
சி. ஜெயபாரதன், கனடா.
இமயத் தொட்டிலை ஆட்டி
எப்படி எழும் பூகம்பம் ?
பசிபிக் தீவுகளில்
குப்பென
எப்படிக் குமுறிடும்
எரிமலை ?
பூமியின் உட்கருவிலே
தீக்குழம்பை
ஈர்ப்புக்கு எதிராய்
பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
அசுர அணு உலை ஒன்று
எப்படி உருவானது ?
ஆழ்கடல் அடியில் பன்னூறு
அணுகுண்டு வெடித்து
அசுரச் சுனாமிப் படை
அலைகள்
எப்படிக் கரையேறி
அழிக்கும் ?
தாயின் கர்ப்ப பையில்
அற்புதச் சிசு
எப்படி உருவாகுது,
பத்து மாதம் வளர்ந்து ?
மாங்கனி, பலா, வாழை, ஆப்பிள்
தேங்காய், கரும்பு, திராட்சை,
மாதுளை, பீச்சு, பேர்
கனிகளில்
எப்படி தனித்தனி சுவைதரும்
இனிப்புச் சார் சுரக்குது ?
பற்பல வண்ணளில்
வானில்
பறக்கும் புல்லினம்
எப்படித் தோன்றின ?
நியூட்டன்
புற இயக்கி இன்றி, இவ்வகை
எல்லா
அக இயக்கிகள்
தனியாக எப்படி தமது
வினையாற்றும் ?
**********************
சி.ஜெயபாரதன்
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
******************