முடிவை நோக்கி !

atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோ ரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத் தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

harry-daghlians-nuclear-experiment

1981 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008Edit

7 THOUGHTS ON “முடிவை நோக்கி !”

  1. Sammy Giannotti on  said:EditAmazing! Your post has a ton comments. How did you get all of these readers to view your blog I’m very jealous! I’m still learning all about posting information on the net. I’m going to view pages on your website to get a better idea how to get more visable. Thanks for the help!Reply ↓
  2. remote tank level monitoring systems on  said:EditA very usefull article – a big thanks I i really hope you will not mind me blogging about this article on my website I will definately leave a link back Thank youReply ↓
  3. remote tank level monitoring systems on  said:EditA very helpfull article – a big thanks I hope you dont mind me commenting about this post on my website I will definately leave a link back Thank youReply ↓
  4. Fidela Wagenknecht on  said:EditYour recommendations are find on…I think the idea of persistence is especially important…it’s which you do at the time of time that issues…dispensing regular quality.Reply ↓
  5. சி. ஜெயபாரதன் on  said:Editதேமொழி says:
    August 12, 2013 at 7:40 pmமனிதர்கள் தங்களையே அழித்துக் கொண்ட முட்டாள் தனத்தின் உச்சவரம்பை எட்டிய நாள், மனித குல வரலாற்றில் கறைபடிந்த மறக்க முடியாத நாள். சரியாக 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த மாதம் நினைவு நாள் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
  6. பல உயிர்களின் அழிவுக்கு தனது கண்டுபிடிப்பு உதவிவிட்டது, அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு தாங்கள் காரணமாகிவிட்டோம் என்று அறிவியல் அறிஞர்கள் பட்ட வேதனையை படம் பிடித்துக் காட்டிய கதை அருமை.அன்புடன்….. தேமொழிReply
    சி. ஜெயபாரதன் says:
    August 14, 2013 at 12:25 pmஅன்புமிக்க தேமொழி,யுத்தம் என்பது “அழிவியல் விஞ்ஞானம்” என்று ஒரு மேதை சொல்லியிருக்கிறார். மனித இனம் தோன்றியது முதல் போர்கள் இல்லாத யுகமே இல்லை. ஒரு மனித இனம் பிழைக்க அடுத்த மனித இனத்தை அழிப்பதே மனிதனின் தொழிலாகி விட்டது. இந்தத் தொடரியக்கம் [chain reaction] எந்த நூற்றாண்டிலும் நிற்காது.பாராட்டுக்கு நன்றி.சி. ஜெயபாரதன்Reply
    தி.தா.நாராயணன் says:

  7. August 14, 2013 at 7:46 amமுடிவை நோக்கி-ஒரு நல்ல அறிவியல் சிறுகதை சார்.கனமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பது தன்னைத்தானே அழித்துக் கொள்வதுதானா?என்று கேட்கத் தூண்டுகிறது.ம்..ம் ஆனந்தவிகடன் வாசகர்களுக்கு குடுப்பினை இல்லை.எங்களுக்குத்தான்.Replyசி. ஜெயபாரதன் says: .
    August 14, 2013 at 12:33 pmஅன்புமிக்க நண்பர் நாராயணன்,ஒரு குடும்பத்துக்குள் இல்லாத சண்டையா வெளி உலகில் நடக்கிறது. உலக வரலாற்றை இதுவரை நாமே நமது குருதிச் சிவப்பு மையில்தான் எழுதி வந்திருகிறோம். இனி நமக்கு எழுத வேறு நிற மையில் முடியுமா ?பாராட்டுக்கு நன்றி.சி. ஜெயபாரதன்Reply ↓
  8. சி. ஜெயபாரதன் on  said:EditIndira Balasubramanian August 12, 2014 at 2:08 pm · ·Reply →The great scientists have brought the greatest disaster.Still it reminds the biggest man made sorrow to the world.Well written story.Reply ↓
  9. nuoc hoa nam on  said:Editcertainly like your web site but you have to check the spelling
    on several of your posts. Several of them are rife with spelling problems and
    I to find it very troublesome to tell the reality however I’ll definitely come back again.Reply ↓

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.