வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணுமின் உலைக் கதிரியக்க அபாய எதிர்பார்ப்புகள்!

(Anti-Nuclear Power Activists in India)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++

முன்னுரை: ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத் திறமை மிக்க விஞ்ஞானிகளை, பொறிநுணுக்க வல்லுநர்களை உற்பத்தி செய்து வருகிறது! அணு உலை எதிர்ப்பாளிகள் ஞாநி, டாக்டர் இரமேஷ், புகழேந்தி போன்ற தமிழக அறிவாளிகள் இப்போது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் யாவும் புற்றுநோய் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யில்லை என்றும் அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிடப் பறைசாற்றி வருகிறார்கள்!

பாதுகாப்பான பாரத அணு உலைகளின் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு இதுவரை உண்டான தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதங்கள் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! அச்ச மின்றி பாரத அணு உலைகளில் ஆக்க உணர்வோடு பணி புரியக் கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

மூர்க்க யானையைப் பார்க்கப் போன ஆறு குருடர்கள்!

யானையின் பூத வடிவையும், மூர்க்கப் பண்பையும் கண்டு அஞ்சிய ஒருவர் அது எப்படி இருக்கிற தென்று பார்த்து வர ஐந்து குருடர்களை அனுப்பினார்! கால்களை நெருடி மிரண்ட குருடன் கோயில் தூணைப் போலிருக்கிறது யானை என்று கூறினான்! தும்பிக்கையை வருடிய ஒருவன் ‘ஐயோ! மலைப் பாம்பு போலிருக்கிறது யானை என்று அஞ்சி ஓடினான்! மூன்றாவது குருடன் முன்னும் பின்னும் அசையும் காதுகளைத் தடவி, வெஞ்சாமரை விசிறிகளைப் போன்றது யானை என்று வியந்தான்! படுத்துக் கிடந்த போது அதன் பூத உடலைத் தடவிய ஒருவன் பெரிய பாறாங்கல் போல இருக்கிறது யானை என்று மனம் பூரித்தான்! ஐந்தாவது குருடன் நீட்டிக் கொண்டிருக்கும் தந்தங்களை நீவி, யானைக் கூரிய ஈட்டியைப் போன்றது என்று வெகுண்டு ஒதுங்கினான்! யானையின் முழுத் தோற்றத்தையும், குணத்தையும் அவர்களில் ஒருவர் கூடக் கண்டு கொள்ள முடிய வில்லை! அதன் மூர்க்கக் குணத்தை மட்டும் அறிந்து தூரத்தில் நின்று நோக்கிய ஆறாவது நபருக்கு, யானையின் உறுப்புகளைப் பற்றியோ, பயிற்சி மூலம் அதன் வீரிய பண்பைத் திருத்த முடியும் என்ற அறிவோ அல்லது முறையுடன் பழகினால் அதனைப் பணி புரிய வைக்கலாம் என்றோ எதுவும் தெரியாமல் போனது!

அனுப்பிய ஆறாவது நபர் ஐந்து குருடர்கள் கண்டு பிடித்துத் தந்த முரண்பாடான விளக்கங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று குழப்பம் அடைந்தார்! தனக்கு விருப்பான ஒருதிசைக் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தன் கண்ணோட்டத்தில் இவ்விதம் எழுதி வெளியிட்டார்:- ‘மூர்க்கமான யானை மாந்தரை விழுங்கி விடும் மலைப் பாம்பு! அதன் அருகில் எவரும் செல்வது ஆபத்தானது! மனிதரைக் குத்திக் கொன்று விடும் கூரிய ஈட்டிகள் இரண்டு யானையிடம் உள்ளன! அருகில் நடமிடும் நபர்களைக் கனத்த காலால் மிதித்து நசுக்கி விடும்! ‘ ஆறாவது அறிவாளி அனைத்தையும் சேர்த்து யானையைப் பற்றி வெளியிட்ட விபரங்களில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை! அதே சமயம் அவரது கூற்றில் பல தவறுகள் இருக்கின்றன!

அணுமின் உலை எதிர்ப்பாளிகளின் குறுகிய பார்வைகள்

அணுமின் உலை எதிர்ப்பாளிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, தூரத்தில் அஞ்சி நின்று கொண்டு பூதக் கண்ணாடி மூலமாகப் பார்த்து அணு உலைகளை ஆராய்ந்து வருகிறார்கள்! அல்லது அணு உலை நிகழ்ச்சிகளைக் காதால் கேட்ட இரண்டாவது நபர் வடிகட்டி எழுதிய சில சக்கைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்! அல்லது தெளிந்த பாலை விட்டு மேலாக மிதக்கும் மேலாடையை மட்டும் எடுத்துக் கொண்டு, அணுமின் உலைகளை எதிர்க்க வந்து விடுகிறார்கள்!

பூகம்பத்தில் கூடங்குள ரஷ்ய அணு உலை பிளந்து விடும் என்று ஒருவர் கூச்சலிடுகிறார்! கடந்த முப்பது ஆண்டுளாக உலகில் இயங்கி வரும் 438 அணுமின் உலைகளில் எதுவும் பூகம்பத்தில் இதுவரைத் தகர்ந்து போக வில்லை! அடுத்தவர் கல்பாக்கம் அணு உலையில் விபத்தென்றால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்று அச்ச மூட்டுகிறார்! மற்றொருவர் கல்பாக்கம் அணு உலையில் பணி புரிவோருக்கும் அவரது குடும்பத்தாரும் புற்று நோய் தொற்றிக் கொள்கிறது என்று பயங்காட்டுகிறார்! அணு உலைக் கருகில் வாழ்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் ஆறு விரல்கள் முளைக்கும் என்று இன்னொருவர் வட்டாரப் பட்டியலைக் காட்டுகிறார்! இவை அனைத்தும் அணுமின் உலைகளில் உண்டாகும் கதிர்வீச்சால் ஏற்படும் உடற் தீங்குச் சம்பவங்களா என்பது ஐயப்பாட்டுக்கு உரியன!

ஞாநி தனது ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் வட்டாரப் பணியாளிகள் 15,025 பேரைச் சோதித்ததில் 167 நபர்கள் [1%-2%] புற்றுநோய் கொண்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார்! புற்றுநோய்ப் புள்ளி விபரம் எடுக்கும் புத்திசாலிகள் முக்கியமான ஒரு விபரத்தைக் காட்ட வில்லை! அதை விட்டு விட்டார்கள்; அல்லது மறைத்து விட்டார்கள்; அன்றி அதைச் சேமிக்க மறந்து விட்டார்கள்! கல்பாக்க அணு உலை கட்டுவதற்கு முன்பாக அந்த வட்டாரத்தில் வாழ்ந்த 15,000 மாந்தரில் எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சதவீதம் புற்றுநோய் வந்திருந்தது என்று காட்டி யிருந்தால், இரண்டு சதவீதங்களின் கழித்தல் எண் கல்பாக்க அணு உலையால் உண்டானது என்று நிரூபித்துக் காட்டலாம்! அதுதான் முறையான, துல்லிய புற்றுநோய்ப் புள்ளி விபரம்! அவ்விதம் அவரது புள்ளி விபரங்கள் ஏனோ காட்டப்பட வில்லை!

வட அமெரிக்க நாடுகளில் வழக்காட விழித்திருக்கும் ஓநாய்க் கூட்டம்

சமீபத்தில் குறிப்பிட்ட சில ஃபயர்ஸ்டோன் டயர்கள் [Firestone Tires] அவற்றைப் பூட்டிய கார் வாகனங்கள் ஓடும் போது வெடித்து, வட அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான நபர்கள் மரண மடைந்தது வெளியானது. உடனே வாய்ப்புகளைப் பயன் படுத்தி ஓநாய்களைப் போல் தாவிய வழக்கறிஞர்கள் ஃபோர்டு மோட்டர் கம்பெனியின் [Ford Motor Company] மீது வழக்குப் போர் தொடுத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து விட்டனர். அது போல் அணு உலைகளால் புற்று நோய் மரணங்கள் பணியாளிகளுக்கு ஏற்படுவதாகத் தெரிய வந்தால், அவற்றின் உரிமை யாளர்களை நீதி மன்றத்திற்கு இழுத்துப் போரிட்டு வழக்கறிஞர் கூட்டம் உறிஞ்சிக் குடித்து சக்கை யாக்கிவிடும்!

தற்போது [2000 முடிவு வரை] அமெரிக்க நாட்டில் 104 அணுமின் உலைகள், கனடாவில் 12 அணுமின் உலைகள், பிரான்ஸில் 59 அணுமின் உலைகள், பிரிட்டனில் 35 அணுமின் உலைகள், ஜெர்மனியில் 19 அணுமின் உலைகள் [20-30] ஆண்டுகளாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. மேற்கூறிய மேலை நாடுகளில் பணி செய்வோர் எவருக்கும் அணு உலைக் கதிர்வீச்சால் புற்று நோய்களோ அன்றி வேறெந்த நோய் நொடிகளோ வருமாயின் அங்குள்ள வழக்கறிஞர்கள் உரிமை நிர்வாகத்தின் மீது வழக்குப்போர் தொடுத்து, பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடுத் தொகையைப் பறித்து விடுவார்கள்! அப்படிப்பட்ட வழக்குப் போர்கள் அமெரிக்காவிலோ, கனடாவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ எந்த அணுமின் உலையின் கதிர்வீச்சால் தூண்டப் பட்டதாக இதுவரை அறியப்பட வில்லை!

மரணப் புள்ளி விபரப்படி, அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் தற்போது புற்றுநோயில் மாண்டு போகிறார்! 1970 முதல் 2000 ஆண்டு வரை கடந்த முப்பது வருடங்களில் சுமார் 12 மில்லியன் நபர் புற்று நோயில் மடிவார் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது! அதாவது ஆண்டு ஒன்றுக்கு 400,000 பேர் புற்று நோயுக்குப் பலியாவார்கள்! அவற்றில் இயற்கை, மற்றும் மானிடச் செயற்கைக் கதிர்வீச்சுப் புற்று நோய்களால் மாள்பவர் மட்டும் [3%] 10,000 பேர்கள்! அந்த 10,000 பேர் மரணத்தில் 104 அணுமின் உலைகளில் பணிபுரி பவரில் 40 பேருக்கு புற்றுநோய் வரலாம் என்று மதிப்பீடு அட்டவணை காட்டுகிறது. இதில் முக்கியமாகத் தெரிய வேண்டியது: ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் 97% அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை அல்ல!

அணுவியல் துறைகள் வளர்ச்சிக்கு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை!

‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! தற்போது பாரதத்திலே இரண்டாவது பெரிய அணுவியல் ஆராய்ச்சிக் கூடம், இரட்டை அணுமின் நிலையம், வேகப் பெருக்கி சோதனை அணு உலை கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன! பாரதத்திலே மிகப் பெரும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் நிலையங்கள் கூடங்குளத்தில் உருவாகி வருகின்றன! ஞாநி, டாக்டர் இரமேஷ் போன்ற தமிழக அறிஞர்கள் தற்போது கல்பாக்கம், கூடங்குள அணுமின் நிலையங்கள் யாவும் கான்சர் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யற்றவை என்றும் பறைசாற்றி வருகிறார்கள்! கல்பாக்கம், கூடங்குளம் மின்சக்தி அளிப்பதோடு, ஆயிரக் கணக்கான தமிழருக்கும், மற்ற மாநில மாந்தருக்கும் நிரந்த, தற்காலிக வேலைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன!

பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானத்தின் முன்னேறத்தையோ, விண்வெளி ஏவுகணை வீச்சுகளையோ பழைமை வாதிகள் யாரும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்த முடியாது! அணுயுகமும், அண்ட வெளியுகமும் உலகெங்கும் ஓங்கி வளரும் போது, பாரதம் மாந்தரும் அவற்றில் சிறிதளவு பங்கெடுக்காமல் போனால், இந்தியா பின்தங்கிய நாடாக தாழ்ந்து போய்விடும்! அணுமின் உலைகளை எதிர்ப்பாளிகள் புறக்கணித்தாலும், அணுவியல் துறையில் முன்னணியில் நிற்கும் பாரதம், இன்னும் பல்லாண்டுகளுக்கு அணு மின்சக்தியை உற்பத்தி செய்யத்தான் போகிறது!

யந்திர வாகனங்களில் ஏற்றுக் கொள்ளும் அபாய எதிர்பார்ப்புகள்

மனிதர் தயாரித்த எந்த யந்திர சாதனமும், வாகனமும் மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று எவரும் உத்திரவாதம் தர முடியாது! கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் ஆக்கப்பட்ட நீராவி எஞ்சின் அல்லது டீசல் எஞ்சின் கப்பல்கள், ரயில் வண்டிகள், சுழற் தட்டு அல்லது ஜெட் விமானங்கள், ராக்கெட் எஞ்சின் விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றில் சில வாகனங்கள், எப்போதா வது மனிதத் தவறாலோ அல்லது யந்திரப் பழுதாலோ விபத்துக் குள்ளாக நேரும்! அவைத் தரக் கட்டுப்பாடு முறையில் தயாரிக்கப் பட்ட உறுப்புகளால் அமைக்கப் பட்டாலும் அபாயங்களைக் குறைக்கும் குறிக்கோளில் வடிவாக்கப் பட்டவை! உதாரணமாக அமெரிக்காவில் பெரு வீதிகளில் காரில் பயணம் செய்வோர் அபாய எதிர்பார்ப்பு 3000 இல் 1. கடல் பயணத்தில் கப்பலில் செல்வோர் அபாய எதிர்பார்ப்பு 100,000 இல் 1. தீவிபத்துக்களில் மரணம் அடைபவர் அபாய எதிர்பார்ப்பு 25,000 இல் 1. தொடர் வண்டி ரயில் பயணத்தில் அபாய எதிர்பார்ப்பு 250,000 இல் 1. ஆகாய விமானப் பயணங்களில் ‘ஏற்கும் அபாய எதிர்பார்ப்பு ‘ [Acceptable Risk] 100,000 இல் 1 [1 in 100,000 chance of fatality per year].

அனுதினமும் ஒரு மணி நேரத்தில் நூற்றுக் கணக்கான வாணிபத்துறை விமானங்கள் குறைந்தது (300-400) நபர்களைத் தூக்கிக் கொண்டு வானத்தில் ஐந்து மைல் உயரத்தில் பறக்கின்றன! எப்போதாவது மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அன்றிக் காலநிலை முறிவாலோ விமானம் விழுந்து மாந்தர் பலர் உயிரிழக்கிறார்! ஆனால் அடுத்து விமானங்கள் பறக்காமல் போகின்றனவா ? அல்லது மக்கள் விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய அஞ்சுகிறார்களா ? இல்லை!

மனிதருக்குப் பயன்படும் அல்லது மனித ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் ஆகாய விமானம், அண்டவெளிக் கப்பல், அணுமின் உலை ஆகியவை யாவும் ‘பூஜியப் பழுதுகள் ‘ அல்லது ‘ஏற்கும் பழுதுகள் ‘ [Zero or Acceptable Defects] என்னும் தரக் கட்டுப்பாடு நெறியில் [Quality Control & Assurance] தயாரிக்கப் பட்ட சாதனங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டவை! ஆகவே பணம் கொடுத்துப் பயணம் செய்ய ஒருவர் விமான ஆசனத்தில் அமரும் போது, விமானம் ஆக்கப்பட்ட ‘ஏற்பு அபாய எதிர்பார்ப்புக்கு ‘ [Acceptable Risks] உடன்படுகிறார்! அதே சமயம் விமான ஏற்பு அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், ஏற்றுக் கொள்ளாதவர் விமானத்தில் பறக்க வேண்டியதில்லை! பதிலாக மெதுவாக ஊர்ந்து செல்லும் கப்பலில் செல்லலாம்! கப்பல் பயணத்தின் அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், கடல் பயணத்துக்கு அஞ்சுபவர் எங்கும் போகாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கலாம்!

பணியாளருக்கு அளிக்கும் உயர்ந்த பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள்

இந்திய அணுசக்தி நிர்வாகம் முதலில் தேர்ந்தெடுக்கும் போதே சிறந்த விஞ்ஞானிகளையும், உயர்தர எஞ்சினியர்களையும் பாரத மெங்கும் தேடிச் சலித்து எடுக்கிறது. 1957 ஆண்டு முதல் கடந்த 45 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 250 நபர்களைத் [50 எஞ்சினியர், 50 பெளதிக, 50 இரசாயன, 50 உயிரியல், 50 உலோகவியல் விஞ்ஞானிகள்] தேர்ந்தெடுத்து தனித் தனியாக ஓராண்டுக்குப் அணுவியல் விஞ்ஞானம், அணுவியல் இரசாயனம், அணுக்கருப் பொறியியல், கதிரியக்கத்தின் நன்மை தீமைகள், பாதுகாப்பு முறைகளில் கல்வி புகட்டப் படுகிறது. கல்லூரி போல் தேர்வுகளும் வைக்கப்படும். 2002 ஆண்டு வரைப் பயிற்சி பெற்ற 11250 [45×250=11250] வல்லுநர்களைப் ‘பம்பாய் அணுசக்தி பயிற்சிக் கூடம் ‘ [Atomic Energy Training School, Bombay] பாரத அணுவியல் துறைகளில் பணி செய்யத் தயாரித்துள்ளது. அவர்களே அனைத்து அணுவியல் துறைச்சாலைகள், அணு உலைகள், அணுமின் உலைகள், வேகப் பெருக்கி அணு உலை, புளுடோனியம், யுரேனியம் இரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இப்போது இயக்கி வருகிறார்கள்.

அத்துடன் ஒவ்வொரு அணுமின் உலைகளிலும் தனியாகக் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பணியாளிகளுக்கு அளித்து மனிதத் திறமைகள் கூர்மை யாக்கப் படுகின்றன. கதிரியக்கத்தைக் கையாள, அணு உலையின் தளங்கள் நான்கு கதிர்வீச்சு அரங்கு களாகப் [Zone-1, Zone-2, Zone-3, Zone-4] பிரிக்கப் பட்டுள்ளன. அரங்கு-1 நிர்வாகத் துறையினர் நடமாடும் தூய தளங்கள்; உணவு அருந்தும் அறைகள். அரங்கு-2 மிதமான கதிர்வீச்சு கொண்ட தளங்கள். ஆட்சி அறை, பராமரிப்புத் தளங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. வீரிய கதிர்வீசும் சாதனங்கள் பராமரிக்கப் படும் தளங்கள் அரங்கு-3 நிலையைப் பெறுபவை. அரங்கு-4 இல் அணு உலை, தீய்ந்த எரிக்கோல்கள் சேமிப்புத் தடாகம் [Spent Fuel Storage Pool] ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. அரங்குகளின் எல்லைகளில் அழுத்தமான நிறக் கோடுகளில் தரையில் வரையப் பட்டு, அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகள், கவசங்கள் ஆகியவை அறிக்கைப் பலகையில் குறிக்கப் பட்டு, எச்சரிகை விதிகள் காணப்படும்.

அணுமின் உலை அணுகுண்டைப் போல வெடித்துப் பேரழிவை உண்டாக்குமா ?

ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் வெடித்த அணு குண்டு களுக்கும், மின்சாரம் பரிமாறும் அணு உலைகளுக்கும் பெருத்த மாறுபாடுகள் உள்ளன! செர்நோபிள் ரஷ்ய அணு உலையில் உண்டான வெடிப்பு அணு குண்டுகள் போல நியூட்ரான் பெருக்கம் மீறி அணுக்கருப் பிளவுகளால் ஏற்பட வில்லை! அணு உலையின் தணிப்பு நீர் மூலக்கூறுகள் கடும் வெப்பத்தால் நீராவி ஆகி, உலோகத்துடன் கலந்து மின்னியல் பிரிவு பட்டு, ஏராளமான ஹைடிரஜன் வாயு கிளம்பி, எப்போதும் தீக்கனலாய்ச் சிவக்கும் கரித்திரள் கட்டியின் உஷ்ணத்தில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய் இணைந்ததால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது! அணுகுண்டு போல அணு உலைகள் வெடித்து வீடுகளையும், கட்டடங்களையும் தகர்த்துப் பேரழிவை உண்டாக்க மாட்டா! அணுகுண்டில் கட்டு மீறிப் பெருகும் அணுக்கரு இயக்கங்கள் வேக நியூட்ரான்களால் தூண்டப் படுபவை! கல்பாக்கம் வேகப் பெருக்கி அணு உலையைத் தவிர, பாரதத்தின் மற்ற எல்லா அணுமின் உலைகளும் மெது வேக நியூட்ரான் இயக்கங்களால் வெப்ப சக்தியை ஆக்குபவை!

அணுகுண்டுகளில் யுரேனியம்235 [Close to 100% purity] அல்லது புளுடோனியம்239 ஆகிய அணுப்பிளவு உலோகங்கள் [Fissionable Materials] உபயோகமாகி, எந்த வித மிதவாக்கியும் [Moderator to reduce Neutron Energy] இல்லாது வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கிப் பேரளவு வெப்ப சக்தி, வெடிப்பு, கதிரியக்கப் பொழிவுகளும் பொங்கிப் பேரழிவு உண்டாகுகிறது!

ஆனால் வேகப் பெருக்கியைத் [Fast Breeder Reactor] தவிர மற்ற பெரும்பான்மை யான வெப்ப அணு உலைகளில் [Thermal Nuclear Reactor] பயன்படும் எரிபொருள்: [(0.7%-3%) Fissionable Uranium235 or (2%-3%) Plutonium]. எளிய நீர் அல்லது கனநீர் மிதவாக்கியாக [Light Water or Heavy Water Moderator] உபயோகமாகி வேக நியூட்ரான் சக்தி மிதமாக்கப்பட்டு வெப்பப் பிளவு இயக்கத்தில் [Thermal Fission Reaction] மட்டுமே சக்தியை உண்டாக்குகிறது! வேகப் பெருக்கி அணு உலைகளில் மிதவாக்கி இல்லாது வேக நியூட்ரான் இயக்கம் நிகழ்ந்தாலும், எரிபொருளின் செறிவு (2%-3%) புளுடோனியம்239 அல்லது (2%-3%) யுரேனியம்233 மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுகிறது! ஆதலால் பாரதத்தின் எந்த அணு உலையிலும் அணுகுண்டு போல் நியூட்ரான் இயக்கத்தால் பெரு வெடிப்போ அன்றிக் கதிர்வீச்சுப் பொழிவால் சுற்றுப்புற பேரழிவோ எதுவும் நிகழவே நிகழாது!

இந்திய அணுமின் உலைகளில் பணி செய்யப் பாதுகாப்பு உறுதி

பாரத அணுவியல் துறைகளின் உள்ளே பணிபுரியும் நபர்களுக்குக் கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளிப்பதுதான் நிர்வாகிகளின் முதல் பணி! முக்கியப் பணி! அடுத்த இரண்டாம் பணி, அணுவியல் துறைகளைச் சுற்றி வாழும் பொது மக்களைக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து காப்பது! சூழ்மண்டலக் காற்று, நீர்வளம், நிலவளம், தாவரங்கள் ஆகியவற்றைக் கதிர்க் கசிவுகளிலிருந்து காப்பது! இவ்விரண்டு பணிகள் சரிவரச் செய்யப் பட்டு வருகின்றனவா என்று அனுதினம் 24 மணி நேரமும் கண்காணித்து மேற்பார்ப்பது, ‘உடல்நலப் பெளதிக வாதிகள் ‘ [Health Physicists]. உடல்நலப் பெளதிகக் குழுவினர்தான் பிலிம் பாட்ஜ்களை [Film Badges] பணியாளிகளுக்கு அளித்துச் சோதித்து வருபவர். அனுதினமும் சூழ்மண்டலக் காற்று, நீர், நிலத்தின் கதிர்த் தீண்டல்களைச் சோதித்து வருபவர். பணி புரியும் உடல்நலப் பெளதிக வாதிகள் நிலையத்தைச் சேர்ந்தவராயினும், அவரது தலமை அதிகாரிகள் தனிப்பட்ட நிறுவகத்தின் குழுவினர்!

பம்பாய், சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், தாராப்பூர், குஜராத், கர்நாடகா, நரோரா போன்ற பல இடங்களில் இயங்கி வரும் அணு உலைகள், அணுமின் உலைகள், அணுவியல் ஆய்வுத் துறைகள் ஆகியவற்றில் அநேக இந்திய ஆடவர், பெண்டிர் பணி புரிந்து வருகிறார்கள்! அவர்களில் 98 சதவீதம் வரையறைக்கு உட்பட்ட கதிரடி பெற்று உடல் நலமோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் சந்ததியில் யாருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை! அறிந்தோ அறியாமலோ வரையறை அளவோ, அதற்கும் சற்று மிகையான அளவோ கதிர்வீச்சுப் பெற்றவர்களும் புற்று நோயால் தாக்கப் படவில்லை! அவரது பிள்ளைகளுக்கும் ஆறாவது விரல் தோன்ற வில்லை!

பம்பாய் கனடா இந்திய அணு ஆய்வு உலையில் நான் தணிந்த கதிரடிகள் பெற்று ஆறு ஆண்டுகள் பணி செய்த பின், பிறந்த என் இரண்டு புதல்விகளில் யாருக்கும் என் கதிரடியால் எந்த நோயும் உண்டாக வில்லை! கைகளில் ஆறாவது விரலும் முளைக்க வில்லை! தற்போது கனடாவில் யந்திரவியல் எஞ்சினியர்களான என் இரண்டாவது புதல்வியும் அவளது கணவரும் அணுமின் நிலையங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். 4000 MWe [8×500 MWe] ஆற்றல் கொண்ட வட அமெரிக்காவின் மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையத்தில் [Pickering Nuclear Generating Station] மகள் பணி செய்கிறாள். எனது மருமகன் வேறொரு அணுமின் உலையில் 3200 MWe [4×800 MWe] ஆற்றலுடைய டார்லிங்டன் அணுமின் நிலையத்தில் [Darlington Nuclear Generating Station] பணி புரிகிறார். அவர்கள் இருவருக்கும் அணு உலைக் கதிரடியால் எந்த வித நோயும் இல்லை! அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை

தமிழக மாந்தருக்கு ஓர் வேண்டுகோள்! பாதுகாப்பான அணு உலைக் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு உண்டாவ தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதம் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! பாரத அணு உலைகளில் ஆடவர், பெண்டிர் யாரும் அஞ்சாமல் நிரந்தரமாகவோ அன்றித் தற்காலிகமாகவோ பணி செய்து அறிவுக்கும், திறனுக்கும், வயிறுக்கும் உணவு அளித்து வரலாம்! ஆக்க உணர்வோடு பணி புரிய கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

தகவல்:

1. World Nuclear Status Report, Nuclear Europe WorldScan [July-Aug 2001]

2. Safety of Candu Nuclear Power Stations By: V.G. Snell [Jan 1985]

3. Nuclear Power in Canada, Canadian Nuclear Association Report [1975]

4. Nuclear Risk Prevention & Mitigation, First Civil Protection Forum [Nov 29, 2002]

5. Radiation Protection Qualifications, Access Limits & Working Rights [July 2000]

6. Nuclear Power Safety & Understanding Ionizing Radiation [Aug 1992]

7. Nuclear Power in USA- A Rational Approach By: Robert W. Deutsch [1987]

***************************

16 thoughts on “வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணுமின் உலைக் கதிரியக்க அபாய எதிர்பார்ப்புகள்!

 1. /பாதுகாப்பான பாரத அணு உலைகளின் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு இதுவரை உண்டான தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதங்கள் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா!/
  வணக்கம் நண்பரே,
  நீங்க‌ள் சொல்லும் விஷ‌ய‌ங்க‌ள் உண்மையாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில்

  1.நீங்கள் சொல்லும் கருத்துகளை அரசு இந்தியாவில் உள்ள அணு உலைகளை ஒரு நடுநிலையான ஆய்வுகுழு மூலம் ஆய்வு செய்து ஏன் அறிவிக்க கூடாது?
  2. தோரிய‌ம் இந்தியாவில் அதிக‌ம் கிடைக்கும் போது ஏன் யுரேனிய‌ம் பயன்பாடுள்ள‌‌ அணு உலைக‌ள் அமைக்க‌ப் ப‌டுகிற‌து?
  ந‌ன்றி

 2. https://jayabarathan.wordpress.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE (இந்திய அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா)

  இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி

  டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு. அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் , கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங்களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன. அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.

  இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை. 1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது! சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா. இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!
  சி. ஜெயபரதன்

  • india arasankam sunami peralivai santhittha lattchanatthai thaan naadea parthathea avasara nadavadikkai eadukka india inuum palakkapadutha padavillai intha soolnilaiyila ithu india virku poruthamana thittam illai sunami peralai 7&8 adi kul thaan varum eandru eppadi urthiyaai solla mudikirathu unkalal iyarakkai peralivirkku eantha varaimuraikal kidayathu eanpathu uankalukku theriyaathaaa vipatthu nerum pothu avasara kala nerathil 3laxam makkalai veliyettra eatthanai vaakana vasathikal saalai vasathikal uallathu eandru eathaiyavathu nenaithu partherkala

 3. மூர்க்கத்தனத்துடன் மக்களின் அறியாமையை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் மத்தியில் உங்களின் இந்த வாதங்கள் எடுபடுமா? தெரியவில்லை. எது எப்படியோ? உங்களின் விழிப்புணர்வு தரும் கட்டுரை படித்து பலர் உண்மையினை உணர்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு உங்களின் சொல்லோவியம்.

 4. அன்புமிக்க நண்பரே,

  பல்லாயிரம் கோடி ரூபாய்ச் செலவில் கட்டிய கூடங்குள இரட்டை அணுமின் உலை மின்சாரம் (2000 மெக வாட்ஸ்) அனுப்பாவிடில் நாளொன்றுக்கு 100,000 டாலர் நிதியிழப்பு தமிழகத்துக்கும் மத்திய அரசுக்கும். அந்த மத்திய அரசு தமிழரை மீறித் துவக்கும் அணுமின் உலையை என்பது என் அழுத்தமான கருத்து.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 5. அணுமின் நிலையம் பற்றி பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன், பதிவுக்கும் செய்திகளுக்கும் நன்றி.

  கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்பானது என்பது பதிவின்மூலம் தெளிவாக விளங்குகிறது.
  ஒரு குழு அமைத்து, பாதுகாப்பு விஷயத்தை போராட்டக்காரர்களுக்கு விளக்கினாலும், போராட்டம் செய்பவர்கள் புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிடும் மனநிலையில் இல்லை. போராட்டம் அந்த நிலைக்கு சென்று விட்டது.

  இதை அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 6. ANUVAI CONROLL PANNA MUDIYADU ENDRAL EPPADI ANUVIL ERUNTHU ELECTRICITY,,, MUTTALGAL KANDIPPAKA ANUMIN NILAIYAM NAM NATTIRKKU THEVAI THAMIZ NATTIRKKU THEVAI PLEASE QUICK ORGENT!!!!!!!!!!!!KANDIPPAKA ANUMIN NILAIYAM NAM NATTIRKKU THEVAI THAMIZ NATTIRKKU THEVAI PLEASE QUICK ORGENT!!!!!!KANDIPPAKA ANUMIN NILAIYAM NAM NATTIRKKU THEVAI THAMIZ NATTIRKKU THEVAI PLEASE QUICK ORGENT THANK U INDIA

 7. மிக அற்புதமான விளக்கவுரைகள் …. நிச்சயமாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது .

  @ Sarvaakan : நண்பரே உங்கள் கேள்வி நியாயமானது தான் …
  // தோரிய‌ம் இந்தியாவில் அதிக‌ம் கிடைக்கும் போது ஏன் யுரேனிய‌ம் பயன்பாடுள்ள‌‌ அணு உலைக‌ள் அமைக்க‌ப் ப‌டுகிற‌து?//

  இந்தியாவின் இரண்டாம் நிலை அணுமின் நிலையங்களில் ( PU 239 மற்றும் தோரியம் 232 ) ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது . இன்னும் கொஞ்ச வருடங்களில் தோரிய அணுமின் உலைகளை இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை கூட வரும் . காத்திருப்போம் … நன்றி

 8. ஏன் தொழில் நுட்பத்தில் மிக உயர்ந்த நாடுகள் ஜெர்மனி உட்பட ஏன் மூட விரும்புகின்றன.
  ஏன் சூரிய ஒளி மின்சாரத்தில் அதிக முதலீடு மற்றும் அராய்ச்சி செய்யகூடாது?
  தமிழர் கண்டுபிடித்த ப்ளூ பாக்ஸ் தொழில் நுட்பத்தை விரிவு படுத்தலாமே.

 9. தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் பயனுள்ளது. ஆயினும் பொதுவாக மக்கள் மனதில் உள்ள கேள்விகள் இவை

  1. பெரிய அளவில் ஆழி பேரலை வந்தால் இந்த அணு உலை என்ன வாகும்?

  2. சுமாரான நில நடுக்கம் (6.5 to 7) ஏற்பட்டால் இந்த உலை எவ்வாறு இருக்கும்?

  3. ஜெர்மனி 2020 க்குள் தன் எல்லா அணு உலைகளையும் மூட முடிவெடுத்தது அர்த்தமற்ற பயமா?

  • 1. பெரிய அளவில் ஆழி பேரலை வந்தால் இந்த அணு உலை என்ன வாகும்?

   நிறுத்தம் அடைந்து அணு உலை பதுகாப்பாய் ஓய்வெடுக்கும்.

   2. சுமாரான நில நடுக்கம் (6.5 to 7) ஏற்பட்டால் இந்த உலை எவ்வாறு இருக்கும்?

   அணு உலைக்குச் சேதம் விளையாது.

   3. ஜெர்மனி 2020 க்குள் தன் எல்லா அணு உலைகளையும் மூட முடிவெடுத்தது அர்த்தமற்ற பயமா?

   அரசியல் ஓட்டு பயம்.

   • கீழ்க் காணும் செய்திக்கு உங்கள் பதில்? …
    …
    …1. மீன்பிடித் தொழிலால் கூடங்குளம் பகுதியில் இருந்து ஆண்டொன்றிற்கு அரசுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை எல்லம் அணுவுலை அமைந்தால் எந்தா நாட்டிற்கும் நம்மால் மீன் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்த இழப்பு உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏனோ? கல்பாக்கத்தில் பணி புரியும் பொறியியல் வல்லுனர்கள் அங்கு கிடைக்கும் மீன்களை வாங்குவதில்லை என்பது உஙளுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.
    …
    …2. புவி வெப்பத்திலிருந்து(Geothermal) மின்னாலைகள் அமைப்பதில் ஆராய்ச்சி செய்வதற்கு கூட அரசு சற்றும் சிந்தியாதது ஏனோ? இதில் 35GW முதல் 2000GW வரை கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
    …
    …3. அணுக்கரு உலையிலிருந்து குறைந்த அளவு கதிர்வீச்சு எக்காலத்திலும் வந்து கொண்டிருக்கும் என்பதை அறிஞர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். இது உயிரிகளில் திடீர் மாற்றத்தை (Mutation) ஏற்படுத்தும் என்பது உஙளுக்கு தெரியாதது ஏனோ?
    …
    …4. இந்த கதிர்வீச்சு அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக கல்பாக்கத்தில் அணுமின் உலையில் வேலைப் பார்ப்பவர்களின் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றனர். அதைச் சுற்றி வாழ்பவர்கள் பலர் புற்றுநோயாலும் தன்னெதிர்ப்புள்ள (self immune) தைராய்டு நோயினாலும் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பதையும் தாங்கள் டெகல்கா அறிக்கையில் ஏன் படிக்க வில்லை?
    …
    …5. கல்பாக்கத்தில் இயல்பு அளவை விட 50 மடங்கு காமா கதிர்வேச்சு கூடுதல் என்பதை நீங்கள் எப்போது உணர்ந்து கொள்வீர்கள்? (டெகல்கா படியுங்கள்)
    …
    …6. தமிழ் நாட்டில் உள்ள காற்றாலைகள் இத்தகைய மின் தேவையுள்ள நிலையிலும் காற்று இருந்தும் ஓடாமல் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மின்னாற்றலை கையாளும் அளவிற்கு போதுமான அளவு துணை மின் நிலையங்கள் இல்லாது இருப்பது தான். அணு உலை வந்தால் மட்டும் என்னவாகும்?
    …
    …7. தமிழ் நாட்டில் போதுமான அளவு மின் உற்பத்தி இருந்தும் மின் வெட்டு இருப்பது. தயாரிக்கும் மின்சாரத்தை நடுவண் க்ரிட் இல் இணைக்கும் அளவிற்கு கூடுதல் ஆற்றலை நடுவண் க்ரிட் தாங்க வல்லது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்ஙணம் தாங்கினால். மரபு சாரா மின்னாற்றலை கிடைக்கும் சமயத்தில் பயன்படுத்தி விட்டு அது இல்லாத சமயத்தில் மட்டும் பிற மின்னிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று. மின்வெட்டிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பது ஏன் உஙளுக்குப் புரிய வில்லை.
    …
    …8. டெகல்கா அறிக்கையை எடுத்து படியுங்கள் எத்தனை பேர் கல்பாக்கத்திலும் பிற அணு மின்னிலையங்களிலும் கதிர்வீச்சால் இறந்துள்ளார்கள் என்று. அவர்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரப் பூர்வமான ஆதாரத்தையும் பாருங்கள். அல்லது உங்களைப் போல் உள்ளவர்கள் நம்ப
    …
    9. நீங்கள் கூறிய ஆறாவது விரல் பலருக்கு தோன்றியுள்ளது. ராஜஸ்தான் யுரேனியச் சுரஙத்தைப் பற்றித் தேடிப் பாருங்கள். அனைத்து அணுமின் நிலையங்களைப் பற்றி டெகல்காவில் படியுங்கள். பூனை கண்மூடினால் உலகம் இருளாது அல்லவா? குதிரைக்கு கடிவாளம் இட்டால் பாதையின் பக்கவாட்டில் புல் இல்லாமல் போகுமோ! (மின்சாரம் நல்லது பயனுள்ளது என்பது எனக்கும் தெரியும் அதன் அழிவுகரம் கடிவாளம் நீக்கிப் பார்த்தால் தான் தெரியும்.
    …
    …10. உஙளுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என்பதால் யாருக்குமே ஏற்படாது என்பது தவறு. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சடியின் பாதிப்பு பத்து தலைமுறைக்குப் பின் தெரிந்தால் என்ன செய்வீர்கள். உஙள் ஜீன்-இன் ஆயிரக் கணக்கான மூலக்Kஊறுகளில் ஒன்றும் பதிக்கப் படவில்லை என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்?
    …
    …11. வடக்கு வளர்கிறது தெற்கு தேகிறது என்று சொல்லிவிட்டு உங்கள் மகளை மேற்கு வளர அனுப்பி விட்டீர்கள் போலும்.
    …
    12. முறையுடன் பழக்கினால் யானையின் மூர்க்க குணத்தை கட்டுப்படுத்த தான் முடியும். யானை ஒருபோதும் மதம் பிடிக்காது என்று உறுதி கூற முடியுமா? ஒரு வேலை மதம் பிடித்தால் என்னவாகும். அனைவரையும் கொன்று போடும் அணு உலைக்கு மதம் பிடித்தால் தலைமுறை தலைமுறைகள் பதிக்கப் படுமே.
    …
    …13. அணு மின்னிலையத்தால் உங்களைப் போலுள்ள 0.01 விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக 99.99 விழுக்காடு மக்களை அழிவு வாய்க்கு இழுத்துச் செல்வது ஏன்?
    …
    …14. இதுவரை விபத்து நடந்த எல்ல இடத்திலும் அதை கட்டிய பொறியியல் ஆளர்கள். விபத்து நடக்காது என்று உறுதி அளிக்க வில்லையா? பின் ஏன் விபத்துகள் நடந்தன அதுபோல் கூடங்குளத்தில் நடவாது என்று நீங்கள் எப்படிக் கூற முடியும் தாங்கள் கடவுளா என்ன?
    …
    …15. நடுவண் க்ரிட்டை அரசு மறுசீரமைக்கப் பரிசீலிக்காதது ஏன்?
    …
    …16. நாளொன்றிற்கு 100,000 டாலர் இழப்பு என்றீர்கள் அது எப்படி என்று விளக்க முடியுமா?
    …
    …17. தமிழகம் இந்த மின்சாரத்தை அண்டை மானிலத்திற்கு விற்கதான் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இதன்மூலம் வடக்கை மேலும் வளர வைக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கா?
    …
    …18. சரி உங்கள் கூற்றை சற்று மாற்றி 100,000 டாலர் வருவாய் இழப்பு என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாளொன்றிற்கு வருவாய் அணுமின் நிலையம் மூலம் கிடப்பது 50 லட்சம் ரூபாய். அப்படியானால் ஆண்டிற்கு 182.5 கோடி (இது மீன் மூலம் கிடைக்கும் வருவாயை விட பத்து மடங்கிற்கு மேல் குறைவு). இதில் முதலீடு 13000 கோடி. முதலீடைப் திரும்பப் பெற ஆகும் காலம் 71 ஆண்டுகள். 1 விழுக்காடு வட்டிக்கு வங்கியில் இட்டு வைத்தால் கூட இதை விட ஆதாயம் அதிகம் கிட்டுமே?
    …
    …19. உங்கள் புள்ளீ விபரத்திற்கு வருவோம். இரு சக்கர ஊர்தியில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 4000 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உள்ளது. ஒருவேளை 4000 பேர் ஓட்டுவதாகக் கொண்டால் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை. சற்று மதி நுட்பத்தோடு சிந்திதாலே நான் சொல்லுவது சரி என்பது புலப்படும். நான் சொல்லுவது சரியாக இல்லை என்றால் ஒரு இந்த ஆண்டில் ஒரு விபத்துக்கு மேல் ஏற்பட்க் கூடாது. இந்தக் கணக்கில் பார்த்தால் உலகம் முழுவதும் 10,00,000 அணுமின் பணியாளர்கள் உள்ளதாகக் கொள்வோம். எனில் 10 ஆண்டிற்கு ஒரு முறை விபத்து நிகளும். அங்ஙனம் நிகழ்ந்தால் என்னவாகும். இருசக்கர ஊர்தி போன்று அவர் மட்டும் மடியா மாட்டார். பலர் மடிவர். அவர்களது சந்ததிகளும் சேர்ந்து அல்லவா மடியும். பிற விபத்துகளை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும். நீங்கள் சொல்லுவது போல் 100,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் விபத்து நிகழும் என்றே கொள்வோம். அது ஏன் நாளையாக இருக்காது எஙிறீர்கள்?
    …
    …20. அழிவு வாய் (அபாயம்) பற்றியது அல்ல மக்களின் அச்சம் அதன் விளைவைப் பற்றியதே.
    …
    …எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் எனது இந்தப் பதிலை நீஙள் வெளியிட மாட்டீர்கள். இப்படிப் நாம் அழிவின் வாய்களில் பலன் பெற துடித்தோமானால் வடக்கு வளரும் தெற்கு தேயும்.…
    …

 10. கீழ்க் காணும் செய்திக்கு உங்கள் பதில்? …
  …
  …1. மீன்பிடித் தொழிலால் கூடங்குளம் பகுதியில் இருந்து ஆண்டொன்றிற்கு அரசுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை எல்லம் அணுவுலை அமைந்தால் எந்தா நாட்டிற்கும் நம்மால் மீன் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்த இழப்பு உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏனோ? கல்பாக்கத்தில் பணி புரியும் பொறியியல் வல்லுனர்கள் அங்கு கிடைக்கும் மீன்களை வாங்குவதில்லை என்பது உஙளுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.
  …
  …2. புவி வெப்பத்திலிருந்து(Geothermal) மின்னாலைகள் அமைப்பதில் ஆராய்ச்சி செய்வதற்கு கூட அரசு சற்றும் சிந்தியாதது ஏனோ? இதில் 35GW முதல் 2000GW வரை கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  …
  …3. அணுக்கரு உலையிலிருந்து குறைந்த அளவு கதிர்வீச்சு எக்காலத்திலும் வந்து கொண்டிருக்கும் என்பதை அறிஞர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். இது உயிரிகளில் திடீர் மாற்றத்தை (Mutation) ஏற்படுத்தும் என்பது உஙளுக்கு தெரியாதது ஏனோ?
  …
  …4. இந்த கதிர்வீச்சு அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக கல்பாக்கத்தில் அணுமின் உலையில் வேலைப் பார்ப்பவர்களின் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றனர். அதைச் சுற்றி வாழ்பவர்கள் பலர் புற்றுநோயாலும் தன்னெதிர்ப்புள்ள (self immune) தைராய்டு நோயினாலும் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பதையும் தாங்கள் டெகல்கா அறிக்கையில் ஏன் படிக்க வில்லை?
  …
  …5. கல்பாக்கத்தில் இயல்பு அளவை விட 50 மடங்கு காமா கதிர்வேச்சு கூடுதல் என்பதை நீங்கள் எப்போது உணர்ந்து கொள்வீர்கள்? (டெகல்கா படியுங்கள்)
  …
  …6. தமிழ் நாட்டில் உள்ள காற்றாலைகள் இத்தகைய மின் தேவையுள்ள நிலையிலும் காற்று இருந்தும் ஓடாமல் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மின்னாற்றலை கையாளும் அளவிற்கு போதுமான அளவு துணை மின் நிலையங்கள் இல்லாது இருப்பது தான். அணு உலை வந்தால் மட்டும் என்னவாகும்?
  …
  …7. தமிழ் நாட்டில் போதுமான அளவு மின் உற்பத்தி இருந்தும் மின் வெட்டு இருப்பது. தயாரிக்கும் மின்சாரத்தை நடுவண் க்ரிட் இல் இணைக்கும் அளவிற்கு கூடுதல் ஆற்றலை நடுவண் க்ரிட் தாங்க வல்லது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்ஙணம் தாங்கினால். மரபு சாரா மின்னாற்றலை கிடைக்கும் சமயத்தில் பயன்படுத்தி விட்டு அது இல்லாத சமயத்தில் மட்டும் பிற மின்னிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று. மின்வெட்டிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பது ஏன் உஙளுக்குப் புரிய வில்லை.
  …
  …8. டெகல்கா அறிக்கையை எடுத்து படியுங்கள் எத்தனை பேர் கல்பாக்கத்திலும் பிற அணு மின்னிலையங்களிலும் கதிர்வீச்சால் இறந்துள்ளார்கள் என்று. அவர்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரப் பூர்வமான ஆதாரத்தையும் பாருங்கள். அல்லது உங்களைப் போல் உள்ளவர்கள் நம்ப
  …
  9. நீங்கள் கூறிய ஆறாவது விரல் பலருக்கு தோன்றியுள்ளது. ராஜஸ்தான் யுரேனியச் சுரஙத்தைப் பற்றித் தேடிப் பாருங்கள். அனைத்து அணுமின் நிலையங்களைப் பற்றி டெகல்காவில் படியுங்கள். பூனை கண்மூடினால் உலகம் இருளாது அல்லவா? குதிரைக்கு கடிவாளம் இட்டால் பாதையின் பக்கவாட்டில் புல் இல்லாமல் போகுமோ! (மின்சாரம் நல்லது பயனுள்ளது என்பது எனக்கும் தெரியும் அதன் அழிவுகரம் கடிவாளம் நீக்கிப் பார்த்தால் தான் தெரியும்.
  …
  …10. உஙளுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என்பதால் யாருக்குமே ஏற்படாது என்பது தவறு. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சடியின் பாதிப்பு பத்து தலைமுறைக்குப் பின் தெரிந்தால் என்ன செய்வீர்கள். உஙள் ஜீன்-இன் ஆயிரக் கணக்கான மூலக்Kஊறுகளில் ஒன்றும் பதிக்கப் படவில்லை என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்?
  …
  …11. வடக்கு வளர்கிறது தெற்கு தேகிறது என்று சொல்லிவிட்டு உங்கள் மகளை மேற்கு வளர அனுப்பி விட்டீர்கள் போலும்.
  …
  12. முறையுடன் பழக்கினால் யானையின் மூர்க்க குணத்தை கட்டுப்படுத்த தான் முடியும். யானை ஒருபோதும் மதம் பிடிக்காது என்று உறுதி கூற முடியுமா? ஒரு வேலை மதம் பிடித்தால் என்னவாகும். அனைவரையும் கொன்று போடும் அணு உலைக்கு மதம் பிடித்தால் தலைமுறை தலைமுறைகள் பதிக்கப் படுமே.
  …
  …13. அணு மின்னிலையத்தால் உங்களைப் போலுள்ள 0.01 விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக 99.99 விழுக்காடு மக்களை அழிவு வாய்க்கு இழுத்துச் செல்வது ஏன்?
  …
  …14. இதுவரை விபத்து நடந்த எல்ல இடத்திலும் அதை கட்டிய பொறியியல் ஆளர்கள். விபத்து நடக்காது என்று உறுதி அளிக்க வில்லையா? பின் ஏன் விபத்துகள் நடந்தன அதுபோல் கூடங்குளத்தில் நடவாது என்று நீங்கள் எப்படிக் கூற முடியும் தாங்கள் கடவுளா என்ன?
  …
  …15. நடுவண் க்ரிட்டை அரசு மறுசீரமைக்கப் பரிசீலிக்காதது ஏன்?
  …
  …16. நாளொன்றிற்கு 100,000 டாலர் இழப்பு என்றீர்கள் அது எப்படி என்று விளக்க முடியுமா?
  …
  …17. தமிழகம் இந்த மின்சாரத்தை அண்டை மானிலத்திற்கு விற்கதான் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இதன்மூலம் வடக்கை மேலும் வளர வைக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கா?
  …
  …18. சரி உங்கள் கூற்றை சற்று மாற்றி 100,000 டாலர் வருவாய் இழப்பு என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாளொன்றிற்கு வருவாய் அணுமின் நிலையம் மூலம் கிடப்பது 50 லட்சம் ரூபாய். அப்படியானால் ஆண்டிற்கு 182.5 கோடி (இது மீன் மூலம் கிடைக்கும் வருவாயை விட பத்து மடங்கிற்கு மேல் குறைவு). இதில் முதலீடு 13000 கோடி. முதலீடைப் திரும்பப் பெற ஆகும் காலம் 71 ஆண்டுகள். 1 விழுக்காடு வட்டிக்கு வங்கியில் இட்டு வைத்தால் கூட இதை விட ஆதாயம் அதிகம் கிட்டுமே?
  …
  …19. உங்கள் புள்ளீ விபரத்திற்கு வருவோம். இரு சக்கர ஊர்தியில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 4000 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உள்ளது. ஒருவேளை 4000 பேர் ஓட்டுவதாகக் கொண்டால் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை. சற்று மதி நுட்பத்தோடு சிந்திதாலே நான் சொல்லுவது சரி என்பது புலப்படும். நான் சொல்லுவது சரியாக இல்லை என்றால் ஒரு இந்த ஆண்டில் ஒரு விபத்துக்கு மேல் ஏற்பட்க் கூடாது. இந்தக் கணக்கில் பார்த்தால் உலகம் முழுவதும் 10,00,000 அணுமின் பணியாளர்கள் உள்ளதாகக் கொள்வோம். எனில் 10 ஆண்டிற்கு ஒரு முறை விபத்து நிகளும். அங்ஙனம் நிகழ்ந்தால் என்னவாகும். இருசக்கர ஊர்தி போன்று அவர் மட்டும் மடியா மாட்டார். பலர் மடிவர். அவர்களது சந்ததிகளும் சேர்ந்து அல்லவா மடியும். பிற விபத்துகளை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும். நீங்கள் சொல்லுவது போல் 100,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் விபத்து நிகழும் என்றே கொள்வோம். அது ஏன் நாளையாக இருக்காது எஙிறீர்கள்?
  …
  …20. அழிவு வாய் (அபாயம்) பற்றியது அல்ல மக்களின் அச்சம் அதன் விளைவைப் பற்றியதே.
  …
  …எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் எனது இந்தப் பதிலை நீஙள் வெளியிட மாட்டீர்கள். இப்படிப் நாம் அழிவின் வாய்களில் பலன் பெற துடித்தோமானால் வடக்கு வளரும் தெற்கு தேயும்.…

  • Thinnai
   http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309252&format=html&edition_id=20030925

   மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!

   சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

   ‘எரிசக்தி இல்லாமை போன்ற விலை மிகுந்த எரிசக்தி எதுவும் இருக்க முடியாது ‘ [No Energy is so costly as No Energy].

   அணுவியல் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி பாபா (1909-1966)

   முன்னுரை: 50 ஆண்டு நிறைவுப் பொன்விழாவைக் கொண்டாடும் [2003-2004] பாரத அணுசக்தித் துறையகம் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை 2620 MWe மின்னாற்றலிலிருந்து 6800 MWe மின்னாற்றல் மிகுதி நிலைக்கு உயர்த்தப் போவதாக அணுசக்திப் பேரவையின் அதிபதி, டாக்டர் அனில் ககோட்கர் [Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission] வியன்னா, அகில நாட்டு அணுசக்திப் பேரவையில் [International Atomic Energy Agency, Vienna] 2003 செப்டம்பர் 17 ஆம் தேதி பெருமிதத்துடன் பறைசாற்றி யிருக்கிறார். மேலும் [2002-2003] ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் செவ்விய முறையில் இயங்கி 19,358 மில்லியன் யூனிட் (KWh) மின்சாரத்தை, 90% திறமைத்தகுதியில் [Capacity Factor: 90%] பரிமாறியுள்ளன என்றும் கூறி யிருக்கிறார். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாக்கள்: அணுமின் உலைகளை ஆழ்ந்து டிசைன் செய்து அமைத்தவர்கள், இராப் பகலாக இயக்கிக் கண்காணித்து வரும் எஞ்சியர்கள், விஞ்ஞானிகள், பணியாளிகள் ஆகியோரே.

   இந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன! அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது! 2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447,530 பில்லியன் யூனிட் [MWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது! மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.

   கல்பக்கம் ஞாநியின் அணுசக்தி பற்றித் தவறான கருத்துகள்

   மீண்டும் மதிப்புக்குரிய நண்பர் ‘கல்பாக்கம் ஞாநி ‘ சென்ற வாரக் கட்டுரையில் [செப் 18, 2003] தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அணுமின் நிலையங்கள் மீது கனலற்ற தீப்பொறிகளைக் கக்கி இருக்கிறார்! ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை ‘ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

   சென்ற வாரக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

   1. மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை. [இவை பிழையான கருத்துக்கள்]. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும். [இது மெய்யானது]

   2. வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். [இது மெய்யானது]

   3. கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. [இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது. கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை]

   4. கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்]. [முன்னோடி அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஒன்றும் பெரிதல்ல!]

   இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன் காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஒப்புக் கொள்ள வேண்டியதே.

   இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

   இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.

   அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

   கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத்தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக்குரியவை.

   கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

   கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

   நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

   ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

   கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

   இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ?

   முதல் இரண்டு இந்திய அணுமின் உலைகள் அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளின் உதவியால் உருவாயின. தற்போது ரஷ்யாவின் உதவியால் 1100 MWe இரட்டை அணுமின் நிலையங்கள் [1100 MWe VVER] கூடங்குளத்தில் கட்டப்பட்டு வருகின்றன. கனடா முன்னோடி அணுமின் உலைகளைப் பிரதி எடுத்து, மேலும் புதிய உறுப்புகளைப் புகுத்தி, புது அணுமின் நிலையங்கள் பின்னால் தோன்றின. அவை யாவும் யுரேனியத்தைப் பயன்படுத்தும் முதற்கட்டத் திட்ட அமைப்புகள். தற்போது இயங்கி வரும் பத்து 220 MWe அணுமின் நிலையங்கள், இந்தியப் பொறியியல், விஞ்ஞானிகளால் டிசைன் செய்யப்பட்டு, அவற்றின் 80% சாதனங்கள் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டவை. இப்போது புதிய அணுமின் உலைகள், முன்னோடிகளை விடச் சிறந்த நிலையில் இயங்கி, மின்சாரம் பரிமாறி வருகின்றன. கல்பாக்கம் ஞாநி வலியுறுத்துவது போல் அணுமின் நிலையங்களை மூடிவிட்டால், பல மாநிலங்களில் இருட்டடிப்புகள் நீடிக்கும். தொழிற்சாலைகள் அநேகம் நிறுத்தமாகி, மாநிலங்களில் ஆயிரம் ஆயிரம் நபர்கள் வேலை இழந்து, வயிற்றுச் சோறுக்குத் திண்டாட்டம் உண்டாகிவிடும்!

   இரண்டாம் கட்டத் திட்டத்தில் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப்பெருக்கி அணுமின் நிலையங்கள் [Fast Breeder Reactors] அமைப்பு. இந்தியாவில் இயங்கி வரும் அல்லது கட்டப்பட்டு இனிமேல் இயங்கும் அணுமின் நிலையங்கள் ஏராளமான யூனிட் மின்சாரம் பரிமாறி வருவதுடன், பல இந்தியத் தொழிற்சாலைகளின் பணியாளிகளுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கின்றன. இந்தியா அணுமின் நிலையங்களின் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, எரிக்கோல் சுத்தீகரிப்பு, கழிவுகள் புதைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலக முன்னணியில் நிற்கிறது. அவற்றில் சிக்கல், பிரச்சனைகள் எழுந்தாலும், அவற்றைத் தீர்க்க நிபுணர்கள் அருகே இருக்கிறார்கள்.

   பாரதத்தில் மின்சாரப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வது எப்படி ?

   நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம் மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன! இந்தியாவில் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான், ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம் தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது! கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000 மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன. அணுவியல் துறையகத்தின் முதல் அதிபதி, டாக்டர் ஹோமி பாபா திட்டமிட்டது போல், பாரதத்தில் கிடைக்கும் ஏராளமான யுரேனியம், தோரியம் மூலகங்களைப் பயன்படுத்தி, இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவில் அணு மின்சக்தி உற்பத்தி செய்வதைத் தவிர, வேறு வழியே இல்லை!

   அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

   உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

   தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்! ஆனால் விமானப் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்திய அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடி சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்! கல்பாக்கம் ஞாநி அணுவியல் துறைகளில் ஏற்பட்ட விபத்துகளை மட்டும் பெரிது படுத்திக் கொண்டு, அவற்றை மூடவிட வேண்டும் என்று கூச்சலிடுவது ஆதரமற்ற, நியாயமற்ற கூப்பாடு!

   இந்திய அணுமின் உலைகளைப் பற்றித் தவறான தகவல்கள்!

   அணுசக்தி, இப்போது மின்சாரப் பற்றாக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையும் நிரந்தரமாக ஞாநி விரும்புவது போல் நிறுத்தி விட்டால், இந்தியா வெங்கும் இருட்டடிப்பும் [Blackouts], பழுப்படிப்பும் [Brownouts] தாண்டவமாடும்! பிறகு அவரது பத்திரிகைகள் கூட அச்சடிக்கப் படாமல் ஆபீஸுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கும்! 2003 இல் இந்தியாவின் பதிமூன்று அணுமின் நிலையங்கள் 2620 MWe மின்சாரம் பரிமாறி வருகின்றன. 2012 இல் மூன்று மடங்கு [8100 MWe] அதிகரிக்கத் திட்டங்கள் உருவாகி, இப்போது புது அணுமின் உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தி மூலம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றலை பாரதத்தில் உண்டாக்க மாபெரும் திட்டங்கள் கைவசம் உள்ளன.

   கல்பாக்கம் ஞாநி அணு உலைகள் செர்நோபிள் போல் வெடிக்கும் என்றும், அப்படி வெடித்தால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்றும் அணுவியல் கல்வி புரியாமல் தன் நுனிப்புல் அறிவில் 2003 ஏப்ரலில் எழுதி, தமிழர் அனைவருக்கும் அச்சத்தையும், பீதியையும் கிளப்பினார்! அதே கட்டுரையில் கல்பாக்க அணு உலைகளில் பணியாற்றுவோரும், அவற்றின் அருகில் வாழ்வோரும் புற்று நோயால் தாக்கப்படுகிறார் என்ற புரளியையும் உண்டாக்கினார்! அவற்றைத் தவறென்று காட்டித் திண்ணையில் எழுதிய கட்டுரைக்குப் பதில் தராமலே ஒளிந்து கொண்டார், கல்பாக்கம் ஞாநி! இந்திய அணு உலைகளை நேரில் கண்டு, அணு உலை எதிர்ப்பாளிகள் தம் அறிவைச் செழுமைப்படுத்த வேண்டும் என்று கூறிய ஆலோசனைக்கும் அவர் பதிலே அளிக்கவில்லை!

   பத்திரிக்காசிரியர் என்று வேடங்கட்டி, கல்பாக்கம் ஞாநி அணுசக்தி பற்றி பூரணப் பயிற்சி இல்லாமல், வெறும் அரைகுறை ஞானத்துடன், அணுசக்தியைப் பற்றி அறியாத மாந்தர்களுக்கு எழுத்து மூலம் அச்ச மூட்டியும், அதிர்ச்சி கொடுத்தும் வருவது எழுத்து நெறியற்ற அநாகரீகச் செயல்!

   இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

   1. Atomic Power Plants Performance Reports http://www.npcil.org [Updated Sep 22, 2003]

   2. Kalpakkam Nuclear Site http://www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

   3. Bhabha Atomic Research Centre, Bombay http://www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

   4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations http://www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

   4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

   5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

   6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

   7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

   *******************

 11. வணக்கம் ஐயா,

  என்னுடைய தளத்திற்கு இணைப்பு கொடுத்தது மிகுந்த மகிழ்வைத் தருகிறது, நன்றி.

  அணு உலையை நாங்கள் எதிர்ப்பதன் முக்கிய காரணம் அது மின்சாரத் தேவைகளுக்காக அல்ல அரசியல் அழுத்தங்களுக்காக என்பது. அதன் பாதுகாப்புத் தன்மை என்பது தொடரும் காரணிகள் தான். இந்த மறுகாலனியாக்கத்திற்கு அணு உலைகள் ஒரு கண்ணியாக பயன்படுத்தப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

  உங்கள் பார்வைக்கு:
  http://nallurmuzhakkam.wordpress.com/2011/11/28/kudankulam-2/

  நல்லூர் முழக்கம்.

 12. Pingback: வடக்கு வளர்கிறது ! தெற்கு தேய்கிறது ! அணுமின் உலை எதிர்ப்பாளிகள் ! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.