சி. ஜெயபாரதன், கனடா
படைப்பின் உதயம்.
மனித ஜீவன்
சிறையினுள் சிக்கி
தனித்துவம் நசுங்கி
தாகம் மிகுந்து
நெஞ்சம் வெந்து
கனலாய்ச் சிவந்து
அனலாய் வேகும் போது
ஆத்மா நோகும் போது
ஆக்கச் சுனை ஊற்றில்
உதயம் ஆகுது,
ஒரு பெரும் படைப்பு !
++++++++++
புதுக் கவிதை
எதிர் நிற்கும்
வலையை நீக்கி
எல்லையாம்
கோடு தாண்டி
புதிர் போல
பந்தை ஆடும்
புதுமுக
டென்னிஸ் கன்னி !
எதுகையாம்
அணிகள் இல்லை !
இனிமையாய்
மோனை இல்லை !
செதுக்கிட
யாப்பும் இல்லை !
சிற்றாடை
நீச்சல் கன்னி !
+++++++++++++++
சிறுகதை
ஒற்றை நிலையத்தை விட்டு
ஊர்ந்து புறப்பட்டு
வளர்வேகத்தில்
விரைந்தோடி
மற்றை நிலையத்தை நோக்கி
தளர்வேகத்தில்
வந்தடையும்
ஒரு பெட்டி
ரயில் வண்டி !
++++++++++++
நாவல் காவியம்
கரும்பு நுனிபோல்
துவங்கி,
கால விழுதுகள்
நிரம்பி,
இருப்புப் பாதைமேல்
ஊர்ந்தோடும்
பல பெட்டித் தொடர்
வண்டிகள் பல
வந்திணையும்
சந்திப்பு நிலையம் !
++++++++++++
நாடகம்
இடிமழை, மின்னல், புயல், தென்றல்,
காதல், மோதல், சாதல்,
இன்ப, துன்பம், ஏமாற்றம்,
உறவு, பிரிவு, முறிவு,
சதி, சூழ்ச்சி, சச்சரவு,
விருப்பு, வெறுப்பு, வேறுபாடு,
மனிதப் போக்கை,
மாறுபாட்டை,
இதயப் போரை,
படிப் படியாய் வளர்த்து
வசன மொழியில்
நடை, உடை, பாவனையில்,
வடித்துக் காட்டி
முடிவில் திருப்பத்துடன்
விடியும்
பல்கலை
மேடைக் காவியம் !
+++++++++++
இசைக்கீதம்
ஆத்மாவின் கருவில் தோன்றி,
கலை வாணியின்
நாவில் மலர்ந்து,
செவிக்கு அமுதாய் நிலவி,
பல்லாயிர ஆத்மாவைத்
தாவிப் போய்த்
தழுவிக் கொள்ளும் கன்னி !
தேன் அருவியில்
ஆட வைத்து,
மதுபோல் மயக்கித்
துயில வைக்கும்
குயில் அணங்கு !
**********
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 2, 2015 [R-1]