







மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம்
முதன்முதல் மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம் அமைக்க உலக வங்கி 519 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று 2014 அக்டோபர் 3 ஆம் தேதி உறுதி கூறியது. ஆப்பிரிக்க நாடுகளிலே மொராக்கோ போல் சூரிய ஒளி கிடைக்கும் நாடு வேறொன்றில்லை. வருடம் ஒன்றில் சுமார் 3600 மணிநேரம் மொராக்கோ பாலை வனத்தில் சூரிய ஒளி பெற முடிகிறது. ஸஹாரா பாலை வனத்தின் சராசரி சூரிய ஒளி ஆண்டுக்கு 3117 மணிகள். உச்ச உஷ்ணம் ஸஹாராவில் 77 டிகிரி C [170 டிகிரி F ]. மொராக்கோ 9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, உலகிலே மிகப் பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையத்தைக் கட்டுமானம் செய்யத் திட்ட மிட்டது. மொராக்கோவின் குறிக்கோள் 2020 ஆண்டுக்குள் 5 சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் [Photovoltaic, Concentrated Solar Power, Solar Steam turbine types ] கட்டி முடிக்க வேண்டும் என்பதே. அவ்விதம் முடியும் போது சூரியக் கதிர் மின்சக்தியின் பயன்பாடு 38% சதவீதம் இருக்கும்.
மொராக்கோ நாடு ஒன்றுதான் [1400 MW or 2100 MW Capacity Under Sea Cable Link ] ஐரோப்பாவுடன் [ஸ்பெயின்] 9 மைல் (15 km) நீண்ட கடலடி மின்வடத் தொடர்பு வைத்துள்ளது. முதல் சூரியக்கதிர் நிலையம் 2015 இல் இயங்கத் துவங்கியது. 2017 இல் 5750 GWh மின்னாற்றல் ஸ்பெயின் மொராக்கோவுக்கு அனுப்பியது. இப்போது மொராக்கோ ஸ்பெயினுக்கு சூரியக்கதிர் மின்சக்தி அனுப்பும் காலம் வந்துவிட்டது.
திட்டமிட்ட ஐந்து சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்களுள் முதலாக ஒன்று 500 MW யூனிட் மொராக்கோ தென் பகுதியில் உள்ள ஓரட்ஸாசாட் [Ouratzazate] நகரில் கட்டப்பட உள்ளது. 2013 மே மாதம் 10 இல் கட்டுமானம் ஆரம்பமானது. திட்டம் முக்கட்டப் போக்கில் [160 MW சூரியக்கதிர் குவிப்பு நிலையம், 200 MW விரிவு வட்ட நிலையம் & 150 MW சூரிய அடுப்பு நிலையம்] நிறுவகம் ஆனது. [Noor 1 (160 MW Concentrated Solar Power Plant), Noor 2 (200 MW Parabolic Mirror Plant), Noor 3 (150 MW Solar Trough Plant ]. புது நிலையங்களில் பயன்படும் விரி வளைவுச் சூரிய எதிர் ஒளிக் கண்ணாடித் தட்டுகள் [Solar Parabolic Mirrors] 12 மீடர் [39 அடி] உயரம் உள்ளவை. சூரிய வெப்பத்தை குவித்து உறிஞ்சும் திரவக் குழல்கள் 390 டிகிரி செல்சியஸ் [740 டிகிரி பாரன்ஹீட் ] அளவீட்டில் ஓடுபவை. அந்த நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மின்சக்தி அனுப்புபவை. நூர் 1 [Noor 1] சூரியக்கதிர் நிலையத்தில் 500,000 வளைவுக் கண்ணாடிகள் [Parabolic Mirrors] 800 அணி வகுப்பில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மாடல் நிலையம் அமெரிக்கா காலிஃபோர்னியா – நெவேடா, எல்லைப் பக்கம் மொஹாவி பாலை வனத்திலும் உள்ளது. 2.2 பில்லியன் செலவில் 400 MW திறனில் உருவாகும் “இவான்பா” [IVANPAH ] சூரியக்கதிர் மின்சார நிலையம் 5 சதுர மைல் பரப்பில், நாற்பது மூவடுக்குக் கோபுரத்தில் ஆயிரக் கணக்கான சூரியக் கண்ணாடிகளால் இயங்கி வருகிறது. இவான்பா சூரியக் கதிர் நிலயம்140,000 இல்லங்களுக்கு மின்சக்தி பரிமாறும் திறம் உடையது.