கலைஞன் ! காதலன் ! கணவன் !

சி. ஜெயபாரதன், கனடா


உடலை மெழுகாக்கி
ஓவிய மாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டி,
விற்பனை செய்பவன்
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறா தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோள் போல்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !

 

உரிமைச் சிறையி லிட்டு,
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !


காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் எனும்
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?

 

ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் பெறும் பதிக்கு !


வீணையாய் மீட்டுவோன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுவோன்,
கலைஞன் !
கலைமானாய்க் காட்டுவோன்,
கலைஞன் !
நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
விலைமானாய் மாற்றுவான் கலைஞன் !
பல்லாயிரம் நாணயம் தந்து
சிலை ஆக்கும் கலைஞன்
சந்தை வர்த்தகன் !

 

கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுவோன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு
உடலைச் சுவைத்து விட்டு
ஓடி மறைபவன்
உன்னாசைக் காதலன் !

 

உன் காதலன்
ஒரு கணவ னில்லை !
உன் கணவன்
ஒரு காதல னில்லை !
உன் காதலன்
ஒரு கலைஞ னில்லை !
உன் கலைஞன்
ஒரு கணவ னில்லை !
உன் கணவன்
ஒரு கலைஞ னில்லை !
உன் கலைஞன்
ஒரு காதல னில்லை !

 

காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் மாற்றாளை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !

 

கலைஞன் ஒரு கருடன் !
காதலன் ஒரு திருடன் !
கணவன் ஒரு குருடன் !

 

கன்னிப் பெண்ணே ! உன்
கவர்ச்சி உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளை இறைவன்
ஓர் ஆணுக்கு அளித்திடான் !
எப்போதும் மும்மூர்த்தி
தேவை உனக்கு !

 

+++++++++++++++++++

 

 

2 thoughts on “கலைஞன் ! காதலன் ! கணவன் !

  1. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.