நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
உளவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
சந்திரனில் சின்னத்தை வைத்தது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாம் சந்திராயன்
2019 ஜூலையில் சென்று இறக்கும்
விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !
பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
சீரான விண்கப்பல் ஓர்நாள்
தாரணி சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது !
அடுத்து இரண்டாம் சந்தரயான்
நிலவைச் சுற்றி வந்து
தளவுளவி நிலவில் இறங்க,
தளவூர்தி
தவழ்ந்து சென்று தளம் ஆயும்
திட்டமும் உள்ளது.
+++++++++++
“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”
டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).
++++++++++++++++++++++++