] சிறிய பழிகளாகத் தெரிந்தாலும் சில குற்றத்தை நீக்குவது சிரமமானது. உதாரணமாக புனித அணங்குகள் மார்கரெட்டும், காத்திரைனும், புனிதர் மைக்கேலும் ஜோனுடன் பிரெஞ்ச் மொழியில் பேசினார்கள் என்பது ஒப்புக் கொள்ள முடியாத குற்றம்! அவள் அப்படிச் சொன்னது சிறிய குற்றம் ஆயினும், அதை நீக்கிவிட முடியாது. தண்டனைக்குரிய குற்றம் அது!

குற்றப் பட்டியல் வாசிப்பு

திருச்சபை உளவாளி: [ஆச்சரியமுடன்] ஏன் ? புனித அணங்குகளும், புனிதரும் லத்தீன் மொழியில் பேசி யிருக்க வேண்டும் என்று நினைக்கிறீரா ? ஜோனின் தாய்மொழியில் பேசாமல் வேறெந்த மொழியில் பேசி இருக்க முடியும் ?

கெளஸான்: [குறுக்கிட்டுக் கேலியாக] இல்லை! இல்லை! அவர் நினைப்பது என்ன வென்றால் புனித அணங்குகள் ஜோனுடன் ஆங்கிலத்தில் தான் பேசி இருக்க வேண்டும் என்று!

திருச்சபை உளவாளி: [கேலியாக] ஆனால் ஜோனுக்கு ஆங்கிலம் சிறிது கூடத் தெரியாதே! புரியாத மொழியில் ஜோனுடன் புனித அணங்குகள் எப்படி உரையாட முடியும் ? இதில் முக்கியமான குற்றச் சாட்டு, ஜோன் கேட்ட அசரீரிக் குரல்கள் யாவும் சாத்தான் பேசி அவளை உசுப்பி அனுப்பியவை! ஆங்கிலத்தில் சாத்தான் ஜோனுடன் உரையாடிய தென்று சொல்வதை இங்கிலாந்து மன்னர் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்! ஆகவே அந்த குற்றத்தை நீக்குவது நல்லது. நான் குறிப்பிடும் பனிரெண்டு குற்றச் சாட்டுகளிலிருந்து பணிமங்கை தப்பவே முடியாது! ஆம் அவள் தப்பவே முடியாது!

++++++++++++++++

“சூனியக்காரி என்று முடிவு கட்டி என்னைச் சுகப்படுத்த அவர்கள், சிறைச்சாலையில் மருத்துவரை அழைத்து வந்தார்கள்! ஆனால் உடலைக் கீறி என் குருதியை வெளியேற்ற அவருக்கு அனுமதி தர அஞ்சினார்கள்! ஏனெனில் குருதி என்னிடமிருந்து உருவி எடுக்கப் பாட்டால், எனது சூனிய யுக்தி நீங்கிவிடும் என்று அந்த மூடர்கள் நம்பினார்கள்! ஆதலால் அந்த மருத்துவர் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்! தேவாலயக் கைதியாகக் காவலில் வைக்க வேண்டிய என்னை, ஏன் ஆங்கிலேயர் கையில் ஒப்படைத்தீர்கள் ? இந்த மரக்கம்பத்தில் பிணைத்து ஏன் என் காலைச் சங்கிலியில் கட்டி யிருக்கிறீர்கள் ? பறந்து போய் விடுவேன் நானென்று நீங்கள் பயப்படுகிறீர்களா ?”

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

தீர்ப்பு மன்றத்தில் ஜோன்

 

ஆறாம் காட்சி (பாகம்-3)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள்.

திருச்சபை உளவாளி: [கேலியாக] ஜோனுக்கு ஆங்கிலம் சிறிது கூடத் தெரியாதே! புரியாத ஆங்கில மொழியில் புனித அணங்குகள் எப்படி ஜோனுடன் உரையாடி யிருக்க முடியும் ? இதில் முக்கியமான குற்றச் சாட்டு, ஜோன் கேட்ட அசரீரிக் குரல்கள் யாவும் சாத்தான் பேசி அவளை உசுப்பி விட்டன என்பது! சாத்தான் ஜோனுடன் ஆங்கிலத்தில் உரையாடிய தென்று சொன்னால் இங்கிலாந்து மன்னர் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்! ஆகவே அந்த குற்றத்தை நீக்குவது நல்லது. நான் குறிப்பிடும் பனிரெண்டு குற்றச் சாட்டுகளே போதுமானவை. அவற்றிலிருந்து பணிமங்கை தப்பவே முடியாது!

(இளம் பாதிரி) கோர்ஸெலஸ்: நாமெல்லாரும் ஒன்றுமில்லாத வழக்கிற்கு எதிராக வாதடப் போவதாய்த் தெரிகிறது. ஜோன் மீதுள்ள மிகக் கடுமையான வெறுப்பின் காரணமாக வழக்கு தொடரப் படுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

கெளஸான்: [ஆங்காரமாய்] கடுமையான வெறுப்பின் தூண்டுதலில் நான் ஜோனைப் பிடிக்க முற்படுவதாக நீ சொல்கிறாயா ?

கோர்ஸெலஸ்: [சாந்தமாக] அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இங்கொரு சதி நடந்து, பணிமங்கை ஸென்லிஸ் பாதிரியார் குதிரையைத் திருடிய பழிக்குற்றம் மூடி மறைக்கப் படுகிறது.

கெளஸான்: [சீற்றத்தைக் கடுமையாக அடக்கிக் கொண்டு] இது காவல்துறை குற்றத் தீர்ப்பு மன்றமில்லை. இந்த புளுகுக் குப்பை கூளத்தை எல்லாம் எங்கே தோண்டி எடுத்தீர் ? இவற்றை நாமிப்போது இங்கே பேசி மற்றவரைக் குழப்ப வேண்டுமா ?

கோர்ஸெலஸ்: [அதிர்ச்சியுற்று] தேவாலயத் திருவாளரே! தாங்கள் பாதிரியின் குதிரையைக் குப்பைக் கூளமென்று குறிப்பிடுகிறீர்களா ?

திருச்சபை உளவாளி: [அழுத்தமாக] கோர்ஸெலஸ் திருவாளரே! குதிரையை வாங்கும் போது, ஜோன் பாதிரிக்கு முறையாகப் பணம் கொடுத்துதான் வாங்கியதாகத் தெரிகிறது. பாதிரியார் கையில் பணம் கிடைக்க வில்லை என்றால், அது ஜோனின் குற்றமாகாது. அது எனக்கு மெய்யாகத் தெரியுமாவதால், அந்த குற்றமும் நீக்கப் படவேண்டும்.

கோர்ஸெலஸ்: ஆமாம் நீக்கி விடலாம், அது சாதாரணக் குதிரையாக இருந்தால்! மேன்மைமிகு பாதிரியாரின் விலை மிக்க குதிரை ஆயிற்றே! ஜோனை எப்படி அந்த குற்றத்திலிருந்து விடுவிப்பது ?

திருச்சபை உளவாளி: உங்களைக் கண்ணியமாய் வேண்டிக் கொள்கிறேன். இப்படி அற்பத்தனமான குற்றங்களைக் கூறி, அவள் மாசற்றவள் என்று பிரகடனம் செய்ய வேண்டி வந்தால், பிறகு மதத்துரோகி என்னும் பெருங் குற்றத்திலிருந்து தப்பிக் கொண்டு விடுவாள். உங்களைத் தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஜோனை மன்றத்தில் இழுத்துக் கொண்டு வரும் போது, அவளொரு குதிரை திருடி என்றோ, கிராமத்து மதலைகளுடன் மரத்தைச் சுற்றி வந்தவள் என்றோ கதை அளக்காதீர்! ஜோனை மதத்துரோகி என்று பழிசுமத்தி வழக்காடப் போகிறோம் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். …. மதத்துரோகம் மறந்து விடாதீர்! அந்த ஒரு குற்றச் சட்டைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவை இல்லை!

கெளஸான்: யாம் ஒற்றர்களைக் கிராமத்துக்கு அனுப்பி, அவளைப் பற்றி அறிந்து வர முயன்றோம். உருப்படியாக அவளுக்கு எதிராய் எதுவும் அகப்பட வில்லை.

கோர்ஸெலஸ்: [ஆச்சரியமுடன்] என்ன ? கிராமத்தில் ஜோனுக்கு எதிராக ஒன்றும் கிடைக்க வில்லையா ? நம்ப முடிய வில்லையே.

கெளஸான்: [உறுதியாக] நான் நமது வழக்கறிஞர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். மதத்துரோகம் என்ற ஒரு குற்றச் சாட்டையே மேற்கொண்டு, ஜோன் மீது வழக்குத் தொடர்வதுதான் தகுந்த வழியாகத் தோன்றுகிறது, எனக்கு.

மார்டின் லாட்வெனு: [கோர்ஸெலஸ் அருகில் அமர்ந்திருந்த டொமினிகன் வாலிபன்] மேன்மை மிகு அவையோர்களே! அடியேனுக்கு ஓர் சிறிய ஐயப்பாடு! குற்றம் சாட்டப்படும் இந்த இளநங்கையின் மதத்துரோகம் ஏதாவது பேரின்னலை விளைவித்ததா ? யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா ? பத்தொன்பது வயதுப் பணிமங்கை தனிப்பட்ட முறையில் என்ன பாதிப்புகளை சமூகத்துக்கு உண்டாக்கினாள் ? நமக்கு முன்பு வாழ்ந்த பல புனித ஆத்மாக்கள் அவளைப் போன்று தெய்வீக அசரீரி பற்றி உரையாடி யிருக்கிறார் என்பது நாமறிந்ததே!

தேவாலய உளவாளி: [சற்று தயக்கமுடன்] மார்டின் சகோதரா! நான் கண்ணால் கண்டிருக்கிற மதத்துரோகக் கேடுகளை நீ கண்டிருந்தால் இப்படித் தவறான கேள்விகளைக் கேட்க மாட்டாய்! வெளிப் பார்வைக்குக் கனிவான மதப்பற்று போலும், ஆழ்ந்த மதப்பக்தி போலத் தோன்றினாலும், மெய்யாக அவை யாவும் வேடம் பூண்ட நாடகமே! நமது அதிபதி ஏசு நாதரின் கட்டளைக்கு அடிபணிந்து, கனிவு மிக்க இளங்கன்னி ஒருத்தியோ அல்லது வாலிப ஆடவன் ஒருவனோ மதப்பாசத்தில் மூழ்கி, தமது சொத்துக்களை தாராளமாக ஏழைகளுக்குத் தான தர்மம் செய்தால், அவரை வேடதாரி என்று ஒதுக்குங்கள்! வறுமை அங்கிகளை அணிந்து, எளிய சமயவாதிகள் போல் பணிவுடன் அறக் கொடைகளை அளித்தால், அவரை மதத் துரோகி என்று துரத்துங்கள்! தேவலயத்தையும், திருச்சபைப் பேராட்சியையும் அவமதித்து மதத்துரோகத்துக்கு அடித்தளம் போடுபவர் என்று அவரைக் கருதுங்கள்! திருச்சபை ஏட்டில் பதிவாகி யிருக்கும் அவ்வித வரலாறுகள் வெளி உலகுக்குச் சொல்ல முடியாத முறையில், நெறியாளர் நம்ப இயலாத நிலையில் உள்ளன! அவர்கள் யாவரும் படிப்பறிவு இல்லாத பணிமங்கை போன்று, புனித அங்கி அணிந்த குறைபட்ட ஞானிகளே!

கெளஸான்: திருச்சபை வழக்கறிஞர் எமது சார்பாக தேவாலயக் குரலை வெளியாக்கும் வாக்குத் திறமையைக் கண்டு யாம் பூரிப்படைகிறோம்.

தேவாலய உளவாளி: [நிறுத்தியவர் தொடர்ந்து] என் பேச்சைக் கவனமாய்க் கேளுங்கள். பெண்ணொருத்தி தன்னுடையை உடுத்தாமல், ஆடவர் உடை அணிந்து கையில் ஈட்டி ஏந்தி குதிரையில் சவாரி செய்தால், ஏசு நாதருக்கு புனித நீராட்டிய ஜான் தி பாப்டிஸ்ட் போன்றவள் ஆவாள்! நன்னெறி போதித்தது போல் நடித்த பாபியான ஜான் தி பாப்டிஸ்டுக்கு என்ன தண்டனை கிடைத்தது ? அவரது தலை வாளால் அறுக்கப்பட்டு ஒரு தட்டில் அரண்மனைக்குக் கொண்டு செல்லப் பட்டது! மத எதிர்ப்பாளிகளைப் பார்த்தால் கனிவுள்ள ஆத்மாக்கள் போல்தான் முதலில் தெரியும். ஆனால் அவர்கள் முற்றிலும் அண்டப் புளுகர் என்றோ அல்லது அருளற்ற நயவஞ்சகர் என்றோ நீங்கள் கருதக் கூடாது. தேவாலயத்தின் மீது கொண்டிருக்கும் அவரது ஆழ்ந்த வெறுப்பைத் தெய்வீகமான ஓர் கவர்ச்சி உணர்வாக நீங்கள் கருதக் கூடாது. இப்படி எல்லாம் சொல்லி உங்கள் மனதைக் கல் மனதாக்க நான் முயல்வதற்குக் கடவுள் என்னை மன்னிக்க வேண்டும். புனித திருச்சபையிடம் மதத்துரோகி சிக்கிக் கொண்டாலும், அவர் தண்டிக்கப் படாமல் தப்பிக் கொள்ளலாம். அல்லது சிறையில் பாதுகாக்கப் படலாம். ஆயினும் திருச்சபையின் அருளைச் சோதிக்கும் கல் நெஞ்சக்கார ஜோனைத் தேவாலயம் பல்லாண்டுகளாக விருந்தாளியாகப் பேணி வராது என்பது உறுதியான நம்பிக்கை.

****

‘என்னால் முடியாதவற்றை நான் சொல்ல மாட்டேன். இது என்னால் இயலாது. கண்களுக்குத் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றிச் சென்று எனக்குக் கடவுள் சொல்லி நான் மெய்யாகச் சொன்னவற்றையும், அவரது கட்டளைப்படி நான் முழு மனதாகச் செய்தவற்றையும் பற்றி முதலில் இந்த நீதி மன்றத்தில் ஐயப்பாட்டுக் கேள்விகள் எழுந்தன! அவற்றை எல்லாம் இல்லையென மறுத்து, மன்னிப்பு கேட்டு நான் சொன்னவற்றைத் திருப்பி வாங்கிக் கொள்ள முடியாது. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

சித்திரவதைப்படும் ஜோன்

 

ஆறாம் காட்சி (பாகம்-4)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடு கிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறுகிறார்.

தேவாலய உளவாளி: [தொடர்ந்து பேசுகிறார்] இன்னும் சில நிமிடங்களில் கடவுளை வழிபடும், கற்புடைய கன்னி ஒருத்திக் கைவிலங்குடன் உங்கள் கண்முன் நிற்பதைக் காணப் போகிறீர்! அவள் மீது நமது ஆங்கில நண்பர்கள் சுமத்தியுள்ள பழிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை! ஆனால் அவள் மாபெரும் குற்றவாளி என்பதற்கு மிக்க ஆதாரங்கள் எமது கைவசம் உள்ளன! எல்லை கடந்த அவளது கிறித்துவ மதப்பாசம், வரம்பு மீறிய அவளது தெய்வீகக் கொடைகள் அவளுக்கு எதிராகச் சான்று கூறப் போகின்றன! உலகத்தோடு ஒவ்வாத அவளது பண்பு, கடுமையான தீவிரக் கலாச்சாரம் அவளைப் பிடித்துக் கொடுக்கப் போகிறது. ஆங்கில நண்பருக்கு எதிராகப் பிரெஞ்ச் மக்களைத் தூண்டினாள்! படிப்பில்லாத மங்கை மாபெரும் பிரிட்டாஷ் மன்னரைத் தூற்றினாள்! இவை எல்லாம் மன்னிப்பு அளிக்க முடியாத குற்றங்கள்! தன் வினை தன்னைச் சுடும்! வினை விதைத்தவள் வினை அறுப்பாள்! அவளைக் கீழேப் பாதாளத்தில் தள்ளிய சூனியப் பேயாட்டம், பிசாசுக் கர்வம் எதுவும் களங்கமற்ற பரிவான அவளது முகத்திலே தெரியா! அவள் மீது நமக்கு ஓர் இம்மியளவு தீய வெறுப்பு இருக்கு மாயின், நாம் விதிக்கப் போகும் தண்டனை நியாமற்றதாகத் தோன்றும். கடுமை யானதாகக் காணப் படும்! நெஞ்சில் இரக்கமற்ற, நியாமற்ற தெய்வீகராய் நம்மைத் தெரிவிக்கும்.

குற்றப் பட்டியல் வாசிப்பு

இந்த மன்றத்தில் கொடுமையை வெறுக்காதவர் எவராது இருந்தால், அவரது ஆத்மா புனிதமடைய இப்போதே வெளியேறி விடுங்கள்! கொடுமையை வெறுப்பவருக்கு மட்டும் நானிதைக் கூறுகிறேன்: மதத்துரோகத்தால் எழும் விளைவுகளைப் பொறுத்துக் கொள்ளும் கொடுமைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை! புனித திருச்சபை கையில் சிக்கிய மதத் துரோகி அஞ்ச வேண்டிய தில்லை! வன்முறையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும்! முறையான நீதி திருச்சபையில் அவருக்குக் கிடைக்கும்! மரண தண்டனையிலிருந்து விடுவிப்புப் பெறலாம். எத்தனையோ மதத் துரோகிகளைப் புனிய திருச்சபை மக்கள் மன்றத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி இருக்கிறது! புனித ஆலயத்தின் மன்றம் தோன்றுவதற்கு முன்பு, இப்போதும் அது அருகில் இல்லாத ஊர்களிலும் கூட மதப்பழி சுமத்தப்பட்டவர் கல்லால் அடிக்கப்பட்டு கொல்லப் படுகிறார்! அல்லது உடல் அங்கங்கள் துண்டாக்கப் படுகிறார்! அல்லது குளத்தில் மூழ்க்கப்பட்டு மடிகிறார்! நீதி மன்றத்தில் வழக்காடாமல், பச்சிளம் பிள்ளைகளோடு இல்லத்தில் உயிரோடு கொளுத்தப் படுகிறார்! திருச்சபைத் திருவாளர்களே! இயற்கையாக கனிவு மிக்கவன் நான்! வழக்கறிஞன் என்ற துறையிலும் இரக்கம் மிகுந்தவன் நான்! எனக்கு வாழ்க்கை நன்னெறி தெரியா விட்டால், நானும் கம்பத்தில் எரிக்கப்பட்டு மடிய வேண்டும்! ஆங்காரம், ஆத்திரம், அடங்காத சினம் கொண்டோர் நல்ல ஆலோசகராக ஆக முடியாது. ஆறுவது சினம்! அறம் புரிவது ஆலய இனம்! இரக்கம் தவிர்! இரக்கத் தன்மை அரக்கத் தன்மை விடவும் கொடியது! மேன்மை மிகு கெளஸான் அவர்களே! என் மனதில் இருந்ததை எல்லாம் மன்றத்தின் முன்பு கொட்டி விட்டேன். நீங்கள் வேறு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா ?

கெளஸான்: [மெதுவாக எழுந்து] நான் பேச நினைத்த தெல்லாம் நீவீர் கூறி விட்டார். அறிவுள்ளோர் எவரும் உங்கள் வார்த்தைக்கு எதிராக வாதிட முடியாது. ஆனால் இதை மட்டும் நான் கூற விழைகிறேன். இப்போது ஐரோப்பாவில் நமக்கு எதிராகக் கிளம்பியுள்ள மதத் துரோகிகள் மனநோய் பீடித்தவர் அல்லர்! நெஞ்சில் உரமற்ற நீசர்கள் அல்லர்! மூர்க்கத்தனம் கொண்ட அவர்கள், வலுப்பெற்ற வைராக்க வாதிகள்! மன உறுதி மிகையாக, மிகையாக அவரது முரண்டு மதத் துரோகம் பெருக்கிறது. அவரது தனிப்பட்ட நியாயத் தன்மை, தேவாலயத்தின் சமய ஞானத்தையும், அனுபவத்தையும் எள்ளி நகையாடுகிறது. ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகள் மகத்தான ஆலமரமாய் வளர்ந்து, விழுதுகளோடு பரவும் காத்திலிக் கிறித்துவ நிறுவகத்தை எந்தப் புயலும் அடித்து வீழ்த்த முடியாது! பித்துப் பிடித்த எந்த பெண்ணும் அதன் ஆணிவேரை அசைக்க முடியாது! அதற்கு இணையாக அல்லது மேலாக வளர்ச்சி பெற்ற வேறெந்த மதமும் ஆல விழுதுகளை முறிக்க முடியாது. ஆனால் கிறித்துவ மதத்துக்குள்ளே உட்போர் நிகழ்ந்து, பிளவு பட வாய்ப்புகள் உண்டாகலாம்! அந்த மதத் துரோகத்தைத் தான் புராட்டஸ்டன்ட் கோட்பாடு [Protestantism] என்று ஆங்கில ஆணைத் தளபதி [English Commander] கூறுகிறார்.

வழக்கறிஞர்கள்: [தமக்குள் மெதுவான குரலில்] என்ன அது ? பாதிரியார் குறிப்பிடும் புராட்டஸ்டன்ட் கோட்பாடு ? நாம் கேள்விப்படாத ஸ்டன்ட் கோட்பாடு ? இப்படி ஒரு மதத் துரோகச் சண்டைக் கோட்பாடு ஐரோப்பாவில் முளைத்துள்ளது, வழக்கறிஞராகிய நமக்குத் தெரியாமல் போய்விட்டதே!

மதவாதிகள் விசாரிப்பு

கெளஸான்: இப்போதுதான் எனக்கு நினைவு வருகிறது. பணிமங்கை மீது மதச்சார்பற்ற முறையில் மக்களின் இரக்கம் மிகுந்தால், எதிர்ப்பு வழக்காட வார்விக் கோமகனார் என்ன தயாரிப்பு செய்துள்ளார் ?

இளம் பாதிரி: கெளஸான் அவர்களே! கவலைப்படாதீர். கோமகனார் வாசலில் ஆயுதம் ஏந்திய தனது எந்நூறு படை வீரர்களைக் காவலாய் வைத்திருக்கிறார். நகர மக்கள் யாவரும் அவளுக்குத் துணையாக வந்தாலும், அவர்கள் கைவிரல்களுக்குள் புகுந்து தப்ப முடியாது!

கெளஸான்: [சினத்துடன்] இதை மட்டும் சேர்த்துச் சொல்வீரா ? பணிமங்கை தன் பாபச் செயலுக்குப் பரிகாரமும், மன்னிப்பும் கேட்டு பாபத்தைக் கழுவ வேண்டுமென அழுத்தமாய் வழக்காடுவது!

இளம் பாதிரி: அவ்விதம் தாங்கள் சொல்வது முன்னுக்குப் பின் முரணாக எனக்குத் தெரிகிறது. ஆயினும் நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்.

கெளஸான்: [வெறுப்புடன் பார்த்து] திருச்சபை உறுப்பினர்களே! நிசப்தம்! அமைதி! இப்போது வழக்கு மன்றம் தொடங்குகிறது!

திருச்சபை வழக்கறிஞர்: [காவலாளியைப் பார்த்து] அழைத்து வாருங்கள் குற்றவாளியை!

லாட்வெனு: [பலத்த குரலுடன் அழைக்கிறார்] குற்றவாளி ஜோன்! குற்றவாளி ஜோன்! குற்றவாளி ஜோன்!

[பணிமங்கை ஜோன் கால் விலங்குகள் அணியப்பட்டு மெதுவாக இருபுறமும் காவலர் சூழ உள்ளே நுழைகிறாள். சிறைக்கைதி அமரும்படி வைக்கப்பட்டுள்ள மொட்டை நாற்காலியின் பின்னால் ஜோன் நிற்கிறாள். காவலர் அவளது கால் சங்கிலியை நீக்குகிறார். பணியாளி அணியும் ஒரு கருமை நிற உடையை அணிந்திருக்கிறாள், ஜோன். பல நாட்கள் இருண்ட சிறையில் மனம் நொந்து கிடந்த வாடுதல் முகத்தில் தெரிந்தாலும், அவளது உறுதியான நோக்கம் கண்களில் தெரிகிறது. ஜோன் சுற்றி யிருந்த கூட்டத்தைக் கண்டு மிரட்சியோ அல்லது நாணமோ இல்லாமல் நிமிர்ந்து கெளஸானை நோக்குகிறாள்.]

திருச்சபை வழக்கறிஞர்: [பரிவுடன்] உட்கார், ஜோன். … உன்முகம் வெளுத்துப் போயிருக்கிறது, இன்று. … கருமை படர்ந்து கண்கள் ஒளியற்றுத் தெரிகின்றன. …. உன்னுடல் ஏன் இப்படி மெலிந்து போய் உள்ளது ? … உனக்கு உடல் நலமில்லையா ? … சரியாக நீ உண்பதில்லையா ? … ஆழ்ந்த உறக்க மில்லையா ? சொல், ஜோன் சொல். .. சிறையில் உனக்கு என்ன குறை ?

கைது செய்யப்பட்ட  ஜோன்

ஜோன்: [மெதுவாக அமர்ந்து] சிறையில் எனக்கு ஒரே ஒரு குறை! விடுதலை இன்மை! கூண்டுக்குள் ஒன்பது மாதங்கள் அடைப்பட்ட கிளி எப்படி இருக்கும் ? சிறகுகள் அறுபட்டுச் சிறையில் சித்திரவதை செய்யப்படும் பறவை எப்படி இருக்கும் ? தேவாலயச் சிறைக் கைதியாக இருக்கும் நான் திருச்சபை விருந்தாளியாகக் கருதப்பட வில்லை! ஆலயப் பாதிரிகள் அனுதினமும் கரையான்கள் போன்று என் மனதைத் துளைத்து என்னுடல் நலத்தைச் சீர்கேடாக்கியதைச் சொல்லவா ? என்னைப் பணத்துக்கு விற்ற பர்கண்டி பிரெஞ்ச் திருடர்கள் என்னை முதலில் பிடித்துச் சிறையிலிட்டு அடித்ததையும், மிதித்தையும் எடுத்துச் சொல்லவா ? இரக்கமற்ற முரட்டுக் காவலர், வலுவற்ற ஒரு நங்கையைப் பெண்ணாக மதிக்காமல், விலங்கைப் போல் நடத்தியதைச் சொல்லவா ? இத்தனைப் பணிவாகக் கனிவாகப் பரிவாக என்னலம் கேட்கும் வழக்கறிஞரே! உங்கள் கேள்விக்கு நான் பதிலுரைக்க வேண்டுமா ? இங்கே கூட்டத்தில் நிற்கும் திருச்சபைப் பாதிரிகள் என்னைப் பாடாய்ப் படுத்திய துயர்ப் படலத்தை இப்போது நான் சொல்ல வேண்டி வரும். நீவீர் கேட்கத் தயாரா ? அவற்றைக் குறித்துக் கொள்வீரா ?

கெளஸான் [சட்டென எழுத்து] குற்றவாளி ஜோன் பாதிரிகளைக் குற்றவாளியாய்க் காட்டுவதை யாம் அனுமதிக்க மாட்டோம்! திருச்சபை வழக்காடல் புரிவது பணிமங்கைக்கு எதிராக! புனித பாதிரிகளுக்கு எதிராக இல்லை! [வழக்கறிஞரைப் பார்த்து] ஆலய வழக்கறிஞரே! நீவீர் திட்டப்படி வழக்காடுவீர்! பணிமங்கை கட்டுப்பாட்டில் மன்றம் விடப்பட்டால் அவள் உங்களைக் கம்பத்தில் ஏற்றித் தீமூட்டி விடுவாள்!

ஜோன்: ஆலய வழக்கறிஞரே! எனது உடல் நலத்தில் அக்கறை காட்டியதற்கு நன்றி. இன்று நானுண்ட மீன் புலால் என் குடலைக் கலக்கிக் கடலாய்க் கொந்தளிக்க வைத்தது! என்னை விஷமிட்டுக் கொல்ல ஆலயம் முயல்வதாக ஆங்கில அதிகாரிகள் பயந்தனர்! விஷ மீனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

வழக்கறிஞர்: வழக்காட என்னை நியமித்திருக்கும் திருச்சபை உன்னை விஷமிட்டுக் கொல்ல முயன்றதாக நான் எண்ண முடியாது! சூனியக்காரி உன்னை, விஷ மீன் என்ன செய்திட முடியும் ?

ஜோன்: நான் சூனியக்காரி இல்லை! அறிவில்லாதவர் அப்படி எனக்கோர் அடைமொழி கொடுத்தார்! சூனியக்காரி என்று முடிவு கட்டி என்னைச் சுகப்படுத்தச் சிறைச்சாலையில் மருத்துவரை அழைத்து வந்தார்கள்! ஆனால் உடலைக் கீறி என் குருதியை வெளியேற்ற மருத்துவருக்கு அனுமதி அளிக்க மறுத்தார்கள்! காரணம், குருதி என்னிடமிருந்து உருவி எடுக்கப் பாட்டால், எனது மாந்திரீக சக்தி நீங்கிவிடும் என்று அந்த மூடர்கள் நம்பினார்கள்! ஆதனால் மருத்துவர் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்! தேவாலயக் கைதியாகக் காவலில் வைக்க வேண்டிய என்னை, ஆங்கிலேயர் கையில் ஏன் ஒப்படைத்தார்கள் ? மரக்கம்பத்தில் பிணைத்து என் காலைச் சங்கிலியில் ஏன் கட்டினார்கள் ? சிறையிலிருந்து நான் பறந்து போய் விடுவேன் என்று எல்லாரும் பயப்பட்டார்களா ?

வழக்கறிஞர்: நீ ஒருமுறை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றது உண்மையா ? இல்லையா ? உன் கால்கட்டுச் சங்கிலியை நீக்கிய பின்பு, அறுபது அடி உயரத்திலிருந்து நீ குதித்துப் பிழைத்துக் கொண்டாய் அல்லவா ? எப்படிப் பிழைத்தாய் ? சொல். சூனிய மந்திரத்தில் நீ பறந்ததால் தானே, அன்று தப்பினாய்! இன்று எங்கள் முன்பு உயிரோடு நிற்கிறாய்!

ஜோன்: மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு! நான் சூனியக்காரி யில்லை! பட்டிக் காட்டு மங்கையான எனக்குப் பறக்கத் தெரியாது! இறக்கைகள் முளைத்த பறவை இனத்தைச் சேர்ந்தவள் நானில்லை! இரண்டு கால்களில் நடக்கும் வெறும் மானிடப் பிறவி நான்! மாந்திரீக சக்தியில் நான் பறந்ததாக அறியாதவர்கள் சொன்னால் மூடர்தான் அதை நம்பிக் கொள்வார்! அறுபது அடி உயரத்திலிருந்து நான் எப்படிக் குதிக்க முடியும் ? தற்கொலை செய்பவர் செய்யும் தீரச் செயல் அது! நானொரு கோழை! ஆகவே அது ஓர் அண்டப் புளுகு! வைக்கோல் பொதி மேல் குதித்தேன்! பத்து அல்லது பதினைந்து அடி உயரம் தானிருக்கும்! வாய்ப்புக் கிடைத்தால் எந்தக் கைதியும் கொடுமைச் சிறையிலிருந்து ஏன் தப்பிச் செல்ல மாட்டான் ? மூடர்கள், முரடர்கள் கையில் சித்திரவதை செய்யப்படும் ஓரிளம் பெண் ஏன் தப்பி ஓட மாட்டாள் ?

தி எஸ்டிவெட்: [கடுமையாக] பெண்ணே! மூடு வாயை! நீதி மன்றத்தில் நீ கேள்வி கேட்பது தவறு! கேள்வி கேட்பவர் நாங்கள்! பதில் சொல்ல வேண்டியது நீ! கேள்விகள் கேட்க உனக்கெந்த உரிமையும் இல்லை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்! உன் கேள்விக்கு மன்றத்தில் பதிலைத் தேடாதே! தெரிந்தாலும் நாங்கள் பதில் தர வேண்டு மென்று ஒரு நியதியும் கிடையாது!

****

‘உங்கள் தடை உத்தரவை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நான் சிறையிலிருந்து தப்பி ஓடினால், உறுதி மொழியை மீறியதாக யாரும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது! ஏனென்றால் நான் யாருடைய உறுதி மொழி ஒப்பந்த விதிமுறைக்கும் உடன்பட்டவள் இல்லை. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

ஆறாம் காட்சி (பாகம்-5)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் துவங்குகிறது.

ஜோன்: மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு! நான் சூனியக்காரி யில்லை! வாய்ப்புக் கிடைத்தால் எந்தக் கைதியும் கொடுமைச் சிறையிலிருந்து ஏன் தப்பிச் செல்ல மாட்டான் ? மூடர்கள், முரடர்கள் கையில் சித்திரவதை செய்யப்படும் ஓரிளம் பெண் ஏன் தப்பி ஓட மாட்டாள் ?

தி எஸ்டிவெட்: [கடுமையாக] பெண்ணே! மூடு வாயை! நீதி மன்றத்தில் நீ கேள்வி கேட்பது தவறு! கேள்வி கேட்பவர் நாங்கள்! பதில் சொல்ல வேண்டியது நீ! கேள்விகள் கேட்க உனக்கெந்த உரிமையும் இல்லை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்! உன் கேள்விக்கு மன்றத்தில் பதிலைத் தேடாதே! தெரிந்தாலும் நாங்கள் பதில் தர வேண்டு மென்று ஒரு நியதியும் கிடையாது! … இதற்குப் பதில் சொல். கோபுரத்திலிருந்து ஏன் கீழே குதித்தாய் ?

ஜோன்: கோபுரத்திலிருந்து நான் குதித்தது உங்களுக்கு எப்படித் தெரியும் ?

தி எஸ்டிவெட்: கோட்டை அகழியின் புழுதிக்குள்ளே நீ கிடந்ததைப் பலர் பார்த்திருக்கிறார்கள். கோபுரத்தை விட்டு ஏன் வெளியில் வந்தாய் என்பதற்குக் காரணத்திச் சொல்.

ஜோன்: தப்பிச் செல்ல வழியுள்ள போது, ஒருவர் ஏன் சிறையை விட்டு நழுவ மாட்டார் ?

தி எஸ்டிவெட்: நீ தப்பிச் செல்ல முயன்றாயா ? இல்லையா ? சொல்! உண்மையைச் சொல்! எத்தனை முறை நீ சிறையிலிருந்து தப்பியோட முயற்சி செய்தாய் ?

ஜோன்: ஆம் அது உண்மை. நான் தப்பிச் செல்ல முயன்றது உண்மைதான். ஒரு முறை அன்று. எத்தனை தடவை என்று நான் சொல்ல மாட்டேன். கூண்டுக் கதவு திறந்திருந்தால், பறவை ஏன் பறந்து செல்கிறது என்று என்னை நீவீர் கேட்பது வியப்பாக இருக்கிறது.

தி எஸ்டிவெட்: சிறையிலிருந்து நீ தப்பிச் செல்ல முயன்றது, மாபெரும் குற்றம். அதை நீ பலர் முன்பாக ஒப்புக் கொண்டதால், அதை மதத் துரோகக் குற்றமாக நாங்கள் எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது. .. மன்றத் திருவாளர்களே! இம்மாபெரும் குற்றத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஜோன்: கேளுங்கள் பெரியோர்களே! அது என்ன மதத் துரோகமா ? அப்படிக் கூறுகிறார் திருச்சபை வழக்கறிஞர். சிறையில் நான் தப்பிச் சென்றது எப்படி மதத் துரோக மாகும் ? அதற்கு விளக்கம் தேவை, வழக்கறிஞரே! மதத்துரோகம் என்றால் என்ன என்று விளக்கவுரை தருவீர்களா ?

தி எஸ்டிவெட்: விளக்கம் சொல்கிறேன், கேள். நீ தேவாலயக் கைதியாய் இருக்கும் போது, வேண்டு மென்றே அதன் பிடியிலிருந்து வெட்டிக் கொள்ள முயன்றால், கிறித்துவ ஆலயத்தைப் புறக்கணிப்பு செய்கிறாய் என்று அர்த்தமாகிறது. அது மதத்துரோகம்! தப்பிச் செல்ல முயன்றதை நீ ஒப்புக் கொண்டதால், மதத்துரோகக் குற்றம் இரட்டிப்பு அடைகிறது!

ஜோன்: அது முற்றிலும் அர்த்தமற்ற வாதம்! அவ்விதம் காரணம் காட்டுவது முட்டாள்தனம்! சட்டங்கள் தெரியாத பட்டி மகள் ஆயினும் முட்டாள்தனமாய்ப் பேசி என்னை மட்டம் தட்ட நினைக்காதீர், வழக்கறிஞரே! குற்றவாளி சுற்றி வளைக்காமல் ஒப்புக் கொண்டால், குற்றத்தின் தீவிரம் குறைந்து, பாதியல்லவா ஆக வேண்டும்!

தி எஸ்டிவெட்: [மனமுடைந்து] கேட்டார்களா, மேன்மை மிகு கெளஸான் அவர்களே! நான் கண்ணும் கருத்துமாய்க் கடமை புரிவதைக் கேலி செய்கிறாள், இந்த கல்வி கற்காத காட்டுக் கன்னி! … (ஜோனைப் பார்த்து) உன் கணக்குப்படி பாதி குற்றம் என்பதை மன்றம் ஏற்றுக் கொள்ளாது. குற்றத்தின் எடையைத் தராசில் நிறுப்பவர் நாங்கள். குற்றக் கூண்டில் நிற்கும் உனக்குத் தகுதியும் இல்லை! உன்னிடம் தராசும் இல்லை! [வேதனையுடன் நாற்காலியில் அமர்கிறார்.]

கெளஸான்: [சினத்துடன் எழுந்து] பலமுறை நானுனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன். இன்னும் நீ அகந்தையுடன் பேசி எங்களுக்கு ஆத்திரம் ஊட்டுகிறாய். இந்த முரண்டு வாதங்கள் உனக்கு எந்த உதவியும் செய்யா. உன்னைக் காப்பாற்றி விடுவிப்பதற்குப் பதிலாக, மீண்டும் சிறையில் தள்ளித் தாழ்ப்பாள் இடப் போகின்றன.

ஜோன்: திருச்சபைத் தேவரே! நீங்கள் பேசுவதில் ஞானம் இல்லை! உங்கள் அதட்டல், மிரட்டல், விரட்டல் எனக்கு எந்த உதவியும் தருவதில்லை. நீங்கள் நியாயமாகப் பேசினால், நானும் நியாயமாகப் பேசுவேன்.

திருச்சபை வழக்கறிஞர்: [இடையே எழுந்து] இந்த வழக்கு மன்றம் இன்னும் ஒரு கட்டுப்பாட்டு நிலைக்கு வந்ததாகத் தெரிய வில்லை. எஸ்டிவெட் திருவாளரே! ஜோன் பைபிள் மீது உண்மை கூறுவதாக இன்னும் உறுதிமொழி அளிக்க வில்லை! அதற்குப் பிறகுதான் நீவீர் கேள்விகள் கேட்டு உண்மையை அறிந்து கொள்ள முடியும். இப்போது அவள் உண்மை கூற வேண்டும் என்று சட்டமில்லை!

ஜோன்: ஒவ்வொரு தடவையும் இதைத்தான் என்னிடம் கேட்கிறீர். நான் திரும்பத் திரும்ப உறுதி மொழி எடுத்திருக்கிறேன். இந்த வழக்குக்குச் சம்பந்தப் பட்ட தகவலைத் தவிர வேறு எதையும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. எல்லா உண்மைகளையும் உங்களுக்கு உரைக்க மாட்டேன். முழு உண்மையைக் கூற வேண்டாமெனக் கடவுள் எனக்குக் கட்டளை இட்டுள்ளார். நான் அவற்றைக் கூறும் போது உண்மையா, பொய்யா வென்று உமக்குப் புரியாது. நானறிந்த ஓரு பழமொழி இது: எவன் ஒருவன் மிகுந்த உண்மைகளைச் சொல்கிறானோ, அவன் நிச்சயமாய்த் தூக்கிலிடப் படுவான்! நான் பைபிள் மீது ஒன்பது முறை உறுதி சொல்லி, சலித்துப் போய்விட்டேன். இனி ஒரு முறை உங்கள் முன்பு உறுதி எடுக்க இப்போது நான் மறுப்பேன். இனி எப்போதும் எடுக்கப் போவதில்லை என்று உறுதியாக, இறுதியாகச் சொல்வேன் நான்!

உதவி வழக்கறிஞர்: [பொறுமை இழந்து] மாண்புமிகு கெளஸான் அவர்களே! இது என்ன ? சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது! [அழுத்தமாக] பைபிள் மீது சத்தியம் செய்ய மறுத்தால், அவளைச் சித்திரவதை செய்ய வேண்டும்.

கெளஸான்: [பொறுமையாக] அவள் இன்னமும் ஒரு சிறுமிதான்! ஆனால் அந்த சிறுமிக்குள் உறுமிக் கொண்டிருப்பது ஓர் சிங்கம்! சிங்கத்தைப் பிடிக்க வலைதான் தேவை! சித்திரவதை தேவையா ?

திருச்சபை வழக்கறிஞர்: கேள், சொல்வதைக் கேள் ஜோன்! உறுதிமொழி எடுக்க மறுப்பவர் நிச்சயம் தண்டிக்கப் படுவார். சிந்தித்துப் பேசு. [காவலரைப் பார்த்து] சித்திரைவதை செய்யும் ஆயுதங்களைக் அவளுக்குக் காட்டி இருக்கிறீர்களா ?

காவலன்: அவை எல்லாம் தயாராக அருகில் உள்ளன. ஆயுதங்களை அவள் பார்த்திருக்கிறாள். அவற்றில் அடியும் வாங்கி அனுபவமும் பெற்றிருக்கிறாள்.

ஜோன்: [ஆங்காரமுடன்] ஆணாதிக்க சிங்கங்களே! கையிலும், காலிலும் விலங்கிட்டு ஓர் அபலைப் பெண்ணை ஆயுதத்தால் அடிக்கும் உங்கள் வல்லமையை மெச்சுகிறேன். என் அங்கங்களைத் துண்டு துண்டாய் வெட்டி, என் ஆத்மா உடலை விட்டு வெளியேற்றப் பட்டாலும், நான் இதுவரை சொன்னதற்கு மேல் இனி எதுவும் சொல்லப் போவதல்லை. நீங்கள் புரியும்படி இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது ? உங்கள் முரட்டுக் காவலர் அடிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அடி பொறுக்காமல் நீங்கள் கேட்கும் எதையும் சொல்லி விடுவேன். வலி தீர்ந்ததும் அவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை என்று திருப்பி வாங்கிக் கொள்வேன். ஆகவே அடிமேல் அடிவைத்து என்னைப் புண்படுத்தினாலும், நான் சொன்னவற்றைத் தவிர மேற்கொண்டு எதுவும் என்னிட மிருந்து பெற்றுக் கொள்ள இயலாது.

லாட்வெனு: ஜோன் சொல்வதில் சிறிது உண்மை உள்ளது. அவளை அடித்து, மிதித்துக் கக்க வைக்கும் போலி உண்மைகளை வழக்கு மன்றம் எடுத்துக் கொள்வதில் எந்த பயனுமில்லை.

உதவி வழக்கறிஞர்: ஆனால் பைபிள் மீது உறுதிமொழி எடுக்காதவரைத் தண்டிப்பது நமது வழக்கம் அல்லவா ?

திருச்சபை வழக்காளி: சிறைக் கைதியை வேண்டு மென்றே சித்திரவதை செய்வது முறையில்லை. குற்றவாளி தானே முன்வந்து எல்லாவற்றையும் சொல்லும் போது, ஆயுதத்தால் அடிப்பது நியாயமில்லை.

கோர்ஸெலஸ்: ஆனால் இந்தக் கதை வேறு மாதிரி அல்லவா போகிறது. ஜோன் உறுதிமொழி எடுக்க மறுக்கிறாளே!

லாட்வெனு: [வெறுப்படைந்து] அதனால் வழக்கப்படி அபலைப் பெண்ணைச் சித்திரவதை செய்து பேருவகை பெறுவதற்குச் செய்யலாம் என்று சொல்கிறாயா ?

கோர்ஸெலஸ்: [வியப்புடன்] அது ஒன்றும் எமக்குக் கேளிக்கை யில்லை! சட்டப்படி அவள் நீதி மன்றத்தில் உறுதிமொழி எடுக்காவிட்டால், தண்டனை உண்டு! அதைத் தவிர்க்கவும் கூடாது! தடை செய்வதும் தவறு!

திருச்சபை வழக்காளி: கனமான் அவர்களே! அவ்விதம் சொல்வது முறையில்லை. நமது ஆலயச் சட்டங்கள் அறியாத, தனது உரிமை விதிகளைத் தெரியாத அபலைப் பெண்ணை அவ்விதம் சித்திரவதை செய்வது அநியாயம்.

கோர்ஸெலஸ்: [ஆத்திரமாய்] ஆலய வழக்கறிஞரே! அந்தப் பெண் ஒரு மதத்துரோகி என்பதை மறந்து பேசுகிறீர்! அவள் தண்டனை அடைய வேண்டியவள்! அவள் தண்டிக்கப்படுவாள் என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்.

கெளஸான்: கனமான்களே! அந்த வெஞ்சினம் இங்கு நிறைவேறாது. மதத்துரோகக் குற்றம் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை. ஆகவே தண்டனைகளை இப்போதே தயாரிக்க வேண்டாம். இன்றைக்கு ஜோன் சித்திரவதை செய்யப்பட மாட்டாள். சித்திரவதை செய்து பதிவாகும் ஜோனின் வாக்கு மூலம் சட்டப்படிச் செல்லாது.

கோர்ஸெலஸ்: மாண்புமிகு பாதிரியார் எப்போதும் கருணையின் வடிவாய் கனிவு மழை பொழிகிறார். உண்மை மறந்து வழக்கத்திற்கு மாறாக பொறுப்பற்று நடப்பது சரியாகுமா ?

ஜோன்: [கோர்ஸெலஸைப் பார்த்து] நீவீர் ஒரு புதுவித மேலதிகாரி! முன்னால் என்ன செய்தீரோ அதையே பின்னாலும் செய்ய வேண்டு மென்னும் விதியைக் கடைப்பிடிக்கிறீர்.

உதவி வழக்காளி: சரி அது போகட்டும். ஆடு மேய்த்த பட்டிக்காரியின் கனிவுக் கதையில் மயங்காது, அவளது கரடு முரடான நாக்கின் மறுபுறத்தை இப்போது நோக்குவோம்.

ஜோன்: நான் ஆடு மேய்த்தவள் இல்லை! ஆனால் ஆட்டு இடையருக்கு எவரையும் போல் உதவி செய்திருக்கிறேன்! எனக்கு ஏது நேரம் ஆடு மேய்க்க ? வீட்டில் பெண்ணுடையில், பெண்ணைப் போல் எனது அன்னைக்கு உதவியாக வேலை செய்வேன். … நீங்கள் சிறுவயதில் ஆடு மேய்த்தீர்களா ?

உதவி வழக்காளி: [கோபமாக] கேலியாகப் பேசிக் கொள்ளும் வேளையா இது ? போதும் உன் விளையாட்டு! சிறையில் உதைபட்டும் உன் கர்வம் இன்னும் ஒடுங்க வில்லை. பார் மங்கையே பார்! நீயே உன்னைப் பெருந் தண்டனைக்குள் தள்ளிக் கொண்டு செல்கிறாய்!

ஜோன்: எனக்குத் தெரியும் அது! எனது கர்வத்துக்காக நான் தண்டிக்கப்பட வில்லையா ? நானொரு முட்டாளைப் போல் எனது போருடையை அணியாதிருந்தால், பர்கண்டி படைவீரன் என்னைப் பின்னே தாக்கிக் குதிரையிலிருந்து பிடித்திருக்க மாட்டான். இப்படி உங்களிடம் மாட்டிக் கொண்டு நான் வாதாட வேண்டி யிருக்காது!

பாதிரியார்: பெண்டிர் வேலை செய்வதில் சாமர்த்தியசாலியான நீ, வீட்டிலே ஒண்டிக் கொண்டு ஏன் வீட்டு வேலையில் ஈடுபடாமல் இருந்தாய் ?

ஜோன்: [சிரித்துக் கொண்டு] திருவாளரே! வீட்டு வேலைகள் புரிய ஏராளமான பெண்டிர் இருக்கிறார்! ஆனால் மாபெரும் எனது வேலையைச் செய்ய இங்கு யாரும் இல்லையே!

கெளஸான்: வெட்டிப் பேச்சுகள் போதும், நிறுத்துங்கள்! [ஜோனைப் பார்த்து] நானொரு முக்கிய வினாவைக் கேட்கப் போகிறேன்! நீ கனவமாகச் சிந்தித்துப் பதில் தர வேண்டும். ஏனெனில் அந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதில்தான் உனது வாழ்வின் நீட்சியும், பாபத்தின் நீக்கமும் ஒருங்கே தீர்மானிக்கப்படும். இறுதியில் உன் தலையில் விழப் போவது பாறாங் கல்லா அல்லது பசுமைப் பூவா எதுவானாலும், பூமியில் கிடைக்கும் புனிதக் கோயிலின் முடிவான தீர்ப்பை நீ ஏற்றுக் கொள்வாயா ? அதற்கு உனது சார்பாக நீ வழக்காடும் பொறுப்பில், ஆலயத்தின் தீவிரப்படைக் குழுவினருத் தலைவணங்கி வாதாடுவாயா ?

ஜோன்: நான் திருக்கோயிலுக்குப் பணியும் ஓர் வாலிப மங்கை. நான் அதற்குக் கட்டுப்பட்டவள். அதில் நீங்கள் கவலையுற வேண்டாம்….!

கெளஸான்: [எழுந்து நின்று மிக்க வியப்போடு] … என்ன சொன்னாய் ? நீ புனிதக் கோயிலின் ஆட்சிமைக்குத் தலை வணங்குவாயா ?

ஜோன்: [வேகமாக இடையில் குறுக்கிட்டு] ஆம் தேவாலயத் தேவரே! செய்ய முடியாத செய்கைகளைச் செய்யத் திருக்கோயில் என்னை ஆணையிட்டு அமுக்காமல் இருந்தால்….!

[கெளஸான் தலையில் கையை வைத்துக் கொண்டு பெரு மூச்சோடு நாற்காலில் சாய்கிறார். லாட்வெனு மனம் நொந்து தலையை அசைக்கிறார். வழக்காளர் வெகுண்டு உதட்டை பிதுக்குகிறார்]

 

[ஆறாம் காட்சி பாகம்-6]

 

‘குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தின் பீடத்தில் நிறுத்தப்பட்டு, விறகுக் கட்டைகளை அடுக்கிக் கொலையாளி தீப்பந்தத்தைக் கொளுத்தித் தீவைக்கத் தயாராக இருப்பதை நான் கண்டாலும், தீக்கனல் நாக்குகளின் இடையே நான் வெந்து கொண்டிருந்தாலும், முன்பு சொன்னதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! சாகும்வரை நான் இந்த வழக்கு மன்றத்தில் சொன்னதையே சொல்லி நிலைநாட்டுவேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடு கிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் நடக்கிறது.

ஜோன்: நான் திருக்கோயிலுக்குப் படியும் ஓர் பணிவுக் குழந்தை. நான் அதற்குக் கட்டுப்பட்டவள். அதில் நீங்கள் கவலையுற வேண்டாம்….!

கெளஸான்: [எழுந்து நின்று மிக்க வியப்போடு] … என்ன சொன்னாய் ? நீ புனிதக் கோயிலின் ஆட்சிமைக்குத் தலை வணங்குவாயா ?

ஜோன்: [வேகமாக இடையில் குறுக்கிட்டு] ஆம் தேவாலயத் தேவரே! செய்ய முடியாத செய்கைகளைச் செய்யத் திருக்கோயில் ஆணையிட்டு என்னைக் கட்டாயப் படுத்தமல் இருந்தால்….!

[கெளஸான் தலையில் கையை வைத்துக் கொண்டு பெரு மூச்சோடு நாற்காலில் சாய்கிறார். லாட்வெனு மனம் நொந்து தலையை அசைக்கிறார். வழக்காளர் வெகுண்டு உதட்டை பிதுக்குகிறார்]

தி எஸ்டிவெட்: [வெகுண்டு] தேவாலய ஆணைகளைத் துச்சமாக அவமதிக்கிறாள், இந்த மங்கை! கட்டளையிடும் ஆலயத் தூதர்களையும் அவமதிக்கிறாள். செய்ய முடியாததை ஆலயம் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்துவதாக குற்றம் வேறு சாட்டுகிறாள்.

ஜோன்: எனக்குத் தெரிந்த தெய்வ ஒளிமயம், அசரீரியாகக் காதில் விழுந்த வாக்குகள் யாவும் கடவுள் எனக்குச் சொல்லவில்லை என்று நான் மறுத்துக் கூற நீங்கள் எனக்கு ஆணை யிட்டால், அது செயற்கரிய செயல்! உலகத்தில் என்ன வெகுமதி எனக்குக் கிடைத்தாலும், அப்படி ஒரு பொய்யை நான் துணிந்து உங்களுக்காகச் சொல்லப் போவதில்லை! உங்கள் திருச்சபைத் தேவர்களைத் திருப்தி செய்யக் கடவுளைப் பொய்யாக்கி, நான் ஒருபோதும் அப்படி உறுதி எடுக்கப் போவதில்லை! கடவுள் எனக்கிட்ட கட்டளையை நான் யாருக்காகிலும் விட்டுவிடப் போவதில்லை! அதைத்தான் உங்களின் செயற்கரிய செயல் என்று நான் பழித்துச் சொல்கிறேன். கடவுள் இட்ட கட்டளையை நான் புரியும் போது தேவாலயம் குறுக்கே வந்து என்னைத் தடுத்தால், நான் மீறிச் செயலில் ஈடுபடுவேன்! தடை செய்வோர் யாராக இருந்தாலும், அவரை நேருக்கு நேர் எதிர்ப்பேன்!

வழக்கு ஆய்வாளர்கள்: [அதிர்ச்சி அடைந்து கோபமாக] ஓ! பிரபு! இதென்ன கூத்து ? இது முழுக்க முழுக்க மதத் துரோகம்! தேவாலயம் சிறிதா ? ஆனால் அதற்குள் இருக்கும் கடவுளின் ஆணை பெரிதா ? கடவுளைப் பெரிதாய்க் கருதுபவள், தேவாலயத்தின் ஆணையைத் துச்சமாக ஏன் வெறுக்கிறாள் ? ஆச்சரியமாக இருக்கிறதே! ஜோன் சபையோர் முன்பாகச் சொன்ன இது, ஐயமின்றி மதத் துரோகம்! அழுத்தமாகச் சொல்வேன், இது ஆலயத் துவேசம்! தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் இது அவையோர்களே!

தி எஸ்டிவெட்: [கையில் இருந்த கத்தைத் தாள்களைக் கீழே வீசி] திருச்சபைத் திருவாளர்களே! இதற்கு மேல் வேறு சான்றுகள் வேண்டுமா ? சொல்லுங்கள்! ஆலயத்தைத் துச்சமாக நினைப்பவள், கடவுளை மட்டும் உச்சமாகச் சொல்வது, வெறும் வேடம், நடிப்பு, ஏமாற்று வித்தை! சூனியத் தந்திரம்!

கெளஸான் [எழுந்து நின்று] பெண்ணே! நீ இப்போது கூறிய பாபச் சொற்கள் பத்து மதத் துரோகிகளை தீக் கம்பங்களில் ஏற்றி எரித்துவிடும்!

திருச்சபை வழக்கறிஞர்: அசரீரி கூறுவதாய்ச் சொல்லும் அகந்தைப் பெண்ணே! சிந்தித்துப்பார்! பிசாசு உன்னைக் கவர்ந்து, உனக்கு அறிவுரை கூறிப் பாதாளத்தில் தள்ளி விட்டதாகத் தேவாலயத் தீவிரவாதிகள் கூறினால், ஆலயம் பிசாசைவிட, உன்னை விட அறிவு உள்ளது என்று நீ நம்புவாயா, அல்லது நம்ப மாட்டாயா ?

ஜோன்: கடவுள் என்னை விட, உம்மைவிட, பிசாசைவிட, தேவாலயத் தேவர்களை விட அறிவுள்ளவர். கடவுள் எல்லாவற்றுக்கும் பெரியவர்! மாபெரும் தேவாலயம் வெறும் மண்டபக் கோபுரந்தான். அதன் உள்ளே இருக்கும் கடவுள்தான் உன்னத மானது. நான் கடவுளை உன்னதமாகக் கருதுவது, உயர்ந்த தேவாலயக் கோபுரத்தைக் கீழே தள்ளுவதாக நீங்கள் நினைப்பது தவறு. அதைத் மதத் துரோகமாகப் பறைசாற்றி நீங்கள் என்மீது பழிசுமத்துவது எனக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது. நீங்கள் வணங்கும் அதே கடவுளைத்தான் நானும் வழிபடுகிறேன். அதற்காக என்னைக் கம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்க நீங்கள் துணிவதுதான் மதத் துரோகம்! மதத் துரோகம் என்று நீங்கள் என்னைக் குற்றம் சுமத்துவது நீங்கள் கடவுளுக்குச் செய்யும் துரோகம்! இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது!

லாட்வெனு: [சற்றுக் கெஞ்சலான தொனியில்] குழந்தாய்! நீ என்ன பேசுகிறாய் என்பது உனக்கே தெரியவில்லை! உன்னைக் கொல்ல நீயே வழி வகுத்துக் கொள்கிறாய்! சொல்வதைக் கேள்! பூலோகத்தில் நிலையான ஆலயத்திற்கு ஓர் குடிமகளாய் அடிபணிய உடன்படுவாயா நீ ?

ஜோன்: [ஆத்திரமடைந்து] என்றைக்கு நான் ஆலயத்தின் குடிமகள் இல்லை யென்று நிராகரித்திருகிறேன் ? குழந்தை என்று என்னை அழைக்க வேண்டாம்! நானொரு குழந்தை இல்லை! உண்மையாக என்னை நீவீர் குழந்தையாகக் கருதினால், எதற்காக தீக் கம்பத்தில் உயிரோடு எரிக்க தீவட்டியைக் கையில் வைத்திருக்கிறீர் ?

லாட்வெனு: நல்லது பெண்ணே. அப்படியானால் நீ நமது போப்பாண்டவருக்கும் குடிமகள் இல்லையா ? அதுபோல் கார்டினல், ஆர்ச்பிஷப்புகள், இங்கு நிற்கும் பாதிரிகள் ஆகியோருக்கும் தொண்டு செய்பவள் அல்லவா ?

ஜோன்: [அழுத்தமாக] இல்லை! நான் கடவுளுக்கு முதலில் தொண்டு செய்பவள்! அவர்கள் யாவரும் என்னைப் போல் கடவுளின் தொண்டர்கள் அல்லவா ?

தி எஸ்டிவேட்: அவர்களுக்குத் தொண்டு செய்யக் கூடாதென்று அசரீரி உன் காதில் சொல்கிறதா ? திருச்சபை தீவிரவாதிகளுக்கும் அடிபணியக் கூடாதென்று அசரீரி உனக்குச் சொல்கிறதா ?

ஜோன்: தேவாலயத்துக்குக் கீழ்ப்படிய வேண்டா மென்று எனக்கு அசரீரி சொல்வதில்லை! ஆனால் கடவுளுக்கு முதலில் தொண்டு செய் என்று கட்டளை இடுகிறது, எனக்கு!

கெளஸான்: அதாவது நீதான் அதைத் தீர்மானிக்கும் நீதிபதி! தேவாலயத் திருச்சபை யில்லை என்று சொல்கிறாய், அப்படித்தானே.

எரிக் கம்பத்தில் ஜோன்

ஜோன்: [ஆத்திரமடைந்து] என்னுடைய தீர்மானத்துக்கு நான் நியாயம் அளிக்காது, வேறு எதற்கு நான் நியாயம் அளிக்க முடியும் ? வேடிக்கையாக இருக்கிறதே, நீங்கள் கேட்பது!

வழக்காளர்கள்: [யாவரும் ஒருங்கே] ஓ! அப்படியா ? வேடிக்கையான பதில்!

கெளஸான்: பெண்ணே! உன் வாயாலே உன்னைத் தண்டிக் கொண்டாய்! உன் பாபத்தைக் கழுவித் தீர்வு செய்ய, நாங்கள் பாபத்தின் விளிம்பு வரை சென்றோம். உன்னைக் காப்பாற்றக் கதவை நாங்கள் மீண்டும், மீண்டும் திறந்து வைத்தோம்! ஆனால் நீ அந்தக் கதவுகளை பட்டென மூடி எங்கள் முகத்தில் அறைந்தாய். அதோடு கடவுள் முகத்திலும் அறைந்தாய்! நீ சொன்ன சுடுமொழிகளால் திருச்சபையோரைப் புண்படுத்தியதும் இல்லாமல், பாபத் தீர்ப்பு உனக்குக் கிடைக்கு மென்று பாசாங்கு பண்ணுகிறாயா ?

ஜோன்: எனக்குத் தெரிய நான் இதுவரை எந்தப் பாபமும் செய்த தில்லை! எனக்குத் தெரியாமல் நேர்ந்த பாபங்களுக்கு நீவீர் சொன்னாலும் சரி, சொல்லா விட்டாலும் சரி, நிச்சயம் எனக்குப் பாபத் தீர்ப்புக் கிடைக்கும்.

லாட்வெனு: மெச்சுகிறேன் உன்னை, ஜோன்! கேளுங்கள், தகுந்த பதில் அது, திருவாளர்களே.

கோர்ஸெலஸ்: [சட்டென எழுந்து] பணம் கொடுக்காமல் நீ பாதிரியின் குதிரைத் திருடிய போது, பாபம் செய்கிறோம் என்னும் ஓர் உத்தம எண்ணம் உன் மனதைக் குத்த வில்லையா ?

கெளஸான்: [கோபமாக] பிஷப் குதிரையைப் பிசாசு தூக்கிப் போயிற்று, உன்னையும் முதுகில் ஏற்றிக் கொண்டு! போதும் உமது பொல்லாங்கு! மதத் துரோகி என்ற குற்றத்தில் வழக்காடச் சான்றுகளை நாம் தேடும் போது, மூடத்தனமாக குதிரைக் களவை கொண்டுவர வேண்டுமா ? [உடல் நடுக்கமுடன் தள்ளாடி உட்காருகிறார்]

ஜோன்: சபையோர்களே! நானொரு குதிரைத் திருடி இல்லை! குதிரை வாங்கும் போது பாதிரியார் இல்லை! ஆனால் அவர் கேட்ட பணத்தை வீட்டு வாசலில் வைத்து விட்டுத்தான் நான் குதிரையை இழுத்துக் கொண்டு சென்றேன்.

வழக்காளி: திருச்சபைத் திருவாளர்களே! கவைக்குதவாத இம்மாதிரிப் பழிகளை நாம் தொடருவது நியாயமா ?

தி எஸ்டிவெட்: ஒவ்வொரு குற்றத்தையும் உளவி வழக்காடவே நாமிங்கு கூடியுள்ளோம்! சிறு குற்றமாயினும், குற்றம் குற்றமே! ஆனால் நம் வலையில் சுறாமீன் பிடிப்பட்டுள்ள போது, எதற்காக தவளையைப் பிடிக்கத் தாவ வேண்டும் ? மதத்துரோகக் குற்றத்தை அவளே வாக்கு மூலத்தில் கக்கி விட்ட போது, அவளைச் சிலுவையில் அடிக்க அதுவே போதுமானது! மாண்புமிகு கெளஸான் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இரண்டு அழுத்தமான பழிகள் நம் கைவசம் உள்ளன! முதல் பழி: ஜோன் சூனியப் பிசாசுகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தது. இரண்டாவது பழி: பெண்ணானவள் ஆடவர் உடையை அணிந்து கொண்டு அசிங்கமாக, அருவருப்பாக உலவி வந்தது. அது இயற்கை நெறிக்கு எதிரானது. இவற்றுக்கு மேல் நமக்கு எதுவும் தேவை யில்லை!

ஜோன்: ஆலய அறிஞர்களே! புனித அணங்கு காதிரைன் பொல்லாங்கு புரியும் பிசாசா ? புனித மாது மார்கரெட் தேவமங்கையும் ஒரு பிசாசா ? சொல்லுங்கள்!

****

‘தீக்கம்பத்தில் எரிவதற்குப் பயந்து, நான் புரிந்தவை எல்லாம் தவறு என்று மனம் ஒப்பி மன்னிப்புக் கேட்டு வாக்குமூலம் தந்ததைப் பெரும் பாதகம் என்று அசரீரிக் குரல்கள் என்னை இடித்துரைக்கின்றன. பாபத்தீர்ப்பு வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு நான் செய்த துரோகத்துக்குப் புனித தேவதையை அனுப்பிக் கடவுள் மிகவும் வருந்துவதாக என் காதில் விழுந்தது. என்னுயிரைக் காத்துக் கொள்ள கடவுளுக்கு நான் துரோகம் இழைத்தேன். அப்படிச் செய்ததினால் நானே என்னை முட்டாளாய் ஆக்கிக் கொண்டேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

ஆறாம் காட்சி (பாகம்-7)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடு கிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் நடக்கிறது.

தி எஸ்டிவெட்: ஒவ்வொரு குற்றத்தையும் உளவி வழக்காடவே நாமிங்கு கூடியுள்ளோம்! சிறு குற்றமாயினும், சட்டப்படி அதுவும் குற்றமே! மதத்துரோகக் குற்றத்தை அவளே வாக்கு மூலத்தில் கக்கி விட்ட போது, அவளைச் சிலுவையில் அடிக்க அதுவே போதுமானது! மேலும் இரண்டு அழுத்தமான பழிகள் நம் கைவசம் உள்ளன! முதல் பழி: ஜோன் சூனியப் பிசாசுகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தது. இரண்டாவது பழி: பெண்ணானவள் ஆடவர் உடையை அணிந்து கொண்டு அருவருப்பாக உலவி வந்தது. அது இயற்கை நெறிக்கு நேர் எதிரானது.

ஜோன்: ஆலய அறிஞர்களே! புனித அணங்கு காதிரைன் பொல்லாங்கு புரியும் பிசாசா ? புனித மாது மார்கரெட் தேவமங்கையும் ஒரு பிசாசா ? சொல்லுங்கள்! கடவுளின் தூதர்களைப் பிசாசுகள் என்று பழித்துரைப்பது மகா பாதகம்!

கோர்ஸெலஸ்: எங்களுக்கு முதலில் நீ சொல்! உன் முன்பாகத் தோன்றும் உருவமற்ற ஓர் ஆன்மா புனித தேவதை என்று எப்படித் தெரியும் ? அது கால்களின்றி, உடை அணியாமல் அமண உருவத்தில் தானே வந்தது ?

ஜோன்: நீவீர் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது! எல்லாம் படைத்த கடவுளுக்கு உடை வாங்கக் கூட முடியாத நிலை இருப்பதாக நீவீர் கருதுகிறீரா ? மேலும் ஒரு பெண் முன்பாகக் கடவுள் நிர்வாணமாக வருவார் என்று நினைக்கிறீரா ? உமக்குப் பிசாசுகளைத் தவிர புனித அணங்குகளைப் பற்றி எதுவும் தெரியாது. நான் கண்டவை எல்லாம் கடவுள் தெரிசனம் என்றும், கனவில் வந்தவர் தேவதை என்றும் என்னால் நிரூபிக்க முடியாது.

[மன்ற அவையோர்களால் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. பலர் சிரிக்கிறார்கள்.]

லாட்வெனு: [வேடிக்கையாக] நல்ல பதில் கொடுத்தாய் ஜோன்.

வழக்கறிஞர்: ஆம், நல்ல பதில்தான். தீங்கு செய்யும் எந்தப் பிசாசும் ஜோனை ஏமாற்றுவதற்கு நல்ல உடையில் வரும்! நிர்வாண நிலையில் வந்தால் பேயென்று அஞ்சி அல்லவா ஓடியிருப்பாள் ? … இப்போது கவனமாகக் கேள் ஜோன். புனித மாதுகள் பேசியதாக நீ கூறிய வேடிக்கைக் காட்சிகள் அனைத்தும், உன் ஆத்மாவைக் கெடுக்க வந்த நரகப் பிசாசுகள் செய்த சூனியம் என்று தேவாலயம் அறிவுரை புகட்டுகிறது. அந்த புனித மொழியை நீ ஏற்றுக் கொள்கிறாயா ?

ஜோன்: உமக்கு அது புனிதமொழி! ஆனால் எனக்கு அது புண்மொழி! நான் கடவுளின் தூதரை ஏற்றுக் கொள்கிறேன். தேவாலயத்தில் நம்பிக்கை யுள்ளவர் எவரும் அவரை மறுக்க மாட்டார்.

கெளஸான்: பாழாய்ப் போகும் பாவையே! நீ என்ன பதில் சொல்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா ? எங்களுக்குப் புரியவில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் உரைக்காமல், ஏதோ ஓர் தத்துவம் அல்லவா பேசுகிறாய்! யார் உன் மூடத்தனமான புண்மொழிகளுக்குச் செவிசாய்க்க முடியும் ?

வழக்கறிஞர்: [கெளஸானைப் பார்த்து] தேவாலயப் பிரபு! ஓர் ஆத்மாவைக் காப்பாற்ற நீங்கள் வீணாய் ஒரு பிசாசுடன் சண்டை போடுகிறீர். ஜோனையோ அல்லது ஆத்மாவையோ நீங்கள் காப்பாற்ற முடியாது! இப்போது இந்த உடைக் குற்றத்தைப் பற்றி நானொரு முடிவு எடுத்தாக வேண்டும். [ஜோனைப் பார்த்து] நான் இறுதி முறையாகக் கேட்கிறேன். ஒழுங்காகப் பதில் சொல். நீ இப்போது உடுத்தி யிருக்கும் அவமதிப்பான ஆடவர் ஆடையைக் களைந்து விட்டு, பெண்ணுகந்த உடையை அணிந்து கொள்வாயா ?

ஜோன்: அறிவில்லாமல் இந்த கேள்வியை ஒரு பெண்ணிடம் கேட்காதீர்! சபை நடுவே அதுவும் ஆடவரின் கழுகுக் கண்கள் முன்பாக என்னுடையை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை! [அவை யோர்கள் பலர் கொல்லெனச் சிரிக்கிறார்கள்]. என் கால்களில் இருக்கும் விலங்குச் சங்கிலி உமது கண்களுக்குத் தெரிய வில்லையா ? சிறையில் மாற்றுடையை யார் எனக்குத் தந்தார்கள் ? நான் குளித்துப் பல நாட்கள் ஆகின்றன! அழுக்கேறிய புழுக்கமுள்ள உடம்பில் எந்த உடை இருந்தால் என்ன ? நான் என்ன உடை அணிய வேண்டும் என்று விதிமுறை வகுக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது ? எந்த உடையை எப்போது உடுத்துவேன் என்பது என் முடிவு. உமது கேள்வி அர்த்த மற்றது. இதை நீதிமன்றம் கேட்கக் கூடாது. உமது கேள்விக்கு இதுதான் பதில். நான் பெண்ணுடையை அணியப் போவதில்லை. சிறையில் நாயினும் கேவலமாக நடத்தப்படும் ஒரு நங்கைக்கு ஆணுடை பாதுகாப்பு அளிக்கும். பெண்ணுடை அணிந்தால், உமது காவலர் கழுகுக் கண்கள் என் உடலைக் கொத்தித் தின்றுவிடும். நீவீர் சிந்திக்காமல் இப்படிக் கேள்வி கேட்காதீர். வெளியே நடமாடும் போது, படைக்காவலர் உடையைத் தவிர வேறுடையை அணியக் கூடாதென்று அசரீரி எனக்குப் பலமுறை அறிவுரை புகட்டி உள்ளது.

வழக்கறிஞர்: அப்படித் தவறாக உனக்கு அறிவுரை சொல்லும் அந்த அசரீரி ஒரு மாயப் பிசாசென்று இப்போது தெரிய வில்லையா ? கடவுளின் புனித தேவதை ஆணுடையை அணியச் சொல்லி, உனக்கு இவ்வித அவமதிப்பை உண்டாக்கியது என்று நாங்கள் நினைப்பதை நீ ஒப்புக் கொள்வாயா ?

ஜோன்: [கோபமாக] ஆணுடை எனக்கு அவமதிப்பை அளிக்கவில்லை! ஒழுக்கமாக எந்த உடையை ஒரு பெண் அணிந்தால் என்ன ? நானொரு படை வீரனாய்ப் படையினர் ஊடே நடமாடி வருகிறேன். கடவுள் ஆணையிட்ட எனது கட்டளைப் போர்ப்பணி இன்னும் முடிய வில்லை. முடிவதற்குள் இந்த பர்கண்டிப் போக்கிரிப் படையினர் என் பின்னே வந்து என்னைப் பிடித்துச் சிறையிட்டார். நானொரு சிறைக் கைதி இப்போது. பெண்ணுடையில் நானிருந்தால் காவலர் கண்களில் நானொரு பெண்ணாகக் காட்சி தருவேன். பிறகு என்கதி என்னாகும் என்று சொல்லத் தேவையில்லை! கூந்தலை வெட்டி விட்டு ஆணைப் போல் படை உடுப்பு அணிந்தால், என்னை அவர் ஆண்படை வீரனாகத்தான் நினைப்பார். வீட்டில் என் சகோதரருடன் இருப்பது போல் நான் சிறையிலும் நடமாடலாம். அதனால்தான் புனித மாது காதிரைன் அனுமதி எனக்குத் தரும் வரை நான் பெண்ணுடையில் நடமிடக் கூடாது என்று எனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கோர்ஸெலஸ்: ஓ அப்படியா ? புனிதாள் காதிரைன் தான் உனது உடலுக்குக் காப்பாளியா ? சரி, அது நல்லது. இந்தக் கொடும் தண்டனையிலிருந்து காதிரைன் உனக்கு எப்போது விடுதலை அளிப்பாள் ?

ஜோன்: பிரிட்டாஷ் படையினர் கைகளிலிருந்து நீங்கள் என்னை விடுவிக்கும் போது! தேவாலயத்தின் கைவசம் என்னை விடும்படி, ஆயிரம் முறை நான் உங்களிடம் மன்றாடி யிருக்கிறேன். வார்விக் கோமகனாரின் முரட்டு பிரிட்டாஷ் காவலரிடம் இரவும் பகலும் என்னை விட்டுவிடாதீர் என்று நான் கத்தி யிருப்பதை உம் காதுகள் மறந்தனா ? அந்த காட்டுமிராண்டிகள் முன்பாக நான் பாவாடை அணிந்து பெண்ணாக நடமாட வேண்டுமா ?

லாட்வெனு: [பொறுமை இழந்து] இவள் என்ன உளறுகிறாள் என்று எனக்குப் புரியவில்லை. கடவுளுக்குத் தான் தெரியும்! ஆமாம் நீ பட்டிக்காட்டில் வாழ்ந்த எளிய பெண்! முரட்டுக் காவலரின் கழுகுக் கண்களுக்கு நீ அஞ்சுவதில் சிறிதளவு உண்மை இருக்கிறது. பெண்ணே! சிறையில் இருக்கும் பெண்டிர் எல்லாம் உன்னைப் போலின்றி பெண்ணுடையில்தான் இருக்கிறார். நீ மட்டும் வேறா ?

ஜோன்: ஆம், ஐயமின்றி நான் வேறானவள்! முற்றிலும் மாறுபட்டவள்! மற்ற பெண்டிர் என்னைப் போல் வீட்டை விட்டு ஓடியவர் அல்லர்! அஞ்சாமல் இராணுவ உடையை அணிந்தவர் அல்லர்! என்னைப் போல் போரிட்டு நாட்டை மீட்டவர் அல்லர். ஆணாதிக்கத் தளபதிகள் செய்ய முடியாதைச் செய்ததால் என்மேல் பலருக்குப் பொறாமை உள்ளது. முன்னால் நின்று நான் போரை நூதனமாக நடத்தியது, பல போர்த் தளபதிகளுக்கு வேதனையாக இருக்கிறது. அவருக்கு முடியாத சாதனையாகத் தோன்றுகிறது. உயிருடன் நான் தலைதூக்கி உலவி வருவது பல தளபதிகளின் முதுகைக் கூனாக்குகிறது! நானிங்கு உயிருடன் இருப்பது எத்தனை ஆடவரின் கண்களைக் குத்துகிறது என்பது எனக்குத் தெரியும். நான் உயிருடன் இருப்பதால், எத்தனை ஆடவர் தொடைகள் நடுங்குகின்றன என்பதை நான் அறிவேன்! நானோர் எளிய பட்டிக்காட்டுப் பெண்ணில்லை என்பதைத் தெரிந்து கொள்வீர். செம்மறி ஆடு மேய்க்கும் சாதாரண செவ்விளம் பெண்ணில்லை நான்! மன்றத்திலும், மாளிகையிலும் இருக்கும் உம்மைப் போல் நாங்களும் கிராமத்தில் எளியவராய் இருந்தால், உமக்குத் தினமும் ரொட்டி பண்ண கோதுமைத் தானியம் கிடைக்காது!

கெளஸான்: [சிரிப்புடன்] கேட்டாரா மார்டின் சகோதரரே ? ஜோனைக் காப்பாற்ற நான் முயல்வதில் நமக்குக் கிடைக்கும் பலாபலனைப் பார்த்தீரா ? நமக்கு அவள் அளிக்கும் நன்றிக் கொடைகளைக் கேட்டாரா ?

லாட்வெனு: ஜோன்! நாங்கள் யாவரும் உன்னைக் காக்கத்தான் முற்படுகிறோம். எம்மைப் போலவே தேவதூதர் கெளஸான் அவர்களும் உன்னைக் காப்பாற்ற முயல்கிறார். திருச்சபையின் வழக்காளரும் உன்னைத் தன் மகளாகக் கருதி வழக்கைக் கண்ணிய மாக, நியாயமாக நடத்துகிறார். ஆனால் நீதான் எங்களுக்கு உதவாமல், உனது வீண் கர்வத்திலே ஊறிப்போய், தனியாகச் சாதிக்காததைத் தான் சாதித்ததாக எங்கள் காதில் ஓதுகிறாய்!

ஜோன்: [சினத்துடன்] முழங்காலை வெட்டி விட்டு, உங்கள் முன்பாக என்னை ஏன் மண்டியிடச் செய்கிறீர் ? ஆத்மாவை பிடுங்கிக் கொண்டு என்னுடலைக் காப்பதாக ஏனிங்கு நாடகம் போடுகிறீர் ? கர்வக்காரி, மர்மக்காரி என்று குத்திக் காட்டி என்னை ஏன் காப்பாற்றப் போவதாய் ஏமாற்றுகிறீர் ? கனலிட்டு எரிக்கும் கம்பத்தை நட்டு வைத்து ஏன் என்னைக் காப்பாற்றப் போவதாய் கதை அளக்குறீர் ? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி ஏன் என்னைச் சித்திரவதை செய்கிறீர் ?

திருச்சபை வழக்கறிஞர்: உன்னைப் பயமுறுத்த தீக்கம்பம் நிறுத்தப் பட்டிருக்கிறதே தவிர உன்னை எரிப்பதற்கு இல்லை! இன்று இங்கு யாம் கூடி, உனக்கு அறிவு புகட்டுவது, உன்னையும் உன் ஆத்மாவையும் காப்பதற்கு! நாங்கள் உன்னை சித்திரவதை செய்யவில்லை! உன்னை நீயே சித்திரவதை செய்கிறாய்! நாங்கள் தடுக்க முயன்றாலும், நீயே உன் வாயால் தண்டித்துக் கொள்கிறாய்! நீயே தீக்கம்பத்தில் ஏறிக் கொள்ளத் தாவிச் செல்கிறாய்! ஒரு விலங்கினத்தின் எளிய குணாதிசயத்தைக் காட்டிலும், இருட்டடித்துப் போன உன் இதயத்தின் எளிமை எந்த வகையிலும் மேம்பட்ட தில்லை!

ஜோன்: விலங்கினத்தின் குணங்கள் என்றும் மாறாதவை! எத்தகைய கடுமை படைத்தவை அவை என்பதை இலகுவாக யாரும் ஊகிக்க முடியும்! மனித இனத்தின் குணப்பாடு எப்போது, ஏன் மாறுகிறது என்பதை யாரும் ஊகிப்பது முடியுமா ? வினாடிக்கு வினாடி மாறும் மனிதரின் கோரப் பண்பை எவரும் ஊகிக்கவோ அல்லது குறைப்பதோ சாத்தியமா ? விலங்கினத்தின் குணாதிசய எளிமைப்பாட்டில் பெரும் ஞானம் இருக்கிறது. அதே சமயம் சில மனித அறிவாளிகளிடம் பெருத்த மூடத்தனம் குடிகொண்டுள்ளது!

லாட்வெனு: அது எங்களுக்கும் தெரியும் ஜோன்! நீ நினைப்பது போல் எங்களுக்கு அவ்வித மூடத்தனம் கிடையாது. அபத்தமாகப் பேசும் உன் நாக்கை முதலில் அடக்கு! ஆத்திரக்காரருக்குப் புத்தி மட்டு! உனக்குப் பின்னால் நிற்கும் நபர் யாரென்று சற்று திரும்பிப் பார்! [தண்டனையைச் செய்து முடிக்கும் அரச தண்டிப்பு அதிகாரியைக் காட்டுகிறார்]

ஜோன்: [பின்னால் திரும்பிப் பார்த்து] ஓ அவரா ? அவர்தான் என்னைச் சித்திரவதை செய்ய வேண்டு மென்று வாதாடிய உமது கூலிக்காரர்! ஆனால் என்னைச் சித்திரவதை செய்யக் கூடாதென்று பாதிரியார் முன்பே கூறிவிட்டாரே. எந்த நேரமும் சவுக்கும், கையுமாக எதற்காக நடமாடிக் கொண்டிருக்கிறார் ? இங்கே எந்த விலங்கினமும் இல்லை! விலங்கினம் நடமாடும் ரோமாபுரி காலிஸியம் போன்று, பிரெஞ்ச் ரோவான் நகரில் எந்த கேளிக்கை மேடையும் இல்லை!

லாட்வெனு: அது சரி! உன்னை சித்திரவதை செய்ய மாட்டான் அவன் இன்று. ஆனால் அவனுக்கு வேறொரு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. [தண்டிப்பு மனிதனைப் பார்த்து] நான் உன்னைக் கேட்கப் போகும் வினாவையும், நீ சொல்லப் போகும் பதிலையும் ஜோன் கேட்கட்டும்! இப்போது நீ தயாரா ? இன்று நீ கொண்டாடப் போகும் தீவட்டிக் கம்ப விழாவுக்கு எல்லாம் தயாராக உள்ளனவா ?

தீவட்டிக் காவலன்: ஆம் பிரபு. எல்லாம் தயார்.

****

‘கடவுள் என் மீது கனிவுடன் உள்ளாரா என்று என்னைக் கேட்கிறீர். எனக்குக் அவ்விதம் இல்லா விட்டால், கடவுளின் பரிவு என்மீது படியட்டும் இப்போது. அவ்விதம் இருக்குமே யானால், கடவுளின் பரிவு என் மீது என்றென்றும் நீடிக்கட்டும். ஆனால் பாபம் புரியும் நிலையில் நான் இருந்தால், கடவுளின் அசரீரிக் குரல் என்னை நோக்கி வருமென்று நீர் நினைக்கிறீரா ? எனக்கு அசரீரிக் குரல் கேட்பதுபோல் மற்றவரும் அக்குரலைக் கேட்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

 

ஆறாம் காட்சி (பாகம்-8)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடு கிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் நடக்கிறது.

லாட்வெனு: அது சரி! உன்னை அவன் சித்திரவதை செய்ய மாட்டான் இன்று. ஆனால் அவனுக்கு வேறொரு வேலை காத்துக் கொண்டி ருக்கிறது. [தண்டிப்பு மனிதனைப் பார்த்து] நான் உன்னைக் கேட்கப் போகும் வினாவையும், நீ சொல்லப் போகும் பதிலையும் ஜோன் கேட்கட்டும்! இப்போது நீ தயாரா ? இன்று நீ கொண்டாடப் போகும் தீவட்டிக் கம்ப விழாவுக்கு எல்லாம் தயாராக உள்ளனவா ?

தீவட்டிக் காவலன்: ஆம் பிரபு. எல்லாம் தயார். நடுக்கடைத் தெருவில் ஆங்கிலேயர் மிக உயரமாக மேடையைக் கட்டி, எனக்குச் சிரமத்தைக் கொடுத்து விட்டார். நானோ குட்டை! நான் அருகில் நின்று ஆறுதல் கூறி ஜோன் மரணத்தைச் சுமுகமாக்க முடியாதபடி, மேடை என் உயரத்தை மீறி விட்டது. என்ன செய்வது ? ஜோனின் தீ மரணம் மிகக் கொடுமையாக, கோரமாகத்தான் இருக்கப் போகிறது!

ஜோன்: [பயந்து மிரட்சியுடன்] இப்போதே என்னை நெருப்பின் கொடும் பசிக்கு இரையாக்கப் போகிறீர்களா ? இன்னும் என் குற்றமே நிரூபிக்கப்பட வில்லையே! எதற்காக தீ மேடையின் உயரத்தை, அடிக்கோலால் அளக்கப் போய் விட்டார்! மூளையோடு வடிவமும் குட்டையான இந்த மூர்க்கன் எரிந்து கருகும் பெண்ணின் அருகில் நின்று அவளது காதில் தேனை ஊற்றப் போகிறானா ? மேடை மீது என் பக்கத்தில் பிசாசுபோல் நீ நின்றால், உன்னை எல்லாரின் முன்பாக எட்டி உதைப்பேன்! காரித் துப்புவேன் தெரியுமா!

தண்டிப்பாளி: [சிரித்துக் கொண்டு] பெண்ணே! உன் கைகள், கால்கள் எல்லாம் கயிற்றால் கட்டப் பட்டிருக்கும்! அது தெரியாதா ? ஆனால் உன் வாயை மூட மாட்டோம். நீ காரித் துப்பலாம்! கவலைப் படாதே, நான் முகமூடி போட்டுக் கொள்கிறேன்!

லாட்வெனு: அஞ்சாதே, ஜோன்! இப்போதே உன்னைத் தீக்கம்பத்தில் நாங்கள் ஏற்றப் போவதில்லை! அந்த கொடும் பாபச் செயலைத் தேவாயத் திருச்சபை செய்யாது! திருச்சபை உன்னை ஆங்கில அதிகாரியிடம் ஒப்புவிக்கும். அதுவும் இப்போதில்லை! நீ மதத் துரோகி என்று நாங்கள் நிரூபிக்க முடிந்தால்தான்! உனது மதத் துரோகத்தை உறுதிப் படுத்துவது என் கடமை!

ஜோன்: [கண்ணீர் கலங்க] நீவீர் சுற்றிச் சுற்றி வழக்காடுவது எனக்குச் சற்றும் புரியவில்லை! அங்கே தீ மேடை கட்டி, தீக்கம்பத்தை நட்டு, விறகுகளை இட்டு, தீவட்டியில் எண்ணை ஊற்றிக் கொண்டு, இங்கே நீதி மன்றத்தில் வழக்காடுவது போல் நாடகம் போடும் உம்மை எனக்குப் புரியவில்லை! கோழி முதலா அல்லது முட்டை முதலா என்று சுற்றி வருவதுபோல் தண்டிப்பு முதலா ? அல்லது நீதித் தீர்ப்பு முதலா ? திருச்சபைத் தூதர்கள் குதிரையை நேர்முகமாக முன்னே செலுத்துவது போல் எனக்குத் தெரியவில்லை! அதற்குப் பதிலாகக் குதிரையை வால் முகமாகச் செலுத்திப் பின்புறத்தே ஓட்டுகிறார்கள்!

லாட்வெனு: [கனிவோடு] மனமுடைய வேண்டாம் ஜோன். திருச்சபை எப்படி இயங்க வேண்டும் நீ கல்வி புகட்டத் தேவை யில்லை! தேவாலயம் பரிவு மிகுந்தது! இப்போதும், எப்போதும் கனிவு நிறைந்தது. உன்னை நீயே காப்பாற்றலாம்! இந்த திருச்சபை நீதி மன்றம் உனக்காக, உன்னைக் காப்பதற்காகக் கூடியுள்ளது. தீக்கம்பம் நிறுத்தப் பட்டாலும், நீ அதில் எரிக்கப் படுவாய் என்று அஞ்ச வேண்டாம். அதிலிருந்து உன்னைக் காப்பவள் நீ! நீ ஒருத்திதான் செய்ய முடியும். நீ பிழைத்துக் கொள்ள வழி இருக்கிறது ஜோன்! அழாதே! ஆறாய்ப் பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொள். உனக்கு அருந்த தண்ணீர் வேண்டுமா ? [காவலன் தண்ணீரைக் குவளையில் தருகிறான்]

ஜோன்: [சற்று நம்பிக்கையுடன்] எனது அசரீரிக் குரல்கள் எனக்கு வாக்களித்துள்ளன, தீக்கம்பத்தில் நான் தீயிக்கு இரையாகக் கூடாதென்று! நான் உறுதியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று புனித தேவதை காதிரைன் கூறியிருக்கிறது.

கெளஸான்: [சினத்துடன்] ஜோன்! ஜோன்! உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டாதா ? உன்னை எரித்துச் சாம்பலாக்க வெளியே ஆங்கிலப் படையினர் கையிலே தீவட்டி ஏந்தி நிற்கிறார். உனது அசரீரிக் குரல்கள் உன்னை ஏமாற்றி இருப்பது இப்போதாவது உன் மூளைக்குத் தெரிகிறதா ?

ஜோன்: திருச்சபைத் திருவாளரே! அப்படிச் சொல்லாதீர்! புனித மாதர் யாரும் அவ்விதம் தப்பிழைக்க மாட்டார் எனக்கு. என்னுயிரின் மீது புனித அணங்குகளுக்கு அக்கரை உள்ளது! அந்த அக்கரை உம்மிடமும் இல்லை! ஆங்கிலப் பேய்ப் படையிடமும் இல்லை! பிழையாகச் சொல்லி ஒருபோதும் அவர் என்னைத் தீயில் தள்ளமாட்டார்.

கெளஸான்: உன்னைப் பிடித்த பிசாசுகள் சொல்லியதைப் புனித அணங்குகள் சொன்னதாகப் பொய் கூறும் குற்றமே உன்னைத் தீக்கம்பத்தில் ஏற்றப் போது மானது! மீண்டும், மீண்டும் அதே புளுகைச் சொல்லிப் புனித அணங்குகளை இழிவு செய்கிறாய்! புனித மாதர்களைக் கனவில் காண்பதாய்ப் புரளி விடுகிறாய்! எந்த நேரமும் கடவுளின் பாதங்களைத் தொழும் எங்கள் கண்களுக்குப் புலப்படாத புனித தேவதை, எப்படி உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறது ? நீ என்ன கடவுள் புவிக்கு அனுப்பிய தூதுப் பெண்ணா ? சொல்!

ஜோன்: [சிரிக்கிறாள்] கடவுள் எனக்குப் பொய்யுரைத் திருந்தால், ஆர்லியன்ஸ் கோட்டையை என் தலைமையில் நமது படைகள் பிடித்திருக்க முடியுமா ? பிசாசு எனக்குப் புளுகுகளைக் கூறி யிருந்தால், நமது சார்லஸ் மன்னருக்கு மகுடம் சூட்டி யிருக்க முடியுமா ? கள்ளமற்ற உள்ளத்தின் கண்களுக்குத்தான் கடவுளின் காட்சி கிடைக்கும். கண்கள் இருப்பினும், காணும் திறமை யற்றவை உமது கண்கள்! காதுகள் இருப்பினும் அசரீரிக் குரல் கேட்கும் கூர்மை அற்றவை உமது காதுகள்! உங்கள் கண்கள் குருடானவை! உங்கள் காதுகள் செவிடானவை! [சிரிக்கிறாள்]

கெளஸான்: [கோபத்துடன்] போதும் நிறுத்து உன் சிரிப்பை! படிப்பில்லாத நீ எங்களைப் பழித்துச் சொல்கிறாயா ? புனித பைபிளை மூளைக்குள் பதித்துள்ள எங்களுக்குக் கடவுளைப் பற்றி கல்வி புகட்டுகிறாயா ?

திருச்சவை வழக்கறிஞர்: புனித அணங்குகள் உன்னுடன் பேசுவதை நீ நிரூபிக்க வேண்டும்! இதுவரை நாங்கள் அதை நம்ப வில்லை! நீ எந்த வயதில் இருக்கும் போது, முதல் அசரீரிக் குரலைக் கேட்டாய் ?

ஜோன்: வயது பதிமூன்றாக இருந்த போது, கடவுளின் முதல் குரலைக் கேட்டேன். அது எனக்கு வழிகாட்டி உதவி செய்தது. முதலில் கேட்ட சமயம், நான் மிகவும் மிரண்டுபோய் விட்டேன். அப்போது நடுப்பகல் நேரம்! அதுவும் வேனிற் காலம். குரல் கேட்டது எங்கள் வீட்டுப் பூங்காவில். அசரீரிக் குரல் பக்கத்தில் இருந்த ஆலயத்திலிருந்து எழும்பியது! குரல் வரும் திக்கிலிருந்து ஒரு பேரொளி என்மீது பாய்ந்தது! அசரீரிக் குரல் வரும் போதெல்லாம், அந்த பேரொளி வானிலிருந்து என்னை நோக்கி வீசியது!

வழக்கறிஞர்: கடைசியாகக் கேட்ட குரல் வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன ?

ஜோன்: [சிரிக்கிறாள்] எத்தனை நாட்களா ? இன்று கூடக் கேட்டது குரல்! நேற்றும் வந்தது குரல்! ஏன் அப்படிக் கேட்டார் ? கடவுள் என்னைக் கைவிட்டு ஓடி விட்டார் என்று நினைக்கிறீரா ? மனிதர்தான் பகைவர் நடுவே என்னை விட்டு விட்டு ஓடினார்! அதுவும் பண முடிப்பைக் பெற்றுக் கொண்டு நம் நாட்டு பர்கண்டி மனிதர்தான் என்னைப் பிடித்து ஆங்கில மூர்க்கருக்கு அடிமையாக விற்றார்கள்!

வழக்கறிஞர்: நேற்று என்ன செய்து கொண்டிருந்தாய், அசரீரிக் குரல் வரும் போது ?

ஜோன்: குரல் வந்தது, அதிகாலையில். அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அசரீரிக் குரல் என்னை எழுப்பி விட்டது. திடுக்கிட்டு நான் எழுந்தேன். குரலைக் கேட்டேன்.

வழக்கறிஞர்: எப்படி குரல் உன்னை எழுப்பியது ? உன் உடலைத் தொட்டு உன்னை எழுப்பியதா குரல் ?

ஜோன்: இல்லை, இல்லை. என் கரத்தைத் தொடாமல்தான் அது என்னை எழுப்பியது .

வழக்கறிஞர்: அந்த நிகழ்ச்சி நடந்தது உனது அறையிலா ?

ஜோன்: இல்லை! என்னை விலங்குபோல் கட்டிப் போட்டிருந்த மிருகக் கோட்டையில்.

வழக்கறிஞர்: அசரீரிக்கு நன்றி தெரிவித்தாயா ? மண்டிக் காலிட்டு ஒளி மயத்தை வணங்கி நின்றாயா ? கடவுள் கூறும் கட்டளைகளில் முரண்பாடுகள் உள்ளனவா ?

ஜோன்: நன்றி நான் கட்டிலின் மீது அமர்ந்திருந்தேன். இல்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஆணைகள் இதுவரை அசரீரி வாயிலிருந்து வந்ததில்லை. கைகூப்பிக் காப்பாற்றும்படிக் கடவுளிடம் நேற்று மன்றாடினேன். அப்போது அசரீரி என்னிடம் என்ன சொல்லியது தெரியுமா ? ‘அஞ்சாமல் நெஞ்சழுத்தமுடன் பதில் கொடு. உனக்குக் கடவுள் உதவி செய்வார், ‘ என்று. [கெளஸானைப் பார்த்து] நீங்கள் எனக்கு நீதித் தீர்ப்பு கூறப் போகிறீர்கள். என்ன தண்டனை விதிக்கப் போகிறீர் என்பதைக் கவனமாகச் சிந்தித்துச் செய்யுங்கள். ஏனென்றால் நான் மெய்யாகக் கடவுளின் ஆணையில் இதுவரைப் பணி புரிந்ததால், தவறிழைக்கும் உம்மைக் கடவுள் மிக்க அபாயத்தில் தள்ளப் போகிறார்.

கெளஸான்: [கனிவுடன்] நீ சொல்வது எனக்குப் புரிகிறது ஜோன். நான் சொல்லும் யோசனையைக் கேள். அதை நீ கடைப் பிடித்தால், தீக்கம்பத்தில் எறிக்கப் படாமல் தப்பிக் கொள்ளலாம்.

ஜோன்: [பயந்துபோய் ஆர்வமாக] எங்கே, உங்கள் யோசனையைச் சொல்லுங்கள். தீயில் நீராட எனக்குத் தைரியம் இல்லை! ஒரு மூடன்தான் தீக்கம்பத்துக்கு ஏறத் துணிவான். நான் வாழ விரும்புகிறேன். என்னை வாழ விடுங்கள், ஆதிக்க ஆலயத் தூதர்களே! என் பணிகள் இன்னும் முடிய வில்லை! கடவுளின் கட்டளையை நான் முடிக்க எனக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்.

லாட்வெனு: ஜோன்! உன் உயிரின் மீது உனக்கு இத்தனைப் பாசம் இருக்கிறதா ? கடவுளைப் போற்று. கடைசி வேளையில் உனக்கு உதவி கிடைக்கிறது. திருச்சபைத் திருவாளர் சொல்லும் யோசனையைக் கேள்! அதைக் கேட்டு அதன்படி நடந்து, பொன்னான உன்னுயிரைத் தீயிக்கு இரையாக்காமல் பார்த்துக் கொள்! அகந்தையை விட்டுப் பணிவோடு வாழ்.

ஜோன்: [பதட்டமுடன்] நான் என்ன செய்ய வேண்டும் ? சொல்லுங்கள், திருச்சபைத் தூதரே!

கெளஸான்: மதத்துரோக நிகழ்ச்சிகளில் நீ இதுவரை ஈடுபட்டது தவறு என்றும், இனிமேலும் அவ்வித நிகழ்சிகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் ஒரு வாக்குமூலத்தில் எழுதி நீ கையெழுத்திட வேண்டும், நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா ஜோன்.

ஜோன்: [வருத்தமுடன்] ஆனால் எனக்குக் கையெழுத்திடத் தெரியாதே, திருச்சபைத் தேவரே! பள்ளிக்குச் செல்லாதவள் நான். படிப்பு வாசம் இல்லாதவள் நான்! பள்ளிக்குப் போக வேண்டிய என்னைப் பிரான்ஸைக் காப்பாற்றத் தள்ளிக் கொண்டு வந்தவர் புனித அணங்குகள்!

வழக்கறிஞர்: இப்போதாவது உனக்குப் புத்தி வந்ததே! மிக்க நல்லது! உன்னைத் தவறான பாதையில் இழுத்து வந்தது, புனித அணங்கில்லை ஜோன்! அவை உன்னைப் பிடித்த பேய், பிசாசுகள்! அதுசரி, ஆர்லியன்ஸ் கோட்டைப் போரைத் துவங்குவதற்கு முன்பு, ஆங்கிலத் தளபதிக்கு நீ எப்படி எழுதிக் கையொப்ப மிட்ட கடிதத்தை அனுப்பினாய் ?

ஜோன்: [சிரித்துக் கொண்டு] படித்த மாதை நான் பணிக்கு வைத்திருந்தேன்! கடிதத்தை எழுதியது எனது துணை மாது. என் கையை அசைத்துக் கையெழுத்தை இடச் செய்ததும் அவளே!

வழக்கறிஞர்: கவலை வேண்டாம். அவ்விதமே இந்த பாபத்தீர்ப்பு வாக்குமூலத்திலும் கையொப்பமிடு ஜோன்.

ஆங்கிலப் பாதிரி: [மிகுந்த கோபத்துடன் எழுத்து உரத்த குரலில்] நிறுத்துங்கள் உங்கள் பரிவுப் பணிகளை! இவள் ஒரு மந்திரக்காரி! அங்கே இவளைத் தீக்கம்பத்தில் எறிக்க ஆங்கில அதிகாரிகள் தயாராக இருக்கும் போது, இங்கே இந்த சூனியக்காரி தப்பிச் செல்ல நீவீர் வழியா காட்டுகிறீர் ? பர்கண்டிப் படையிடம் பணமுடிப்பைக் கொடுத்து இவளை வாங்கியவர் நாங்கள்! நீங்கள் இல்லை! இப்படி நடக்கும் என்று எமக்குத் தெரிந்திருந்தால், யாம் இவளைத் திருச்சபை நீதி மன்றத்திடம் விட்டிருக்க மாட்டோம்.

கெளஸான்: [சட்டெங் குறுக்கிட்டு] அமருங்கள் ஆங்கிலப் பாதிரியாரே! திருச்சபை சட்டத்தின்படி நாங்கள் நெறியுடன் வழக்காடிச் செல்கிறோம். உமது ஆங்கில விதிகளுக்கு இங்கு மதிப்பில்லை. எங்கள் ஆலய நீதிப் போக்கைக் குறை கூறவோ அல்லது கட்டுப்படுத்தவோ உங்களுக்கு உரிமை இல்லை!

ஆங்கிலப் பாதிரி: [அலறிக் கொண்டு] பிரெஞ்ச் மனிதரிடம் எந்த நியதியு மில்லை! நேர்மையு மில்லை. யாரும் அவரை நம்பி எதையும் தரக் கூடாது. குற்றவாளி பிழைத்துக் கொள்ள வழிசெய்யும் அத்தனை பிரெஞ்சுக்காரரும் நம்பிக்கைத் துரோகிகள். நெறி கெட்ட நீதிபதிகள்!

[ஆறாம் காட்சி பாகம்-9]

 

‘ஆங்கிலேயர் எனக்கு மரண தண்டனை விதிப்பார் என்பதை நன்கு அறிவேன் நான். ஏனெனில் நான் இறந்த பிறகு, அவர்கள் பிரான்ஸ் அரசாங்கத்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று மனக் கோட்டை கட்டுகிறார்கள். இப்போது இருக்கும் ஆங்கிலத் தளபதிகளை விட அதிகமாய்த் தளபதி கார்டன் போல் ஆயிரம் பேர் போரைத் தொடர்ந்தாலும், பிரெஞ்ச் அரசைக் கவிழ்த்த முடியாது. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

கெளஸான்: [சட்டெனக் குறுக்கிட்டு] அமருங்கள் ஆங்கிலப் பாதிரியாரே! திருச்சபை சட்டத்தின்படி நாங்கள் நெறியுடன் முறையாக வழக்காடிச் செல்கிறோம். உமது ஆங்கில விதிகளுக்கு யாமிங்கு மதிப்பு அளிப்பதில்லை. எங்கள் ஆலய நீதிப் போக்கைக் குறை கூறவோ அல்லது கட்டுப்படுத்தவோ உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! பணிப்பெண் ஜோனுக்குப் பிரெஞ்ச் தேவாலயத் தீர்ப்பை அளிக்குமாறு, எம்மை வேண்டிக் கொண்டது, உமது மதிப்புக்குரிய வார்விக் கோமகனார்! உங்கள் தீர்ப்பை யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!

ஆங்கிலப் பாதிரி: [உட்காராமல் அலறிக் கொண்டு] பிரெஞ்ச் மனிதரிடம் எந்த நெறியு மில்லை! துளியளவு நேர்மையு மில்லை. யாரும் அவரை நம்பி எதையும் தரக் கூடாது. குற்றவாளி பிழைத்துக் கொள்ள வழிசெய்யும் அத்தனை பிரெஞ்சுக்காரரும் நம்பிக்கைத் துரோகிகள். நியாயம் கெட்ட நீதிபதிகள்! இங்கு நடக்கும் நாடகத்தைப் பார்த்தால், பண முடிப்பளித்த எங்கள் வார்விக் கோமகனாருக்கு மூச்சு நின்று போகும்! வெளியே வாசலில் என்னூறு ஆங்கிலப் படையினர் இந்த பயங்கரச் சூன்யக்காரி முடியைப் பிடித்திழுத்துச் சென்று, தீக்கம்பத்தில் நிறுத்த தயாராக நின்று கொண்டிருக்கிறார்! அந்த பிடியிலிருத்து இவளை பிரெஞ்ச் தேவாலயமோ அல்லது உங்கள் திருச்சபைத் தேவர்களோ காப்பாற்ற முடியாது! ஏன் பணிமங்கை தினமும் உரையாடும் புனித தேவதைகள் கூட அவளைப் பாதுகாக்க முடியாது! துரோகிகளே ஒரு தண்டனைத் துரோகியைக் காப்பாற்றத் துணிகிறார்!

நடுநிலை ஆய்வாளர்: [தமக்குள் மெதுவாக] இதென்ன நீர்க் குவளைக் குள்ளே ஓர் அக்கப்போர் ? இப்போது யார் யாருக்கு நீதி வழங்கிறார் ? ஆங்கிலப் பாதிரியின் நாக்கு சற்று நீளம்தான்! குறுக்கே விழுந்து நமது தேவர் கெளஸானைக் கீழே தள்ளப் போகிறார்! அந்த உத்தமரைத் துரோகி என்று எல்லோரது முன்பிலும் திட்டி விட்டார்! பித்துப் பிடித்த பாதிரி தத்துப் பித்தென்று மற்றவர் சித்தத்தையும் கலக்குகிறார்! கொஞ்சம் குடித்துப் போதையில் இருக்கிறாரா ? பிரெஞ்ச் நபரை எல்லாம் நம்பாதே என்பதைக் கேட்டாரா ? இதைத் தாங்கிக் கொண்டு எப்படி நாமெல்லாம் வேடிக்கை பார்க்கிறோம் ? ஆங்கிலப் பாதிரிகள் இப்படித்தான் ஆங்கார வேங்கையாய்ப் பிறர்மேல் பாய்வாரோ ?

திருச்சபை வழக்காளி: [எழுந்து நின்று] அமைதி! அமைதி! அரவம் மிகையாகி விட்டது. … [ஆங்கிலப் பாதிரியைப் பார்த்து] மேன்மை மிகு பாதிரியாரே! தயவு செய்து அமருங்கள்! நீதி மன்றம் நடக்க வேண்டும். உட்காருங்கள்!

ஆங்கிலப் பாதிரி: [கைகளைக் கட்டிக் கொண்டு] உட்கார மறுக்கிறேன் நான்! இங்கு துரோகிகள் பெருத்து விட்டார்! என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எனக்குப் பேச்சுரிமை இல்லை என்று சொல்ல இந்த கெளஸான் யார் ?

கெளஸான்: திருச்சபை வழக்காளரே! இந்த ஆங்கிலப் பாதிரி என்னைத் துரோகி என்று நேராகவே திட்டியவர்! இது பொறுப்பில்லாத பண்பு. எமது திருக்கோயில் தளத்தில் நின்று கொண்டு எம்மைத் துரோகி என்று வசை பாடியது ஒரு மன்னிக்க முடியாத பாபம்! நமது தேவாதி தேவன்தான் இந்த பாப ஆத்மாவை மன்னிக்க வேண்டும்.

ஆங்கிலப் பாதிரி: [மிக்க சினத்துடன்] யாரைப் பார்த்துப் பாபி என்று சொன்னீர் ? நான் பாபி அல்லன். நீவீர் பாபி! மேலும் துரோகி! [எல்லோரையும் பார்த்து] நீங்கள் யாவரும் பாபிகள்! துரோகிகள்! பாபம் செய்த ஒரு படிப்பில்லா சூனியக்காரியைப் பாதுகாக்க முயலும் மகா பாபிகள் நீங்கள்! ஆங்கில அரசாங்கத்தைப் பிரான்ஸில் ஒழிக்கப் பிறந்திருக்கும் ஒரு மந்திரக்காரிக்குப் பரிவு காட்டும் மகா பாபிகள் நீங்கள்! திருச்சபைத் தூதர்கள் என்று சொல்லிக் கொண்டு, பாபத்தீர்ப்புக்குப் பரிவு காட்டி இந்த மூட நங்கையின் முன்பு மண்டியிட்டுப் பிச்சை எடுக்கிறீர்.

திருச்சபை வழக்காளி: [நாடியில் கைவைத்து] உட்கார உமக்கு விருப்பம் இல்லையேல், நீ நின்று கொண்டு இருப்பதே நல்லது! அது உமது விருப்பம்!

ஆங்கிலப் பாதிரி: [விரைப்பாக] நான் நிற்கவும் மாட்டேன். [சட்டென அமர்கிறார். பலர் கொல்லெனச் சிரிக்கிறார்கள்] நிற்கும் போது என்மேல் பரிவு காட்டாமல் இப்போது நான் அமர்ந்தவுடன் ஏன் சிரிக்கிறீர் ? உமது வழக்காளி சொற்படி நான் நடக்கப் போவதில்லை! உமது வழக்காளி என்ன சொல்கிறாரோ, அதற்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாகச் செய்வேன்.

நடுநிலை ஆய்வாளர் ஒருவர்: [தமக்குள் சிரித்துக் கொண்டு] பாதிரியார் கடினமான கொட்டையாகத் தெரிகிறது! நல்ல கிறுக்கு!

நடுநிலை ஆய்வாளர் இரண்டாமவர்: இது கொட்டை இல்லை! முட்டை! அதுவும் ஒரு கூமுட்டை! எந்த மன்னரும் ஒட்டிச் சேர்க்க முடியது, இந்த கூமுட்டை கீழே விழுந்தால்! [சிரிக்கிறார்கள்]

லாட்வெனு: [எழுதிய தாளைக் கையில் ஏந்திக் கெளஸானை நெருங்கி] தேவ தூதரே! இதோ! ஜோன் கையெழுத்திடும் வாக்குமூலம் தயாராகி விட்டது! … பார்க்க விரும்புகிறீரா ?

கெளஸான்: [ஆர்வமுடன்] நீயே பணிமங்கைக்கு வாசித்துக் காட்டு! புரியும்படி மெதுவாகப் படி! புரியா விட்டால், அவளுக்கு விளக்கமாகச் சொல்!

லாட்வெனு: கேள் ஜோன்! வாசிக்கிறேன் உன் வாக்குமூலத்தை. [வாசிக்கத் துவங்குகிறார்]

ஜோன்: வாசிக்க வேண்டாம்! கொண்டு வாருங்கள், நான் கையெழுத்தைப் போடுகிறேன்.

திருச்சபை வழக்காளி: பெண்ணே! கையெழுத்திடும் முன்பு நீ எதற்கு மனம் ஒப்பிச் செய்கிறாய் என்பது உனக்குத் தெரிய வேண்டும்! கண்ணை மூடிக் கொண்டு நீ கையெழுத்திடுவது சட்டப்படித் தவறு! வாசித்துக் காட்டுங்கள் ஜோனுக்கு! [சபையோரைப் பார்த்து] அமைதி! அமைதி! நீங்களும் ஜோன் வாக்குமூலத்தின் சாரத்தை அறிய வேண்டும்.

லாட்வெனு: [அழுத்தமாகப் படிக்கிறார்] ஜோன் எனப்படும் நான் …. [அப்போது திடாரெனப் பின்புறமிருந்து ஆங்கிலப் பாதிரி ஓடி வந்து, படிக்கும் தாளைப் பிடுங்கித் துண்டுகளாய்க் கிழித்துப் போடுகிறார்] [லாட்வெனு பதறிப் போய்] இவரைப் பிடியுங்கள், பிடியுங்கள். [காவலர் ஓடி வருகிறார்கள். மன்றத்தில் பலர் எழுந்து பலத்த ஆரவாரம் எழுகிறது].

கெளஸான்: [கோபமாக] இந்த மனிதரை வெளியே தள்ளிக் கதவைப் பூட்டுங்கள். [காவலர் ஆங்கிலப் பாதிரியாரைப் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். லாட்வெனு இன்னொரு பிரதியை உடனே எழுதுகிறார்]

திருச்சபை வழக்கறிஞர்: [மேஜையைத் தட்டி] அமைதி! அமைதி! எல்லோரும் அமருங்கள்!

லாட்வெனு: [புதிய பிரதி தயார் செய்து மறுபடி வாசிக்கிறார்] … பணிமங்கை ஜோன் என அழைப்படும் நானோர் இரங்கத் தக்க முறையில் பல பாபங்களைச் செய்தவள். மிக்கத் துயர் அளிக்கும் கீழ்க்காணும் பட்டியலில் பாபங்களைச் செய்ததாக நான் ஒப்புக் கொள்கிறேன். கடவுள் புனித அணங்களை என் முன் அனுப்பி அசரீரிக் குரலில் உரையாடியதாகப் பாவனை செய்தேன். தேவாலயம் அந்த கவர்ச்சிக் குரல்களைப் பிசாசுப் பேச்சுகள் என்று எச்சரிக்கை செய்ததை நான், ஏறுமாறாக எதிர்த்து முற்றிலும் புறக்கணித்தேன். திருச்சபை புனித நூலுக்கு எதிராக, தேவாலயத் தூதர் வெறுக்கும் அவமரியாதை யான ஆடையை அணிந்து, பெண்ணுக்குரிய கண்ணிய உடை அணிய மறுத்தேன். மேலும் சொர்க்கத்தில் ஒப்புக் கொள்ளப்படும் நடைமுறைக்கு எதிராக, நான் என் கூந்தலைக் குட்டையாக வெட்டினேன்! படை வீரனைப் போல் வாளேந்தி, அமைதியான பூமியில் போரைக் கிளப்பி விட்டுக் கெட்ட பிசாசுகளே ஏவி விட்டு ஒருவரை ஒருவர் குத்திக் கொல்ல வழி வகுத்துப் பல உயிர்கள் மடிவதற்குக் காரண மானேன். அத்துடன் இந்த பாப வினைகள் அனைத்தையும் கடவுள் மீது போட்டுப் பழி சுமத்தினேன்! நான் இதுவரை எதிர்த்துச் செய்த அரசப் புரட்சி, பிசாசுகளின் மீது கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை, திருச்சபைக்கு அடிபணியாமை, கர்வத்துடன் கீழ்படியாமை, தேவாலய மதத் துரோகம் ஆகிய அத்தனை பாபங்களுக்கும் பாப மன்னிப்புக் கேட்கிறேன். திருச்சபைத் தேவரும், அறிஞரும் எனக்கு நல்வழி காட்டி, நன்னெறி ஊட்டி அறிவு புகட்டியதற்கு நன்றி. அப்பாபங்களை மீண்டும் நான் செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி கூறுகிறேன். நானினிமேல் நமது புனித ஆலயத்துக்கும், ரோமாபுரிப் புனித பிதா போப்பாண்டவருக்கும், என்றென்றும்

கீழ்ப்பணிந்து வாழ்வேன் என்று கடவுள் சாட்சியாக, நமது புனித நூல் சாட்சியாக உறுதி அளிக்கிறேன்.

திருச்சபை வழக்காளி: இவை அனைத்தும் உனக்குப் புரிகிறாதா, ஜோன் ? … புரியா விட்டால், மீண்டும் வாசிக்கப்படும் உனக்காக!

ஜோன்: [அழுத்தமாக] புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது! ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை! உங்கள் வாக்குமூலத்தில் நான் இதுவரை பிரான்ஸில் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை! பத்தொன்பது ஆண்டுகள் உயிரும், உடலுமாய் நான் உலவி வாழ்ந்ததைப் பொய்யென்று உறுதி மொழி அளிக்கச் சொல்கிறீர்! நான் பிறக்காமலே செத்து விட்டேன் என்று உறுதி மொழி அளிக்கச் சொல்கிறீர்! அல்லது நான் செத்தே உலவி வந்தேன் என்று பதிவு செய்யச் சொல்கிறீர்!

திருச்சபை வழக்காளி: ஜோன்! இப்போது இந்த விவாதம் வேண்டாம். பட்டியலில் உள்ளவை யாவும் நீ செய்த பாபங்களாய் ஓப்புக் கொள்கிறாயா ? அவை எல்லாம் உண்மைதானே!

ஜோன்: அவை யாவும் பாபம் என்று நீங்கள் சொல்கிறீர்! அவை எல்லாம் உண்மை யென்று நீங்கள் சொல்கிறீர்! உண்மை அல்ல வென்று நான் சொன்னால், உடனே நடுத்தெருக் கம்பத்தில் எனக்குச் சொக்கப்பனை கொளுத்த உத்தரவு பிறக்கும்! உண்மையைப் பொய் என்பதா, அல்லது பொய்யை உண்மை என்பதா ?

லாட்வெனு: பெண்ணே! அஞ்சாதே! இந்த பாபத்தீர்ப்பு வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு, உன் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொள்! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! உன் உடலைக் காப்பாற்றிக் கொள்! கையெழுத்திட உனக்கு நான் உதவி செய்கிறேன்.

ஜோன்: நான் சற்று சிந்திக்க வேண்டும்! என் மூளையைக் குழப்பி விட்டார்கள்!

****

‘கவர்ச்சியுடன் சுவையாகப் பேசி என் மனதை மாற்றிட நீவீர் மிக்க சிரமம் எடுத்துக் கொள்கிறீர். என் உறுதியான, உண்மையான நம்பிக்கையை உங்கள் கட்டாயத்தின் பேரில் நான் பொய்யென்று ஒப்புக் கொள்வது முறையா வென்று நீங்கள் உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நான் உடன்பட்டு அவ்விதமே அடிபணிகிறேன். தீக் கம்பத்தில் எரிந்து பொசுங்குவதை விட நீங்கள் எழுதிய வாக்குமூலத்தில் கையொப்ப மிடுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். திருச்சபைத் தேவர்களே! வழக்காடல் முடிந்த பின் என்னை உங்கள் சிறைக்கு வேண்டுமானால் இழுத்துச் செல்லுங்கள்! ஆனால் ஆங்கில மூர்க்கர் கையில் மட்டும் என்னைத் தனியே விட்டு விடாதீர்கள். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

ஆறாம் காட்சி (பாகம்-10)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் நடக்கிறது.

லாட்வெனு: பெண்ணே! அஞ்சாதே! இந்த பாபத்தீர்ப்பு வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு, உன் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொள்! உன் உடலைக் காப்பாற்றிக் கொள்! உன் பெயரைக் காப்பாற்றிக் கொள்! உன் ஆத்மா புனிதம் அடைவதை விரும்பினால், தீயில் அது அழிந்து போவதை நீ நிறுத்தலாம்! இளமை பொங்கும் உன் அழகிய உடல் தீக்கிரை ஆவதைத் தடுக்கலாம்! வரலாற்றில் கரி பூசப்படும் உன் பெயரை, நீ நிரந்தர ஒளிவீச மாற்றிக் கொள்ளலாம்! ஜோன்! கையெழுத்திடு. நானுனக்கு உதவி செய்கிறேன்.

ஜோன்: நான் சற்று சிந்திக்க வேண்டும்! என் மூளையைக் குழப்பி விட்டார்கள்! ஏசுநாதரை அந்தக் காலத்தில் சிலுவையில் ஏற்றி அடிக்கும் போது உம்மைப் போன்றுதான் ரோமானியரும், யூதர்களும் நினைத்தார்கள்! சிலுவையில் மரித்த பிறகு, ஏசுநாதரின் ஆறடி நிழல் உலக இடுப்பளவுக்கு நீண்டு விட்டது! வரலாற்றில் அவரை அழிக்க நினைத்தவர் எண்ணத்துக்கு மாறாக, அவரது பெயர் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் நீடித்து விட்டது! காலக் கரையான் அழிக்காது, அவரது பெயர் இன்னும் நிலைத்து நிற்கப் போகிறது! தீ என் ஆத்மாவை அழிக்கலாம்! தீ என் உடலை அழிக்கலாம்! ஆனால் தீ என் பெயரை அழிக்க முடியாது! பிரென்ச் விடுதலைக்காக என்னைப் பிறப்பித்த அன்னை காதிரைன் என் பெயரை அவள் நெஞ்சில் எழுதி வைத்திருக்கிறாள்! பூமிப் பீடத்தில் எரியும் நெருப்பு புனித மாது காதிரையின் நெஞ்சில் நிலைத்த என் பெயரை நீக்க முடியாது! ஆனாலும் பூமியின் நெருப்பு மிகவும் உக்கிரமானது! அதில் வெந்து சாம்பலாக எனக்குப் பயமாக இருக்கிறது! நான் கம்பத்தில் எரிவது நல்லதா ? அல்லது தப்பிக் கொண்டு உயிருடன் திரிவது நல்லதா ? இதற்கு கடவுள் எனக்கு நீதி அளிக்கட்டும்! கொண்டு வாருங்கள் வாக்குமூலத்தை! …. [கண்ணீர் பொங்கிக் கதறி அழுகிறாள்].

[மன்றத்தில் சிலர் மட்டும் மகிழ்ந்து கைதட்டுகிறார்கள். சிலர் ஆரவாரம் செய்து, ‘ஜோனைத் தப்ப விடாதே ‘, என்று கூக்குரல் இடுகிறார்கள்.]

லாட்வெனு: ஜோன்! கடவுள் தனது கனிவுக் கண்களை உனக்குத் திறந்து விட்டார். [பூரிப்படைந்து வாக்குமூலத்தையும், மைக்கலம், தோகைப் பேனாவையும் தூக்கிக் கொண்டு போய் வழக்காளிடம் தருகிறார்] சகோதரர்களே! இது கடவுள் புண்ணியம்! ஜோனுக்கு நல்ல காலம் வருகிறது! மூடிக் கிடந்த அவளது கண்கள் திறந்து விட்டன! ஆடு மந்தைக்கு திரும்பி விட்டது! நமது ஆட்டிடைப் பிரபு இந்த இள நங்கையின் இதயத்தில் இப்போதுதான் புகுந்துள்ளார்! [வழக்காளரைப் பார்த்து] வாக்குமூலத்தை எடுத்துச் செல். ஜோன் கையெழுத்திட உதவி செய்.

வழக்காளர்: [மேஜையில் வாக்குமூலத்தை விரிக்கிறார். காவலர்கள் ஜோனை அழைத்து வருகிறார்]

ஜோன்: நன்றி. நான் எங்கே கையொப்பமிட வேண்டும். காட்டுங்கள்.

[ஜோன் வலது கையைப் பற்றி, வழக்கறிஞர் கையொப்பமிட வைக்கிறார். முடிந்த பின் வாக்குமூலத்தைக் கையில் வாங்கிக் கொள்கிறார். ஜோன் திரும்பிச் சென்று தன் ஆசனத்தில் அமர்கிறாள்.]

வழக்கறிஞர்: [ஜோனைப் பார்த்து] நன்றி ஜோன்! வாக்குமூலத்தில் நீ கையொப்ப மிட்டு, உன்னைக் கையாள எங்கள் திருச்சபைக்கு நீ முழு அதிகாரம் கொடுத்து விட்டாய்! திருச்சபை நெறிப்படி நீ இப்போது எமது ஆலயச் சிறைக்குப் போக வேண்டும். துணிச்சலோடு நீ கடவுளுக்கு எதிராகவும், புனித தேவாலயத்துக்குத் துரோகமாகவும் பல பாபங்களைச் செய்ததால், உன் தவறுக்கு வருந்தி மன்னிப்புப் பெற நீ தனிப்பட்ட ஓர் இருட்டு அறையில் கடுங் காவலுடன் அடைக்கப் பட்டுவாய்! உன் பாபங்களைத் தீர்த்து, உன்னைக் கழுவித் தூய்மைப் படுத்த அவ்விதம் நாங்கள் செய்தால்தான் உனக்குப் பாபத்தீர்ப்பு கிடைக்கும். இன்று உனது கையெழுத்து பாபத்தீர்ப்பின் வாசலைத் திறந்திருக்கிறது. ஆலயக் கடுஞ் சிறையில், துக்க ரொட்டியும், சோகத் தீர்த்தமும் குடித்து, நீ சாகும்வரைக் காலம் தள்ள வேண்டு மென்பதே உனக்கு யாம் விதிக்கும் தண்டனை! இதுவே தேவாலயத் திருச்சபையின் கனிவான, முடிவான தீர்ப்பு உனக்கு!

ஜோன்: [திடாரென எழுந்து கோபமாய்] என்ன ? என்ன ? சாகும்வரைக் கடுஞ்சிறையா ? யாருக்கு ? எனக்கா ? தளபதியாய் முன்னின்று படை நடத்திப் போரிட்டு, பிரான்ஸை விடுவித்துச் சார்லஸ் மன்னருக்கு மகுடம் சூடிய எனக்குத் திருச்சபை அளிக்கும் வெகுமதியா இது ? காய்ந்த ரொட்டியும், கழிவு நீரும் குடித்து அடிமை விலங்காய், நான் சாகும்வரை வாழவா ? நடக்காது அது. உமது இருட்டறைக் குளிரில் நீண்ட காலம் நடுங்குவதை விட, சீக்கிரம் சுகமாய் நெருப்படியின் கதகதப்பில் அழிந்து போகலாம்! நீவீர் எனக்கு விடுதலை அளிப்பீர் என்றல்லவா நான் தெரியாமல் கையொப்ப மிட்டேன்!

லாட்வெனு: [சற்று அதிர்ச்சி யடைந்து] பெண்ணே! நீ கனவு காண்கிறாயா ? இத்தனைப் பாபங்களைப் பண்ணி விட்டு, விடுதலைப் பறவையாய்ப் பறந்துபோய் விடலாம் என்று மனப்பால் குடிக்கிறாயா ? திருச்சபைச் சிறையில் உன்னைத் தள்ளச் சொன்னவள் நீ! ஆங்கில ஆதிக்கவாதிகளிடம் ஒப்புவிக்க வேண்டா மென்று கேட்டுக் கொண்டவள் நீ! அதற்குள் மறந்து விட்டாயே நீ. பாப மன்னிப்புக் கேட்டு நீண்ட காலம் வாழ்ந்து சுகமாகச் சொர்க்க புரிக்கு போக விரும்புகிறாயா ? அல்லது விரைவில் பற்றி எரியும் நெருப்பிலே பாபியாய் நரகத்துக்கு போக விரும்புகிறாயா ?

ஜோன்: [கையை நீட்டி] கொண்டு வாருங்கள் அந்த வாக்குமூலத்தை! கையொப்ப மிட்டது என் தப்பு! மாபெரும் தப்பு! நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை! நீங்களும் என்னைப் புரிந்து கொள்ள வில்லை! கொண்டு வாருங்கள் அந்த வாக்குமூலத்தை! கடவுளின் ஆணைப்படி நான் புரிந்த நாட்டுப் பணிகளை எல்லாம் பொய்யென்று ஒப்பிக் கையொப்ப மிட்டது என் தவறு! மாபெரும் தவறு! என்னரும் உயிரையும், உடலையும் பெரிதாக மதித்துக் கடவுளின் கட்டளை களைத் தாழ்மைப் படுத்தினேன்! கொண்டு வாருங்கள் அந்த வாக்கு மூலத்தை! என் வாழ்வு சிறிது! ஆனால் கடவுளின் வாக்கு பெரிது! என் உயிர் சிறிது! என் உடல் இன்று அழிந்து போகட்டும்! கூன் விழுந்து தலை நரைத்துப் போய் உடல் வாடி அழிய வேண்டாம்! கொண்டு வாருங்கள் அந்த வாக்குமூலத்தை! அதைக் கிழிக்க வேண்டும்! நான் இப்போது சொல்வதுதான் மெய்யானது! என்னிடம் பேசிய அசரீரி மொழிகள் அனைத்தும் உண்மை யானவை. …. தீவட்டியை ஏற்றுங்கள்! சாவுக்குப் பயந்தவள் என்றா என்னை நினைக்கிறீர் ? கொண்டு வாருங்கள் அந்த வாக்குமூலத்தை! நான் கிழித்துப் போடுகிறேன்!

லாட்வெனு: [கெஞ்சலுடன்] ஜோன்! ஜோன்!! ஜோன்!!! நீ மறுபடியும் சிறுமி போல் பேசுகிறாய்! வாலிபக் குமரிபோல் தெளிவாகப் பேசிய நீ, திடாரென்று குழந்தையாக மாறி விட்டாய்! மெய்யான ஜோன் யார் ?

ஜோன்: இப்போது பேசும் குமரிப் பெண்தான் மெய்யான ஜோன்! ஆங்கில மூர்க்கருக்கு அஞ்சாத ஜோன்! உயிருக்குப் பயந்த சிறுமி நானில்லை! உங்கள் கவர்ச்சி வார்த்தையில் மயங்கிய சிறுமி யில்லை! உங்கள் பசப்பு மொழிகளில் மதி இழந்த மங்கை யில்லை! தேவாலயத் திருவாளர் என்று கூறிக் கொண்டு வெள்ளை உடையில் பளபளக்கும் புனித புறாக்களைப் போல் உலவும் உங்கள் உள்ளம் அழுக்கானது! கறை படிந்தது! நெறி யற்றது! நியாய மற்றது! எனக்கு வாழ்வளிப்பதாக நீவீர் வாக்களித்து என்னை ஏமாற்றி விட்டார்! பரிதியின் வெளிச்சம் படாத ஓர் இருட்டறையில் போட்டு வாட்டுவதா எனக்கு வாழ்வளிப்பது ? உமது காய்ந்த ரொட்டிக்கு எனது வயிறு அஞ்சவில்லை! உமது மண்டி நீரால் எனது தொண்டை வரட்சி ஆகப் போவதில்லை! ஆனால் ஜன்னலற்று விண்ணும் மண்ணும் தெரியாமல் எனது கண்களைக் குருடாக்கப் போவதை என்னால் தாங்க முடியாது. காற்றில்லா அறையில் என்னை உருட்டி விட்டு, என் மூச்சை அடைக்கப் போவதை என்னால் ஏற்க முடியாது! கையிலும், காலிலும் இரும்பு வடச் சங்கிலியைக் கட்டி, என்னை முடமாக்கப் போவதை என்னால் பொறுக்க முடியாது! அதற்குப் பிறகு நான் குதிரையில் சென்று, மலை மீது ஏற முடியாது! படை வீரருடன் இணைந்து என்றும் போரிட முடியது! சிறைக் கதவை இறுக்கி மூடி என் காதுகளை அடைத்து, கடவுளின் அசரீரியைக் கேட்க முடியாமல், ஆலய மணியோசை காதில் விழாமல் செய்யும் கொடுமையை எதிர்க்க முடியாமல் இருக்க முடியாது! கதிரவன் ஒளி, காற்றோட்டம் இல்லாமல் என்னால் வாழ முடியாது. கால்கட்டு, கைக்கட்டுடன் நகர முடியாமல் முடமாய்ப் போவேன். குறைந்த பட்ச மனிதத் தேவைஙை¢ கூட அபகரிக்கச் சொல்லும் உங்கள் கோண புத்திதான் மெய்யாகப் பிசாசுகளிடம் இருந்து வந்திருக்க வேண்டும். கடவுளிடமிருந்து வந்த எனது அசரீரியின் ஆலோசனைகள் அனைத்தும் புனிதமானவை! மனிதத் தன்மையில் உதயமானவை.

தி எஸ்டிவெட்: [ஆரவாரமோடு அலறி] ஐயோ! ஐயோ! கடவுளே! மறுபடியும் பிசாசு ஜோனின் முதுகில் ஏறிவிட்டது! அவள் அடங்கா பிடாரி ஆகிவிட்டாள் ! அவள் பிடிவாதக்காரி, கர்வக்காரி, சூனியக்காரி ஆக மாறிவிட்டாள். நாம் கூறிய ஆலோசனைகளைப் பிசாசு சொன்னதாகச் சொல்லிக் கேலி செய்கிறாள். கிறுக்குப் பிடித்துள்ள இந்த பெண்ணுக்கு யாரும் இரக்கம் காட்ட வேண்டாம். அதற்கு அவள் தகுதி யற்றவள். கனிவாகப் பேசி அவள் மனதை யாரும் மாற்ற முடியாது. கம்பத்தில் அவளைக் கட்டி தீயை மூட்டுங்கள்!

ஆங்கிலப் பாதிரி: [வெளியே இருந்து ஓடி வந்து] ஆம், தீயை மூட்டுங்கள்! இதைத்தான் உமக்கு நான் முன்பே சொல்லி எச்சரித்தது! இப்போதாவது உமக்குப் புத்தி வந்ததே! ஏன் தாமதிக்கிறீர் ? இழுத்துச் செல்லுங்கள் வெளியே. கம்பம் அவளுக்காகக் காத்திருக்கிறது!

****

[ஆறாம் காட்சி பாகம்-11]

 

‘அந்தோ! இப்படி இரக்கமற்ற முறையில் கொடூரமாகவா, கோரமாகவா என்னை நீவீர் நடத்துவது ? தூய்மையான என்னுடல், முழுமையான என்னுடல், தீயக் கவர்ச்சி சக்திகளால் தீண்டப்படாத என்னுடல் உயிரோடு எரிக்கப்பட்டு, இன்றைய தினத்தில் தீயிக்கு இரையாகிச் சாம்பலாகப் போகிறது! இப்படி என்னை எரிப்பதற்கு பதிலாக, என் தலையை ஆறுதரம் வேண்டுமானாலும் வாளால் அறுத்து வீசுவதை நான் சகித்துக் கொள்வேன். … எனது உடலுக்கும், உயிருக்கும் நீவீர் விளைவிக்கும் படு காயங்களுக்கு எல்லாம் பரிவு கேட்டு, மகா நீதிபதியான கடவுளிடம் நான் முறையிடுகிறேன். … (கெளஸான்) பாதிரியாரே! உம்மால்தான் நான் இப்போது உயிரிழக்க நேரிடுகிறது. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘நெறியுள்ள இரவின் மீது இரக்கமும்

சிறிது பரிவும் கொள்வதைத் தவிர்த்திடு!

கோபம் பொங்கி அதனை எதிர்த்திடு!

தீபம் மங்கும் ஒளிவிளக்கை அணைத்திடு!

டைலான் தாமஸ்

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். அவளுக்கு விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகிறது.

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதிகளும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்கமான உரையைத் தொடர்ந்து கூறிய பின்பு, வழக்கு மன்றம் நடக்கிறது.

தி எஸ்டிவெட்: [ஆரவாரமோடு அலறி] அந்தோ! கடவுளே! மறுபடியும் பிசாசு ஜோனின் முதுகில் ஏறிவிட்டது! அவள் அடங்காப் பிடாரி ஆகிவிட்டாள் ! பிடிவாதக்காரி, கர்வக்காரி, சூனியக்காரி ஆக மாறிவிட்டாள். நாம் கூறிய ஆலோசனைகளைப் பிசாசு சொன்னதாகச் சொல்லி நம்மைக் கேலி செய்கிறாள். கிறுக்குப் பிடித்துள்ள இந்த பெண்ணுக்கு யாரும் இரக்கம் காட்ட வேண்டாம். அதற்கு அவள் தகுதி யற்றவள். கனிவாகப் பேசி அவள் மனதை யாரும் மாற்ற முடியாது. தெருக் கம்ப மேடைக்கு அவளை ஏற்றிச் செல்லுங்கள். கம்பத்தில் அவளைக் கட்டுங்கள்! தீயை மூட்டுங்கள்!

ஆங்கிலப் பாதிரி: [வெளியே இருந்து வேகமாய் வந்து] ஆம், தீயை மூட்டுங்கள்! இதைத்தான் உமக்கு யாம் முன்பே சொல்லி எச்சரித்தது! இப்போதாவது உமக்குப் புத்தி வந்ததே! ஏன் தாமதிக்கிறீர் ? அவளை இழுத்துச் செல்லுங்கள் வெளியே. கம்பம் அவளுக்குக் காத்திருக்கிறது! விறகுகள் மலையாக குவிக்கப் பட்டுள்ளன! ஏன், நிற்கிறீர் ? இழுத்துப் போங்கள் அவளை!

லாட்வெனு: [ஜோனைப் பார்த்து] மதி கெட்ட மங்கையே! நெறி யற்ற நங்கையே! எங்கே உன் கடவுள் ? எங்கே உன் புனித காதிரைன் ? அறிவுரை ஊட்டிய உன் காப்பு அசரீரிக் குரல்கள் எங்கே ? உன் கடவுள் இப்போதல்லவா உன்னைக் காக்க வரவேண்டும்! கூப்பிடு உன் கடவுளை! அல்லது அழைத்திடு உன் பிசாசுக் கூட்டத்தை! அவர்கள் வந்து உன்னைக் காக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். ஜோன் அழாதே! இப்போது நீ அழுதாலும், தொழுதாலும் உன் தெய்வங்கள் உன்னைக் காத்திட மாட்டா!

ஜோன்: [கண்ணீர் சிந்திக் கொண்டு] கடவுள் உதவும் வழிமுறைகள் உமது விதிகளைப் பின்பற்றி வருபவை அல்ல! சிலுவையில் அறையப் பட்டு ஏசுநாதர் சொர்க்க புரிக்கு ஏகியது போல், தீயின் மூலம் வெந்து, நான் தேவன் நெஞ்சத்தை அடைய வேண்டுமென நியதியாக உள்ளது! நான் அவரது குழந்தை. இந்த மண்ணில் நான் வாழ்ந்து பணிபுரியத் தேவை யில்லை என்று என்னை மேலுலகுக்கு அனுப்ப விரும்புகிறீர். உங்கள் மத்தியில் நான் வாழ நீவீர் அனைவரும் தகுதி இல்லாதவர்! காட்டு விலங்குகளுடன் பயந்து பயந்து வாழ்வது போன்ற இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ? கடவுளை நினைக்காதே என்று என் இதயத்தைக் கட்டிப் போடும் ஒரு மூடச் சமூகமும் மானிடச் சமூக மாகுமா ? அன்னியரை பிறந்த நாட்டிலிருந்து விரட்டாதே என்று எனக்குத் தடைபோடும் ஓர் அதிகார வர்க்கமும் அரசாளும் வர்க்கமா ? சொந்த பூமியான இந்த பூமியில் எனக்குப் பந்த பாச நண்பர் யாரும் இல்லை. பழிவாங்கும் பகைவர் நாடாகப் போனது! என் தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவும் இந்த தேசத்திலே, இரக்கமற்ற, பாசமற்ற பிசாசுகள் பெருத்தன! இனி நான் இங்கு வாழ்வதில் எனக்கும் பயனில்லை! நாட்டுக்கும் பலனில்லை! … நான் தயார் தீக் கம்பத்தில் ஏறிட! [ஜோன் கோவெனக் கதறி அழுகிறாள்]

[காவலர் அவளைச் சங்கிலியில் பிடித்துக் கடத்திச் செல்கிறார்கள். மன்றத்தில் அரவமும் ஆரவாரமும் பெருகுகிறது.]

கெளஸான்: [வேகமாய் எழுந்து] நில்லுங்கள்! சற்று பொறுங்கள்! இன்னும் முறையாக நாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் சில உள்ளன.

[காவலர் போவதை நிறுத்திப் பொறுத்து நிற்கிறார். மன்றத்தில் அமைதி நிலவுகிறது. கெளஸானும், ஆலய வழக்கறிஞரும் குசுகுசு வென்று ஏதோ பேசிக் கொள்கிறார்கள்.]

கெளஸான்: அமைதி! அமைதி! [காவலரைப் பார்த்து] முதலில் தேவாலயத்தின் தீர்ப்பை யாம் முடிவாகக் கூற வேண்டும். ஜோனைத் தண்டிப்பது எமது பொறுப்பல்ல! நாங்கள் தீர்ப்பை மட்டும் கூறி, வார்விக் கோமகனார் கைவசம் ஜோனை ஒப்புவிக்க வேண்டும். [ஜோனை நோக்கி] திருச்சபை திருவாளர் கூறும் தீர்ப்பு இதுதான்: ஜோன்! நீ ஒரு தீவிர திருச்சபைத் துரோகி என்று தேவாலயம் உனக்குத் தீர்ப்பளிக்கிறது!

வழக்கறிஞர்: ஆம், ஆம் ஜோன்! ரோமாபுரிப் புனித ஆலயத்தின் கனிவான தீர்ப்பு இதுதான்! இதைக் கிறித்துவ வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டும். இது ஒன்றும் கடுமையான தீர்ப்பில்லை! திருச்சபை உறுப்பினர் அனைவரும் ஏகோபித்து வழங்கித் தேவனால் ஆசீர்வதிக்கப் பட்ட தீர்ப்பிது! ஜோன் அழாதே! நீயாகத் தேடிக் கொண்ட நீதி இது! நீயே வேண்டிக் கொண்ட நீதி இது! இந்த ஒரு தீர்ப்பை நிறைவேற்றுவதால் தேவாலயத் தேவன் பூரிப்படைகிறார்! ரோமாபுரிப் போப்பாண்டவர் மகிழ்ச்சி அடைகிறார்! திருச்சபை உறப்பினர் அனைவரும் உவகை அடைகிறார்! முதலில் ஜோனைப் பிடித்துக் கொண்டு வந்த பர்கண்டி படைவீரர்கள் இன்பமடைகிறார். இறுதியாக நிதி கொடுத்து ஜோனை வாங்கிய ஆங்கில வர்க்கத்தார் ஆனந்தம் அடைகிறார்.

கெளஸான்: ஜோன் உடலிருந்து உயிர் பிரிக்கப்பட வேண்டும் என்று திருச்சபை பாப மன்னிப்புக்காக எதிர்பார்க்கிறது! ஆனால் தேவாலயம் அக்கொடும் தண்டனையை இந்த புனித மண்டபத்திலே இன்று விதிக்காது! தண்டனை கொடுப்பது எமது மரபன்று!

வழக்கறிஞர்: சபையோர்களே! கேளுங்கள்! ஜோனின் ஆத்மா பிசாசுகளால் உலுத்துப் போய் உள்ளது! அவளது உடலை துரோகத் தொழுநோய் பீடித்திருக்கிறது. அந்த நோய் குணமடையாது. ஆனால் ஆத்மாவைத் திருச்சபை தூய்மை ஆக்கும், பாபத் தீர்வு அளித்து! ஆனால் இன்று அதையும் யாம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்! செய்ய முயன்று உங்கள் முன்பு யாம் தோற்றோம்!

கெளஸான்: ஜோன், ஒரு கேடு கெட்ட சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவள்! ஆகவே அவள் இனிமேல் தேவாலயத்துள் நுழையத் தகுதியும், தரமும் அற்றவள்! அவள் கிறித்துவ ஆலயங்களில் ஏசு நாதரைத் துதிக்க இனிமேல் அனுமதி கிடையாது! காதிரைன், மார்கரரெட் போன்ற புனித அணங்குகளை வணங்கவோ, அவரது வார்த்தைகளைக் கேட்கவோ அவளுக்கு இனிமேல் அனுமதி யில்லை!

வழக்கறிஞர்: ஜோன்! ஜோன்! இதைக் கேள்! உன்னை நிரந்தரமாகத் தேவாலயம் உதறிப் புறக்கணிக்கிறது என்று திருச்சபை சார்பாக உறுதி கூறுகிறேன்.

கெளஸான்: [ஆங்காரமாக] ஜோன்! திருச்சபை சார்பாக யாம் உன்னை இப்போது கிறித்துவ மதத்திலிருந்து நீக்கி வெளியேற்றுகிறோம்! உன்னை யாம் நிரந்தரமாய்க் கைவிட்டு, நிபந்தனைப்படி ஆங்கிலத் தனிப்பாடு வர்க்கத்திடம் இன்று ஒப்படைக்கிறோம்! எம் கடன் முடிந்து விட்டது!

வழக்கறிஞர்: [கனிவாக] ஜோன்! தண்டிக்கும் ஆங்கிலத் தனித்துவ வர்க்கத்திடம், உனக்குத் தரும் மரண தண்டனையின் உக்கிரத்தைத் தணிக்க நாங்கள் தாழ்வாகக் கேட்டுக் கொள்வோம். ஆனால் அவர் உன்னை என்ன செய்வார் என்பது அவர் விருப்பம். யாம் அதை நிறுத்த முடியாது. [ஆசனத்தில் அமர்கிறார்]

கெளஸான்: [ஆங்கிலப் பாதிரியைப் பார்த்து] ஜோன், தனது பாபத் துரோகத்துக்கு மனம் வருந்தி ஒரு வேளை மன்னிப்புக் கேட்டால், சகோதரர் மார்டின் அவர்கள் கனிவு கூர்ந்து அவளது பாபங்களுக்குப் பரிவும் இரக்கமும் காட்டலாம்!

ஆங்கிலப் பாதிரி: [பெருஞ் சினத்துடன்] போதுமையா, உமது புனித போதனை! யாமிந்த சூனியக்காரிக்குப் பாபத்தீர்ப்போ அல்லது பாப மன்னிப்போ இந்தப் பிறவியில் அளிக்கப் போவதில்லை! எம்மிடம் ஜோனை நீவீர் ஒப்புவித்த பின்பு எந்த தப்பும் இங்கினி நேராது! அவள் நேராக தீக்கம்பத்துக்கு இழுத்துச் செல்லப் படுவாள்! நரகத்தில் விழுந்து புரள்பவளை நீவீர் உமது சிரசில் தூக்கிக் கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தீர்! இதோ என்னை நோக்குவீர்! என்னாட்டுக்கு நான் புரியும் இனிய பணி இதுதான்!

[ஓடிப் போய் ஜோனைப் பிடித்துக் தள்ளுகிறார். பெருங் கூட்டம் பின் தொடரக் காவலர் ஜோனை மாளிகைக்கு வெளியே இழுத்துச் செல்கிறார். வழக்கறிஞர்கள், அவரது உதவியாளர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி ஆங்கிலப் பாதிரியை மெச்சுகிறார்கள். கெளஸான் நெற்றியில் கைவைத்த வண்ணம் அமர்கிறார். லாட்வெனு முகத்தைக் கைகளால் மூடிக் கொள்கிறார்]

****

‘ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என் ஆத்மா பாபத் தீர்ப்படையப் பிரார்த்தனை செய்வீர்! இங்கு நின்று கொண்டிருக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்: உங்களுக்கு நான் ஏதும் பாதகம் விளைவித்திருந்தால், என்னை மன்னித்து விடுவீர்! தயவு செய்து பிரார்த்தனை செய்வீர் எனக்காக! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘மரணம் பயங்கரமாய்த் தோன்றியது, ஸிஸரோவுக்கு [Cicero]! விருப்பமானதாய்த் தெரிந்தது, காடோவுக்கு [Cato]! கவலை அற்றதாய்க் காணப்பட்டது, சாக்ரடாஷ் வேதாந்திக்கு!

அன்னி பிரின்ஸெஸ் [Anne Princess (1950- )]

‘மரணத்தைப் பற்றி ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும்! தூங்கி எழுந்து கொண்டு அதைத் தேடிச் செல்ல வேண்டிய தில்லை! எங்கே நீ தங்கி இருந்தாலும், உனக்கு அதை இலவசமாய் அவர்கள் அங்கே கொண்டு வருகிறார்கள்! ‘

அமிஸ் ஸர் கிங்ஸ்லி [AMIS Sir Kingsley (1922-1995)].

ஆறாம் காட்சி (பாகம்-12)

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டை

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor]
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள்

அரங்க அமைப்பு: ஆங்கிலேயர் ரோவன் சிறையில் ஜோனைச் சங்கிலியில் கட்டி அடைத்துள்ளனர். கற்கோட்டை மாளிகையில் ஜோனை, ஜூரர்கள் இல்லாத விசாரணை செய்ய முற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நீதி மன்றத்தை தேவாலயம் ஏற்பாடு செய்திருக்கிறது. காத்திலிக் மதாதிபதி   களும், சட்ட மதவியல் நிபுணர்களும் கூடி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். மையத்தில் கைதிக்கு ஓர் மர ஆசனம் வைக்கப் பட்டுள்ளது. பிரதமப் பாதிரி பீட்டர் கெளஸான், வார்விக் கோமகனார், மதாதிபதிகள், வழக்கறிஞர்கள் எவ்விதம் ஜோனைப் பழிசுமத்தித் தண்டிப்ப தென்று திட்டமிடுகிறார்கள். தேவாலயம் நியமித்த வழக்கறிஞர் தனது விளக்க உரையைக் கூறி வழக்காடிய பிறகு, கெளஸான் பாதிரி ஜோனை ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோன் கம்பத்தில் எரிக்கப்பட தெருவில் காவலரால் இழுத்துச் செல்லப் படுகிறாள்.

ஆங்கிலப் பாதிரி: [பெருஞ் சினத்துடன்] போதுமையா, உமது புனித போதனை! யாமிந்த சூனியக்காரிக்குப் பாபத் தீர்ப்போ அல்லது பாப மன்னிப்போ இந்தப் பிறவியில் அளிக்கப் போவதில்லை! எம்மிடம் ஜோனை நீவீர் ஒப்புவித்த பின்பு எந்த தப்பும் இங்கினி நேராது! அவள் நேராக தீக்கம்பத்துக்கு இழுத்துச் செல்லப் படுவாள்! நரகத்தில் விழுந்து புரள்பவளை நீவீர் உமது சிரசில் தூக்கிக் கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தீர்! கொண்டு செல்லுங்கள் இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசை! மந்திரக்காரிக்கு இந்த உலகத்தில் இடமில்லை!

[ஓடிப் போய் ஜோனைப் பிடித்துக் தள்ளுகிறார். பெருங் கூட்டம் பின் தொடரக் காவலர் ஜோனை மாளிகைக்கு வெளியே இழுத்துச் செல்கிறார். வழக்கறிஞர்கள், அவரது உதவியாளர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி ஆங்கிலப் பாதிரியை மெச்சுகிறார்கள். கெளஸான் நெற்றியில் கைவைத்த வண்ணம் அமர்கிறார். லாட்வெனு முகத்தைக் கைகளால் மூடிக் கொள்கிறார்.]

கெளஸான்: [எழுந்து நின்று கோபமாய்] ஜோனைத் தள்ளிக்கொண்டு போகாதீர்! இது காட்டுமிராண்டித் தனம்! இளம் பெண்ணின் மீது சிறிது பரிவு காட்டுங்கள்! அவள் தப்பி எங்கே ஓடப் போகிறாள் ? அவள் காலம் முடியப் போகிறது! நாங்கள் ஜோனை வார்விக் கோமகனாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆங்கிலப் பாதிரி மார்டினிடம் அவளை அனுப்ப எமக்குச் சிறிதும் விருப்ப மில்லை! மார்டின் சகோதரா! ஓரிளம் பெண்ணைத் தொட்டு ஆசீர்வதிக்கும் தகுதியுடைய உமது புனிதக் கைகள், ஜோனை ஆங்காரத்தில் தள்ளியதால் புண்பட்ட கைகள் ஆயின! புண்ணியத் தேவ தூதரான நீவீர் இத்தகைய நாகரீமற்ற முறையில் நடந்தது எமக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. நெறியோடு, முறையோடு, மனிதத் தன்மையோடு நடந்து கொள்வீரா ?

ஆங்கிலப் பாதிரி மார்டின்: போதும் உமது புனிதப் புலம்பல்கள்! பிரெஞ்ச் தேவதூதரை விட யாம் பேரருள் கொண்டவர், பெண்டிர் மீது! ஆனால், இவளைப் பெண்ணென்று கருதி நீவீர் பரிவு காட்டுகிறீர்! யாம் இவளைப் பிசாசுகளின் இனமென்று தீர்மானித்து, கனல் மூட்டி எரிக்கப் போகிறோம்! எம் வழியில் யாரும் குறுக்கிட வேண்டாம்!

லாட்வெனு: கவலைப் படாதீர் கெளஸான் திருவாளரே! ஜோன் பக்கத்தில் நான் நின்று அவளைப் பாதுகாக்கிறேன். மார்டின் சகோதரரே! தீயில் வாட்டப் போகும் ஜோனுக்கு இரக்கப்பட்டு மென்மையாக, கண்ணியமாக நடத்திச் செல்லுங்கள்! [ஜோன் கூடவே லாட்வெனு செல்கிறார்]

கெளஸான்: [ஆங்காரமாக] இந்த ஆங்கிலேயர் அனைவரும் மூர்க்கமான பிடிவாதக்காரர் என்று தெரிகிறது. பாருங்கள்! ஜோனை நேராகத் தீயில் தள்ளப் போகிறார் இந்த தீவிரவாதிகள்!

[கெளஸான் மன்றத்தின் முற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறார். சற்று சாலை ஓரத்தில் ஒரு மேடையும், மேடை மீது ஒரு கம்பமும் அமைக்கப் பட்டுள்ளன. கெளஸானையும், வழக்கறிஞரைரும் தவிர ஏனையோர் அனைவரும் மேடை நோக்கிச் செல்கிறார்.]

கெளஸான்: குரங்குகள் கையிலே பூமாலைக் கொடுத்து விட்டோமே என்று என்னிதயம் துடிக்கிறது. இந்தக் கோரக் கும்பலை எப்படி மீண்டும் மனிதராக்குவது ? நாமிதை நிறுத்த வேண்டும்.

வழக்கறிஞர்: இந்த வெள்ளத்தை உங்களால் நிறுத்த முடியாது! வெள்ளத்தை நிறுத்தக் குறுக்கிட்டால், இந்த வேங்கைகள் உங்களை அடித்து நசுக்கி விடும்! ஆங்கிலேயர் தவறு செய்தால், நம்மால் திருத்த முடியாது! இந்தப் பிரச்சனை எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை நல்லது, உங்களுக்கும், எனக்கும், ஜோனுக்கும்! பாவம் ஜோன்! காட்டுப் பூனைகளின் வாயில் மாட்டிக் கொண்டாள் ஜோன்! அவளுக்கு இனி மீட்சியே இல்லை! ஜோனை அவளது கடவுள் கூட இப்போது காப்பாற்ற முடியாது.

கெளஸான்: முற்றிலும் உண்மை! நாம் கடைசிவரை இங்கு நின்று நடப்பதை எல்லாம் பார்த்த பிறகுதான் நமக்கும் நிம்மதி!

வழக்கறிஞர்: இம்மாதிரி தீக் கொளுத்தலை வேடிக்கை பார்க்க நமக்குப் பழக்கம் வேண்டும்! இப்புதுப் பழக்கம் நமக்கு வழக்கப்பட வேண்டும்! எனக்கு இதில் பழக்கம் உண்டு. சீக்கிரம் அவள் தகனம் ஆகிவிடுவாள்! சட்ட மறியா ஓரிளம் பெண்ணைப் பிடித்து ஆலயத் திருச்சபையும், ஆங்கில வர்க்கமும் இடையே நசுக்க வேண்டுமா ? ஜோன் என்னும் பணிமங்கை இனி ஒரு புராண இதிகாசமாகப் பெண்ணாகி விடுவாள்! சூனியக்காரி என்று நம்மில் பலர் ஜோனுக்கு நாமம் சூட்டினாலும், இந்தப் பாழும் தீ வேக்காடு அவளை ஓர் புனித மாதாய் ஆக்கப் போகிறது!

கெளஸான்: ஆலய வழக்கறிஞரே! உமது மூளையில் ஏதாவது கோளாறா ? நீர் என்ன சொல்கிறீர் இப்போது ? அவள் பழுதற்ற பாவை என்று பரிவு காட்டுவதற்கா யாம் உமக்குப் பணம் கொடுத்து வழக்காட அழைத்து வந்தோம் ? அவள் குற்றமற்றவளாக நீவீர் எண்ணுகிறீரா ? சொல்!

வழக்கறிஞர்: ஆம், அவள் இரக்கப்பட வேண்டிய ஓர் நிரபராதி! ஆலயத் திருவாளரே! நானினி உலகுக்கு உண்மையை அழுத்தமாகச் சொல்லலாம்! ஆங்கிலப் பாதிரி கையில் ஜோனை விட்ட பிறகு, என் பணி முடிந்து விட்டது! உங்கள் சொற்பக் காசுக்கு நான் செய்யும் அற்பக் கடமை தீர்ந்து விட்டது! படிப்பில்லா பத்தொன்பது வயதுப் பாவைக்கு என்ன ஆலயச் சட்டம் தெரியும் ? நாம் நுணுக்கமாக விளக்கும் திருச்சபை விதிகளில் ஒரு வார்த்தை கூட அவளுக்குப் புரிந்ததாக எனக்குத் தெரிய வில்லை! அவளுக்கு நமது சட்டம் புரிந்ததாக நாமெல்லாரும் நடித்தோம்! அவள் கூறிய விதிகள் நமக்குப் புரிந்தாலும், தெரியாதவாறு நாம் நடித்தோம்! பழுதுற்றோர் அளிக்கும் தண்டனையை, இறுதியில் பழுதற்றவள் அடைகிறாள்!

கெளஸான்: சரி நேரம் போகிறது. போதும் நமக்குள் வாக்குவாதம்! உன்னைப் போல் நான் வருந்த வில்லை. இதுவரை தீ வேக்காடு விழாவை நான் கண்டதில்லை! தண்டனைக் களத்துக்குப் போவோம்.

[அப்போது ஆங்கில அதிபதி, வார்விக் கோமகனார் வருகிறார். குறுக்கிட்ட கெளஸானிடம் பேசுகிறார்.]

வார்விக் கோமகனார்: [ஆச்சரியமுடன்] என்னவாயிற்று ? தீர்ப்பளிப்பைக் கொடுத்து விட்டார்களா ? ஜோனுக்கு என்ன தீர்ப்பு ? ஆட்டை இழுத்துப் போவதுபோல் எங்கே அவளை இழுத்துச் செல்கிறார்கள் ?

கெளஸான்: எல்லாம் முடிந்து விட்டது கோமகனாரே! அவள் ஆலயத் துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு தீ மேடையில் ஏற்றப்படப் போகிறாள்! ஆனால் அந்த பயங்கரத் தீர்ப்பை திருச்சபை அளிக்கவில்லை!

வழக்கறிஞர்: திருச்சபை முடிவாகக் கூறிய ஆலயத் துரோகி என்னும் குற்றத்தைச் ஜோன் ஒப்புக்கொண்டு விட்டாள். ஆனால் தன்னைத் தீ மேடையில் எரிப்பதற்குப் பதிலாகத் தன் தலையை ஆறுமுறை வாளால் சீவி வீசி விடும்படி வேண்டிக் கொண்டாள்.

வார்விக் கோமகனார்: குற்றவாளியே தன் தண்டனையைத் தேடிக் கொள்வது, சட்டப்படி தவறு! குற்றம் சாற்றுவதும், தண்டிப்பதும் நீதி மன்றம்.

வழக்கறிஞர்: கோமகனாரே! திருச்சபை தீர்ப்பளித்தாலும், தண்டிப்பது தேவாலயத்தின் பொறுப்பில்லை! நாங்கள் ஜோனுக்குத் தீர்ப்பளித்த உடனே ஆங்கிலச் சகோதர் காவலாளிகளை உசுப்பி ஜோனை இழுத்துக் கொண்டு போய் விட்டார். … சரி நானும் வேடிக்கை பார்க்கப் போகிறேன். [வணங்கிக் கொண்டு வெளியேறுகிறார்]

கெளஸான்: வார்விக் கோமகனாரே! உங்களுக்காக யாம் காத்திருந்தோம். உமது கையில் ஜோனை ஒப்படைக்க வேண்டுமென யாம் விரும்பினோம். ஆனால் மார்டின் சகோதரர் பொறுமையற்று ஜோனை இழுத்துக் கொண்டு போனார்! எங்களுக்கு அது தவறாக, நியாமற்றதாகத் தோன்றியது. உங்கள் கூட்டத்தார் ஜோனை நியாயமான முறையில் சட்டப்படி நடத்துகிறாரா என்பது ஐயப்பாடுடன் தெரிகிறது!

கோமகனார்: நான் கேள்விப்பட்டது, உங்கள் அதிகாரத்துக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த நகரில் ஐயப்பாடாக உள்ளது, என்பதை! அதை நீங்கள் இல்லையென உறுதி கூற முடிந்தால் நான் உங்கள் சொற்படிப் பணிமங்கையை நடத்த ஆணை யிடுகிறேன்.

கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணரி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து மடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை உங்கள் காவலர் ஏற்றி விட்டார். இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் குழி தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!

[கெளஸான் கோபத்துடன் வெளியேறி காத்திருக்கும் வழக்கறிஞருடன் சேர்ந்து கொள்கிறார். தனிமையான, கோமகனார் காவலனை அழைக்கிறார்]

****

‘சகோதரர் மார்டின் தேவ தூதரே! எனக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நன்றி. ஆனால் இந்த இடத்தை விட்டு என்னருகே நிற்காமல் வெளியேறுங்கள் … இப்போதே! இது என் எச்சரிப்பு! எனக்குக் கேட்ட அசரீரிக் குரல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை! நான் புரிந்த ஒவ்வொரு பணியும் கடவுள் எனக்கு ஆணையிட்டு நான் நிறைவேற்றியவை. ஏசுவின் சிலுவைச் சின்னத்தை என்கண் முன்பாகக் காட்டுங்கள்! சாகும்வரை நான் அது என் கண்களில் காட்சி அளிக்க வேண்டும். ஏசுவே, ஏசுவே, ஏசு நாதரே! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (மே 30, 1431)

 

[தீ மேடையில் ஜோனின் கடைசிச் சொற்கள்]

எவன் என்னை மேல் வீட்டுக்கு

ஏற்றிச் செல்பவன், நண்பனே சொல்!

எப்போது இங்கு வரப் போகிறான் ?

விரைவாக முடியட்டும் எனக்கு,

வலியின்றி, தூயதாக இருக்கட்டும்!

மின்னல் போல அல்லது

கூரிய சிறு கத்தியால்!

ஆனால் அது என்மேல்

துரிதாகப் பாயட்டும்!

கவிதைச் செல்வி லைலா பெப்பர், கனடா [Leila Pepper (1997)]

 

அலைமோதும் என்மனம் ஆலயத்தில்,

துண்டு துண்டாய்ப் போய்!

கன்னி மாடத்தில் அந்த மங்கை

கண்மூடினாள், பலியாகி!

கண்டும் காணாத மாடத்துப் பெண்டிர்

விண்டு போயிலர்!

சிரம்மேல் வளையம் சுழலும்

செந்நிறப் பொன்னுடைச்

சந்நியாசிகள் புண்பட்டுக்

கண்கலங்கிலர்!

எதுவும் மெய்யில்லை இந்த ஆலயத்தில், அவள்

புது நறுமண நினைவைத்

தவிர!

 

கவிதைச் செல்வி லைலா பெப்பர்.

****

இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். அன்றுதான் ஜோனின் கடைசி நாள். ஆணாதிக்க உலகம் 19 வயது அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!

ஆறாம் காட்சி (பாகம்-13)

 

காலம்: மே மாதம் 30, 1431 [ஜோன் பர்கண்டியில் பிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன]

இடம்: ஆங்கிலேயரின் ரோவான் [Rouen] கோட்டைக்கு அருகில் ஒரு திடல்.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. ஆங்கிலப் பிரபு வார்விக் கோமகனார், ரிச்சர்டு தி பியூகாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]
 2. இங்கிலாந்தின் கார்டினல், ஜான் போயர் ஸ்பென்ஸர் [Cardinal of England]
 3. கிறித்துவத் திருச்சபைப் பாதிரியார் பீட்டர் கெளஸான் [Peter Cauchon, Bishop of Beauvais]
 4. மதாதிபதி ஜான் லெமைட்டெர் [John Lemaitre], தலைமை வழக்கு உளவாளி [Chief Inquisitor], லாட்வெனு.
 5. மதவாதி ஜான் தி எஸ்டிவெட், வழக்குத் தொடுப்பாளி [Canon, John D ‘ Estivet (Prosecutor), Chaplain De Stogumber, Canon De Courcelles, A Young Priest age: 30]
 6. ஜோன் ஆஃப் ஆர்க், மற்றும் காவலர்
 7. கோட்டைப் பணியாட்கள், மற்றும் பொது மக்கள் கூட்டம்.

அரங்க அமைப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோன் கைக்கட்டு, கால் கட்டுகளுடன் தெருவில் அமைக்கப்பட்ட கம்ப மேடைக்குக் காவலரால் இழுத்துச் செல்லப் படுகிறாள். திடலைச் சுற்றிலும் ஆரவாரமுடன் பெருங் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. படிக்கட்டுகள் அமைந்த பீடத்தின் ஓரத்தில் கம்பமொன்று நிறுத்தப் பட்டுள்ளது. நடுவில் பாதை விடப்பட்டு, கம்பத்தைச் சுற்றிலும் விறகுகள் அடுக்கப் பட்டுள்ளன. ஆங்கிலப் பாதிரி மார்டின் மிரண்டு போய் ஜோனுக்குப் பரிதாபம் காட்டி ஆறுதல் கூறத் தயங்கிக் கொண்டு ஓரத்தில் நிற்கிறார். பெண்கள் கூட்டத்தில் பலர் கண்களில் கண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் பிரெஞ்ச் மக்கள் அதிகமாகவும், ஆங்கில மாந்தர் குறைவாகவும் உள்ளனர்.

கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணரி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து மடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை உங்கள் காவலர் ஏற்றி விட்டார். இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் குழி தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!

கெளஸான்: வார்விக் கோமகனாரே! இன்றைய தினத்தில் இங்கு நடந்த இந்த கோரமான நிகழ்ச்சிக்கு நாமிருவரும் கடவுளுக்குப் பதிலுரைக்க வேண்டும். திருச்சபையும் ஜோனுக்குப் பூரணத் தீர்ப்பளிக்க முடியாமல் திணறி விட்டது! ஆலயச் சட்டம் அறியாத ஓரிளம் மங்கையை, நமது தீர்மானத் திட்டப்படி மாட்ட வைத்து முடக்கி விட்டோம். ஆலயத் தீர்ப்பு ஜோனின் செவிகளில் விழும் முன்பே, ஆங்கிலப் பாதிரி சகோதரர் மார்டின் ஜோனின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி இழுத்துச் செல்ல கட்டளை இட்டார். தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னே தீவட்டியை ஏற்றி விட்டார், உங்கள் காவலர்! இப்போது நாமிருவரும் கடவுளிடம் கேட்டு மன்றாட வேண்டும், நாம் செய்தது சரியா, தப்பா வென்று ? ஜோனுக்கு இத்துணை ஆழத்தில் ஒரு குழியைத் தோண்டி விட்டு, நாமே அந்தக் குழியில் விழப் போகிறோமோ என்று அச்சம் மேலிடுகிறது!

வார்விக் கோமகனார்: நீவீர் எமக்கும் சேர்த்து உமது ஆலயத்தில் பிரார்த்தனை செய்யுங்கள். எமக்கு இதில் ஒன்றும் நம்பிக்கை யில்லை! எங்கள் ஆங்கில வர்க்கம் முடிவு செய்த இந்த தீர்ப்பு ஜோனுக்குத் தக்கதே என்னும் கருத்தை உடையவன் நான். இதுவே எனது முடிவும் கூட! என் மனதை நீவீர் கலைக்க வேண்டாம்!

[கெளஸான் கோபத்துடன் வெளியேறி காத்திருக்கும் வழக்கறிஞருடன் சேர்ந்து கொள்கிறார். தனிமையான, கோமகனார் தனது காவலனை அழைக்கிறார். காவலர் எல்லாரும் ஆரவாரமுடன் தீக்கம்பத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஜோனை இழுத்துச் செல்லும் காவலரைப் பின்பற்றி பெருத்த ஜனக் கூட்டம் செல்கிறது. மேடைப் படிகளில் ஜோனை ஏற்றிச் சென்று, காவலர் அவளைக் கம்பத்தில் கயிற்றால் கட்டுகிறார்கள். சில காவலர் அவளைச் சுற்றிலும் விறகுகளை அடுக்குகிறார்கள். தீவட்டியைக் கையில் ஏந்தி முன்னும் பின்னும் இரண்டு காவலர் தயாராக நிற்கிறார்கள். ஆங்கிலப் பாதிரி மார்ட்டின் நடுக்கமுடன் ஜோன் அருகில் நிற்கிறார்.]

ஆங்கிலப் பாதிரி: [கனிவுடன்] .. அழாதே ஜோன்! .. அஞ்சாதே ஜோன்! வேதனை எல்லாம் நொடிப் பொழுதில் நீங்கிவிடும்! ஏசுப் பிரபு இருக்கிறார்! நீ அவர் வீற்றிருக்கும் இடத்திற்குத்தான் போகிறாய்! கலங்காமல் தாங்கிக் கொள்! ஏசு உன்னைக் கைவிட மாட்டார்!

ஜோன்: [ஆத்திரமாக] சிலுவையைக் கைப்பிடிக்கும் உமது தேவ கரங்கள் இன்று தீப்பந்தம் ஏந்தி யுள்ளன! புனித பைபிளின் அமுத மொழிகளை கூற வேண்டிய உமது பரிவு உதடுகள் இன்று பாசாங்கு உரைகளை ஒலிக்கின்றன! அந்த இரக்கச் சொற்களுக்கு நன்றி! ஆனால் இது என் கட்டளை! இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்! இப்போதே! என்னருகில் நிற்காதீர்! என் கண்களில் தென்படாதீர்! எங்காவது ஒழிந்து போய் விடுங்கள்! புனிதத் தீ என்னைக் குளிப்பாட்டும் போது உமது அசுத்த மூச்சு என்மீது பட வேண்டாம். என் கண்கள் காண விரும்புவது இப்போது ஓர் சிலுவை! கனிவுச் சிலுவை! ஏசு நாதரை இறுதியாக ஏற்றிச் சென்ற புனிதச் சிலுவை! கொண்டு வாருங்கள் சிலுவையை! என் கடைசி மூச்சு நீங்கும் போது என் நினைவு எடுத்துச் செல்லப் போவது, ஏசுவின் சிலுவை!

[அருகில் கண்கள் பொங்க நிற்கும் ஓர் ஆங்கிலக் காவலன் இரண்டு சுள்ளிகளைச் சிலுவையாகக் கட்டி ஜோனுக்குக் காட்டுகிறான். விறகுகளின் தீ சுற்றிலும் பெருகவே அவன் சிலுவையைப் போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறான். அதற்குள் வேறொருவன் நீளமான ஒரு சிலுவைக் கம்பை, ஆலயத்திலிருந்து எடுத்து வந்து, ஜோன் கைகளில் தருகிறான்]

ஜோன்: [அலறிக்கொண்டு] ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என் ஆத்மா பாபத் தீர்ப்படையப் பிரார்த்தனை செய்வீர்! இங்கு நின்று கொண்டிருக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்: உங்களுக்கு நான் ஏதும் பாதகம் விைளைவித்திருந்தால், என்னை மன்னித்து விடுவீர்! தயவு செய்து பிரார்த்தனை செய்வீர் எனக்காக!

அருகில் நிற்பவர் சிலர்: [கண்ணீர் பொங்க] நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் ஜோன். உனக்காகப் பிரார்த்திக்கிறோம். ஏசு உன்னருகில் இருக்கிறார். உன்னைக் கைவிட மாட்டார்.

ஜோன்: [அலறிக்கொண்டு] எனக்குக் கேட்ட அசரீரிக் குரல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை! நான் புரிந்த ஒவ்வொரு பணியும் கடவுள் எனக்கு ஆணையிட்டு நான் நிறைவேற்றியவை. ஏசுவின் சிலுவைச் சின்னத்தை என்கண் முன்பாகக் காட்டுங்கள்! சாகும்வரை நான் அது என் கண்ணில் காட்சி அளிக்க வேண்டும். ஏசுவே, ஏசுவே, ஏசு நாதரே! ‘

[ஜோனின் தலை சாய்கிறது. பற்றி எரியும் தீயின் நாக்குகள் ஜோனின் உடலை மேய்ந்து தின்கின்றன! கோவென்று அலறும் பலரது குரல்கள் நெஞ்சைத் தொடுகின்றன. பழிவாங்க நினைத்த மாந்தரின் மனதில் வெற்றி முரசுகள் கொட்டுகின்றன.]

[கோமகனாரும் அவர்கள் பின்னால் சென்று பேயடித்தவர் போலிருக்கும் ஆங்கிலப் பாதிரி மார்டினைக் காண்கிறார்]

கோமகனார்: என்ன ஆயிற்று உங்களுக்கு ? ஜோனுக்குத் தீவைக்கப் போவதாகக் கனாக் கண்டவர் அல்லவா, நீங்கள் ? உங்கள் கண்களில் பொங்குவது ஆனந்தக் கண்ணீரா அல்லது வேதனைக் கண்ணீரா ? முகத்தைப் பார்த்தால் பிசாசு உங்கள் முகத்தில் அல்லவா தெரிகிறது ? ஆனால் பார்த்தால் ஜோன் முகத்தில் ஓர் புனித ஒளி தோன்றுகிறது! அவளைப் பிடித்த பிசாசு இப்போது உங்கள் தோள் மீது தாவி விட்டதா ?

ஆங்கிலப் பாதிரி: [தடுமாறி மனத் தவிப்பில் நோகிறார். கண்களில் நீர் கொட்டுகிறது. பெரு மூச்சு விட்டுப் பேதலிக்கிறார். கைகூப்பிக் கும்பிட்டு மேலே காட்டி] எனக்கு இரக்கம் காட்டு ஏசுவே! என்னால் தாங்க முடியவில்லை! கோமகனாரே! நான் என்ன செய்வேன் ? எனக்குக் நரகத்தின் கதவுகள் திறந்துவிட்டன! ஜோன் அங்கே போவதற்குள் அவளை வரவேற்கும் வாசலில் நானும் நிற்பேன்! படிப்பில்லாத ஜோனுக்குப் பாபத்தீர்ப்புக் கிடைத்தாலும், பாதிரியான எனக்குப் பாபத் தீர்ப்பு கிடைக்குமா ? நான் பெரும் பாதகம் நிகழப் பங்களித்து விட்டேன், கோமகனாரே! யார் கண்டார் ? ஜோனுக்கு சொர்க்கபுரி கிடைக்கலாம்! ஆனால் எனக்கு நிச்சயம் நரகக் குழிதான்! ஜோன் நீ சொர்க்கத்தில் வாழ்வாங்கு வாழப் போகிறவள்! நான் மீள முடியாத நரகத்தில் நீண்ட காலம் தூண்டில் மீனாய்த் துள்ளப் போகிறவன்!

கோமகனார்: [முதுகைத் தடவி, ஆறுதலாக] ஜோனுக்கு நீவீர் என்ன தீங்கிழைத்தீர் ? அவள் செய்த பாபத்திற்கு அவளே தீக்கம்பம் நோக்கிச் செல்லும் போது, உமது புனித உடல் ஏனிப்படி நடுங்குகிறது ?

பாதிரியார்: கோமகனாரே! எனக்காக, பாழடைந்த என் ஆத்மாவுக்குக் காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

கோமகனார்: [பரிவுடன்] செய்கிறேன் உமக்கு! செய்கிறேன் நிச்சயமாய்! செய்கிறேன் உடனே! ஆனால் எனக்கு இந்த பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை! ஆனாலும் செய்கிறேன் உமக்கு! கவலைப் பாடாதீர்!

பாதிரியார்: கோமகனாரே! நான் நல்லவன், மெய்யாக! உண்மையாக! இதுவரை நான் யாருக்கும் பாபம் இழைத்ததில்லை! இதுதான் முதல் தடவை! ஒரு தடவை செய்தால், அதுவும் உடனே மன்னிப்புக் கேட்டால், கடவுள் எனக்கு மன்னிப்பு அளிப்பார் அல்லவா ? சொல்லுங்கள்! நான் சொல்வது சரியா ?

கோமகனார்: நிச்சயம் கிடைக்கும்! முழங்காலிட்டு கண்ணீர் சொரிய புனிதக் கன்னி மேரி முன்பாக மன்னிப்புக் கேளுங்கள்! கொடுக்கப்படும்! கடவுளின் வாயிற் கதவைத் தட்டுங்கள்! திறக்கப்படும்! … பைபிளில் இந்த இரண்டு பொன்மொழிகள் சிறு வயது முதலே எனக்கு மனப்பாடம்!

பாதிரியார்: தீங்கிழைக்க வேண்டு மென்று நான் இதில் முற்படவில்லை. இப்படி முடியும் என்று நான் நினைக்க வில்லை! நான் அறியாமலே என்னால் இப்பாபம் நிகழ்ந்து விட்டது!

கோமகனார்: [அழுத்தமாக, கடுமையாக] அப்படி யானால் நீவீர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிந்திக்காமல் நிகழ்வதைக் கண்டும் காணாமல் இருந்தீர் அல்லவா ?

பாதிரி: ஆமாம் கோமகனாரே! நானொரு மூடன்! சிந்திக்காமல் செயலில் இறங்கி மூழ்கியவன்! பின் நீந்த முடியாமல் தூக்கிவிட உதவி தேடும் அறிவிலி! நான் செய்த தீராப் பழிக்கு, தீய பாபத்திற்குச் சாகும்வரை மனக்குறையில் தினம் தினம் வெந்து, வெந்து ஜோனைப் போல் நோகப் போகிறேன்!

கோமகனார்: நீ என்ன பிதற்றுகிறாய் ? ஜோன் சாவுக்கு நீ காரண மில்லை! எதற்காகச் சாகும்வரை நீ நோக வேண்டும் ?

பாதிரி: [வருத்தமுடன்] ஆமாம், தீயில் ஜோனை எரிக்கப் போகும் தண்டனை அறிவிப்பை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்! காவலர் கையிலிருந்து ஜோனைப் பிடுங்கித் துண்டு துண்டாய் நறுக்க வேண்டும் என்று நான் முதலில் துடித்தேன்! ஆனால் தீயிலிட்டு உயிரோடு எரியும் போது அவள் அலறியதைக் கேட்டு என்னிதயம் வெடித்துத் தாங்க முடியாமல் இப்போது துடிக்கிறேன்! இன்றைக்கு நான் செய்த பாபத்தை நினைத்தால் சாகும்வரை எனக்குச் சரிவரத் தூக்கமே வராது! அவள் உடல் வேகும் முன்பே, என் நெஞ்சம் வெந்து போனது! அவள் உயிர் பெரும் தீயில் மடிவதற்கு முன்பே என்னுயிர் வெறும் காற்றிலே ஊசலாடியது! [மண்டியிட்டு, கைகளை மேலே தூக்கி] ஏசு நாதரே! இந்தக் கொடும் தீக்காட்சியை என் கண் முன்னிருந்து நீக்கிவிடு! என்னால் போக்க முடிய வில்லை! ஏசுப் பிரபு! எரித்துக் கொண்டிருக்கும் இந்த தீயிலிருந்து என்னைக் காப்பாற்று! தீயில் வேகும் போது ஜோன், ஏசு நாதா, ஏசு நாதா! ஏசு நாதா! வென்று மூன்று முறை அலறி உன்னைத்தான் நாடினாள்! உன் ஒருவனைத்தான் தேடினாள்! இப்போது அவள் உன் இதயத்தில் ஏறி விட்டாள்! ஆனால் நானோ உன்னிதயத்திலிருந்து படுபாதாளக் குழியில் விழுந்து கிடக்கிறேன்!

கோமகனார்: [பாதிரியாரைத் தூக்கி] போதும், போதும் உமது புலம்பல்! எழுந்து நின்று இனி நடப்பதைப் பார்ப்பீரா ? உமது கலக்கத்தை நிறுத்துவீரா! நீவீர் இதைத் தாங்கிக் கொள்ள முடியும்! இந்த ஊர் மக்களே இதைப் பற்றித்தான் சில நாட்களுக்குப் பேசப் போகிறார்! இத்தனைப் பயமுள்ள நீவீர், நீதி மன்றத்தில் அமராமல் என்னைப் போல் ஒதுங்கி இருந்திருக்கலாம் அல்லவா ?

பாதிரியார்: [குழப்பமடைந்து, பணிவாக] தீயில் வேகும் போது ஜோன், ஏசு நாதா, ஏசு நாதா! ஏசு நாதா! வென்று மூன்று முறை அலறிய போது, என் நெஞ்சமே வெடித்தது! அந்த இரங்கல் குரல் என்னைப் பிசாசு போல் துரத்துகிறது இப்போது. காவலர் தீயை மூட்டும் போது, சிலுவை ஒன்றைக் கொண்டுவர ஜோன் வேண்டினாள். காவலன் ஒருவன் இரண்டு சுள்ளிக் கம்புகளைக் கட்டிச் சிலுவையாகக் காட்டினான். அவன் ஓர் ஆங்கில அனுதாபி! அவன் கண்களில் நீர் அருவியாக வழிந்தது! ஆனால் என் கண்களில் நீர் வரவில்லை! அருகில் நின்ற நான் சிலுவையைக் கையில் ஏந்திப் பிடித்திருக்கலாம். ஆனால் ஏனோ நான் அப்படிச் செய்யாது வாளா விருந்தேன்! கோமகனாரே! நானொரு கோழை! பாதிரியாய் வாழத் தகுதியற்ற கோழை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறிய கோழை! நானொரு முட்டாள்! நானொரு வெறிநாய்! ஆனால் ஒரு மகிழ்ச்சி! சிலுவையைக் கடைசியில் காட்டியவன், ஓர் ஆங்கிலேயன்! பித்துப் பிடித்த பிரெஞ்ச்காரன் அல்லன்!

கோமகனார்: முட்டாள்! நல்லது, நீ சிலுவையை ஜோனுக்குக் காட்டாதது! அந்த ஆங்கிலக் காவலன் யார் ? சிலுவையைக் காட்டிய அவன் கையை வாளால் வெட்ட வேண்டும்! நல்ல வேளை! ஆவேசக் கூட்டத்தார் அவனைப் பிடித்து ஜோனுடன் எரிக்காமல் விட்டார்களே! போதும், ஜோனுக்காக நீவீர் கொட்டும் உமது பரிவுக் கண்ணீர்!

பாதிரியார்: [சற்று தெளிவாக] நீங்கள் சொல்வதுபோல் ஆவேசக் கூட்டம் நடந்து கொள்ள வில்லை! கண்ணீர் விட்டு அழுதவரில் அநேகம் பேர் ஆங்கிலேயர்! ஆச்சரியமாக இல்லையா ? ஜோனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தவர், காறித் துப்பியவர், கல்லை விட்டெறிந்தவர் அநேகர் பிரெஞ்ச் மாந்தர்! நிச்சயம் எனக்குத் தெரியும், அவர் அனைவரும் பிரெஞ்ச் மக்கள். ஆச்சரியமாக இல்லையா ? அவர் எள்ளிப் புறக்கணித்தது ஜோனை இல்லை! எல்லாம் வல்ல நமது ஏசுவை, ஏசு நாதரை, ஏசுப் பிதாவை!

கோமகனார்: வாயை மூடுவீர், தேவ தூதரே! யாரோ வரும் அரவம் கேட்கிறது!

[பிரெஞ்ச் நபர் லாட்வெனு கையில் சிலுவையை ஏந்திக் கொண்டு வருத்தமுடன் தலை கவிழ்ந்து வருகிறார்.]

லாட்வெனு: கோமகனரே! எல்லாம் முடிந்து விட்டது! ஜோனின் சிறுகதை முடிந்து விட்டது! நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்து விட்டது! ஜோன் கடைசில் உச்சரித்தது, ஏசு நாதரின் பெயரைத்தான்! ஆனால் அவள் சிறுகதை இப்போது முடிந்தாலும், இனி அவளது பெருங்கதைத் தொடரப் போகிறது! சிறுகதை பெருங்கதை ஆகப் போகிறது! படிப்பில்லா பணிமங்கை இப்போது புனித மங்கை ஆகப் போகிறாள்! அவளது புனிதக் கதை வரலாற்றில் இனிமேல்தான் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படப் போகிறது!

****

(ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)

(ஏழாம் காட்சி பாகம்-1)

 

இறுதியாகத் தீ மேடையில்

ஜோன் கண்ணொளிப் பட்டு

புகை பூசிய

புனிதச் சிலுவை இது!

வரலாற்றுப் புகழ் பெறும்

வலுவான

சிலுவை இது!

சகோதரர் மார்டின் லாட்வெனு.

அலைமோதும் என்மனம்,

ஆலயத்தில்

துண்டு துண்டாய்ப் போய்!

கன்னி மாடத்தில் அந்த மங்கை

கண்மூடினாள், பலியாகி!

கண்டும் காணாத மாடத்துப் பெண்டிர்

விண்டு போயினரா ?

சிரம்மேல் வளையம் சுழலும்

செந்நிறப்

பொன்னுடைப் பாதிரிகள்

புண்பட்டுக்

கண் கலங்கினரா ?

எதுவும் மெய்யில்லை இந்த ஆலயத்தில்,

பூத்து அவள் மலர்ந்த

புது நறுமண நினைவு

தவிர!

கவிதைச் செல்வி லைலா பெப்பர், கனடா [Leila Pepper (1997)]

 

ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்குகி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். பக்கத்தில் தொங்கும் உறைக்குள் இருந்த வாளை உருவி வருவோன் முன்னால் நீட்டுகிறார்.

சார்லஸ் மன்னன்: [அதிர்ச்சியுடன் வாளை உயர்த்திக் கொண்டு மெதுவாக அங்குமிங்கும் நோக்கி] யாரது இங்கே ? வராதே என் முன்பு! வாள் உள்ளது என் கையில்! எங்கே அரண்மனைக் காவலர் ? உனக்கு என்ன வேண்டும் ? சொல்! முதலில் நில்! என்னை நெருங்கினால் உன் தலை உடம்பை விட்டு விடைபெற்று ஓடிவிடும்!

லாட்வெனு: [கையில் சிலுவைக் கம்புடன்] மாண்புமிகு மன்னரே! அடியேன் சகோதரன் மார்டின்! லாட்வெனு! என் கையில் சிலுவை உள்ளது! அதற்கு முன்பாக உங்கள் வாளை நீட்டாதீர்கள்! இருபத்தி ஐந்து ஆண்டுக்கு முன், ஜோன் கண்களைக் கடைசியாகத் தெரிசனம் செய்த புனிதச் சிலுவை இது! வரலாற்றுப் புகழ் பெற்ற வலுவான சிலுவை இது! தயவு செய்து உங்கள் வாளை உறைக்குள் புகுத்துங்கள்! நான் நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். உங்களைத் தாக்க நானிங்கு இந்த வேளையில் வரவில்லை!

சார்லஸ்: [வாளை உறையுள் சொருகிக் கொண்டு] நீ யாரென்று முதலில் சொல்! உன்முகம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. சற்று அருகே வா!

லாட்வெனு: சகோதரன் மார்டின் நான். உங்களுக்கு உள்ளம் பூரிக்கும் ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன். ஆனந்தப் படுங்கள் அரசே! உங்கள் குருதியிலிருந்து களங்கம் நீக்கப்பட்டு விட்டது! உங்கள் மகுடத்திலிருந்து கறை எடுக்கப்பட்டு விட்டது! நீண்ட காலம் தாமதப்பட்ட நீதி, கடைசியில் வெற்றிகரமாய் வழங்கப்பட்டு விட்டது!

சார்லஸ்: நீவீர் யாரென்று எனக்குத் தெரியவில்லை! யாருக்கு நீவீர் சகோதரர் ? சற்று விளக்கமாய்ச் சொல்வீரா ?

லாட்வெனு: மாண்புமிகு மன்னா! யாம் எவர்க்கும் சகோதரர் அல்லோம்! யாம் எல்லோருக்கும் சகோதரர் ஆவோம்! தீயில் எரிந்துபோன ஜோனுக்குக் கடைசியில் சிலுவைக் காட்சியை அளித்தவன், அடியேன்தான்! எனது சிலுவை புனிதமடைந்து இருபத்தியைந்து ஆண்டுகள் கழிந்து போயின! அதாவது சுமார் 10,000 நாட்கள்! கடந்து போன அந்த ஒவ்வொரு நாளும், இப்படி நான் கடவுளைப் பிரார்த்தனை செய்து வருகிறேன்: மேல் உலகில் நீதி கிடைப்பதுபோல், இந்த மண்ணில் பிறந்த அவரது புதல்வி ஜோனுக்கும் நீதி வழங்க வேண்டு மென்று!

சார்லஸ்: [சற்று சிந்தித்து] ஓ! எனக்கு நினைவுக்கு வருகிறது! … இப்போது! உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருகிறேன். ஜோன் பணிமங்கை மீது உனக்குத் தீராத பாசம் என்று தெரியும் எனக்கு. ரோவென் நீதி மன்றத்தில் நீ வழக்காடலைப் பார்த்தாயா ?

லாட்வெனு: ஆமாம் மன்னரே! ஜோன் வழக்கில் நான் சாட்சியாய்ப் பேசவும் செய்தேன். எல்லாம் முடிந்து விட்டதே, ஒரு கனவுபோல்!

சார்லஸ்: என்ன ? எல்லாம் முடிந்து விட்டதா ? ஆனால் திருப்தியாக முடிந்ததா ?

லாட்வெனு: கடவுளின் போக்கே விந்தையாய் உள்ளது! புதிராய் உள்ளது! புரிய வில்லை எனக்கு!

சார்லஸ்: ஏனப்படிச் சொல்கிறாய் ?

லாட்வெனு: நீதி வழக்கில் உண்மை வெளிவந்தது! ஒரு புனித மங்கையை மதத் துரோகி என்றும், சூனியக்காரி என்றும் குற்றம் சாட்டி, தீக்கம்பத்திற்கு அனுப்பிய உண்மை வெளிப்பட்டது! சட்டம் அதற்கு உதவியது! ஆனால் பாபம், பணிமங்கைக்குச் சட்டம் புரியாத வயது! சட்டம் தெரிந்த வல்லுநர்கள் அவளைக் குற்றம் சாட்டப் பொய்யுரைகளைப் புகன்று தப்பிக் கொண்டார்! சட்டம் தெரியாத பணிமங்கை உண்மை சொல்லி அவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார்! பாபத் தீர்ப்பளிக்க வழக்கு மன்றத்தார் ஜோன் மீது அளவிலாப் பரிவும், பாசமும், இரக்கமும் காட்டித் தீயிலிருந்து காப்பாற்றப் பெரு முயற்சி செய்தார்! ஆனால் அது வெற்றியாக வில்லை! வழக்கு நிபுணரால் முடியாமல் தோல்வி யுற்றதும், அனுதாபம் எல்லாம் ஆவேச மானது! அவரது ஆங்காரம் ஜோனை உடனே தீயில் தள்ளியது! கடைசிவரை பரிவு காட்டியோர், ஜோன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரக்கமற்ற கடுந்தீயில் தள்ளினர்!

சார்லஸ்: ஆலய நீதிபதிகளும், வைத்துக் கொண்ட வழக்கறிஞர்களும் உன்னத ஞானம் படைத்த வல்லுநர் ஆயிற்றே! அவர்கள் அனைவரும் அப்படியா நடந்து கொண்டார் ? ஆச்சரியமாக இருக்கிறதே!

லாட்வெனு: பைபிள் மீது கைவைத்து நெஞ்சார உறுதிமொழி கூறிய உத்தமர், ஜோனுக்கு எதிராய் வெட்கமற்றுப் பொய்யுரைத்தார். ஆலயப் பாதிரிகள் சிலர் கைப்பணம் ஒரு கையில் வாங்கிக் கொண்டு, அடுத்த கையைப் பைபிள் மீது வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வேடிக்கையாக இல்லையா ? பொய்யும் புரட்டும் ஜோனின் மேல் ஈட்டிகளாய் ஏவப் பட்டன! தூய நங்கை ஜோனைச் சூனியக்காரி என்று பட்டம் சூட்டி, நியாயமற்ற முறையில் அவளைத் தூக்கித் தீயின் வாயில் ஊட்டினர் ஆலயத் தூதர்கள்! அவ்விதம் செய்து எல்லாரது முன்பாக ஒரு பெரும் பொய்மூட்டை நிரந்தரமாய்ப் புதைக்கப் பட்டது! எல்லாரது முன்பாக மாபெரும் தவறு, மன்னிக்க முடியாத தவறு ஒன்று தெரியாமல் மறைக்கப் பட்டது!

சார்லஸ்: அதெல்லாம் போகட்டும்! எனக்கு மகுடம் சூடியவள் ஒரு சூனியக்காரி, மந்திரக்காரி என்று இகழ்ச்சி ஏற்படாத வரையில் பொய், புரட்டு பழிகளைக் கூறி ஜோனைத் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் பற்றி நானெதுவும் கவலைப்படப் போவதில்லை! கடைசியில் எல்லாம் முறையாக நடந்திருந்தாலும், ஜோன் அதைப் பொருட் படுத்தி யிருக்க மாட்டாள்! அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் நான் ஒருவனே! அவளுக்குக் கிடைத்தது நல்ல மரணம்! மண்ணுலகை விட்டு அவள் பொன்னுலகுக்குப் போய்விட்டாள்! தீ விழுங்கி ஜோன் கரிப் புகையாய் அழிந்து விட்டாள் என்று நினைப்பது நீ! தீயால் புனிதப்பட்டு நறுமணப் புகையாய்ப் புவியெங்கும் பரவி விட்டாள் என்று நினைப்பவன் நான்!

****

மிதந்து செல்லும் யுகம்,

மெதுவாய் நழுவும்

மறைவாய்,

ஒருவரது கண்ணை

ஒருவர் கட்டி!

காலத்தைப் போல

கடிது நகரும் ஒன்றை

ஞாலத்தில் காண்ப தரிது!

ஆயினும் உறுதி,

நன்னெறி விதைத்தவர்

உன்னதம் பெறுவது!

ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

ஏழாம் காட்சி (பாகம்-2)

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

 

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார்.

சார்லஸ்: அதெல்லாம் போகட்டும்! எனக்கு மகுடம் சூடியவள் ஒரு சூனியக்காரி, மந்திரக்காரி என்று இகழ்ச்சி ஏற்படாத வரையில் பொய், புரட்டு பழிகளைக் கூறி ஜோனைத் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் பற்றி நானெதுவும் கவலைப்படப் போவதில்லை! கடைசியில் எல்லாம் முறையாக நடந்திருந்தாலும், ஜோன் அதைப் பொருட் படுத்தி யிருக்க மாட்டாள்! அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் நான் ஒருவனே! அவளுக்குக் கிடைத்தது நல்ல மரணம்! மண்ணுலகை விட்டு அவள் பொன்னுலகுக்குப் போய்விட்டாள்! தீக்கனல் விழுங்கி ஜோன் கரிப் புகையாய் மறைந்து விட்டாள் என்று நினைப்பது நீ! தீயால் புனிதப் பட்டு நறுமணப் புகையாய்ப் புவியெங்கும் நிறைந்து விட்டாள் என்று நினைப்பவன் நான்!

லாட்வெனு: பலருக்குத் தெரியும் நீதிபதிகள் கைப்பணம் வாங்கிக் கொண்டு ஜோனுக்குத் தண்டனை நீதி வழங்கினார் என்று. ஜோனைப் பிடிப்பதற்குப் பணமுடிப்பு பிரெஞ்ச் பர்கண்டி வீரர் சிலருக்குக் கிடைத்திருக்கிறது. ஆங்கிலக் கோமகனார் பெரும் வெகுமதி கொடுத்து, ஜோனைப் பர்கண்டி முரடரிடமிருந்து பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது!

சார்லஸ்: படிப்பு வாசனை அற்ற அந்தப் பட்டிக்காட்டுப் பணிமங்கைக்கு அத்தனை மதிப்பா ? என்னைப் பிடிப்பதற்கோ அல்லது என்னை எரிப்பதற்கோ ஆங்கிலேயர் இத்தைய வெகுமதி கொடுப்பாரா வென்று தெரியவில்லை எனக்கு! பாழடைந்த பழைய நீதிபதிகளை நினைத்து ஏன் வருத்தப் படுகிறாய் ? அவர்கள் யாவரும் செத்துவிட்டார்! பழைய குப்பையைக் கிளரினால் ஏதாவது புதையல் கிடைக்கும் என்று தோண்டுகிறாயா ?

லாட்வெனு: இப்போது அவளது தண்டனை நியாய மற்றதென நீக்கப் பட்டுள்ளது! நீதி மன்றத்தின் பொய்ச் சாட்சியங்கள், வழக்குகள் மீண்டும் உளவப்பட்டு ஜோனின் குற்றங்கள் யாவும் பொய்யென்றும், புளுகென்றும், நிரூபிக்கப் பட்டன. பழிசுமத்திய பாதிரிகள் யாவரும் வழக்கு மன்றத்துக்கு இழுத்து வரப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர்! அத்தனை பேரையும் கடவுளும் தண்டித்து நரகத்தில் தள்ளப் போகிறார்!

சார்லஸ்: [வேதனைப்பட்டு] போதும் அந்தக் கதை! பொறுக்க முடியவில்லை என்னால்! திருச்சபைத் தேவர்கள் பைபிள் மீது உறுதி எடுத்துப் மெய்யாகக் கூறிய பொய்களைச் சொல்லியது போதும். திருச்சபைத் தேவர்கள் எரித்து ஒருவகையில் ஜோனுக்குப் பெரும் புகழை, நிரந்தர மதிப்பை அளித்திருக்கிறார்கள்! அப்படிப் பார்த்தால் அவர்களும் நரகத்துக்குப் பதிலாக சொர்க்க புரிக்கே போவார்கள்! …. ஆமாம்.. எனது மகுடத்துக்கு ஏதாவது ஆபத்துள்ளதா ? ஆங்கிலேயர் எனது நாட்டைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாரா ?

லாட்வெனு: உங்கள் தங்க மகுடத்துக்கு எந்த பங்க மில்லை மன்னரே! உங்கள் நாட்டுக்கோ அல்லது ஆட்சிக்கோ எந்த ஆபத்தும் இல்லை! நிம்மதியாக ஓய்வெடுங்கள்!

சார்லஸ்: பணிமங்கை ஜோனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன். என் மகுடத்துக்குப் பங்க மில்லை! அது போதும்! அவளது பொற்கரம் தொட்ட புனித மகுடமிது! வரலாற்றுப் புகழ் பெறும் வணிதாமணி கனிவாய்ச் சூட்டியது இது! அவள் எனது குல தேவதையாகி விட்டாள், இப்போது! எங்கள் பரம்பரையின் புனித மாதாகி விட்டாள் இப்போது! பிரெஞ்ச் நாட்டின் வரலாற்றில் விடுதலை நாயகி ஆகிவிட்டாள்! தன்னுயிரை ஈந்து பொன்னுலகுக்குப் போய் விட்டாள்! ஒரு காலத்தில் எவரும் அறியாத எளிய நங்கையாக இருந்தாள். இப்போது எல்லாருக்கும் தெரிந்த புனித மங்கையாக உயர்ந்து விட்டாள்!

லாட்வெனு: ஜோனுக்கு அது பெருமை அளிக்கும். அவளுக்குக் கிடைத்திருக்கும் உன்னத இடத்தைப் பார்த்தால், ஜோன் பூரிப்படைவாள்!

சார்லஸ்: இப்போது பிரெஞ்ச் மக்கள், அவள் இறந்தபின் அவளைப் புனித மாதாய்த் தொழுகிறார்கள். ஆனால் ஜோன் உயிர்பெற்று மீண்டும் இங்கு வந்தால், ஆறு மாதத்தில் அதே மாந்தர் மறுபடியும் அவளை எரிப்பதற்குத் தயாராவார்! நீவீரும் இதேபோல் சிலுவையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அலைவீர்! ஜோன் மாய்ந்து போனது, அவளுக்கும் நல்லது, நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது! ஜோன் மயான புரியில் அமைதியாய் ஓய்வு எடுக்கட்டும்! நீவீர் உமது கடமையில் மூழ்குவது உமக்கு நல்லது! நான் என் கடமையில் புகுவது எனக்கு நல்லது!

லாட்வெனு: கடவுள் ஆசீர்வாதம் எனக்கு. ஜோன் பாதையில் நான் குறுக்கிடாதது என் அதிர்ஷ்டமே!

சார்லஸ்: கடவுளுக்கு நன்றி கூறு! அவளிட்ட சாபம் உன்மேல் பாயாது! …. [சற்றும் முற்றும் பார்த்து] எங்கே மறைந்து போனார்கள் என் காவலர் ? ஒருவரையும் அருகே காணோம். …. யாரோ வரும் அரவம் கேட்கிறது. … யாரென்று உனக்குத் தெரியுமா ?

[கதவு பட்டெனத் திறந்து பளிச்சென மின்னலும், பெருங் காற்றும் அடித்து மெழுகுவர்த்தியை அணைத்து விடுகிறது!]

லாட்வெனு: … பலகணியை திறந்து இருட்டில் யாரோ அறைக்குள் நுழைவது தெரிகிறது! … [கூர்ந்து நோக்குகிறான்]

சார்லஸ்: யாராக இருக்க முடியும் ? [மறுபடியும் மின்னல் வெட்டுகிறது. மாயமான வடிவில் மங்கலான உருவம் ஒன்று தெரிகிறது] யாரது அங்கே ? பதில் சொல்! … [பயந்து போய் படுக்கையில் ஏறி அமர்ந்து கொள்கிறார்.] யாரவது எனக்கு உதவி செய்ய வாருங்கள். நான் வாளை எடுக்க மறந்து விட்டேன். மின்னல் கண்ணைப் பறித்து விட்டது. கண்கள் குருடாய்ப் போயின! …. எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை! [கண்களை மூடிக் கொள்கிறார்]

ஜோன் குரல்: மன்னரே! அஞ்சாதீர்! நான்தான் ஜோன்! பணிமங்கை ஜோன்! கீழே இறங்கி வாருங்கள். உங்களுடன் பேச வந்திருக்கிறேன். பார்த்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன! பயப்படாதீர்கள்! முடிவில் உதவி செய்யாமல் என்னைக் கைவிட்டுப் போனாலும், உங்கள் மீது எனக்குக் கோப மில்லை!

சார்லஸ்: உன்னைச் சரியாகக் காண முடியவில்லை! மங்கலாகத் தெரிகிறாய் நீ! பிசாசாக மாறி விட்டாயா ஜோன் ? நீ எப்போது பிசாசாக உருமாறினாய் ?

ஜோன் குரல்: நான் இப்போதும் பிசாசு இல்லை! நான் எப்போதும் பிசாசு இல்லை! நான் உயிரோடு உள்ளபோதுதான் பிசாசு என்னிடம் பேசுவதாக எல்லாரும் சொன்னார்! எரிந்து போன ஒரு மங்கை எப்படி பிசாசாக வருவாள் ? நீவீர் காண்பது ஒரு கனவு! கனவில் வந்திருப்பவள் வேறு யாருமில்லை, பணிமங்கை ஜோன்தான்! மன்னரே! என்னவாயிற்று உங்களுக்கு ? வயது முதிர்ந்து தாடி நரைத்துக் கிழவராய்த் தள்ளாடிப் போனீர்களே! மன்னரான பிறகு பொறுப்புக்கள் பளுவாகிப் போயினவா ?

சார்லஸ்: ஜோன் நீயா ? பார்! நீ குமரிப்பெண்! நான் கிழவன்தான்! கனவில் நீ வந்திருக்கிறாயா ? அப்படி யானால் நான் மெய்யாகத் தூங்குகிறேனா ? எரிந்து போன நீ எப்படி உயிர் பெற்றெழுந்தாய் ? கேலிக் கூத்தாய் இருக்கிறதே!

ஜோன்: நான் மாய்ந்து போனது உங்களுக்குக் கேலிக் கூத்தா இருக்கிறதா ?

சார்லஸ்: ஜோன்! நீ உண்மையாகவே செத்து விட்டாயா ?

ஜோன்: எல்லா பூமி மனிதரைப் போல், எப்போதும் உலகில் ஏற்படுவது போல் என்னுயிர் உடலை விட்டு நீங்கியது உண்மையே!

சார்லஸ்: ஜோன்! உடல் நெருப்பில் எரியும் போது, உயிர் உருவிப் பிரியும் போது உனக்கு மிகவும் துன்பமாக இருந்ததா ?

ஜோன்: எனக்கு நினைவில் இல்லை! முதலில் உடற் புண்கள் எரிந்தன! பிறகு எதுவும் உணர வில்லை!

மன்னரே! இதுவென்ன கேள்வி ? உம்மை நெருப்பு என்றும் சுட்ட தில்லையோ ? … சரி.. நான் சென்ற பின்பு இத்தனை வருடங்களை எப்படிக் கடத்தினீர் ?

சார்லஸ்: போருக்குப் பயந்த நான் உன்னைப் பின்பற்றினேன், ஜோன்! படைகளை நடத்திச் சென்று போரிட்டேன்! இடுப்புச் சகதியிலும், மனிதக் குருதியிலும் வீரர்களை கடத்திச் சென்றேன்! உன்னைப் போல் கோட்டைச் சுவர்களில் ஏணியில் ஏறினேன்! கீழே வீழ்ந்தேன்! படு காயப்பட்டேன்! ஆனால் போரில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்தது! பல பகுதிகளைப் பிடித்தேன்! எல்லாம் உன்னிடம் நான் கற்றுக் கொண்ட உத்திகள்தான்! உன்னைப் பின்பற்றினால், உனக்குக் கிடைத்தது போல், எனக்கும் வெற்றிகள் கிடைத்தன!

ஜோன்: [சிரிக்கிறாள்] ஓர் ஆட்டை மனித வேங்கையாய் மாற்றி விட்டேனே! ஆச்சரியம்தான்! [சிரிக்கிறாள்] மகிழ்ச்சி, மட்டிலா மகிழ்ச்சி! நானிட்ட திட்டங்களை மறக்காது, முடித்து விட்டார்களே! [சிரிக்கிறாள்] ஆங்கிலப் பேய்களை நாட்டை விட்டுத் துரத்திய உமக்கு எனது பாராட்டுகள்! [சிரிக்கிறாள்]

சார்லஸ்: [சிரிக்கிறார்] ஜோன்! ஜோன்!! ஜோன்!!! நீ புரட்சி மாது! நீ புனித மாது! நாட்டில் எங்கும் இப்போது புதிய பிரெஞ்ச் விடுதலைக் கொடி பறக்கிறது! [சிரிக்கிறார்]

ஜோன்: [சிரிப்பு அடங்கி] மன்னரே! ஒன்று கேட்கிறேன், உங்களை! இத்தனை வெற்றிகள் பெற்ற உங்களையும் கம்பத்தில் கட்டி நெருப்பில் எரித்தார்களா ? நான் அத்தனை வெற்றி பெற்றதற்கு என்னைக் கம்பத்தில் கட்டி எரித்தார்கள்! உங்களை ஏன் எரிக்க வில்லை ?

சார்லஸ்: [சிரிப்பு அடங்கிக் கவனமாக] நீ ஒரு பெண்! ஆனால் நானோர் ஆண் மகன்! அந்த வேற்பாடு என்னைக் காப்பாற்றியது! ஓர் ஆண்மகன் செய்ய வேண்டியதை நான் செய்தேன்! ஆயிரக் கணக்கான ஆண்டுகள், ஆண் வர்க்கம் செய்ததைத்தான் நான் செய்து முடித்தேன். அதில் ஒன்றும் வியப்பில்லை! ஆனால் ஆணாதிக்க பூமியில் பெண்ணுருவில் பிறந்த ஆண்மங்கை நீ! ஆண் புரிய வேண்டிய ஒன்றைப் பெண் செய்து முடிப்பதை ஆடவரால் தாங்கிக் கொள்ள முடியாது! ஆண் படை வீரர்களைத் தளபதியாகப் பெண் ஒருத்தி நடத்திச் செல்வது வரலாற்றில் காணாத நிகழ்ச்சி! அதை ஆடவரால் ஏற்க முடியாது! ஆதலால் ஆண்வர்க்கம் உன்னைப் பலிவாங்க வலை விரித்தது! தேவாலயத் திருவாளர்களைப் புறக்கணித்தாய் நீ! போப்பாண்டவரை வணங்க மறுத்தாய் நீ! தனியாக உன் கடவுளை தொழுதாய் நீ! அதனால் ஆலய விரோதத்தைச் சேமித்துக் கொண்டாய்! உன் உடலில் தீவைக்க நீயே உனக்கு விறகுகளை வெட்டினாய்! நீ உயிரோடு உலவி வருவதே பலரது கண்களை உறுத்திக் கொண்டு வந்தது!

[ஏழாம் காட்சி பாகம்-3]

****

‘ஒரு மனிதன் உன்னதக் கருத்தை உரைத்தால், அவன் உயர்ந்த மனிதன். ஆனால் ஒரு மாது அவ்விதம் சிறந்ததோர் கருத்தை மொழிந்தால், அவள் பொட்டைநாய் என்று தூற்றப்படுவாள். ‘

பியடிரிஸ் டேவிஸ் [Beatrice (Bette) Davis (1908-1989)]

‘ஆடவர் அனைவரும் ஒருவகையில் பலாத்காரம் செய்பவரே! அப்படித்தான் அவர் தம்மைக் காட்டிக் கொள்கிறார்! அவரது கண்களால், தமது சட்ட திட்டங்களால், ஆதிக்க வெறியால், ஆடவ நெறியால் நம்மைக் கட்டுப்படுத்தி என்றும் வலுத்தாக்கல் செய்து கொண்டுதான் வருகிறார். ‘

மரிலின் பிரெஞ்ச், நாவல் எழுத்தாளி [Marilyn French]

ஏழாம் காட்சி (பாகம்-3)

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

 

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப் படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது.

ஜோன் அசரீரிக் குரல்: மன்னரே! வெற்றி பெற்ற உங்களையும் கம்பத்தில் கட்டி நெருப்பில் எரித்தார்களா ? நான் வெற்றி பெற்றதற்கு அப்பாவி என்னைப் பிடித்துக் கம்பத்தில் கட்டி எரித்தார்கள்! உங்களை ஏன் எரிக்க வில்லை ?

சார்லஸ்: [சிரிப்பு அடங்கிக் கவனமாக] போப்பாண்டவரை விட்டு நீ எல்லாவற்றையும் உன் கடவுள் பெயரில் செய்தது மாபெரும் தவறு! ஆணுடையில் திரிந்தாலும், நீ பெண்ணாக இருந்தது அடுத்த தவறு! நான் ஆண் மகன்! ஓர் ஆண்மகன் செய்ய வேண்டியதை நான் செய்தேன்! ஆயிரக் கணக்கான ஆண்டுகள், ஆண் வர்க்கம் செய்ததைத்தான் நான் செய்து முடித்தேன். அதில் ஒன்றும் வியப்பில்லை! ஆனால் ஆணாதிக்க உலகில் பெண்ணுருவில் பிறந்த ஆண்மங்கை நீ! ஆண் புரிய வேண்டிய ஒன்றைப் பெண் செய்வது, ஆடவருக்குப் பிடிக்காது! ஆண்படை வீரர்களைத் தளபதியாக ஓர் பெண் நடத்திச் செல்வது வரலாற்றில் காணாத நிகழ்ச்சி! ஆதலால் ஆண்வர்க்கம் உன்னை ஒழித்துக் கட்ட வலை விரித்தது! தேவாலயத் திருவாளரைப் புறக்கணித்துப் போப்பாண்டவரை வணங்காமல் நீ தனியாக உன் கடவுள்களைத் தொழுதாய்! அதனால் நிரந்தர ஆலய விரோதத்தைச் சேமித்துக் கொண்டாய்!

ஜோன் குரல்: உண்மைதான்! கடவுள் ஆணைப்படி செய்ததால், நான் ஆலயப் பகைமையைத் தேடிக் கொண்டேன். போப்பாண்டவருக்கு மண்டி யிடாததால், மதத் துரோகியாகப் பழி சுமத்தப் பட்டேன். நான் எரிக்கப் பட்டதற்கு மெய்யான காரணங்கள் இரண்டு: நான் ஆணுடை அணிந்து உலவியது முதற் காரணம். போர்த் தளபதியாகப் போரை முன்னின்று நடத்தி அடுத்தடுத்து வெற்றி வெற்றது மற்றொரு காரணம்.

சார்லஸ்: ஆயினும் உனக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன். சாகும் வரை உனக்கு நன்றி சொல்ல வேண்டியவன். என்னை நீ தூண்டா விட்டால் நான் வாளெடுத்துப் போரிட்டிருக்க மாட்டேன். என் நெஞ்சில் நீ நின்று கட்டளை யிடாவிட்டால், நான் என்றும் மண்புழுவாய் பூமிக்குள் பதுங்கிக் கிடப்பேன்! உண்பதும் உறங்குவதும் தவிர வேறு எதிலும் என் மனம் ஈடு பட்டிருக்காது. உன்னைப் பின்பற்றி இப்போது நான் வெற்றிகள் பலவற்றைச் சூடிய வேந்தன். நான் வீரனாக மாறினேன், நீ வீராங்கனை ஆனதால்!

ஜோன் குரல்: உங்களை நான் மாவீரனாக ஆக்கியது உண்மைதானா ?

சார்லஸ்: மூடிப் போன என் கண்களின் இமைகளைத் திறந்தவள் நீ! அதில் சிறிதேனும் ஐயமில்லை! ஆயிரமாயிரம் பிரெஞ்ச் படை வீரர்களின் நெஞ்சில் கனலை எழுப்பி, பிரான்சின் முதல் புரட்சி நங்கை என்று வரலாற்றில் இடம் பெற்றவள் நீ! ஆனால் நீ என்னை விட்டு நீங்கிய பிறகுதான், என் நெஞ்சில் தீக்கனல் எழுந்தது! ஆயினும் ஆக்னெஸ் அக்கனலை அணைக்க முயன்றாள்!

ஜோன் குரல்: ஆக்னெஸ்! அது யார் ? ஆக்னெஸ்! ஆணா ? பெண்ணா ?

சார்லஸ்: அவள் ஒரு மாது! ஆக்னெஸ் ஸோரல் என்பது அவளின் முழுப் பெயர்! என்னைக் கவர்ந்த பெண்ணழகி அவள்! அவள் மீது எனக்குத் தீராக் காதல்! அடங்காக் காதல்! பல இரவுகள் என்னரும் தூக்கத்தைக் கலைத்தவள் அவள்! ஆனால் நான் தூங்கியதும் என் கனவில் வருவாள்! அடிக்கடிக் கனவுகளில் வந்து, பகல் பொழுதிலும் என்னைப் பேயாய்ப் படுத்தினாள்! ஆனால் நீ ஒரு நாளாவது என் கனவில் வந்ததில்லை!

ஜோன் குரல்: [ஏளனச் சிரிப்புடன்] காரணம் தெரியுமா ? ஒருபோதும் நீங்கள் என்னை நேசித்த தில்லை! நான்தான் உங்களை நேசித்தேன்! நீங்கள் மீண்டும்

எங்கள் மன்னனாக முடி சூட வேண்டும் என்று அப்போது கனவு கண்டவள் நான், நீங்கள் மண் புழுவாகத் தூங்கிய போது! மண் புழுக்கள் கனவு காண்ப தில்லை! மாடப் புறாக்கள்தான் கனவு வானில் பறப்பவை! கனவுகள் கண்டு நான் கனவுகளை வெற்றியாக மாற்றினேன்! ஆமாம், ஆக்னெஸ் என்னைப் போல் இறந்து போய் விட்டாளா ?

சார்லஸ் மன்னன்: [மனமுடைந்து வருத்தமுடன்] ஆமாம் ஜோன்! என் அருமைக் காதலி மரித்து விட்டாள். அவள் உன்னைப் போல் இல்லை! தெரியுமா ? அவள் மிக்க பேரழகி! ஆடவரை மயக்கும் அழிலரசி அவள்! நீ அவளைப் போல இல்லை!

ஜோன் குரல்: [குலுங்கிச் சிரித்துக் கொண்டு] அடடா! என்ன பேச்சு இது ? நான் அழகுப் போட்டிக்கு வந்தேனா ? ஆணுடையில் என்னை மூடிக் கொண்ட நான், என்றைக்கு அழகைப் பற்றி நினைக்க எனக்கு நேரம் வந்தது! நான் என்றும் அழகைப் பற்றிக் கவலைப் பட்டவள் இல்லை! அரண்மனை அரசிகளுக்கு அழகு தேவை! பட்டிக் காட்டுப் பாவையான எனக்கு அழகு ஆபத்து அளிக்கும்! அழகு அவளுக்கு அழிவைத் தரும். ஆதலால்தான் நான் படைகள் மத்தியில் பாதுகாப்புக் காக ஆணுடையில் ஒளிந்து கொண்டேன்! ஆனால் என் மூளை எப்போதும் மேல் நோக்கியே சிந்தனையில் இருந்தது. கடவுளின் மகத்துவம் என் மீது படிந்தது! ஆகவே ஆணோ அல்லது பெண்ணோ நான் யாராக இருந்தாலும், மண் புழுவாய் நெளிந்த உங்களை நான் உலுக்கி எழுப்பி மானிட வீரனாக்கி யிருப்பேன்! சொல்லுங்கள் இப்போது! என்னவாயிற்று நான் எரிக்கப் பட்டதும் ?

சார்லஸ்: உன் அன்னையும், சகோதர்களும் வழக்கு மன்றத்தைக் குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தனர். மூடிவிட்ட உன் வழக்கை மீண்டும் விவாதிக்க முயற்சி எடுத்தனர். வழக்கு மன்றம் அவரது விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு விசாரணை செய்தது! முடிவு: உனக்குத் தண்டனை யிட்ட வழக்கு மன்ற நீதிபதிகள் அனைவரும் கைப்பணம் வாங்கிக் கொண்டு உன்னைத் தீயிலிட்டு வாட்ட ஆணை யிட்டனர் என்று தெரிகிறது! அத்தனை பேரும் அயோக்கியர் என்பது அறிய வந்தது. அத்தனை பேரும் பைபிளைத் தொப்பிக்குள்ளே வைத்துக் கொண்டு, உன்னைப் பொய்க்குற்றம் சாட்டியதாகக் காணப் படுகிறது.

ஜோன் குரல்: தேவாலயத் திருச்சபைத் தூதர் அப்படிச் செய்தார் என்பதை என்னால் நம்ப முடிய வில்லை. இப்போது எங்கிருக் கிறார்கள் அந்த நீதிபதிகள் ?

சார்லஸ்: அவர்கள் யாவரும் செத்து விட்டார்! இப்போது உயிரோடு நரகத்தில் மண்டி யிட்டு உன்னைத் துதித்துக் கொண்டு நிற்பார்கள்! ஆமாம், நீ இப்போது எங்கிருக்கிறாய் ? நரகத்தில் நீ விழுவாய் என்று திருச்சபைத் தேவர்கள் கனவு கண்டார்! என்னவாயிற்று ? அவர்கள் நரகத்திலும், நீ சொர்க்கத்திலும் இருப்பது இக்கால வரலாறு!

ஜோன் குரல்: எனக்குச் சொர்க்கபுரி பிடிக்க வில்லை! இப்போது நான் விடுதலையான பிரான்ஸின் சூடான காற்றை நுகர வந்திருக்கிறேன்! அத்துடன் என் நிழலைப் பின்பற்றிய உங்களைப் பாராட்டிச் செல்லவும் வந்திருக்கிறேன். என்னைப் பழி சுமத்தித் தண்டித்த நீதிபதிகளை நான் மன்னிக்கிறேன்.

சார்லஸ்: கவலைப் படாதே ஜோன்! நீ விடுதலை செய்யப் பட்டாய், நிரந்தரமாய்! உன் மீது சுமத்திய குற்றங்கள் யாவும் நீக்கப் பட்டன! சுமத்திய பழிகள் யாவும் பொய்யென நிரூபிக்கப் பட்டன! உன்னை பிரெஞ்ச் நாடு புனித மாதாய் ஏற்றுக் கொண்டது, முடிவில்! ஜோன்! மெய்யாக வெற்றி பெற்றது நீதான்!

ஜோன் குரல்: இல்லை! இல்லை! வெற்றி பெற்றது நான் ஆயினும் இனிமேல் உயிரோடு வரப் போவதில்லை! என் ஆயுள் வாலிபத்திலே எரிக்கப்பட்டு விட்டது! என்னைச் சாம்பலிலிருந்து அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா ?

சார்லஸ்: உண்மைதான்! அவர்கள் உன்னை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஆனால் உன்னை எரித்துச் சாம்பலாக்கிய திடலில் உன் பணிக்காக, உன் நிரந்தர நினைவுக்காகப் பெரும் சிலுவை ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது! உனக்கிழைத்த தவறுக்காக, உன்னிடம் நிரந்த மன்னிப்புக் கேட்பதற்காக அந்த சிலுவை நாட்டப் பட்டுள்ளது!

ஜோன்: உயிரோடு ஆணுடையில் உலவிய போது, கடவுளின் உண்மைகளைச் சொல்லிய போது என்னைச் சூனியக்காரி என்று பிரெஞ்ச் மாந்தரும், ஆங்கில மூர்க்கரும் தூற்றினர்! மந்திரக்காரி, பிசாசுகளின் கெட்ட போதனைகளைக் கேட்பவள் என்று கேலி செய்தனர்! ஆனால் இப்போது எப்படி மாந்தர் மாறினர் ? பித்துடன் நாட்டுக்கு உழைத்த என்னைக் காலால் மிதித்தனர்! செத்த பிறகு தமது சிரசில் தூக்கி என்னைத் துதித்தனர்! விசித்திரமான மக்கள்! வேடிக்கை யான உலகம்! என்னை எரித்த இடத்தில் ஏசு நாதரின் சிலுவையை எனக்காக நாட்டியதைக் கேட்டுப் பூரிப்படைகிறேன்! ஆனால் என்னை விரும்பி எரித்தவர் கையால் அந்த சிலுவை நிறுத்தப் பட்டிருந்தால் என் ஆன்மா சாந்தி அடையாது! உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் போலி உத்தமரை நான் மனதாற வெறுக்கிறேன்.

சார்லஸ்: ஜோன்! உன் வாயிலிருந்து எனக்கு நன்றி சொல்! கடைசியில் உன் பழிக் குற்றங்களை நீக்க நான்தான் முற்பட்டேன், ஜோன்! நானுக்குச் செய்த பாபத்திற்கு ஈடாக, நீ புனித மாது என்று நிரூபித்துக் காட்டினேன் ஜோன்! அதற்காக உன் கனிவு உதடுகள் நன்றி எனக்குச் சொல்லட்டும்! அப்போதுதான் என் மனப்புண் ஆறும்! என் தூக்கமற்ற இரவுகள் தரும் ஏக்கத்தை ஒருவாறு நீக்கும்!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] நன்றி மன்னரே! நன்றி! [சிரிக்கிறாள்]

கெளஸான்: [அசரீரிக் குரலில்] பொய்! பொய்! பொய்! ஜோன்! நம்பாதே! சார்லஸ் மன்னர் சொல்வது பொய்! முற்றிலும் பொய்! அவரை நம்பாதே! ஆடவரை நம்பாதே!

சார்லஸ்: [கோபத்துடன்] யாரது ? என்னைப் புளுகன் என்று பழிப்பவர் யார் ?

கெளஸான்: நான்தான் கெளஸான்! பாதிரி பீட்டர் கெளஸான்! ஜோனுக்கு நீதி அளித்த ஆலயத் தேவன்!

ஜோன்: ஆலயத் தேவரே! வணக்கம்! ஆடவரை நம்பாதே என்று சொல்லும் உங்களை மட்டும் எப்படி நம்புவது ? என்னைத் தீ அருவியில் குளிப்பாட்டிய பிறகு, நீர் அருவியில் திளைத்த உங்கள் நெஞ்சத்தில் புத்தொளி ஏதேனும் பிறகு பூத்ததா ?

கெளஸான்: இல்லை! ஜோன் இல்லை! என்னிடம் இருந்த புத்தொளி முற்றிலும் அணைந்து விட்டது! என் தலைமையில் உனக்கு அளித்த நீதியும் தண்டனையும் மனிதர் தந்தவை! தவறாகத் தந்தவை! அது கடவுள் அளித்த நீதியன்று!

ஜோன்: நான்தான் எரிந்து போய் விட்டேன்! கெளஸான் தேவரே! நீங்களாவது உயிருடன் வாழ்கிறீர்களா ?

கெளஸான்: [கவலையுடன்] நான் செத்து விட்டேன்! அத்துடன் சீரழிக்கப் பட்டேன்! என்னைப் புதைத்த பிறகும், என் பாபங்கள் என்னை விடாமல் துரத்தின! புதை பூமியிலிருந்து என்னுடலைத் தூக்கி மக்கள் சாக்கடையில் வீசி எறிந்தனர்! செத்த பின்னும் நான் காலால் மிதிக்கப் பட்டேன்! நீ எரிந்து மரித்தாய்! ஆனால் மீண்டும் எழுந்த நீ புனித மாதாய்ப் பூமியில் புத்துயிர் பெற்றாய்! செத்த பின் நீ தேவக் கன்னியாய் மாறி யாவராலும் துதிக்கப் பட்டாய்!

ஜோன்: உயிருற்ற என்னுடல் தீக்கனலில் துடித்த மாதிரிச், செத்துப் போன உங்கள் உடல் சாக்கடை நாற்றத்தை நுகர்ந்திருக்காது!

****

ஏழாம் காட்சி (பாகம்-4)

‘செய்யப்படும் எந்த நற்பணி தண்டிக்கப் படாமல் தப்பிச் செல்வ தில்லை! ‘ ‘நான் ஒரு மாது. அபாரமான முயற்சியில் ஈடுபட்டு நான் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்! நான் தோல்வி அடைந்தால், அவளிடம் தேவையான திறமில்லை என்று யாரும் கூறமாட்டார்! மாதரிடம் போதிய ஆற்றலில்லை என்றுதான் சுட்டிக் காட்டுவார்கள். ‘

‘ஆணாதிக்கம் மாதரைக் கீழே அமுக்கிக் கொண்டிருக்கிறது. ‘

‘என்னைக் காரசாரமாய் எதிர்க்கும், தனிப்பட்ட எனக்குப் பகைவர் யாரும் இஒபோதில்லை! அனைவரும் செத்து விட்டார்! அவர் அருகிலின்றி மறைந்து போனது எனக்கொரு பேரழப்பு! ஏனெனில் அவர்கள்தான் நான் யாரென்பதைக் காட்டியவர். ‘

கிளார் பூத் லூசி [Clare Boothe Luce, Playwright & US Ambassador]

 

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

 

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]
 5. பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப் படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது. அடுத்து பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் குரலும் காதில் படுகிறது.

ஜோன் குரல்: ஆலயத் திருவாளரே! என்னை எரித்துப் பூரித்த நீங்களாவது உயிரோடிருக்கிறீரா ?

கெளஸான் குரல்: [கவலையுடன்] நானும் செத்து விட்டேன், ஜோன்! செத்தும் சீரழிக்கப் பட்டேன்! புதைத்த பிறகும், என் பாபங்கள் என்னை விடாமல் துரத்தின! புதைப் பூமியிலிருந்து என்னுடலைத் தோண்டி மக்கள் சாக்கடையில் வீசி எறிந்தனர்! செத்த பின் பலரது காலால் மிதிக்கப் பட்டேன்! ஜோன்! நீ மரித்தாலும் மீண்டும் எழுந்தாய்! புனித மாதாய்ப் பூமியில் நீ புத்துயிர் பெற்றாய்! செத்த பின் நீ தேவக் கன்னியாய்த் துதிக்கப் பட்டாய்!

ஜோன் குரல்: உயிருள்ள என்னுடல் தீக்கனலைச் சுவைத்த மாதிரி, உயிரற்ற உங்கள் உடல் சாக்கடை நாற்றத்தை நுகர்ந்திருக்காது! என்னுடல் துடித்தது! செத்த உடலுக்குச் சிந்தனை உண்டா ? உணர்ச்சி உண்டா ? உயிருள்ள என் உடலுக்கு மதிப்பு அளிக்காத நீங்கள், உயிரற்ற உமது உடலுக்கு ஒப்பாரி வைப்பதா ?

கெளஸான் குரல்: [வேதனையுடன்] ஜோன்! என்னையும், என்னுடலையும் அவர்கள் துச்சமாக அவமதித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! அது ஒரு பெரும் அநீதி! ஆலயத்துக்குச் செய்த அநீதி! நீதி மன்றத்துக்குச் செய்த துரோகம்! நீதி, நெறிகள் மீது மாந்தரின் நம்பிக்கை அறுந்து போன தன்மையைக் காட்டியது! ஆலயத்தின் அடித்தளத்தைத் தகர்த்து வலுவற்றதாக மெலிவாக்கியது! மாந்தரின் காலடியில் கடின பூமியும், கொடுங் கடல் போல ஆடியது! சட்டத்தின் பேரில் என்னைப் போன்ற அப்பாவிப் பாதிரிகள் தாக்கப் படுவது, நசுக்கப் படுவது தவறு, அநீதி, அடாத செயல், அக்கிரமம். கொதிக்கிறது என் நெஞ்சம்!

சார்லஸ் மன்னன்: பணிமங்கை ஜோன் உடலும், உயிரும் கனலில் கொதிக்கும் போது, உங்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது! உங்கள் செத்த உடலைக் குப்பையில் போட்டது மட்டும் எப்படிக் கொதிப்பை உண்டாக்கும் உமக்கு ? அப்பாவி ஜோனைச் சூனியக்காரி என்று பழிசுமத்தி, மதத் துரோகி என்று குற்றம் சாட்டி, நீவீர் கொடுத்த கடும் தண்டனை மட்டும் அநீதி அல்லவா ?

கெளஸான் குரல்: சார்லஸ் மன்னரே! எனக்கு ஞானம் பிறந்திருக்கிறது! ஜோனை இன்று நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தினால், அவளைப் புனிதவதி என்று போற்றி நான் காப்பாற்றுவேன்! பிரெஞ்ச் நாட்டின் விடுதலைப் பெண்ணென்று ஜோனைப் பாராட்டுவேன். அவள் இப்போது உயிரோடில்லை! நானும் உயிரோடில்லை! அவள் சொர்க்க புரியில் கடவுளின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்! ஆனால் நானோ நரக புரியில் பைபிளை மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்!

ஜோன் குரல்: உங்களைப் போன்று எனது பகைவரும் இப்போது என்னை நேசிக்கிறார்கள். அதற்குக் காரண கர்த்தா கெளஸான் பாதிரி நீங்கள்தான்! என்னை எரித்துச் சாம்பலாக்கி ஊதிவிட்ட உத்தமர் நீங்கள்தான்! எனது பகைவர் வேண்டியதைப் பண்ணிக் காட்டிய ஆலயப் பாதிரி நீங்கள்தான்! என்னைப் பிரெஞ்ச் மாந்தர் பல்லாண்டுக் காலம் மறக்காதபடி, மாபெரும் புனிதத் தொண்டு புரிந்த புண்ணிய கோடி நீங்கள்தான்!

கெளஸான் குரல்: ஆனால் ஜோன்! உன்னைப் போல் என்னை யாரும் பிரான்சில் நினைப்ப தில்லை! நேசிப்பது மில்லை! பொல்லாத பாதிரியாய் என்னைப் புதிய கண்ணோடு ஏனோ பார்க்கிறார். என் பிறப்பால், இறப்பால் நன்னெறி மீது துர்நெறி, மெய்மை மீது பொய்மை, நன்மை மீது தீமை, கனிவு மீது கடுமை, சொர்க்கம் மீது நரகம் ஆகியவை வென்றதாக எனக்குச் சாபம் கிடைத்துள்ளது! உன்னை நினத்தால் அவரது ஆன்மா உன்னதம் பெறுகிறது! என்னை நினைத்தால் அவரது உள்ளம் இன்னல் அடைகிறது! ஆனால் நான் நியாயமாக இருந்ததற்குக் கடவுளே எனக்குச் சாட்சி! மெய்யாகக் கனிவு கொண்டவன் நான். பரிவு கொண்டவன் நான். ஆலய ஒளிக்குக் கட்டுப்பட்டவன் நான். கடைசியில் ஜோனுக்குச் செய்தவற்றை, நான் மாற்றிச் செய்திருக்க முடியாது!

சார்லஸ் மன்னன்: [பாதிரிக் குரல் வரும் திசைநோக்கி] உம்மைப் போன்ற ஆலய உத்தமர்தான் ஊழல் புரிவார்! பிறர்க்குத் துன்பம் விளைவிப்பார்! என்னைப் பாருங்கள். நன்னெறிச் சார்லஸ் அல்லவன் நான்! நல்லறிவுச் சார்லஸ் அல்லவன் நான்! அச்சமற்ற சார்லஸ் அல்லவன் நான்! ஜோனை வணங்குவோர் என்னைக் கோழை என்று தூற்றுவார்! ஏனெனில் நானோடிப் போய் ஜோனைத் தீயிலிருந்து காப்பாற்ற வில்லை! மெய்யாக நானொரு கோழைதான்! ஆயினும் ஜோனைத் தீயிலிட்டுப் பொசுக்கி வேடிக்கை பார்த்த உங்களைப் போன்ற உத்தமரை விட, நான் குறைந்த பாதகமே புரிந்துள்ளவன்! பைபிள் பக்கங்களைப் படித்து மூளையில் பதிவு செய்த உங்கள் சிரசு, எப்போதும் வானைப் பார்த்து, உலகைத் தலைகீழாக மாற்ற முற்படுகிறது! நான் உலகை நேராகக் காண்பவன்! மேற்புறமே முறையான நேர்ப்புறம்! எனது கண்கள் தரையை நோக்கியே பார்ப்பவை! பிரான்சில் என்னைப் போன்ற எளிய வேந்தனைக் காண முடியுமா ?

ஜோன் குரல்: சார்லஸ் மன்னரே! பூரிப்படைகிறேன்! நீங்கள் பிரெஞ்ச் நாட்டின் மெய்யான பேராட்சி வேந்தர் அல்லவா ? அன்னிய ஆங்கிலப் படைகள் அனைத்தும் பிரான்சை விட்டு வெளியேறி விட்டனவா ?

சார்லஸ் மன்னன்: ஜோன்! உன் கனவு பலித்தது! நான் பிரான்சின் பேராட்சி வேந்தன்! அதில் ஐயமில்லை! கோழையாய் ஒடுங்கியவனை நிமிர்த்தி, நேராக்கிக் கோமகனாய் ஆக்கியவள் நீ!

[அப்போது ஜாக் துனாய்ஸ் குரல் கேட்கிறது.]

துனாய்ஸ் குரல்: ஜோன்! உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன், நான். ஆங்கிலேயரைப் பிரான்ஸ் நாட்டிலிருந்து துரத்தி அடித்து விட்டேன்.

ஜோன் குரல்: யாருடைய குரலிது ? … துனாய்ஸ், நீயா ? நமது போர்ப்படைத் தளபதி துனாய்ஸா ? என்னைப் பின்பற்றி என் ஆணையில் போரிட்டு வெற்றி பெற்ற என் நண்பன், துனாய்ஸா ?

சார்லஸ்: ஆம் ஜோன்! நீ விட்ட பணியைத் தொடர்ந்த தளபதி, துனாய்ஸ்தான் அது. உனக்குப் பிறகு என் ஆணைக்கு வணங்கிய துனாய்ஸ் தளபதி, ஆம், அவரேதான்!

ஜோன் குரல்: கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், துனாய்ஸ்! சார்லஸ் மன்னர் ஆட்சிக்குக் கீழாகப் பிரான்சைப் பெரு நாடாக்கிய தளபதியே! பாராட்டுகிறேன் உன்னை! சொல் எனக்கு. எப்படிப் போர்த் திட்டமிட்டாய், நான் திட்ட மிட்டபடிதானே ? எங்கே முதலில் படையெடுத்தாய் ? எத்தனை வெற்றிகள் பெற்றாய் ? நமது படைவீரர் எத்தனை பேர் உயிரிழந்தனர் ? உயிரோ டிருக்கிறாயா நீ ? அல்லது என்னைப் போல் நீயும் செத்து விட்டாயா ?

துனாய்ஸ் குரல்: நானின்னும் சாக வில்லை ஜோன்! நான் படுக்கையில் தூங்கியபடி யிருக்கிறேன். என்னுடைய ஆன்மாவை இங்கே உன் ஆன்மா அழைத்தது. ஆகவே உன்னுடன் பேச வந்திருக்கிறேன்.

ஜோன் குரல்: துனாய்ஸ்! உண்மையைச் சொல். என் போர் முறையைப் பின்பற்றிப் போரிட்டாயா ? எப்படிப் போரிட்டாய் ? கைப்பணம் கொடுத்து ஆட்களை வெளியேற்றும் பழைய முறை யில்லை அல்லவா ? சொல்லெனக்கு! பணிமங்கை போரிட்ட மாதிரிதானே! பணிவாகத் தணிவாகக் கனல் பறக்கும் விழியுடன், முழு மனதுடன், மெய்வருந்திப் போரிடும் முறைதானே! ஏமாற்று வித்தைகளின்றி கடவுளுக்குச் சார்பாக பிரான்சை விடுவித்தாயா ? சொல் துனாய்ஸ் சொல்!

துனாய்ஸ் குரல்: ஜோன்! நான் கற்ற தெல்லாம் உன்னிடம்! முழுக்க முழுக்க உன்னைப் பின்பற்றித் தொடர்ந்த போர்தான்! கடவுள் மீது உறுதிமொழி எடுத்துப் படைகளுக்கு நம்பிக்கை ஊட்டினேன், உன்னைப் போல்! வீறு கொண்டு கொதித்து எழுந்தனர் நம் படைவீரர்! படைகளின் தலையை நிமிர்த்திய, நெஞ்சை உயர்த்திய, உன் போர் உரைகளைத்தான் நானும் பயன்படுத்தினேன். வெற்றிமேல் வெற்றிகள் எங்கள் மடிமீது விழுந்தன! ஆங்கிலப் படைகள் முன்னும் பின்னும் தாக்கப்பட்டு மடிந்து விழுந்தன! உன்னை வழக்கு மன்றத்தில் விசாரணை நடத்திய போது, நானுனக்கு அழகிய ஓர் மடலை எழுதி அனுப்பினேன், தெரியுமா ? ஆலயக் கழுகுகள் ரோவனில் உன்னை எரிக்கப் போவதைத் தடுக்க நான் வந்திருக்கலாம்! ஆனால் தளபதியாகப் போரிடும் நான் படைகளை நடுவில் விட்டுவிட்டு, ரோவனுக்கு வர முடியாமல் போனது. மேலும் அது தேவாலய வழக்கு! நான் குறுக்கிட முடியாது! வந்துன்னைக் காப்பாற்ற முயன்றால் நானும் உன்னைப்போல் பிடிக்கப் பட்டிருப்பேன்! உன்னோடு சேர்த்து என்னையும் இன்னொரு கம்பத்தில் எரித்து விட்டிருப்பார். நாமிருவரும் எரிந்து பூமியை விட்டுப் போயிருந்தால், பிரான்சின் கதி என்னவாயிருக்கும் ?

ஜோன் குரல்: துனாய்ஸ்! நீ செய்தது சரிதான்! நாமிருவரும் ஒரே சமயத்தில் மாளக் கூடாது!

கெளஸான் குரல்: என்ன ? ஆலயப் பாதிரிகளின் மீதா பழியைப் போடுகிறாய் ? நான் சொல்கிறேன், கேள். கெளஸான் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் நெளிபவன் அல்லன்! உலகத்தைக் காப்பவர் உன்னைப் போன்ற படைவீரர் அல்லர்! என்னைப் போன்ற பாதிரிகளும் அல்லர்! உலகைப் பாதுகாப்பவர் கடவுளும், அவரது புனித சீடருமாவர்! ஜோனைப் பிடித்து பணமுடிப்புக்கு வாயைப் பிளந்து, ஆங்கில முரடருக்கு விற்றவர், உமது பர்கண்டிப் படைகள்! ஆங்கில அதிகார வர்க்கம் வேண்டியபடி விசாரணை நடத்தி, ஜோனைக் தீக்கம்பத்தில் எரித்தது, ஆலயப் பட்டாளிகள் [Church Militants]! ஆலயப் பாதிரிகள் அல்லர்!

****

‘நான் மதமாற்றம் செய்ய விரும்பினால், காத்திலிக் மதம் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஏனெனில் அந்த ஒரு மதத்தில்தான் புனித தேவதைகளும், கன்னி மேரி மாதாவும் தெய்வ அணங்குகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். ‘

நாவல் எழுத்தாளி: மார்கரெட் ஆட்வுட் [Margaret Atwood, Canada ‘s Poet, Novelist]

ஏழாம் காட்சி (பாகம்-5)

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

 

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]
 5. பிரெஞ்ச் போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப்படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது. அடுத்து பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் குரலும் காதில் படுகிறது.

அவர்கள் உரையாடல் நடக்கையில், படைவீரன் ஒருவன் உள்ளே நுழைகிறான்.

கெளஸான் குரல்: என்ன ? ஆலயப் பாதிரிகளின் மீதா பழியைப் போடுகிறாய் ? நான் சொல்கிறேன், கேள். கெளஸான் வரட்டுப் புகழ்ச்சிக்கும், மிரட்டு இகழ்ச்சிக்கும் நெளிபவன் அல்லன்! உலகத்தைக் காப்பவர் உன்னைப் போன்ற படைவீரர் அல்லர்! என்னைப் போன்ற பாதிரிகளும் அல்லர்! உலகைப் பாதுகாப்பவர் கடவுளும், அவரது புனித சீடருமாவர்! ஜோனைப் பிடித்துப் பணமுடிப்புக்கு வாயைப் பிளந்து, ஆங்கில முரடருக்கு விற்றவர், உமது பர்கண்டிப் படைவீரர்! ஆங்கில அதிகார வர்க்கம் வேண்டியபடி விசாரணை நடத்தி, ஜோனைக் தீக்கம்பத்தில் எரித்தது, ஆலயப் பட்டாளிகள் [Church Militants]! கனிவு பொழியும் ஆலயப் பாதிரிகள் அல்லர்!

[அப்போது வேடிக்கையாகப் பாடிக் கொண்டே, ஆடிக் கொண்டே ஒரு படைவீரன் உள்ளே நுழைகிறான்.]

துனாய்ஸ் குரல்: யார் நீ ? ஏன் பாடுகிறாய் ? ஏன் ஆனந்தமாய் ஆடுகிறாய் ? நீ என்ன கோமாளியா ?

படைவீரன்: நான் கோமாளி அல்லன்! நானொரு படையாளி! என் மனதில் ஆனந்தம் தாண்டவம் ஆடுகிறது. பாட்டு எனக்கு நாக்கில் தானாய் வருகிறது! ஆட்டம் எனக்குக் கால்களில் தானாய் வருகிறது! நான் நரகத்திலிருந்து வருகிறேன். நானொரு புனித மனிதன்! நரகத்திலிருந்து வரும் புனித நரன்!

ஜோன்: என்ன ? நீ ஒரு புனித மனிதனா ? புனித தேவனில்லையா ? புனித நரன் என்று நான் கேள்விப் பட்டதில்லை. மனிதன் மகத்துவப் பணிகள் புரிந்து புனித தேவன் ஆகிறான்! நீ எப்படி புனித மனிதனாய்ப் பூமியில் உலவிக் கொண்டிருக்கிறாய் ? என்ன புனிதப் பணி நீ புரிந்திருக்கிறாய் ?

படைவீரன்: ஆம் நானொரு மனிதனே! தேவனில்லை! ஒருநாள் மட்டும் புனிதம் செய்து மனிதனாக உலவி வருபவன்! நரகத்திலிருந்து ஒருநாள் விடுமுறையில் பூமிக்கு வந்தவன். நரகத்தில் புகுந்த புனித நபரில் நான் ஒருவன்! நான் செய்ததை மகத்துவப் பணியென்று சொல்லமாட்டேன்.

ஜோன்: என்ன ? நரகத்திலிருந்து வருகின்ற புனிதன் என்றால் எனக்குப் புரியவில்லை!

படைவீரன்: ஆம் இளம் நங்கையே! நான் நரகத்தில் நிரந்தரமாய் அடைக்கப்பட்ட நரன்!

துனாய்ஸ்: புனித நரன் என்றால் என்ன பொருள் ? அதை எங்களுக்கு விளக்கமாய்ச் சொல்.

படைவீரன்: நான் செய்த ஒரே ஒரு நற்பணிக்கு நரகத்தில் வெகுமதி கிடைத்தது! ஓராண்டுக்கு ஒருநாள் விடுமுறை எனக்கு! அதனால்தான் எனக்கு ஆட்டமும், பாட்டும் இப்போது!

கெளஸான்: கொலை புரிவதே தொழிலாகக் கொண்ட நீ, நற்பணி கூடச் செய்திருக்காயா ?

படைவீரன்: நானதைப் பெரிய பணியாய் நினைக்கவு மில்லை! நினைத்துச் செய்யவு மில்லை! ஆனால் நரகத்தின் மேலாளர் அதை ஒரு பெரும் பணியாக எடுத்து என்னைக் கெளரவித்தார்.

சார்லஸ்: அப்படி என்னதான் நீ செய்தாய் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு.

படைவீரன்: ஒரு சாதாரணப் பணி! யாரும் பெரிதாக மதிக்காத பணி! இதைச் சொல்லத்தான் வேண்டுமா ? கேட்ட பிறகு என்னைக் கேலி செய்யக் கூடாது.

சார்லஸ்: சொல்! நாங்களும் தெரிந்து கொள்கிறோம். உன் பணியைக் கேட்ட பிறகுதான், நகைப்புக் கிடமானதா இல்லையா என்பது தெரியும்!

ஜோன்: [சற்று சிந்தித்து] ஓ! படைவீரன் யாரென்று எனக்கு நினைவு வருகிறது. தரையில் கிடந்த இரண்டு மரக் குச்சிகளைச் சிலுவைபோல் கயிற்றில் கட்டியவன். எரிந்து கரிந்து போகும் ஓர் அபலைப் பெண்ணின் கண்களுக்கு முன் காட்டியவன்! அவள் தணலில் தகிக்கும் போது சிலுவையைக் காண வேண்டுமென அலறினாள்!

படைவீரன்: [தலைத் தொப்பியை எடுத்துத் தணிவாக வணங்கி] முற்றிலும் சரியான விளக்கம். நான் சொல்ல வந்ததைத் தெளிவாகக் கூறிய உனக்கு எனது வணக்கம். ஆமாம் பெண்ணே! யாருனக்கு அதைச் சொன்னது ? ஆச்சரிய மாயிருக்கிறது!

ஜோன்: தோண்டி எதுவும் என்னிடம் கேட்காதே! முதலில் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்! அந்த அபலைப் பெண்ணை மீண்டும் நேராகப் பார்த்தால், நீ அடையாளம் தெரிந்து கொள்வாயா ?

படைவீரன்: என்னால் முடியாது! இருபத்தியைந்து வருடத்துக்கு முந்தி நடந்த பழைய கதை அது! எத்தனையோ பெண்களைப் பார்க்கிறேன்! எத்தனையோ பெண்களுடன் பழகுகிறேன்! எத்தனையோ பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறேன்! அவரது பெயரை நான் குறித்து வைப்பதில்லை! அவரது முகத்தை நான் மனத்தில் பதித்து வைத்துக் கொள்வதில்லை! ஆனால் நான் சிலுவை செய்து கண்முன் காட்டிய பெண்ணின் முகம் மறந்து போனாலும், அந்தப் பெண்ணின் நிமிர்ந்த பார்வையும், நேர்மையான பேச்சும், மிடுக்கான தோற்றமும் பச்சை மரத்து ஆணியாய் என் நினைவில் உள்ளன. ஆனால் தீக்கனல் மறைத்த அவள் முகத்தை நான் அருகில் சென்று காண முடியவில்லை! தீக்கனல் நாக்குகள் தீண்டிய போது, அந்த அபலைப் பெண் அலறிய கூக்குரல் என் நெஞ்சைப் பிளந்து விட்டது! என் செவிப் பறையில் இப்போதும் அது அலை அலையாய் அறைந்து கொண்டுதான் இருக்கிறது! ஆலயப் பாதிரியார் சிலர் என்கையைப் பிடித்திழுத்து, நான் சிலுவை காட்டுவதைத் தடுத்தார்! கடுஞ்சினமுற்ற என் ஆங்கில அதிகாரிகள் என்னைக் கண்டித்துத் தடியால் அடித்தார்! என்னைப் படைக் குழுவிலிருத்து உடனே வெளியில் தள்ளினார்! ஆயினும் கரிந்து சாம்பலான புனிதக் கன்னிக்குக் கடைசியில், ஏசுவின் சிலுவைச் சின்னத்தை அஞ்சாமல் காட்டியது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது! அதனால்தான் நான் நரகத்திலும் ஆடுகிறேன், பாடுகிறேன், ஆனந்தப் படுகிறேன்!

ஜோன்: நன்றி வீரனே! நன்றி. நீதான் மெய்யான வீரன். அஞ்சாத நெஞ்சம் கொண்ட அசல் வீரன்! செந்தீயில் வெந்த மங்கைக்குச் சிலுவை காட்டிய தீரன்! அந்த மங்கைக்காக நானுனக்கு நன்றி கூறுவேன். நீ சொர்க்க புரியில் இருக்கத் தகுதி உள்ளவன். நரக புரியில் அக்கொடும் பாதிரிகளைத் தள்ள வேண்டும்.

படைவீரன்: எனக்கு நரகம் போதும் பெண்ணே. போரிலே பலரைக் கொன்ற எனக்கு வெகுமதியாக எப்படி சொர்க்கபுரி கிடைக்கும் ? அந்தப் பெண் வாய் தடுமாரக் கேட்டாள்! அபலைப் பெண் கண்ணீர் சொரிய எல்லாரையும் கேட்டாள்! சாகும் போது கண்களுக்குச் சிலுவையைக் காட்டுங்கள் என்று கதறினாள்! எவருக்கும் மனமிரங்க வில்லை. தீவட்டித் தடியன் ஒருவன் தீவைத்து எரிக்கத் தயாராக நின்று கொண்டிருந்தான்! அவளுக்கு உரிமை உள்ளது, சிலுவையைக் காண! என்னால் சும்மா யிருக்க முடியவில்லை! யார் தடுத்தாலும், நான் சிலுவையைக் காட்டத் துணிந்தேன்!

கெளஸான்: [கோபத்துடன்] அது சிலுவையே ஆகாது! ஆலயத் தேவர்கள் நாங்கள் அருகில் உள்ள போது, நீ எப்படி அவளுக்குச் சுள்ளிக் குச்சிகளை எடுத்து சிலுவையாக அமைத்துக் காட்டுவாய்! ஆலயத்தில் உள்ளதுதான் சிலுவை! தப்பான சிலுவையைக் காட்டியதால்தான் நரகத்தில் நீ தள்ளப்பட்டாய்!

ஜோன்: ஆலயத் திருவாளர் கெளஸான் அவர்களே! சிலுவை என்பது ஏசுநாதரின் சின்னம்! ஆலயத்தில் உள்ளதுதான் சிலுவை என்பது உங்கள் நியதி! நான் அப்படி நினைக்கவில்லை! சுள்ளிக் குச்சிகளைச் சிலுவையாகக் கட்டினாலும், அதுவும் சிலுவைதான். இடுகாடுகளில் ஏழை எளியவர் புதைக்கப் பட்டால், இரண்டு குச்சிகளைக் கட்டித்தான் சிலுவையாக ஊன்றுகிறார். ஆலயச் சிலுவைக்கு எழை எளியவர் எங்கே போவார் ? எது சிலுவை, எது சிலுவையன்று என்பது மாந்தர் மன உணர்வைச் சார்ந்தது!

++++++++++++++++++

[ஏழாம் காட்சி பாகம்-6]

சாம்பலாகிப் போனபின், உடல்

சற்றேனும் வருமா ?

தேம்பி அழுதாலும், உயிர்

திரும்பித்தான் வருமா ?

வீம்புகள் பிடித்தாலும், ஜோன்

மீண்டுமுயிர் பெறுவாளா ?

‘கடவுளின் கனல்சக்தி இயற்கையான ஆன்மாவுடன் பின்னிக் கொள்ள மாந்தரின் தியாகத்தை உட்கொண்டு, அண்டவெளி ஒளியாய் அதை மாற்றித் தூய்மைப் படுத்துகிறது! நம் அனைவரையும் கனல்சக்தி மாற்றிப் பாசத் தணலாய்ப் பிணைக்கிறது! கடவுளை மூலக்கனல் சக்தியாய் அறிந்து கொள்பவர் ஆசீர்வதிக்கப் படுவர். ‘

ஆன்டிரு முரே [Andrew Murray]

[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]

காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)

இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.

நேரம்: பகல் வேளை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

 1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
 2. சகோதரர் மார்டின் லாட்வெனு
 3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
 4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]
 5. பிரெஞ்ச் போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ் [அசரீரிக் குரலில்]

அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப்படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது. அடுத்து பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் குரலும் காதில் படுகிறது.

அவர்கள் உரையாடல் நடக்கையில், படைவீரன் ஒருவன் உள்ளே நுழைகிறான். பிறகு ஆங்கிலப் பாதிரி, வழக்கறிஞர், வார்விக் கோமகன் அனைவரும் வருகிறார்கள்.

ஜோன்: ஆலயத் திருவாளர் கெளஸான் அவர்களே! சிலுவை என்பது ஏசுநாதரின் சின்னம்! ஆலயத்தில் உள்ளதுதான் சிலுவை என்பது உங்கள் நியதி! நான் அப்படி நினைக்கவில்லை! சுள்ளிக் குச்சிகளைச் சிலுவையாகக் கட்டினாலும், அதுவும் சிலுவைதான். இடுகாடுகளில் ஏழை எளியவர் புதைக்கப் பட்டால், இரண்டு குச்சிகளைக் கட்டிச் சிலுவையாக ஊன்றுகிறார். விலைமிக்க ஆலயச் சிலுவைக்கு எழை எளியவர் எங்கே போவார் ? எது சிலுவை, எது சிலுவை யில்லை என்பது மாந்தர் தம் மன உணர்ச்சியைச் சார்ந்தது!

[கதவு திறக்கிறது. தலைநரைத்து வெண்தாடியுடன் கூன் விழுந்த கார்டினல், ஆங்கிலப் பாதிரி ஒருவர் வருகிறார்.]

ஆங்கிலப் பாதிரி: என்னை மன்னித்திடுங்கள். முன்னறிவிப் பில்லாமல், அனுமதி யில்லாமல் நான் நுழைகிறேன். வின்செஸ்டர் கோமகனாரின் கார்டினல் பாதிரி நான், பெயர்: ஜான் தி ஸ்டொகும்பர் (John De Stogumber). [சற்று நிறுத்தி] … என்ன சொன்னீர் ? …. எனக்குக் காது சரியாகக் கேட்காது. நான் அரைச் செவிடன். கண்களும் பார்வை மங்கிப் போய்விட்டன! அத்துடன் என் மன நிலமையும் சரியில்லை. சற்று உரத்துப் பேசுங்கள். அப்போதுதான் எனக்குக் கேட்கும். … எனக்கு வயதாகி விட்டது. ஆயினும் எனக்குப் பெரிய இடத்து உறவுகள் உண்டு. ஆங்கில அதிகார வர்க்கத்தார் அனைவரும் எனக்கு அறிமுகமானவர். நான் கண்ணைக் காட்டினால் போதும், முன்னே வந்து நிற்பவர்! முழங்காலிட்டுக் கீழ்ப் படிவர்!

ஜோன்: [சிரித்துக் கொண்டு] ஓர் அபலைக் கன்னிப் பெண்ணை இழுத்துக் கொண்டுபோய், தீக்கம்ப மேடையில் ஏற்றித் தீமூட்டிய ஆங்கிலப் பாதிரியா ? வணக்கம் தேவ தூதரே! கூன் விழுந்து குப்புற விழப்போகும் நீங்கள், கைத்தடி யில்லாமல் வந்ததின் காரணம் என்னவோ ?

ஆங்கிலப் பாதிரி: நான் அந்த அபலைப் பெண்ணைத் தேடித்தான் பிசாசாய் அலைகிறேன்! அவளிடம் நான் மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். எங்கே யிருக்கிறாளோ நானறியேன்! ஒரு காலத்தில் கனிவு மிகுந்த பரிவுப் பாதிரியாகக் காலம் தள்ளியவன் நான்! கடைசிக் காலத்தில் புத்தி தடுமாறிப் பழிவாங்கும் ஆங்காரப் பாதிரியாக மனமாறி விட்டேன்! மனம் மாறியது மட்டு மில்லாமல் குணம்மாறிப் பாபச் செயல்களில் பங்கெடுத்துப் பரவசப் பட்டேன்! பாபத்தில் ஈடுபட்டுப் பாமர மங்கையைத் தீயில் சுட்டெறிக்க ஆசை கொண்டேன். ஆசை கொண்டு அதை நிறைவேற்றி ஆனந்தம் கொண்டேன். ஆனால் அப்பாபச் செயல்களுக்கு இப்போது நாம் கண்ணீர் வடிக்கிறேன். ஆசை வெற்றி பெற்றாலும், பெண்பாபம் என்னைச் சுற்றிச் சுற்றி சவுக்கால் அடிக்கிறது! அந்த வேதனை தாங்காமல், நானிப்படி நாயாய், ஊர் ஊராய் அலைகிறேன்!

ஜோன்: அதற்கு இப்போது ஏன் கண்ணீர் விட வேண்டும் ? சாம்பலாகிப் போனவளுக்காக தேம்பி வேதனைப் படுவதில் என்ன பயன் ? கண்கள் கொட்டுவது புறத்தே வரும் முதலைக் கண்ணீரா ? அல்லது ஆத்மாவின் கருவிலிருந்து வரும் அகக் கண்ணீரா ?

ஆங்கிலப் பாதிரி: பெண்ணே! என் கண்களில் கண்ணீர் வராது. அப்படி வந்தால் அது மெய்யான கண்ணீரே! அது முதலைக் கண்ணீரில்லை! பழையப் பரிவுப் பாதிரியின் கனிவுக் கண்ணீர்! நான் மெய்யாகக் கொடூரமானவன் அல்லன்.

துனாய்ஸ்: உம்மை யார் கொடூரப் பாதிரி என்று சொன்னவன் ?

ஆங்கிலப் பாதிரி: சொன்னவன் வேறு யாருமில்லை, நான்தான்! என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டேன்! பாபக் கொடூரம் செய்தவன் நான். செய்யத் தகாத தீமை செய்தவன் நான்! ஏசுப் பெருமானைச் சிலுவையில் கிடத்தி ஆணி அடித்தது போன்ற ஓர் மாபெரும் பாபம் செய்தவன் நான்! ஆராய்ந்து பார்த்தால் அதை விடக் கொடிய பாதகம் புரிந்தேன். உயிரோடு ஓரிளம் பெண்ணைத் தீயிட்டுக் கொளுத்தி வரலாற்றில் முதற் பெயர் எடுத்தேன். பயங்கர மரணம்! மிக மிகப் பயங்கர மரணம்! ஆனால் அதுவரை மிருகமாக இருந்த நான் பிறகு திருந்தி மனிதனாகி விட்டேன்.

சார்லஸ்: ஜான்! நீவீர் தகனம் செய்த ஜோன் பணிமங்கை எனக்கு மகுடம் சூட்டியவள்! மீண்டும் என்னை மன்னன் ஆக்கியவள் ஜோன். அதோ, உமது கண்முன்பாக நிற்கிறாள். உமது கண்களில் கண்ணீர் இன்னுமிருந்தால், அவள் காலடியில் கொட்டிக் கழுவுங்கள்! வீணாக எங்கள் பாதங்களில் சிந்த வேண்டாம்! அந்தக் கண்ணீர்த் துளிகளாவது அவளது பாதங்களில் பட்டுப் புனிதம் பெறட்டும்!

ஆங்கிலப் பாதிரி: யார் ? ஜோன் என்னருகில் நிற்கிறாளா ? மங்கிப் போகும் என் கண்களில் தென்பட வில்லையே! ஜோன் எங்கே ? பணி மங்கை எங்கே ? [தடுமாறி எல்லாத் திசையிலும் நோக்குகிறார்]

துனாய்ஸ்: [பாதிரியின் கையைப் பிடித்து நடத்திச் செல்கிறார்] உம்முடன் பேசிக் கொண்டிருந்த ஜோன் இதோ இங்கு நிற்கிறார்! மன்னரால் தளபதியாக நியமனமாகி, முன்னால் நின்று போரை நடத்திய தீர மங்கை ஜோன்!

ஆங்கிலப் பாதிரி: [கண்ணீர் பொங்கிவர, மண்டி யிட்டு] பணி மங்கையே! என் பாபக் கண்ணீர்களால் உன் பாதங்களைத் தூய்மைப் படுத்துகிறேன். நானுக்குச் செய்த கொட