தமிழ் விடுதலை ஆகட்டும்!

சி. ஜெயபாரதன், கனடா

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)

தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)

மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய தமிழரும், தூய தமிழும்

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

போலித் தமிழர்கள் !  தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன!  இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ?  மகாராஷ்டிராவில் உண்டா ?  தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்;  உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!

என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும் ‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

***********

தகவல்:

1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html

2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html

3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html

4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html

********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 14, 2008)]

5 thoughts on “தமிழ் விடுதலை ஆகட்டும்!

 1. ஜெயபரதன் ஐயா,

  முன்பு நான் இட்ட பின்னூட்டத்தில் கவனக் குறைவாக சில எழுத்துப்பிழைகள், திருத்தி மீண்டும் பதிக்கிறேன்.

  நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். //

  எழுத்து ஒரு சொல்லை முற்றிலும் ஒலிக்க முடியாது, அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும், ஆங்கிலத்தில் பலுக்குதல் (ப்ரனவுன்சேசன்) என்று உண்டு என்பது தாங்களுக்கு தெரியும். tsunami என்பதை சுனாமி என்று தெளிவாக படிக்கும் போது பாசுகரன் என்று எழுதினால் அதை பாஸ்கரனாகவே படிக்க முடியாது என்பது என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் பலக்குதலுக்கும் (உச்சரிப்புக்கும்) சொல்லுக்கும் வேறுபாடு இருப்பதை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ள நாம், தமிழ்மட்டுமே பேசுவது போலவே எழுதவேண்டும் என்று நினைப்பது தமிழுக்கு அழகு சேர்க்குமா என்று மனம் திறந்த்து சிந்திக்க வேண்டும்.

  என்னதாக் ரஜினி, எம்ஜிஆர் என்று எழுத்தில் எழுதினாலும் பாமரர் சொல்வது ரசினி, எம்சிஆர் தான். அவர்களை முட்டாள்கள் என்று சொல்லத் துணிவதாக இருந்தால் உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். சீனமொழியில் 90 விழுக்காடு சொற்கள் உண்மையான பெயர்சொல்லின் ஒலி அமைப்பை ஒத்து இருக்காது ‘இந்த்உ’ என்று இந்தியாவையாவையும், ‘சிஞ்சப்பூ’ என்று சிங்கப்பூரையும் குறிப்பிடுவார்கள், அவர்கள் அதை தங்கள் மொழியின் குறைபாடு என்று தாழ்வாக நினைப்பது இல்லை. அவர்களின் இலக்கியம் வளராமலும் இல்லை.

  தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பேசுபவர்கள் எப்போதுமே ஆங்கிலத்தை ஒப்பிட்டே பேசுகிறார்கள், அதில் இருக்கிறது இதில் இல்லை என்றே சொல்லப்படுகிறது, ஆங்கிலம் வெள்ளைக்காரர்களின் தாய்மொழி என்பதைவிட ஒரு வணிக மொழியாக பரிணமித்து நிற்கிறது, உலக அளவில் இரண்டாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, நமது தமிழ் தமிழர்களைத்தாண்டி பரவாது, நமது தமிழ் மட்டுமல்ல, உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் சீன மொழி கூட சீனர்களைத் தவிர்த்து எவரும் பேசுவதாக தெரியவில்லை. சிலர் மாற்று மொழி அறிந்து கொள்ளவும், ஆங்கிலம் தவிர்த்து, தாய்மொழி தவிர்த்தி மேலும் சிலர் வணிகம் தொடர்பாகவும் மாற்று மொழிகளை அறிந்து கொள்வார்கள், ஆங்கிலம் தவிர்த்து அறிந்து கொள்ளப்படும் மொழிகளை அறிவோர் எண்ணிக்கை ஆசியாவைப் பொருத்து மிகமிகக் குறைவே (இந்தி போன்ற கட்டாயம் பாடம் தவிர்த்து)

  ஜெயபரதன் என்பதை செயபரதன் என்று பிறர் எழுதுவது உங்களுக்கு பிடிக்காமல் உங்களை ஜெயபரதன் என்றே அழைக்கச் சொல்வது / எழுதச் சொல்வது உங்கள் உரிமை, அது போன்றே அவர்கள் ஜெயகாந்தனை செயகாந்தன் எனவும், ஜெர்மனியை செர்மனி என எழுதும் போது ‘அப்படி எழுதாதே !’ என்று நீங்கள் கட்டளை இட முடியாது.

  நீங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட சொற்களை சீனம் போன்ற மற்ற செம்மொழிகள் எப்படி எழுதுகிறது என்று கேட்டறிந்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியவரும். ‘எனக்கு தமிழ்பற்றி தான் கவலை’ என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  ஏற்கனவே இருக்கும் ஜ,ஷ,ஹ,க்ஷ, போன்ற திசை எழுத்து வகைகள் அப்படியே இருக்கலாம், அவற்றை பயன்படுத்த பழகிவிட்டோம், புதிதாக pha,ba,bha எல்லாம் தேவை இல்லை என்பது என்கருத்து. ஸ்ரீ என்பதை திரு என்று மொழிமாற்றி பயன்படுத்துவதாலும், சீனிவாசன் என்று எழுதுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. pha,ba,bha எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்தால் புதிய கலைச்சொல் ஆக்கம் குறைந்துவிடும்.

  ‘தமிழ்’ என்பதை மலையாளம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மொழிகளும் எப்படி பலுக்குகிறது, எழுதுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு அந்த மொழியாளர்கள் அப்படி ஒரு ஒலி (ழ்) உள்ள எழுத்து இல்லையே என்று கவலைப்பட்டு இருக்கிறார்களா ? என சிந்திந்து…தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் இல்லை, சிலவற்றை அப்படியே எழுதி தமிழின் ‘குறையை’ நீக்கவேண்டும் என்ற ‘தாழ்வு’ மனப்பாண்மை வராது.

  ****
  உங்கள் அறிவியல் கட்டுரைகளும், மொழியாக்க கவிதைகளும் விழிகளை விரியவைத்து வியப்பூட்டுபவை, அவற்றை தொடர்ந்து படித்துவருகிறேன்.

 2. //தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது!//
  அறுதியிட்டுக் கூறிடும் இந்தக் கருத்துக்களுக்கு நன்றிகள்.

 3. தங்களது இந்த ஆய்வுக்கட்டுரை என்னை வியக்க வைக்கிறது. நடைமுறை விடயங்களையும் சூழ்நிலைகளையும் மொழிவழக்கினையும் அருமையா அலசியிருக்கிங்க,. நன்றிகள்:)

 4. Hello. I specifically do a few web searching and identified that site site. We proceeded to go as a outcome of this specific site release and it is truly wonderful.I genuinely actually get enjoyment from your internet site.Absolutely, the precise written item is in full money back guarantee the actual rather best on this undoubtedly really really worth though topic. We further that and that i?m hunting ahead for the nearing web site content pieces. I furthermore noticed that your own site presents a few really excellent connecting finished to it. I’ll appropriate aside take maintain of the actual rss feed to dwell educated of any type of changes. Amazing info you possess the after. Make sure you defend up-date on your fantastic present.Thanks a ton.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.