ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் விமானப் போக்குவரத்தை முடக்கியது

(கட்டுரை -1)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


காலக் குயவன் தீச்சட்டி மேல்
தாலாட்டி வாழ்கிறோம்
காலங் காலமாய் !
இன்றும்
சூடாய் உள்ளது உட்கரு !
இப்போதும்
கொதித்துக் கொண் டுள்ளது
கொப்பரைக் குழம்பு !
கருப் பையை
அழுத்தம் பிதுக்கப் பீறிட்டெழும்
எரிமலைகள் !
கருமுட்டை வெடித்துக்
காறி உமிழும்
கரும்புகை மூட்டம் !
தாறு மாறாய் நெளியும்
தரணியின் அடித் தட்டுகள் !
அங்கிங் கெனாதபடி
எங்கும்
குடல் குலுக்கும் நில நடுக்கம் !
எரிமலைப் புகை மூட்டம்
சூழ்வெளிச் சூட்டை
குளிர்ப் படுத்தும்
பயிரினத்தைப் பாழாக்கும் !
உயிரினம் வாடும் !
ஊழியின்
நெற்றிக் கண் சீற்றம்
வருணிக்க முடியா
திருவிளை யாட லப்பா !

புதிய உமர் கயாம்


“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

“வான்வெளிப் பயணத்தின் தவிப்பு என்னவென்றால் எரிசாம்பல் புகை மூட்டத்தில் என்ன நச்சுத் துணுக்குகள் எதிர்ப்படும் என்பதை நாம் சொல்ல முடியாது !  அப்போதுதான் எவை பாதிப்பவை, எவை பாதுகாப்பானவை என்று உறுதியாகக் கூற முடியும்.  ஆகவே விமானப் பயணத்தை நிறுத்தி அனைத்தையும் தவிர்ப்பதே ஏற்புடையதாகும்.  சுமார் 30,000 அடி உயரத்தில் (9145 மீடர்) அரிக்கும் வாயுக்கள் (Corrosive Gases) எவ்விதம் தாறுமாறாய் நகரும் என்பது யாருக்கும் விளக்கமாகத் தெரியாது.”

டீனா நீல் (Tina Neal, Volcanologist, Alska Volcano Observatory, Anchorage, USA)

“இதுவரை 38 மைல் (60 கி.மீ.) நீட்சியில் எரிமலை முகட்டுக்குக் கிழக்கே எரிசாம்பல் பரவியுள்ளது தெளிவாகத் தெரிகிறது,  வெடிப்புக்கு அருகில் வாழும் மாந்தருக்கு உடல்நலக் கேடுகள் விளையும்.  அந்தப் பகுதிக்கு அப்பால் மற்றவருக்குப் பேரளவு உடல்நலப் பாதிப்புகள் நேரு மென்று நான் கருத வில்லை.  பொதுவாக புகை முகில் அளவும், எவ்வளவு தூரம் எரிசாம்பல் எறியப் படுகிறது என்பதுமே எத்தனை எடையளவு சாம்பல் சேர்ந்துள்ளது, எங்கு படிந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும்.”

தோர்வல்துர் தோர்தர்ஸன் (Thorvaldur Thordarson, Icelandic Volcanologist, University of Edinburgh, Scotland) (April 16, 2010)


ஐஸ்லாந்தில் எழுந்த அசுர எரிமலையின் புகை மூட்டம்

2010 மார்ச் மாதம் 21 ஆம் தேதி சுமார் 190 ஆண்டுகளாய் மூடிக் கொண்டிருந்த ஐஸ்லாந்தின் அயாஃபுல்லாய்ஹோகுல் எரிமலை (Eyjarfjallajokull Volcano) வாய் திறந்து தீப்பொறிகளை வீசி எறியத் தொடங்கியது !  அந்த எரிமலைக் குன்றின் வாய் பனிப்படிவு மேவியது !  வெளியேறிய கனற் பாறைக் குழம்பு (Magma) பனிச்சிகரத்தை உருக்கி ஒரு பக்கம் நீர் ஆறாகவும், திரவப் பாறை வெள்ளமாகவும் ஒட ஆரம்பித்தது !  எரிமலைத் தீப்பொறிகள் வெளியேறும் போது கலந்த நீராவி மேற்புறம் புகை மண்டலமாய் வீசத் துவங்கியது !  மார்ச் 24 இல் ஐஸ்லாந்து எரிமலை மற்றொரு வாயைத் (Fissure) திறந்து 980 அடி உயர (300 மீடர்) எரிமலை வெடிப்பை உண்டாக்கியது.  புதிய எரிமலை வாய்த் திறப்பு மேலும் மற்ற எரிமலை இயக்கங்களைத் தூண்டி வன விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பூதளவியல் நிபுணர்கள் கூறுகிறார்.

இப்போது ஐஸ்லாந்தில் 35 மூச்சு விடும் எரிமலைகள் இயங்கி வருகின்றன ! சென்ற எரிமலை வெடிப்பு அதே மலை முகட்டுப் பனிச் சிகரத்தில் 1821 ஆண்டில் மூண்டெழுந்து சுமார் இரண்டாண்டுகள் கனற் குழம்பையும் புகை மூட்டத்தையும் கொட்டி இருக்கிறது ! முதலில் திறந்த ஐஸ்லாந்து எரிமலை 2000 அடி அகல வாயை (500 மீடர்) உண்டாக்கியுள்ளது !  ஒரு கோணத்தில் எரிமலை நீராவிக் குழம்பைப் பார்த்தால் ஊற்றுபோல் பீச்சும் மஞ்சல் நாடாவைப் போல் ஒளிக்காட்சி அளிக்கிறது.  2010 மார்ச் 21 இல் எரிமலை வாயிலிருந்து பேரளவு புகை மூட்டம் கிளம்ப ஆரம்பித்து ஐரோப்பிய ஆகாய விமானப் போக்கு வரத்துகளை எதிர்பாராதவாறு நிறுத்த ஆரம்பித்தது !  இம்முறை ஐஸ்லாந்தில் எழுந்த எரிமலை வெடிப்பு எத்தனை நாட்கள் இன்னும் நீடிக்கும் என்று யூகிக்க இயலாது என்று பூதளவியல் நிபுணர்கள் கூறுகிறார்.  எரிமலைக் காட்சியைக் காண முதல் பத்து நாட்களில் மட்டும் சுமார் 25,000 சுற்றுலா நபர்கள் விஜயம் செய்ததாக அறியப் படுகிறது.

பூர்வீகத்தில் பூகோளம் உண்டான விந்தை !

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே முகிற்கனல் துணுக்குகள் குளிர்ந்து ஓரண்டமாய் உருண்டு திரண்டது நமது பூகோளம். அண்ட வெளியில் விண்கற்கள் மோதி அடித்தாலும், எழுந்த கதிரியக்கத் தேய்வுகளாலும் அது கனற் குழம்பாய் ஆகியது. அதற்குப் பிறகும் குளிர்ந்து திணிவான பிண்டம், அடியே தங்கி அடுக்கடுக்காய் தோல்கள் கவசமாக மேவி, 8000 மைல் விட்டத்தில் நமது பூகோளம் தோன்றியது. உள்ளே இன்னும் குளிர்ந்து கொண்டு வரும் பூமி, உட்கருவைக் கலக்கி வெப்பத் திரவத்தை மேல்தளத்துக்குத் தள்ளுகிறது. இந்த வெப்பச் சுற்றோட்டமே [Convection] நில நடுக்கங் களையும், எரிமலைகளையும் உண்டாக்கக் காரண மாகிறது! ஹவாயி தீவான கிலெளயாவில் [Kilauea] இவ்விதமே பல்லாயிரம் ஆண்டுகள் எரிமலைகள் குமுறி எழுந்து, அதன் பரப்பு விரிந்து கொண்டே வருகிறது! ஆதி காலத்தில் நாம் வாழும் புவியின் தளங்களும் கடற் குளங்களும் இவ்விதமே எரிமலைகளால் உருவாகி விரிந்தன என்று ஒருவாறு ஊகிக்கலாம்!

இயற்கைப் பழுதுகளால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிரம் மக்களை சில நாட்களுக்குள் கொன்று விடுகின்றன! கடந்த 500 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 300,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது! இருபதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியத் தீவில் உள்ள பெலீ சிகரம் [Mt Pelee, West Indies], கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர்! ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடீர் எழுச்சிகள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டு வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானி களால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை மீண்டும் தாக்கவரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டியவை!

எரிமலைப் புகை மூட்டத்தால் ஏற்படும் உடல் நலக் கேடுகள்

ஐஸ்லாந்து தீவில் மட்டும் இப்போது 35 எரிமலைகள் தீவிரமாய் மூச்சு விட்டுப் புகை ஊதிக் கொண்டிருக்கின்றன !  தற்போதைய எரிமலைப் புகைப் பொழிவு (Volcano Plume) பேரளவு நச்சுத் தூசி துணுக்குகளை வீசிப் பூமியில் வாழும் உயிரினத்துக்குப் பெருங் கேடு விளைவிக்கிறது.  ஈரோப்பில் பரவிய புகை மூட்டத்தால் உலக நாடுகளின் ஆகாய விமானப் போக்கு வரத்துகள் தடைப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தார்கள்.  உலக உடல்நலப் பேரவை (Wolrd Health Organization) ஈரோப்பில் வசிக்கும் மக்கள் தமது வீட்டுக்குள் அடங்கிக் கொள்ள வேண்டும் என்றும், எரிசாம்பல் விழும் போது மூக்குக் கவசம் அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

விஞ்ஞானிகளுக்கு எரிமலைப் புகைச் சாம்பல் பூதளவியல் ஆராய்ச்சி செய்ய உதவுகின்றது.  அதனில் நுண்ணியக் கண்ணாடி மணல், எரிமலைக் குழம்பு குளிர்ந்து அல்லது பாறை வெடிப்பில் கிளம்பிய தூசி மண்டலம் கலந்துள்ளது.  அவற்றை மனிதர் சுவாசிப்பதால் மூக்கு, தொண்டையில் அரிப்பு ஏற்படும். கண்களில் எரிச்சல் உண்டாகும்.

நுண்துகள்கள் காற்றுக் குழாய் வழியாக உள்ளே சென்று புப்புசங்களில் தங்கிக் கொண்டு, ஆஸ்த்மா, நீடித்த பிரான்கிடிஸ், எம்·பிஸீமா (Asthma, Chronic Bronchitis & Emphysema) போன்ற சுவாச நோய்களைக் கடுமையாக்கி மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகின்றன.

அடுத்து வீட்டு விலங்குகளுக்கு (Livestock) ஆபத்துகள் விளைவிக்கும்.  பல்வேறு வகைப்பட்ட எரிமலைக் குழம்புக்கு (Magma) ஏற்ப பல்விதமான இரசாயன நச்சுகள் வெளியேறுகின்றன.  சில வகைப் புகை முகில்களில் ஃபுளோரின் வாயு மிதப்புகள் (Fluorine Aerosols) கிளம்பும்.  அவை படிந்த புல்லைத் தின்னும் போது கொல்லும் எலும்பு நோய் ஃபுளோரோஸிஸ் (Fatal Bone Disease Fluorosis) விலங்கினத்தைக் தாக்கும்.  தற்போதைய வரண்ட ஐஸ்லாந்து எரிமலைப் புகை முகிலில் ஏராளமான அளவு நச்சு மூலகம் ஃபுளோரின் கலந்துள்ளது.  இந்த எரிமலை வெடிப்பு சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட நீடிக்கலாம் என்று ஐஸ்லாந்து வரலாற்றை அறிந்தவர் கூறுகிறார்.  புகை மூட்டத்தில் சிறிதளவு ஸல்ஃபராக்ஸைடு (Sulphur Oxide) வாயுவும் கலந்திருக் கலாம் என்றும் கருதப் படுகிறது.  ஸல்ஃபர் அல்லது அதன் அமில இருப்பைக் காட்டும் முட்டை நாற்றம் அடித்தால் பொது மக்கள் வீதியில் உலவுவதைக் குறைத்து வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுரை விடுவிக்கப் பட்டிருந்தது.

எரிமலை வெடிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்.

எரிமலை வெடிப்பின் போது பூமியைச் சுற்றிவரும் துணைக்கோள்கள் தூர உளவிக் கருவிகள் மூலம் (Remote Sensing Satellite Imagery) புகை மூட்டத்தின் போக்கைப் படமெடுத்தனுப்பும். கலப்புத் துணுக்குகளை ஆய்ந்து காணும்.  வான்வெளிப் பயணத்தின் தவிப்பு என்னவென்றால் எரிசாம்பல் புகை மூட்டத்தில் என்ன நச்சுப் பொருட்கள் எதிர்ப்படும் என்பதைச் சொல்ல முடியாது !  அப்போதுதான் எவை பாதிப்பவை, எவை பாதுகாப்பானவை என்று உறுதியாகக் கூறமுடியும்.  ஆகவே விமானப் பயணத்தை நிறுத்தி அனைத்தையும் தவிர்ப்பதே ஏற்புடைய தாகும்.  சுமார் 30,000 அடி உயரத்தில் (9145 மீடர்) அரிக்கும் வாயுக்கள் (Corrosive Gases) எவ்விதம் தாறுமாறாய் நகரும் என்பதும் விளக்கமாக யாருக்கும் தெரியாது.  துணைக் கோள்கள் மூலமாக இரசாயன ஆய்வுச் சோதனைகள் செய்ததில் எரிசாம்பலும், சூழ்வெளி வாயு மண்டலத்தில் எவ்விதம் கலந்து கொள்கின்றன வென்றும், புகை முகிலில் துணுக்குகள் இருப்பு எத்தனை நாட்கள் நீடிக்கு மென்றும் அறிய முடிகிறது.  அத்துடன் புகை முகிலில் எப்படி இரசாயன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது சூழ்வெளிக் காலநிலைக் கடந்த காலத்தில் எவ்விதம் பாதித்தது, எதிர்காலத்தில் எப்படிப் பாதிக்கும் என்றறிய விஞ்ஞானிகள் புரியும் கணனி மாடலுக்கு உதவுகின்றது.

எரிமலைப் புகை மூட்டம் வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது.

நாளொன்றுக்கு ஈரோப்பில் இயங்கும் 29000 விமானப் போக்கு வரத்துக்களில் 10400 எண்ணிக்கை 5.3 மைல் உயரம் (8.5 கி.மீ) (28000 அடி) வரை ஏறிய ஐஸ்லாந்து எரிமலை மூட்டத்தில் நிறுத்தம் அடைந்து பயணிகள் பல நாட்கள் விமான நிலையத்தில் தவித்தனர்.  ஐரோப்பாவில் 16 அகில நாட்டு விமான தளங்கள் மூடப் பட்டன !  அதனால் விமானப் போக்குவரத்து வணிகம் நாளொன்றுக்கு 200 மில்லியன் டாலர் நிதி வரவை இழந்ததாக அறியப் படுகின்றது.  2010 ஏப்ரல் 17 இல் புகை மூட்டத்தின் திசைமாறி திணிவும் குன்றி சில விமானப் பயணங்கள் தொடங்க ஆரம்பித்தன.  புகை முகிலில் கிளம்பும் பாறைச் சாம்பல், கண்ணாடி மணல் விமானங்களின் ஜெட் எஞ்சினுக்குள் புகுந்து துளைகளை அடைத்துச் சுழற்தட்டுகளின் ஓட்டத்தை நிறுத்தி விடலாம் என்ற அச்சம் விமான ஓட்டுநருக்கு உண்டாகிறது.  இதற்கு முன்பு இந்தோனேஸியா எரிமலைப் புகை மூட்டத்தில் பறந்த ஒரு விமானத்துக்கு எஞ்சின்கள் நிறுத்தம் அடைந்து தொல்லை கொடுத்துள்ளது.

எரிமலைக் குழம்பால் விளையும் பெருந் தீமைகள்

திடீரெனப் புகை மண்டலம் எழுந்து, வெடித்துக் கனல் ஆற்றைப் பெருக்கும் எரிமலை ஒரு நாட்டின் சூழ்வெளி, நீர்வளம், நிலவளம், காலநிலை, நிதிவளம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் பெருத்த அளவில் பாதிக்க வல்லமை பெற்றது! அத்துடன் எரிமலை வாயுவில் கனிசமாக வெளிவரும் ஸல்ஃபர்டையாக்சைடு, சிறு துணுக்குகளில் வீசப்படும் மெர்குரி, ஆர்ஸெனிக் நச்சுகள் உயிரினங்களுக்கும், பயிரினங் களுக்கும் நீண்ட கால நோய் நொடிகளைத் திணிப்பதுடன், முடிவில் மரணத்தையும் கொடுக்கும் கொடூர முடையது!

எரிமலை வெடிப்புகள் அண்டையில் வாழும் எண்ணற்ற மக்களைப் புலம்பெயர வைக்கும்! குடியிருக்கும் எண்ணற்ற வீடுகளை எரித்தோ, சாம்பலால் மூடியோ இல்லாமல் செய்துவிடும்! எரிமலை வாயுச் சிதறல்கள் [Tephra], குழம்புக் காய்வுகள் [Lahars] நாட்டின் தொழிற் சாலைகள், போக்கு வரத்துக்கள், மின்சாரப் பரிமாற்றுக் கம்பங்கள் ஆகியவற்றை நாச மாக்கிவிடும்!

ஹவாயியின் பிரதான இயக்க எரிமலைகள் மெளன லோவா, கிலெளயா ஆகிய இரண்டும் தொடர்ந்து வெளியேற்றும் குழம்பால் அபாயம் நேர்வதுடன் நீர்ச் சிதைவு, நிலச் சிதைவு, பெருத்த பொருள் நட்டமும் ஏற்படுகின்றன! 1997 இல் அமெரிக்கப் புவியியற் பரப்புக் கண்காணிப்புத் துறையகம் [United States Geological Survey (USGS)] வெளியிட்ட எரிமலை & நிலநடுக்க அபாயங்கள் பின்வருமாறு:

1. எரிமலைக் குழம்பு ஆறோட்டங்களால் [Lava Flows] ஏற்படும் தீ விபத்துகள்.

2. காற்றில் கலக்கும் எரிமலைத் துணுக்குகளின் சிதறல்கள் [Tephra (Airborne Lava Fragments)].

3. எரிமலைகள் வெளியேற்றும் விஷ வாயுக்கள் [Volcanic Gases: Sulphurdioxide, Carbondioxide].

4. வெடிப்புக் கொப்பளிக்கும் கற்சாம்பல் [Explosive Eruptions] வீச்சுகள்.

5. பூதளப் பிளவுகள், பிளவுப் படிவுகள் [Ground Cracks & Settling] உண்டாக்கும் தீங்குகள்.

6. எரிமலைக் குழம்பு ஓடிக் கடலில் பாயும் போது [When Lava Meets the Sea] எழும் வெடிப்புகள்.

எரிமலை வாயுக் கொப்புளிப்புகளில் முக்கியமாக இருக்கும் விஷ வாயுக்கள் இரண்டு: ஸல்ஃபர்டையாக்சைடு, கார்பன்டையாக்சைடு [SO2, CO2]. கிலெளயா எரிமலை நாளொன்றுக்கு 2000 டன் SO2 மூச்சரிப்பு வாயுவை வெளியேற்றுகிறது ! அதன் எடையளவைக் குறிப்பிட்டால், சுமார் 50 திமிங்கல எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம்! வாயுக்களின் சதவீத அளவைச் சுவாசிக்கும் காற்றில் காண, எரிமலைக்கு அருகில் மாதிரி எடுக்கச் செல்லும் விஞ்ஞானிகள் ‘சுவாசிப்புக் கவசம்’ [Gas Masks] அணியாது சென்றால் இருமலும், மூச்சடைப்பும் மிகுந்து சில நிமிடங்களில் மயக்க முற்று, அவரது மூச்சு நின்று போய்விடும்! அத்துடன் மிகச் சிறிதளவில் கொடிய நஞ்சுகளான மெர்குரி, ஆர்செனிக் [Mercury, Arsenic] உலோகங்களும் வெளியேறுகின்றன!

(தொடரும்)

+++++++++++++++++

படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

தகவல்கள்:

1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
4. Encyclopedia Britannica 15 Edition [1978]
5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
6. National Geographic Frontiers of Science [1982]
7. The Vesuvius Volcano at the Bay of Naples.
8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
10. Inside the Volcano, National Geographic [November 2000].
11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html (Italian Volcano))
11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html (Hawaii Volcano)
12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)

********************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 23, 2010

4 thoughts on “ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் விமானப் போக்குவரத்தை முடக்கியது

  1. நண்பர் வினையூக்கி,

    உங்களுடைய “பனிமலையின் எரிமலை” விஞ்ஞானக் கட்டுரையையும் நான் படித்தேன்.

    சிறந்த கட்டுரை.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.