கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?

(கட்டுரை – 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)

இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.

அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)

கட்டுரை ஆசிரியர்

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.

அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?

ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.

கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா

அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.

2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.

கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.

செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.

இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)

1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.

2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.

அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.

விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.

2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.

1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.

2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.

3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.

4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.

5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.   திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.

6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.

(தொடரும்)

**************
China Syndrome* – The China Syndrome is a 1979 American thriller film that tells the story of a reporter and cameraman who discover safety coverups at a nuclear power plant.
The title is a fanciful term – not intended to be taken literally – that describes one possible worst-case result of a nuclear meltdown, where reactor components melt through their containment structures and into the underlying earth, “all the way to China” (</wiki/China_Syndrome>).

***************

தகவல்:

1. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

6. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

7. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

8. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

9. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

10. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

11 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

12. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

13. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

14 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

15. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

16. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

17  2011 Fukushima’s Nuclear Accident is not Chernobyl (March 18, 2011)

18 Kudankulam Nuclear Plant Equipped to deal with Tsunami Threats By : Vinson Kurian (April 3, 2011) Kerala State Centre of The Institution of Engieers (India) – IEI

19. Three-Month Update of Fukushima Tragic Accident & Flood of Information Coming Out (June 16, 2011)

20.  http://www.npcil.nic.in/pdf/Atoms_in_Japan.pdf  (December 19, 2011)  (Nuclear Power Costs Estimated at JP Yen 8.9 per kWh, Matching Wind and Geothermal

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  October 23, 2011
http:jayabarathan.wordpress.com/

5 thoughts on “கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?

  1. இந்தியாவுக்கு தேவையா அணு உலைகள்?

    – என்.சிதம்பர சுமன்

    இந்தியாவின் முக்கியப் பிரச்னைகளில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை முதன்மையானது என்பதை எவருமே மறுக்க முடியாது. அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.

    ஆனால், நமது மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அணு உலைகள் மட்டுமே வழி என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்த எண்ணத்தை நம்மிடம் எவரெவர் எப்படி உருவாக்கினார்கள்? என்னென்ன தரவுகளை அளித்தார்கள்? எந்த தர்க்கங்களைச் சொன்னார்கள்? எப்படி இதை நாம் நம்ப ஆரம்பித்தோம்?

    இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் முழுக்கவே அணு உலைகள் ஆற்றல் உற்பத்திக்கு லாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்து விட்டார்கள் என்பதே உண்மை. உலகிலுள்ள அணு உலைகளை மூடும் நடவடிக்கைகள் வேகமாக முடுக்கப்பட்டுள்ளன.

    இதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால், அணு உலைகள் மிக மிக அதிகமாகச் செலவு பிடிப்பவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அணு உலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிர்வாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்திமுறைகளுக்குச் செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

    இந்தியாவில் அணு உலைகளை விட்டால் இதுவரை இங்குள்ள மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பெரும் முயற்சிகள் என்னென்ன? அணு உலைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பாதியாவது அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதா? நாமறிய எந்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதல்லவா உண்மை?

    இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் (world resources institute) கூறுகிறது. உலக அளவில் இதன் அதிக சராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை. இன்னொன்று, இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.

    ஆக, நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.

    காரணம் என்ன?

    இந்தியாவில் பெரும்பாலான மின்கம்பிகள் தலைக்கு மேலே செல்கின்றன. ஆகவே அவை அறுந்து விழாத உலோகத்தில் தடிமனாக அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவை அளிக்கும் மின்தடை பெரும் மின்சார இழப்புக்குக் காரணமாக அமைகிறது. திருட்டுக்கும் வழிவகுக்கிறது.

    மின்னிழப்பு உருவாகாத வகையில் நவீன மின்கடத்திகளை மண்ணுக்கடியில் போட்டு மின்வினியோகம் செய்யலாம், உலகின் வளர்ந்த நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அதற்கான பெரும் முதலீடு நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

    ஆனால், கூடங்குளம் போன்ற ஒரே ஒரு அணு உலை அமைக்க நாம் செலவிடும் தொகை 1988-ல் போட்ட கணக்கின்படி ரூ.1600 கோடிக்கு மேல். இன்று அது ரூ.4000 கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம்.

    இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிட முடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.

    நெடுந்தூரம் மின்சாரத்தைக் கொண்டுசென்று மின்னிழப்பு உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையைச் செலவிட்டு இந்தியாவில் பல்வேறு சிறிய மின்திட்டங்களை அமைத்து ஆற்றல் பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட முடியும். அதைப்பற்றி ஏராளமான நிபுணர்கள் எழுதிவிட்டார்கள்.

    ஆனால், அவற்றை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்வதில்லை. அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால், அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை. அது ஆளும் தரப்புக்கு மிக வசதியானது.

    இரண்டாவதாக, இந்த அணு உலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன. இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குத்தான் உண்மையில் சென்று சேர்கிறது. அந்நாடுகள் தங்கள் காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கின்றன. ஈடாக பெரும் பணமும் பெற்றுக்கொள்கின்றன. பேரங்கள் ராணுவ ரகசியங்களாகவும் எஞ்சுகின்றன. இந்நாடுகளின் ரகசியபேரங்களும் ஆள்பிடிப்பு வேலைகளும்தான் அணு உலைகளுக்குப் பின்னால் உள்ள தூண்டுதல்கள்.

    மூன்றாவதாக, சர்வதேச நிதியங்கள் இம்மாதிரி திட்டங்களுக்கு தேவையான கடன்களைக் கொடுக்கின்றன. உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவை நிதி அளிப்பதில்லை. இந்த நிதியங்களில் அதிக முதலீடு செய்துள்ளவை இந்த அணு உலைகளை நமக்கு விற்கும் நாடுகளேதான். அதாவது தரம் கெட்ட பொருளை நமக்கு விற்பதோடு அவற்றை வாங்குவதற்கான கடனையும் அவையே வட்டியுடன் நமக்கு அளிக்கின்றன. மொத்தத்தில் நாம் கடன் வலைக்குள் விழுகிறோம்.

    இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.

    ஆகவே, அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.

  2. இந்தியா இருள்கிறது!

    This week Anantha Vikatan.

    சமஸ்

    மன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறார்!

    கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று, டெல்லியில் அரசு ஆதரவு ஊடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடிக் கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதே நாளில்தான், ‘இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம்’ என்றும் இந்திய அணு சக்தித் துறை, மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருக்கிறது.

    ஒரு போராட்டத்தை முடக்கவும் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தவும் இதைவிட ஓர் அரசாங்கம் நாசூக்கா கவும் தந்திரமாகவும் செயல்பட முடியுமா என்ன?

    போராட்டக்காரர்களிடம், ”மக்களுடைய பாதுகாப்புதான் முக்கியம்” என்று திரும்பத் திரும்ப வாக்குறுதி அளித்தார் பிரதமர். ஆனால், அதற்கு முதல் நாள்தான் கூடங்குளம் அணு உலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்கால வளர்ச்சிக்கு அணு சக்தியின் தேவை எந்த அளவுக்கு முக்கியம் என்று அவருடைய கட்சிக்காரர்கள் பிரசங்கம் நடத்தினார்கள்!

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதமரை நன்கு புரிந்துவைத்து இருந்தார்கள். அவருடைய பசப்பு வார்த்தைகளில் அவர்கள் ஏமாறவில்லை. அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நாள் குறித்தார்கள். அணு உலைச் செயல்பாட்டுக்கு ஆதரவாக தமிழக முதல்வருக்கு பிரதமர் இரண்டாவது கடிதம் அனுப்பியபோது, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மீண்டும் போராட்டக் களமானது. இந்த முறை தொடர் உண்ணாவிரதத்துடன் சாலை மறியல், அணு உலை முற்றுகைப் போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் மக்கள்.

    இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியா எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள் – ஏழை மீனவர்கள் – படிப்பறிவு அற்றவர்கள். ஆனால், அவர்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை; உலகளாவிய ஒரு பிரச்னைக்காகப் போராடுகிறார்கள், அசாத்தியத் துணிச்சலுடனும் உறுதியுடனும்!

    இந்தக் கட்டுரை உருவாக்கத்தின்போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மணிக்கு 2.7 மைக்ரோ சீவெர்ட்ஸ் அளவுக்கு அணுக் கதிர்வீச்சு பரவி இருக்கும் செய்தியை பி.பி.சி. அறிவிக்கிறது. யகொஹாமாவில் உள்ள ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரத்தப் புற்றுநோயை உருவாக்கும் ‘ஸ்ட்ரான்டியம் – 90’ கதிரியக்கப் பொருள் கண்டறியப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணு உலை பாதிக்கப் பட்டது மார்ச் மாதத்தில். இப்போது அக்டோபர் மாதம். டோக்கியோ ஃபுகுஷி மாவில் இருந்து 230 கி.மீ. தொலைவில் இருக்கிறது. யகொஹாமா நகரமோ இன்னும் அதிக தொலைவில் இருக்கிறது. இந்தச் செய்திகள் வெளியான அதே நாளில்தான் பத்திரிகைகளில் இந்திய அணு சக்தித் துறை கொடுத்துள்ள விளம்பரம் சொல்கிறது, ‘அணு உலைகள் பாதுகாப்பானவை; கவலை வேண்டாம்’ என்று!

    கடந்த ஒரு வாரமாக நிலக்கரித் தட்டுப்பாட்டால் நாடே இருளில் சிக்கி இருக்கிறது. பல மாநிலங்களில் 9 மணி நேரம் வரை மின் வெட்டு. கிராமங்களில் மொத்த மின் விநியோகமே 2 அல்லது 3 மணி நேரம்தான்!

    இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 55 சதவிகிதத் தேவையை நிலக்கரிதான் பூர்த்திசெய்கிறது. மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே பற்றாக்குறை நிலவுகிறது. தவிர, இப்போது வெள்ளம், தொடர் போராட்டங்கள் காரணமாக நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதித்து இருப்பதால், முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலைச் சந்தித்து இருக்கிறது நம்முடைய எரிசக்தித் துறை. நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறனான 99,503 மெகா வாட்ஸில் பாதி அளவு திறன்கொண்ட 29 முக்கிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள், அடுத்த சில நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பையே வைத்திருக்கின்றன. சீரான மின் உற்பத்திக் குக் குறைந்தது ஒரு மாதக் கையிருப்பு அவசியம்.

    இப்போது ஏற்பட்டு இருக்கும் சிக்கலை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அரசு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஆனால், இது ஓர் எச்சரிக்கை. தொழில் துறை சார்ந்து வளரும் ஒரு நாடு, எரிசக்தித் துறையில் தொலைநோக்கோடு திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியத்தையும் புதிய எரிசக்திக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவை யையும் நிர்பந்திக்கும் எச்சரிக்கை!

    ஒருபுறம், நம்முடைய எரிசக்தித் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம், அணு சக்தி அதற்குத் தீர்வு இல்லை என்பதும் தெரிகிறது. என்ன செய்யலாம்?

    நல்ல தலைவர்கள், நெருக்கடிகளை… மாற்றுத் திட்டங்களுக்கான வாய்ப்புகளாகப் பார்ப்பார்கள் மன்மோகன்ஜி!

    • “ஒருபுறம், நம்முடைய எரிசக்தித் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம், அணு சக்தி அதற்குத் தீர்வு இல்லை என்பதும் தெரிகிறது. என்ன செய்யலாம்? ”

      Who said, Nuclear Energy is not the solution ?

      Except Germany, which has shut down its 8 of its very old Reactors out of the total 17, no other country has planned to permanently shut down any reactors after Fukushima. Even Germany is going to run its remaining 9 of its Reactors, some of which are about 30 years old, for another 11 years !

      If it is so bad and unsafe, and if they can manage with Wind / Solar, why are they running these old reactors ? In fact, all these reactors belong to First Generation Reactors with less safety features and no passive core cooling system at all.

      Whereas our Kudankulam Reactor is of Third Generation type with several additional safety features including the passive air cooling system. Moreover these are brand new Reactors.

      All other countries put together have about 350 Reactors running and another few hundred Reactors are under construction. So, please do not mislead people if you have only limited exposure on the subject.

      K.Perisamy

  3. Do you think the scientists of fukushima never missed to have the solutions as we have now in Kudankulam?

    If so. How can you assure our scientists didn’t miss anything.

    In any project we make mistakes, because man has his limitations. But the problem is the effect.

    Why don’t we consider about geothermal power plant and tidal power plant?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s