பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்.

(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [Article : 2]

http://www.theodora.com/maps/new9/tectonic_plate_reconstruction.gif

http://www.rtmsd.org/page/1845

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

கால்பந்து ஒட்டுபோல்
தையலிட்ட
கடற் தளத்தின் மேல்
கோல மிட்டு
காலக் குமரி எல்லை வரைந்த
வண்ணப் பீடங்கள்
நாட்டியம் புரியும் !
நண்டு போல் நகர்ந்து,
கண்டத் தளங்கள்
துண்டு துண்டாய்த் தவழும்
கடல் சூழ்ந்திட !

+++++++++++++

முன்னுரை:   பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடுகளைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!

‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப் படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.

டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]

‘450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.


250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.

டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக் கழகம்.

ஒரு யுகத்தில் ஒன்றாய் இருந்த ஒற்றைக் கண்டம் பிரிந்து பல கண்டம் ஆனது

அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன

வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வட புறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டு பிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப் படுகின்றன.

குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:

1968 ஆம் ஆண்டில் ‘ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ‘ [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].

குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டு பிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.

குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.


அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.

1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!


சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:

இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டுகளாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது.

சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!

மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.


அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.

ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.

கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:

உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.

கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப் படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங் கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பா லிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]

இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்திய உபகண்டத்தின் தென்முனை நீட்சி இருந்ததாகக்  கருதப்படும் குமரிக் கண்டம் பற்றித் தமிழரிடையே மூன்று விதமானக் கருத்துகள்  இப்போது பரவி வருகின்றன. குமரிக் கண்டம் இருந்தது என்று நம்புவோர் ஒரு சிலர்.  குமரிக் கண்டம் என்றொரு நீட்சிப் பகுதி இருந்ததில்லை, அது வெறும் கற்பனை என்று நம்பாதவர் / மறுப்பவர் பலர் உள்ளார்.  மூன்றாது தரம் குமரிக்கண்டம் பற்றிக் கருத்துரை வழங்க விழையாதவர்.  

நான் குமரிக் கண்டம் இருந்திருக்க வேண்டும் என்று கருதும் முதல் வகுப்பைச் சேர்ந்தவன். பூதளவியல், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம் மூலம் ஆராய்ந்து குமரிக் கண்டத்தை ஏற்றுக் கொண்டவன்.  அதனால் என் மதிப்பாய்வு  ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரை ஆசிரியருக்கு உடன்பாடாக அமைந்துள்ளது. குமரிக் கண்டத்தை இல்லையென்று மறுப்பவர் மதிப்பாய்வு வேறு விதமாக எழுதப் பட்டிருக்கும்.  ஆகவே நான்  எழுதிய இந்த மதிப்பாய்வு ஒருநோக்கு, முறையில் ஒருபோக்கு நெறியான  கருத்தோட்டம் என்று முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

100,000 ஆண்டுகட்கு ஒருமுறை பனியுகம் தோன்றி  உலகக்கடல் நீர்வெள்ளம் சுண்டிப் போய், கடல் மட்டம் குறைந்து போவதும், பிறகு பல்லாயிர ஆண்டுகட்டுப் பின்னர்,  பனிக்குன்றுகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்வதும் பூமியில் பன்முறை நேர்ந்துள்ளன.  கடந்த 10,000 – 20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்த, முந்திய பனியுகத்தில் கடல் நீர்மட்டம் சுமார் 300 அடி முதல் 1000 அடி வரைத் தாழ்ந்து மீண்டும் உயர்ந்துள்ளது என்பது என் யூகிப்பு.  அப்போது கடற்கரைப் பகுதிகளில், நீர்மயம் சுண்டி நீட்சித் தளங்கள் தெரிந்தும், பிறகு  நீர் உருகி  கடல் மட்டம் உயர்ந்து, அவை கடலுக்குள் மூழ்கியும், தெரியாமல் போயுள்ளன.  

இந்தியாவின் குஜராத் மாநில மேற்குக் கடலில் மூழ்கிய / கண்ணன் மனிதனாய் வாழ்ந்த துவாரகா புரி சுமார் 100 – 500 அடிக் கடலில் மூழ்கி உள்ளதைச் சமீபத்தில் பூதளவியல் புதை ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.    

https://www.youtube.com/watch?v=Zc2dWngyZH4

https://youtu.be/6KkDMBhrAD4

https://www.youtube.com/watch?v=6KkDMBhrAD4

சி. ஜெயபாரதன்



++++++++++++++++++++++++++

From:  http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”,
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]

+++++++++++++++++++++++++++++++

 (தொடரும்)

 தகவல்

1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10  Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html  (May 22, 2007)

26. http://www.crystallotus.com/Lemuria/04.htm

27.  http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]

28.  http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]

29.  http://www.rtmsd.org/page/1845  

30.  http://www.ux1.eiu.edu/~cfjps/1300/cont_drift.html  [A brief introduction to Plate Tectonics, based on the work of Alfred Wegener.]

31.  http://ta.m.wikipedia.org/wiki/குமரிக்கண்டம்

32. https://www.ancient-origins.net/history-ancient-traditions/vedda-culture-0010799

************************

S. Jayabarathan [ jayabarathans@gmail.com ]  (September 1, 2019) [R-3]

https://jayabarathan.wordpress.com/

23 thoughts on “பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்.

  1. அன்பின் திரு.செயபாரதன் ஐயா,

    தங்களின் இந்தக் கட்டுரை தருகின்ற அகன்ற செய்திகள் மெச்சத் தக்கவை. புவியின் மேற்தள வயது, ஆழ்கடற் தள வயது, குலோமரின் அரிய பணி இந்தியத் தட்டு-ஆசியத் தட்டு உராய்வின் விளைவுகள், சுமத்திராவில் கிடக்கும் தொடர் இக்குகள் என்ற ஒவ்வொன்றையும் சிறந்த படங்களோடு நீங்கள் விளக்கியிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

    இவற்றிற்கிடையே குமரி, லெமூரிய நிலப்பரப்பையும், இன்னும் ஆய்ந்து முடிவுக்கு வராமல் இருக்கும் காட்சியினையும் நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் விதம் அகன்ற சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கிறது. பனியுகத்தில் புறத்தே தெரிந்த பகுதியாக குமரி நிலம் இருந்தது என்ற தேற்றத்தின் படி, பனியுகத்தின் முன்னால் அது நீருக்குள் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்றால் ஒரு தற்காலிக நீள்நிலமாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.

    மிகச் சுவையான இதனைத் தொடர்ந்து நீங்கள் எழுதி வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்
    ( nelango5@gmail.com )

  2. நண்பர் நாக. இளங்கோவன்,

    காவிரி நதிச் சங்கமத்தில் பூம்புகாரும், குமரிக் கடலில் ஒரு பெருங் கண்டமும் நீரில் மூழ்கி விட்டதாகத் தமிழ் இலக்கிய வரலாறுகள் சுமார் 2000 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றன.

    தமிழரசும், தமிழ்ப் பூதள ஆய்வுவாதிகளும் இதுவரை இவற்றைக் கடலில் மூழ்கும் சாதனங்கள் மூலம் ஆராயாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது !

    2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவின் சிற்பத் தலை என கருதப்படும் ஒன்றை நைல் நதிச் சங்கமத்தில் கண்டெடுத் துள்ளார் என்று 2011 ஜூலை நேசனல் ஜியோகிராஃபிக் மாத இதழ் கூறுகிறது. நைல் நதி நாகரீகச் சின்னங்கள் பல பூகம்பதாலும், சுனாமியாலும் கடல் நீர் மட்ட எழுச்சியாலும் மூழ்கிப் போயின என்றும் அறிவிக்கிறது.

    பாராட்டுக்கு நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  3. நண்பர் நாக. இளங்கோவன்,

    ////பனியுகத்தில் புறத்தே தெரிந்த பகுதியாக குமரி நிலம் இருந்தது என்ற தேற்றத்தின் படி, பனியுகத்தின் முன்னால் அது நீருக்குள் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்றால் ஒரு தற்காலிக நீள்நிலமாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.////

    பல மில்லியன் ஆண்டுகளாக இந்திய உபகண்டம் அடித்தட்டு நகர்ச்சியால் (Tectonic Plates Movement) வடபுறம் தள்ளப் பட்டு வந்துள்ளது. அதனால் குமரி முனைக்குத் தெற்கிலுள்ள தளப்பகுதி நீட்சியாகித் தரை மட்டம் தணிவடைந்து போனது என்பது என் கருத்து. முதலில் கடல் மூடிய தென்பகுதி, பனியுகத்தில் கடல் சுண்டி, தணிந்த தளத்தில் உயிரினம் பல்லாண்டு வளர்ச்சி அடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்.

    சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன் பனியுகம் மறுபடியும் மாறிய் பிறகு குமரிக் கண்டத்தின் தணிவான தரை மண்டலத்தைக் கடல் சூழ்ந்து கொண்டது என்று கருத இடமிருக்கிறது.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்..

  4. அன்பின் ஐயா,
    விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    // 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம்.

    பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.//

    எனக்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டியன நகர்ச்சி பற்றிய செய்திகளாகும்.

    அல்சீரிய நகர்ச்சி பற்றிய செய்தியைக் கண்ணுறும் போது குமரி /லெமூரிய நகர்ச்சி என்பது வலுவாக ஆய்வு செய்ய வேண்டிய
    ஒன்று என்றே தோன்றுகிறது.

    குமரிக்குத் தெற்கே ஏறத்தாழ 10000 கி.மீ நீணிலம் என்ற தரவையும்,
    ஒரு ஆண்டுக்கு 18மி.மீ இந்திய நிலம் வடக்கு நோக்கி நகர்கிறது என்ற தரவையும் காணும்போது இந்த நகர்ச்சி 550 மில்லியன் ஆண்டுகளாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த 550 மில்லியனும் அல்சீரியாவின் 450மில்லியனும் ஏறத்தாழ அளவொத்து இருப்பது வியப்பைத் தருகிறது.

    தங்களிடம் கேட்க எண்ணிய இன்னொன்று வடிகால் புழுதி பற்றியது.
    வடிகால் புழுதி என்பது கடற்தளத்தில் புறத்தே இருந்து வந்து குவியும்
    தூசி/மணலா?

    இந்தப் புரிதல் சரியெனின், இப்படி வந்து குவியும் புழுதியோடு, கடற் தளத்தில் ஏற்படும் அரிப்பு, நீரோட்டம் ஆகியவற்றால் புழுதி உண்டாகுமா?

    நான் அறிய விரும்புவது – “கடல் மற்றும் நிலத்தளத்தில், நீர், காற்று மற்றும் இயற்கை நிகழ்வுகளால் கல்/பாறை குறிப்பிடத்தக்க புழுதியை ஏற்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்பதாகும்”. இது பற்றிக் கொஞ்சம் சொல்லவும்.

    தமிழிலே “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து” என்று ஒரு செய்யுள் வரி வரும். அது பற்றி நிறைய உரைகள், கட்டுரைகள், புகழுரைகள் உண்டு. அவற்றில் எனக்கு மனநிறைவில்லை. வடிகால் புழுதி பற்றிய (160 மில்லியன்) உங்களின் எழுத்து எனக்கு இதனைப் பற்றி யோசிக்க வைத்தது.

    //காவிரி நதிச் சங்கமத்தில் பூம்புகாரும், குமரிக் கடலில் ஒரு பெருங் கண்டமும் நீரில் மூழ்கி விட்டதாகத் தமிழ் இலக்கிய வரலாறுகள் சுமார் 2000 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றன.

    தமிழரசும், தமிழ்ப் பூதள ஆய்வுவாதிகளும் இதுவரை இவற்றைக் கடலில் மூழ்கும் சாதனங்கள் மூலம் ஆராயாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது ! //

    அண்மையில் இசுகாட்லாந்தில் நிகழ்ந்த ஒரு ஆழ்கடலாய்வில் ஒரு பெரிய நிலப்பரப்பைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதைப் படித்தபோது எனக்கும் இதே கவலைதான் தோன்றியது. (முகநூலில் பேசிக் கொண்டிருந்தோம்).

    பழந்தமிழறிஞர்கள் நூற்பால் ஆய்ந்து சொன்ன சேதிகளை சிறிதேனும்
    நிகழ்த்திப் பார்க்க தமிழக அரசியல் எண்ணக் கூட இல்லை.ஆனால், இந்த மில்லியன் ஆண்டுச் செய்திகளை மேடையில் பேசிப்பேசி பில்லியன் களைத் தேற்றிக் கொண்டார்கள் :) அதுவே தமிழர்களின் ஆய்வுகள்
    உலகளாவத் தடுக்கிறது. முயற்சி கூட செய்யாத ஒரு குமுகம் அதிகம் பேசுகிறது.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  5. Sea Floor Sediments

    http://www.teara.govt.nz/en/sea-floor-geology/6

    Figure 1: Illustration of the major issues concerning gas hydrates in sea-floor sediments. (Left) Earthquakes trigger gas-hydrate instability that in turn triggers massive slumping of sea-floor sediments and tsunamis. Installing large structures on the sea bed might result in rapid release of gas and instability of their foundations. Any release of methane promotes global warming. (Right) The huge potential for developing gas hydrates as resources – they are readily discovered by their distinct ‘signatures’ on seismic sections.

    S.Jayabarathan

  6. சி. ஜெயபாரதன்,

    ” [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.”

    என்று நீங்கள் கூறியதற்கேற்ப என்னிடம் வரைபடமுள்ளது.

    அதை இங்கும் விக்கிபீடியாவிலும் தருவதற்கு உகந்ததா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் வரைபடத்தை அனுப்ப உதவியாக இருக்கும். இதில் உறுப்பினராவது எப்படி?

  7. நண்பர் நாக. இளங்கோவன்,

    பூமியின் வட / தென் துருவங்கள் ஒவ்வொரு 300,000 -800,000 ஆண்டுக்கு ஒருமுறை இடம் மாறிக் காந்த மண்டலத்தின் திசை மாறுகிறது. அப்போது பூமியின் சுழற்சி நிறுத்தமாகி எதிர்ப்புறம் பூமி சுற்றத் துவங்கிறது. அந்தச் சமயத்தில் உலகத்தில் பெருத்த மாறுதல் உண்டாகி, மனிதர் உட்பட உயிரினங்கள் பல செத்து மீண்டும் பிறக்கின்றன. அந்தப் பிரளயத்தில் உயிர் தப்பிய சில ஜந்துக்களும் இருக்கின்றன. முந்தைய துருவ மாற்றம் நிகழ்ந்து சுமார் 180,000 ஆண்டுகள் ஆகியுள்ளதாக இப்போது அறியப் படுகிறது. அதாவது கலியுக மனிதர் தோன்றி 180, 000 ஆண்டுகள் கட்ந்துள்ளன.

    குமரிக் கண்டத்தில் வாழ்ந்திருந்த தமிழர் 10,000 – 30,000 ஆண்டுகளில் நடமாடியவர் என்று நம்புவதில் தவறில்லை.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  8. my dear sir,

    I am very interested in this subjects particularly old kumari tamils also our old stories(idicasams)
    please you send details to me due this subject relative

    by

    sivakumar. s

  9. நண்பர் சிவக்குமார்,

    விக்கிபீடியாவில் குமரிக்கண்டம் பற்றி விபரங்கள் உள்ளன. கூகிள் தேடலில் குமரிக்கண்டம் என்று இட்டுத் தேடிப் பாருங்கள். விபரம் சிறிது கிடைக்கும்.

    சி. ஜெயபாரதன்

  10. Sir

    Pls continiue your research and publish to everybody, then only it will reach everybody who are searching this type of studies.. many of them no aware of these much.

  11. Dear Friends ,

    This is actually a golden news. Not only our future generations, even the current generation should know these details. And wonder how many will actually know this bit (including my self). Honestly this is the first time i have taken the time to read about this and finding it very interesting. Frankly i took the initiative of showing these details to my little daughter which i hope she will start to have some believe. I will keep on let her know in which ever the simplest way that she could understand and let’s hope that my next generation will carry forward interest to know about our proud history. I would appreciate if i could be part of this discussions and knowledge sharing so that i my self can gather as much information as possible. And if i can be helpful to support to find more about these facts (may even a pin size of my contribution), i would be very glad.
    Congratulations

  12. குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தகவல் வேண்டும் எங்கே தேடுவது

  13. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  14. வணக்கம் ஐயா
    ———————————————-
    1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை!
    ———————————————-
    இந்த ஆய்வு பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள விழைகிறேன்
    நன்றி

  15. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.