2018 ஆண்டு  வாசகர் பார்வைகள் – வையகத் தமிழ்வலைப் பூங்கா

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கரு மூர்க்கன்
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, 
ஓல மிட்டால் உடனே வாயை மூட  முயல்வார் !
வலித்துயர்  மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்
புலம்புவோம்  மிகையாய் அன்றி இணையாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்கு
உதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்.
ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்,
தான் இழந்ததை என்னிடம் களவாடி
என்னை வறியன் ஆக்குவ துண்மை. 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

+++++++++++++++++++

முன்னுரை :  உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது.  கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன.  அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு, விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர்.  தானே நாடங்கள் எழுதியவர்.  நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளார். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.

மோனிகா & ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் : 

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது.  நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள்.  அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது.  முற்போக்குச் சிந்தனை யுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.  வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீர்ன்.

மோனிகா, ஒத்தல்லோ, புரூனோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூலம் வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான  ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி.  எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக,  அதில பல மாற்றல்களைச் செய்துள்ளார்.

20 ஆம் நூற்றாண்டில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும்  நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம்  [American and the Son of a Slave]  அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத்துள்ளது !  அந்த இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில்  21 ஆம் நூற்றாண்டிலும்  பெருகி பேரிடர் அளித்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய நிகழ்ச்சி !

+++++++++++++++++++

Image result for Othello movie images Lawrence Fishburne and irene jacob

புரூனோ & ஷைலக்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

[ வெனிஸ் கருமூர்க்கன் ]

அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

கிராடினோ :சிசாரோவின் சகோதரன்.

லோடாவிகோ : மோனிகா உறவினன், அரசாங்க அதிகாரி.

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

ஒத்தல்லோ & மோனிகா

அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1

இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.

நேரம் :  மங்கிய மாலைப் பொழுது.

அமைப்பு :  தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது  செல்வந்த நண்பன் ஷைலக்  வருகிறான்.

ஷைலக் : புரூனோ !  யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?

புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன்.  என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு !  என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !

ஷைலக்: யாரந்தக் கருப்பன் ?   எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?

Image result for Othello movie images Lawrence Fishburne and irene jacob

மோனிகா

புரூனோ :  அந்த தடித்த  உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத  காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன்.  பிளாரென்ஸ்  நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி  கொடுத்த ஆப்பிரிக்க  மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் !  அண்டங் கறுப்பன்  !

ஷைலக் : யார் ?  அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ?  நம்ப முடியவில்லையே !  யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

புரூனோ :  ஆம் !  எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க  “மூர்” இனத்தவன்தான் !  காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுத்தைக்குத்தான் உயர்பதவி  அளித்துள்ளான் !  எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான்.  எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு  தரலாம் ?  அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும்.  எந்தப்  போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.

ஷைலக் :  ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

புரூனோ:  கருப்பன் என் மேலதிகாரி.  மூர்க்கன் !  முரடன் ! காமாந்தகன் ! கன்னிப் பெண்ணைத் தூக்கிச் சென்றவன் !  கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் !  ஆப்பிரிக்க  “மூர்”  இனத்தைச் சேர்ந்தவன் ! அவன்  ஒரு  முசுடன் !  அதனால்  கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.

ஷைலக்:  என்ன ?  இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா ?  மோனிகா என்னருமைக் காதலி அல்லவா ?  என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கட்ட நீயெனக்கு உதவி செய் ! , புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் !   அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நாம் தெரிவிக்க வேண்டும் !   அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க வேண்டும் !

புரூனோ :  நான் கருமூர்க்கனை வெறுக்கிறேன்.   மோனிகா வெண்ணிலவு போன்ற வெள்ளைப்புறா !  அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ?  அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் !  சிறு வடிவம்.  அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் !  அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தைக்  மூட்டிடு !  மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை  ஊற்றிடு !  தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு !  ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடு !  தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் அவருக்கும் பிளவை உண்டாக்கித் தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !

வில்லன் புரூனோ 

ஷைலக் :  எதிரில்தான் மோனிகா இல்லம் !  இருட்டி விட்டது ! விளக்கில்லை !  உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !

புரூனோ :  இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் !  இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் கன்னியைப் பற்றிச் சொல் !

ஷைலக் :  [மோனிகா வீட்டு முன் சென்று, கதைத் தட்டி உரத்த குரலில் ]  ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் !   உமது வீட்டில் களவு போயிருக்குது ! பெருங்களவு !

புரூனோ :  [மோனிகா வீட்டு முன் சென்று]  விழிதெழுவீர் கிழவரே !  உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் கரு மூர்க்கன்! கள்ளன் ! வீட்டுக்குள் தேடிப் பாரீர் !  பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !

[ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே வருகிறார்]

+++++++++++++++++++++++++++++++++

தகவல்:

  1. Othello By William Shakespeare, Folger Shakespeare Library [1993] 
  2. Othello DVD Movie by Warner Brothers [2007] 

ஷேக்ஸ்பிரின் ஒத்தல்லோ

வெனிஸ் கருமூர்க்கன் நாடகம்

அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2

++++++++++++++++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

இடம் :  வெனிஸ் நகரத் தெரு

நேரம் : இரவு வேளை

பங்கு கொள்வோர் : சிசாரோ குடும்பத்தார், ஷைலக், புரூனோ

சிசாரோ :  என்னை விளித்தது யார் ? என்ன செய்தி ? (ஷைலக்கைப்  பார்த்து)  எதற்காக நீ வீட்டு வாசல் முன் நிற்கிறாய் ?  உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை.

ஷைலக் : மேன்மை மிகு செனட்டரே !  நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம் ! உங்கள் வீட்டுக்குள் பாருங்கள், எல்லாரும் உள்ளாரா வென்று !

புரூனோ :  உங்கள் வீட்டுக் கதவு, பலகணிகளைப் பாருங்கள் ! ஏதாவது ஒன்று திறந்துள்ளதா வென்று தேடுங்கள்.

சிசாரோ :  எதற்காக அப்படிக் கேட்கிறாய் ?

புரூனோ :  உங்கள் வீட்டில் களவு போயுள்ளது.  உங்கள் மானம் போயுள்ளது !  கருங்கடா ஒன்று வெள்ளைப் பசுவைக் கூடிச் சினையாக்க வீட்டுக்குள் திருடியுள்ளது !

ஷைலக் : விழித்துப் பாருங்கள்.  வேதாளம் வெள்ளைப் பசுவை விழுங்கப் போகிறது. பிடியுங்கள் பிசாசை !

சிசாரோ : நீ அறிவோடுதான் பேசுகிறாயா ?  குடித்து விட்டுக் கூத்தடிக்கிறாயா ?  நீ யாரடா ?  உன்னைப் பற்றிக் கூறடா ?

ஷைலக் :  என்னைத் தெரிய வில்லையா ?  நான்தான்  உங்கள் அருமைப் புதல்வி மோனிகாவை மணக்க வந்த மாப்பிள்ளை. உங்கள் வருங்கால மருமகன் !

சிசாரோ : கயவனே !  என் மகள் உனக்கில்லை என்று முன்பே நான் உன்னை விரட்டியது தெரியாதா ?  வீட்டு வாசல் முன் நில்லாதே, போடா போ !  என் புதல்வி ஒரு செனட்டர் மகள் ! நீ யார் ?  இரவில் வந்து பயமுறுத்தி எங்கள் தூக்கத்தை ஏன் கெடுக்கிறாய் ?

ஷைலக்  :   ஐயா ! ஐயா ! ஐயா ! அப்படிச் சொல்லாதீர்.  நான் இந்த வெனிஸ் நகரப் பெரும் சீமானின் ஒரே மகன் !   செனட்டர் வீட்டில் களவு போனது தெரியுமா ?

சிசாரோ :  இது வெனிஸ் நகர் மையத்தில் பாதுகாப்பாக உள்ள செங்கல் வீடு. செனட்டர் வீடு.  குப்பத்துக் குடிசையல்ல ! இப்படிப் பேசும் உன்னைத் தண்டிக்க எனக்குப் பேராற்றல் உள்ளது. நான் அரசாங்க அதிகாரி !

புரூனோ : ஐயா செனட்டரே !  உங்கள் மீது பரிவு கொண்டு களவு போன பொருளை நினைவூட்ட வந்தோம்.  கயவர் என்று நீங்கள் எம்மைத் திட்டலாமா ?  கள்வர் என்று எம்மைக் குற்றம் சாட்டலாமா ?  கருப்பன் ஒருவன், ஆப்பிரிக்க மூர்க்கன் உங்கள் புதல்வியைக் கடத்திப் போனது தெரியுமா ?

சிசாரோ :  மூடரே !  என்ன வார்த்தை சொன்னீர் !

புரூனோ :  நான் சொல்றேன்,  மூர் இனத்தைச் சேர்ந்த அந்தக் கருப்பன், இந்த இரவு நேரத்தில் உங்கள் அருமை மகளைக் கற்பழித்திருப்பான் !  கன்னிப் பெண்ணைக் கட்டி அணைத்து உடல் உறவு கொண்டிருப்பாரன் !

சிசாரோ :  நீ ஒரு அயோக்கியன் !

புரூனோ :  நீங்கள் ஒரு செனட்டர் !  மோனிகா ஒரு செனட்டர் புதல்வி ! கடத்திச் சென்ற காதலன் மூரினத்தைச் சேர்ந்த ஒரு கருப்பன் !  கரு மூர்க்கன் !

சிசாரோ :  இப்படி அவதூறு பேசியதற்கு நீவீர் பழிவாங்கப் படுவீர் !  நீவீர் யாரென்று எனக்குத் தெரியும் !

ஷைலக் :  செனட்டரே !  கேளுங்கள் !  உமக்குத் தெரியாமல் நடுராத்திரி வேளையில், உமது மகள் வீட்டை விட்டு ஓடி விட்டள் ! அவளைக் கடத்திச் சென்றவன், ஒரு நீர்ப்படகோட்டி [Gondolier] ! அவள் நாடித் தழுவச் சென்றது காமாந்தகன் ஒருவனை !  மூர் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கக் கருப்பன் அவன் !  இவை எல்லாம் உமது அனுமதியில் நடந்தவைதான் என்றால், நாங்கள் மெய்யாகவே கயவர்தான் !  உமக்குத் தெரியாமல் இவை நடந்தவை என்றால், நீவீர் எம்மீது கோபம் கொண்டது தப்பு, தவறு, தகாதது !  இவற்றை நீவீர் அனுமதிக்க வில்லை என்றால், உமது மகள் உமக்கெதிராய்க் கிளம்பி விட்டாளா ?

சிசாரோ :  [கோபத்துடன்]  தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வாரீர் ! தேட வேண்டும் அந்த மூர்க்கனை !  பிடிக்க வேண்டும் என் புதல்வியை.  எல்லாம் கனவில் நடப்பது போல் காணுது.  இவை உண்மை போல் தோனுது !  தீப்பந்தம் கொண்டுவா !

[சிசாரோ பரபரப்புடன் குடும்பத்தாருடன் வெளியேறுகிறார்]

புரூனோ :  [ஷைலக்கைப் பார்த்து]  நான் மூட்டிய தீ பற்றிக் கொண்டது !  நான் போய் வருகிறேன் ஷைலக் !   மூர் இனத்தோன் முன் நான் காணப்படுவது ஆபத்தாய் முடியும். வெனிஸ் அரசாங்கம் கருப்பனுக்கு கடிந்துரை அனுப்பும். தண்டிக்கும். ஆனால் அரசாங்கம் அவனை விலக்கி வெளியே தள்ளாது ! ஏனென்றால் வரப்போகும் சைப்பிரஸ் போருக்கு அவன் உதவி அவசரத் தேவை.  படை வீரரை முன்னின்று நடத்திச் செல்ல அவனைப் போல் பேராற்றல் படைத்த வேறொரு ஜெனரல் கிடைப்பது அரிது.  கருப்பனை நான் வெறுக்கிறேன் எனக்கவன் தளபதி ஆயினும் !  ஆனால் பாசாங்கு செய்தாலும் நானவன் ஆணைக்கு அடங்கி நடக்கும் நம்பிக்கையான சேவகன் ! அவனை நீ காண வேண்டு மென்றால், சாகிட்டேரியஸ் விடுதியில் இருப்பான்.  நானும் அங்குதான் படை வீரர் கூட இருப்பேன். போய் வருகிறேன் ஷைலக்.

[புரூனோ வெளியேறுகிறான்]

[சிசாரோ தீப்பந்தங்கள் தூக்கிய தன் வேலையாட்களுடன் கோபத்துடன் மீண்டும் வருகிறார்]

சிசாரோ : [பதட்டமுடன்]  உண்மைதான் மகள் ஓடிவிட்டாள் ! செனட்டர் குடும்பப் பேரைக் கெடுத்து விட்டாள்.  எஞ்சிய எனது முதிய வாழ்வில் நஞ்சைக்  கலந்து விட்டாள்.  ஷைலக் ! எங்கே நீ அவளைப் பார்த்தாய் ?  கட்டறுந்து, மதியிழந்த காதகி, கருப்பனுடன்  ஓடியதைக் கண்டாயா ?  யார் அவளுக்குத் தந்தையாய் இருப்பான் ?  அவள் என் மகள்தான் என்று நீ அறிவாயா ?  எளிதில் என்னை ஏமாற்றி விட்டாளே !  உன்னிடம் ஏதாவது உரைத்தாளா ?   எழுப்புங்கள் என் உறவினரை. இன்னும் தீப்பந்தங்கள் எடுத்து வாரீர்.  ஷைலக் !  அவள் கருப்பனைத் திருமணம் செய்து கொண்டாளா ?  அது  நிச்சயமாய் உனக்குத் தெரியுமா ?

ஷைலக் :  ஆம்,  கருப்பனை உமது மகள் திருமணம் செய்து கொண்டாள்.  இன்று காலையில்தான் திருமணம் நடந்தது.

சிசாரோ :  ஐயோ தெய்வமே !  வீட்டிலிருந்து எப்போது வெளியேறினாள் ?  என் உதிரம் கொதிக்குதே ! என் இதயம் துடிக்குதே !  என் தலை வெடிக்குதே !  தந்தைமார்களே ! தாய்மார்களே !  உமது புதல்வியரை எப்போதும் நம்பாதீர் ! குனிந்து கொண்டு, பணிந்து கொண்டு, பரிவுடன், பாசாங்கு செய்யும் பாவை என்னை ஏமாற்றினாள் !  உம்மையும் ஏமாற்றுவாள் !  ஷைலக் ! கன்னிப் பெண்ணை மயக்கிக் கைக்கொள்ளும் மாய வித்தை ஏதும் இருக்கிறதா ?  அதைப் பற்றி உனக்குத் தெரியுமா ?

ஷைலக் : ஆம் செனட்டரே !  எனக்குத் தெரியும்.

சிசாரோ :  அழைத்துவா என் தம்பியை.  இப்போது எனக்குத் தெரியுது , நானுனக்கு முன்பே அவளைத் திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.  உனக்குத் தெரியுமா ?  எங்கே பார்க்க முடியும் என் மகளையும் அந்தக் கருப்பனையும் ?

ஷைலக் :  மேதகு செனட்டரே !  அவர்கள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆயுதம் ஏந்திய காவற்படை வீரர் சிலரோடு  என் பின்னால் வாருங்கள் !

[ஷைலக் பின்னால் சிசாரோ தன் ஆட்களுடன் போகிறார்]

[தொடரும்]

+++++++++++++++++

சீதாயணம் (முழு நாடகம்)

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

https://jayabarathan.wordpress.com/seethayanam

தீண்டப்படாத சீதா

~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

இலங்கைக்குச் செல்ல அனுமன் கடலைத் தாண்ட பறக்க வேண்டியதில்லை.

கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தை  (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] ‘இராம பாலம் ‘ [Adam ‘s Bridge] என்று அறிவித்து அகிலவலை இணைப்பு முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை ஏற்றம் [High Tide] சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!

NASA’s Picture Rama’s Bridge

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

++++++++++++

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

+++++++++++

முதலாம் காட்சி:

சீதா நாடு கடத்தப்படல்

****

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவுமில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனிதத்தை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

****

(இரண்டாம் காட்சி தொடரும்)

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]

10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]

11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]

12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]

13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014)  [R-3]

https://jayabarathan.wordpress.com/

காட்சி இரண்டு

வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.

நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]

[அரங்க அமைப்பு:

இரதத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]

இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!

சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?

இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?

சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!

இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!

சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?

இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.

சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?

இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!

சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?

இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.

சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?

இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!

சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!

இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!

சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).

இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.

[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]

மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.

சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.

இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.

[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]

++++++++++

Scene -3 Seetha with Twins

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனார் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்!

வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது!

சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

Lava Kusha with Valmeeki

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள் பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

***********

Scene -4 Ashvametha Yaga

காட்சி நான்கு

அயோத்திய புரியில் ஆரம்பித்த

அசுவமேத யாகம்

இடம்: அயோத்திய புரி அரண்மணைநேரம்: மாலைபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.

[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.

அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. ‘பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு வேந்தன்  இராமனுக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தைக் காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும்’. போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]

சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.

Scene -4 Twins catch the Horse

லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை  இழந்து போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!

[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!

[எச்சரிக்கை அம்பைக் கவணாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்கு கிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இலங்கா புரியில் இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

************

Scene -5 Twins hit Bharathan

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

இடம்: காட்டுப் போர்க்களம்.

நேரம்: மாலை.

பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.

அரங்க  அமைப்பு:  பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப் போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்து விட்டன! இராமப் பிரபுவின் சின்னஞ் சிறு கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?

லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.

இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மாமன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியவன் நான்தான்!

Scene -5 Twins tie Hanuman

லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதிலை நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்!  ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!

லவா: என் பெயர் லவா!  இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டைச் சகோதரர்! அன்னை வால்மீகி ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் மன்னரே ?  [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்!

இராமன்: [சிரித்துக் கொண்டு] பாலர்களே !  உங்கள் யுத்த தர்மத்தை நான் மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடனும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், நீங்கள் ஏன் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார்.  நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? ஏன் வில்லைக் கீழே போட்டீர் ?  சிறுவருடன் போரிடக் கூடாது  என்று எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது சரியன்று. முறையன்று.

லவா, குசா:  அது சரி மாமன்னரே!   அப்படியானால் எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்!  உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

Scene -6 Valmiki with Rama &amp; Twins

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்யப் பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும்  இந்த அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையை  ஈடுபடுத்த வேண்டாம் மாமன்னரே ! … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள். பார்க்கலாம் !

இராமன்: பாலர்களே !   அதில் ஒரு சிக்கல் உள்ளது!  நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை.  அது அவசியம் எனக்குத் தேவை.  அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: மாமன்னா !  தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை!  அவருக்கு நேரமுமில்லை!  அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம்.  அவர் பெரிய பராக்கிரமசாலியாம்!  கனமான வில்லை ஒடித்து, என் தாயை மணந்தவராம் !  அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … [கோபமுடன்] ஆனால் ஒரு கொடுமை ! தாங்க முடியாத கொடுமை.   அவர்தான் எங்கள் அருமைத் தாயை, விலக்கிக் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்!  கடும் கல்நெஞ்சக்கார மனிதர்!   கர்ப்பமான எங்கள் தாயை அவர் காட்டுக்குத் தனியே அனுப்பியது அநியாயம்,  அதர்மம், அநீதி !

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அந்த மன்னனை நேரே காண நேரிட்டால் என்ன செய்வீர் ? என்ன  தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து ஆவேசமாய்] இந்த கூரிய அம்புகளால் அவரது நெஞ்சைத் துளைப்போம், பிளப்போம், துண்டு துண்டாக்குவோம் ! ….

[அப்போது சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று சீதை அவதியுடன் ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சில சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] ….

லவா:  அதோ எங்கள் அன்னை!  எங்களை நோக்கி வருகிறார். ….

[சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப் பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா இருவரும் தாயைத் தொடர்கிறார்கள்]

Scene -6 Valmiki with Seetha &amp; Twins

சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ?  இந்த உத்தமனை மரத்திலே இப்படிக் கட்டலாமா ?  உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்!

[லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து கண்ணீர் பொங்கச் சீதாவைக் கும்பிடுகிறான். அவளது காலில் விழுந்து கண்ணீரால் கழுவுகிறான். ]

அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.

லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!

+++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

Scene -6 Valmiki with Rama & Twins

இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.

நேரம்:  மாலை வேளை

பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது.

(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)

லவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.

இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது  உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும்  அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை  ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற  எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ?  போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது!  எடுங்கள் உங்கள் வில்லை!

இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம்  அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம்  கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ?  எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை  குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!

Scene -6 Valmiki with Seetha & Twins

லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே  போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.)  வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள்  அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள்  கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள்  அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால்,  தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும்  தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத்  தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ?  எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான்  யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள்  பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத்  தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை  நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன்  எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக்  காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள்  தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள்  தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்!  [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத்  தயக்கமா ?  வெட்கமா ?  உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது  வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர்  உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து]  பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என்  புதல்வர்களா ?

வால்மீகி:  ஆமாம்,  அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு]  சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும்  தந்தைக்குக் குறைய வில்லையே!

Scene -6 Seetha left by Rama with Twins

வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன்,  விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே!  அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என்  ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள்.  லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக்  கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ  அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும்  இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன்  முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று  வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல்,  சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின்  எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன்  எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில்  பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச்  சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார்  ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும்  எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க  எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக்  கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள்  அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ  சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன்,  அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன்  பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை  போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை  இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின்  இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி  இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா  விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன்  அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன்  அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து  விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை  அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து  இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக்  கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ?   எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று  பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!

லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின்  கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன்,  இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)

வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம்  முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி  இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல  வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல  வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.

சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட  ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ  விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள்  ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள  வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!  இதுவரை அவரது விழிகள் என்னை நோக்க வில்லையே !

வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு  அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள்  உன் மடிமீது விளையாட வேண்டியவர், இந்தக் காட்டுப் புழுதி மண்ணில் விளையாடிக்  கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு  அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!  நீங்கள் சேர்ந்து கொள்ள இறைவன் அடுத்தோர் வாய்ப்பை அளித்துள்ளான்.   அழைத்துச் செல் மூவரையும் மாமன்னரே !

இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய்  உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை  கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும்  எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ?  இதுவரை கொடுத்த தண்டனை போதும்.  எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.

சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி  யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.

பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை  கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.

இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி!  இம்முறை லவா, குசா இருவரையும் நிச்சயம்  கூட்டிச் செல்ல முடிவு செய்கிறேன்.

இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவுள்ளம், கண்ணியம்,  கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது  உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்த போது ஜனக  மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும்  அறத்துடன் நடப்போம்.

லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால்  அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப்  போவதில்லை. இதுவரை நாங்கள் தந்தையைக்  காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக்  காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ?  தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல்  என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை  வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி  வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து  எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!

Scene -6 Rama leaves Seetha with Twins

இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல  நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள்  வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!

லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர்  எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள்  கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.

வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை  சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி  இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.

இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை!  ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது  ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை  எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான்  மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி  என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும்  அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை  பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக்  கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?   என்னை மீண்டும் அவமானம் செய்ய வேண்டுமா ?

சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ  தீண்டப் படாதவள் ஆகிவிட்டேன்!  அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை  விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா  நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய  மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று  அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று  நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல  எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத  சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள்  பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்!  (கோவென்று அழுகிறாள்)

லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை  விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்!  சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள்  பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி  விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு  குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால்  உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண்  தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும்  தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?

சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல்  மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர்  கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை!  நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல்,  அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில்  இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும்,  என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள்  சொல் படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே  காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி  மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது!  ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது.  ஊர் மக்களுக்கு ஏக  பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச்  சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும்  போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது  தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட  அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக  அரண்மனையில் காட்சி தரக் கூடாது!

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை  அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ  விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர்  விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத  பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர்  என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை  ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை!  அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப்  போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த  பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான்  முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு  மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு  அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம்  அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில்  போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான்  கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப்  பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி  என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு  மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை  யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி!  கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும்  இடம்பெற முடியவில்லை இதுவரை!  ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சியே !

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு  என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி!  மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப்  போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற  மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத்  துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த  வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள்  வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன்.  மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! ..  ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப்  பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில்  இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை  ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ?  நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு  தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று நான் கனவு கூடக்  காண வில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு  விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட  அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப்  பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவுக்குக் கொடுத்த தண்டனை,  பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில்  அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி!  பெயரை மாற்ற வேண்டாம். என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன  மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில்  என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே  வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே  இருக்கட்டும்.

பரதன்: [கோபத்தில்] அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டீர்கள்!  அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி  வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே  பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்!  அன்னையிடமிருந்து பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்!  உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக்  கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும்  புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க  வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம்  இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே  விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால்  தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத்  திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால்  உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும்  வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் நங்கள் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க  அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப்  போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன  இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள்  புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று சொல்லி சீதாவை அழைத்துச்  செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம்  என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்!  அப்போது எல்லாரது பிரச்சனை களும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை  எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) ….  அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு  வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை  வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து  விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு  காணும்…. நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!..  நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே  நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப்  பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான்  தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … மீளாத உலகுக்கு !

[வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக்  குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க  ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாதாளப் பாறையில் அடிபட்டு  அவளது ஆத்மா பிரிகிறது].

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக  வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

[அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இராமன் கண்களில் நீர் பொங்கிச் சொட்டுகிறது]

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான்  நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது  ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம  கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை  சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான்.  இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி  அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப்  பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர்  துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய  உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்!  வாழப் பிறந்தவர் நீங்கள் சாக வேண்டுமா ?

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும்  உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள்  நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை  வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தம பதி  என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு  மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு  பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர்  துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?

Scene -6 Seetha kills herself

[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன்,  அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி  சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின்  துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா,  குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

(நாடகம் முற்றிற்று)

********

சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை

பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல  மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச்  சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும்  பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல்  கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப்  பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத்  தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும்  புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான  அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில்  எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல்  மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன்  அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த  தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்  போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன்  வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து  மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர்  புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும்  இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது  வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப்  பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த  தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட  அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம்  பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை.  கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத  நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப்  பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத  வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில்  அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச  பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும்  தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப்  பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும்  பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்  மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள்  காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல்  இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து  கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித்  தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற  காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல்  நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை  இராஜ கோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத்  தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று  சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க  வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய்  கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி,  கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத்  தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும்  பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை  எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின்  அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே,  வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி  யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை  மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க  வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச  பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து  இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை  நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில்  நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான்.  பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான்.  இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக்  கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன்  எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம்  செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும்  பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும்,  சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ  அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக்  குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர்,  விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம  கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில்  யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை.  அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன்,  இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி  முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை  திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின்  புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி  அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது  வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை  ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத  ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும்  தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய  பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று  கருதவும் இடமிருக்கிறது.

இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும்  பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று  மாற்றி யுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதார மாகச்  சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருத வில்லை  என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின்  அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு  இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட  வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில்  இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக்  காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின்  முரணாக இருக்கிறது!  முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக  வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில்  இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள்.  முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும்,  சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக்  கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண  கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர்  பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி  வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக  மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும்  இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்  படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை!  தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன், வாலி ஆகியோர் குரங்கு முகமும், வாலும்  கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண  நாடகத்தில் வருகிறார்கள்.  வால்மீகி இராமாயண ஆங்கில மொழிபெயர்ப்பில் [நூல் பெயர் கீழே குறிப்பிடப் பட்டுள்ளது], ஆசிரியர் ரமேஷ் தத் 89 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளது : நீலகிரி மலைப் பகுதியில் இராமன் சீதையைத் தேடிவரும் போது, முதன்முதல் மலைவாசியான சுக்ரீவனைச் சந்தித்தது, உதவி செய்ய ஒப்பந்தம் செய்தது பற்றி எல்லாம் எழுதப் பட்டுள்ளது.  வால்மீகி அப்போது ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  வால்மீகி அப்போது வசித்த மலைவாசிகள் வானரங்கள் என்று எப்படிக் கூறலாம் ?  பேசும் வானரம், பறக்கும் வானரம் அப்போது வாழ்ந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது ?  வானரம் என்று குறிப்பிடப்பட்ட அனுமான், சுக்ரீவன், அங்கதன், வாலி அனைவரும் மானுடர் என்பது என் அழுத்தமான யூகிப்பு.

சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த  அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில்  தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு  ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக் கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய  இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது  என் அழுத்தமான கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில்  வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து.  பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக்  கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி  பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு  உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி  மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க்  கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி  முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி  வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர  வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக்  கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று  எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும்,  வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக  இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும்,  தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச்  சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை  அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக்  காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை  தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன்  மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார்  படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான்  அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.

கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை  மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை  இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்!  காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக்  குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்;  அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர்  புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர்  கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த  இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது,  பிரச்சனை யான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம  பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான  கேள்வி!

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]

10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]

11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]

12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]

13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

17.  The Ramayana and The Mahabharta by Romesh C. Dutt, [1969 Edition] [First Edition 1910] Everyman’s Library, Dent, London [335 pages]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (February 8, 2016)  [R-4]

https://jayabarathan.wordpress.com/

சிரட்டை ! (சிறுகதை)

சிரட்டை .. !

சி. ஜெயபாரதன், கனடா

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தி னுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.

“அடி கழுதை! சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே!”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது.

“அப்புறம் வாய் வச்சுக் குடிச்சி, அந்த அழுக்குச் சிரட்டையை மறுபடியும் குடத்துக்குள்ளேயா விடுவது?” என்று சிரட்டையைப் பிடுங்கி, ஜன்னல் வெளியே விட்டெறிந்தாள், ஜானகி. இந்து அழுது கொண்டு உள்ளே ஓடினாள்.

உச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது, சூரியன்! வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

அவள் மாதர் குலத்தின் தனித்துவ மடந்தை! கோடியில் ஒருத்தி! நிரம்ப சுத்தம் பார்ப்பவள். ஆசார குல மாது! கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூடத் தான் நீர் அருந்த மாட்டாள்! வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர்! பெயர்கூட எழுதப் பட்டிருக்கும்! அவ்வளவு சுத்தக்காரி ஜானகி!

மனிதர்களின் பிறப்பையும், தரத்தையும் நிறுத்துப் பார்த்துப் பழகுபவள், ஜானகி!. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி! கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது! என்று நியாயம் பேசுவாள்.

ஒரே ஒரு பெண் குழந்தைதான் ஜானகிக்கு. ஆறு வயது வந்த செல்லப் பிள்ளை இந்திரா. அந்த அறியாச் சிறுமிகூட அவளது சுத்த இலக்கண விதிகளுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்!

மொம்பையிலிருந்து வேலை மாற்றலாகி, அவர்கள் சென்னை கல்பாக்கத்திற்கு வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. இருபது ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ் நாட்டுக்கு விஜயம்! பிறந்த மாநிலமானாலும் சொல்லில், செயலில், முறையில் பல மாற்றங்கள் முளைத்து, ஆல விழுதுகளாய்த் தொங்குவதை அவர்கள் கண்டார்கள்.

இந்துவை அங்குள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மூன்று நாளாகிறது. அன்று மாலை பள்ளியிருந்து திரும்பிய இந்து,“அம்மா…அம்மா…! என்று ஆசையோடு ஜானகியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். பகலில் தாயிடம் வாங்கி அடிகளை எல்லாம் எப்போதே மறந்து விட்டாள், இந்துக்குட்டி!

சுட்டும் விழிச் சுடர்களைக் சுழற்றிக் கொண்டு, “அம்மா, இன்னைக்கு அஞ்சாம் கிளாஸ் மஞ்சு என்னைப் பார்த்து, நீ என்ன சாப்பிடுவே? மாமிசமா? அல்லது மரக்கறியா? என்னு கேட்டாள். ஏம்மா! மரக்கறின்னா என்ன? மாமிசமென்னா என்ன?”

“மஞ்சு! அது எந்த நாய்? உன்னைப் பார்த்து, ‘என்ன சாப்பிடறே’ ன்னு கேட்டது?”

“அப்புறம், ‘இந்து! நீங்க என்ன குலம்?’ என்னு இன்னொரு பிள்ளை கேட்டது. தெரியாதுன்னு சொன்னேன். அம்மா! நாமெல்லாம் என்ன குலம்? குலமுன்னா என்ன?”

“அது எந்தக் கழுதை? சின்னப் பிள்ளையைப் பார்த்து குலம், கோத்திரம் கேட்குது! இரு! நாளைக்கு உன்னோடு ஸ்கூலுக்கு நானும் வர்றேன். வந்து உன் டீச்சரிடம், ‘ஒன்னும் தெரியாத சின்னஞ் சிறிசிடம், பிள்ளைகள் இப்படியா கேட்பது?’ என்னு புகார் பண்ணுறேன்”, என்று ஆத்திரத்தில் பேசினாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரவி, மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். “ஜானகி! நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது? மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது! பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே! சாப்பிடுற ஆகாரத்தைக் கேட்கலே! இது புது அனுபவம் நமக்கு! நம்ம தலையெழுத்து!” என்று தலையில் அடித்துக் கொண்டான், ரவி.

மறுநாள் பள்ளியிலிருந்து வந்த இந்து இன்னொரு அருவருப்பான கதையைச் சொன்னாள்.

“அம்மா! இன்னைக்கு என் கிளாஸ் டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ‘உன் அப்பா பேரு என்னான்னு’ கேட்டாங்க. ‘ரவிச்சந்திரன்’ ன்னு சொன்னேன். அப்புறம் அம்மா பேரைக் கேட்டாங்க. நான் ‘ஜானகி’ ன்னு சொன்னேன். நான் போகத் திரும்பும் போது, மெதுவா …. ‘நீங்க என்ன ஜாதி’ ன்னு கேட்டாங்க…. நான் ‘தெரியாது’ ன்னு முழிச்சேன்…. அம்மா! நாம என்ன ஜாதி? ஏம்மா! ஜாதின்னா என்ன?” என்று ஆர்வமாய்க் கேட்டாள், இந்துக்குட்டி.

ஜானகிக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. “இங்கே கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் டீச்சர் கூட சின்னப் பிள்ளையிடம் இப்படி பச்சையாய் கேட்டிருக்காளே! வெட்கக் கேடு! படிச்சுப் பட்டம் வாங்கின டீச்சரே இப்படி ஜாதி கேட்பாளா?….சீ! சீ! …’பிள்ளைகளைப் பத்தி புகார் செய்யலாம்’ என்றால், இப்போ டீச்சரே அசிங்கமா கேட்கிறா…… பிரின்ஸ்பாலும் இப்படித்தான் இருப்பார்”.

ரவி எதுவும் சொல்லாது சற்று யோசித்தான். “பழைய தலைமுறைப் பாரதியார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார்! இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள்!” என்று வருந்திக் கொண்டு வெளியே சென்றான் ரவி.

“ஏம்மா! நாமெல்லாம் என்ன ஜாதி? சொல்லம்மா!” என்று ஜானகியின் கண்களை நோக்கினாள், இந்து.

ஜானகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “சீ! போடி!” என்று மறுத்து, சமையல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். இந்து விடுவதாய் இல்லை. அவளைப் பின் தொடர்ந்தாள்.

“ஏம்மா! ஜாதின்னா உங்களுக்கும் தெரியாதா?”

“போடீ மண்டு! இதை எல்லாம் நீ தெரிஞ்சிக்கப்படாது, இந்த வயசிலே!”

“அப்புறம் ஏம்மா டீச்சர் என்கிட்ட ஜாதி கேட்டாங்க?” என்று அம்மாவை மடக்கினாள், இந்து. ஜானகிக்கு எப்படி, என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. ரவி போய்விட்டானா என்று வெளியே பார்த்துக் கொண்டு, அங்கும் இங்கும் எதையோ தேடினாள். அடுக்கியுள்ள அலமாரிப் பாத்திரங்கள் அவள் கண்ணில் பட்டன. பளிச்சென்று அவளுக்கு உதய மானது!

“அதோ பார் அலமாரியில். அது என்ன சொல், இந்து?”

“அது எனக்கு தெரியுமே. எவர்சில்வர் தம்ளர்”

“இது என்னவென்று சொல் பார்க்கலாம்?”

“இதுவா, இது கிளாஸ் தம்ளர்”

“கறை படிஞ்சிருக்கே அதோ, அது என்ன?”

“பித்தளைத் தம்ளர், அம்மா!”

பின்பு ஜானகி குனிந்து குப்பைக் கூடையில் ஒன்றைத் தேடினாள். “இதுதான் உனக்கு நல்லா தெரியுமே!”

“எது? ஓ! அதுவா? ….அது கொட்டங்கச்சி” என்றாள் இந்துக்குட்டி.

ஜானகியின் முகம் பொங்கியெழும் முழு நிலவாகி, புன்னகையை மின்னியது! இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க?” என்றாள்.

“இந்துக்கண்ணு! ஜாதி நான்கு! நாமெல்லாம் எவர்சில்வர் மாதிரி நினைச்சுக்கோ……!”

“எவர்சில்வருன்னா, நாமெல்லாம் பளபளன்னு இருக்கோமா…….?”

“அதெல்லாம் இல்லே. எவர்சில்வருன்னா ஸ்டெயின்லஸ் ஸ்டீலுன்னு அர்த்தம். அதாவது கறை பிடிக்காத வெள்ளி!” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே.

“ஏம்மா! அப்போ கிளாஸ் தம்ளருன்னா யாரு? பித்தளைன்னா யாரு? கொட்டங்கச்சின்னா யாரு?” என்று ஆர்வமோடு கேட்டாள், இந்து.

“இதை எல்லாம் நானுனக்குச் சொல்ல மாட்டேன். நீயே தெரிஞ்சுக்குவே….! பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க! போ! போயி வெளியே விளையாடு!”

இந்து விளையாடப் போக வில்லை. முற்றத்தில் நின்று சிந்தித்தாள். மற்ற மூன்று தம்ளர்களும் யாருன்னு இப்பவே தெரிஞ்சாக வேணும்! யாரிடம் கேட்கலாம்?…… இருக்கவே இருக்கார் அப்பா. நேரே மாடிக்கு ஏறினாள்.

மாடி அறையில் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தான், ரவி.

“அப்பா!” என்று கூவி ஓடிப்போய், பேப்பரைப் பிய்த்துக் கொண்டு ரவியின் மடியில் பொத்தென விழுந்தாள், இந்துக்குட்டி. வந்த கோபத்தை விழுங்கிக் கொண்டான், ரவி.

“ஜாதி எத்தனைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?…. எனக்குத் தெரியும், அப்பா! அம்மா சொல்லிக் கொடுத்தாங்க!….”

“அடி சக்கை! இப்போ அம்மாவே உனக்கு அந்தப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாளா, வீட்டிலே! பலே ஜோர்! …. இந்து! ஜாதிப் பிரிவுகள் சொல்லி குலத், தாழ்த்தி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என்கிறார், பாரதியார்.

“அப்பா! எனக்கு பாரதியாரைத் தெரியாது. இதுதான் தெரியும். ஜாதி நான்கு!” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா? இப்போ!”

“கேள் இந்து! ஜாதி இரண்டு! அம்மா நாலுன்னு சொன்னது தப்பு! தப்பு! தப்பு!” என்று கனிவாகச் சொன்னான், ரவி.

“இல்லை! இல்லை! இல்லை! ஜாதி நான்கு! இரண்டுன்னு சொல்ற நீங்கதான் தப்பு! தப்பு! தப்பு!” நாலையும் நான் சொல்றேன்; கேளுங்க! முதல்லே எவர்சில்வர் தம்ளர்! ரெண்டாவது கிளாஸ் தம்ளர்! மூன்றாவது பித்தளை தம்ளர்! நாலாவது கொட்டாங்கச்சி! ஆக ஜாதி நாலு!” என்று நான்கு விரல்களைக் காட்டினாள்.

ரவி தன்னையும் அறியாது சிரித்து விட்டான். இந்துவை அணைத்துக் கொண்டு அவளது மாம்பழக் கன்னத்திலே இரண்டு முத்தமிட்டான். இந்து திணறிக் கொண்டே, “நாமெல்லாம் எவர்சில்வர்! அப்படின்னா, கறை பிடிக்காத வெள்ளி”.

“அடி மண்டு! ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்னு ஆண் ஜாதி! இன்னொன்னு பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான்! ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள்! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி!”

கால வெள்ளத்தில் கரை புரண்டு, மக்களை எல்லாம் அடித்துக் கொண்டு போய் மூழ்க்கிய, இந்த ஜாதிப் பெருக்கத்தை, இந்துவுக்கு புரிய வைப்பது எப்படி?

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா ஜாதின்னா என்ன?” என்று மறுபடியும் அவனைக் குடைந்தாள், இந்து.

ரவிக்கு கோபம் வந்து விட்டது. “இந்து! ஜாதி ஒரு தொத்துநோய்! இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய்! அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை! அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை! புனிதமான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா! அத்தனையும் ஒரே அபத்தம்”.

இந்துவுக்கு தொத்துநோய், புற்றுநோய், மருந்து இதெல்லாம் எதுவும் புரியவில்லை! “அப்பா! இதைச் சொல்லுங்க, யாரு கிளாஸ் தம்ளர்? யாரு பித்தளை? யாரு கொட்டங்கச்சி?”

“அசடு மாதிரி கேட்காதே! எனக்கு இதெல்லாம் பேசப் பிடிக்காது. நீயும் இந்த வயசிலே இதைத் தெரிஞ்சு கொள்ளக் கூடாது”.

இந்து மெதுவாகப் படியில் இறங்கினாள். அவள் மூளை வேலை செய்யத் தொடங்கியது! சட்டென ஒன்று நினைவில் வந்தது. மீண்டும் படியேறி ரவியிடம் வந்தாள்.

“அப்பா! எதிர்வீட்டு மாமா போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்து உங்களோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் தம்ளர்! ஏன்னா? அம்மா கிளாஸ் தம்ளரில்தான் அவருக்கு காஃபி கொடுத்தாங்க!” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடினாள், இந்து.

இரண்டு நாட்கள் கழிந்தன. பகல் பனிரண்டு மணி இருக்கும். மதிய உணவு சாப்பிட இந்து வீடு நோக்கி வரும்போது, வாசலில் ஜானகி கூடைக்காரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டி ருந்தாள். பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுந்த கூடைக்காரி, குடிக்கத் தண்ணீர் கேட்கவே, ஜானகி உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். தவ்வித் தவ்வி வந்த இந்து, சட்டென பொம்மைபோல் சிலையானாள்.

பித்தளைத் தம்ளரில் நீரைக் குடித்துக் கொண்டிருந்த கூடைக்காரியைப் பார்த்து, “ஓகோ! இவள்தான் பித்தளையா?” என்று மனதில் பதித்துக் கொண்டாள், இந்து.

சிறிது நாட்களாக வீட்டில் வேலைக்காரிப் பிரச்சனை இருந்து, ஜானகிக்குச் சிரமத்தைக் கொடுத்தது. வேலை பார்த்து வந்தவள், திடீரென்று விலகி நின்று விட்டாள். பைத்தியம் பிடித்ததுபோல், ஜானகி திணறியபோதுதான், எதிபாராத விதமாக பார்வதி வந்து சேர்ந்தாள், வேலைக்கு.

பார்வதி காக்கை நிறம்! பத்துப் பதினொரு வயதிருக்கும். மெலிந்த உடல்கட்டு. கிழிந்த பாவாடை. காற்றோட்டம் மிகுதியான மேல்சட்டை. எண்ணை தோயாத தலை மயிர். வறுமைக் கோலத்திலும் முகத்தில் தோன்றியது ஒரு லட்சணம்! ஜானகி பார்வதியை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.

முதல் நாள் துள்ளி குதித்து, ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு பம்பரமாய் வேலை செய்தாள், பார்வதி. வீட்டை துப்புரவாய்த் துடைத்தாள். பளிச்சென வாசலைக் கழுவினாள். முகம் தெரியும்படி பளபளவென பாத்திரங்களைத் தேய்த்தாள். சுத்தமாய்த் துணிகளை எல்லாம் துவைத்தாள். ஜானகிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

அன்று, அவள் டீ தயார் செய்து, பார்வதியை கனிவாகக் கூப்பிட்டாள்.

“வா! பார்வதி! வா! இதைத் தின்னு, டீயைக் குடி! அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு! நான் போய் டீ கொண்டு வர்ரேன்”.

பார்வதியின் முகம் மலர்ந்தது. தயங்கித் தயங்கி வந்து, வாசற் படியில் உட்கார்ந்தாள். ஈரக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு, அவக் அவக்கென்று ஒரு நொடியில் தின்று முடித்தாள். இட்லியும் சாம்பாரும் ருசியாய் இருந்தது. ஜானகி எவர்சில்வர் பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்தாள்.

“பார்வதி! அந்த கொட்டாங்கச்சியை எடு! அதிலே டீயை வாங்கிக்கோ! சூடாக இருக்கு”.

பூரித்துப் போனாள், பார்வதி. இதுபோல் யார் அவளை உபசரித்தார்கள்? டீயை ஊதி ஊதிக் குடித்தாள். சிரட்டையில் இருந்த டீ தேனாய் இனித்தது!

சிட்டுக் குருவிபோல் பாய்ந்து வந்த இந்து, பார்வதி சிரட்டையில் டீக் குடிப்பதைப் பார்த்து, கண்ணிமைக்காது நின்றாள். அவளது நாலாவது புதிரும் தீர்ந்தது!

“ஓ! இவள்தான் கொட்டாங்கச்சியா?” இந்துவின் மீன்விழிகள் இரண்டும் விரிந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்பை உடனே அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டுமே, என்று மாடிக்கு ஓடினாள்!

ரவி காலையில் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தான். மூச்சு இழைக்க ஏறிவந்த இந்து, “அப்பா! கொட்டாங்கச்சின்னா யாரு தெரியுமா?….பார்வதி!…புதுசா வேலைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காளே, அவள்தான்” என்றாள்.

“ஏய் இந்து! நீ என்ன சொல்றே?”

“இன்னைக்கு அம்மா பார்வதிக்கு சிரட்டையிலே டீ கொடுத்தாங்க……!”

கேட்டவுடன் சிலையாய் நின்றான், ரவி.

“என்ன கேவலம்? பார்வதிக்கு, சிரட்டையிலேயா டீயைக் கொடுத்தாள், உன் அம்மா?” ரவி கோபத்தோடு கீழே விரைந்தான். இந்துவும் புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.

ஜானகி சமையல் அறையில் தன் பின்னழகைக் காட்டிக் கொண்டு தோசை சுடுவதில் ஈடுபட்டிருந்தாள்.

“ஜானகி! என்ன கீழான புத்தி உனக்கு! பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே? இது அநாகரீகச் செயல்!” என்று கத்தினான், ரவி.

“பின்னே என்ன, வெள்ளித் தம்ளரிலா அவளுக்கு டீ தருவாங்க”, என்று வெடுக்கென வெடித்துப் பேசினாள், ஜானகி.

“இது தகாத செயல், ஜானகி! ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது!  நீ இப்படிச் செய்தது எனக்கு அசிங்கமாகத் தெரியுது!”

“டீ கொடுப்பதா தகாத செயல்? யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க?  எது அவமானம்? வயிறு நிறைய அன்னம் தருவதா? இது தர்மம்! இது சன்மானம்!” என்று விளக்கம் தந்தாள், ஜானகி.

“சுடச்சுட டீ தருவது மனிதாபிமானச் செயல்தான்! சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு! உன் சன்மானம் அவமானமாச்சு!”

“பார்வதியே சந்தோஷமாக சிரட்டையிலே குடிக்கும் போது, உங்களுக்கு ஏன் அது அநாகரீகமாகத்  தோணுது?  அவமானமாகத் தோணுது? அதுதான் எனக்குப் புரியலை!”

“ஜானகி! பசி கண்ணை அடைக்கும் என்று சொல்வாங்க. பார்வதி பசியில், நீ தந்த டீயைத் தான் கண்டாள்! சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை! என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை! நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது!”

“கொட்டாங்கச்சின்னா கேவலமா? நாமெல்லாம் இளநீர் குடிக்கிற தில்லையா?”

“ஜானகி! தேங்காய்லே நாம் இளநீர் குடிப்பது வேறு. நல்ல தம்ளர் இருக்க சிரட்டையிலே டீயைக் கொடுப்பது வேறு. சிரட்டை ஒரு கீழ்மையின் சின்னமாகத் தெரியுது, எனக்கு! நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க!”

“இதோ பாருங்க! இது என் ஏற்பாடு! சமையல் துறை என் ஆட்சிக்குக் கீழ்பட்டது! அதில் நீங்க தலையிட வேண்டாம்! தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்!” என்று வெடித்துவிட்டு வீட்டினுள்ளே மறைந்தாள், ஜானகி.

இந்த தர்ம யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்து மேலும் குழப்ப மடைந்தாள். நாலாவது புதிருக்குள் ஏதோ சிக்கல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அப்பாவும் அம்மாவும் ஏன் சிரட்டை வைத்துச் சண்டை போடுகிறார்கள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம்  நெருங்கவே, அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

அன்று ஆபீஸில் இந்த நிகழ்ச்சி, ரவியின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ‘ஏதோ ஒரு பாபத்தைச் செய்துவிட்டோம்’, என்ற குற்றம் அவனை வாட்டியது. இரவில் தூங்கிய போதுகூட அவனால் அதை மறக்க முடியவில்லை.

பொழுது விடிந்தது. தூங்கி எழும்போது அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரவி ஆபீஸ் போகத் தயாரானான்.

அப்போது ‘தடதடவென’ யாரோ மாடிப் படியில் ஏறி வரும் அரவம் கேட்டது. இந்துக்குட்டி மூச்சுவாங்க மாடி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“அப்பா! கீழே வந்து பாருங்கோ! மறுபடியும் அம்மா சிரட்டையிலே பார்வதிக்கு, டீ தர்ராங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ரவியின் உதிரம் கொதித்தது! அவனது இரத்த அழுத்தம் ஏறியது! நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா? ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா? பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது?….மாடிப் படிகளை எல்லாம் மின்னல் வேகத்தில் கடந்து, ரவி பின்புறத் தோட்டத்தை அடைந்தான்.

பார்வதி பல்லெல்லாம் தெரிய மகிழ்ந்து, சிரட்டையில் டீயை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்குள், ரவி பாய்ந்து சென்று சிரட்டையைக் கையிலிருந்து பிடுங்கி, தூர வீசினான். கீழே கொட்டிய டீயை மண்தரை உறிஞ்சிக் குடித்தது! ரவி சட்டென உள்ளே சென்றான்.

அப்பாவித்தனமாக ஓடிப்போய், பார்வதி கீழே விழுந்த சிரட்டையை மீண்டும் எடுத்து, மண்ணைத் தட்டி விட்டு, ஜானகியிடம் மறுபடியும் நீட்டினாள். ஆவி பறக்க இன்னமும் டீ பாத்திரத்தில் இருந்தது.

வெளியே வந்த ரவி. “பார்வதி! சிரட்டையிலே டீ குடிக்காதே!” என்று தடுத்தான். வெடுக்கென அதைப் பிடுங்கி, தரையிலே போட்டு பூட்ஸ் காலால் மிதித்து உடைத்தான். தான் எடுத்து வந்த எவர்சில்வர் தம்ளரிலே டீயை ஊற்றி பார்வதியின் கையில் கொடுத்தான், ரவி.

அதிர்ச்சி அடைந்த ஜானகி பிரமித்து நின்றாள். பார்வதி நடுங்கிக் கொண்டே டீயை குடித்தாள்.

“இதைக் கேட்டுக்கோ, ஜானகி! இனி பார்வதிக்கு நீ சிரட்டையிலே டீ கொடுத்தால், நானும் தினமும் காஃபியை சிரட்டையிலேதான் குடிப்பேன், தெரிகிறதா?” என்று காதில் அறைந்தால் போல் சொல்லிவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான், ரவி.

முதன்முதலாக ரவியின் சொற்கள் அவள் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தன! நின்று சிந்தித்தாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது! புள்ளினம் ஆர்த்தன! பார்வதிக்கு டீ தரும் நேரமும் வந்தது! ஒரு கிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி! … இதைப் பார்த்த இந்து, ஓடிப்போய் ரவியிடம் சொல்லவில்லை!

“இந்து! பார்வதி இப்போ பார்வர்டு கிளாஸ், தெரியுமா?” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே!

இந்துக்குட்டிக்கு இந்தப் புதிர் புரியவில்லை!

*********************

பின்னுரை :

“ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்று ஆண் ஜாதி !  இன்னொன்று பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான் !  ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் ! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி !”

“ஜாதி ஒரு தொத்துநோய் !  இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய் !  அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை !  அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை !”

***********************

ஒரு பனை வளைகிறது !

ஒரு பனை வளைகிறது !

சி. ஜெயபாரதன், கனடா

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.

உச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தான், சூரியன்! வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

“ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்று ஆண் ஜாதி !  இன்னொன்று பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான் !  ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் ! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி !”

“ஜாதி ஒரு தொத்துநோய் !  இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய் !  அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை !  அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை !”

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  September 19, 2009

முடிவை நோக்கி !

atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ஃபெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய  அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

Harry Dughlian's Expt

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

ஒரு பனை வளைகிறது !

oru-pani-janagi

சி. ஜெயபாரதன், கனடா

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.

“அடி கழுதை! சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே!”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது.

“அப்புறம் வாய் வச்சுக் குடிச்சி, அந்த அழுக்குச் சிரட்டையை மறுபடியும் குடத்துக்குள்ளேயா விடுவது?” என்று சிரட்டையைப் பிடுங்கி, ஜன்னல் வெளியே விட்டெறிந்தாள், ஜானகி. இந்து அழுது கொண்டு உள்ளே ஓடினாள்.

உச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது, சூரியன்! வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

அவள் மாதர் குலத்தின் தனித்துவ மடந்தை! கோடியில் ஒருத்தி! நிரம்ப சுத்தம் பார்ப்பவள். ஆசார குல மாது! கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூடத் தான் நீர் அருந்த மாட்டாள்! வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர்! பெயர்கூட எழுதப் பட்டிருக்கும்! அவ்வளவு சுத்தக்காரி ஜானகி!

மனிதர்களின் பிறப்பையும், தரத்தையும் நிறுத்துப் பார்த்துப் பழகுபவள், ஜானகி!. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி! கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது! என்று நியாயம் பேசுவாள்.

ஒரே ஒரு பெண் குழந்தைதான் ஜானகிக்கு. ஆறு வயது வந்த செல்லப் பிள்ளை இந்திரா. அந்த அறியாச் சிறுமிகூட அவளது சுத்த இலக்கண விதிகளுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்!

மொம்பையிலிருந்து வேலை மாற்றலாகி, அவர்கள் சென்னை கல்பாக்கத்திற்கு வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. இருபது ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ் நாட்டுக்கு விஜயம்! பிறந்த மாநிலமானாலும் சொல்லில், செயலில், முறையில் பல மாற்றங்கள் முளைத்து, ஆல விழுதுகளாய்த் தொங்குவதை அவர்கள் கண்டார்கள்.

இந்துவை அங்குள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மூன்று நாளாகிறது. அன்று மாலை பள்ளியிருந்து திரும்பிய இந்து,“அம்மா…அம்மா…! என்று ஆசையோடு ஜானகியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். பகலில் தாயிடம் வாங்கிய அடிகளை எல்லாம் எப்போதே மறந்து விட்டாள், இந்துக்குட்டி!

சுட்டும் விழிச் சுடர்களைக் சுழற்றிக் கொண்டு, “அம்மா, இன்னைக்கு அஞ்சாம் கிளாஸ் மஞ்சு என்னைப் பார்த்து, நீ என்ன சாப்பிடுவே? மாமிசமா? அல்லது மரக்கறியா? என்னு கேட்டாள். ஏம்மா! மரக்கறின்னா என்ன? மாமிசமென்னா என்ன?”

“மஞ்சு! அது எந்த நாய்? உன்னைப் பார்த்து, ‘என்ன சாப்பிடறே’ ன்னு கேட்டது?”

“அப்புறம், ‘இந்து! நீங்க என்ன குலம்?’ என்னு இன்னொரு பிள்ளை கேட்டது. தெரியாதுன்னு சொன்னேன். அம்மா! நாமெல்லாம் என்ன குலம்? குலமுன்னா என்ன?”

“அது எந்தக் கழுதை? சின்னப் பிள்ளையைப் பார்த்து குலம், கோத்திரம் கேட்குது! இரு! நாளைக்கு உன்னோடு ஸ்கூலுக்கு நானும் வர்றேன். வந்து உன் டீச்சரிடம், ‘ஒன்னும் தெரியாத சின்னஞ் சிறிசிடம், பிள்ளைகள் இப்படியா கேட்பது?’ என்னு புகார் பண்ணுறேன்”, என்று ஆத்திரத்தில் பேசினாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரவி, மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். “ஜானகி! நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது? மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது! பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே! சாப்பிடுற ஆகாரத்தைக் கேட்கலே! இது புது அனுபவம் நமக்கு! நம்ம தலையெழுத்து!” என்று தலையில் அடித்துக் கொண்டான், ரவி.

மறுநாள் பள்ளியிலிருந்து வந்த இந்து இன்னொரு அருவருப்பான கதையைச் சொன்னாள்.

“அம்மா! இன்னைக்கு என் கிளாஸ் டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ‘உன் அப்பா பேரு என்னான்னு’ கேட்டாங்க. ‘ரவிச்சந்திரன்’ ன்னு சொன்னேன். அப்புறம் அம்மா பேரைக் கேட்டாங்க. நான் ‘ஜானகி’ ன்னு சொன்னேன். நான் போகத் திரும்பும் போது, மெதுவா …. ‘நீங்க என்ன ஜாதி’ ன்னு கேட்டாங்க…. நான் ‘தெரியாது’ ன்னு முழிச்சேன்…. அம்மா! நாம என்ன ஜாதி? ஏம்மா! ஜாதின்னா என்ன?” என்று ஆர்வமாய்க் கேட்டாள், இந்துக்குட்டி.

ஜானகிக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. “இங்கே கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் டீச்சர் கூட சின்னப் பிள்ளையிடம் இப்படி பச்சையாய் கேட்டிருக்காளே! வெட்கக் கேடு! படிச்சுப் பட்டம் வாங்கின டீச்சரே இப்படி ஜாதி கேட்பாளா?….சீ! சீ! …’பிள்ளைகளைப் பத்தி புகார் செய்யலாம்’ என்றால், இப்போ டீச்சரே அசிங்கமா கேட்கிறா…… பிரின்ஸ்பாலும் இப்படித்தான் இருப்பார்”.

ரவி எதுவும் சொல்லாது சற்று யோசித்தான். “பழைய தலைமுறைப் பாரதியார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார்! இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள்!” என்று வருந்திக் கொண்டு வெளியே சென்றான் ரவி.

“ஏம்மா! நாமெல்லாம் என்ன ஜாதி? சொல்லம்மா!” என்று ஜானகியின் கண்களை நோக்கினாள், இந்து.

ஜானகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “சீ! போடி!” என்று மறுத்து, சமையல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். இந்து விடுவதாய் இல்லை. அவளைப் பின் தொடர்ந்தாள்.

“ஏம்மா! ஜாதின்னா உங்களுக்கும் தெரியாதா?”

“போடீ மண்டு! இதை எல்லாம் நீ தெரிஞ்சிக்கப்படாது, இந்த வயசிலே!”

“அப்புறம் ஏம்மா டீச்சர் என்கிட்ட ஜாதி கேட்டாங்க?” என்று அம்மாவை மடக்கினாள், இந்து. ஜானகிக்கு எப்படி, என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. ரவி போய்விட்டானா என்று வெளியே பார்த்துக் கொண்டு, அங்கும் இங்கும் எதையோ தேடினாள். அடுக்கியுள்ள அலமாரிப் பாத்திரங்கள் அவள் கண்ணில் பட்டன. பளிச்சென்று அவளுக்கு உதய மானது!

“அதோ பார் அலமாரியில். அது என்ன சொல், இந்து?”

“அது எனக்கு தெரியுமே. எவர்சில்வர் தம்ளர்”

“இது என்னவென்று சொல் பார்க்கலாம்?”

“இதுவா, இது கிளாஸ் தம்ளர்”

“கறை படிஞ்சிருக்கே அதோ, அது என்ன?”

“பித்தளைத் தம்ளர், அம்மா!”

பின்பு ஜானகி குனிந்து குப்பைக் கூடையில் ஒன்றைத் தேடினாள். “இதுதான் உனக்கு நல்லா தெரியுமே!”

“எது? ஓ! அதுவா? ….அது கொட்டங்கச்சி” என்றாள் இந்துக்குட்டி.

ஜானகியின் முகம் பொங்கியெழும் முழு நிலவாகி, புன்னகையை மின்னியது! இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க?” என்றாள்.

“இந்துக்கண்ணு! ஜாதி நான்கு! நாமெல்லாம் எவர்சில்வர் மாதிரி நினைச்சுக்கோ……!”

“எவர்சில்வருன்னா, நாமெல்லாம் பளபளன்னு இருக்கோமா…….?”

“அதெல்லாம் இல்லே. எவர்சில்வருன்னா ஸ்டெயின்லஸ் ஸ்டீலுன்னு அர்த்தம். அதாவது கறை பிடிக்காத வெள்ளி!” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே.

“ஏம்மா! அப்போ கிளாஸ் தம்ளருன்னா யாரு? பித்தளைன்னா யாரு? கொட்டங்கச்சின்னா யாரு?” என்று ஆர்வமோடு கேட்டாள், இந்து.

“இதை எல்லாம் நானுனக்குச் சொல்ல மாட்டேன். நீயே தெரிஞ்சுக்குவே….! பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க! போ! போயி வெளியே விளையாடு!”

இந்து விளையாடப் போக வில்லை. முற்றத்தில் நின்று சிந்தித்தாள். மற்ற மூன்று தம்ளர்களும் யாருன்னு இப்பவே தெரிஞ்சாக வேணும்! யாரிடம் கேட்கலாம்?…… இருக்கவே இருக்கார் அப்பா. நேரே மாடிக்கு ஏறினாள்.

மாடி அறையில் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தான், ரவி.

“அப்பா!” என்று கூவி ஓடிப்போய், பேப்பரைப் பிய்த்துக் கொண்டு ரவியின் மடியில் பொத்தென விழுந்தாள், இந்துக்குட்டி. வந்த கோபத்தை விழுங்கிக் கொண்டான், ரவி.

“ஜாதி எத்தனைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?…. எனக்குத் தெரியும், அப்பா! அம்மா சொல்லிக் கொடுத்தாங்க!….”

“அடி சக்கை! இப்போ அம்மாவே உனக்கு அந்தப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாளா, வீட்டிலே! பலே ஜோர்! …. இந்து! ஜாதிப் பிரிவுகள் சொல்லி குலத், தாழ்த்தி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என்கிறார், பாரதியார்.

“அப்பா! எனக்கு பாரதியாரைத் தெரியாது. இதுதான் தெரியும். ஜாதி நான்கு!” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா? இப்போ!”

“கேள் இந்து! ஜாதி இரண்டு! அம்மா நாலுன்னு சொன்னது தப்பு! தப்பு! தப்பு!” என்று கனிவாகச் சொன்னான், ரவி.

“இல்லை! இல்லை! இல்லை! ஜாதி நான்கு! இரண்டுன்னு சொல்ற நீங்கதான் தப்பு! தப்பு! தப்பு!” நாலையும் நான் சொல்றேன்; கேளுங்க! முதல்லே எவர்சில்வர் தம்ளர்! ரெண்டாவது கிளாஸ் தம்ளர்! மூன்றாவது பித்தளை தம்ளர்! நாலாவது கொட்டாங்கச்சி! ஆக ஜாதி நாலு!” என்று நான்கு விரல்களைக் காட்டினாள்.

ரவி தன்னையும் அறியாது சிரித்து விட்டான். இந்துவை அணைத்துக் கொண்டு அவளது மாம்பழக் கன்னத்திலே இரண்டு முத்தமிட்டான். இந்து திணறிக் கொண்டே, “நாமெல்லாம் எவர்சில்வர்! அப்படின்னா, கறை பிடிக்காத வெள்ளி”.

“அடி மண்டு! ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்னு ஆண் ஜாதி! இன்னொன்னு பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான்! ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள்! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி!”

கால வெள்ளத்தில் கரை புரண்டு, மக்களை எல்லாம் அடித்துக் கொண்டு போய் மூழ்க்கிய, இந்த ஜாதிப் பெருக்கத்தை, இந்துவுக்கு புரிய வைப்பது எப்படி?

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா ஜாதின்னா என்ன?” என்று மறுபடியும் அவனைக் குடைந்தாள், இந்து.

ரவிக்கு கோபம் வந்து விட்டது. “இந்து! ஜாதி ஒரு தொத்துநோய்! இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய்! அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை! அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை! புனிதமான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா! அத்தனையும் ஒரே அபத்தம்”.

இந்துவுக்கு தொத்துநோய், புற்றுநோய், மருந்து இதெல்லாம் எதுவும் புரியவில்லை! “அப்பா! இதைச் சொல்லுங்க, யாரு கிளாஸ் தம்ளர்? யாரு பித்தளை? யாரு கொட்டங்கச்சி?”

“அசடு மாதிரி கேட்காதே! எனக்கு இதெல்லாம் பேசப் பிடிக்காது. நீயும் இந்த வயசிலே இதைத் தெரிஞ்சு கொள்ளக் கூடாது”.

இந்து மெதுவாகப் படியில் இறங்கினாள். அவள் மூளை வேலை செய்யத் தொடங்கியது! சட்டென ஒன்று நினைவில் வந்தது. மீண்டும் படியேறி ரவியிடம் வந்தாள்.

“அப்பா! எதிர்வீட்டு மாமா போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்து உங்களோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் தம்ளர்! ஏன்னா? அம்மா கிளாஸ் தம்ளரில்தான் அவருக்கு காஃபி கொடுத்தாங்க!” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடினாள், இந்து.

இரண்டு நாட்கள் கழிந்தன. பகல் பனிரண்டு மணி இருக்கும். மதிய உணவு சாப்பிட இந்து வீடு நோக்கி வரும்போது, வாசலில் ஜானகி கூடைக்காரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டி ருந்தாள். பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுந்த கூடைக்காரி, குடிக்கத் தண்ணீர் கேட்கவே, ஜானகி உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். தவ்வித் தவ்வி வந்த இந்து, சட்டென பொம்மைபோல் சிலையானாள்.

பித்தளைத் தம்ளரில் நீரைக் குடித்துக் கொண்டிருந்த கூடைக்காரியைப் பார்த்து, “ஓகோ! இவள்தான் பித்தளையா?” என்று மனதில் பதித்துக் கொண்டாள், இந்து.

சிறிது நாட்களாக வீட்டில் வேலைக்காரிப் பிரச்சனை இருந்து, ஜானகிக்குச் சிரமத்தைக் கொடுத்தது. வேலை பார்த்து வந்தவள், திடீரென்று விலகி நின்று விட்டாள். பைத்தியம் பிடித்ததுபோல், ஜானகி திணறியபோதுதான், எதிபாராத விதமாக பார்வதி வந்து சேர்ந்தாள், வேலைக்கு.

பார்வதி காக்கை நிறம்! பத்துப் பதினொரு வயதிருக்கும். மெலிந்த உடல்கட்டு. கிழிந்த பாவாடை. காற்றோட்டம் மிகுதியான மேல்சட்டை. எண்ணை தோயாத தலை மயிர். வறுமைக் கோலத்திலும் முகத்தில் தோன்றியது ஒரு லட்சணம்! ஜானகி பார்வதியை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.

முதல் நாள் துள்ளி குதித்து, ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு பம்பரமாய் வேலை செய்தாள், பார்வதி. வீட்டை துப்புரவாய்த் துடைத்தாள். பளிச்சென வாசலைக் கழுவினாள். முகம் தெரியும்படி பளபளவென பாத்திரங்களைத் தேய்த்தாள். சுத்தமாய்த் துணிகளை எல்லாம் துவைத்தாள். ஜானகிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

அன்று, அவள் டீ தயார் செய்து, பார்வதியை கனிவாகக் கூப்பிட்டாள்.

“வா! பார்வதி! வா! இதைத் தின்னு, டீயைக் குடி! அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு! நான் போய் டீ கொண்டு வர்ரேன்”.

பார்வதியின் முகம் மலர்ந்தது. தயங்கித் தயங்கி வந்து, வாசற் படியில் உட்கார்ந்தாள். ஈரக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு, அவக் அவக்கென்று ஒரு நொடியில் தின்று முடித்தாள். இட்லியும் சாம்பாரும் ருசியாய் இருந்தது. ஜானகி எவர்சில்வர் பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்தாள்.

“பார்வதி! அந்த கொட்டாங்கச்சியை எடு! அதிலே டீயை வாங்கிக்கோ! சூடாக இருக்கு”.

பூரித்துப் போனாள், பார்வதி. இதுபோல் யார் அவளை உபசரித்தார்கள்? டீயை ஊதி ஊதிக் குடித்தாள். சிரட்டையில் இருந்த டீ தேனாய் இனித்தது!

சிட்டுக் குருவிபோல் பாய்ந்து வந்த இந்து, பார்வதி சிரட்டையில் டீக் குடிப்பதைப் பார்த்து, கண்ணிமைக்காது நின்றாள். அவளது நாலாவது புதிரும் தீர்ந்தது!

“ஓ! இவள்தான் கொட்டாங்கச்சியா?” இந்துவின் மீன்விழிகள் இரண்டும் விரிந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்பை உடனே அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டுமே, என்று மாடிக்கு ஓடினாள்!

ரவி காலையில் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தான். மூச்சு இழைக்க ஏறிவந்த இந்து, “அப்பா! கொட்டாங்கச்சின்னா யாரு தெரியுமா?….பார்வதி!…புதுசா வேலைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காளே, அவள்தான்” என்றாள்.

“ஏய் இந்து! நீ என்ன சொல்றே?”

“இன்னைக்கு அம்மா பார்வதிக்கு சிரட்டையிலே டீ கொடுத்தாங்க……!”

கேட்டவுடன் சிலையாய் நின்றான், ரவி.

“என்ன கேவலம்? பார்வதிக்கு, சிரட்டையிலேயா டீயைக் கொடுத்தாள், உன் அம்மா?” ரவி கோபத்தோடு கீழே விரைந்தான். இந்துவும் புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.

ஜானகி சமையல் அறையில் தன் பின்னழகைக் காட்டிக் கொண்டு தோசை சுடுவதில் ஈடுபட்டிருந்தாள்.

“ஜானகி! என்ன கீழான புத்தி உனக்கு! பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே? இது அநாகரீகச் செயல்!” என்று கத்தினான், ரவி.

“பின்னே என்ன, வெள்ளித் தம்ளரிலா அவளுக்கு டீ தருவாங்க”, என்று வெடுக்கென வெடித்துப் பேசினாள், ஜானகி.

“இது தகாத செயல், ஜானகி! ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது!  நீ இப்படிச் செய்தது எனக்கு அசிங்கமாகத் தெரியுது!”

“டீ கொடுப்பதா தகாத செயல்? யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க?  எது அவமானம்? வயிறு நிறைய அன்னம் தருவதா? இது தர்மம்! இது சன்மானம்!” என்று விளக்கம் தந்தாள், ஜானகி.

“சுடச்சுட டீ தருவது மனிதாபிமானச் செயல்தான்! சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு! உன் சன்மானம் அவமானமாச்சு!”

“பார்வதியே சந்தோஷமாக சிரட்டையிலே குடிக்கும் போது, உங்களுக்கு ஏன் அது அநாகரீகமாகத்  தோணுது?  அவமானமாகத் தோணுது? அதுதான் எனக்குப் புரியலை!”

“ஜானகி! பசி கண்ணை அடைக்கும் என்று சொல்வாங்க. பார்வதி பசியில், நீ தந்த டீயைத் தான் கண்டாள்! சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை! என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை! நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது!”

“கொட்டாங்கச்சின்னா கேவலமா? நாமெல்லாம் இளநீர் குடிக்கிற தில்லையா?”

“ஜானகி! தேங்காய்லே நாம் இளநீர் குடிப்பது வேறு. நல்ல தம்ளர் இருக்க சிரட்டையிலே டீயைக் கொடுப்பது வேறு. சிரட்டை ஒரு கீழ்மையின் சின்னமாகத் தெரியுது, எனக்கு! நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க!”

“இதோ பாருங்க! இது என் ஏற்பாடு! சமையல் துறை என் ஆட்சிக்குக் கீழ்பட்டது! அதில் நீங்க தலையிட வேண்டாம்! தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்!” என்று வெடித்துவிட்டு வீட்டினுள்ளே மறைந்தாள், ஜானகி.

இந்த தர்ம யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்து மேலும் குழப்ப மடைந்தாள். நாலாவது புதிருக்குள் ஏதோ சிக்கல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அப்பாவும் அம்மாவும் ஏன் சிரட்டை வைத்துச் சண்டை போடுகிறார்கள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம்  நெருங்கவே, அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

அன்று ஆபீஸில் இந்த நிகழ்ச்சி, ரவியின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ‘ஏதோ ஒரு பாபத்தைச் செய்துவிட்டோம்’, என்ற குற்றம் அவனை வாட்டியது. இரவில் தூங்கிய போதுகூட அவனால் அதை மறக்க முடியவில்லை.

பொழுது விடிந்தது. தூங்கி எழும்போது அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரவி ஆபீஸ் போகத் தயாரானான்.

அப்போது ‘தடதடவென’ யாரோ மாடிப் படியில் ஏறி வரும் அரவம் கேட்டது. இந்துக்குட்டி மூச்சுவாங்க மாடி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“அப்பா! கீழே வந்து பாருங்கோ! மறுபடியும் அம்மா சிரட்டையிலே பார்வதிக்கு, டீ தர்ராங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ரவியின் உதிரம் கொதித்தது! அவனது இரத்த அழுத்தம் ஏறியது! நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா? ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா? பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது?….மாடிப் படிகளை எல்லாம் மின்னல் வேகத்தில் கடந்து, ரவி பின்புறத் தோட்டத்தை அடைந்தான்.

பார்வதி பல்லெல்லாம் தெரிய மகிழ்ந்து, சிரட்டையில் டீயை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்குள், ரவி பாய்ந்து சென்று சிரட்டையைக் கையிலிருந்து பிடுங்கி, தூர வீசினான். கீழே கொட்டிய டீயை மண்தரை உறிஞ்சிக் குடித்தது! ரவி சட்டென உள்ளே சென்றான்.

அப்பாவித்தனமாக ஓடிப்போய், பார்வதி கீழே விழுந்த சிரட்டையை மீண்டும் எடுத்து, மண்ணைத் தட்டி விட்டு, ஜானகியிடம் மறுபடியும் நீட்டினாள். ஆவி பறக்க இன்னமும் டீ பாத்திரத்தில் இருந்தது.

வெளியே வந்த ரவி. “பார்வதி! சிரட்டையிலே டீ குடிக்காதே!” என்று தடுத்தான். வெடுக்கென அதைப் பிடுங்கி, தரையிலே போட்டு பூட்ஸ் காலால் மிதித்து உடைத்தான். தான் எடுத்து வந்த எவர்சில்வர் தம்ளரிலே டீயை ஊற்றி பார்வதியின் கையில் கொடுத்தான், ரவி.

அதிர்ச்சி அடைந்த ஜானகி பிரமித்து நின்றாள். பார்வதி நடுங்கிக் கொண்டே டீயை குடித்தாள்.

“இதைக் கேட்டுக்கோ, ஜானகி! இனி பார்வதிக்கு நீ சிரட்டையிலே டீ கொடுத்தால், நானும் தினமும் காஃபியை சிரட்டையிலேதான் குடிப்பேன், தெரிகிறதா?” என்று காதில் அறைந்தால் போல் சொல்லிவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான், ரவி.

முதன்முதலாக ரவியின் சொற்கள் அவள் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தன! நின்று சிந்தித்தாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது! புள்ளினம் ஆர்த்தன! பார்வதிக்கு டீ தரும் நேரமும் வந்தது! ஒரு கிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி! … இதைப் பார்த்த இந்து, ஓடிப்போய் ரவியிடம் சொல்லவில்லை!

“இந்து! பார்வதி இப்போ பார்வர்டு கிளாஸ், தெரியுமா?” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே!

இந்துக்குட்டிக்கு இந்தப் புதிர் புரியவில்லை!

*********************

(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

முக்கோணக் கிளிகள் !

triple-parrots

சி. ஜெயபாரதன், கனடா

[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து இன்னொரு சிக்கல் பிறக்கிறது!]

காயிலே இனிப்ப தென்ன! கனியானால் புளிப்ப தென்ன!

தட்டிய கதவைத் திறந்த புனிதா அதிர்ச்சி அடைந்து கண்ணிமை கொட்டாமல் சிலையாய் நின்றாள். வாசற் படியில் மகள் சித்ராவுடன் இணையாக நின்ற கவர்ச்சியான வாலிபனைக் கண்டதும், அவள் நெஞ்சில் குப்பென ஓர் ஊற்று பொங்கி எழுந்தது! அவன் கண்ணொளி பட்டதும் வெற்றிடமாய் சப்பிக் கிடந்த அவள் இதயம் உப்பி விரிந்தது!

“அம்மா இவர்தான் மிஸ்டர் குருநாதன்! புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள எங்க மாத்ஸ் லெக்சரர். நமது மாடி வீட்டுக் காலி அறையில் தங்க விரும்புகிறார். முழுப் பெயர் சிவ குருநாதன், எங்க குரு!”  உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சமாளித்துக் கொண்டு பேசினாள் புனிதா, “நான் கொடுத்த விளம்பரத்தில் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று அழுத்தமாகச் சொல்லி யிருக்கேனே”.

“நான்தான் அவரை அழைத்து வந்தேன், அம்மா. விளம்பரத்தைப் படித்த பிறகு அவருக்கும் இஷ்ட மில்லைதான்”

“மாடி அறையில் ஆடவர் குடி வருவதை நான் விரும்பவில்லை. சித்ரா! உள்ளே வா! சொல்றேன்” சித்ரா உள்ளே சென்றதும் கதவை மூடிப் புனிதா ஏதோ மராட்டிய மொழியில் அவளுடன் பேசுவது சிவாவின் காதில் மெதுவாக விழுந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதவு திறந்தது. சித்ரா மட்டும் தொங்கிய முகத்துடன் வெளியே வந்தாள்.

“வெரி ஸாரி ஸார்! எங்கம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்”

“நான் மராட்டிக்காரன் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்”

“அப்படி ஒன்றும் இல்லை”

“ஒரு வருடம் தராவிட்டாலும், ஆறு மாதமாவது தங்கலாமா”

“அம்மா ஆறு மாதத்துக்கு அவர் தங்கட்டுமே” என்று தாயிடம் கனிந்து கேட்டாள் சித்ரா.

“ஒரு வருடத்துக்கு குறைஞ்சி வாடகைக்கு விடுவதாய் இல்லை. அதுவும் ஆண்களுக்கு கொடுப்பதாய் இல்லை” என்று உள்ளே இருந்து புனிதாவின் குரல் வந்தது.

“மூன்று மாதங்களுக்குத் தங்க விடுங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்”

“இது பெண்களுக்குத் தரப்படும் ரூம்! ஆண்களை வைப்பதாக இல்லை” என்று அழுத்தமாகப் பேசினாள், புனிதா.

“ஒரு மாதமாவது கொடுங்களேன். அதற்குள் வேறு ஒரு இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உங்களுக்கு ஓய்வு நேரத்தில் என்னால் முடிந்த வேலையைச் செய்து கொடுக்கிறேன்” என்று சிவா அவர்களைப் பரிதாபமாக நோக்கினான். புனிதாவிடமிருந்து உடனே பதில் வராமல் சற்று அமைதி நிலவியது.

“எங்களுக்கு ஆடவர் உதவி எதுவும் தேவையில்லை!”

“அம்மா நான் டியூஷனுக்கு வெளியே போக வேண்டியதில்லை, ஸார் எனக்கு கணக்கு, பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்தால்”

“நான் பணம் வாங்காமலே சித்ராவுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்”

“அம்மா நமக்கு டியூஷன் பணம் மிச்சம், குரு நம்ம மாடியிலே வாடகைக்கு வந்தால்”

“சித்ரா! உனக்கு யாரும் இலவசமா சொல்லித் தர வேண்டாம்” … போட்டாள் ஒரு போடு, புனிதா.

“அப்போ சரி! குருவுக்கு டியூஷன் பணத்தைக் கொடுத்திடலாம். ஆனால் ஒரு மாதத்திலே நான் என்ன கணக்கைக் கற்றுக் கொள்வது? அல்ஜீப்ராவுக்கே மூணு மாசம் ஆகும்! அப்புறம் ஜியாமெட்ரி இருக்கு. அனலிடிகல் ஜியாமெட்ரி இருக்கு. அப்புறம் பிசிக்ஸ் படிக்க வேணும்! ஒரு வருசத்துக்கும் குறைஞ்சா அரை குறையாகத்தான் என் டியூஷன் முடியும்”

“நான் அதுக்கு இப்போ பதில் தர முடியாது. கல்லூரி மீட்டிங் போக நேரமாச்சு! யோசித்து இரண்டு நாளிலே சொல்றேன்” என்று கூறி புனிதா உள்ளே போய் விட்டாள்.

சித்ரா சிவாவைக் கண்டு புன்னகை புரிந்தாள். அழகிய அவளது மீன் விழிகள் இன்னும் விரிந்தன.

கதவுக்குப் பின்னால் மறைந்த புனிதாவின் பேச்சில் காரம் இருந்தாலும், அவளது குரல் இனிமை சிவாவைப் பாகாய் உருக்கியது.

“சித்ரா! நீ சாமர்த்தியக்காரி. உன் அம்மாவை மடக்கிப் போட்டு விட்டாயே. நன்றி சித்ரா நன்றி! நான் வருகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான்.

“குருவே! ஹோட்டல் அறையில் தூங்கி விழாமல், சற்று தியானம் செய்யுங்க, மாடி அறை கிடைக்க வேணும் என்று. அம்மா மனதை மாத்துவது மிகக் கஷ்டம். இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரம்! எண்ணிக் கொண்டே இருங்க” என்று சிரித்துக் கொண்டு கதவைச் சாத்தினாள், சித்ரா.

ஞான ஒளி வீசுதடி, மோன விழிச் சுடர்முகத்தில்!

கோயமுத்தூர் எஞ்சனியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாண்டு சேர்ந்த சித்ரா, மாத்ஸ் லெக்சரர் சிவநாதனை வகுப்பில் அன்று காலையில்தான் சந்தித்தாள். அப்போது சிவாவுக்கு தங்க அறை இல்லாதது, தன் வீட்டு மாடி காலியாக இருப்பது இரண்டையும் ஒன்றாய் இணைக்க ஒரு கணிதச் சமன்பாடு போட்டுப் பார்த்தாள். அன்று கணக்கு வகுப்பைத் தொடங்கிய சிவநாதன் பள்ளியில் போதித்த பழைய ஜியாமெட்ரியில் முக்கோணத்தின் பண்புகளை மாணவருக்கு நினைவூட்டினான். பித்த கோரஸ் தேற்றத்தை விளக்க வரும் போது அவன் கூறியதை சித்ரா மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். முக்கோணத்தில் ஒரு கோணம்தான் நேர்கோணமாக இருக்க முடியும்! கணக்கில் அவள் ஒன்றும் பலவீனமானவள் அல்ல! கடைசி நேரத்தில் எப்படியாவது உருட்டிப் புரட்டி அறுபது மார்க்கு வாங்கி விடுவாள்! எப்படியோ படித்து, எப்படியோ தேர்ச்சி பெற்று, எப்படியோ இடம் வாங்கி, அவள் இப்போது எஞ்சனியரிங் கல்லூரி முதலாண்டு மாணவி என்ற பெருமிதத்தில் இருந்தாள்!

பதினெட்டு வயது பொங்கித் ததும்பும் சித்ரா ஊர்வசியா அல்லது மேனகாவா? இரண்டில் ஒருத்தி. முதல் நாளே சிவநாதனின் நடை, உடை, பாவனை அனைத்தும் சித்ராவை மயக்கி விட்டன! சித்ராவுக்குப் பேசும் விழிகள்! அவள் தாய் புனிதாவுக்குப் பேசா விழிகள்! பேசும் விழிகளை விடப் பேசாத விழிகளே சிவாவுக்குக் காவியங்களைக் கூறின! புனிதாவையும், சித்ராவையும் அருகே நிற்க வைத்துப் பார்த்தால் தாய், மகள் மாதிரி தெரியாது. இருவரையும் அக்காள், தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்!

சித்ராவின் தாய் புனிதவதி நாற்பது வயதைத் தாண்டி விட்டவள்! இருபது வயது வனிதா மணிபோல் புனிதா இருந்தாள்! சித்ராவை விட எடுப்பாகவும், உடல் கட்டு குலையாமல் செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். அவளது கணவர் காப்டன் ஆனந்த் குல்கர்னி இறந்து பத்தாண்டுகள் ஓடி விட்டன! ராணுவ அதிகாரியாக ஜம்மு காஷ்மீரில் சில வருடங்கள் பணி புரிந்தவர். கடைசியில் காஷ்மீர் மூர்க்கர்களின் தாக்குதலில் உயிரைப் பலி கொடுத்தவர். கோயமுத்தூர் ராணுப் பயிற்சி முகாமில் மூன்று வருடங்கள் ஆனந்த் குல்கர்னி அதிபதியாக இருந்தவர். கணவனை இழந்த புனிதா இப்போது தனிமையில் மகளுடன் வாழும் தனிமரம்!

பூனேயில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்த அவர்கள் கோவையில் இருபது ஆண்டுகளாக இருந்ததால் மூவருக்கும் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். அதிலும் சித்ரா கோவையிலே பிறந்தவள். வீட்டில் மராட்டிய மொழி பேசினாலும் அவளுக்குத் தமிழ்தான் நன்கு எழுதப் பேசத் தெரியும். புனிதா எம்.ஏ. பட்டதாரி. நாகரீக மராட்டியக் குடும்பத்திலே பிறந்த புனிதா, கணவனை இழந்த பின்னும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள்! கூந்தலில் பூ வைத்துக் கொண்டாள்! வண்ணச் சேலைகளைக் கட்டிக் கெண்டாள்! கணவனை இழந்தவள் என்று புனிதா வெளியில் விளம்பரம் செய்து கொள்வதில்லை! கோவை நிர்மலா பெண்டிர் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக புனிதா வேலை பார்த்து வந்தாள். கல்லூரியில் பாதிப்பகல் கழிந்து விடுவதால், அவளைத் தனிமை கொடுமைப் படுத்துவது மீதிப் பாதி இரவு நேரம்தான்!

சிவநாதன் நாற்பது வயதை எட்டியவன்! தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால், தனிமையில் அவன் வயதும் ஏறிக் கொண்டே போனது! தன் வயது ஏறுவதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை! ஆனால் மணமாகாமல் தங்கையின் வயது ஏறுவதை அவனால் தாங்க முடிய வில்லை! மதுரைக் கல்லூரியில் பற்றாத குறைந்த சம்பளத்தில் பத்தாண்டுகள் கணக்குச் சொல்லிக் கொடுத்தான். அந்த வருடம்தான் கணக்கு லெக்சரர் வேலை கிடைத்து, கூடிய சம்பளத்தில் கோவை எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனும் தங்கையும் இரண்டே நபர்கள். தகப்பனார் காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து இரண்டு வருடம் பெல்லாரி சிறையில் கிடந்தவர். இப்போது தியாகிகள் பென்ஷசன் பெற்று ஓய்வில் இருக்கிறார்! தாய் இருக்கிறாள். சிவாதான் குடும்ப கோபுரத்தைத் தாங்கும் தூண்! பணம் சேர்த்து தங்கையின் கல்யாணத்தை முடித்து வைக்க வேண்டியது அவன் கடமை! ஹோட்டல் அறையில் தங்கி தினமும் அவனது சேமிப்புப் பணம் கரைந்து போவதை எண்ணி சிவநாதன் கவலை அடைந்தான்! குறைந்த வாடகையில் அறை எடுத்து எப்போது ஹோட்டலை விட்டு ஓடுவது என்று சிவா அலை மோதிக் கொண்டிருந்தான். வசதியாக சித்ரா, அவனை அன்று மாலை தன் அம்மாவிடம் இழுத்துச் சென்றாள்.

இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

“கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

“உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

“ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

“உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

“எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

“சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

“நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதை
வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்! உள்ளம் வேண்டியதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்கலாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

“காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

“ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

“பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

“ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
“உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”
அப்போது புனிதாவின் எழிற் கண்கள் வீசிய ஒளிவீச்சு சிவாவின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சின! அந்த மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் விழிப்படைய சில கணங்கள் எடுத்தன!

சப்பாத்தி, குருமா, பருப்புக் குழம்பு, அப்பளத்துடன் மராட்டிய முறையில் தயாரித்த உணவு சிவாவுக்கு அமுதமாய் இருந்தது! அதை விட அவளது கனிவுக்குரல் இனித்தது! இனிதாக அவள் பேசுவதைத் திரும்பத் திரும்ப கேட்க வேணும் போல அவனுக்கு ஆசை எழுந்தது. அத்தனை அன்புடன் அவனை யாரும் இதுவரை உபசரித்ததில்லை.

அன்றைய தினத்தில் நடந்த சிவாவின் முதல் விருந்து புது விதமான உணர்ச்சிகளை மூவரிடமும் எழுப்பியது! சிவாவை வீட்டுக்கு வந்த மருமகனாக எண்ணிச் சித்ரா கற்பனைக் கனவில் மிதந்தாள்! பத்தாண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புருசனுக்கு உணவு பரிமாறிய நினைவு புனிதாவுக்கு வந்தது! கண்ணான கணவனுக்குத் தனது கையால் உணவு பரிமாறுவது போல் எண்ணிப் புனிதா மனதில் இன்புற்றாள்! சிவாவுக்கு வயிறு மட்டும் நிறைந்தது. ஆனால் இதயம் காலியாகிப் பசி உண்டானது! அவனது உள்ளம் புனிதா ஒருத்தியை மையமாக வைத்து அவளையே சுற்றிச் சுற்றி வந்தது!

சாப்பிட்டதும் நன்றி கூற வந்த சிவா, தான் இரண்டு மாத வாடகை தர முடியாமல் போனதற்குப் புனிதாவிடம் வருத்தம் தெரிவித்தான். அவன் கையில் பணம் சேர்ந்தாலும், சேர்ந்த பணத்தை விட செலவுப் பணம் அதிகமானது! தகப்பனாரின் கடிதம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்துவிடும். மாதம் ஒரு முறை மொத்தமாக அனுப்பினாலும், அவருக்குத் தொகை பற்றவில்லை. தங்கை திருமணச் சீட்டுக்குச் செலுத்தும் பணம்! மின்சார வாரியத்துக்குப் பணம்! அரிசி, பருப்பு காய்கறிகளுக்குப் பணம்! பால் வாங்க தனியாகப் பணம்! சிவா கல்லூரிக்குக் கடன் வாங்கிப் படித்ததுக்கு மாதா மாதம் பணம் அடைப்பு! அதனால் பெரிய பணமுடை உண்டாகிக் கடைசி இரண்டு மாத வாடகை புனிதாவுக்குத் தர முடியாமல் போனது!

தங்கையின் திருமணத்துக்குச் சீட்டுப் பணம் செலுத்துவது, தன் படிப்புக் கடனை அடைப்பது, நோய்வாய்ப் பட்ட தந்தையின் மருந்துக்குத் தருவது, அத்துடன் வீட்டுச் செலவுக்கு அனுப்புவது இவைகளுக்கே தன் வருவாய் பற்றாமல் போவதைப் புனிதாவிடம் இப்போது சொல்லி விடுவதுதான் நல்லது என்று நினைத்து தனது பண முடையை விபரமாகக் கூறினான். கண்ணிமைகள் கொட்டாது கூர்ந்து கேட்ட புனிதாவுக்கு என்ன சொல்வ தென்றே தெரியாமல் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

தன்னால் வாடகை தர முடியாமல் போவதால், ஆறு மாதத் தவணைக்கும் முன்பாகவே தான் அறையைக் காலி செய்வதாய் வருத்தமுடன் கூறினான் சிவா!

“என் டியூஷன் என்ன ஆவது? பாதியிலே விட்டு விட்டுப் போவது சரியா” என்று அலறினாள் சித்ரா. புனிதா பெருந்தன்மையுடன் பேசினாள்.

“மிஸ்டர் சிவா! திடீரென்று எங்கும் போக வேண்டாம்! பணம் மிஞ்சும் போது கொடுக்கலாம். போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரியிலிருந்து வந்ததும் மாலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கனிவாகப் பேசி சிவாவை அனுப்பி வைத்தாள். சித்ராவின் முகத்தில் முழு நிலவு தென்பட்டது. புனிதாவுக்கு நன்றி கூறி அவள் முகத்தை நெஞ்சில் படமெடுத்துக் கொண்டு, பெரு மூச்சுடன் மாடிக்குச் சென்றான், சிவா.

தூண்டிற் புழுவினைப் போல், எரியும் சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எந்தன் நெஞ்சம் துடித்தடி!

அன்று மூன்று பேருக்கும் தூக்கம் இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒருவித ஏக்கம்! சிவாவுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையே என்னும் குற்றமுள்ள நெஞ்சு! புனிதாவின் அன்ன மிட்ட கைகள், புன்னகை தழுவிய முகம், கனிவு பொங்கும் இனிய குரல் அனைத்தும் கனவாகப் போகுமா என்ற பயம்! படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்! இதயத்தைக் கவர்ந்த ஒருத்தியை விட்டு விட்டு அவனால் போக முடியுமா? வாடகை தர முடியாத சிவாவை இன்னும் மாடி அறையில் தங்க அனுமதித்த, புனிதாவுக்கு சிவா என்ன கைம்மாறு செய்யப் போகிறான்?

புனிதாவுக்கும் அன்று உறக்கம் வரவில்லை. பத்தாண்டுகளாக கணவன் காஷ்மீரில் மரணமடைந்த பின் ஆடவர் வாடையே இல்லாமல் தனியாகக் காலம் கழித்தவள் புனிதா. இப்போது பாலை வனத்தில் கண்ட பசுஞ் சோலையாக சிவா அவளது தலை வாசலில் கால் வைத்தான். தங்கையின் திருமணத்துக்கு அவன் பணம் சேர்ப்பதும், குடும்பமே கண்ணாக அவன் உழைப்பதும் புனிதாவுக்கு அவன் மேல் பற்றையும், கவர்ச்சியையும் உண்டாக்கியது. அவன் வாடகை தராமல் பணம் தாமதமாகி விட்டாலும் பரவாயில்லை. அறையை விட்டு அவன் போய் விட்டால், அவளது நெஞ்சில் ஒரு பெரும் குழி உண்டாகி விடும் என்று அஞ்சினாள். கல்லூரியிலிருந்து மாலையில் சிவா வீடு திரும்பி மாடியில் நடக்கும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத்தில் ஏதோ ஒரு துடிப்பும், அதைத் தொடர்ந்து ஒரு கனலும் எழுந்தது. கல்லூரியில் அவள் பீ.ஏ. வகுப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகம் “அண்டணி & கியோபாட்ரா” நடத்தும் போது, சிவா அண்டணியாகவும் தான் கிளியோபாத்ராவாகவும் எண்ணிக் கற்பனை செய்து கொள்வாள்! அவனையே இராப்பகலாக நினைக்கும் அவள் மனம் அவன் போய் விட்டால் என்ன பாடு படும்?

சித்ராவும் தூங்க வில்லை! முந்திய நாள் அவனுக்குத் தெரியாமல் அறையில் எடுத்த அவன் படத்தை பார்த்துப் படுக்கையில் ரசித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பில் சந்தித்த முதல் நாளே, சித்ரா மயங்கி, தன் இதயத்தை சிவாவிடம் பறி கொடுத்தாள்! அப்புறம் சாமர்த்தியமாகத் தன் வீட்டு மாடி அறையில் அவனை அடைத்து விட ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கணிதப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துத் தினமும் அவனைத் தரிசிக்க, சித்ரா வழி வகுத்து அதிலும் அவளுக்குப் பூரண வெற்றி!

அன்று சனிக்கிழமை! முகத்தைக் கழுவி விட்டுத் துண்டில் மூடித் துடைத்து கொண்டு கண்ணாடி முன் நின்ற சிவா தன் தோள் மீது மெத்தென்ற ஒரு கரம் பட்டதும் திடுக்கிட்டான்! கவர்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பின்னால் நின்றவள் சித்ரா! சிவாவின் இதயம் ஆடியது! மெதுவாக அவளது கைகளை விலக்கினான்! சித்ரா மறுபடியும் அவனது தோளில் கையை வைத்தாள்! சிவநாதனுக்குப் கோபம் வந்தது!

“சித்ரா! இது தப்பு! நீ என்னைத் தொடுவது தகாத செயல்” என்று அலறினான்.

“நீங்க என்ன கீழ் ஜாதியா? இதிலே என்ன தப்பு இருக்கு?”

“நீ வயசுப் பெண். என்னை நீ தொடக் கூடாது! நான் எந்த ஜாதியா இருந்தா என்ன? உங்க அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? என்னை வெளியே துரத்திடுவாங்க”

“துரத்த மாட்டாங்க! என்ன ஆகும் தெரியுமா? எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்! எங்க அம்மாவுக்கு அவ்வளவு பயமா?”

“இப்போ உன்னைக் கண்டால்தான் எனக்குப் பயமாயிருக்கு! பிளீஸ் கையை எடு”

“நான் உங்களைத் தொடுவது தப்புன்னு என் கையை உதறித் தள்ளினால் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க நான் அம்மாவிடம் புகார் செய்வேன்! அப்போ என்ன செய்வீங்க?” என்று அவனை மடக்கினாள். சிவாவுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது!

“அப்படி உன் அம்மாவிடம் நீ பொய் சொல்வாயா? எதற்காக இங்கு வந்தாய்? இன்று டியூஷன் கூட இல்லை”

“சினிமாவுக்குக் கிளம்பினேன். உங்களுடன் போகலாம் என்று அழைக்கத்தான் வந்தேன்”.

“நான் சினிமாவுக்குப் போவதில்லை. அப்படிப் போனாலும், உன்னுடன் போவதாக இல்லை”

“இப்போ நான் தீண்டத் தகாதவளாக ஆயிவிட்டேனா? நான் பணம் தருகிறேன், சினிமாவுக்கு”

“சித்ரா, உன் பணத்தில் நான் சினிமா பார்க்க விரும்பவில்லை”

“நீங்க இந்தப் பணத்தை எனக்குத் திரும்பித் தர வேண்டாம்”

“நான் உன்னுடைய கிளாஸ் லெக்சரர். வாலிபப் பெண் உன்னுடன் நான் படம் பார்க்கப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

“பாய் பிரண்டு என்னு நினைப்பாங்க! வீட்டிலே நீங்க லெக்சரர் இல்லே! அந்தப் பட்டமெல்லாம் கல்லூரியிலே!”

“நான் உனது பாய் பிரண்டு இல்லே! சினிமா தியேட்டரில் நம்ம கல்லூரிப் பசங்கள் வருவாங்க”

“நம்ம இரண்டு பேரையும் ஒன்னாக் காட்டுறதுக்குத்தானே படத்துக்குப் போலாம் என்கிறேன்”

“அந்தக் காட்சியைக் காண எனக்கே பிடிக்கலே”

“வரப் போறீங்களா? இல்லையா? எங்க வீட்டு விருந்தாளி நீங்க! தெருவிலே போற அன்னியன் இல்லே!” சித்ராவின் குரலில் அதிகாரம் தொனித்தது.

“உன்னோடு சினிமாவுக்கு அவர் வர மாட்டார்! நீ மட்டும் போ!” என்ற குரல் கேட்டு சிவா நடுங்கினான்.

கண்களில் கனல் பறக்க மாடிக்கு வந்த புனிதாவைக் கண்டு சிவாவுக்குத் தலை சுற்றியது. சித்ரா ஒன்றும் பேசாமல் தடதட வெனப் படியில் இறங்கி ஓடினாள். சிவாவின் கண்கள் தரையை நோக்கப் பேசினான்.

“மன்னிக்க வேணும் மேடம். உங்களிடம் என்ன சொல்றதின்னு எனக்குத் தெரியலே!”

“எல்லா வாதங்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் தோட்டத்தில் இருந்தது சித்ராவுக்குத் தெரியாது. நீங்க வருத்தப் பட இதிலே ஒண்ணும் இல்லே!” புனிதா நாற்காலியில் பெரு மூச்சுடன் அமர்ந்தாள்.

“நான்தான் சித்ராவுக்காக வருத்தப் படுறேன். என் கணவர் காஷ்மீர் கலவரத்தில் இறந்த போது, சித்ராவுக்கு வயது ஆறு! போன அப்பா திரும்பாமல் போகவே அவள் மனதில் எழுந்த துடிப்பு இன்னும் இருக்கு! தந்தையை இழந்து போனதால் அவளுக்கு ஆடவர் மீது வாஞ்சை அதிகம்”

“நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடினேன்!” என்றான் சிவா.

நீயே எனக்கு என்றும் நிகரானவள்!

சித்ரா தனியாகச் சினிமாவுக்குப் போய் விட்டாள். சிறிது நேரம் மௌனமாய் இருந்து, புனிதா சிவாவை சாப்பிடக் கீழே அழைத்துச் சென்றாள். சாப்பிட்டுக் கொண்டே புனிதா பேசினாள்.

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க. எங்கே பிறந்தது, எங்கே படித்தது, பெற்றோர்கள் என்ன செய்கிறாங்க இதெல்லாம் தெரிஞ்சு கொள்ள விருப்பம்”

“பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”

“உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”

“அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசைதான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”

“உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”

“மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸ¤க்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”

“கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”

“ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.

“பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.

சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.

“தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.

“நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்ததே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா

“தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”

“எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”

சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.

வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!

“ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” … சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.

“என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

“ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.

“உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.

“மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.

“அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!

“நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”

“இல்லை. நீங்க மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக்கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.

அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.

“எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

“மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.

“சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”

“அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”

“அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”

“சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”

“சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”

“எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”

“உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”

“ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.

பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

புனிதா சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.

“உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”

“வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?

“என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”

“பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.

“என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”

“நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”

“இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.

“நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

“தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.

“இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னாள்.

வண்ண மயில் நீ எனக்கு! வான மழை நான் உனக்கு!

சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ரா குல்கர்னியும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தி யையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டும் அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா தங்கையின் கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார்.  தனிமையில் தவிக்கும் அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

நினைப்ப தெல்லாம் நடப்ப தில்லை! நடப்ப தெல்லாம் நினைப்ப தில்லை!

அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

“இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கட மானது.

“நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

“நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

“சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

“போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

“மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய்.  அறுபது வயது முதியவனாய் நான் முடங்கும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் தாம்பத்ய உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

“சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

“ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம், வயதுப்  பொருத்தம் இல்லவே இல்லை!”

“பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் சமமாய் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவரே”.

“உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

“பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

“நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சி யில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

“யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

“இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

“யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

“இல்லை.  அது உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

“சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க எதிர்கால மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு மாமியா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கிய வதியா உங்க வருங்கால மனைவி?”

“ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

“என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா ? ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு. அவைபோல் இந்தக் கல்யாணமும் நடக்காது”

“எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

“நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

“பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

“பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்!  என் அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? விதவை என்று நான் சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்!  உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்!  அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

“தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

“தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

“நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்க வில்லை!”

“தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

“தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

“அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்!  தாயிடம் சண்டை போட்டு நீங்க இருக்க இடம் பிடித்தவளே நான்தான்.   என் தாய், என்னிடமிருந்து உங்களைக் களவாடி விட்டாள்!”

“இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

“ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு என் தாய், முன்வந்து பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

“பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்க நான் தயாராக இருந்தேன்”

“பாருங்க, நான் உங்கள் கலியாணம் நடக்காமல் முன்னின்று தடுப்பேன்,”  என்று தடாலென்று  அருகிலிருந்த கண்ணாடி ஜக்கை தூக்கி உடைத்தாள் சித்ரா !

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

“நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

“அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நாம் நிம்மதியா வாழ முடியாது”

“சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

“அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

“என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!  சிவாவின் கண்களில் தீப் பறந்தது !

“என்னை மாடிக்கு அழைத்து வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த முனைந்தார்.”

சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்தது.

தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடிய வில்லை.

“மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் தீராப் பகைமை உண்டாகி விட்டது!  இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் என் பொருட்டு சண்டை யிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக நான் முடிவு செய்து விட்டேன்”

“நீங்க எதற்காக வேறிடம் பார்க்கணும்? எங்கும் போக வேண்டாம். நேற்று மாடியில் என்ன பேச்சுக்கள் நடந்தன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். உங்களை இழந்து என்னால் இனி வாழ முடியாது. மன்னிக்க வேணும் என்னை. உங்களுக்கும் சித்ராவுக்கும் தெரியாமல், மாடி உரையாடல்களை எல்லாம், கீழே என் அறைப் டேப் ரெக்காடரில் பதிவு செய்து வந்தேன். நான் அப்படிச் செய்தது தப்புதான். முன்னும் பின்னும் தெரியாத ஆண் லெக்சரரை சித்ரா வாடகை அறைக்கு அழைத்து வந்தது, முதல் காரணம். மாடி அறையில் ஒரு வாலிபர் வசிக்க, வயசுப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டு வருவது அடுத்த காரணம். கல்லூரியில் சித்ராவுக்கு லெக்சரராக இருந்து, வீட்டில் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது மூன்றாவது காரணம். பஞ்சையும், நெருப்பையும் எப்படி நாள் முழுவதும் கண்காணித்து வருவது? நாம் மூவரும் கல்லூரிக்குத் தினம் போய் வந்தாலும், மூவரும் வீடு திரும்பும் நேரம் வேறாவது அடுத்த காரணம். முற்றிலும் அன்னியன் நீங்கள்! சித்ரா பருவ மொட்டு விடும் புதிய பறவை!”

“மிஸ் புனிதா! தாயான நீங்க டேப் ரெக்காடரில் பதிவு செய்ததைத் தப்பென்று நான் சொல்ல மாட்டேன்”

“போன ஒரு சமயம் நடந்த சினிமா சண்டையில் உங்க உத்தம குணத்தைக் கண்டேன். நேற்றைய உரையாடல்களைக் கேட்ட பின்பு, பெண்களிடம் ஒழுக்கமுள்ள இப்படிப்பட்ட ஓர் ஆடவனைக் கணவனாக ஏற்கப் போகிறோம் எனப் பேரானந்தம் அடைந்தேன். நான் பண்ணியது சரியோ, தப்போ உண்மையில் இந்த டேப் ரெக்காடர்தான் ஓர் உத்தமனைக் கண்டு பிடித்துத் தந்தது. இல்லா விட்டால் சித்ரா குற்றச் சாட்டை நம்பி, ஒரு அப்பாவி மனிதனை வீட்டை விட்டுத் துரத்தி இருப்பேன்!”

“மிஸ் புனிதா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?”

“மாடியில் நீங்க பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டுவது, கீழே என் காதில் விழுந்தது. நீங்க பயப்படாமல் நிம்மதியாக மாடியில் தங்கலாம்…… முதலில் உட்கார்ந்து இந்த காபியைக் குடியுங்க, இட்லி தயாராகிறது” என்று குழைந்தாள், புனிதா. அப்போது உள்ளே நுழைந்தாள் சித்ரா.

“அம்மா! வீட்டை விட்டு இவரை நான் போகச் சொல்லும் போது, நீங்க காபி கொடுத்து உபசரிப்பதா?”

“சித்ரா! வாயை மூடு! சிவா மாடியைக் காலி செய்ய வேண்டியதில்லை. அவர் இந்த வீட்டில்தான் நிரந்தரமாகத் தங்கப் போகிறார்”

“சிவா சொன்ன தெல்லாம் உண்மைதானா? அம்மா வாலிபக் குமரி நான் வீட்டில் இருக்கும் போது, இந்த வயசிலே இன்னொரு விவாகம் நீங்க செய்யப் போறீங்களா?”

“ஆம் சித்ரா. நாற்பது வயதில் நான் மூப்பு அடையவில்லை. நான் இரண்டாம் விவாகம் செய்யப் போறது உண்மை”

“அம்மா! அவரை நான் திருமணம் செய்ய விரும்புறேன். நீங்க எனக்குப் போட்டியாக வருவது சரியா! கல்லூரியில் அவரை முதலில் சந்தித்த போதே நான் செய்த முடிவு அது”

“சித்ரா! நீ ஒரு மராட்டிய வாலிபனை மணம் புரிவதையே நான் விரும்புறேன். நீ சின்னஞ் சிறியவள். உன் வயதை விட சிவாவின் வயசு இரண்டு மடங்கு! வயதுப் பொருத்தம் இல்லாததால் மனப் பொருத்தம் ஏற்படாது. உன் வயசுக்குத் தகுந்த வாலிபனை நீ மணம் புரிவதுதான் ஏற்றது”.

“வீட்டில் நான் இருக்கும் போது, நீங்க இவருடன் வாழ விரும்புவது சரியா? இவரை மணம் புரியக் கனவு கண்ட பின் அப்பா இடத்தில் அமர்த்திப் பார்க்க என்னால் முடிய வில்லை!”

“சித்ரா! உன் மனப் போராட்டம் எனக்குப் புரியுது. உனக்குத் திருமணம் ஆகும் நேரம் இன்னும் வரவில்லை. அதுவரை வாழாமல் நான் தனிமையில் சாக வேண்டுமா? வாழ விரும்புறேன் நான். உனது திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ சிவாவை மறந்து விடு”

“உங்க லாஜிக் எனக்குப் புரியவில்லை. உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க என்னால் முடியாது” என்று கூறி அழுகையுடன் வெளியே போய் விட்டாள், சித்ரா.

முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாய் இருக்க முடியும்!

சற்று மௌனமாக இருந்த பிறகு புனிதா சிவாவிடம் பேச ஆரம்பித்தாள்.

“சித்ராவை உடன்படச் செய்வது சிரமான காரியம்தான். அதைக் கையாளுவது என் பொறுப்பு. உங்க அப்பா, அம்மாவை எப்படிக் கையாளப் போறீங்க” என்று புனிதா கேட்டாள். சிவா பையிலிருந்து தன் தந்தை கடிதத்தையும், தான் அதற்கு எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் படிக்க அவளிடம் கொடுத்தான்.

சிரஞ்சீவிச் செல்வன் சிவகுருநாதனுக்கு,

தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இப்படி ஒரு புரட்சி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மராட்டியம்மா பண முடிப்பை நமக்குத் தந்ததே ஒரு பெரு வெகுமதியைத் தனக்கு நாடித்தான் என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நாற்பது வயதுவரைப் பொறுத்து, நாங்கள் கொண்டு வந்த நல்ல பெண்களை எல்லாம் உதறித் தள்ளி, போயும் போயும் வாலிப பெண்ணிருக்கும் ஒரு விதவைத் தாயை, நீ விவாகம் செய்ய விரும்புவது கேலிக் கூத்தாக தெரிகிறது. மேலும் அது எங்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது.

இந்தத் திருமணம் நடந்தால் நானும் உன் அம்மாவும் அதில் பங்கு கொள்ள மாட்டோம். எங்களுக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். ஆசீர்வாதத்தை வேண்டி நீங்கள் இந்த வீட்டு வாசலில் கால் எடுத்து வைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அது போல் நாங்களும் அங்கு வந்து உங்கள் இருவரது முகத்தில் விழிக்கப் போவதில்லை.

தங்கை திருமணம் முடியப் பணம் கொடுத்து உதவிய மராட்டியம்மாவுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி.

அன்பு மறவாத அப்பா,
வேலுச்சாமி

கடிதத்தைப் படித்த புனிதாவின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

“உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து அவன் எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

அன்புள்ள அப்பாவுக்கு,

வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மைதான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

உங்கள் நலம் நாடும்,
சிவகுரு நாதன்.

“உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

“இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே! அவர்கள் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்! நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

“துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

“தங்கை இருக்கிறாள். நான் பணத்தை அனுப்பி அவள் மூலமாகக் கவனித்துக் கொள்வேன்”.

“சித்ராவின் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை எனக்கு”

“எளிய முறையில் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா”

“அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

“நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தாள்.

தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன! புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்துப் படித்தார்கள்.

அன்புள்ள அம்மா,

நான் முட்டாள்தனமாக கண் காணாத ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன்.

உங்கள் இரண்டாம் கல்யாணத்தில் முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என் மனம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய இந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு உங்கள் இருவரது முகத்திலும், நான் விழிக்கப் போவதில்லை.

பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

அன்பு மகள்,
சித்ரா

அன்புணராத குருவே,

உங்களைப் பற்றி அம்மாவிடம் அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்கவும். அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாய் பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

அபாக்கியவதி,
சித்ரா

பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது. அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள்.

“கண்ணே! உன் வாழ்வில் ஒரு கதவு மூடி, இன்னொரு கதவு திறந்திருக்கிறது! ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ எடுத்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா! நமது புதிய உறவைப் பிரிக்கப் பிரச்சனைகள் கிளம்புகின்றன! நாமிருவரும் இப்போதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் சிவா.

++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) [Dec 3, 2008]

முடிவை நோக்கி !

atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ·போனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·பெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி, புளுடோனிய   அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

harry-daghlians-nuclear-experiment

1982 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

என் விழியில் நீ இருந்தாய்!

Madurai Temple

சி. ஜெயபாரதன், கனடா

“என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?” என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு பதில் பேசாமல், காரை நோக்கி விரைந்தான்.

அன்று பௌர்ணமி! அந்திப் பொழுது மங்கி, பொங்கி வரும் பெருநிலவு மேகங்களுக்கிடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது! இளந்தென்றல் மேனியைத் தழுவி மெய் சிலிர்க்க வைத்தது! முதன் முதலாக அவன் கோகிலாவைச் சந்திக்கப் போகிறான். அந்த நினைவே அவன் நெஞ்சில் இன்பத் தேனைச் சுரந்தது. வெள்ளித் திரையில் பார்த்தது! காதல் காவியங்களில் படித்தது! கனவுகளில் அவன் கண்டது! அதை ஓர் எழில் மங்கையுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறான்! புதிய அனுபவம்! அதுவும் முதல் அனுபவம்! ஆனாலும் நெஞ்சு ஏனோ ‘பக் பக்கென்று’ விடாமல் அடித்துக் கொண்டது! டாக்ஸியில் ஏறி பின் ஸீட்டில் அமர்ந்த பின், கோகிலா இருக்கும் தெருப் பெயரை டிரைவருக்குக் கூறினான்.

ஓடிவந்த மோகன் “நானும் வருகிறேன்” என்று கதவைத் திறந்து கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அசோக்கின் கண்கள் இரண்டும் வியப்புடன் விரிந்து அவனை நோக்கின!

“நீ போகும் இடத்திற்கு நான் போகவில்லை! கோயிலுக்குப் போகிறேன், தேவியைத் தரிசிக்க! மீனாட்சி அம்மன் கோயிற் தலைவாசலில் இறங்கிக் கொள்கிறேன்”. என்று சற்று பணிவோடு சொன்னான் மோகன். அவனது நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டும் பளிச்செனத் தெரிந்தது! அசோக்கின் நெற்றியில் முத்து முத்தாய் வேர்வைகள் தான் தென்பட்டன!

அசோக்கும் மோகனும் இணைபிரியா நண்பர்கள். மதுரை மாநகரில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒரே சமயத்தில் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மதுரையில் உத்தியோகம் பார்ப்பவர்கள். ஆனால் கொள்கை வேறுபாடு கொண்டவர்கள். அசோக் வட துருவம்! மோகன் தென் துருவம்! அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. தர்க்கம் ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள். எதிர்த் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும் அல்லவா!

மோகன் தெய்வ நம்பிக்கை கொண்டவன். தவறாது கோயிலுக்குச் செல்பவன். அசோகனுக்குக் கடவுளைப் பற்றி நினைக்க நேரமில்லை! தெய்வம் உண்டா, இல்லையா என்று பிறரிடம் தர்க்கம் செய்தாலும், மனதை அலட்டிக் கொள்ளாதவன். முப்பது வயதாகியும் அசோக் தனி மரம்! மோகன் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை! ஆனாலும் கோயிலுக்குப் போகும் போது மட்டும் தனியாகத்தான் போவான். தெருவில் அவனுடன் மனைவி நெருங்கி நடப்பது, அவனுக்குப் பிடிக்காத ஒன்று! கடைக்கோ, சினிமாவுக்கோ, கோயிலுக்கோ அவள் செல்ல வேண்டு மென்றால், தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்துதான் போக வேண்டும்!

டாக்ஸி கிழக்கு வெளிவீதியிலிருந்து கிளம்பி கிழக்குக் கோபுர வாசலை நெருங்கியது. அன்று வெள்ளிக் கிழமை. எங்கு பார்த்தாலும் ஜனக்கடல்! அந்தக் கடலில் அநேகர் பெண்டிர். அதில் கோயிலுக்குப் போவோர் பலர்! கோயிலுக்குப் போகும் பெண்டிரை வேடிக்கை பார்ப்போர் சிலர்! டாக்ஸி வீதியில் நின்று நின்று மெதுவாய் போனது. ஆனால் டாக்ஸி மைலா மீட்டர் மெதுவாகப் போகவில்லை! வேகமாய் ஓடியது! பணத்தொகை ஏறிக் கொண்டே போவதைப் பார்த்த அசோக்கின் இதயமும், ‘டக் டக்கென்று’ மீட்டருடன் ஒன்றாய்ச் சேர்ந்து ஓசை யிட்டது!

‘சிற்றின்பம் நாடிக் கோகிலாவிடம் போகிறான், அசோக்’ என்று பொறாமைப் பட்டான் மோகன்! ‘பேரின்பம் கிட்ட கோவிலுக்குப் போகிறான், மோகன்’ என்று விரக்தி அடைந்தான், அசோக்.

“முப்பது வயதாகிறதே! கண்ணியமாக ஓர் அழகுப் பதுமையைத் திருமணம் செய்து கொண்டு, புண்ணியம் அடைவதை விட்டு, இப்படி ஒரு மாடல் அழகியைத் தேடிப் போகிறாயே! இது உனக்கு சரியாகத் தெரிகிறதா, அசோக்?” என்று சட்டெனக் கேட்டான், மோகன்.

“எப்படித் திருமணம் செய்து கொள்வது? நான்தான் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேனே! என் சம்பாத்தியத்தில், என்னிரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் முடிய வேண்டும். அது இந்தப் பிறவியில் நடக்காது! கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியாமல் தங்கைகளின் வயது ஏறிக் கொண்டும், வனப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் போகிறது! மேலும் எனக்கு இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை! அந்தச் சிறைச்சாலையில் அடைபட்டுக் கொண்டு, பெற்ற பிள்ளைகளோடு போராடி, உன்னைப் போல் வாழ எனக்கு ஆசை இல்லை! நான் என்றும் சுதந்திரப் பறவையாகவே வாழப் போகிறேன்.

“கோகிலாவுக்கு அடிமையாக இருப்பதா சுதந்திர வாழ்வு? இது நிலையற்ற இன்பம்! இல்லறம் அல்லது நல்லறம் இல்லை! உனக்கென ஒருத்தி வேண்டாமா? மனைவியே வேண்டாம் என்பதும் ஒரு மாதிரித் துறவறம் தான்!”

“நான் துறவி இல்லை! இல்லறம், துறவறம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்வைத் தேடுகிறேன்! இதைச் சுயவறம் என்று சொல்வேன்! இதில் ஆண், பெண் இருவருக்கும் பூரண சுதந்திரம்! சம உரிமை! விருப்பமுள்ள ஆண்பெண் இருவர் சேர்ந்து வாழும் ஒரு கூட்டகம்! அதுதான் இணையறம்! மனப்பிளவு ஏற்பட்டால், யாரும் எப்போது வேண்டுமானாலும் உறவை வெட்டிக் கொள்ளலாம்! பிடித்த வேறு யாருடனும் ஒட்டிக் கொள்ளலாம்! இதில் யாருக்கும் கைவிலங்கு, கால்விலங்கு போடுவதில்லை! பிடிக்காதருடன் வாழும் மன வேதனை, சண்டை, சச்சரவு, விவாகரத்து, வரதட்சணை விவகாரம் எதுவும் இல்லை!

“அப்படி என்றால், கோகிலாவோடு நீ கூட்டகம் வைத்துக் குடித்தனம் நடத்துவாயா?”

“கோகிலா எனக்கு நிகரானவள்! நான் தயார், அவள் உடன்பட்டால்! மனைவி ஒரு போதும் மாதவி போல் கவர மாட்டாள்! குடும்ப வலையில் மாட்டிக் கொண்ட பின், கணவனைக் கவர வேண்டுமென்ற கடமை, மனைவிக்குத் தேய்பிறைபோல் குறைந்து, கடைசியில் அமாவாசையாகி விடுகிறது!”

“உனக்குத் தேவை, மாதவி! மனைவி அல்ல! என்று சொல்கிறாய். பெண்ணைக் கவர்ச்சிப் பண்ட மாகத்தான் நீ கருதுகிறாயா? மனைவி எப்போதும் கவர்ச்சிப் பதுமையாக இருக்கத் தேவையில்லை!”

“காரிகையை ஆண்டவன், கவர்ச்சிப் பிறவியாகத் தான் படைத்திருக்கிறான்! ஆடவரை மயக்கி ஆளத்தான் மங்கைக்கு மான்விழி, மதிமுகம், எழில் இடை, மயில் நடை, பொங்கியெழும் கொங்கை போன்றவற்றை அளித்திருக்கிறான்! ஆண்மை பெண்மை என்பது காமசக்தியின் இரு துருவங்கள்! மின்சக்தி, காந்தசக்தி போல், காம சக்தியும் ஓர் இயற்கைச் சக்தியே! அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர் யார்?” கவிமுனி வால்மீகி! மாமுனிவர் விசுவாமித்திரர்! ஆண்டாள்! மகாகவி காளிதாஸ்! ஷேக்ஸ்பியர்! கவிஞர் ஷெல்லி! பைரன்! … வள்ளுவர் காமத்துப் பாலைக் காவியமாக வடித்துள்ளார்! ‘மோகத்தைக் கொன்றுவிடு! – இல்லால் எந்தன், மூச்சை நிறுத்திவிடு!’ என்று பாரதியார் கூட மோகத் தீயில் படாத பாடு பட்டிருக்கிறார்!”

“காமசக்தி தான் கன்னிப் பெண்ணுக்கு எழிலையும், இனிய குரலையும், நளின மேனியையும் தருகிறது. ஆணுக்கு கம்பீரத் தோற்றத்தை அளிக்கிறது! வயிற்றுக்கு உணவுபோல், உடலுக்கு உறவு! உறவு இல்லையேல் உடல்நலம் சிதைகிறது! காமசக்தி ஓர் ஆக்க சக்தி! காமசக்தி இல்லையேல் இனவிருத்தி இல்லை! கவிஞனின் கற்பனைச் சுரங்கம் வரண்டு போகும்! எழுத்தாளன் மூளை பாலைவனம் ஆகிவிடும்! சிற்பியின் கைகள் செதுக்க முடியா ! இசைக்குயில் பாட முடியாது! நர்த்தகி நளினமாய் ஆட முடியாது! ஓவியன் சித்திரத்தைத் தீட்ட இயலாது! கலையோ, காவியமோ எந்தவிதப் படைப்புமே உருவாக்க முடியாது! காம சுரப்பிகள் சுருங்கிக் காய்ந்து போகும் போது, மனிதனை முதுமை கவர்ந்து கொள்கிறது!

“இல்லை, அசோக்! காமம் கண்ணைக் குருடாக்குகிறது! காமம் சிற்றின்பம்! காமவெறி ஓர் அழிவுசக்தி! காமசக்தியில் குளித்தவர் எல்லாம் கடைசியில் கரையேற, கடவுளைத் தான் தேடினர்! நமக்குத் தேவை ஆன்மீக சக்தி! அதுதான் உயர்ந்தது! உறுதியானது! முடிவில்லாப் பேரின்பம்! மனிதப் பிறவியின் இறுதிப் பீடம்! ஆன்மீக சக்திதான் ஆக்கசக்தி!

டாக்ஸி கிழக்குக் கோபுர வாசலை வந்தடைந்தது. பூக்கடைகளிலிருந்து மல்லிகை மணமும், ரோஜாவின் மணமும் நாசியில் நுழைந்து மோகனைக் கிறங்க வைத்தன! “இறங்கிக் கொள்கிறேன், இங்கு” என்று காரை நிறுத்தச் சொன்னான், மோகன். “நான் தேங்காய், பழம், பூ, சூடம் எல்லாம் வாங்க வேண்டும்”.

“கோயில் முன், பார் மோகன்! எங்கெங்கு நோக்கினும் மங்கையர் கூட்டம்! இப்படிப் பெண்டிர் பலர் அலங்காரமாய் கண்முன் நிற்கும் போது, தேவியை நோக்கி எப்படிப் பூஜிப்பாய் நீ? இந்தச் சூழ்நிலையில் கண்ணை மூடிக் கொண்டு, மனதைக் கட்டுப் படுத்தி, சிந்தையில் தெய்வத்தை தியானிக்க முடியாது!”

“அசோக்! நீ கோகிலாவைப் பூஜிக்கப் போகிறாய்! உன் கண்ணில் தெய்வமே தெரியப் போவதிலை! அந்த மாயக்காரி தரும் மதுவை அருந்தப் போகிறாய்! உடலையும் ஆத்மாவையும் பாழாக்கி உன்னைப் போல் என்னால் வாழ முடியாது! பிறவிப் பெருங்கடல் நீந்த, ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! அதைச் செய்யாமல், சிற்றின்பத்தைத் தேடிப் போகிறாய், நீ! நினைவில் இதை வைத்துக் கொள்! நிச்சயம் உனக்கு மோட்சம் இல்லை! .. நரகம் தான்! …. நன்றி, வருகிறேன்”, என்று சாபம் போட்டு விட்டுப் பூக்கடை நோக்கி விரைந்தான், மோகன்.

டாக்ஸி தெற்கு வெளிவீதி நோக்கித் திரும்பியது. கோகிலாவைப் பற்றிய அவன் கற்பனை சற்று சிதைந்து போனது! “ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! உனக்கு மோட்சம் இல்லை! நரகம் தான்!” என்று மோகன் சொல்லி விட்டுப் போனது நெஞ்சில் முள்ளாய்க் குத்தியது! பையிலிருந்த வண்ணப் படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். கோகிலா அதில் சிரித்துக் கொண்டிருந்தாள். காமன் அவளது புருவங்களை வில்லாய் வளைத்து, அவன் நெஞ்சைக் குறி வைத்து, கனல் அம்புகளை ஏவி விட்டான்! ….. எது முதல்? … எது தேவை? …… அவன் மூளை குழம்பியது! ….. கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ….. டாக்ஸி ஏன் இப்படி மெதுவாய்ச் செல்கிறது?

தேங்காய், பழம், பூக்களைத் தட்டில் ஏந்திக் கொண்டு, கோயில் உள்ளே நுழைந்தான், மோகன். மீனாட்சி அம்மன் சன்னதி நோக்கி நடந்தாலும், அவன் மனக்கண் முன் கோகிலாவின் அழகுதான் வந்து விளையாடியது! சந்தேகமில்லாமல் அவள் பேரழகி! நேரிலேயே பார்த்திருக்கிறான், மோகன். கலா மன்றத்தில் முந்திய வாரம் நாடகம் பார்க்கப் போன போது, முன் நாற்காலியில் எந்த நேரமும் சிரித்துக் கொண்டு, அவள் ஜம்மென அமர்ந்திருந்தாள். அசோக் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன்! அழகை ரசிக்கவும் ஒரு யோகம் வேண்டும்! மோகனுடைய மனைவி சுந்தரி, அப்படி யொன்றும் அழகி இல்லை! ஆறரை அடி உயரத்தில், எடுப்பான தோற்றமுள்ள மோகனுக்கு, அழகற்ற ஐந்தடிப் பெண் சுந்தரியின் ஜாதகம் தான் முழுமையாகப் பொருந்தியது!

அங்கு இங்கு எனாதபடி எங்கும் கூட்டமாய், மங்கையர் கோவிலை நோக்கிப் போய்க் கொண்டிருந் தார்கள். ஜரிகைச் சேலைகளின் சல சலப்பும், ஜவ்வாதுப் பொட்டின் பள பளப்பும், மல்லிகைப் பூக்களின் மண மணப்பும், அன்று ஏனோ மோகனின் மனத்தை நிலை தடுமாறச் செய்தன! நேராகப் பார்த்து நடக்கும் கால்கள் திசை கோணி நெளிந்தன! முன்னோக்கி வழி காட்டும் விழிகள், முப்புறமும் தலையை திருப்ப விட்டு, அழகை ரசிக்கத் தூண்டின! மரத்துக்கு மரம் தாவும், மனக் குரங்கு மாதரை விட்டு மாதர்மேல் தாவி, அழகை ஒப்பிட்டுப் பார்த்தது! …ஆண்டவா! இது என்ன சோதனை?

பொற்றாமரைக் குளத்தில் தன் பிம்பத்தைப் பார்த்து, பொங்கி வரும் பெருநிலவு நடனமாடிக் கொண்டிருந்தது! கோயிற் தூண்களில் எல்லாம் ஒய்யாரமாய் நிற்கும், பெண் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்தன! அவன் மதி மயங்கியது! ஏனிந்த கற்சிலைகள் கூட அவனைச் சித்திரவதை செய்கின்றன? தெய்வ சன்னதியில் காமச் சிலைகளை ஏனிந்தச் சிற்பி செதுக்கினான்? தேவியைத் தொழப் போகும் ஆடவனைத் திக்கு முக்காடச் செய்யும் கவர்ச்சிச் சிலைகளுக்குச் சேலைகட்டி மார்பை மறைக்க வேண்டும்! …… ஆண்டவா! இது என்ன தர்ம சங்கடம்?

கோகிலாவின் வீட்டு வாசலில் டாக்ஸி நின்றதும், டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுப் படியேறி வந்தான், அசோக். கதவு சற்று திறந்திருந்தது. திறந்த இடைவெளியி லிருந்து, மனத்தைக் கவரும் நறுமணப் பத்தியின் வாசம், மெதுவாய் நாசியின் வழி புகுந்து அவனை வரவேற்றது! செவியைக் குளிரச் செய்யும் சினிமா இசை அடுத்து விருந்தளித்தது!

வாராய்! நீ வாராய்!

போகு மிடம், வெகு தூர மில்லை!

வாராய்! நீ வாராய்!

‘மந்திரி குமாரி’ சினிமாவில் வில்லன், மலை உச்சியில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கீழே படு பாதாளத்தில், தள்ளுவதற்கு முன்னால் பாடுகிற பாட்டு! இனிமையான, ஆனால் கோரமான அந்தப் பாட்டை ரசித்த அசோகனுக்கு… இதயத்தில் திக்கென்றது! என்ன! கோகிலா தன்னைக் கீழே படு பாதாளத்தில் தள்ளப் போகிறாளா? … நரகத்தில் விழப் போகிறானா அசோக்? …… ‘நரகம் தான் உனக்கு!’ … என்று பாவிப் பயல் மோகன் ஆசீர்வதித்துப் போனானே! …. கதவைத் திறந்து கொண்டு உள்ளே மெதுவாக நுழைந்தான், அசோக்.

வீடு பளிச்சென சுத்தமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீச்சலுடைப் பெண்டிர் காட்சி! தலைக்கு மேல் மின்விசிறி மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. உள்ளே இருந்து, மான்போல் விழித்து, மயில்போல் நெளிந்து, மோனாலிஸா முறுவலுடன் வந்த, வனிதா மணியைக் கண்டு சிலையாய் நின்றான், அசோக்! பார்த்ததும் நெஞ்சில் கனமாக ஏதோ அடைத்தது! சோஃபாவில் வந்து அவனை அமரச் சொன்னாள், கோகிலா. தானும் நெருங்கி உட்கார்ந்து, அவனது கையைப் பற்றினாள்.

நீல நிற ஸில்க் ஸாரியைக் கண்ணியமாக, கவர்ச்சியாக அணிந்திருந்தாள். மேனியிலிருந்து எழுந்த செண்டின் மணம், அவனை அவள் பால் இழுத்தது! இளநுங்கு போன்ற கரங்கள் தொட்டவுடன், அவன் உடலில் மின்சக்தி பாய்ந்தது! முதன்முதல் பெண்ணுடல் பட்டவுடன் மெய் சிலிர்த்தது! அசோக் அவளது காந்த மண்டலத்தில் சக்தியற்றுச் சாய்ந்து கிடந்தான்! நெஞ்சடுப்பு பற்றி எரிந்து, உடம்பெல்லாம் நெருப்பை வெளியாக்கியது! வேர்த்துக் கொட்டியது! கைகளும் கால்களும் நடுங்கின!

மெதுவாகப் பையில் கையைவிட்டு, ஒரு கவரை எடுத்துக் கோகிலாவிடம் கொடுத்தான். அவள் எண்ணிப் பார்த்து, மேஜை டிராயருக்குள் வைத்து விட்டு, ஆயிரம் ரூபாய் சரியாக இருப்பதாகச் சொன்னாள். புன்முறுவலோடு அவனுக்கு நன்றி கூறினாள்.

கோகிலாவின் காந்த உடம்பு அவனை நெருங்கியது! கைகள் அவனது தலை மயிரை மெதுவாகக் கோதி விட்டன! புல்லரித்துப் போன அசோக், சொர்க்க லோகத்தில் மிதந்து கொண்டிருந்தான்!

மோகன் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு அம்மன் சன்னதிக்குள் இறுதியில் வந்து சேர்ந்தான். அசோக் சொன்னது சரியாய்ப் போயிற்று. அப்பப்பா! என்ன கூட்டம்? என்ன சத்தம்! காற்றோட்டம் இல்லாத இடம்! சாம்பிராணிப் புகை! சூடம் எரிந்து எழும் கரி வாய்வு! மனிதரின் வேர்வை நாற்றம் வேறு! எல்லாம் சேர்ந்து மோகனுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது! காதைப் பிளந்தது, ஆலயமணிச் சத்தம்! சந்தைக் கடைபோல் இருந்தது, சன்னதி! மூலையில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரன் ஒரு பெண்ணின் பின் புறத்தைத் தடவிக் கொண்டிருந்தான். அவள் சட்டெனக் கையைத் தட்டித் திரும்பியதும், தன் கையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

முண்டி இடித்துக் கொண்டு மோகன் நுழையும் போது, யாரோ ஒருவன் தட்டிவிட, தட்டு தரையில் குப்புற விழுந்தது! கீழே குனிந்து எடுப்பதற்குள், பூச்சரம் முன்னே போனவரின் காலைச் சுற்றிக் கொண்டது! வாழைப் பழங்கள் யாவும் பாதம் பட்டு நசுங்கிப் போயின! தேங்காய் காலில் விழுந்து கிழவி ஒருத்தி, ‘ஆ வென’ அலறினாள். வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்த இளம்பெண் ஒருத்தி, குனிந்து கிடந்த மோகன் மேல் சாய, அவன் சட்டென அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ள நேரிட்டது! பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது, மோகனுக்கு! அந்தப் பெண்ணுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது. சேலையைச் சரிசெய்து எழுவதற்கு, அவளுக்கு சற்று நேரம் எடுத்தது!

மோகன் விடுவித்து எழுவதற்குள், கன்னத்தில் ‘பளாரென்று’ ஓர் அறை விழுந்தது! அறைந்தவன் பின்னால் நின்று கொண்டிருந்த யோக்கியமான போலீஸ்காரன்! “அயோக்கிய பயலே! எங்கேடா தொடுறே! கன்னிப் பெண்ணைக் கட்டியா பிடிக்கிறே? அறிவு கெட்டவனே! கூட்டத்திலே தெரியாமல் போயிடுமேன்னு பார்க்கிறாயா?” என்று முதுகில் பிரம்பால் நான்கு தரம் விலாசினான். மோகனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது! சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது! பட்டர் கூட தீப ஆராதனையை மறந்து விட்டு, வேடிக்கை பார்க்க வந்து விட்டார்! மீனாட்சி அம்மை இமை தட்டாமல் தன் மீன் விழிகளால் இந்த தெருக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்! கை கட்டி நடுங்கிக் கொண்டிருந்த மோகன், சுவாமி தெரிசனத்தையே மறந்து போனான்!

கோகிலா மெதுவாக முன் கதவைத் தாழிட்டு மூடினாள். அசோகனின் கையைப் பற்றி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். புடவையை நீக்கி பாவாடையில் தன் அழகைக் காட்டினாள்! அசோக்கின் கண்கள், அவளது மார்பின் அழகைப் பார்க்க வில்லை! தலைக்கு மேல் எதிரே, அவனைத் துளைத்து நோக்கிக் கொண்டிருந்த, திருப்பதி வெங்கடா ஜலபதியின் கண்களைப் பார்த்தன! அவன் நெஞ்சில் ஒரு பயம் எழுந்தது! அப்போது கோகிலாவின் கத்தி விழிகள் அவன் நெஞ்சைக் குத்திடத் தாவின!

அசோக்கின் தோளின் மேல் கைகளை வைத்து அணைக்க முனைந்த போது, ‘ஓ வென’ அலறும் ஒரு குழந்தையின் குரல் கேட்டது! .. திடுக்கிட்டான், அசோக்! .. திகைத்தான் அசோக்! .. தடுமாறினாள், கோகிலா! …. அவன் சொர்க்க லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தான்! .. எங்கே குழந்தை அழுகிறது? .. யாருடைய குழந்தை அது? … திரும்பினான் அசோக்! ….கோகிலா அவனைப் பிடித்திழுத்தாள்! … குழந்தையின் அலறல் அதிகமானது! … அவளைத் தீண்டாமல், அலறல் வரும் திசையை நோக்கி விரைந்தான், அசோக் !

பிள்ளையின் அழுகையைப் பொருட்படுத்தாது காரியத்தை சீக்கிரம் முடித்திட முனைந்தாள் கோகிலா! அசோக் திமிறிக் கொண்டு, அவளை உதறித் தள்ளி விட்டு அடுத்த அறைக்கு ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி! ஐந்தாறு மாதப் பச்சிளம் குழந்தை! அழுது அழுது தொய்ந்து போயிருந்தது! நெற்றியில் கையை வைத்தான். நெருப்பாய் காய்ந்தது, உடம்பு! … ஒரு நிமிடம் தான் சிந்தித்தான்! … உடனே, கிடந்த போர்வைத் துணியைப் பிள்ளைமேல் சுற்றித் தூக்கிக் கொண்டு, கதவைத் திறந்து தெருவை நோக்கி ஓடினான், அசோக்!

அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த கோகிலா, புடவையைக் கட்டிக் கொண்டு, பிள்ளைப் பையையும், மேஜை டிராயரில் இருந்த தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு, அவன் பின்னால் ஓடினாள். வீதியில் ஓடிய ரிக்ஸாவை நிறுத்தி இருவரும் ஏறிக் கொள்ள, ஆஸ்பத்திரியை நோக்கி ஆட்டோ பறந்தது!

குழந்தையை அட்மிட் செய்து வெளி வருவதற்குள் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. உயிரில்லாமல் வீதிக்கு வந்தான் அசோக்! ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஸாவுக்குக் கையைக் காட்டினான். உடம்பெல்லாம் வலித்தது! பெரு மூச்சோடு வண்டியில் ஏறி அமர்ந்ததும், கோகிலா கவரைக் கையில் ஏந்திக் கொண்டு ஓடி வந்தாள். அசோக் அதை வாங்கிக் கொள்ளவில்லை!

ரிக்ஸா வீடு நோக்கிக் கிளம்பியது. நன்றி பொழியும் கண்களுடன் வழி அனுப்பினாள், கோகிலா! …. ஆட்டோ போகும் வழியில், ஒரு பிள்ளையார் கோயில் பளிச்சென வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் கைகள் தானாகவே சேர்ந்து கும்பிடத் தொடங்கின! ‘பிள்ளையாரப்பா! அந்த பச்சிளம் பிள்ளை உயிரைக் காப்பாத்து’ என்று அவன் வாய் முணு முணுத்தது! … எதிரே போலீஸ் ஜீப்பில் கை விலங்குடன் மோகன், தலை குனிந்து போய்க் கொண்டிருந்தான்!