பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?

 

(கட்டுரை: 21)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

காலமே கடவுளின் கடிவாளக்
குதிரை !
கண்ணுக்குத் தெரியாத
புதிர்க் குதிரை !
முடிவும் முதலு மில்லாத
வடிவிலாக் குதிரை !
ஓயாது ! சாயாது ! ஓடாமல்
நிற்காது !
முற்காலம், பிற்காலம், தற்காலம்
கொண்ட
பொற்கால் குதிரை ! 
முன்னே பாயும் ! பின்னே தாவாது !
நேராகச் செல்லும் !
பாதை மாறாது ! பயணம் கோணாது !
வேகம் மாறாது !
விந்தைகள் தீராது ! புதிர்கள் குன்றாது !
திசைகள் மாறிப் போயினும்
விசைகள் மாறாது !
விண்வெளியில்
ஒளிமந்தைகளை இழுத்துச் செல்லும்
கருங்குதிரை !
காலத்தை நிறுத்தி வைக்கக்
கடிவாள மில்லை
கடவுளுக்கும் ! 
காலத்தின் கர்ப்பக் கருவா
ஞாலம் ?
ஆதி அந்த மில்லாமல்
ஊதி உப்பிடும்
கால வெளிப் பலூனே
கடவுளா ?

 

“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.”

பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)

“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும்.  பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும்.  நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்!  ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்!”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம்.  அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவியிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

 

மாபெரும் பளுக் கொண்ட பூதக் கருந்துளை கண்டுபிடிப்பு !

2008 மார்ச் 18 ஆம் தேதி பிரபஞ்ச வெளியில் 3.5 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் பூதகரமான மிகப் பெரிய ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது !  அதன் நிறை மாபெரும் காலாக்ஸி வடிவமாக 18 பில்லியன் சூரியன்களின் பளுவாக ஊகிக்கப்பட்டது !  அது ஓர் இரட்டைக் கருந்துளை !  பெரிய கருந்துளை சிறியதை விட ஆறு மடங்கு நிறை மிகுந்தது !  அப்பெரும் கருந்துளை குவஸார் ஒன்றின் (Quasar OJ-287) உட்கருவை உருவாக்கிக் கொண்டிருந்தது.  பேரளவுக் கதிர்வீச்சைப் பொழிந்து பிண்டத் துண்டங்களைச் சுழற்றி விழுங்கும் கருந்துளை கொண்ட குவஸார் என்பது பேரொளி வீசும் போலி விண்மீன் அண்டங்கள் (Quasi Steller Objects) கொண்டது. விண்வெளி விஞ்ஞானிகள் சிறிய கருந்துளையின் சுற்றுவீதியைக் கண்காணித்து முன்னைவிட வலுவான ஈர்ப்பியல் சக்தியோடு (Stronger Gravitational Field) ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதியைச் சோதிக்க முடிந்தது !  
 
பிரபஞ்சத்தின் மாபெரும் மர்மம் ஈர்ப்பியல் காலவெளி ! 

17 ஆம் நூற்றாண்டில் கலிலியோ காலத்தில் எழுந்து, ஐஸக் நியூட்டன் விளக்கி, ஐன்ஸ்டைன் விருத்தி செய்த அகில ஈர்ப்பியல் சக்தி 21 ஆம் நூற்றாண்டிலும் சற்று புதிராகவே நிலவி வருகிறது.  நியூட்டன் முதலில் விளக்கிய ஈரளவுப் பரிமாண, தட்டையான ஈர்ப்பியல் உந்துவிசையை, ஐன்ஸ்டைன் நாற்பரிமாண காலவெளி வளைவாக நிரூபித்துக் காட்டினார்.  இப்போது நாமறிந்த ஈர்ப்பியலுக்கு “எதிர் ஈர்ப்பியல்” (Anti-Gravity) இருக்கிறது என்று நிரூபிக்க ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன !  ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலே தெளிவாகப் புரியாத போது, புதிதாக உளவப்படும் எதிர் ஈர்ப்பியலை என்ன வென்று விளக்குவது ?

fig-1b-gravity-space-probe.jpg

1687 இல் ஐஸக் நியூட்டன் (1642-1727) தனது மகத்தான விஞ்ஞானப் படைப்பு “பிரின்ஸ்பியாவில்” (Principia) முதன்முதலில் அறிவித்தார்.  கெப்ளர் விதிகளின்படி (Kepler’s Planetary Laws) அண்டக் கோள்களைச் சீராக நீள்வட்டத்தில் சுற்ற வைக்க வேண்டுமானால், ஒருவித உந்துசக்தி (Force) இருக்க வேண்டும் என்று அதில் விளக்கினார்.  நியூட்டன் ஆராய்ந்து நிலைநிறுத்திய “ஈர்ப்பியல் உந்துவிசைகள்” (Gravitational Forces) அண்டக் கோள்களின் பௌதிகத்தைப் பூமியில் விழும் பொருட்கள், எறிவாணங்கள் (Objects & Projectiles) ஆகியவற்றுடன் பிணைத்தன ! நியூட்டனின் மூன்று நகர்ச்சி நியதிகளும் (Newton’s Laws of Motion) அவரது கால்குலஸ் கணிதமும் பிரபஞ்சத்தின் படைப்பு முறைகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின.

நியூட்டனின் பௌதிக விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் இயல்புப் பண்பான “திணிவுநிறை” (Mass) பல்வேறு தொடர்பற்ற முறைகளில் இருப்பதைக் காட்டுகிறது !  திணிவுநிறை எனப்படுவது “முடத்துவம்” (Inertia) உண்டாக்குவது !  நியூட்டன் “இயக்கவியலில்” (Newton’s Dynamics) உந்துவிசை = திணிவுநிறை X விரைவாக்கம் [F= Mass x Acceleration (F=ma)].  நியூட்டனின் “ஈர்ப்பியல் விதி” (Newton’s Gravitational Law) கூறுகிறது : [F= G Mass-1 X Mass-2/distance Square (F=Gm1m2/dxd)] அதாவது இரண்டு அண்டங்களுக்குள் உண்டாகும் கவர்ச்சி உந்துவிசை அவற்றின் நிறைக்கு ஏற்ப நேர் விகிதத்திலும், இடைவெளித் தூர ஈரடுக்கின் எதிர் விகிதத்திலும் உள்ளது என்றும் கூறுகிறது !     

மர்மமான ஈர்ப்பியல் ஆற்றல் எப்படி ஆள்கிறது ?

கற்களை மேலே எறிந்தால் கீழே விழுகின்றன.  அலைகள் கடலில் பொங்கி எழுந்து அடிக்கின்றன.  அண்டக் கோள்கள் பரிதியைச் சுற்றி வருகின்றன.  காலாக்ஸியில் ஒளிமந்தைகள் கோள்கள் போலச் சுற்றி வருகின்றன.  இவற்றை எல்லாம் அகிலவெளியில் சீரான ஓரியக்கப் பண்பாட்டில் பில்லியன் ஆண்டுகளாக எது கட்டுப்படுத்தி ஆளுகிறது என்ற வினா எழுகிறது !  நியூட்டன் ஈர்ப்பியல் உந்துசக்தி என்றார்.  ஆனால் அவர் கூற்று அகில ரீதியாகப் படியவில்லை. ஐன்ஸ்டைன் அதை வேறுவிதமாகக் கற்பனித்துத் தன் ஒப்பியல் நியதியில் ஈர்ப்பியலைக் காலவெளியாகக் காட்டிப் பிரபஞ்சப் புதிர்களுக்குத் தீர்வு கண்டார்.     

ஐன்ஸ்டைனின் ஈர்ப்பியல் நியூட்டன் கூறியது போல் ஈரண்டங்கள் கவர்ந்து கொள்ளும் ஓர் உந்துசக்தி யில்லை.  நான்கு பரிமாண அங்களவு உடைய அகிலவெளிப் பண்பாடுதான் (Property of Space) ஐன்ஸ்டைன் விளக்கும் ஈர்ப்பியல் !  அண்டமோ, பிண்டமோ (Matter), அல்லது ஒளிமந்தையோ அவை அகில வெளியை வளைக்கின்றன ! அந்த காலவெளி வளைவே ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல்.  அதை எளிமையாக இப்படி விளக்கலாம்.  கால வெளியைத் தட்டையான ஈரங்கப் பரிமாண ஒரு ரப்பர் தாளாக வைத்துக் கொண்டால் கனத்த பண்டங்கள் ரப்பர் தாளில் குழி உண்டாக்கும்.  அந்த மாதிரி வளைவே ஐன்ஸ்டைன் கூறும் ஈர்ப்பியலாகக் கருதப்படுகிறது. 

ஈர்ப்பியல் சக்தியை மனிதன் பிற சக்திகளைக் கட்டுப்படுத்துபோல் மாற்ற முடியாது !  சில சக்திகளைக் கூட்டலாம்; குறைக்கலாம், திசை மாற்றலாம்.  ஆனால் அண்டத்தின் ஈர்ப்பியலை அப்படிச் செய்ய இயலாது.  ஈர்ப்பியலை எதிரொலிக்கச் செய்ய முடியாது.  மெதுவாக்க முடியாது.  விரைவாக்க இயலாது.  திசைமாற்ற முடியாது.  நிறுத்த முடியாது.  அது ஒன்றை ஒன்று கவரும். ஆனால் விலக்காது.

ஐன்ஸ்டைன் மாற்றி விளக்கிய ஈர்ப்பியல் நியதி !

1915 இல் ஐன்ஸ்டைன் நியூட்டனின் ஈர்ப்பியல் விசையை வேறு கோணத்தில் நோக்கி அதை “வளைந்த வெளி” (Curved Space) என்று கூறினார்.  அதாவது ஈர்ப்பியல் என்பது ஒருவித உந்துவிசை இல்லை.  அண்டத்தின் திணிவுநிறை விண்வெளியை வளைக்கிறது என்று முதன்முதல் ஒரு புரியாத புதிரை அறிவித்தார்.  மேலும் இரண்டு அண்டங்களின் இடைத்தூரம் குறுகிய நேர் கோட்டில் இல்லாது பாதையில் உள்ள வேறோர் அண்டத்தின் ஈர்ப்பியல் குழியால் உள்நோக்கி வளைகிறது.  சூரியனுக்குப் பின்னால் உள்ள ஒரு விண்மீனின் ஒளியைப் பூமியிலிருந்து ஒருவர் நோக்கினால், ஒளிக்கோடு சூரியனின் ஈர்ப்பியல் தளத்தால் வளைந்து காணப்படுகிறது.  அதாவது ஒளியானது ஒரு கண்ணாடி லென்ஸை ஊடுருவி வளைவது போல் சூரியனின் ஈர்ப்பு மண்டலம் ஒளியை வளைக்கிறது.  அதாவது ஒளியைத் தன்னருகில் கடத்தும் போது சூரியனின் ஈர்ப்பியல் ஒரு “குவியாடி லென்ஸாக” (Convex Lens or Gravitational Lens) நடந்து கொள்கிறது.  ஹப்பிள் தொலைநோக்கி காட்டிய அனைத்து காலாக்ஸி மந்தைகளும் ஈர்ப்பியல் வளைவால் குவியப்பட்டு ஒளி மிகையாகி பிரமிக்க வைத்தன !  அகில ஈர்ப்பியல் குவியாடி வளைவால் விளைந்த காலாக்ஸிகளின் ஒளிமய உருப்பெருக்கம் பொதுவாக 25 மடங்கு (Magnification of Brightness due to Natural Cosmic Gravitational Lens Amplification) !     

 
விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு !

விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய முடியாது.  ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது.  அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண்டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது!  விண்வெளியில் நகரும் அண்டக் கோள்களின் ஈர்ப்பியலால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது. நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே அதன் ஈர்ப்பு மண்டலத்தில் நுழையும் போது, நேர் கோட்டில் செல்லாது வளைந்தே செல்கிறது.  தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது.  ஒளியானது சூரிய ஈர்ப்பு மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது விரிவளைவில் [Negative Curve] திரிபாவ தில்லை!

ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி

2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது.  அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமியைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் புரியும்.  உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும்.  ஐன்ஸ்டைன் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது!  உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்படுத்திக் கொண்டு, காலம் வெளித் திரிபுகளைப் பதிவு செய்யும்.  ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.

ஈர்ப்பியல் பி-உளவி [Gravity Probe-B] என்பது என்ன?  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் [Stanford University] பௌதிக விஞ்ஞானிகளும், பொறிநுணுக்காளரும் சேர்ந்து பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்ணுளவி மூலமாக நுணுக்க முறையில், ஐன்ஸ்டைன் வெளியிட்ட கால, வெளிப் பரிமாணத்தைச் சார்ந்திருக்கும் ஈர்ப்பியல் தத்துவத்தை நிரூபிக்க சுமார் ஈராண்டுகளாகப் பெரு முயற்சி செய்து வருகிறார்கள்.  அதைச் செய்து கொண்டிருக்கும் அண்டவெளிக் கருவிதான், ஈர்ப்பியல் விண்ணுளவி-பி. அக்கருவி 2004 ஆண்டு முதல் பூமியைச் சுற்றிவந்து அப்பணியைச் செய்து வருகிறது! 

விண்ணுளவி-பி என்பது ஈர்ப்பியல் பண்பின் பரிமாணங்களான காலம், வெளி ஆகியவற்றைப் பதிவு செய்யும் சார்பு நிலை சுற்றாழி மிதப்பி [Relativity Gyroscope]. அக்கருவியின் உபகரணங்களைப் படைத்தவர் நாசா, ஸ்டான்·போர்டு நிபுணர்கள்.  பூகோளத்தை 400 மைல் உயரத்தில், துருவங்களுக்கு நேர் மேலே வட்டவீதியில் சுற்றிவரும் ஒரு விண்சிமிழில் அமைக்கப் பட்டுள்ள நான்கு கோள மிதப்பிகளின் மிக நுண்ணிய கோணத் திரிபுகளை உளவித் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.  நான்கு கோளங்கள் ஆடும் அந்த மிதப்பி எந்த விதத் தடையும் இன்றி இயங்குவதால், ஏறக்குறைய பரிபூரணமாக கால வெளி மாறுதல்களை நுகர்ந்து அளந்து விடும் தகுதி பெற்றது.  உருளும் அந்த நான்கு கோளங்கள் எவ்விதம் காலமும் வெளியும் பூமியின் இருக்கையால் வளைவு படுகின்றன என்பதைத் துல்லியமாக அளக்கும்.  மேலும் பூமியின் சுழற்சியால் அதன் அருகே காலமும், வெளியும் எப்படி அழுத்தமாகப் பாதிக்கப் படுகின்றன வென்றும் அவை கண்டுபிடித்துப் பதிவு செய்யும்.  பூமியின் ஈர்ப்பியலால் ஏற்படும் இந்த கால, வெளி மாறுபாடுகள் மிகவும் சிறிதானாலும், அவற்றின் பாதிப்புகள் பிரபஞ்ச அமைப்பிலும், பிண்டத்தின் இருக்கையிலும் பெருத்த மாற்றங்களை உண்டாக்க வல்லவை.  நாசா எடுத்துக் கொண்ட ஆய்வுத் திட்டங்களில் விண்ணுளவி-பி ஆராய்ச்சியே மிக்க ஆழமாக உளவும், ஒரு நுணுக்கமான விஞ்ஞானத் தேடலாகக் கருதப் படுகிறது!

விண்வெளியில் ஈர்ப்பியலின் வேகம் (The Speed of Gravity)

2003 ஜனவரியில் முதன்முதலாக விஞ்ஞானிகள் ஈர்ப்பியலின் வேகம் மெய்யாக ஒளிவேகம் என்று அளந்து ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியை மற்றுமோர் சோதனை மூலம் நிரூபித்தார்கள் ! அந்த மகத்தான அளவை மெய்ப்பித்தவர்கள்:  அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள தேசீய ரேடியோ வானியல் நோக்ககத்தைச் சேர்ந்த [National Radio Astronomy Observatory (NRAO)] எட்வேர்டு ·பெமலான்டும் (Edward Famalont) மிஸ்ஸொரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செர்கை கோபைகின் (Sergei Kopeikin) என்பவரும்தான்.  அவர்கள்தான் முதன்முதலில் இயற்கையின் அடிப்படை நிலைத்துவமான ஈர்ப்பியல் வேகத்தைக் கண்டுபிடித்த இருவர் என்று நியூ சையன்டிஸ்ட் மாத இதழில் அறிவித்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள் !  ஐஸக் நியூட்டன் ஈர்ப்புக் கவர்ச்சி உடனே அண்டங்களைப் பற்றுவது என்று நம்பினார்.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஒப்பியல் நியதியில் அது ஒளிவேகத்தில் தாக்குவது என்று அனுமானம் செய்தார்.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனின் அனுமானம் மெய்யானது என்று அழுத்தமாக நிரூபித்தனர் !

பூமியைப் போன்ற அண்டக் கோள்கள், சூரியனைப் போன்ற ஒளிவீசும் சுயவொளி விண்மீன்கள் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல் சக்தி ஒளிச்சக்தி போல் ஒளிவேகத்தில் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு சுற்றி வருகின்றன !  உதாரணமாக விண்வெளியில் சூரியன் திடீரென்று மறைந்து போனால், பூமி தனது சுற்றுவீதியில் எட்டரை நிமிடங்கள் ஒழுங்காகச் சுற்றி வரும் !  அதாவது சூரிய ஒளி பூமியை அடையும் நேரம் வரை பூமி சுற்றுவீதியில் செல்லும்.  சூரிய ஈர்ப்புச் சக்தி நீங்கினால் எட்டரை நிமிடங்கள் கழித்து, நியூட்டன் நியதிப்படிப் பூமி சுற்றாது நேர் கோட்டில் செல்லும் !

 
அண்டக் கோளின் விந்தையான ஈர்ப்பியல் பண்பு
 
கலிலியோ சாய்ந்துள்ள பைஸா கோபுரத்திலிருந்து கனமான இரும்பு குண்டுகளையும், பளுவில்லாப் பண்டங்களையும் கீழே போட்டு இரண்டும் ஒரே விரைவாக்கத்தில் (Acceleration due to Gravity) விழுந்து ஒரே சமயத்தில் தரையைத் தொட்டதைக் காட்டினார்.  1970 ஆண்டுகளில் பயணம் செய்த விண்வெளி விமானிகள் சூனியமான சந்திர மண்டலத்தில் இரும்பையும், பறவையின் இறகையும் கீழே போட்டு இரண்டும் ஒரே சமயத்தில் தரையைத் தொட்டதைக் காட்டி காலிலியோ சோதனையை மெய்ப்பித்தார்கள் !

ஐன்ஸ்டைனுடைய ஈர்ப்பியல் வெறும் இழுப்பு விசை மட்டுமில்லை !  அது பிரபஞ்சத்தைப் பின்னிக் கட்டுமானம் செய்த பிணைப்புச் செங்கல் சுண்ணம் !  பிரபஞ்சத்தில் பூதகரமான பயங்கரமான கருங்குழிகளை ஆக்குவதும் ஈர்ப்பியலே ! பிரபஞ்சமானது விரிக்கப்பட்ட ஒரு மாபெரும் ஈர்ப்பியல் படுக்கையில் கிடக்கும் ஒரு கூண்டு !  பிண்டங்கள் இல்லாத பிரபஞ்சத்தில் ஈர்ப்பியல் சக்தி இருக்க முடியாது !  அதாவது ஈர்ப்பியல் என்பது கால வெளியில் இயங்கும் ஒரு பொதுவான நடப்பாடு !  பிரபஞ்சமானது ஈர்ப்பியல் எரிசக்தியாக இயக்கும் ஓர் யந்திரம் !

ஈர்ப்பியல் ஏறக்குறைய எல்லாவற்றையும் பிரபஞ்சத்தில் ஆட்டிப் படைக்கிறது !  பூமியில் உள்ள யந்திர சாதனங்கள் எல்லாம் அதனால் பாதிக்கப்பட்டு இயங்குகின்றன !  கடிகாரம் முதல் அணை, பாலம், ராக்கெட், விண்கப்பல், துணைக்கோள் அனைத்தும் ஈர்ப்பியலால்தான் இயங்குகின்றன.  ஈர்ப்பியல் நமது உயரம், வடிவம், உணவு செரிப்பு, இரத்த ஓட்டம், மூளைப் பணி, மூச்சிழுப்பு, மூச்சு விடுப்பு அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது !  பூமத்திய ரேகையில் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமியான ஓர் ஈர்ப்பியல் பம்பரத்தில் மனிதர் வாழ முடியும் என்று அறிய முடிகிறது !      
[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Searching for the Secrets of Gravity By: John Boslough (May 1989)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 NASA Announces Discovery of Evidence of Water in Mars By Andrew Bridged (Jan 20, 2000)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13. ABC of Relativity By : Bertrand Russell (1985)
14 Hyperspace By : Michio Kaku (1994)
15 Einstein’s Gravity – Warping Space & Lensing Star Light
16 Einstein Proved to be Right on Gravity -BBS News (January 8, 2003)
17 Physics of the Impossible – New Views of Time Travel, New Book By : Michio Kaku (2008)
18 The Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in Universe Discovered (March 18, 2008)

******************

jayabarat@tnt21.com [March 21, 2008]
 

13 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?

 1. ”கனத்த பண்டங்கள் ரப்பர் தாளில் குழி உண்டாக்கும்”
  இதை நூலக புத்தகங்களில் படித்து எனக்கு சொன்னான் என் மகன் – 5 வருடங்களுக்கு முன்பு.இன்றளவும் எனக்கு அதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

 2. உதாரணமாக விண்வெளியில் சூரியன் திடீரென்று மறைந்து போனால், பூமி தனது சுற்றுவீதியில் எட்டரை நிமிடங்கள் ஒழுங்காகச் சுற்றி வரும் ! அதாவது சூரிய ஒளி பூமியை அடையும் நேரம் வரை பூமி சுற்றுவீதியில் செல்லும். சூரிய ஈர்ப்புச் சக்தி நீங்கினால் எட்டரை நிமிடங்கள் கழித்து, நியூட்டன் நியதிப்படிப் பூமி சுற்றாது நேர் கோட்டில் செல்லும் !
  இந்த பதிவை படிக்கும் போதே இந்த சந்தேகம் வந்தது,பதிலையும் கொடுத்திட்டீங்க.மிக்க நன்றி.
  ஒரு சந்தேகம் – பூமி அப்போது சுற்றுமா? சுற்றாதா? ஆதாவது தன்னை தானே.
  நேர் கோட்டில் ஏன் போகவேண்டும்?அப்படியென்றால் சூரிய ஈர்ப்பு சக்தியோடு கூட ஏதோ ஒரு சக்தியும் நம் கோள்களை ஆட்டுவிக்கிறது என்று பொருள்படும் அல்லவா?
  சீக்கிரம் போய்விடுகிறேன்… படிக்க படிக்க சந்தேகங்கள் கணக்கிலடங்காமல் வருகிறது. :-)))

 3. அன்புமிக்க நண்பருக்கு,

  நியூட்டனின் முதல் நியதி : புற விசை பாதிக்காத வரையில் ஓர் அண்டம் நிலையாய் நிற்கும் அல்லது நேராகச் சீராகச் செல்லும்.

  பூமி தன்னச்சில் சுழன்று கொண்டு பரிதியின் ஈர்ப்பியலால் நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. சூரியனின் கவர்ச்சி மறைந்தால், எட்டரை நிமிடங்கள் கடந்து பூமி தன் சுழற்சி பிறழாது நேர் கோட்டில் செல்லும்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 4. திரு ஜெயபாரதன்.
  மிக்க நன்றி,பதிலுக்கு.
  துணை சந்தேகம்

  எந்த கோளாவது தன் அச்சில் சுழலாமல் இருக்கிறதா?இல்லை நமக்கு தெரியவில்லையா?வான்வெளியில் இருக்கும் ஏன் சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும்?

  அன்புடன்
  வடுவூர் குமார்.

  ++++++

  சந்திரன் தன்னச்சில் சுழல்வதில்லை.

  சி. ஜெயபாரதன்

  ++++++

  திரு ஜெயபாரதன்

  இது விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது…

  When the Moon’s spin slowed enough to match its orbital rate, then the bulge always faced Earth, the bulge was in line with Earth, and the torque disappeared. That is why the Moon rotates at the same rate as it orbits and we always see the same side of the Moon.

  நீங்கள் சொல்லியதில் இருந்து மாறுபடுகிறதே?

  நான் நினைப்பது சரியா?

  இப்போதும் இதைப்பற்றி தான் மகனிடமும் பேசிக்கொண்டு இருக்கேன்.

  மிக்க நன்றி.

  அன்புடன்
  வடுவூர் குமார்.

  ++++++

  அன்புமிக்க வடுவூர் குமார்,

  நல்ல வினா நண்பரே.

  பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், பரிதிபோல் சந்திரன் தன்னச்சில் ஓர் நிலையில் சுழல்வதில்லை. நீங்கள் சொல்லும் சுற்று சுயச்சுற்று போல் தோன்றினலும் தன்சுழற்சி இல்லை. சந்திரனின் மையப் புள்ளிதான் வட்டத்தில் நகர்கிறது. சற்று மாறுபட்ட சுற்று – அதை “வட்ட மேற்சுற்று” என்று சொல்கிறேன் [Epicyclic Rotation – A small circle rolling over a larger circle, or its circumference or in line with the circumference]

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

  ++++++

 5. இதைச் சொல்ல மறந்தேன். மன்னிக்கவும். பெருவெடிப்பில் ஆதிமுதல் விரைவாக்கப்பட்டதால் அண்டப் பொருட்களில் எதுவும் விண்வெளியில் நிற்பதில்லை. நேராகச் செல்கின்றன. அல்லது ஈர்ப்பியலில் வளைகின்றன !

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 6. From: Ramamurthy Gowdhama Budhar
  Date: 25/03/2008 1:54:53 AM

  To: jayabarat@tnt21.com
  Subject: Salutes from a Tamilian in Kazakhstan-reg

  Dear Sir,

  I am a reader of Thinnai and impressed by your language used to explain most complicated science terminalogies in Tamil. Your service to Tamil Science Literature shall never be forgotten.

  Each and every Tamilian shall be grateful to you. My thanks and respects to you.

  Regards,

  R.G.Budhar,
  Prima Logistic,
  Almaty, Kazakhstan.

  mob: + 7 701 7656995

  ++++++

  Dear Ramamurthy,

  I was really thrilled & overwhelmed at hearing from a kind Tamilar residing in an unknown place Almaty, Kazakhstan which I could locate in the Atlas Maps of Russia.

  Please tell me about yourself & the event how you landed there ? Are you working in the Indian Embassy or elsewhere ? Are you living there alone or with your family ?

  Thanks for reading my science articles & sending your compliments from a remote place.

  Kind Regards,
  S. Jayabarathan

  +++++++++++++++

 7. . //கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண்டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது!//

  விண்வெளி விரிந்து கொண்டே போகின்றது என்றால், அது எந்த இடத்தில் ( space )
  ல் விரிகிறதோ, அந்த இடத்தில், விண்வெளி படர்வதற்கு முன்னால் என்ன இருந்தது?
  விண்வெளிக்கும் அப்பாலும் ஒரு ஸ்பேஸ் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால்தானே
  விரிவடைவது என்பது சாத்தியமாகும் ? அப்பொழுது பிரபஞ்சம் என்று நாம் பொதுவாக‌
  எதைச் சொல்கிறோமோ அது இந்த விண்வெளிதனையும் அடக்கியுள்ளது என்பதாகிறது.

  இந்தப் புரிதல் ( understanding ) சரியா ?
  Also,
  //சூரிய ஈர்ப்புச் சக்தி நீங்கினால் எட்டரை நிமிடங்கள் கழித்து, நியூட்டன் நியதிப்படிப் பூமி சுற்றாது நேர் கோட்டில் செல்லும் !//

  சூரிய ஈர்ப்புச் சக்தி நீங்கிவிடுகிறது என ஒரு பேச்சுக்காக வைத்துகொண்டாலும், following the same reasoning, சூரிய மண்டலத்தில்
  உள்ள மற்ற கோள்களும் பூமியைப் போல் சுற்றாது நேர் கோட்டிலா செல்லும் ? இது எப்படி சாத்தியம்?

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

 8. திரு. சுப்புரத்தினம் அவர்களின் அதே சந்தேகம் தான் எனக்கும் கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள்
  கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் பிரம்மாண்டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [] விரிந்து கொண்டே போகிறது!//
  விண்வெளி விரிந்து கொண்டே போகின்றது என்றால், அது எந்த இடத்தில் ( )
  ல் விரிகிறதோ, அந்த இடத்தில், விண்வெளி படர்வதற்கு முன்னால் என்ன இருந்தது?
  விண்வெளிக்கும் அப்பாலும் ஒரு ஸ்பேஸ் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால்தானே
  விரிவடைவது என்பது சாத்தியமாகும் ? அப்பொழுது பிரபஞ்சம் என்று நாம் பொதுவாக‌
  எதைச் சொல்கிறோமோ அது இந்த விண்வெளிதனையும் அடக்கியுள்ளது என்பதாகிறதா

 9. Pingback: பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசா புவித

 10. Pingback: ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழ

 11. பிரபஞ்சம் ஒரு காலவெளி. பிரபஞ்சத்தின் காலவெளியில் பெருவெடிப்பின் விளைவுகள் அதாவது அடிப்படைத் துகள்கள்,
  ஹைடிரஜன் வாயு முகில்கள், காலாக்ஸிகள்,, கரும்பிண்டம், கருந்துளைகள், கருஞ்சக்தி போன்றவை ஈர்ப்பு விசையில் பின்னிக் கிடந்தன. இவை உருவாகும் முன்பு வெற்றிடமே இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

  தாமதப் பதிலுக்கு மன்னிக்க வேண்டும்.

  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.