அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3

(கட்டுரை: 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) முன்னாள் பாகிஸ்தான் வெளிநாட்டு /பிரதம  அமைச்சர்.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

பண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)

பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு

1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது.  அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad).  அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர்.  1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார்.  பின்னால் அவரது “வலுவிலா மின்னியல் நியதிக்கு” அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார்.  டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸுத்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர்.  பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது.  பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.

1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர்.  அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.” என்று கூக்குரலிட்டார்.  1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார்.  அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.

அணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு

முதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு.  புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை.  இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும்.  அது நீண்ட கால அணு உலை இயக்கம்.  முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.  நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும்.  அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.  இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது.  ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.

அடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது.  பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன.  அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது !  அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும்.  அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 “சுழல்வீச்சு வடிகட்டி” யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும்.  முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.

பாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது ?

பாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள்.  முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது.  ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார்.  அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.

நெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது.  1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார்.  அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற்துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடி பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார்.  1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூடம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது.  அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.

இந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது !  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 !  வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt).  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன !  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை !  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை !  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது !

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் !  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது !”

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது !  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam -http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 24, 2009

3 thoughts on “அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3

  1. The above mentioned article contains too many useful informations within it for the human beings. My heart felt thanks for the one who made me to read this article. Let the almighty bless all your further efforts.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.