ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

(மே மாதம் 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

“தோழர்களே! செர்நோபில் அணுமின் நிலையத்தில் மாபெரும் சீர்கேடான விபத்து நேர்ந்துள்ள தென்று நீங்கள் யாவரும் அறிவீர்!  சோவியத் மக்கள் பேரின்னல் உற்றதுடன், அவ்விபத்து அகில உலக நாட்டினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்டது!  முதன்முதலாகக் கட்டுக்கடங்காது மீறி எழுந்த அணுசக்தியின் பேராற்றலால் பாதிக்கப்பட்டு நாம் பேரளவு சிரமத்துடன் போராடி வருகிறோம்!”

மிக்கேயில் கார்பச்சாவ், முன்னாள் சோவியத் அதிபர் [1986 ஏப்ரல் உரை]

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

‘செர்நோபிலில் மெய்யாக நடந்தவை’ என்னும் எனது நூலை வாசிப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்:  செர்நோபில் விபத்து (ஏப்ரல் 1986) உலக நாடுகளைப் பாதித்த ஓர் துன்பமய நிகழ்ச்சி!  அது விளைவித்த தீங்குகள் இப்போதும் (2011) மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன.  மில்லியன் கணக்கான மாந்தர் இன்னும் கதிர்த் தீண்டிய தளங்களில் வசித்து வருகிறார்.  அவர்கள் யாவரும் மற்ற உலக மக்களின் உதவியையும், பரிவையும் பெரிதளவு நாடுகிறார்.

கிரிகொரி மெத்வதேவ் [Author The Truth About Chernobyl (July 8, 1990)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”

மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]

அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை!

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

முன்னுரை:   1986 ஏப்ரல் 26 ஆம் நாள் செர்நோபில் அணுமின் உலைச் சோதனையின் போது வெடித்துப் பேரின்னல்கள் விளைந்ததில் 190 டன் சூட்டு யுரேனிய எரிக்கோல்களின் 5% கதிரியக்கத் துணுக்குகள் காற்றில் மிதந்து உலகெங்கும் படிந்து விட்டன!  செர்நோபிலுக்கு வடக்கே இருக்கும் பெலரஸ் நாட்டில் மட்டும் சுமார் 70% கதிரியக்கப் பொழிவுகள் பெய்து விட்டன!  அவற்றின் தீவிரத்தை ஒப்பிட்டுக் கூறினால், ஹிரோஷிமா அணு ஆயுத வெடிப்புக் கதிர்வீச்சைப் போல் 90 மடங்கு மிகையானது என்று சொல்லலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விபத்து நேர்ந்தாலும் செர்நோபிலின் கோர விளைவுகளைச் சிறுவர், சிறுமியர், சிசுக்கள் தவிர்க்க முடியாது பேரளவில் பாதிக்கப் பட்டு விடிவை நோக்கிக் காத்திருக்கிறார்கள்!  கதிர்வீச்சு தீண்டப்பட்ட தளங்களில் மக்கள் அனுதினம் உண்டு, உறங்கி, உலவி வருகிறார்!  கதிர்வீச்சு கலந்த நீரை அனுதினம் குடித்து வருகிறார்!  கதிர்வீச்சு சூழ்ந்த காற்றைச் சுவாசித்து வருகிறார்!  கதிர்த்தீண்டிய நிலத்தில் விளைந்த தானியப் பயிரை உண்டு, பலர் வயிறு வீக்க நோயில் [Gastritis] வாதிக்கப் படுவாகத் தெரிகிறது!  குழந்தைகள் சில புற்று நோய்கள், தோல் தொல்லைகள், இரத்த நோய் [Leukaemia], தலைவலி, தலைச்சுற்று, மூக்கில் இரத்தக் கசிவு ஆகியவற்றில் துயர்ப்பட்டு வருகிறார்.  மேலும் கதிரியக்கத் தீங்கு உடம்பின் நோய்ச் சுயத் தடுப்பு ஏற்பாடுகளைத் [Immune Systems] தகர்த்துத் தீரா நோய்கள் தாக்குவதற்கு வழி வகுக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  2011 ஆண்டு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு அடுத்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

1)   சோவியத் ரஷ்யாவில் கிஷ்டிம் [Kyshtym] விபத்து [1957]  (Level : 6.)

2)   பிரிட்டனில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து [1957]  (Level : 5)

3)   அமெரிக்காவில் திரிமை தீவு [Three Mile Island] விபத்து [1979] (Level : 5)

4)  சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் விபத்து [1986] (Level : 7)

5)  இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலையத்தில் வெடிப்பு  [1993] (Level : 4)

6)  ஜப்பான் புகுஷிமாவில் நான்கு அணு உலைகளில் விபத்து [2011]         (Level : 6 -7)

எல்லாவற்றிலும் செர்நோபில் விபத்தே உலகலாவிய தீங்குகளை விளைவித்த பேரிடர்ப் பெரு விபத்தாக உச்ச நிலைக்கு உயர்த்தப் படுகிறது!  ஆயினும் அணுமின்சக்தி நிலையமே பேரளவு மின்சார உற்பத்திக்குத் தேவையான தொழிற்சாலை என்று உலகெங்கும் தற்போது நிலை பெற்று விட்டது.  ஆனால் பெரிய விபத்துக்கள் நேராமல் பாதுகாப்பாக இயக்கி மின்சாரம் அனுப்ப முடியும் என்பது இன்னும் அழுத்தமாக உறுதி அளித்துக் காட்டப்படும் வரையில் பொது மக்களின் பூரண வரவேற்பையும், அனுமதியையும் அணுமின் நிலையங்கள் பெறமாட்டா!  அணுமின் நிலையங்களில் விபத்துக்களை எதிர்பார்க்கும் அச்சமும், ஐயப்பாடும், அனுபவமும் மேலும் பொது மக்களுக்கு அவற்றின் தீங்குகளின் தீவிரத்தைப் பன்மடங்கு மிகையாக்குகிறது!

ஜப்பான் புகுஷிமா நான்கு அணு உலை விபத்துக்களில் என்ன நேரவில்லை ?

2011 மார்ச் மாதத்தில் நேர்ந்த நிலநடுக்கச் சுனாமியால் பாதுகாப்பாய் நிறுத்தமான புகுஷிமா அணுமின் உலைகளின் வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் (Shutdown Decay Heat Cooling Systems) முடமாகிச் சிறிதளவு எரிகோல்கள் உருகி ஹைடிரஜன் வாயுக் கோளம் பெருகி மேற்தளங்கள் வெடித்தன !  கசிந்த நீராவியில் பேரளவு கதிரியக்க வாயுக்கள் வெளியாகி சூழ்வெளியிலும், சூழ்கடலிலும் ஐயோடின்-131 (அரை ஆயுள் : 8 நாள்) & சீஸியம்-137 (அரை ஆயுள் : 30 வருடம்) பரவின.  அகில நாட்டு அணுவியல் பேரவை (International Atomic Energy Agency – IAEA) புகுஷிமா வெடி விபத்தை விபத்து நிலை 5 லிருந்து 7 விபத்து நிலைக்கு மாற்றினாலும் செர்நோபில் விபத்தின் கோரமும், புகுஷிமா அணு உலை மேற்கட்டட வெடிப்பின் சீர்கேடும் ஒன்றல்ல என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து.  பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைகளில் என்ன நிகழ்ந்தன என்பதைப் பெரும்பாலோர் தொலைக்காட்சி மூலம் அறிந்திருந்தாலும், அவற்றில் என்ன நிகழவில்லை என்பதையும் அறிந்து இங்கு நாம் ஒப்பு நோக்கத் தேவைப் படுகிறது.


1.  7.5 ரிக்டர் அளவு நில நடுக்கப் பாதுகாப்புக்குக் கட்டப்பட்ட புகுஷிமா அணு உலைச் சாதனங்கள், கட்டடங்கள் 9.0 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்துக்கும் சிதையாமல் நிமிர்ந்து நின்றன !  அணு உலை எஃகுக் கோட்டையின் அழுத்தம் நீக்குத் தடாக வளையம் (Reactor Steel containment Suppression Pool Torus) நீராவி அழுத்தத்தால் சற்று பிளந்தாலும், நிலநடுக்கத்தால் சீர்கேடாக வில்லை.  ஓரளவு உருகிப் போன எரிகோல்களும் பாதுகாப்பாக எஃகுக் கோட்டை அரணுக்குள் அடக்கம் ஆயின.

செர்நோபில் அணு உலைக்கு எஃகு கோட்டை அரண் அமைக்கப் படவில்லை.  எரிந்து போன யுரேனியக் கோல்களும், உருகி வழிந்த எரிக் கோல்களும் உள்ளடக்கப் படாமல் வெடிப்பில் சிதறிச் சுற்றிலும் வீசி எறியப் பட்டன.

2.  புகுஷிமா அணு உலைகள் அனைத்தும் நில நடுக்கம் ஆரம்பித்த உடனே சுயமாய் நிறுத்தம் அடைந்து, எஞ்சிய வெப்பத்தைக் குறைக்க அபாயத் தணிப்பு நீர் ஏற்பாடுகள் தானாய் இயங்க ஆரம்பித்தன. நிலநடுக்கம் நின்று ஒரு மணி நேரம் கடந்து சுனாமி அலைகள் எழுந்து டீசன் எஞ்சின்களை நிறுத்தும் வரை வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுயமாய் இயங்கி வந்து வந்துள்ளன !
செர்நோபில் அணு உலையில் கட்டுப்பாடுக் கோல்கள் (Control Rods) இயக்குநரால் தவறாக மேலே தூக்கப்பட்டு அணு உலை மீறிய இயக்கத்தில் சீறி எழுந்து, அபாய நிறுத்தக் கோல்களை (Shutdown Rods) இறக்கித் தடுக்க முடியாமல் போய் பேரளவு வெப்பம் உண்டாகி அணு உலை வெடித்துக் கவசச் சாதனங்களும், கட்டடமும் தகர்ந்தன.  சூடான எரிக்கோல்கள் உடைந்து அங்குமிங்கும் சிதறி எறியப்பட்டன !

3.  புகுஷிமா அணு உலைகளில் ஓடிக் கொண்டிருந்த அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் (டீசல் எஞ்சின் ஜெனனி மின்சாரம்) (Emergency Diesel Generator) சுனாமிப் பேரலையால் மூழ்கப்பட்டு முடங்கிப் போயின.  அதனால் சில எரிக்கோல்கள் உருகிப் போனாலும் அணு உலை அரணை விட்டு அவை அகல வில்லை.  எரிக்கோல் கவசம் ஸிகோனியம் (Fuel Sheath : Zirconium) சூட்டு நீரோடு இணைந்து உண்டான ஹைடிரஜன் வாயுக் கோளம் திரண்டு ‘அழுத்த விடுவிப்புச் சாதனம்’ (Relief Valve) மூலம் கசிந்து வெளியேறி வெடிப்பை உண்டாக்கியது.  ஆயினும் கதிரியக்க எரிக்கோல்கள் உருகி, உடைந்து சூழ்தளத்தில் சிதற வில்லை.  எஃகு அரணுக்குள் அடக்கம் ஆயின !
அணு உலைகளைப் பற்றிப் பயிற்சி அளிக்கப் படாத அப்பாவித் தீயணைப்புப் படையினர் கவச அணிகளின்றித் தீயணைக்கச் சென்று செர்நோபில் அணு உலையிலிருந்து சிதறிய கதிரியக்கத் துணுக்குகள் மீது நடந்து பேரளவு கதிரடி பெற்று ஒரு சில தினங்களில் உயிரிழந்தார்.  புகுஷிமா அணு உலை விபத்தில் அபாயப் பணி புரிந்தோர் அனைவரும் போதிய கவசம் அணிந்து வேலை செய்தார்.  சிறிதளவு கதிரடி பெற்றார்.

4.  புகுஷிமாவின் நான்கு அணு உலைகளில் விபத்து நேர்ந்து கதிரியக்கம் ஓரளவு சூழ்வெளியிலும், சூழ்கடலிலும் பரவினாலும், ஜப்பானியப் பணியாளர் எவரும் தீவிரக் கதிரடி பெற்று உயிரிழக்க வில்லை.  அவரில் பலர் சிறிதளவு கதிரடியே பெற்றார்.  பொது மக்களில் சிலர் சிறிதளவு கதிரடி பெற்றார்.

செர்நோபில் அணு உலை வெடித்த பிறகு ஒரு சில மாதங்களில் உயிரிழந்தோர் 56 பேர்.  அவரில் 28 நபர் ஒரு சில நாட்களில் / வாரங்களில் இறந்தவர்.  மேலும் கதிர்வீச்சு நோயால் (Radiation Sickness) இன்னலுற்ற ஊழியர் & தீயணைப்புப் படையினர் 200 முதல் 300 பேர் என்று தெரிகிறது.  25 வருட இடைவெளியில் 130,000 பேர் பெலாரஸ், யுக்ரேயின், ரஷ்யா, அப்பால் சில பகுதிகளில் / நாடுகளில் சிறிதளவு கதிரடி வாங்கினார்.  தைராய்டு புற்று நோய் வாய்ப்பட்டவரில் 4000 சிறுவரின் தாக்கம் செர்நோபில் விபத்தால் நேர்ந்தது என்று முடிவு செய்யப் படுகிறது.  அந்நோய்களில் பெரும்பான்மை யானவை குணமாக்கக் கூடிய தென்றாலும், 9 சிறுவர் இறந்து விட்டதாக அறியப் படுகிறது.  இரத்த நோய் (Leukaemia) அல்லது வேறு புற்று நோய்கள் எதிர்பார்க்கப் பட்டாலும் அவற்றின் அதிகரிப்பு காணப் படவில்லை.

5.  புகுஷிமாவின் நான்கு அணு உலை விபத்துக்கள் 30 அடிச் சுனாமியால் நேர்ந்ததே தவிர மனிதத் தவறால் தூண்டப்பட வில்லை.  நிறுத்தப் பட்ட மூன்று அணு உலைகளில் விளைந்த மிச்ச வெப்பத்தைத் தணிக்கும் அபாயத் தடுப்பு டீசல் எஞ்சின் ஜெனனி பம்ப் நீரோட்டம் (Shutdown Decay Heat Cooling System) சுனாமியால் நீண்ட காலம் தடைப் பட்டதால் ஏற்பட்டது.  அணு உலை நிறுத்தமானதும் ஒரு சில நிமிடங்கள் வெப்பசக்தி 7% அளவு நிலைக்கும், இரண்டு மணிநேரம் கழித்து 1% ஆகவும், ஒரு நாளில் 0.5% ஆகவும், ஒரு வாரத்துக்குப் பிறகு 0.2% ஆகவும் குறைகிறது.  1000 MWe மின்சாரம் வெளி அனுப்பும் அணு உலையில் 1% வெப்பசக்தி அளவு 350 MWt ஆற்றலாகும் !  நவீன அணுமின் நிலையங்களில் இவ்விதம் வெப்பத் தணிப்புக்குத் தடை ஏற்பட்டால், ஈர்ப்பு விசையில் இயங்கும் ஓய்தொட்டி நீரோட்ட அமைப்பு (Passive Tank Gravity Water Cooling Systerm), நகரும் தீயணைப்பு நீரோட்ட இணைப்பு (Mobile Fire Water System) போன்றவை நீண்ட காலத் தணிப்புக்குத் தயாராக இருக்கும்.  சேரும் கதிரியக்கக் கழிவு நீருக்குத் தொட்டிகள், கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடுகள் (Ion Exchange Filtering System) புகுஷிமா அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட வில்லை.

செர்நோபில் விபத்து திட்டமின்றி துவங்கிய அணு உலைச் சோதனையில் இயக்குநர் புரிந்த மாபெரும் பல்வேறு மனிதத் தவறுகளால் தூண்டப் பட்டது.

முடிவுரை :   நான்கு அணு உலை எஃகு அரண்களில் மூன்றில் எந்தப் பழுதும் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை.  அரண்களின் கீழிருக்கும் ஒன்று அல்லது இரண்டு ‘அழுத்தம் நீக்குத் தடாக வளையத்தில்’ (Pressure Suppression Pool Torus) மட்டும் பிளவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  இவற்றைச் செப்பனிட முடியும்.  அணு உலை எரிக்கோல்களின் வெப்பம் பேரளவு தணிக்கப் பட்ட பிறகு, கதிர்த் தீண்டல் தளங்கள் துடைக்கப் பட்ட பிறகு, அணு உலையும், எரிக்கோல்களும் ஆழ்ந்து சோதிக்கப்படும்.  ஓரளவு உருகிப் போன எரிக்கோல்கள் கவசத் தொட்டிகளில் ஓரிரண்டு ஆண்டுகளில் நீக்கப் படும்.  இடிந்து போன நான்கு அணு உலைக் கட்டடங்கள் மீண்டும் கட்டப்படும்.  நவீன முறை அரண்களும், அணு உலைகளும், அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகளும் புதிதாய் அமைக்கப்படும்.  அந்தச் செம்மைப்பாடுகளுக்கு நிதிச் செலவு மிகையானால் மூன்று அணு உலைகளும் எரிக்கோல்கள் நீக்கப் பட்டு நிரந்தரமாய் மூடப் படலாம்.  இப்போது ஜப்பானிய நிபுணர் அணு உலைச் சோதனையில் ஈடுபட்டிருப்பதால் அவரது முடிவு என்ன வென்று நிச்சயமாய் தற்போது யாரும் அறிய முடியாது.  புகுஷிமா அணு உலைச் சீரமைப்பில் எந்தப் பணியை ஜப்பான் மேற்கொண்டாலும் அவற்றை செய்து முடிக்க 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம்.

(தொடரும்)

***************

தகவல்:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

19.  Nuclear {Power in Japan (March 30, 2011)

20. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

20 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

22.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

23.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

27.  Wikipedia : Chernobyl Disaster Effects  (May 22, 2011)

************************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 28, 2011
http:jayabarathan.wordpress.com/

3 thoughts on “ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

  1. I possess been discovering quite a few different ideas on that and find it submit to be one of the more enlightening on the subject. Desire we can rise the top quality of responses than which I possess viewed as many do not seem to be quite relevant.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.