அமர கீதங்கள்
துணைவியின் இறுதிப் பயணம்
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
தோற்றம் : அக்டோபர் 24, 1934
மறைவு : நவம்பர் 18, 2018
++++++++++++++++++
தமிழ்வலை உலக நண்பர்களே,
எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.
உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.
என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
+++++++++++++
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்,வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
மனைக்கு விளக்கு மடவாள்.
நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]
+++++++++++
[1]
படமாகிப் போனாள்\!
நடமாடும் தீபம் புயலில்
அணைந்து போய்,
சுவரில்
படமாகித் தொங்கும் !
வசிப்பு
இடம் மாறிப் போகும்
பூமியின்
தடம் மாறி நோகும் !\
விட்டு
விடுதலை யாய் ஏகும் !
+++++++++++
[2]
சொல்லாமல் போனாள்
பூவோடு போனாள் !
நெற்றிப்
பொட்டோடு போனாள் !
மங்கலத்
தாலியுடன் போனாள் !
என்னைத்
தவிக்க விட்டுப் போனாள்.
தங்க ரதத்தின்
பயணம் நிறுத்தம்
ஆனது !
செல்லும் போது
சொல்லாமல் போனாள்.
+++++++++++
[3]
தனிப்பறவை
துணைப் பறவை போனது
துடிப்போடு !
தனிப் பறவை நான்
தனியாய்க் குமுறி
தவிக்க விட்டுப் போனது !
இனி வீட்டில்
காத்திருக்க எனக்கு
எனது இல்லத்தரசி ஏது ?
உணவு ஊட்டும்
வளைக் கரங்கள் ஏது ?
கண்ணோடு
கண் இணை நோக்கிக்
கனிவு கொடுக்கும்
பெண் ஏது ?
+++++++++++
[4]
நொடிப் பொழுதில்
துடி துடித்துப் போனதே என்
துணைப் புறா !
என் நெஞ்சில்
அடி அடித்துப் போனதே என்
ஆசைப் புறா !
இடி இடித்துப் போனதே என்
இல்வாழ்வில் !
நொடிப் பொழுதில்
முடிந்து போகும் அவள்
தொடர் கதை !
கண் திறந்து நோக்கி
கடைசியில்
கை பிடித்துப் பிரிந்ததே என்
கவின் புறா !
+++++++++++
[5]
முடிந்த கதை
இதய வீணை கை தவறி
உடைந்த பிறகு
இணைக்க முடியுமா ?
புதிய கீதம் இனி அதிலே
பொங்கியே எழுமா ?
உதய சூரியன் எனக்கினி மேல்
ஒளியும் வீசுமா ?
விதி எழுதி முடித்த கதை
இனியும் தொடருமா ?
+++++++
[6]
நேற்று,
நேற்று
ஒளிகாட்டி, வழிகாட்டி
நடமாடிய தீபம்,
புயல்
காற்றிலே
அணைந்து போய்,
வீட்டுச் சுவரில்
படமாகித் தொங்கும்
இன்று,
மாலை போட்டு !
++++++++
[7]
மெய்க்காட்சி
கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போன பிறகு தான்
அதன் இழப்பு,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !
+++++++++++++
[8]
புனிதவதி
எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள், ஒருமுறை நான் பார்த்து ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்,
ஐம்பத் தாறு ஆண்டுகள், ஆதவன் உதித்தது ! அத்தமித்தது !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.
+++++++++++++++
[9]
ஒருவரி
ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம் இப்படி
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !
+++++++++++++
[10]
கால வெடி
[Time Bomb]
காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் உப்பிக் கிழிந்து குருதி கொட்டும் ! நில்லாது
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி கண்டேன் ! வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அபாய அறுவை முறை
வெற்றியே !
ஆனால் இறுதியிலே
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !
+++++++++++++
[11]
எழுதப் பட்டிருக்கிறது !
எப்படித் துவங்கும் அவள் இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது ! முன்பே திட்டமிடப் பட்டது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !
++++++++++++++++
[12]
கண்ணீர்த் துளிகள்
எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து, பாரெங்கும் பரவி
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !
+++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்.
நொறுங்கிப் போனென்
தாக்கம் தொற்றியதால்!
ஆறுதலுக்கு அப்பாற் பட்ட பிரிவு
இயற்கை இயங்கி வெறுமையை தாங்கும் திண்மையை அருள வேண்டுகிறேன்
தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் இரண்டறக் கலந்திட
எல்லாம் வல்ல அன்னைக்கு வேண்டுதல்கள்.
Pingback: ஜெயபாரதன் துணைவியாரின் இறுதிப் பயணம் | தமிழில்