
தங்கத் தமிழ்நாடு
சி. ஜெயபாரதன், இராம. மேகலா
தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட
தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட
ஆத்திசூடி ஓளவை, சூடிக்கொடுத்த ஆண்டாள்,
வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
புதுமைக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
யாவரும் உனது மாதவ மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
++++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 25, 2016 [R-1]
ஐயா!
உமது பதிவுகளில் நுனிப்புல் மேய்ந்தேன்…மேனி சிலிர்த்தது…
தேடல் இருப்பின் தீர்க்கம் பிறக்கும்!
என்ற தெளிவும் கிடைத்தது..
நானும் மெக்கானிக்கல் என்ஜினீரே…
தமிழில் உழன்று..கலைகள் பல கற்று…எண்ணிலடங்கா கனவுகளோடு…காலமும்,காலனாய் கடன்களும் விரட்ட,,,கருவாடாகிக் கொண்டிருக்கிறேன்….துபையில்…..
என் எண்ணங்களுக்கு என்றோ விடுதலை கிடைத்து விட்டது …செயல்களுக்கு இன்னும் இல்லை…
செழுமை அடைய செவிகள் திறந்தே கிடக்கிறது…
என்னை எரிக்க…தன்னையே எரித்தவள்…என்னுள் இருந்து என் நெருப்பை காக்கிறாள்…என்னை ஈன்றவள்..
கண்கள் ஈரமாய் நானும் உந்தன் கதவுகள் தட்டுகிறேன்…
பிச்சை கேட்க…
தமிழமுது தாருங்கள்…
மௌனம் உடைத்துவிட்டேன்…அணுப்பிளவு ஆரம்பமாகட்டும்…
சங்கிலி வினை தொடரட்டும்…
என்னை என்றவள் கனவு பலிக்கும்…
என் கண்கள் இருக்கிறது..
உமது கருணையும் என் கணீர் துடைத்தால்!
கோ . கோகுல் பிரசாத்.
வாருங்கள் நண்பரே கோகுல் பிரசாத்,
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போதையத் தேவை நம்மைப்போல் பொறியியல் விஞ்ஞானப் படைப்பாளர்தான்.
படைப்போம், படைப்போம் அயராது படைப்போம். எங்கிருந்தாலும் படைப்போம்.
பராட்டுக்கு நன்றி.
சி. ஜெயபாரதன்