முடிவை நோக்கி !


atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ·போனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·பெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி, புளுடோனிய   அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

harry-daghlians-nuclear-experiment

1982 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

என் விழியில் நீ இருந்தாய்!

Madurai Temple

சி. ஜெயபாரதன், கனடா

“என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?” என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு பதில் பேசாமல், காரை நோக்கி விரைந்தான்.

அன்று பௌர்ணமி! அந்திப் பொழுது மங்கி, பொங்கி வரும் பெருநிலவு மேகங்களுக்கிடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது! இளந்தென்றல் மேனியைத் தழுவி மெய் சிலிர்க்க வைத்தது! முதன் முதலாக அவன் கோகிலாவைச் சந்திக்கப் போகிறான். அந்த நினைவே அவன் நெஞ்சில் இன்பத் தேனைச் சுரந்தது. வெள்ளித் திரையில் பார்த்தது! காதல் காவியங்களில் படித்தது! கனவுகளில் அவன் கண்டது! அதை ஓர் எழில் மங்கையுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறான்! புதிய அனுபவம்! அதுவும் முதல் அனுபவம்! ஆனாலும் நெஞ்சு ஏனோ ‘பக் பக்கென்று’ விடாமல் அடித்துக் கொண்டது! டாக்ஸியில் ஏறி பின் ஸீட்டில் அமர்ந்த பின், கோகிலா இருக்கும் தெருப் பெயரை டிரைவருக்குக் கூறினான்.

ஓடிவந்த மோகன் “நானும் வருகிறேன்” என்று கதவைத் திறந்து கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அசோக்கின் கண்கள் இரண்டும் வியப்புடன் விரிந்து அவனை நோக்கின!

“நீ போகும் இடத்திற்கு நான் போகவில்லை! கோயிலுக்குப் போகிறேன், தேவியைத் தரிசிக்க! மீனாட்சி அம்மன் கோயிற் தலைவாசலில் இறங்கிக் கொள்கிறேன்”. என்று சற்று பணிவோடு சொன்னான் மோகன். அவனது நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டும் பளிச்செனத் தெரிந்தது! அசோக்கின் நெற்றியில் முத்து முத்தாய் வேர்வைகள் தான் தென்பட்டன!

அசோக்கும் மோகனும் இணைபிரியா நண்பர்கள். மதுரை மாநகரில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒரே சமயத்தில் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மதுரையில் உத்தியோகம் பார்ப்பவர்கள். ஆனால் கொள்கை வேறுபாடு கொண்டவர்கள். அசோக் வட துருவம்! மோகன் தென் துருவம்! அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. தர்க்கம் ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள். எதிர்த் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும் அல்லவா!

மோகன் தெய்வ நம்பிக்கை கொண்டவன். தவறாது கோயிலுக்குச் செல்பவன். அசோகனுக்குக் கடவுளைப் பற்றி நினைக்க நேரமில்லை! தெய்வம் உண்டா, இல்லையா என்று பிறரிடம் தர்க்கம் செய்தாலும், மனதை அலட்டிக் கொள்ளாதவன். முப்பது வயதாகியும் அசோக் தனி மரம்! மோகன் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை! ஆனாலும் கோயிலுக்குப் போகும் போது மட்டும் தனியாகத்தான் போவான். தெருவில் அவனுடன் மனைவி நெருங்கி நடப்பது, அவனுக்குப் பிடிக்காத ஒன்று! கடைக்கோ, சினிமாவுக்கோ, கோயிலுக்கோ அவள் செல்ல வேண்டு மென்றால், தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்துதான் போக வேண்டும்!

டாக்ஸி கிழக்கு வெளிவீதியிலிருந்து கிளம்பி கிழக்குக் கோபுர வாசலை நெருங்கியது. அன்று வெள்ளிக் கிழமை. எங்கு பார்த்தாலும் ஜனக்கடல்! அந்தக் கடலில் அநேகர் பெண்டிர். அதில் கோயிலுக்குப் போவோர் பலர்! கோயிலுக்குப் போகும் பெண்டிரை வேடிக்கை பார்ப்போர் சிலர்! டாக்ஸி வீதியில் நின்று நின்று மெதுவாய் போனது. ஆனால் டாக்ஸி மைலா மீட்டர் மெதுவாகப் போகவில்லை! வேகமாய் ஓடியது! பணத்தொகை ஏறிக் கொண்டே போவதைப் பார்த்த அசோக்கின் இதயமும், ‘டக் டக்கென்று’ மீட்டருடன் ஒன்றாய்ச் சேர்ந்து ஓசை யிட்டது!

‘சிற்றின்பம் நாடிக் கோகிலாவிடம் போகிறான், அசோக்’ என்று பொறாமைப் பட்டான் மோகன்! ‘பேரின்பம் கிட்ட கோவிலுக்குப் போகிறான், மோகன்’ என்று விரக்தி அடைந்தான், அசோக்.

“முப்பது வயதாகிறதே! கண்ணியமாக ஓர் அழகுப் பதுமையைத் திருமணம் செய்து கொண்டு, புண்ணியம் அடைவதை விட்டு, இப்படி ஒரு மாடல் அழகியைத் தேடிப் போகிறாயே! இது உனக்கு சரியாகத் தெரிகிறதா, அசோக்?” என்று சட்டெனக் கேட்டான், மோகன்.

“எப்படித் திருமணம் செய்து கொள்வது? நான்தான் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேனே! என் சம்பாத்தியத்தில், என்னிரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் முடிய வேண்டும். அது இந்தப் பிறவியில் நடக்காது! கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியாமல் தங்கைகளின் வயது ஏறிக் கொண்டும், வனப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் போகிறது! மேலும் எனக்கு இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை! அந்தச் சிறைச்சாலையில் அடைபட்டுக் கொண்டு, பெற்ற பிள்ளைகளோடு போராடி, உன்னைப் போல் வாழ எனக்கு ஆசை இல்லை! நான் என்றும் சுதந்திரப் பறவையாகவே வாழப் போகிறேன்.

“கோகிலாவுக்கு அடிமையாக இருப்பதா சுதந்திர வாழ்வு? இது நிலையற்ற இன்பம்! இல்லறம் அல்லது நல்லறம் இல்லை! உனக்கென ஒருத்தி வேண்டாமா? மனைவியே வேண்டாம் என்பதும் ஒரு மாதிரித் துறவறம் தான்!”

“நான் துறவி இல்லை! இல்லறம், துறவறம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்வைத் தேடுகிறேன்! இதைச் சுயவறம் என்று சொல்வேன்! இதில் ஆண், பெண் இருவருக்கும் பூரண சுதந்திரம்! சம உரிமை! விருப்பமுள்ள ஆண்பெண் இருவர் சேர்ந்து வாழும் ஒரு கூட்டகம்! அதுதான் இணையறம்! மனப்பிளவு ஏற்பட்டால், யாரும் எப்போது வேண்டுமானாலும் உறவை வெட்டிக் கொள்ளலாம்! பிடித்த வேறு யாருடனும் ஒட்டிக் கொள்ளலாம்! இதில் யாருக்கும் கைவிலங்கு, கால்விலங்கு போடுவதில்லை! பிடிக்காதருடன் வாழும் மன வேதனை, சண்டை, சச்சரவு, விவாகரத்து, வரதட்சணை விவகாரம் எதுவும் இல்லை!

“அப்படி என்றால், கோகிலாவோடு நீ கூட்டகம் வைத்துக் குடித்தனம் நடத்துவாயா?”

“கோகிலா எனக்கு நிகரானவள்! நான் தயார், அவள் உடன்பட்டால்! மனைவி ஒரு போதும் மாதவி போல் கவர மாட்டாள்! குடும்ப வலையில் மாட்டிக் கொண்ட பின், கணவனைக் கவர வேண்டுமென்ற கடமை, மனைவிக்குத் தேய்பிறைபோல் குறைந்து, கடைசியில் அமாவாசையாகி விடுகிறது!”

“உனக்குத் தேவை, மாதவி! மனைவி அல்ல! என்று சொல்கிறாய். பெண்ணைக் கவர்ச்சிப் பண்ட மாகத்தான் நீ கருதுகிறாயா? மனைவி எப்போதும் கவர்ச்சிப் பதுமையாக இருக்கத் தேவையில்லை!”

“காரிகையை ஆண்டவன், கவர்ச்சிப் பிறவியாகத் தான் படைத்திருக்கிறான்! ஆடவரை மயக்கி ஆளத்தான் மங்கைக்கு மான்விழி, மதிமுகம், எழில் இடை, மயில் நடை, பொங்கியெழும் கொங்கை போன்றவற்றை அளித்திருக்கிறான்! ஆண்மை பெண்மை என்பது காமசக்தியின் இரு துருவங்கள்! மின்சக்தி, காந்தசக்தி போல், காம சக்தியும் ஓர் இயற்கைச் சக்தியே! அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர் யார்?” கவிமுனி வால்மீகி! மாமுனிவர் விசுவாமித்திரர்! ஆண்டாள்! மகாகவி காளிதாஸ்! ஷேக்ஸ்பியர்! கவிஞர் ஷெல்லி! பைரன்! … வள்ளுவர் காமத்துப் பாலைக் காவியமாக வடித்துள்ளார்! ‘மோகத்தைக் கொன்றுவிடு! – இல்லால் எந்தன், மூச்சை நிறுத்திவிடு!’ என்று பாரதியார் கூட மோகத் தீயில் படாத பாடு பட்டிருக்கிறார்!”

“காமசக்தி தான் கன்னிப் பெண்ணுக்கு எழிலையும், இனிய குரலையும், நளின மேனியையும் தருகிறது. ஆணுக்கு கம்பீரத் தோற்றத்தை அளிக்கிறது! வயிற்றுக்கு உணவுபோல், உடலுக்கு உறவு! உறவு இல்லையேல் உடல்நலம் சிதைகிறது! காமசக்தி ஓர் ஆக்க சக்தி! காமசக்தி இல்லையேல் இனவிருத்தி இல்லை! கவிஞனின் கற்பனைச் சுரங்கம் வரண்டு போகும்! எழுத்தாளன் மூளை பாலைவனம் ஆகிவிடும்! சிற்பியின் கைகள் செதுக்க முடியா ! இசைக்குயில் பாட முடியாது! நர்த்தகி நளினமாய் ஆட முடியாது! ஓவியன் சித்திரத்தைத் தீட்ட இயலாது! கலையோ, காவியமோ எந்தவிதப் படைப்புமே உருவாக்க முடியாது! காம சுரப்பிகள் சுருங்கிக் காய்ந்து போகும் போது, மனிதனை முதுமை கவர்ந்து கொள்கிறது!

“இல்லை, அசோக்! காமம் கண்ணைக் குருடாக்குகிறது! காமம் சிற்றின்பம்! காமவெறி ஓர் அழிவுசக்தி! காமசக்தியில் குளித்தவர் எல்லாம் கடைசியில் கரையேற, கடவுளைத் தான் தேடினர்! நமக்குத் தேவை ஆன்மீக சக்தி! அதுதான் உயர்ந்தது! உறுதியானது! முடிவில்லாப் பேரின்பம்! மனிதப் பிறவியின் இறுதிப் பீடம்! ஆன்மீக சக்திதான் ஆக்கசக்தி!

டாக்ஸி கிழக்குக் கோபுர வாசலை வந்தடைந்தது. பூக்கடைகளிலிருந்து மல்லிகை மணமும், ரோஜாவின் மணமும் நாசியில் நுழைந்து மோகனைக் கிறங்க வைத்தன! “இறங்கிக் கொள்கிறேன், இங்கு” என்று காரை நிறுத்தச் சொன்னான், மோகன். “நான் தேங்காய், பழம், பூ, சூடம் எல்லாம் வாங்க வேண்டும்”.

“கோயில் முன், பார் மோகன்! எங்கெங்கு நோக்கினும் மங்கையர் கூட்டம்! இப்படிப் பெண்டிர் பலர் அலங்காரமாய் கண்முன் நிற்கும் போது, தேவியை நோக்கி எப்படிப் பூஜிப்பாய் நீ? இந்தச் சூழ்நிலையில் கண்ணை மூடிக் கொண்டு, மனதைக் கட்டுப் படுத்தி, சிந்தையில் தெய்வத்தை தியானிக்க முடியாது!”

“அசோக்! நீ கோகிலாவைப் பூஜிக்கப் போகிறாய்! உன் கண்ணில் தெய்வமே தெரியப் போவதிலை! அந்த மாயக்காரி தரும் மதுவை அருந்தப் போகிறாய்! உடலையும் ஆத்மாவையும் பாழாக்கி உன்னைப் போல் என்னால் வாழ முடியாது! பிறவிப் பெருங்கடல் நீந்த, ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! அதைச் செய்யாமல், சிற்றின்பத்தைத் தேடிப் போகிறாய், நீ! நினைவில் இதை வைத்துக் கொள்! நிச்சயம் உனக்கு மோட்சம் இல்லை! .. நரகம் தான்! …. நன்றி, வருகிறேன்”, என்று சாபம் போட்டு விட்டுப் பூக்கடை நோக்கி விரைந்தான், மோகன்.

டாக்ஸி தெற்கு வெளிவீதி நோக்கித் திரும்பியது. கோகிலாவைப் பற்றிய அவன் கற்பனை சற்று சிதைந்து போனது! “ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! உனக்கு மோட்சம் இல்லை! நரகம் தான்!” என்று மோகன் சொல்லி விட்டுப் போனது நெஞ்சில் முள்ளாய்க் குத்தியது! பையிலிருந்த வண்ணப் படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். கோகிலா அதில் சிரித்துக் கொண்டிருந்தாள். காமன் அவளது புருவங்களை வில்லாய் வளைத்து, அவன் நெஞ்சைக் குறி வைத்து, கனல் அம்புகளை ஏவி விட்டான்! ….. எது முதல்? … எது தேவை? …… அவன் மூளை குழம்பியது! ….. கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ….. டாக்ஸி ஏன் இப்படி மெதுவாய்ச் செல்கிறது?

தேங்காய், பழம், பூக்களைத் தட்டில் ஏந்திக் கொண்டு, கோயில் உள்ளே நுழைந்தான், மோகன். மீனாட்சி அம்மன் சன்னதி நோக்கி நடந்தாலும், அவன் மனக்கண் முன் கோகிலாவின் அழகுதான் வந்து விளையாடியது! சந்தேகமில்லாமல் அவள் பேரழகி! நேரிலேயே பார்த்திருக்கிறான், மோகன். கலா மன்றத்தில் முந்திய வாரம் நாடகம் பார்க்கப் போன போது, முன் நாற்காலியில் எந்த நேரமும் சிரித்துக் கொண்டு, அவள் ஜம்மென அமர்ந்திருந்தாள். அசோக் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன்! அழகை ரசிக்கவும் ஒரு யோகம் வேண்டும்! மோகனுடைய மனைவி சுந்தரி, அப்படி யொன்றும் அழகி இல்லை! ஆறரை அடி உயரத்தில், எடுப்பான தோற்றமுள்ள மோகனுக்கு, அழகற்ற ஐந்தடிப் பெண் சுந்தரியின் ஜாதகம் தான் முழுமையாகப் பொருந்தியது!

அங்கு இங்கு எனாதபடி எங்கும் கூட்டமாய், மங்கையர் கோவிலை நோக்கிப் போய்க் கொண்டிருந் தார்கள். ஜரிகைச் சேலைகளின் சல சலப்பும், ஜவ்வாதுப் பொட்டின் பள பளப்பும், மல்லிகைப் பூக்களின் மண மணப்பும், அன்று ஏனோ மோகனின் மனத்தை நிலை தடுமாறச் செய்தன! நேராகப் பார்த்து நடக்கும் கால்கள் திசை கோணி நெளிந்தன! முன்னோக்கி வழி காட்டும் விழிகள், முப்புறமும் தலையை திருப்ப விட்டு, அழகை ரசிக்கத் தூண்டின! மரத்துக்கு மரம் தாவும், மனக் குரங்கு மாதரை விட்டு மாதர்மேல் தாவி, அழகை ஒப்பிட்டுப் பார்த்தது! …ஆண்டவா! இது என்ன சோதனை?

பொற்றாமரைக் குளத்தில் தன் பிம்பத்தைப் பார்த்து, பொங்கி வரும் பெருநிலவு நடனமாடிக் கொண்டிருந்தது! கோயிற் தூண்களில் எல்லாம் ஒய்யாரமாய் நிற்கும், பெண் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்தன! அவன் மதி மயங்கியது! ஏனிந்த கற்சிலைகள் கூட அவனைச் சித்திரவதை செய்கின்றன? தெய்வ சன்னதியில் காமச் சிலைகளை ஏனிந்தச் சிற்பி செதுக்கினான்? தேவியைத் தொழப் போகும் ஆடவனைத் திக்கு முக்காடச் செய்யும் கவர்ச்சிச் சிலைகளுக்குச் சேலைகட்டி மார்பை மறைக்க வேண்டும்! …… ஆண்டவா! இது என்ன தர்ம சங்கடம்?

கோகிலாவின் வீட்டு வாசலில் டாக்ஸி நின்றதும், டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுப் படியேறி வந்தான், அசோக். கதவு சற்று திறந்திருந்தது. திறந்த இடைவெளியி லிருந்து, மனத்தைக் கவரும் நறுமணப் பத்தியின் வாசம், மெதுவாய் நாசியின் வழி புகுந்து அவனை வரவேற்றது! செவியைக் குளிரச் செய்யும் சினிமா இசை அடுத்து விருந்தளித்தது!

வாராய்! நீ வாராய்!

போகு மிடம், வெகு தூர மில்லை!

வாராய்! நீ வாராய்!

‘மந்திரி குமாரி’ சினிமாவில் வில்லன், மலை உச்சியில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கீழே படு பாதாளத்தில், தள்ளுவதற்கு முன்னால் பாடுகிற பாட்டு! இனிமையான, ஆனால் கோரமான அந்தப் பாட்டை ரசித்த அசோகனுக்கு… இதயத்தில் திக்கென்றது! என்ன! கோகிலா தன்னைக் கீழே படு பாதாளத்தில் தள்ளப் போகிறாளா? … நரகத்தில் விழப் போகிறானா அசோக்? …… ‘நரகம் தான் உனக்கு!’ … என்று பாவிப் பயல் மோகன் ஆசீர்வதித்துப் போனானே! …. கதவைத் திறந்து கொண்டு உள்ளே மெதுவாக நுழைந்தான், அசோக்.

வீடு பளிச்சென சுத்தமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீச்சலுடைப் பெண்டிர் காட்சி! தலைக்கு மேல் மின்விசிறி மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. உள்ளே இருந்து, மான்போல் விழித்து, மயில்போல் நெளிந்து, மோனாலிஸா முறுவலுடன் வந்த, வனிதா மணியைக் கண்டு சிலையாய் நின்றான், அசோக்! பார்த்ததும் நெஞ்சில் கனமாக ஏதோ அடைத்தது! சோஃபாவில் வந்து அவனை அமரச் சொன்னாள், கோகிலா. தானும் நெருங்கி உட்கார்ந்து, அவனது கையைப் பற்றினாள்.

நீல நிற ஸில்க் ஸாரியைக் கண்ணியமாக, கவர்ச்சியாக அணிந்திருந்தாள். மேனியிலிருந்து எழுந்த செண்டின் மணம், அவனை அவள் பால் இழுத்தது! இளநுங்கு போன்ற கரங்கள் தொட்டவுடன், அவன் உடலில் மின்சக்தி பாய்ந்தது! முதன்முதல் பெண்ணுடல் பட்டவுடன் மெய் சிலிர்த்தது! அசோக் அவளது காந்த மண்டலத்தில் சக்தியற்றுச் சாய்ந்து கிடந்தான்! நெஞ்சடுப்பு பற்றி எரிந்து, உடம்பெல்லாம் நெருப்பை வெளியாக்கியது! வேர்த்துக் கொட்டியது! கைகளும் கால்களும் நடுங்கின!

மெதுவாகப் பையில் கையைவிட்டு, ஒரு கவரை எடுத்துக் கோகிலாவிடம் கொடுத்தான். அவள் எண்ணிப் பார்த்து, மேஜை டிராயருக்குள் வைத்து விட்டு, ஆயிரம் ரூபாய் சரியாக இருப்பதாகச் சொன்னாள். புன்முறுவலோடு அவனுக்கு நன்றி கூறினாள்.

கோகிலாவின் காந்த உடம்பு அவனை நெருங்கியது! கைகள் அவனது தலை மயிரை மெதுவாகக் கோதி விட்டன! புல்லரித்துப் போன அசோக், சொர்க்க லோகத்தில் மிதந்து கொண்டிருந்தான்!

மோகன் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு அம்மன் சன்னதிக்குள் இறுதியில் வந்து சேர்ந்தான். அசோக் சொன்னது சரியாய்ப் போயிற்று. அப்பப்பா! என்ன கூட்டம்? என்ன சத்தம்! காற்றோட்டம் இல்லாத இடம்! சாம்பிராணிப் புகை! சூடம் எரிந்து எழும் கரி வாய்வு! மனிதரின் வேர்வை நாற்றம் வேறு! எல்லாம் சேர்ந்து மோகனுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது! காதைப் பிளந்தது, ஆலயமணிச் சத்தம்! சந்தைக் கடைபோல் இருந்தது, சன்னதி! மூலையில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரன் ஒரு பெண்ணின் பின் புறத்தைத் தடவிக் கொண்டிருந்தான். அவள் சட்டெனக் கையைத் தட்டித் திரும்பியதும், தன் கையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

முண்டி இடித்துக் கொண்டு மோகன் நுழையும் போது, யாரோ ஒருவன் தட்டிவிட, தட்டு தரையில் குப்புற விழுந்தது! கீழே குனிந்து எடுப்பதற்குள், பூச்சரம் முன்னே போனவரின் காலைச் சுற்றிக் கொண்டது! வாழைப் பழங்கள் யாவும் பாதம் பட்டு நசுங்கிப் போயின! தேங்காய் காலில் விழுந்து கிழவி ஒருத்தி, ‘ஆ வென’ அலறினாள். வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்த இளம்பெண் ஒருத்தி, குனிந்து கிடந்த மோகன் மேல் சாய, அவன் சட்டென அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ள நேரிட்டது! பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது, மோகனுக்கு! அந்தப் பெண்ணுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது. சேலையைச் சரிசெய்து எழுவதற்கு, அவளுக்கு சற்று நேரம் எடுத்தது!

மோகன் விடுவித்து எழுவதற்குள், கன்னத்தில் ‘பளாரென்று’ ஓர் அறை விழுந்தது! அறைந்தவன் பின்னால் நின்று கொண்டிருந்த யோக்கியமான போலீஸ்காரன்! “அயோக்கிய பயலே! எங்கேடா தொடுறே! கன்னிப் பெண்ணைக் கட்டியா பிடிக்கிறே? அறிவு கெட்டவனே! கூட்டத்திலே தெரியாமல் போயிடுமேன்னு பார்க்கிறாயா?” என்று முதுகில் பிரம்பால் நான்கு தரம் விலாசினான். மோகனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது! சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது! பட்டர் கூட தீப ஆராதனையை மறந்து விட்டு, வேடிக்கை பார்க்க வந்து விட்டார்! மீனாட்சி அம்மை இமை தட்டாமல் தன் மீன் விழிகளால் இந்த தெருக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்! கை கட்டி நடுங்கிக் கொண்டிருந்த மோகன், சுவாமி தெரிசனத்தையே மறந்து போனான்!

கோகிலா மெதுவாக முன் கதவைத் தாழிட்டு மூடினாள். அசோகனின் கையைப் பற்றி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். புடவையை நீக்கி பாவாடையில் தன் அழகைக் காட்டினாள்! அசோக்கின் கண்கள், அவளது மார்பின் அழகைப் பார்க்க வில்லை! தலைக்கு மேல் எதிரே, அவனைத் துளைத்து நோக்கிக் கொண்டிருந்த, திருப்பதி வெங்கடா ஜலபதியின் கண்களைப் பார்த்தன! அவன் நெஞ்சில் ஒரு பயம் எழுந்தது! அப்போது கோகிலாவின் கத்தி விழிகள் அவன் நெஞ்சைக் குத்திடத் தாவின!

அசோக்கின் தோளின் மேல் கைகளை வைத்து அணைக்க முனைந்த போது, ‘ஓ வென’ அலறும் ஒரு குழந்தையின் குரல் கேட்டது! .. திடுக்கிட்டான், அசோக்! .. திகைத்தான் அசோக்! .. தடுமாறினாள், கோகிலா! …. அவன் சொர்க்க லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தான்! .. எங்கே குழந்தை அழுகிறது? .. யாருடைய குழந்தை அது? … திரும்பினான் அசோக்! ….கோகிலா அவனைப் பிடித்திழுத்தாள்! … குழந்தையின் அலறல் அதிகமானது! … அவளைத் தீண்டாமல், அலறல் வரும் திசையை நோக்கி விரைந்தான், அசோக் !

பிள்ளையின் அழுகையைப் பொருட்படுத்தாது காரியத்தை சீக்கிரம் முடித்திட முனைந்தாள் கோகிலா! அசோக் திமிறிக் கொண்டு, அவளை உதறித் தள்ளி விட்டு அடுத்த அறைக்கு ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி! ஐந்தாறு மாதப் பச்சிளம் குழந்தை! அழுது அழுது தொய்ந்து போயிருந்தது! நெற்றியில் கையை வைத்தான். நெருப்பாய் காய்ந்தது, உடம்பு! … ஒரு நிமிடம் தான் சிந்தித்தான்! … உடனே, கிடந்த போர்வைத் துணியைப் பிள்ளைமேல் சுற்றித் தூக்கிக் கொண்டு, கதவைத் திறந்து தெருவை நோக்கி ஓடினான், அசோக்!

அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த கோகிலா, புடவையைக் கட்டிக் கொண்டு, பிள்ளைப் பையையும், மேஜை டிராயரில் இருந்த தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு, அவன் பின்னால் ஓடினாள். வீதியில் ஓடிய ரிக்ஸாவை நிறுத்தி இருவரும் ஏறிக் கொள்ள, ஆஸ்பத்திரியை நோக்கி ஆட்டோ பறந்தது!

குழந்தையை அட்மிட் செய்து வெளி வருவதற்குள் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. உயிரில்லாமல் வீதிக்கு வந்தான் அசோக்! ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஸாவுக்குக் கையைக் காட்டினான். உடம்பெல்லாம் வலித்தது! பெரு மூச்சோடு வண்டியில் ஏறி அமர்ந்ததும், கோகிலா கவரைக் கையில் ஏந்திக் கொண்டு ஓடி வந்தாள். அசோக் அதை வாங்கிக் கொள்ளவில்லை!

ரிக்ஸா வீடு நோக்கிக் கிளம்பியது. நன்றி பொழியும் கண்களுடன் வழி அனுப்பினாள், கோகிலா! …. ஆட்டோ போகும் வழியில், ஒரு பிள்ளையார் கோயில் பளிச்சென வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் கைகள் தானாகவே சேர்ந்து கும்பிடத் தொடங்கின! ‘பிள்ளையாரப்பா! அந்த பச்சிளம் பிள்ளை உயிரைக் காப்பாத்து’ என்று அவன் வாய் முணு முணுத்தது! … எதிரே போலீஸ் ஜீப்பில் கை விலங்குடன் மோகன், தலை குனிந்து போய்க் கொண்டிருந்தான்!

எமனுடன் சண்டையிட்ட பால்காரி .. !

lord-yama

சி. ஜெயபாரதன், கனடா

பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவரில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.

“போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க!” என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

“சரித்திரம் மீள்கிறதா ? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்.”

“நானே வருந்த வில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும் ? உங்க வேலைய நீங்க செய்றீங்க. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

“பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே.”

“என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே ! சாதாரண மனுசிதான்.”

“அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

“கண்ணகி எங்க குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா!”

“பொன்னம்மா! என்ன கவலை உனக்கு ? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா ?”

“எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

“நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது ? அது பெரிய தப்பாச்சே.”

“தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம ?”

“இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

“இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

“கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

“எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

“பொன்னம்மா நீ என்ன சொல்றே ? புதிர் போடாமல் புரியும் படி பேசு.”

“என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

“அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு ? ‘

“. . . .மூனாவது குடிசையிலே வாழ்ற . . .  கார் டிரைவர் கந்தசாமி மேலே. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே. இரண்டு கண்ணு.”

“இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது அதர்ம மாச்சே!”

“ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் ?”

“அதுவும் அதர்மம்தான்.”

‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

“இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் ? ‘

“எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு ? நீண்ட ஆயிசு தானே ?”

“என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது ?”

“ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க ?”

“இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்.”

“சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது.”

எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

“என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க ?  என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க.”

“பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே.”

“என்ன சொல்றீங்க எம ராசா ? கந்தசாமி அற்ப ஆயுசா ?”

“கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு . . .. நான் சீக்கிரம் . . . வருகிறதா யிருக்கு.”

“அட கடவுளே! . இன்னும் எத்தனை வருசம் அவரு . .  ?”

“கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு . . . காலன்கூடக் கண் கலங்குறான்.”

“காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா ? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே ? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா ? எமதர்ம ராஜா, இது ஞாய மில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

“என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! . . . அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்.”

“உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு . .  எப்போ . .  ஆயுசு . . . முடியுது ? அதைச் சொல்லுங்க முதல்லே.”

“அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே ! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் ! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் ஏதோ முணுமுணுக்கிறான்.”

“அந்த ஒட்டடைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் ? சொல்லுங்கோ அவருக்கு . . ஆயசு எதுவரை ?”

“பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் ! அப்புறம் என் பட்டாளங்கள் கறுப்புக் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க ! வேலை யில்லாத் திண்டாட்டம் எங்க துறையிலே மட்டும் வரக்கூடாது அம்மா !  வந்தால் என் உயிரை வாங்க வந்திடுவாங்க !”

“அம்மான்னு சும்மா சொல்லாதீங்க !  நான் இன்னும் அம்மாவாகலே ! . . . சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை ! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

“உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது.”

“சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. . . என்ன கந்தசாமி இன்னும் அஞ்சி வருசம் இருப்பாரா ?”

‘உம் . . . அத்தன நீண்ட ஆயுள் இல்ல . . . அற்ப ஆய்சுக் கந்தனுக்கு.”

“சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் . . . உயிரோட இருப்பாரா ?”

“அதுவும் . . . இல்லே! . . . பொன்னம்மா! . . ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது ?”

“அப்படீங்களா ? . . பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் . . . உயிரோ டிருப்பாரா ?”

“அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்.”

“எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா ? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்.”

‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

“நிச்சயமா சொல்றீங்களா எம ராசா ?”

“ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! . . ஏன் பொன்னம்மா! . . நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் . .  சினிமா ரீல் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே.”

“என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!”

ஆனந்த கண்ணீர் இப்போது வடிய, பொன்னம்மா துள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

“என்ன சொல்றே பொன்னம்மா ?  நான் பசும்பாலை உன் வயிற்றில் வார்த்தேனா ?”

“இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா ! . . நான் அதைத் தள்ளிப் போடறேன்.  நீங்க நீண்ட நாள் வாழணும்.” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா.

எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சிறிது நேரம் பிடித்தது.

“அடி பாதகி ! ஏமாற்றி விட்டாயே ! இரண்டாம் தடவையும் நான் ஏமாந்துட்டேன்.  சாவித்திரியை விட பால்காரி பலே கைக்காரி !”  கோபத்தில் கீரிடத்தைத் தூக்கி விட்டெறிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டான்.

எருமை வாகனத்தை வேகமாய் முடுக்கினான், எம ராஜன்.  திடீரென்று பின்னால் மறுபடியும் குரல் எழுந்தது.

“போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் இரண்டும் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரத்துடன் திரும்பினான்.

“இன்னும் ஏன் பின்னாலே வர்றே ! போதும் உன் உபத்திரம் ! போ! போ! போ! ஒழிஞ்சு போ.  எதுவும் உனக்கினித் தர மாட்டேன் !”

“என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே !”

“புரியும்படி சொல்லித் தொலை!”

“எம ராசா ! இது அநியாயம் ! திருடுன்னு எங்க ஊரிலே சொல்லுவாங்க ! நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு ! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை ! பால் எருமைக்கும் எருமைக் கடாவுக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா ? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் !  புருசனைக் கொடுத்ததுக்கு எருமை வெகுமதியா ?”

எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது !  எருமையை விட்டுக் கீழ் இறங்கிப் பார்த்தான் !  எருமை மாடு எமனைப் பார்த்து முறைத்தது !

“அட ஆமா, பால் எருமைதான் இது ! முதல்லே அதைச் சொல்லி யிருக்கலாமே ! . .  அதானே பார்த்தேன் ! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்று எனக்கு தெரிய வில்ல ! . . எங்கே என் மாட்டைக் காணோமே ?”

“புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! . . காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா ? . . எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா ? . .  அட ஆண்டவா ! . .  எம ராசனுக்கும் வயசாகுதில்லே ! கண்ணு மிரளுது ! . . எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க ! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது ?”

பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள்.  உதட்டைக் கடித்துக் கொண்டு திருதிரு வென்று விழித்த எமன், கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடி நடந்தான்.

++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (January 19, 2008) (Revised R-1)

https://jayabarathan.wordpress.com/