துணைவியின் இறுதிப் பயணம் – 6
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[36]
என் கதை
எழுதி, எழுதி
எழுதிக் கொண்டே எழுதி,
எழுதிய பின்னும்
எழுதி,
இன்னும் உருகி எழுதி
என்றும் எழுதி
இப்பிறவி பூராவும் நான் எழுதி
எழுதி வந்தாலும்,
ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு
அத்தமனம் ஆனாலும்,
என் எழுத்தாணி அழுது
முறிந்தாலும்,
என் துயரம் தீராது !
என்னிதயப் புண் ஆறாது !
என் பிணைப்பு
பாசப் பிடிப்பு மாறாது !
என் மனப்புண்,
உன் மனப்புண் போல் தெரியலாம் !
என் அதிர்ச்சி போல்
உன் அதிர்ச்சியும் நேரலாம் !
என் கண்ணீர்த் துளிகளில்
உன் துயர்ப் பிம்பம் காணலாம் !
என் சோகக் கதை
உன் கதையைக் கூறலாம் !
அப்போது,
உன் கண்ணீர்
என் கண்ணீர் ஆகிவிடும் !
++++++++++++++++++++
[37]
இரவில் ஓர் அலறல் !
“அம்மா வுக்கு என்ன
ஆனது ?”
இப்படி ஓர் அலறல்
எழுந்து,
நள்ளிரவில் கேட்டு மேல்
மாடியில் தூங்கும்
என் மூத்த மகள்
துள்ளி எழுந்து விட்டாள்.
என் பேத்தியும்
விழித்துக் கொண்டாள் !
என் வாயில் எழுந்த
அக்குரல்
கீழ் அறையில் தூங்கும்
எனக்கு மட்டும்
என் காதில்
ஏன் கேட்க வில்லை !
+++++++++
[38]
உருகி, உருகி
ஊனுருகி உள்ள மெல்லாம்
வெந்து சாம்பலாக,
தானுருகி வாழ்வில்
தனக்கெனப் பிறந்தவளை
வானுலகுக் கென்கையால்
மின்கனலில் அனுப்பி,
நானுருகித் தனியனாக
நான்முகன் எழுதி வைத்தான்.
++++++++++++++
[39]
அணையாத கனல்
ஏற்றி வைத்த உன்
மெழுகுவர்த்தி ஒருநாள்
காற்றடிப்பில்
பட்டென அணைந்து விடும் !
எரியும் விளக்குகள்
எல்லாமே
ஒருநாள் அணைந்து போகும் !
உன் உடம்பும்
ஒரு மெழுகு வர்த்தியே !
அதிலே ஆட்சி புரியும்
ஆத்ம உயிரும் ஓர்
தீக்கனல் சக்தியே !
என் வீட்டில் வாழ
ஏற்றி வைத்த
ஓர் கலங்கரை விளக்கு
என் துணைவி !
அவள் நடமாடும் தீபம் !
குப்பெனப் புயலில் அணைந்து
எங்கும் இருள் மயம் !
என் நெங்சில் அப்போது
பற்றிய தீ மட்டும் ஏன்
இன்னும் அணைய வில்லை ?
துணைவிக்கு
அன்று நான் இட்ட தீ
அணைந்தது,
ஆனால் அதனால்
எனது நெஞ்சில் பற்றிய தீ
இதுவரை
அணைய வில்லை ! அது
அணையுமா ? அணையுமா ? என்றும்
அணையுமா ?
+++++++++++++++
[40]
அறுந்த தொப்புள் கொடி
பிறந்த சிசுவுக்கு இருப்பது
ஒன்றில்லை !
தொப்புள் கொடிகள்
இரண்டு !
பெற்ற தாயுடன்
இணைந்தது ஒன்று !
தெரிவது
மனித கண்ணுக்கு !
சேயிக்குத் தெரியாமல்
இயங்கி வருவது
இரண்டாவது தொப்புள் கொடி !
படைப்பாளியுடன்
பிணைந்தது !
ஆத்மப் பிணைப்பு அது !
உயிர்ப் பிணைப்பு !
தெரியும் தொப்புள் கொடி
அறுத்தால்
சேய் தானாய் இயங்கும் !
தெரியாத
தொப்புள் கொடி அறுந்தால்
செத்துவிடும் சேய் !
துணைவிக்கு அறுந்து போனது
பிணைப்புக் கொடி !
+++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++