CERN ATOM SMASHER – FRANCE SWISS BORDER
ஆடும் அழகே அழகு
சி. ஜெயபாரதன், கனடா
ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ
ஆடும் அழகே அழகு – உனைத்
தேடும் விஞ்ஞான உலகு.
தமிழ் ஏடும், பாரத நாடும், பாட நீ
ஆடும் அழகே அழகு, தமிழ்
நாடும், ஏடும், பாடும், தேடும்
ஆடல் அரசே, கூடல் முரசே நீ
ஆடும் அழகே அழகு.
அணு உடைப் பாய்வக வாசலில்
நாடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ
ஆடும் அழகே அழகு, அங்குனைத்
தேடும் விஞ்ஞான உலகு.
ஆதி மூலன் நீ ! அகிலம் படைத்தது நீ
அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !
அண்ட சராசரம் அனைத்திலும் நீ
ஆடும் அழகே அழகு.
ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு
தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து
ஆடும் அழகே அழகு – கம்பீர மாய் நீ
ஆடும் அழகே அழகு.
நெற்றிக் கண் மின்ன ஒற்றைக் காலில்,
எற்றி ஆடும் அழகே அழகு.
வெற்றி பெற்று முற்றும் அதிர
சுற்றி ஆடும் அழகே அழகு.
ஒரு கையில் அக்கினி ஏந்தி
மறு கையில் உடுக்குடன் கூத்தாடி
ஆடும் அழகே அழகு. உனைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
ஆதி முதல்வன் நீ ! அண்டக் குயவன் நீ !
ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமம் நீ !
நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்வது நீ !
வேத ஞானி நீ ! மேதினி செழிக்க நீ
ஆடும் அழகே அழகு,
நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு !
நின்றால் பூமியே நின்று விடும்
மானிடம் அழிந்து விடும், தொடர்ந்து
ஆதி சக்தி நீ ஆட வேண்டும், தினம்
ஓதி உனை யாம் பாட வேண்டும்.
ஆடும் அழகே அழகு. உனைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
தேடும் மாந்தரைக் காப்பாய் நீ
சாடும் மனிதரை மீட்பாய் நீ
*******************
ஜெயபாரதன் அவர்களே,
தங்களின் சில அறிவியல் சார்ந்த பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு அறிவியல் + அழகியல் + ஆன்மீகம் கலந்த பாடலை தங்கள் வாயிலாக படித்தமைக்கும், கேட்டமைக்கும் மிக்க நன்றி. நான் சமயப் பற்று இல்லாதவனாக இருந்த போதிலும், இப்பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ‘தீங்கிழைத்த அசுரன் மீது’ என்பதற்கு பதிலாக ‘அறியாமையான அபஸ்மரன் மீது’ என்றிருந்தால் மேலும் சிறப்பாகவும், இச்சிலை ஒரு அறிவியல் ஆய்வகத்தின் முன்பாக இருப்பதற்கு பொருத்தமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். தங்களின் படைப்புகள் செறிவுடன் தொடர வேண்டுகிறேன், விரும்புகிறேன் . என்னைப் போன்ற சிற்பல தமிழ் விரும்பிகளுக்கு உங்கள் படைப்புகள் ஒரு நல் விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒரு வாசகன்.
தே. பிரகாஷ்.
ஆடும் அழகே அழகு! தில்லைக் கூத்தனின் ஆடும் அழகினை வியந்தது அதனினுமழகு! சிறப்பாக உள்ளமைக்கு வாழ்த்துக்கள்!