பொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி

குமரி முனையில் சுதந்திரப் பிதா காந்திஜி, கர்மயோகி விவேகானந்தர் நினைவாலயங்களின் அருகே 133 அடி உயரத்தில் உலக நன்னெறி வடித்த வள்ளுவர் சிலை அமைத்த பொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் மேதை சதீஷ் குமார் டொக்ரா அவர்களுக்கு என்னினிய பாராட்டுகள். 
 
சி. ஜெயபாரதன்
 

தங்கத் தமிழ்நாடு

valluvar-statue

தங்கத் தமிழ்நாடு

சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

 

தங்கத் தமிழ்நாடு எங்கள் தாய்நாடு 

சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!

சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!

மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு  

எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட

முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!

வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 

தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட

ஆத்திசூடி ஓளவைசூடிக்கொடுத்த ஆண்டாள் 

வான்புகழ் வள்ளுவர்தேன்கவி இளங்கோ,

கவிச்செல்வர் கம்பர்கவிக்கோ சேக்கிழார்

புதுமைக்கவி பாரதிபுரட்சிக்கவி பாரதிதாசன்,

யாவரும் உனது  மாதவ  மக்கள்!

யாதும் நாடே யாவரும் கேளிர்!

தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!

காசினி மீதில் நேசமாய்த் திகழும்

மாசிலா நாடேமைந்தர்கள்  ஒன்றாய் 

வாழ்த்துவம் உனையேஉயர்த்துவம் உனையே! 

பாரதத் தாயின் தமிழ்த்திரு நாடே!

பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்

பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

++++++++++++++++

S.Jayabarathan [jayabarathans@gmail.com] October 24, 2016 [R-1]  

 

அமெரிக்க ஐக்கிய மாநில விடுதலைப் போர் நினைவு நூற்றாண்டில், ஃபிரெஞ்ச் நிபுணர் அமைத்த சுதந்திர தேவிச் சிலை

Statue of Liberty -1A

American War of Independence Centennial

Statue of Liberty

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

++++++++++++++

இதந்திரு மனையின் நீங்கி,
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி,
பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.

++++++ 

மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்!
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின்
பேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்!
தேவி ! நின் ஒளி பெறாத
தேய மோர் தேய மாமோ ?

+++++++++++

மகாகவி பாரதியார் (சுதந்திர தேவியின் துதி)

Statue of Liberty -10

“அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன.  விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ,”

எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] பிரெஞ்ச் புரட்சித் தலைவர்.

முன்னுரை: அமெரிக்காவின் நியூ யார்க் தலைவாயிலில் தீப்பந்தம் ஏந்தி, புலம்பெயர்ந்து நுழையும் கோடிக் கணக்கான வெளிநாட்டு மாந்தருக்கு ஒளிகாட்டி, வழிகாட்டி வரவேற்கும் சுதந்திர தேவி, நியூ யார்க் தீவில் நிறுவமாகி அதன் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழா 1986 ஜூலை மாதம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது! விடுதலைப் போரில் பிரிட்டனுடன் சண்டை யிட்டு, வெற்றி பெற்று அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர நாடானதைப் பாராட்டி, நூற்றாண்டு விழா வாழ்த்துப் பரிசாய் 1886 இல் பிரான்ஸ் அளித்த உலகிலே உயரமான சிற்பச் சிலை அது! 151 அடி உயர்ந்த [தரைமுதல் மேல் நுனி வரை : 305 அடி] விடுதலைச் சிலையைப் படைத்த பிரான்ஸின் புகழ் பெற்ற சிற்பி ஃபிரடெரிக் அகஸ்தி பார்தோல்டி [Frederic Auguste Bartholdi (1834-1904)]. சுதந்திர தேவியின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்த பொறியியல் மேதை, பிரான்ஸின் ஆயிர அடி உயர ஐஃபெல் கோபுரத்தைப் [Eiffel Tower] படைத்த அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)]! நூறாண்டுகள் தாண்டி அமெரிக்கா 87 மில்லியன் டாலர் செலவு செய்து 1986 இல் புதுப்பிக்கப் பட்டது, விடுதலைச் சிலை. நியூ யார்க் நகரின் உள்ளும் புறமும் விடுதலை மாதின் நூறாண்டுப் பிறந்த நாள் விழா நான்கு தினங்கள், கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் கொண்டாடப் பட்டது.

 

Statue of Liberty -4

 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் [Liberty, Equality, Fraternity] என்னும் மூன்று குடியாட்சிச் சுலோகங்களை முதலில் முழக்கிய புரட்சி எழுத்தாள மேதைகள் வால்டேர், ரூஸ்ஸோ [Voltaire (1694-1778), Rousseau (1712-1778)] ஆகியோர் பிரான்ஸில் வாழ்ந்து முடிந்த காலம் அது! முடி ஆட்சியி லிருந்து விடுபட பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரான்ஸின் மேதைகளும், பெரும்பான்மையான மக்களும் விடுதலைத் தாகம் மிக்கவராக இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்! 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரின் சமயத்தில், ஜார்ஜ் வாஷிங்டன் போர்ப் படைகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள், நிதி உதவிகள், படைகள் அளித்து, விடுதலை அடைய பிரான்ஸ் மிக்க ஆதரவாய் இருந்தது. பிரெஞ்ச் போர் வீரர் மார்குவிஸ் தி லஃபாயட் [Marquis De Lafayette] போன்றோர், போர்த் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் ஆணைக்குக் கீழ் பணியாற்றி யுள்ளார்கள்! சுதந்திரப் போரில் அமெரிக்கா அடைந்த வெற்றியே பின்னால் பிரெஞ்ச் புரட்சிக்கும் அடிப்படையாகி, பிரான்ஸ் முடி ஆட்சியிலிருந்து விடுதலை அடைய வழி காட்டியது!

 

Statue of Liberty -7

 

உலகிலே உயர்ந்த உலோகச் சுதந்திரப் பதுமை உதித்த வரலாறு

அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்ஸ் உதவி செய்திரா திருந்தால், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை வென்று 1774 இல் சுதந்திர நாட்டை உருவாக்கி இருக்க முடியாது! சுமார் 100 ஆண்டுகள் தாண்டிய பின் முப்பத்தியொரு வயதான பிரெஞ்ச் சிற்பி பார்தோல்டி, 1865 இல் நடந்த பின்வரும் வரலாற்று முக்கிய உரையாடலைக் கூறுகிறார். மூன்றாம் நெப்போலியன் [Napoleon III] எதேச்ச ஆதிக்க ஆட்சியை எதிர்க்கும் பலதிறப்பட்ட மேதைகள், சுதந்திர அமெரிக்காவின் குடியரசு ஆட்சியை மெச்சி, உள்நாட்டுப் போருக்குப் பின் [Civil War] ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்குகளை அகற்றியதைப் பாராட்டி டின்னர் பார்டியின் போது அளவளாவிக் கொண்டிருந்தனர். அக்குழுவில் பிரென்ச் இலக்கிய மேதையும், விடுதலைப் போராட்ட அதிபரான எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] கலந்து கொண்டிருந்தார்.

Statue of Liberty -14

Statue of Liberty -24

 

லாபெளலே அமெரிக்க முறையில் இயங்கும் குடியரசைப் பிரான்ஸில் அமைக்க விரும்பியவர். சரித்திர பூர்வமாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த விடுதலைத் தாகத்தை எடுத்துக் காட்டி, அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன என்று அப்போது நினைவு படுத்தி, அதிபர் லாபெளலே ‘விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ‘ என்று வியந்தார். அக்குழுவில் யாவரும் முடிவு செய்து அப்போது சிற்பி பார்தோடியின் நெஞ்சில் உதயமான சின்னம்தான், இப்போது ஓங்கி உயர்ந்து நியூ யார்க் துறைமுகத்தில் ஒளிகாட்டும் சுதந்திரச் சிலை!

 

Sculptor Bartholdi & His Model

விடுதலைச் சிலையை உருவாக்கிய சிற்ப மேதை பார்தோல்டி

பிரான்ஸில் கால்மர் [Colmar] என்னும் நகரில் ஃபெரடிரிக் ஆகஸ்தி பார்தோல்டி 1834 ஆகஸ்டு 2 ஆம் தேதி சீரும் சிறப்பும் மிக்கச் செல்வந்த இடைவகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாகும் போது தந்தையார் காலமாகவே, சிறுவன் ஆகஸ்தி விதவைத் தாய் சார்லெட் பார்தோல்டியால் கடுமையான ஒழுக்கமுடன் வளர்க்கப் பட்டவர்! அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் முகம், ஆகஸ்தியின் தாய் சார்லெட் முகம் போன்று உள்ளது என்று பலர் கருதுகிறார்கள். சிலர் எகிப்து சிலை ஒன்றுக்காக அவரது புதல்வன் வரைந்த ஒரு படத்தை ஒத்துள்ளது என்று கூறுகிறார்கள்! ஆயினும் ஆகஸ்தி பார்தோல்டி படைத்த சுதந்திர மாதின் முகம் யாருடைய முகத்தைப் போன்றுள்ளது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது!

Statue of Liberty -16

ஆகஸ்தி பார்தோல்டி முதலில் ஓர் ஓவியராகத்தான் தனது ஆக்கப் பணியைத் துவங்கினார். பிறகு சிற்பக் கலை ஆர்வம் அவரைப் பற்றிக் கொண்டது. ஆனால் அவர் சிற்பியாக மாறி சிற்பக்கலை உருவங்களைப் படைத்த பின்னரே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. நெபோலியன் போனபார்டின் [Napoleon Bonaparte] அதிபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜான் ராப்பின் [General Jean Rapp] பனிரெண்டு அடி உயர உருவச் சிலையைப் பதினெட்டு வயதில் பார்தோல்டி வடித்த போது, அவரது பெயர் பிரான்ஸ் எங்கும் பரவியது. அது முதல் தேசீயப் பிரமுகர்களின் சிலையை மிதமிஞ்சிய அளவில் படைப்பதற்குப் பார்தோல்டியே பிரான்ஸில் தேடப்பட்டார்.

Statue of Liberty -1B

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈரோப்பில், பூர்வீக கிரேக்க ரோமானியச் சிற்பங்கள் போன்று மிதமிஞ்சிய உயரத்தில் சிலைகளைப் படைப்பது ஒரு சவாலான கலையானது! கிரேக்க, ரோமானியச் சிற்பங்களின் கலை நுணுக்கத்தை அறிந்த பார்தோல்டி எகிப்துக்குச் சென்று, அங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகளைப் [Pyramids] பார்வை யிட்டார். பேருவில் படுத்திருக்கும் சிங்கத் தலை ‘ஸ்ஃபிங்க்ஸ் ‘ [Sphinx] இதிகாச விலங்கின் பூத வடிவைக் கண்டு வியப்படைந்தார். அந்தச் சமயத்தில் எகிப்தில் சூயஸ் கால்வாயை வெட்டத் திட்டமிட்டு பணிபுரியும் ஃபெர்டினென்ட் லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] என்னும் பிரெஞ்ச் கட்டமைப்பு மேதையைச் சந்தித்தார்.

Statue of Liberty

சூயஸ் கால்வாய் முடியும் தருவாயில் அங்கே கலங்கரை விளக்கமாக அமைக்க, 1867 ஆண்டு பார்தோல்டிக்கு ‘முன்னேற்றச் சிலை ‘ [Progress] ஒன்றை உருவாக்க ஆசை எழுந்தது. எகிப்தின் குடியான மாது ஒருத்தி போர்த்திய ஆடையுடன், ஒளிவீசும் தலைப்பட்டை அணிந்து, வலது கரத்தில் தீப்பந்தம் ஏந்தி யுள்ளது போல் ஒரு சிற்ப மாடலைத் தயாரித்தார். ‘ஆசியாவுக்கு எகிப்த் ஏந்தும் விளக்கு ‘ [Egypt Carrying the Light to Asia] என்னும் பெயரிட்டுத் திட்டச் சிலை மாடலை, 1869 இல் எகிப்தின் அதிபர் இஸ்மாயில் பாஷாவுக்குச் சமர்ப்பித்தார். ஆனால் ஏதோ சில அரசியல் காரணங்களால் அத்திட்டச் சிலை நிறுவகமாக அங்கீரம் அடையவில்லை. தற்போதுள்ள அமெரிக்காவின் விடுதலைச் சிலை பல வடிவங்களில் எகிப்து விளக்குச் சிலைபோல் உள்ளது என்று பலர் கருதுகிறார்கள்!

பிரென்ச் விடுதலைத் தளபதி எடோவெர்டு லாபெளலே ஆலோசனையின் பேரில் பார்தோல்டி 1871 ஜன் 8 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்து, நியூ யார்க் துறைமுகத்தில் சுதந்திரச் சிலைக்கு உரிய ஓர் உன்னத இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் அழகிய சிறு பெட்லோ தீவு [Bedloe Island]! பார்தோல்டி முதல் ஆலோசனையின்படிப் பல்லாண்டுகள் கழித்து, இப்போது (1960 முதல்) ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று அழைக்கப் படுகிறது!

Statue of Liberty -17

 

அடுத்து அமெரிக்க சுதந்திரப் போரில் ஜார்ஜ் வாஷிங்டன் படையில் ஒரு தளபதியாகப் பணியாற்றிய பிரென்ச் இராணுவ வீரர் மார்குவிஸ் லஃபாயட்டுக்கு உருவச் சிலை ஒன்றை வடித்து 1876 இல் நியூ யார்க் நகருக்கு அன்பளிப்புச் செய்தார். கனடாவுக்கு விஜயம் செய்து, மான்ட்ரியாலில் [Montreal, Canada] இருமுறைச் சந்தித்த ஜீன் எமிலியை [Jeanne Emilie Baheux] பார்தோல்டி 1876 டிசம்பர் 20 ஆம் தேதி மணந்து கொண்டார்.

பிரான்சில் நிதி திரட்டி  அமெரிக்கச் சுதந்திரச் சிலை அமைப்பு

விடுதலைச் சிலை வடிக்கும் நிதிச் செலவைப் பிரான்சும், அதை ஏற்றி அமர்த்தும் பீடத்தைக் கட்டும் செலவை அமெரிக்காவும் ஏற்றுக் கொள்வதாக ஆரம்ப காலத்திலே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பிராங்க் அமெரிக்கன் யூனியன் ஒன்று ஏற்படுத்தப் பட்டு, பிரான்சில் அமெரிக்கச் சிலை வடிக்க நிதி திரட்டப் பட்டது. அம்முயற்சியில் 1879 ஆண்டு முடிவில் 250,000 பிராங்க் [சுமார் 250,000 டாலர்] நிதி சேர்ந்தது! சிற்ப வடிவங்களைப் படைக்க ‘ரிப்போஸா முறை ‘ [Art of Repousse] கையாளப்பட்டது. அந்த முறையில் வடிவங்கள் கல்லில் செதுக்கப் பட்டோ அல்லது வெண்களி மண்ணில் வடித்து சுடப்பட்டோ [Plaster of Paris or Calcium Sulphate], தாமிரத் தகடுகளில் [Copper Plates] அச்செடுக்கப் பட்டு பின்னால் இணைக்கப் படுகின்றன. தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி 151 அடி உயரமான விடுதலை மாதின் சிக்கலான சிரமான ஆக்கப் பணியை பார்தோல்டி எடுத்துக் கொண்டு, சிலையின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்ய, புகழ் பெற்ற பொறியியல் நிபுணர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல்லை நியமித்தார். அவர்தான் பாரிஸில் பெயர் பெற்ற ஐஃபெல் கோபுரத்தை [Eiffel Tower] டிசைன் செய்து 1889 இல் நிறுவியவர்.

 

 

பிரெஞ்ச் பணியாட்கள் 300,000 பேர் சிலை முடிவு பெறுவதை மேற்பார்வை செய்ய கூலிக்கு அமர்த்தப் பட்டனர். நுணுக்கமான சிலை அங்கங்களை வடிக்க 20 சிறப்புப் பணியாட்கள் வாரம் முழுவதும் அனுதினமும் 10 மணி நேரம் வேலை செய்தனர்! முதலில் முடிந்த தீப்பந்தம் ஏந்திய 30 அடி நீளமான கரம் 1876 ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டது. 50 சென்ட் கட்டணத்தில் ஏணியில் ஏறி இறங்கிப் பார்க்கும்படி, கரம் பிளடல்ஃபியாவில் [Philadelphia] காட்சிப் பொருளாகத் தற்காலியமாக வைக்கப் பட்டது! அங்குதான் 1752 இல் வார்க்கப் பட்ட சரித்திரப் புகழ் பெற்ற ‘விடுதலை வெங்கல மணி ‘ [Liberty Bell] தொங்குகிறது. தலைக் கிரீடம் அணிந்த சுதந்திர மாதின் 17 அடி நீளச் சிரசு 1878 மே மாதம் தயாரிக்கப் பட்டுப் பாரிஸில் நடந்த உலக வணிகக் கண்காட்சித் தளத்தில் சிறிது காலம் வைக்கப் பட்டது!

 

Statue of Liberty -23

 

1884 ஜூன் 15 ஆம் தேதி சிலை இறுதித் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1885 இல் பிரெஞ்ச் பிரதம மந்திரி ஜூல்ஸ் ஃபெர்ரியால் [Jules Ferry] கோலாகலமாகக் கொண்டாட்டங்களுடன் அமெரிக்காவுக்குப் பிரெஞ்ச் கப்பல் ‘இஸரியில் ‘ [Isere] 214 பெட்டிகளில் சிலை உறுப்புகள் அனுப்பப் பட்டன. ஆனால் அதைத் தாங்கும் பீட மேடை [Pedestal] அப்போது நியூ யார்க்கில் தயாராக இல்லை! 1885 இல் விடுதலைச் சிலையின் காரண கர்த்தா, எடோவெர்டு லாபெளலே சிலை நியூ யார்க் துறைமுகத்தில் நிறுவப்படும் முன்பே பிரான்ஸில் காலமானார். அமெரிக்காவில் சிலை நிறுவப்படும் 90 அடி உயரப் பீடத்தைக் கட்டவும், அதற்கு 65 அடி ஆழ அடித்தளம் அமைக்கவும் நிதி திரட்டி ஆரம்பிக்கக் காலதாமதம் ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் [Civil War] பங்கெடுத்த ஹங்கேரியன் புலப்பெயர்ச்சிப் பத்திரிக்கைப் பதிப்பாளி ஜோஸஃப் புளிட்ஸர் [Joseph Pulitzer] 1883 இல் முன்வந்து 100,000 டாலருக்கு மேலாக பொது மக்களிடமிருந்து கொடையாகச் சேமித்தார்.

 

அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் படைப்பு அம்சங்கள்

அமெரிக்கன் கட்டடக் கலைஞர் ரிச்சர்டு மாரிஸ் ஹன்ட் [Richard Morris Hunt] சமர்ப்பித்த பீடம் 1884 இல் ஒப்புக் கொள்ளப் பட்டு, மேற்படி வேலைகள் ஆரம்பமாயின. 1886 மே மாதம் அடித்தளமும், பீடமும் முடிந்து, சிலையின் அங்கங்கள் பீடத்தின் மீது இணைக்கப் பெற்றன. பார்தோல்டியின் கற்பனைச் சிற்ப நங்கை வெறும் இரும்புச் சட்டங்களைச் சுற்றி, உருவங்களில் பிரதி எடுக்கப்பட்ட தாமிர உலோகத் [Copper Metal] தட்டுகள் இணைக்கப்பட்டு ஆக்கப்பட்ட சிலை! அதற்கு வடிவ மாடலாக அவரது மனைவி எமிலி பார்தோல்டி நின்றாக அறியப் படுகிறது! நார்வே தேசத்திலிருந்து 32 டன் எடை யுள்ள 300 தாமிரத் தட்டுகள் வர வழைக்கப் பட்டு வார்ப்பு அங்கங்களில் நெளிக்கப் பட்டுச் சிலை இறுதியில் இணைக்கப் பட்டது. தீப்பந்தம் விளக்கொளி வீசும்படி அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தின் ஆழம்: 65 அடி. சுதந்திர மாது ஓங்கி நிற்கும் பீடம் 89 அடி உயரம். பீடத்தின் தளபரப்பு 91 அடிச் சதுரம். பாதங்கள் நிற்கும் மேற்தளப் பரப்பு 65 அடிச் சதுரம். அமெரிக்கக் கட்டடக் கலைஞர் நிறுவிய 89 அடி பீடம், 65 அடி ஆழத்தில் 23,500 டன் காங்கிரீட் ஊற்றிய அடித்தள மீது நிற்கிறது! மின்சக்தி இயக்கும் தூக்கிகள் [Elevators], பீடத்தில் இயங்கி வருகின்றன. சிலையின் பாதத்தி லிருந்து சிரசிற்கு ஏறி இறங்க 171 சுழலும் மாடிப்படிகள் [Spiral Staircase] நடுவே உள்ளன.

விடுதலைச் சிலையின் முழு எடை: 225 டன்! அதன் இரும்புக் கூட்டின் எடை: 125 டன்! இரும்புக் கூட்டைச் சுற்றிப் போர்த்திய சிற்பத் தாமிரத் தகடுகளின் எடை: 90 டன்! சுதந்திர தேவியின் தீப்பந்தம் தளத்திலிருந்து 305 அடி உயரம். விடுதலைக் குமரியின் உயரம் பாதத்திலிருந்து தீப்பந்த உச்சி வரை 151 அடி. சிலையின் உயரம் பாதம் முதல் சிரசு வரை 111 அடி. ஓங்கி உயர்ந்த வலது கரத்தின் நீளம்: 42 அடி. வலக்கரத்தின் மிகையான தடிப்பு 12 அடி. விடுதலை மாதின் தலையின் உயரம்: 17 அடி. மூக்கின் நீளம்: 4.5 அடி. வாயின் அகலம்: 3 அடி. குமரியின் இடுப்புச் சுற்றளவு: 35 அடி. இடது கரத்தின் 16 அடி 5 அங்குலம். சுட்டு விரல் 8 அடி நீளம். பாதத்தில் போட்டிருக்கும் மிதியடி: 25 அடி. சுதந்திர தேவியின் கிரேக்க, ரோமானிய மாடல் தலைக் கிரீடத்தில் உள்ள சாளரங்கள்: 25. அந்த சாளரங்கள் வழியே, ஒளி வீசும் விளக்குகள் ஒளியைப் பாய்ச்சும். கிரீடப் பட்டையில் உள்ள ஈட்டிகள்: 7 [உலகின் ஏழு கடல்கள்]. இடது கரம் பிடித்திருக்கும் சாசனப் பட்டயத்தில் எழுதி இருப்பது: ஜூலை 4, 1776 [சுதந்திர அறிவிப்பு நாள்].

The Head Making

பிரென்ச் டிசைன் எஞ்சினியர் கஸ்டாவ் ஐஃபெல் அமைத்த விடுதலைக் குமரியின் 151 அடி உயர எலும்புக் கூடான இரும்புச் சட்டங்கள், நியூ யார்க் கடலில் பொதுவாக மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றை எதிர்த்துச் செங்குத்தாய் நிற்பவை! பத்தொன்பதாம் நூற்றாண்டு பொறியியல் நுணுக்க மாயினும், எப்போதாவது சில மணிநேரம் தாக்கும் சூறாவளிப் புயல் மணிக்கு 125 மைல் வேகத்தில் அடிப்பினும், சுதந்திரச் சிலை முறிந்து விடாமல் நிமிர்ந்து நிற்க டிசைன் செய்யப் பட்டது! மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றில் 42 அடி நீளக் கரத்தில் ஏந்திய தீப்பந்தம் 5 அங்குலம் ஆடும்! 151 அடிச் சிலை 3 அங்குலமே அசையும்! ஒழுங்காகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்தால், சுதந்திர தேவி இன்னும் 500 ஆண்டுக்கு மேலாகப் பிரச்சனைகள் இன்றி நீண்ட காலம் நிமிர்ந்து நிற்பாள்!

 

சுதந்திரச் சிலைப் பீடமேடை

அமெரிக்காவை இல்லமாக ஏற்றுக் கொண்ட விடுதலை மாது!

1886 அக்டோபர் 21 ஆம் தேதி நியூ யார்க்கில் வந்திறங்கிய ஆகஸ்தி பார்தோல்டி, அவரது மனைவி எமிலி பார்தோல்டி, சூயஸ் பனாமா கால்வாய்கள் கட்ட பெரும்பங்கு ஏற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ், மற்றும் பிரென்ச் அரசாங்கப் பிரதிநிதி ஆகிய நால்வரும் விடுதலைக் குமரி திறப்பு விழாவுக்கு விஜயம் செய்தனர். விழா நாளான அக்டோபர் 28 விடுமுறைத் தினமாக விடப்பட்டது. தீப்பந்தம் ஒளிவீச 8 விளக்குகளை ஏற்றும்படி பார்தோல்டி ஏற்பாடு செய்தார். நவம்பர் முதல் தேதி தீப்பந்தம் ஒளி வீசியது. நியூ யார்க் துறைமுகத்தில் 250 கப்பல்களும், படகுகளும் நிரம்பி வழிய பொதுமக்கள் குழுமி யிருந்தனர். பார்தோல்டி சுதந்திரச் சிலையின் தலைக்குள் தனியே நின்று முக விளக்குகளின் பட்டனைத் தட்டி முதலில் ஏற்றி வைத்தார்!

Statue of Liberty -18

பாண்டு வாத்திய இசைகள் ஒலித்து, பீரங்கிகள் இடி முழக்கி, நியூ யார்க்கில் விடுதலைச் சிலை உயிர் பெற்று எழுந்தது! அப்போது அதைப் படைத்த சிற்ப மேதை பார்தோல்டி, ‘கனவு பலித்ததம்மா ‘ என்று புளதாங்கிதம் அடைந்தார்! ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட விழாவில் அமெரிக்க அதிபதி குரோவர் கிலீவ்லண்டு [Twice American President Grover Cleveland (1885) & (1893)], ‘சுதந்தர தேவி இப்போது அமெரிக்காவைத் தன் இல்லமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதை நாம் மறக்க மாட்டோம்! மேலும் அவளும், அவளுக்குத் தேர்ந்தெடுத்த பீடமும் புறக்கணிக்கப் படாமல் பாதுகாக்கப் படும்! ‘ என்று துவக்க விழாவில் உரையாற்றினார். அவரது கூற்றுப்படி நூறாண்டுகள் தாண்டிய பின்னும் இதுவரை சுதந்திர தேவியோ, அவள் இருக்கையான பீடமோ புறக்கணிக்கப் படவில்லை!

Edward Moran Paintings 1886

இருபதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் பதுமை

305 அடி உயரத்தில் நிற்கும் உலோகச் சிலை உலகத்திலே பெரிய சிற்பப் படைப்பாகக் கருதப் படுகிறது! 1886 இல் நிறுவப்பட்ட காலத்தில் நியூ யார்க்கின் மிக உயரச் சிற்பமாக இருந்தாலும், இப்போது அதைவிட உயர்ந்த கட்டடங்கள் அங்கே முளைத்து விட்டன! 1903 ஆம் ஆண்டில் பீடத்தின் உட்சுவர் ஒன்றில் பித்தளைப் பட்டயத்தில் பொறித்த எம்மா லாஸரஸ் 1883 இல் எழுதிய ‘பூதச் சிலை ‘ என்னும் கவிதை [Poem The Colossus By Emma Lazarus (1849-1887)] ஒன்று தொங்கவிடப் பட்டது. அரசியல் கொந்தளிப்பில் துரத்தப்பட்டு அமெரிக்காவின் தலைவாசலில் கால்வைக்கும் ஆயிரக் கணக்கான அகதிகளுக்கு எழுதப்பட்ட அனுதாபக் கவிதை அது! இப்போது பூதச் சிலைக் கவிதையும், விடுதலை மாதும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாய்ப் பிணைந்து விட்டன!

 

 

1916 இல் 30,000 டாலர் நன்கொடை நிதி திரட்டப்பட்டு, இரவில் வெளிச்சம் குவிந்தடிக்க வெள்ள மின்விளக்குகள் [Flood Lights] அமைக்கப் பட்டன. 1931 இல் 1000 வாட் மெர்குரி ஆவி விளக்குகள் பீடத்திலும், தீப்பந்தக் கூண்டிலும் மாட்டப் பட்டன. 50 ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட 1936 இல் அமெரிக்க அதிபதி ரூஸவெல்ட், பிரென்ச் பிரதிநிதி லாபெளயேல் [De Labouyale, Grandson of Liberty Statue Promoter], மற்றும் 3500 பிரமுகர் கலந்து கொண்டனர். 1960 ஜூன் 30 ஆம் தேதி சுதந்திர தேவி நிற்கும் பெட்லோ தீவு, ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று பெயரிடப் பட்டது. 1981 ஆம் ஆண்டு பிரென்ச் அமெரிக்கக் குழு ஒன்று அமைக்கப் பட்டு, நிதி திரட்டி விடுதலைச் சிலைப் புதுப்பிப்புப் பணிகள் திட்டமிடப் பட்டன. 1986 இல் சிலை நூற்றாண்டு விழாவுக்காக அப்புதுப்பிப்பு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. திரட்டிய நன்கொடை நிதி [1986] 277 மில்லியன் டாலர்! சிலையைப் புதுப்பிக்கச் செலவானது 87 மில்லியன் டாலர். புதுப்பிக்கப் பட்ட தீப்பந்த தாமிரத் தட்டுகளில் தங்கமுலாம் பூசப்பட்டது. துருப் பிடித்த இரும்புத் தளவாடங்கள் நீக்கப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டால் உலோகத்தில் மாற்றப் பட்டன. கஸ்டாவ் ஐஃபெல் படைத்த இரும்புச் சட்டங்களின் அளவுகள் எடுக்கப் பட்டு, விடுதலைச் சிலையின் கம்பியூட்டர் மாடல் தயாரிக்கப் பட்டு, வலுவிழந்த கம்பங்கள் உறுதியாக்கப் பட்டன.

 

 

அமெரிக்க விடுதலைச் சிலையின் நூற்றாண்டு விழா

அமெரிக்கா விடுதலை அடைந்து இரண்டு நூற்றாண்டுகளும், சுதந்திரச் சிலை நிலைநாட்டி முதல் நூற்றாண்டும் முடிந்து விட்டது! 1986 ஜலை 4 ஆம் தேதி, புதுப்பிக்கப் பட்ட நூறாண்டு வயதுச் சிலை முன்பாக அமெரிக்க அதிபதி ரோனால்டு ரீகன் உரை ஆற்றினார்: ‘விடுதலைக் கனலைப் பாதுகாப்பவர் நாம்! அந்தக் கனலை உலகம் காண ஓங்கி உயர்த்திக் காட்டுகிறோம் நாம்! ‘ அந்தி மயங்கும் வேளையில் அதிபர் ரீகன் ஒரு பட்டனை அழுத்தவும் இருள் நீங்கி, ஒளிமயமாகி மாபெரும் சுதந்திரச் சிலையின் மகத்தான முழுத் தோற்றம் காட்சி அளித்தது! வண்ண வண்ண தீப்பொறிகளில் வான வேடிக்கைகள் இடி முழக்கி விண்ணில் எழில் தோரணங்களைத் தெளித்தன! அமெரிக்க மக்கள் அக்காட்சியைக் கண்டு களித்ததுபோல், 1.5 பில்லியன் உலக மாந்தரும் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்தனர்! சிற்ப மேதை பார்தோல்டியும், அதை நிறுவக் காரண கர்த்தாவான அரசியல் மேதை லாபெளலேயும், விடுதலைச் சிலை அன்று ஏற்றிய வரலாற்று முக்கிய ஒளிமயத்தை எவ்விதப் பெருமிதமுடன் அனுபவிப்பார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

 

தகவல்கள்:

1. Liberty Her Lamp Relit By: National Geographic [July 1986]

2. The New American Desk Encyclopedia [1989]

3. History of Statue of Liberty [2001]

4. Statue of Liberty -First 100 Years [2001 Report]

5. Liberty Torch Chronology & Facts [www.endex.com/gf/buildings/liberty]

6. The Statue in America [www.north-america.de]

7. Statue of Liberty History By PageWise Inc.[2002]

8. Lady Liberty Restored [July 1986]

9. The New Colossus Poem By: Emma Lazarus (1849-1887)

10.  http://twistedsifter.com/2013/05/rare-photos-of-the-statue-of-liberty-under-construction/  [May 22, 2013]

11.  https://www.google.com/culturalinstitute/exhibit/the-construction-of-the-statue-of-liberty/QRWHcXMU?hl=en&position=5%2C8

12.  https://en.wikipedia.org/wiki/Statue_of_Liberty  [April 28, 2016]

*****************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] April 28, 2018  [R-1]

 

நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10

Napolean near Pyramid

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

https://youtu.be/Zj4O560cHaU

https://youtu.be/MJ85Fkz-VaE

பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்

பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்

கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்

நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்

பிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த

பெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய்.

++++++++

‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது! கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது! மேலும் அக்கோடு நைல் நதி பாயும் சங்கம அரங்கையும் [Nile River Delta Region] சரி பாதியாகப் பகுத்தது. ‘

நெப்போலியன் தளவியல் வரைவுக் குழு [Napolean Survey Team (1798)]

Napolean invasion

முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!

Napolean invasion -2

உலகிலே நீண்ட சூயஸ் கால்வாயிக்கு நெப்போலியன் திட்டம்

முதல் நைல் நதிக் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப் படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.

Napolean in Egypt -1

 Napolean Army

எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு! ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப் பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது!

Napolean battle -1

Napolean battle -2

கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.

Napolean invasion -1

எகிப்த் மீது படையெடுத்த நெப்போலியன்

1798 மே மாதம் 19 ஆம் தேதி பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் தென் பிரான்ஸின் டொவ்லான் [Toulon] கடற்கரையிலிருந்து 328 கப்பல்களில் 35,000 படைவீரர்களுடன் எகிப்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கிளம்பினார். அப்போது நெப்போலியனுக்கு 29 வயது! பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது! மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது! அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது! பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது! சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது! அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர்! அவர்கள் மகா பிரமிட்கள், மற்ற எகிப்தின் பூர்வீகக் களஞ்சியங்களைத் தோண்டிக் காணும் பணிக்கு அழைத்து வரப்பட்டவர்!

அப்போது எகிப்தை துருக்கியின் சுல்தான் ஆண்டு வந்தார். ராணுவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், நெப்போலியன் எகிப்தியப் படையெடுப்பு ஒரு படுதோல்வி முயற்சி என்று சொல்லப் படுகிறது. பாலை வனத்தின் மணல் மீது தாங்க முடியாத தீப்பறக்கும் நடு வேனிற் காலத்தில் பிரெஞ்ச் படை போய் இறங்கியது! பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயினர் ! இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர்! வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படையினர் தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார்! அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார்! 1801 ஆம் ஆண்டில் எகிப்த் பிரெஞ்ச் வசமிருத்து மீட்கப் பட்டது!

Napolean battle -3

நெப்போலியன் படையெடுப்பு எகிப்தின் புதையல் ஆய்வுகளுக்கு வழியிட்டது!

பல நூற்றாண்டுகளாய் எகிப்தின் கலாச்சார நாகரீகம் ஐரோப்பியருக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்தது. பொதுவாக கிறிஸ்துவர்கள் எகிப்தில் அந்தக் காலங்களில் வரவேற்கப் படுவதில்லை! ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர்! நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர்! அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன! எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர்! நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது! 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன! 1809-1828 ஆண்டுகளில் அவை யாவும் சீரிய முறையில் பதிப்பில் வந்தன.

Napolean in Egypt -1B

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

23 History Topic: An Overview of Egyptian Mathematics.

24 The Ancient Egyptian Number System By: Caroline Seawright (March 19, 2001)

25 Parameter A & The Egyptian Decans By: Andrew Bourmistroff.

26 The Great Pyramids – The Library of Xalexandria.

27 Ancient Egyptian Astronomy By: David Noll.

28 Time, The Egyptians & The Calendar By: Deborah Houliding.

29 Napoleon ‘s Expedition to Egypt [1798]

30 The Age og Enlightment: Napoleon ‘s Invasion of Egypt (Secrets of the Great Pyramids) By: Peter Tomkins.

31 Suez Canal Thinnai Article [http://www.thinnai.com/sc0422043.html] By the Author.

32.  http://napoleon.lindahall.org/learn.shtml

33.  http://www.historyofwar.org/articles/wars_french_egypt.html

34.  https://en.wikipedia.org/wiki/French_campaign_in_Egypt_and_Syria  [April 16, 2016]

**************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 19, 2016)  [R-1]

நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் முறைகள் -9

Mystery Astrology

[Egyptian ‘s Hermetic Geometry]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++

https://youtu.be/zMqzLrT1kQY

https://youtu.be/djcJI8NcC2c

+++++++++++

‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருத்தியான முற்போக்குக் கணித, விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டுகின்றன. கணித மேதை பித்தகோரஸ், எரடோஸ்தனிஸ், ஹிப்பார்ச்சஸ் [Pythogoras, Eratothenes, Hipparchus], மற்ற கிரேக்க மேதைகள் அனைவரும் எங்கோ வாழ்ந்த பெயர் தெரியாதப் பண்டைக் கால வல்லுநரிடம், கணித விஞ்ஞான அறிவுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். ‘

பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]

Mystery Astronomy -1

‘பூர்வீக எகிப்தியர் ஒரு காலத்தில் நிலவின் வளர்பிறை, தேய்பிறைச் சுற்றை அடிப்படையாக வைத்து வருட நாட்காட்டியைத் தயாரித்தனர். பிறகு அம்முறையில் வருடச் சுற்று நாட்கள் பொருத்தமாக அமையாது போனதால், பரிதி நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நிலவு நாட்காட்டியை விடச் சற்று முற்போக்கான வருட நாட்காட்டியைக் கணித்தனர். ஓராண்டுக்கு 365 நாட்கள் என எடுத்துக் கொண்டு, முப்பெரும் கால நிலைகள் [Seasons] சுற்றி மீண்டும் வரும், பரிதி நாட்காட்டியை ஆக்கினர். பரிதி நாட்காட்டியில் ஒவ்வொரு கால நிலைக்கும் நான்கு மாதங்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் 30 தினங்கள் உள்ளதாக அனுமானம் செய்தனர். ‘

‘மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப் பட்டிருந்தது! அந்த கூம்பகம் விண்மீன்களின் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணை களையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசைப் பூகோள அரைக் கோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள், முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யிருந்தன. ‘

‘பிரமிடைத் திட்டமிட்டக் கட்டட ஞானிகள், அதற்கு முன்பாகவே பூமியின் சுற்றளவு, பரிதியைப் பூமி சுற்றிவரும் சுழல்வீதியின் சராசரித் தூரம், பூமியின் தனித்துவத் திணிவு [Specific Density], புவியீர்ப்பால் ஏற்படும் வேக வளர்ச்சி [Acceleration due to Earth ‘s Gravity] ஆகியவற்றை அறிந்திருக்கக் கூடும் என்று நாம் யூகிக்கச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன! ‘

ஆன்டிரு போர்மிஸ்டிராஃப் [Andrew Bourmistroff, Egyptian Decans]

‘கீஸாவிலுள்ள மாபெரும் கூஃபூ பிரமிடின் காலச் சக்கிரத்தில் ஓர் எதிர்கால அபாய முன்னறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது! 2004 ஆண்டுக்கு மேல் 2023 ஆண்டுவரை [+3 or -3 துல்லிமம்] நவயுகப் பொருள்மய நாகரீகத்தில் பேரிழப்புகள் நேருமென்று சொல்லி யிருக்கிறது. ‘

[அந்த முன்னறிவிப்பில் 2001 (9/11) ஆண்டு மூர்க்கரின் நியூ யார்க் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு உலக மெங்கும் மூர்க்கரின் பிலாஸ்டிக் வெடிப் பேரழிவுகள் பன்மடங்கு மிகுந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது! அடுத்து 2004 தென்னாசியச் சுனாமிப் பேரழிவுகள், 2005 செப்டம்பரில் கேட்ரினா ஹரிக்கேன் அடித்து நியூ ஆர்லின்ஸ் நகரம் முழுவதும் நாசம் அடைந்ததைக் கூறலாம்.]

பீட்டர் லெமிசூரியர் [Peter Lemesurier]

பிரமிட் கூம்பக அமைப்பில் கணித, வானியல் நுணுக்கங்கள்

பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.

Mystery Astronomy -3

வருடப் பஞ்சாங்க விபரங்கள் (வருடக் கால நிலை, பரிதி, நிலா நகர்ச்சிகளைக் காட்டும் தயாரிப்பு) [Almanac] அறிவதற்கும் பிரமிட் திட்டமிட்டுக் கட்டப் பட்டது என்று சொல்லும் எகிப்திய ஞான நிபுணரும் உள்ளார். வருடத்தின் நாட்கள் நீட்சியை நான்கு தசமத் துல்லிமத்தில் (365.2422 நாட்கள்) அதாவது ஒரு நாளின் பின்னத்தில், பிரமிட் மூலமாகக் கணக்கிட முடியும் என்று தெரிந்து கொள்ளப் பட்டுள்ளது.

ஃபாரோ மன்னன், கூஃபு [King Khufu] பேருயரத்தில் தனக்காகக் கட்டிய உலக விந்தை எனப் பெயர் பெற்ற மகா பிரமிடில் [The Great Pyramid] கீழ்க்காணும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டுள்ளன!

1. மகா பிரமிட் பூகோளத்தின் நிலைத்துவ அமைப்பாக மகத்தான நிலச் சின்னத்தில் [Geodetic Landmark] கட்டப் பட்டிருக்கிறது!

2. மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப்பட் டுள்ளது! அந்த கூம்பகம் விண்மீன்கள் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணை களையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசை அரைப் பூகோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள் (கோணங்கள், நீளங்கள்) முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யுள்ளன. பூகோளக் கோணங்கள் குறிக்கப் பட்ட மட்டரேகை [Lattitude], தீர்க்கரேகை [Longitude] குறிக்கப்பாடு ஓர் அளவுப்பட, மெய்யான மாதிரியாக [Scale Model] வரையப் பட்டிருக்கிறது.

Mystery Gods in Chakra

சக்கரச் சுழற்சியில் எகிப்தியர் தெய்வங்கள்

3. புராதன உலகுமயமான எடை, அளப்பு முறைகள் [Ancient Universal Weights & Measures] கூறும் மாதிரி ஏற்பாடுகள் பிரமிடில் கையாளப் பட்டிருந்தன!

4. பூகோள அச்சின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் வானியல் மேதை ஸர் ஜான் ஹெர்செல் [Sir John Herschel] நூறாண்டுகளுக்கு முன்பே

விளக்கிய நேர்போக்கு, நிலைநோக்கு அளப்பு விதிகளைப் [Linear & Temporal Measurements] போன்ற ஒரு மாதிரி முறை, பிரமிடில் காணப் படுகிறது.

உலகப் புகழ் பெற்ற பிரமிடில் காணும் பொறியியல் மகத்துவம்

மகா பிரமிடின் நுணுக்கமான கணித, வானியல் விதிப்பாடுகளைத் திறமை மிக்க பல எகிப்தியவாதிகள் மெய்வருந்தி ஆராய்ச்சிகள் செய்து கீழ்க்காணும் வியப்பான கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

 

1. பிரமிட் கட்டட நிபுணர்கள் நிச்சயமாகப் பூமியின் சுற்றளவை அறிந்திருப்பதாகத் தெரிகிறது! அதுபோல் பூமி பரிதியைச் சுற்றும் ஓராண்டு காலத்தின் நாட்களைப் பல தசமத் துல்லிமத்தில் [Sidereal Year: 365.2564 days] கணித்திருக்கிறார் என்றும் தெரிகிறது. [சைடெரல் ஆண்டு என்பது வருட நாட்களைத் துல்லியமாக எண்ண ஒரே விண்மீனை இரண்டு முறை, வானில் நோக்கி வருட நாட்களைக் கணிப்பது.]

2. மகா பிரமிட் கூம்பகம் ஓராண்டு காலத்து நாட்களின் எண்ணிக்கையை நான்கு தசமத் துல்லிம அளவுக்கு நோக்கிக் கணிக்கும் [365.2422] வசதியும், சாதனங்களும் கொண்டுள்ளது.

3. மகா பிரமிடின் திசைநோக்குக் காந்தமுள் நுனி [Compass Pointer] நேர் வடக்கை நோக்கி வைக்கப் பட்டிருக்கிறது. மேலும் பிரமிட் பூகோளத்தின் நில எடை நடுவில் [Geocentric Center of Earth ‘s Land mass] கட்டப் பட்டுள்ளது. தகர்க்க முடியாத அமைப்பில் பதிக்கப் பட்டிருக்கும், பிரமிடின் தளப்பண்பு நோக்குக் கருவி [Survey Instrument] மிகத் துல்லியமானது.

4. மகா பிரமிடின் சாய்வு பக்கங்கள், அவற்றின் கோணங்கள் ஆகியவற்றின் மூலம் வடபுறப் பாதி பூகோளத்தைத் [Northern Geohemisphere] திரையிட்டு வரைய வழிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரமிடின் கூம்பக உச்சி பூகோளத்தின் வட துருவத்தைக் குறிப்பிடுகிறது. பிரமிடின் தளச் சுற்றளவு, ஒப்பளவில் பூகோளத்தின் மத்திய ரேகையைக் [Equator] குறிப்பிடுகிறது. பிரமிடின் ஒவ்வொரு சாய்வு தளமும், அரைப் பூகோளத்தின் நான்கில் ஒரு சுளைப் பகுதியாகக் [One Spherical Quadrant (90 degree) of the Hemisphere] கருதப்படுகிறது. சாய்வு தளமும், கோளத்தின் வளைந்த சுளையும் பொருந்த வேண்டு மென்றால், அவை யிரண்டும் ‘பை ‘ [Pi: A Contant, Related to the Circle] என்னும் நிலை யிலக்கத்துடன் சார்ந்திருப்பது அவசியம். அரைக் கோளத்தின் பரப்பு: (Pi)D^2/2 [D: Earth ‘s mean Diameter] மகா பிரமிடின் உயரம்: H, தளப்பக்கம்: S என்று வைத்துக் கொண்டால், உயரமும் (S), பக்கமும் (H) Pi என்னும் வட்டத்தின் நிலை யிலக்கத்துடன் (S/2H = Pi/4) சம்பந்தப் பட்டுள்ளது. மகா பிரமிடின் உயரம் (H): 480 அடி, தளப்பக்கம் (S): 754 அடி Tan(A)=480/372 [2H/S], சாய்வு தளக்கோணம் = 52 டிகிரி என்று அறியலாம்.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

23 History Topic: An Overview of Egyptian Mathematics.

24 The Ancient Egyptian Number System By: Caroline Seawright (March 19, 2001)

25. Parameter A & The Egyptian Decans By: Andrew Bourmistroff.

26 The Great Pyramids – The Library of Xalexandria.

27.  http://hermetic.com/dionysos/geometry.htm

28.  https://www.pinterest.com/Varukah/hermetics/

29.  http://www.hermeticsource.info/the-egyptian-mystery-schools.html

30.  https://en.wikipedia.org/wiki/Egyptian_astronomy  [March 1, 2016]

31. http://www.ancient-origins.net/artifacts-ancient-technology/why-are-there-365-days-year-organizing-dates-ancient-egyptian-calendar-021761 [December 16, 2017]

************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (December 16, 2017)  [R-2]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8

 Cutaway Section of Pyramid

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZoevycJ1bbY

https://youtu.be/0bRWBwP1KcQ

https://youtu.be/xDgkHd670PU

‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘

கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]

‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று ? ‘

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

Egyptian Pyramid inside Egyptian Mathematics [Solid Geometry] -3

‘உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா ? மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின் களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது!

லியனார்டோ டவின்ஸி 

Egyptian Mathematics -1

Egyptian Mathematics -3

Egyptian Pyramid building -2

‘எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை! அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை! பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். ‘

பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]

முன்னுரை: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.

Egyptian Measurements

எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

Egyptian phonograms

எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

Egyptian Pyramid building -1

எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்

விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான ‘ஆல்கெமி ‘ [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

Egyptian Pyramid building

தற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:

எண்: 1 …. ஒற்றைக் கோடு

எண்: 10 …. ஒரு லாடம்

எண்: 100 …. C எழுத்து போல் ஒரு சுருள்

எண்: 1000 …. தாமரை மொட்டு

எண்: 10,000 …. ஒரு விரல்

எண்: 100,000 …. ஒரு தவளை

எண்: 1000,000 …. கை உயர்த்திய ஒரு கடவுள்

Egyptian Pyramid Symbols

எகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள்

4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.

Egyptian Shopping Guide

முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.

Fig History on the Wall

இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7

Fig Calendar

கூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு

கிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.

பிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

Fig Stone Levelling

Social Pyramid

மாபெரும் கீஸா பிரமிடில் மகத்தானக் கணிதக் கண்டுபிடிப்புகள்

ஃபாரோ மன்னன் கூஃபூ [King Khufu] எழுப்பிய பிரமிட்தான் எல்லாவற்றிலும் பெரியது; உலகத்தின் ஏழு விந்தைகளில் ஒன்றாகப் பாராட்டப் படுவது. அந்த கற்பாறைக் கூம்பகம் மிகத் துல்லியமான பாறைக் கற்களின் அமைப்புகளால் உருவாக்கப் பட்டது. அதன் பீடத்தளச் சதுரப் பக்கம் 230 மீடர். நான்கு பக்கங்களின் மட்டநிலை நீளம் ஒன்றுக் கொன்று 20 செ.மீ. வேறுபாட்டில் உள்ளதென்றால், கட்டடக் கலை வல்லுநரின் நுணுக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது! உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன்! பாறைக் கற்கள் நுணுக்கமாகச் செதுக்கப் பட்டு அமைக்கப்பட்ட அவ்வடுக்கின் ஊடே ஒரு மெல்லிய இழைத் தகடு கூடச் செலுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது!

Section of Pyramid

கீஸா பிரமிடில் உள்ளதாக அறியப்படும் கணித மகத்துவங்கள்

1. பிரமிடின் பீடச் சுற்றளவு: 230×4=920 மீடர். எகிப்தியர் முழங்கை [cubit measure: 40 செ.மீ] அளவுக்கு

920/40= வருவது சுமார்: 365! அதாவது ஓராண்டின் நாட்கள் [ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிப்பிடப் பிரமிட் நீளம்: 230 மீடர் [230/40= 575] அதாவது 575 முழங்கை அளவு திட்டமிடப் பட்டது.

2. பிரமிட் பீடச் சுற்றளவை 230×4=920, இரட்டை உயரத்தால் [2×150] வகுத்தால் வருவது வட்ட நிலை இலக்கம் பையின் [Pi] மதிப்பு= 3.14 வருகிறது.

3. பிரமிடின் உயரத்தை 10^9 [10 to the power of 9] எண்ணால் பெருக்கினால், சுமார் பூமிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் கிடைக்கிறது.

4. பிரமிட் எடையைப் 10^15 எண்ணால் பெருக்கினால், பூமியின் சுமாரான எடை வருகிறது.

5. பிரமிட் உள்ளே அமைக்கப்பட்ட மன்னர் அடக்க மாளிகைகள் பித்தகோரியன் முக்கோணங்களான, [3-4-5] அல்லது [2-5-3] ஆகிய கணித விதியில் ஆக்கப் பட்டுள்ளன.

சில ஐரோப்பிய வல்லுநர்கள் இந்தப் பொருத்தங்களில் [3], [4] கூற்றுக்களை எகிப்தியர், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம், பூமியின் எடை ஆகியவற்றை யூகித்துப் பிரமிடைக் கட்டி யிருக்கிறார் என்று பூரணமாக நம்புவதில்லை!

Spynx Head 1

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

23 History Topic: An Overview of Egyptian Mathematics.

24 The Ancient Egyptian Number Sytem By: Caroline Seawright (March 19, 2001)

25.  http://discoveringegypt.com/egyptian-hieroglyphic-writing/egyptian-mathematics-numbers-hieroglyphs/

26.  http://www-groups.dcs.st-and.ac.uk/history/HistTopics/Egyptian_numerals.html

27.  https://en.wikipedia.org/wiki/Egyptian_numerals  [March 14, 2016]

****

S. Jayabarathan [jayabarathans@gmail.com  (April 15, 2016)]  [R-1]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

 Art & Architecture -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’

அரபிய முதுமொழி

‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு அல்லது பெலிகன் பறவைகள் பறந்து செல்கின்றன. பாதி உடை அணிந்த வேளாண்மைக் காரர் தமது அன்றாடப் பணியில் முனைந்துள்ளனர். ‘

ஜியார்க் ஈபர்ஸ், தொல்பொருள் ஆய்வாளி [Georhe Ebers, Archaeologists]

Art & Architecture -6

‘ஓவியக் கலையை ஒருவர் வெறுத்தால் அவர் வேதாந்தத்தையோ அல்லது இயற்கை வனப்பையோ நேசிக்க மாட்டார். கண்கள் காணும் இயற்கையின் எல்லா வேலைப்பாடுகளையும் ஓவியம் பிரதிபலிக்கிறது. அத்தகைய ஓவியக் கலையை நீ வெறுப்பாயானால் இயற்கையின் விளைவானக் கடல், நிலம், பயிரினம், புல்லினம், பூவினம், விலங்கினம் அனைத்தின் கண்டுபிடிப்பையும், மனிதரின் ஆர்வத்தையும் மெய்யாக ஒதுக்குவதாய் அர்த்தம். ‘

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

Art & Architecture -2

முன்னுரை: தனித்துவ முறையில் நுணுக்கமாக ஓரிடத்தில் மனிதர் கட்டிய பிரம்மாண்டமான எகிப்தின் காஸா பிரமிட் ஒன்றுதான் உலகிலே மாபெரும் அற்புதக் கணிதச் சாதனையாக கருதப்படுகிறது! கிறித்துவ யுகக் கடிகார முள் சுற்றி நாட்களைக் கணக்கிடுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீகச் சின்னமான பிரமிட்கள் தோன்றி விட்டன! கோடிக் கணக்கான எகிப்தியப் பொறியாளர், கட்டடப் பணியாளர், கல் சிற்பிகள், கல்தச்சர், மரத்தச்சர், ஊழியர், அடிமைகள், கடவுளாகக் கருதப்படும் அவரது மன்னருக்காகப் பிரமிட் ஆக்கப் பணிகளில் கலந்து கொண்டார் என்று அறியப் படுகின்றது. சியாப்ஸ் பிரமிட் [Pyramid of Cheops] கட்டுவதற்கு ஃபாரோ பரம்பரையின் கூஃபூ வேந்தன் [Pharaoh King Khufu] 7 மில்லியன் நபர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டதாயும், அதைக் கட்ட 30 ஆண்டுகள் ஆயின வென்றும் எகிப்தியத் தகவல் ஒன்று கூறுகிறது! வலிமையும், செல்வமும் படைத்த கூஃபூ மன்னன் அத்தனை பேருக்கும், பிரமிட் கட்டும் போது உணவு, உடை, வீடு, கூலி அனைத்தும் கொடுத்துப் பேணியதாக அறியப் படுகிறது!

 

பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர்! ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரை கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

Art & Architecture -14

எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்த் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

Art & Architecture -15

பிரமிட்களின் பரிமாணம் அகத்திலும் சரி, புறத்திலும் சரி அந்த அளவுகள், கல்லறைகளின் நேரமைப்புகள் [Orientations of Stone Compartments], பல்வேறு கோணங்கள் [Various Angles] ஆகியவைத் துல்லியமாய் நிறுவப்பட்டுத் தொடர்ந்து ‘பூரணத்துவ நியதி ‘ [Perfection] கடைப்பிடிக்கப் பட்டது! கற்பாறைகள் 70 டன் உச்ச எடையில் உடைக்கப் பட்டுப் பத்திலொரு பங்கு மில்லி மீடர் துல்லிமத்துக்குத் [1/10 of a millimeter Accuracy] தேய்த்து உராயப் பட்டன! கிஸா பீடத்தில் [Giza Plateau] மாபெரும் பரிமாணத்தில் உள்ள பிரமிடின் தனிச் சிறப்பு: மன்னன் ‘புதைப்பரண் ‘ [Burial Chamber] மூன்றில் ஓரளவு உயரத்தில் பிரமிட் உள்ளே துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது! மேலும் புதையரண்களை அடையும் ‘வாயுப்பாதைகள் ‘ [Airshafts] எனப்படும் குடைவு வழிகளும் மிகத் துல்லிய பரிமாணத்தில் நிறுவப் பட்டுள்ளன! தற்காலத்தில் லேஸர் ஒளிக்கருவி போன்று நமது பொறி நுணுக்க முறைகள் மிக மிகத் துல்லியதாயினும், கற்கட்டடக் கலையில் எகிப்தியர் கையாண்ட நிபுணத்தை, நம்மால் மீண்டும் செய்து காட்ட முடியாது!

கட்டடச் சிற்பக் கலையின் முப்பெரும் பிரிவுகள்

எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான, வல்லமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கற்கலைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். கண்ணாடிக் குவளைகள் ஆக்கவும், அவற்றில் நிரந்தர ஓவிய உருவங்கள் வரையவும் தெரிந்திருந்தனர். முப்பெரும் காலப் பிரிவுகளில் எகிப்தியர் முடித்தக் கட்டடப் படைப்பு வேலைகளைப் பகுக்கலாம். முதலாவது கட்டடத் துறைக்காலம்: பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 5000-3000). இரண்டாவது கட்டடத் துறைக்காலம்: இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 3000-1700). மூன்றாவது கட்டடத் துறைக்காலம்: புதிய பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 1700-350)

Art & Architecture -17

பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலத்தில்தான் ஃபாரோ மன்னர்களால் பிரமிடுகள் கட்டப்பட்டன. இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலங்களில்தான் குன்றுகளைக் குடைந்து புதைப்பரண்கள் உண்டாக்கப் பட்டன. புதிய பேராட்சிப் படைப்புகள்: அப்போதுதான் கார்னாக், லுக்ஸர், எட்ஃபெள [Karnak, Luxor, Edfou] போன்ற கற்கோயில்கள் கட்டப் பட்டன. பிரமிட்கள் சிறந்த வரலாற்றைக் கூறினாலும், மூன்றாவது பிரிவில் கட்டிய ஆலயங்களும், ஆலயச் சிற்பங்களும் எல்லாவற்றையும் விட உன்னத பொலிவுச் சின்னங்களாகக் கருதப் படுகின்றன.

Art & Architecture -16

கட்டடச் சிற்பக் கலைகளின் தனித்துவப் பண்புகள்

எகிப்திய நாகரீகச் சின்னங்கள் ஐம்பெரும் பண்புகளில் காணப் பட்டன. முதலாவது தனித்துவப் பண்பு: சின்னங்களின் வடிவும், பளுவும். மனித உயரம், எடையை விடப் பல மடங்கு மிகையான வடிவம், நிறை கொண்டவை அவை! கற்பாறை சில சமயங்களில் 25 அடி நீளத்தையும் மிஞ்சிய பரிமாணம்! எடையில் கூடியது 70 டன் பளுவான ஒற்றைக் கற்பாறை. அவை குன்றுகளில் குடைந்து வெட்டப் பட்டுக் கடத்திக் கொண்டு வரப்பட வேண்டும். இரண்டாவது தனித்துவப் பண்பு: குறிப்பிட்ட முறையில் ஒயிலாகச் செதுக்கப் பட்ட தூண்கள், சிற்பக் கீறல் ஓவிய வேலைப்பாடுகள் கொண்டவை. மூன்றாவது தனித்துவப் பண்பு: அவரது சிற்ப ஓவிய வடிவங்கள் பல பன்னிறக் கலைத்துவ நளினம் பெற்றிருந்தன. பிரமிட், ஆலயங்களில் உள்ள கட்டடச் சுவர்கள், பெரும்பான்மையான தூண்கள் அனைத்திலும் ஒப்பனைகள், ஓவியங்கள், சின்னங்கள், வேலைப்பாடுகள் வரலாறுகளாய் பொறிக்கப் பட்டுள்ளன.

அனைத்துச் சின்னங்களும், சிற்ப ஓவியங்களும் எகிப்தை ஆண்ட பூர்வீக வேந்தர்களின் வரலாறுகளாய் உள்ளன. அவற்றில் எகிப்தியர் பயன்படுத்திய வண்ணக் கலவைகள் ஆயிரக் கணக்கான் ஆண்டுகளாய் கால வெள்ளம் அழிக்காதபடி யிருப்பது ஓர் தனித்துவப் பண்பாகும். நான்காவது தனித்துவப் பண்பு: கோயில் மேற்தளம், புதைப்பரண்களின் மேற்தளம், வாசல், பலகணி ஆகியவை அமைக்கப் பளுதாங்க உதவும் பாறை மேற்தட்டு போன்றவை மட்டநிலை உத்தரங்களைப் பயன்படுத்தின. நிறுவப்படும் அனைத்துக் கட்டடமும், திட்டமிடும் ‘கட்டமைப்பு ‘ [Structure] முறைகள், நேரமைப்புகள், சீரமைப்புகள் [Orientations & Alignments] ஆகிய சீரியச் செவ்வமைப்பு முறைகளைச் சார்ந்துள்ளன. ஐந்தாவது தனித்துவப் பண்பு: பிரமிட் கூம்பகத்தின் பக்கங்கள் சாய்ந்தவை! எத்தனை பெரிய பூகம்பம் நேர்ந்தாலும், உட்புறமுள்ள புதைப்பரணுக்கு எவ்விதப் பாதிப்பும் விளையாது! ஆலயச் சுவர்கள் சரிந்த வடிவத்தில் உள்ளதால், அவற்றுக்கும் நிலைத்துவம் [Stability] மிகுதியாக இருக்கிறது!

Art & Architecture -4

பிரமிட்கள் இரண்டு விதத் தனித்து ஏழில் பண்புகளில் உலகச் சிறப்புற்றவை. ஒன்று: எளிமை வடிவம் [Simplicity]; மற்றொன்று: சீர்ச் செம்மை உடமை [Symmetry]. அதாவது எப்புறம் நோக்கினும் சீரான கோணம், சீரான சரிவு, சீரான பரப்பு, சீரான பக்கம், சீரான மட்டம், சீரான அமைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள ஓர் அற்புதக் காட்சி. பிறகு அவற்றுள் இருந்த ஒற்றுமை: பிரமிக்கத் தக்க தோற்றம்! ஈரடிப்பில்லாத வரட்சியான பாலைவனக் கால நிலையில் எகிப்த் நாடு இருப்பதால், பிரமிடுக்குள் புதைத்து வைத்த மன்னர்களின் சடலங்கள், உடைகள், நகைகள், மரச் சாதனங்கள் போன்றவை கறை படாமல், கசங்கிப் போகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பாய் இருந்தன.

Art & Architecture -7

ஒரு நாட்டு மக்களின் தனித்துவ நுட்பக் கலைத்துவத் திறமைகள் அவரது ஓவியம், சிற்பம், கட்டடம், காவியம், கானம், நாட்டியம் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன. அவற்றின் ஆக்க முறைகளை நோக்கினால் அவை அனைத்தையும் ‘படைக்கும் நியதி ‘ [Law of Composition] ஒன்றே ஒன்றுதான். இசைக் கீதத்தைப் படைத்தால் என்ன ? திரைத் துகிலில் ஓவியத்தைத் தூரிகையால் தீட்டினால் என்ன ? காவிய நூலை ஒருவன் ஆக்கினால் என்ன ? கற்பாறையில் சிற்பம் ஒன்றைச் சிற்பி செதுக்கினால் என்ன ? பூமித் தளத்தைச் சீர்ப்படுத்தி ஓர் மாளிகையைக் கட்டடக் கலைஞன் கட்டினால் என்ன ? நர்த்தகி தாளத்திற்கு ஏற்றபடி நாட்டியம் ஆடினால் என்ன ? பிரமிடை எகிப்தியர் திட்டமிட்டு நிறுவினால் என்ன ? எல்லாப் படைப்புகளுமே ஒரே ஓர் ஒழுக்க நெறியைத்தான், அதாவது ஒரே ஒரு படைப்பு நியதியைத்தான் பின்பற்றுகிறது. ஓவியம் சிறியது, ஒருவர் படைப்பது! ஆனால் பிரமிட் பிரம்மாண்டமானது! பல்லாயிரம் பேர் கூடிப் பணிபுரிந்து படைப்பது!

Art & Architecture -5

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22. http://news.psu.edu/story/141300/2008/03/24/research/probing-question-how-were-egyptian-pyramids-built

23. https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

24.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramid_construction_techniques  [April 4, 2016]

*****************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 11, 2016) [R-1]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

Paintings-6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள்

இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு

சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்!

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்

ஆகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்!

மகாகவி பாரதியார்

Statue carvings

‘ஒவ்வோர் அங்கமும் தனித்து நீங்கி, தனது முழுமையற்ற குறை நிலையிலிருந்து தப்பிச் சென்று, வேறோர் முழு தோற்றத்தைத் தேடிப் பிடித்து அந்த வடிவத்தை நிரப்பிக் கொள்கிறது! ‘

‘கலைஞன் கூட்டத்தில் கலந்து தன் சிந்தனைக் குவிப்பைச் சிதறவிடக் கூடாது! ஆனால் இயற்கை உலகின் முழுச் சீரியற் பண்பில் மூழ்கும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் வாழ்ந்து இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தில் நுழைந்து, அதன் உட்புறக் கருவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ‘

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

முன்னுரை: எகிப்து என்னும் பெயர் நம் செவிகளில் பட்டதுமே பிரம்மாண்டமான பிரமிட்கள்தான் நமது கண்கள் முன்பாகத் தோன்றுகின்றன! குன்று போல் குவிக்கப்பட்ட அந்தப் பாறைக் கட்டிகள் தேய்து போன எகிப்தின் நாகரீகச் சின்னங்களாகத் தெரிந்தாலும், அவை அனைத்தும் வரலாற்றுச் சிற்பங்களாய், வண்ணப் படங்களாய் எகிப்தியரின் ஒப்பற்ற நுணுக்கத் திறமைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பறைசாற்றி வருகின்றன! அந்த மாபெரும் சின்னங்களைப் புரிந்து கொள்ளச் சற்று மர்மமாய், சிரமமாய் இருந்தாலும், அவை எகிப்தியரின் தனித்துவப் பண்பை, கலாச்சாரத்தை நமக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றன! அந்த நாகரீகப் படைப்புகள் யாவும் நூதனக் கணித வடிவில், பொறி நுணுக்க முறைகளில் சீரான கட்டுமானப் பணிகளில் உருவாக்கப் பட்டுள்ளன! எண்ணற்ற அவ்வரிய கலைக் களஞ்சியப் படைப்புக்களை ஆக்கியவன் ஒற்றை ஃபாரோ அரசன் மட்டும் அல்லன்! ஃபாரோ பரம்பரையின் ஆற்றல் மிக்க, செல்வம் செழித்த, கடவுளாக மதிக்கப் பட்ட அரசர்கள் பலர், பல நூற்றாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டியவை! ஆயிரக் கணக்கான பணியாட்களும், அடிமைகளும் அரசரின் நேரடிக் கண்காணிப்பில் அல்லும், பகலும் ஒழுக்க நெறியில் பல்லாண்டுகள் இயங்கிப் படைத்தவை!

எகிப்தியரின் இயற்கையுடன் ஒத்த கலைத்துவப் படைப்புகள்

இயற்கை வனப்புகளும், வடிவங்களுமே எகிப்தியரின் கலைத்துவப் படைப்புகளில் பெரும்பான்மையாகக் காணப் பட்டன. எகிப்தின் பற்பல வண்ண ஓவியங்களிலும், கட்டட மாளிகைகளிலும் இயற்கை மற்றும் இயற்கை மயமான இயக்கங்களின் சின்னங்களைக் கண்டு களிக்க முடிகிறது. எகிப்தியரின் அன்றாட இயற்கை வழங்கிய வாழ்க்கை முறைகளை அவற்றில் அறிகிறோம். நைல் நதியைச் சுற்றிலும் விதைக்கப் பட்டு, மலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்ற அந்தக் கலை வடிவான நாகரீகம், நைல் நதியின் நீர் வெள்ள ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, ஒருமைப்பாடுடன் பிணைந்து ஆண்டு தோறும் மாறி வந்தது!

Statue 1

நைல் நதியின் நீரோட்டம் சீராக நிலவிய போது, எகிப்தியர் வேளாண்மையைத் தொடர்ந்து விருத்தி செய்தார்கள். பருவ காலங்களில் நதியில் வெள்ளம் பெருகிக் கரை மீறி நிலங்களை மூழ்க்கி வேளாண்மை வேலைகள் தடைபடும் போது, குடியானவர் அனைவரும் ஃபாரோ மன்னர் கட்டும் பிரமிட்கள் அல்லது ஆலயப் பணிகளில் பங்கு கொண்டதாக அறியப் படுகிறது! அத்தகைய இயற்கை மரபு ஒட்டிய வாழ்க்கையை எகிப்தியர் கடைப்பிடித்து ஒழுகி வந்தது அவரது ஓவியப் படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.

பண்டை கால எகிப்தில் மக்களின் மதமும், கலாச்சாரமும் இயற்கையுடன் பிணைந்து கலந்திருந்தன. எகிப்தியர் ‘ரே ‘ எனப்படும் சூரியக் கடவுளை [Sun God: Re] வணங்கி வந்தனர். அத்துடன் பாரதத்தின் விநாயக மூர்த்தி போல, விலங்கினத்தின் தலை கொண்ட அநேக தெய்வங்கள் எகிப்தியரின் கலை, கலாச்சார, மத விழாக்களில் வணங்கப் பட்டன. ஃபாரோ பரம்பரையின் நான்காவது இனவாரி மன்னர் ‘ஸ்ஃபிங்ஸ் ‘ [Spinx] எனப்படும் பிரமிக்கத் தக்க மனிதத் தலைச் சிங்கத்தை வடித்தார். அன்னங்கள் போன்ற வண்ண வாத்துக்கள் ஒயிலாக நடக்கும் சுவர்ப்படப் படைப்புகளை [Frieze: Geese of Meidum (கி.மு.2530)] எகிப்து பிரமிட்களிலும், மற்ற ஆலயச் சுவர்களிலும் காணலாம். விலங்குகளும், பறவைகளும் மதிப்புடனும், பரிவுடனும் நடத்தப்பட்டன என்பது அவரது ஓவியப் படங்களிலும், எழுத்துப் படைப்புகளிலும் தெரிகிறது. அவரது ‘பறவை வளர்ப்புக் காட்சி ‘ [Fowling Scene (கி.மு.1450)] ஓவியத்தில் எகிப்தின் பலவிதப் பறவைகள் பரிவாக நடத்தப்பட்டதைக் காணலாம். இயற்கையின் அம்ச அமைப்புகளை அமென்-மத்-கொன்ஸூ ஆலயத்தில் [Temple: Amen-Met-Khonsu (கி.மு.1370)] பாபிரஸ் செடி, தாமரைப் பூச் சூடிய போன்ற தூண்கள் ஏந்தியுள்ளன.

Paintings-7

எகிப்தியரின் கட்டடக் கலைத்துவம்

நைல் நதியின் கரைகளில் பாறைக் குன்றுகள் நிரம்பிய மலைச் சரிவுப் பாலைவனம் பல மைல்களுக்குப் பரவி யுள்ளன! பாறை அரங்குகளில் கட்டிகளை வெட்டி எடுத்து அவையே கோடான, கோடிச் செங்கற்கள் போல பிரமிட்களில் பயன்படுத்தப் பட்டன! வடிவங்களை உருவங்களாகச் செதுக்கி வடிக்கப் பாறை வெட்டுத் துண்டுகளே உபயோக மாயின. பாறை வெட்டுகள் குன்றுகளில் குடைந்து துண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகள் மூலம் நைல் நதியில் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக அறியப் படுகின்றது. கடினப் பாறைகள், சுண்ணக் கற்கள், மென்மைக் கற்கள் [Granite, Limestone, Sandstone] எனப்படும் பலவிதப் பாறைகள், கற்கள் சிற்பப் பணிகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் பெருந் துண்டங்களாய் வெட்டி எடுக்கப் பட்டன. கட்டிடக் கலைஞர் காரை என்னும் சுண்ணக் கலவையைப் [Mortar] பயன்படுத்தாமல், பாறைத் துண்டுகள் துல்லியமாக மட்டம் செய்யப்பட்டு ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொள்ளும்படி வெகு அற்புதமாய் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டுள்ளன!

Bird Watching -1

மாளிகைகளின் கனமான மட்டநிலை மேற்தளத் தட்டுகளை [Terrace Stone Plates] யானைத் தூண்கள் தாங்கும்படி நிறுத்தப் பட்டன. எகிப்தின் கார்னாக் ஆலயத் தூண்கள் [Karnak Temple Pillars], காண்போர் தலை சுற்றும்படிப் பிரமிக்கத் தக்க வடிவில் நிறுத்தப் பட்டவை! அந்தத் தூண்களின் மேலே ஏறிச் செல்லவும், பாறைத் தட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்லவும் செங்கற்களை வைத்துச் சாய்வுத் தளம் [Ramp] கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில தூண்கள் ஒருவித வேலைப்பாடு இல்லாமல் உள்ளன. சில தூண்களில் சிற்ப ஓவியங்கள் நுணுக்கமாகக் கீறப்பட்டு உள்ளன. ஃபாரோ மன்னன் மகுடம் சூடிப் பட்டம் ஏற்றக் கொண்டபின், அவனுக்குத் தனிப்பட்ட புதைப்புப் பிரமிட் கட்டும் பெரும்பணி திட்டமிடப் படுகிறது. கட்டடக் கலைஞர்களும், ஓவியச் சிற்பக் கலைஞர்களும் சேர்ந்து ஃபாரோவின் பிந்தைய நாட்கள் முழுவதும் பணி செய்கிறார்கள். ஃபாரோ மன்னன் மரணம் அடைந்த பின் பிரமிட் வேலைகள் அனைத்தும் நிறுத்தம் அடைகின்றன!

எகிப்தியரின் அடிப்படைப் பணிகள் கலைப் படைப்பாயின

பண்டைக் கால எகிப்தியரின் கலைகள் [ஓவியங்கள், சிற்பங்கள், பாறைக் கீறல் படங்கள், நடனங்கள்] யாவும் பெரும்பான்மையாக அவரது மீன் பிடித்தல், படகு ஓட்டல், வாணிபம் செய்தல், ரொட்டி தயாரித்தல், கூட்டுக் குழு விழா போன்ற அனுதின வாழ்க்கைப் போக்கின் ஒவ்வொரு பழக்கத்தையே பிரதிபலித்தது. பிரமிட் உள்ளறைச் சுவர்கள், புதையறைச் சுவர்கள், ஆலய மதில்கள் ஆகியவற்றில் வரையப் பட்ட ஓவியங்கள் அவரது அனுதின வாழ்க்கை நிகழ்ச்சிகளைத்தான் காட்டின. அந்தக் கால மாந்தரின் நடை, உடை, பிழைப்பு, தொழில், நடனம் ஆகியவை சுவர்களில், தூண்களில் வரையப் பட்டுள்ளன.

Statue 2

இறந்தவர் அணிந்திருந்த விலை மதிப்பற்ற வண்ணக் கற்கள் பதித்த தங்க நகைகள், ஒளியோடு புதைப் பேழையில் கிடந்தன. பயன்படுத்தப் பட்ட அரச கலசங்களில் விலங்குகளின் படங்கள், வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.

எகிப்தியரின் பிரமிட் மதில், ஆலயச் சுவர், தூண்கள் மீது வெகு நுணுக்கமாக வரையப்பட்ட படங்கள், ஓவியக் கீறல்கள் யாவும் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னங்கள். செத்தவர் கடவுளைக் காணச் சென்று, நீடித்த சொர்க்கபுரி வாழ்க்கை பெற அவர் செய்த நற்பணிகளும், அந்த வரை படங்களும் உதவி செய்யும் என்று எகிப்தியர் நம்பினர். அவரது உணவு, உடை, பணியாட்கள், அடிமைகள் ஆகியோரின் படங்கள் வரையப் பட்டு புதை பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளன.

சிற்பக் கலைஞர், பானைக் குயவர் புரிந்த பணிகள்

சிற்பக் கலைஞர்கள் பண்டை எகிப்தில் மிகவும் தேவையான வல்லுநராகக் கருதப் பட்டனர். நாட்டின் ஃபாரோ மன்னர், அவரது மனைவிமார், அரச வரலாறு பதிப்பாளி, ஆண், பெண் கடவுள்கள், விலங்குகள் ஆகிய வடிவங்களின் சிற்பங்களைச் செதுக்க வேலைக்கு வைத்துக் கொள்ளப் பட்டார்கள். கருங்கற்கள் சிற்பங்கள் போல, வேறு அலபாஸ்டர் எனப்படும் ஒளி மங்கி ஊடுறுவும் பளிங்குக் கற்களும் [Alabaster, a White Translucent Stone] பானைகள், கலங்கள் செய்யவும், சிற்ப வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டன. பானைப் பண்டங்கள் செய்ய செராமிக்ஸ் [Ceramics], களிமண் உபயோக மாயின. அப்பாண்டங்களில் தாதுக் கற்கள் [Mineral Beads] பலவித வண்ணங்களில் கலைத்துவ முறையில் பதிக்கப் பட்டன. கைக்கலை வடிப்பாளிகள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களை உபயோகித்து நகைகள், கத்திகள், ஆயுதங்கள், ஈட்டிகள் செய்தனர்.

எகிப்தியரின் இலக்கியத்தில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது! பிரார்த்தனைப் பாடல்களும், துதிப்பாக்களும் கடவுளை உயர்த்தி எழுதிப் படைக்கப் பட்டவை! அவற்றில் யாவற்றையும் விட முக்கியமான நூல்: ‘மாண்டோரின் சுவடி ‘ [The Book of the Dead] அந்நூலில் செத்தோர் பிற்காலத்தால் மேலுலகில் நீண்ட நெறி வாழ்வை அடைவதற்கு வேண்டிய 200 துதிப் பாசுரங்கள், மந்திர விதிகள் எழுதப் பட்டுள்ளன. எகிப்தியர் மேலும் துணிச்சல் கதைகள், தேவதைக் கதைகள், காதல் கதைகள், பழமொழிகள், பாடல்கள், பொன்மொழிகள், புனைந்துரைக் கதைகள் ஆகியவையும் ஆக்கியதாக அறியப்படுகிறது.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18. http://www.crystalinks.com/egyptart.html

19. http://www.visual-arts-cork.com/ancient-art/egyptian-sculpture.htm

20.  https://en.wikipedia.org/wiki/Art_of_ancient_Egypt   [April 8, 2016]

************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 8, 2016)  [R-1]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5

Egyptian Paintings -2

(Ancient Great Egyptian Paintings)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி! பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்! ‘

ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி

 

ஓவியக் கலை வடிப்பில் அற்புதர்

கற்பாறை செதுக்கிய வல்லுநர்

ஆலய வடிப்பில் உன்னத வித்தகர்

சிற்பம், சிலைகள், சித்திரச் சிற்பிகள்

நைல் நதி நாகரிகப் பிறவிகள்

+++++++++++++

Egyptian Paintings -1

பூர்வீக உலகில் மலர்ந்த கலைத்துவப் புரட்சிகள்!

5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்து வந்துள்ளன.

புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறுகளில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

நைல் நதி நாகரீக ஓவியப் படைப்புகளின் அம்சங்கள்

3000 ஆண்டுகளாக பண்டை காலத்திய எகிப்தியக் கலைஞர்கள் தமது தனித்துவ ஓவியச் சிற்பக் கட்டிடக் கலைகளில் முனைந்திருந்தனர். அவையே பின்னால் எகிப்திய நாகரீகச் சின்னங்களாக அவரது வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த 3000 ஆண்டுகளில் எகிப்தியர் கையாண்ட ஓவியப் பாணிகள் அனைத்திலும் வண்ணங்கள், வடிவ அமைப்புகள் யாவும் ஓர் உயர்ந்த ஒருமைப்பாடு கொண்டிருந்தன. எகிப்தியர் ஒரு தனித்துவக் கலவை நிறங்களைப் பயன்படுத்தினர். அவரது ஒவ்வொரு வண்ணமும், மாந்தரின் வெவ்வேறு பண்பைச் சுட்டிக் காட்டியது! ஓவியத்தில் பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை! நீர் கலந்த நிறக் கலவைகள் அல்ல!

Egyptian Paintings -3

வண்ணங்கள் அனைத்தும் உலோகவியக் கலவையாக இருந்ததால்தான் ஓவியங்கள் இன்னும் பழுதடையாமல், அழிந்து போகாமல் 3000 ஆண்டுகளாக நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன! பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது! சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது! கடவுள் இஸிஸ் [God Isis] அதன் குருதி இரண்டும் சிவப்பு நிறத்தில் வரையப் பட்டன. சாத்தான் என அழைக்கப்படும் சேத் தெய்வமான [God Set] கெட்ட துர்காவுக்குச் செந்நிறம் அளிக்கப் பட்டது. சேத் எனப்படும் துர்கா கேடுகளை விளைவிப்பதுடன், எகிப்தில் பெரும் மணற் புயலை [Sand Storms] உண்டாக்கும் தெய்வமாகவும் அஞ்சப்பட்டது! நீல நிறம் நீர்வளத்தைக் காட்டியது. அத்துடன் உலகப் படைப்பு, சொர்க்கபுரி ஆகியவற்றைக் காட்ட நீல நிறம் பயன்பட்டது.

Egyptian Paintings -4

படைப்புக் கடவுளாகக் கருதப்படும் எகிப்திய பிரம்மா, அமுன் [God Amun, The Creator] நீல நிற முகத்துடன் உள்ளதாக வரையப் பட்டிருக்கிறார். மஞ்சள் வண்ணத்தில் காட்டப் பட்ட அத்தனையும் அழிவற்ற நிரந்தர நிலையுறும் சிறப்பு பெற்றவை! தங்கத்தின் நிறம் மஞ்சள். பரிதியின் நிறம் மஞ்சள். ஆனால் பரியின் கனல் சிவப்பு. கடவுளாகக் கருதப்படும் ஃபாரோ மன்னர்கள் மஞ்சள் நிறத்தில் வரையப் பட்டனர். மரணத்தின் நிறம் கருமை. இரவைக் குறிக்கவும், அடித்தளப் பூமியைக் காட்டவும் கருமை நிறம் பயன்படுத்தப் பட்டது. ஓஸிரிஸ் மரணக் கடவுள், இறப்பிற்குப் பிறகு அடையும் வாழ்க்கை ஆகியவைக் கருமை வடிவில் வர்ணிக்கப் பட்டன. வெண்மை நிறம் புனிதம், தூய்மை, புண்ணிய பணிகள், தெய்வாம்சம் ஆகியற்றைக் காட்டியது. ஆலயப் பூசாரிகள் பயன்படுத்தும் பண்டங்கள், கருவிகள் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டன.

Egyptian Paintings -6

எகிப்திய ஓவியங்களில் காணப்படும் உருவங்கள்

பன்னிற வண்ணங்கள் எகிப்தின் தனித்துவப் பண்புகளைக் குறிப்பிட்டதைப் போல, உருவங்களின் அமைப்புகள் தனித்துவ அம்சங்களைக் காட்டின. சுவர், தூண் ஓவிய வடிவங்கள் அசையாமல் நேராக நின்றன. அல்லது நடந்தன. மற்றும் சில பொது அமைப்புகளை எகிப்திய ஓவியங்களில் நாம் காண முடிகிறது. ஓவிய மாந்தரின் முகங்கள் ஒரு கண் தெரியும்படிக் பக்க வாட்டில் வரையப் பட்டுள்ளன. மாந்தரின் கை, கால்கள் முழுவதும் காட்டப் பட்டன. மனித வடிவத்தின் நடுவுடல் எப்போதும் முன்நோக்கியே இருந்தது. ஃபாரோ மன்னரின் உடம்பைக் காட்டும் போது, அவரது தெய்வீக அம்சத்தையும், உன்னத நிலையைப் போற்றவும் மற்ற நாட்டு மாந்தரைவிட ஓவியத்தில் பெரிதாகக் காட்டினார்கள்.

எகிப்தியர் தமது கலை ஓவியங்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கைக் காட்டினார்கள். தமது ஆலயச் சுவர்களிலும், மரணக் கல்லறைகளிலும் தாம் வாழ்ந்த அன்றாட நிகழ்ச்சிகளை வரைந்தார்கள். தமது நாட்டு மனித இனம், தம்மிடம் வளரும் விலங்கினங்கள் ஆகியவற்றை ஓவியங்களாகவும், சிற்ப வடிவங்களாகவும் வடித்தார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை ஆகிய உலோகங்களில் மானிட, விலங்கின வடிவங்கள், நகைகள், பயன்படுத்திய கலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். எல்லாவற்றிலும், அவரது சுவர் ஓவியங்களும், தூண் ஓவியங்களும் எழிலானவை. பலரும் அறிந்து புகழப் பெற்றவை. அந்த அரிய ஓவியங்களில் எகிப்திய மாந்தர் அனுதினமும் செய்யும் உணவு தயாரிப்புகள், வாணிபங்கள், மீன் பிடிப்பு, படகோட்டல், கப்பல் மிதப்பு, குடும்பச் சந்திப்பு ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.

அந்த ஓவியங்களில் சில மரண மடைந்தோர் மேலுலகில் அழியாத நிரந்தர நிலை பெறுவதற்கு வேண்டிய உதவிகளும் செய்பவை. மரணப் பேழையில் வைக்கப்படும் உயிர் பிரிந்த உடலைச் சுற்றிலும், அவர் புரிந்த நற்பணிகள் எழுதப்பட்டுப் பதிவாதி புதைக்கப் படுகின்றன. மாண்ட பின்பு ஆன்மாவுக்கு வழிகாட்டி உதவ செய்யப் பல தகவல் மரணப் பெட்டிக்குள் வைக்கப் பட்டன! அத்துடன் செத்தவரின் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் ஓவியப் படங்களும், அவரது உணவு, உடை போன்றைகளும் உள்ளே புதைக்கப் பட்டன. அப்படி எகிப்தியர் செய்ததின் காரணம் என்ன ? மரண மடைந்த நபர் உயிரோடு உள்ள போது, அவருடன் வாழ்ந்தோரும், அவருக்குத் தேவைப் பட்டவையும், அவரது மரணத்திற்குப் பிறகும் வேண்டி யுள்ளன என்பது பண்டைக் கால எகிப்தியரின் நம்பிக்கை.

எகிப்தியர் தீட்டிய அரிய ஓவியங்கள்

பலவித நோக்கமைப்புகள் [Perspectives] இணைந்து எகிப்தியர் தமது ஓவியங்களைத் தீட்டி யுள்ளார்கள். பெரும்பான்மையாக பக்க வடிவுத் தோற்றங்களே [Side View] பல ஓவியங்களில் காண முடிகிறது! மரணம் எய்திய ஒரு மாந்தரின் வரலாற்றை, சிவப்பு, ஆரஞ்ச், நீலம், வெண்மை நிறங்களில் ஒளிரும் வண்ண ஓவியங்களாக வரைந்து, அவரது உடலுடன் வைத்தார்கள். முதலில் ஓவியக் கலைஞன் கரித் துண்டால் பானை ஒன்றின் மீது வரைந்து, பயிற்சி அடைந்த பிறகு அதைப் பெரிதாக்கிச் சுவரில் மறுபடியும் கரியில் வரைகிறான். முதலில் தெளிவற்று வரையவும், அழிக்கவும், மீண்டும் சிறப்பாக்கவும் கரித்துண்டு மிகவும் ஏதுவானது. பிறகு வண்ணக் கலவைகள் சுவர் ஓவியங்களில் படக் கோடுகளின் உள்ளே நிரப்பப் படுகின்றன. எகிப்தியர் பயன்படுத்திய தூரிகை எவ்விதம் செய்யப் பட்டது ? நார் நாரான மரக் குச்சிகளின் முனை தூரிகையாகக் கலைஞனுக்கு உபயோக மானது. சுவர்கள் முதலில் மண்ணில் கட்டப்பட்டுப் பிறகு சுண்ணத்தால் பூசப்பட்டவை. ஃபாரோ மன்னர் காலத்திய ஓவியர்கள் வண்ண அலைகளை வரைந்து, அடுக்கடுக்கான விளைவுகளைக் காட்டினர். மேலும் சுவர் ஓவியங்களைப் பாதுகாக்க எகிப்தியர் ஒருவித வர்ணக் காப்பு ஆயிலைப் [Varvish] உபயோகித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது எதிலிருந்து உண்டானது அல்லது எப்பண்டங்கள் சேர்ந்து கலக்கப் பட்டது என்பது அறிய முடியாமல் ஒரு புதிராகவே உள்ளது!

Egyptian Paintings -5

அடுத்து எகிப்தியரின் ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றிக் காண்போம்.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

****

jayabarathans@gmail.com [S. Jayabarathan]  (April 5, 2016)