ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)

ஆயுத மனிதன்

(The Man of Destiny)

ஓரங்க நாடகம்

அங்கம் -1 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன்.  என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம்.  இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார்.  இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன்.  எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ?  பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது.  ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன்.  முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)


நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி.  தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர்.  வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார்.  அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான்.  அப்போது நெப்போலியனுக்கு வயது 27.  அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான்.  அவனது லெஃப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும்.  ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெஃப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான்.  அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார்.  ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான்.  மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது.  எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன்.  மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன.  பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன.  இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான்.  நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன.  கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான்.  வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான்.  நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான்.  வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான்.  நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)

கியூஸெப்:  (மலர்ந்த முகத்தோடு)  இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் !  மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

நெப்போலியன்:  (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு)  எதுவும் பேசாதே !  என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்:  தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்:  (சட்டெனத் திரும்பி)  கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்:  ஐயோ சக்ரவர்த்தி !  என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்:  (கடுமையாக)  எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்:  (தயங்கிக் கொண்டு)  மேதகு சக்ரவர்த்தி !  என்னிடம் எதுவும் இல்லை !  வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்:  (கோபத்துடன்)  உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்:  மேதகு சக்ரவர்த்தி !  அது முடியாத காரியம் !  என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது !  அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்:  அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்:  எனக்குச் சுடத் தெரியாது பிரபு !  துப்பாக்கியும் கிடையாது !  நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்:  ஒயினா ?  வேண்டாம்.  அதை வீணாக்கக் கூடாது  !

கியூஸெப்:  ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்:  (ஒயினைக் குடித்துக் கொண்டு)  உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம்.  ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான்.  வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

கியூஸெப்:  (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு)  எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள்  நிறைய உள்ளன.  நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை.  உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் !  ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்:  கியூஸெப் !  குருதிக்குப் பண மதிப்பில்லை !  அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது !  (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்:  நான் கேள்விப் பட்டிருக்கிறேன் !  நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்)  தோழனே !  மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது !  (ஆசனத்தில் அமர்கிறான்)  உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது.  சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் !  அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் !  பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்:  எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் !  வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ?  தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்:  நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் !  என்ன புரியுதா ?

கியூஸெப்:  அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி !  அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் !  நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.  தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்:  (புன்னகை புரிந்தவாறு)  என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே !  ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ?  ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன்.  உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் !  ஒருத்தனைப் போல் மற்றொருவன் !  ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் !  உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ?  ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்:  கியூஸெப் !  நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் !  போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் !  ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் !  ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது !  குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் !  அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் !  அவர் தரை வழியாகப் போனார் !  நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்:  நல்ல யோசனை பிரபு !  ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

நெப்போலியன்: அந்தப் பெரிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற எனது எஞ்சினியரை நியமித்திருக்கிறேன். இந்த பிரிட்டீஷ் வணிக நரிகளை எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிப்பது எனது குறிக்கோள்களில் ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதுவும் சொல்லாதே !

கியூஸெப்: (அருகில் வந்து குனிந்து பணிந்து) மன்னிக்க வேண்டும் பிரபு. நான் ஒரு சாதாரண விடுதிக்குச் சொந்தக்காரன் ! நீங்கள் பிரான்சின் மாபெரும் தளபதி. இப்படி யெல்லாம் நான் தங்களிடம் பேசக் கூடாது. மேன்மை மிகும் நீங்கள் மற்ற வீரத் தலைவரைப் போன்றவர் அல்லர். யுத்தக் கலையில் உங்களுக்கு நிகர் வேறு யார் ? நீங்கள் ஒருவரே !

நெப்போலியன்: அப்படியா ? என்னைப் பற்றி இத்தாலியச் சிற்றூரில் கூடப் பரவியுள்ளதே ! வேறென்ன சொல்கிறார் என்னைப் பற்றி !

கியூஸெப்: ஆஸ்டிரியப் படைகளை முறியடித்து இத்தாலியைக் காத்த மாவீரர் அல்லவா தாங்கள் ! ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் பிரபு ! உங்களுக்குத் தெரியுமா மேல் மாடியில் புதிதாய் இன்று வந்து தங்கியுள்ள ஓரிளம் பெண்ணை !

நெப்போலியன்: (நிமிர்ந்து தலைதூக்கி) இளம் பெண்ணா ? அந்தப் பெண்ணுக்கு வயதென்ன ?

கியூஸெப்: நல்ல வனப்பான வாலிப வயதுதான் !

நெப்போலியன்: வயதை எண்ணிக்கையில் சொல் ! பதினாறா அல்லது இருபதா ?

கியூஸெப்: முப்பது வயது இருக்கலாம் பிரபு !

நெப்போலியன்: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பாளா ?

கியூஸெப்: அழகு ஒப்புமையானது பிரபு ! அது அவரவர் விழியைப் பொருத்தது ! உங்கள் கண் மூலம் நான் காண முடியாது ! ஒவ்வொரு மனிதனும் அழகைத் தீர்மானிக்க வேண்டும். என் கருத்து அவள் ஒரு கவர்ச்சியான பெண் என்பது. இந்த மேஜைக்கு அவள் வந்து அமர நான் ஏற்பாடு செய்யவா ?

நெப்போலியன்: (எழுந்து நின்று) வேண்டாம். இந்த மேஜையில் எதுவும் செய்யாதே. நான் வரைப்படத்தை விரித்து வைத்துள்ளேன் ! யாரும் அதைப் பார்க்கக் கூடாது. நான் காத்திருக்கும் என் படையாள் வரும் வரை யாரையும் நான் சந்திக்க விரும்ப வில்லை. (தன் சங்கிலிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கிறான்.)

கியூஸெப்: ஓ உங்கள் படையாளியா ? இத்தனை நேரமாக வராமல் இருப்பதற்குக் காரணம் ? பிரபு ! வழியில் அவனை ஆஸ்டிரியப் பகைவர் பிடித்திருப்பார். தப்பி வந்திருந்தால் இப்படித் தாமதம் செய்வானா ?

நெப்போலியன்: (கோபத்துடன்) அப்படி நடந்திருந்தால் என் ஆறாக் கோபத்துக்கு சிலர் ஆளாவார் ! முதலில் அப்படி சொன்ன உன்னைத் தூக்கிலிடுவேன் ! அடுத்து உன் மனைவி. அப்புறம் மேல்மாடி அழகி. அத்தனை பேர் தலைகளும் தரையில் உருண்டோடும் !

கியூஸெப்: தூதரைக் கொல்வீரா ? ஆனால் தயவு செய்து என் மனைவியை விட்டு விடுங்கள் ! அப்பாவி அந்த இளம் பெண் இதில் ஒன்றும் பங்கெடுக்காதவள் !

நெப்போலியன்: உன்னை ஒருபோதும் தூக்கிலிட மாட்டேன். உயிரை இழக்க எதிர்ப்புக் காட்டாதவனைக் கொல்வதில் என்ன பயன் ?

கியூஸெப்: உண்மைதான் பிரபு ! என்னுயிர் பிழைத்தது ! ஐயமின்றி நீங்கள் பெரிய மனிதர் ! பொறுப்பதில் உங்களை மிஞ்சுவோர் இல்லை. நியாயத்தை நிறுத்துப் பார்ப்பதில் நீங்கள்தான் உயர்ந்த நியாதிபதி !

நெப்போலியன்: போதும் உமது முகத்துதி ! வாயை மூடு. போ வெளியே நில் ! என் படையாளி வந்தவுடன் உள்ளே அவனை அழைத்து வா ! (மறுபடியும் வரைப்படத்தில் கவனம் செலுத்து கிறான்)

கியூஸெப்: அப்படியே செய்கிறேன். அவன் வருகையை உடனே தெரிவிக்கிறேன் (வெளியே போகிறான்)

நெப்போலியன்: (வரைப்படத்தைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து) முதலில் இத்தாலி, அடுத்து ஆஸ்டிரியா, அப்புறம் ஹாலண்டு. அடுத்த ஆண்டுக் கடைசியில் எகிப்து ! சூயஸ் கால்வாய்த் திட்டம் துவங்க வேண்டும். இந்தியாவுக்குப் புதிய கடல் மார்க்கம் சூயஸ் வழியாக !

பெண்ணின் குரல்: (தூரத்திலிருந்து இனிமையான குரலில்) கியூ……..ஸெப் ! ஹலோ ! கியூஸெப் ! எங்கே இருக்கிறாய் ? காது கேட்கிறதா ?

நெப்போலியன்: யார் குரல் அது ?

கியூஸெப்: (உள்ளே எட்டிப் பார்த்து) அதுதான் பிரபு ! மேல்மாடி அழகி ! அவள் பேசுவது இசைபோல் இனிக்கும் !

நெப்போலியன்: மேல்மாடி மங்கையா ?

கியூஸெப்: அவள் ஓர் அதியசப் பெண் ! புதிரானவள் ! பிரபு !

நெப்போலியன்: அதியசப் பிறவியா ? பெண் எப்போதும் புதிரானவள்தானே ! அவள் எந்த நாட்டுக்காரி ? எப்படி வந்தாள் ?

கியூஸெப்: யாருக்குத் தெரியும் ? தாங்கள் குதிரை வாகனத்தில் வந்து தங்குவதற்குச் சற்று முன்னேதான் அவள் வந்தாள். யாரும் அவளுடன் வரவில்லை. ஒரு பெட்டி, கைப் பையுடன் வந்தாள். அவள் வாகனத்தை ஓட்டி வந்தவன் அவள் குதிரையை “கோல்டன் ஈகிள்” விடுதியில் விட்டு வந்ததாகச் சொல்கிறான். அவளது குதிரை அலங்கார அணிகள் பூண்டிருந்ததாம்.

நெப்போலியன்: என்ன ? அணிசெய்த குதிரையோடு ஓரிளம் மங்கையா ? அவள் ஆஸ்டிரிய நாட்டிச் சேர்ந்தவளா ? அல்லது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளா ?

கியூஸெப்: பிரெஞ்ச் நாடாக இருக்கலாம்..

நெப்போலியன்: ஐயமின்றி அது அவளது கணவனின் குதிரை ! லோதி யுத்தத்தில் செத்துப் போயிருப்பான் ! பாவம் !

பெண்ணின் குரல்: (இனிமையாக) கியூஸெப் !

நெப்போலியன்: (எழுந்து நின்று) நேற்றுப் போரில் இறந்தவன் மனைவி, வாயில் வரும் குரல் இல்லை அது !

கியூஸெப்: கணவர்கள் செத்துப் போவது எப்போதும் துக்கமாக இருப்பதில்லை பிரபு ! (பெண் குரல் வரும் திசை நோக்கி) இதோ வருகிறேன் பெண்ணே ! (உள்ளெ போகிறான்)

நெப்போலியன்: (அவனைத் தடுத்து நிறுத்தி) நில் போகாதே ! அவளே இங்கு வரட்டும்.

பெண்ணின் குரல்: (பொறுமை இழந்து) கியூஸெப் ! இங்கு சற்று வருகிறாயா ?

கியூஸெப்: பிரபு ! என்னை அனுமதியுங்கள். என் கடமை அது ! யாரும் என்னுதவியைத் தேடி விடுதியில் அழைத்தால் நான் உடனே போக வேண்டும்.

ஆடவன்: (அப்போது வெளியிலிருந்து ஆடவன் ஒருவன் குரல் கேட்கிறது) விடுதியின் அதிபரே ! எங்கிருக்கிறீர் ? (தடதட வென்று பூட்ஸ் சத்தமுடன் ஓர் இராணுவ அதிகாரி நுழைகிறான்.)

நெப்போலியன்: (அவசரமாய்த் திரும்பி) அதோ ! என் படையாளி வந்து விட்டான். போ நீ உள்ளே ! அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேள் !

(கியூஸெப் உள்ளே போகிறான்)

நெப்போலியன்:  (பொறுமை இழந்து)  கடைசியாய் வந்து சேர்ந்தாயே !  என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ?  காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ?  ஏன் தடுமாறுகிறாய் ?  என்ன நடந்தது ?  குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ?  விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ !  குதிரைக்கு ஒரு கால் போனதா ?  அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

லெஃப்டினென்ட்:  (நடுங்கிக் கொண்டு)  குதிரை காணாமல் போனது பிரபு !  நடந்து வர வில்லை !  ஓடி வந்தேன் !  களைத்துப் போய் வாய் குழறுகிறது.

நெப்போலியன்:  எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

லெஃப்டினென்ட்:  (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

நெப்பொலியன்:  கடிதங்களுக்கு இறக்கை இல்லை !  அவை எப்படிக் களவு போகும் ?

லெஃப்டினென்ட்:  எனக்குத் தெரியாது பிரபு !

நெப்போலியன்:  உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

லெஃப்டினென்ட்::  நான் பண்ணியது தவறுதான் பிரபு !  தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு !  படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை !  அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

நெப்போலியன்:  என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே !  உன் வேலை என்ன ?

லெஃப்டினென்ட்:  தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

நெப்போலியன்:  அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

லெஃப்டினென்ட்:  பிரபு !  என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான்.  அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் !  வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் !  பார்த்தால் ஆடு போல் தெரிவான் !  பாசாங்குக்காரன் !

நெப்போலியன்:  எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ?  குதிரை எப்படிக் காணாமல் போனது ?  இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ?  அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது !  ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !

லெஃப்டினென்ட்:  அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு !  அதுதான் எனது முதல் வேலை !

நெப்போலியன்:  உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது.  போ முதலில் அதைச் செய் !  நான் காத்திருக்கிறேன்.  போ ! நில்லாதே என் முன்பு !

லெஃப்டினென்ட்:  அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான்.  அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் !  என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் !  ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் !  ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

நெப்போலியன்:  அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

லெஃப்டினென்ட்:  அது மட்டுமில்லை !  அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

நெப்போலியன்:  ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

லெஃப்டினென்ட்:  என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

நெப்போலியன்:  அறிவு கெட்டவனே !  உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் !  என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

நெப்போலியன்:  மதி கெட்டவனே !  அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு !  உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே !  எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

லெஃப்டினென்ட்:அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு !  அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் !  அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் !  காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

நெப்போலியன்:  அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ?  போ போய் அவன் காலில் விழுந்து  நமது கடிதங்களைப் பெற்று வா !  கையை முறிக்கவும் வேண்டாம்.  காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் !  அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

லெஃப்டினென்ட்:  அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு !  அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?

நெப்போலியன்:  ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் !  அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் !  நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !

லெஃப்டினென்ட்:  அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ?  நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)

நெப்போலியன்:  (உரக்கப் பேசி) கியூஸெப் !  இங்கே வா !  உடனே வா !

கியூஸெப்:  (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?

நெப்போலியன்:  (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு)  இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் !  முதலில் உண்பதற்கு உணவைக் கொடு !  ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் !  இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.

கியூஸெப்:  அப்படியே செய்கிறேன் பிரபு !  வாருங்கள் தளபதி ஐயா !

(லெஃப்டினென்ட்:  மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)

லெஃப்டினென்ட்: (தனக்குள் முணுமுணுத்து)  முதலில் உண்பதா ?  அல்லது படுக்கையில் விழுவதா ?

கியூஸெப்:  முதலில் உங்கள் அறையைக் காட்டுகிறேன் !  படுக்கையில் விழுந்தால் உமது பட்டினி வயிறு தூங்க விடாது.  உண்ட பிறகு உறங்கலாம் !

லெஃப்டினென்ட்:  உண்ணும் போதே மேஜையில் நான் உறங்கி விடுவேன் !

கியூஸெப்:  தளபதியாரே !  ஆஸ்டிரியன் யாராவது உம்மைத் தாக்கியுள்ளானா ?

லெஃப்டினென்ட்:  என்னைத் தாக்குவானா ஓர் ஆஸ்டிரியன் ?  அவன் முதுகெலும்பை முறித்து விட மாட்டேனா ?  என்னை ஏமாற்றியவன் ஓர் ஆஸ்டிரியனாக இருக்கலாம் !  என்னை உயிர் தோழன் என்று வாய்ச் சொற்களால் குளிப்பாட்டினான் !  என்னைப் போல் ஒருவனைச் சந்திக்க வில்லை என்று இனிமையாய்ப் பேசிக் கவர்ந்தான்.  தன் கைக் குட்டையால் என் கழுத்தைச் சுற்றி அணிந்தான் !  இதோ அந்தக் கைக்குட்டை !  (பையிலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.)

கியூஸெப்:  (கைக்குட்டையை உளவி, மோந்து பார்த்து)  கமகமவென மணக்கிறது.  ஒரு பெண்ணின் கைக்குட்டைபோல் தெரிகிறது !

நெப்போலியன்:  (நடந்து போய் கைக்குட்டையை வாங்கி, முகர்ந்து)  ஆமாம் ! நறுமணமுள்ள இது ஒரு பெண்ணின் கைக்குட்டைதான் !  (முன் பைக்குள் அதை வைத்துச் சிரித்துக் கொண்டு)  என் காதலியை நான் மறக்காமல் இருக்கக் கைக்குட்டை நறுமணம் நினைவூட்டும் !

லெஃப்டினென்ட்:  ஜெனரல் ! என் உறுதி மொழி இது!  அந்த வாலிபன் மட்டும் என் கையில் அகப்பட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது !

மாடியிலிருந்து பெண்ணின் குரல்:  கியூஸெப் !  மேலே சற்று வருவீரா ?

லெஃப்டினென்ட்:  யார் அரவம் அது ?  குரல் இனிமையாக உள்ளது !

கியூஸெப்:  அது மாடிப் பெண்ணின் இசைக் குரல் தளபதி !

லெஃப்டினென்ட்:  யார் அந்த மாடிப் பெண் ?

மாடிப் பெண்:  எங்கே இருக்கிறாய் கியூஸெப் ?  மேலே வா ?

லெஃப்டினென்ட்: (கியூஸெப்பைத் தொடர்ந்து லெ·ப்டினென்ட் மாடிப்படியில் ஏறி) கியூஸெப் !  மேஜை மீதுள்ள என் வாளை எடுத்துக் கொடு !

கியூஸெப்:  சொல்வது உமது காதில் விழவில்லையா ?  அவள் ஓரிளம் மங்கை !  உடைவாள் எதற்கு ?

லெஃப்டினென்ட்:  அவன் குரல் போல் கேட்கிறது !  என்னை ஏமாற்றியவன் !  என் குதிரையைக் களவாடியவன் !  அரசாங்கக் கடிதங்களை அபகரித்தவன் !  (வாளை உருவிக் கொண்டு அறை திறப்பதைப் பார்க்கிறான்.)

(நெப்போலியன் மாடிப் படி அருகில் நின்று நோக்குகிறான்.  அறைக்கதவு திறந்ததும் ஓரிளம் அழகி மெல்ல வருகிறாள்.  ஒய்யாரமாக நிமிர்ந்து நிற்கிறாள்.  நல்ல உயரம்.  பளிங்குச் சிலைபோல் எடுப்பான தோற்றம்.  கண்களில் அறிவுச்சுடர் வீசுகிறது.  அவளது பொங்கும் இளமை மேனியில் பெண்மை பளிச்செனத் தெரிகிறது.  கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள். கம்பீரமாக நடந்து வருகிறாள்.  மங்கையின் மயக்கும் விழிகளைக் கண்டதும் நெப்பொலியனின் மனம் வல்லமை இழந்து அவளிடம் சரண்டைகிறது !  வாளை ஓங்கி வந்த லெ·ப்டினென்ட் வாளைத் கீழே தணித்துக் கொள்கிறான். அவன் கண்களை அவன் நம்ப முடியவில்லை.  மங்கை அவனைக் கண்டும் காணாத போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.  அவள் லெ·ப்டினென்ட் முகத்தைக் கூர்ந்து நோக்கியதும் அவன் மூஞ்சில் கோபம் கொதித்தெழுகிறது.  எதையும் காட்டிக் கொள்ளாமல் இளம் மங்கை அவனைக் கடந்து செல்கிறாள்.)

கியூஸெப்:  மிஸ் மேடம் !  நீ ஓர் அழகி !  வந்தனம் !  சக்ரவர்த்தி நெப்போலியன் சார்பாக உன்னை நான் வரவேற்கிறேன்.

மாடிப் பெண்:  நன்றி கியூஸெப் !  பிரெஞ்ச் சக்ரவர்த்தியா இந்த விடுதியில் தங்கியுள்ளார் ?

கியூஸெப்:  (சிரித்துக் கொண்டு)  ஆமாம் மிஸ் மேடம் !

மாடிப் பெண்:  என் பெயர் ஹெலினா !

நெப்போலியன்:  (முணுமுணுத்து)  ஹெலினா ?  தோற்றத்தைப் போல் இனிய பெயர் !

(நெப்போலியன் புன்னகை செய்கிறான்.  பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து பார்க்கிறான்.)

லெஃப்டினென்ட்:  (ஆவேசமாய்)  ஆகா !  அகப்பட்டுக் கொண்டாய் அயோக்கிய வாலிபனே !  பெண்ணைப் போல் வேடம் போட்டாலும் நீ தப்ப முடியாது !  உன் வேடத்தைக் கலைத்து உன் கழுத்தை நெரிக்கிறேன்.  (கோபமாய்ப் பெண்ணை நெருங்குகிறான்)

கியூஸெப்:  பொறுப்பீர் தளபதி !  என்ன சொல்கிறீர் ?  அவளொரு வனிதை !  வாலிபன் என்று ஏன் சொல்கிறீர் ?

ஹெலினா:  (பயந்து போய் நெப்போலியன் பின்னால் ஒளிந்து கொண்டு)  ஜெனரல் ஸார் !  காப்பாற்றுவீர் என்னை !  இந்தப் பயங்கரவாதி என்னைச் சீண்டுகிறான் !  நான் ஓர் அப்பாவிப் பெண் !  யாரையோ நினைத்து என்னை ஆடவனாய் நினைக்கிறான் !  காப்பாற்ற மாட்டீரா என்னை ?

நெப்போலியன்:  நெருங்காதே அவளை !  அறிவு கெட்டவனே !  கத்தியைக் கீழே போடு ! புத்தியின்றி ஒரு பெண்ணிடமா உன் வீரத்தைக் காட்டுகிறாய் !  வழியில் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வனிதை மேல் ஏன் பாய்கிறாய் ?  எட்டி நில் !  அவளைப் பார்த்தால் ஆணைப் போல் தெரிய வில்லை !  அவள் ஓர் அழகிய மாது !  நமது மதிப்புக்கும் பரிவுக்கும் உரிய மங்கை அவள் !  (பெண்ணைப் பார்த்து) கவலைப் படாதே ஹெலினா !  அவன் மதி இல்லாத லெ·ப்டினென்ட் !  குதிரையைப் பறிகொடுத்துப் பட்டினியோடு கால் நடையில் வந்திருக்கிறான் !

(தொடரும்)

***************************

“எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட் இதிகாசத்தை (Greek Epic Iliad -The Siege of Troy) உருவாக்குகிறேன் ! அனுதினமும் அதைத்தான் நான் ஆக்கி வருகிறேன்.”

“படைவீரன் ஒருவன் வர்ண நாடா (Coloured Ribbon) ஒன்றைப் பெறக் கடுமையாக நீண்ட காலம் போரில் சண்டை செய்வான்.”

“இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒற்றர்களின் வாயிலிருந்து அவற்றை வரவழைக்கத் துன்புறுத்தும் காட்டிமிராண்டித்தனமான பழக்க முறை தவிர்க்கப் பட வேண்டும். இம்மாதிரி அவரைச் சித்திரவதை செய்து கேள்விகள் கேட்பதால் பயனுள்ள எதுவும் விளையாது.”
“அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !”

“போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர்.  அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்.”

“போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்”

“போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு.  படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு.”

நெப்போலியன், “யுத்தக் கலை” (1798)

*************************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon –Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 27, 2010)

4 thoughts on “ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)

  1. வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
    தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
    http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.