உன்னத மனிதன்

cover-page-1.jpg 

(வேதாந்த இன்பியல் நாடகம்)

அங்கம் 1 பாகம் 1
 

மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே !
நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே !

மகாகவி பாரதியார்.

உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:

1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னாட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) உட்கருவாக வைத்து “மனிதன் & உன்னத மனிதன்” என்னும் நான்கு அங்க நாடகமாக எழுதினார். அந்த நாடகத்தை ஓர் நடிப்பு நாடகம் என்று சொல்வதைவிடப் படிப்பு நாடகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஏனெனில் பெர்னாட் ஷா மரபான நாடக நடப்பை விட்டுவிட்டு தனது புரட்சிக் கருத்துக்களை ஓங்கி முரசடித்திருக்கிறார். அவரது கருத்துக்களை அவ்விதம் நாடக மூலம் பறைசாற்றுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அங்கே பெர்னாட் ஷாவை நாம் முழுமையாகக் காண முடிகிறது. உன்னத மனிதன் நாடகம் 1905 இல் லண்டன் ராயல் கோர்ட் நாடக அரங்கில் முதன்முதல் மூன்றாவது அங்கமின்றி அரங்கேறியது. காரணம் அந்தப் பகுதியில் பெர்னாட் ஷா தனது புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொட்டியிருக்கிறார். உன்னத மனிதன் முழுநாடகமும் 1915 இல்தான் அரங்கேறியதாக அறியப்படுகிறது.

உன்னத மனிதன் நாடகம் எளிய முறை நளினத்தில் இன்பியல் நாடகமாக மேடை ஏறினாலும் பெர்னாட் ஷா அந்த நாடகத்தின் ஆழக் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்த ஓர் உரைநடை நாடகமாக ஆக்கியுள்ளார். “உன்னத மனிதன்” என்ற தலைப்பைப் பெர்னாட் ஷா ஃபிரடெரிக் நியட்ஸேயின் (Friedrich Nietzsche’s meaning “Superman”) உயர்மனிதன் வேதாந்தக் கோட்பாடுகளில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. உன்னத மனிதன் நாடக உட்கருத்து நாடக பாத்திரம், “புரட்சிக் களஞ்சியப் பைநூல் ஆசிரியர்” (The Revolutionist’s Handbook & Pocket Companion) ஜான் டான்னரைச் (John Tanner) சுற்றி விரிகிறது. நாடகத்தின் இறுதியில் அந்தப் பைநூல் நெறிகள் 58 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஜான் டான்னர் நாடகத்தில் திருமணத்தை உதறித் தள்ளும் ஒரு பிரமச்சாரியாக அமைக்கப் பட்டிருக்கிறார். அவரைக் கவர்ந்து மணக்கத் துரத்திவரும் இளம்பெண் ஆன்னி வொயிட்ஃபீல்டு (Annie Whitefield) எத்தனித்து முடிவில் டான்னரை மணக்க ஒப்பவைக்கிறாள். பெர்னாட் ஷாவின் கருத்து: “பெண் என்பவள் இல்வாழ்வின் உந்துவிசை (The Life Force). ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்ணே ஆடவன் தன்னை மணக்கக் கட்டாயப் படுத்துகிறவள்; ஆடவர் அவ்விதம் பெண்ணைக் கட்டாயப் படுத்துவதில்லை”.

நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கியப் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராக உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House) போன்றவை.

****************

உன்னத மனிதன்

(பெர்னாட் ஷா)

அங்கம் : 1 பாகம் : 1

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக்கின் புதல்வி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)

6. ஹெக்டர் மலோன் (Hector Malone)

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 1 பாகம் : 1)

கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.

காலம்: காலை வேளை

இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.

(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. வேலைக்காரி மேரி அப்போது விஜயம் செய்தவர் பெயர் அட்டையைக் கொண்டு வந்து கொடுக்கிறாள். பெயரைப் பார்த்த ரோபக் அவரை அழைத்துவரத் தலை அசைக்கிறார்)

ரோபக் ராம்ஸ்டன்: (அட்டையைப் பார்த்தபடி) உள்ளே அழைத்துவா அவரை மேரி.

(மேரி அழைத்துவர விருந்தாளி அக்டேவியஸ் ராபின்ஸன் உள்ளே நுழைகிறார்.)

மேரி: மிஸ்டர் ராபின்ஸன்.

(இளமையும், கவர்ச்சியும் மிளிரும் ராபின்ஸனை வரவேற்க எழுகிறார் ரோபக். கைகுலுக்கும் போது ரோபக் எதுவும் அவருடன் பேசவில்லை. இருவர் முகத்திலும் கவலை நிழல் தெரிகிறது.)

ரோபக் ராம்ஸ்டன்: (வருத்தமுடன்) உட்காருங்கள் அக்டேவியஸ் (நாற்காலியைக் காட்டுகிறார்) நாமெல்லாம் அவரைப்போல் ஒருநாள் மரணத்தை வரவேற்க வேண்டும்.

அக்டேவியஸ்: உண்மைதான் ! ஒருநாள் நாமும் அந்த மீளாத வழியில் போகப் போகிறோம். நல்ல மனிதர் மிஸ்டர் வொயிட்·பீல்டு ! திடீரென்று இப்படிக் காலமாகி விட்டார் ! நேற்று உயிருடன் வாழ்ந்தார் ! இன்று அவர் இல்லை என்று என்னால் நம்ப முடியவில்லை ! எனக்கு எல்லா உதவிகளும் செய்தவர் மிஸ்டர் வொயிட்·பீல்டு. என் தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவ்விதம் எனக்குத் துணையாக வாழ்ந்திருப்பார்.

ரோபக் ராம்ஸ்டன்: பாவம் அவருக்கு ஆண்வாரிசுகள் இல்லை ! இருப்பதெல்லாம் பெண்கள்தான் !

அக்டேவியஸ்: ஆனாலும் என் சகோதரிக்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூட சொல்ல முடியாமல் திடீரெனப் போய்விட்டார் ! ஒருநாள் நன்றி சொல்ல வேண்டும் என்று நான் காத்திருந்தது தவறாகிப் போனது ! அவர் தவறி விட்டார் ! மனிதர் வாழ்க்கை மின்னல் போல் பளிச்சிட்டு மறைந்து போவது ! என்மனம் வேதனைப் பட்டதை அவர் அறியாமல் போனார் !

ரோபக் ராம்ஸ்டன்: கவலைப்பட்டுப் பயனில்லை தம்பி ! போனது போனதுதான் ! நான் ஒன்று உன்னிடம் சொல்ல வேண்டும். உன்னைப் பற்றி அவர் என்னிடம் கூறியதைச் சொல்கிறேன். “அக்டேவியஸ் கனிவு மிக்க வாலிபன் ! ஆத்ம நேர்மையுள்ளவன் ! மற்றவரின் மகனாயினும் எனக்கொரு மகனாய் வாழ்ந்தான்,” என்று என்னிடம் உன்னைப் போற்றிப் புகழ்ந்தாரே ஒருநாள் ! அது போதாதா உனக்கு ! உன்னைப் பற்றி எத்ததைய நல்லெண்ணம் இருந்தது அந்த உத்தமரிடத்தில் !

அக்டேவியஸ்: அந்த உத்தமர் இன்றில்லை என்று நினைக்கும் போது உள்ளத்தில் சோகம் பாய்கிறது. அதைப் போல் உங்களைப் பற்றியும் என்னிடம் ஒன்று சொல்லி யிருக்கிறார் தெரியுமா ? ரோபக் ராம்ஸ்டன் போலொரு முதியோரை இந்த நகரிலே நான் கண்டதில்லை என்று மகிழ்ந்திருக்கிறார்.

ரோபக் ராம்ஸ்டன்: நாங்கள் இருவரும் உயிர்த் தோழர்கள் ! அவரிடம் எனக்குத் தனி மதிப்பு உண்டு. என்மேல் அவருக்கு அளவிலா அன்பு ! இன்னும் முக்கியமாக ஒன்று உள்ளது. அதை இப்போது உன்னிடம் சொல்வதா, வேண்டாமா என்று சிந்திக்கிறேன்.

அக்டேவியஸ்: அப்படி ஒரு முக்கியத் தகவலா ? சொல்லுங்கள் உடனே !

ரோபக் ராம்ஸ்டன்: அவருடைய புதல்வியைப் பற்றியது அது . . . . !

அக்டேவியஸ்: ஆன்னி வொயிட்·பீல்டைப் பற்றித்தானே சொல்லுங்கள் ! அவளைப் போல் ஓர் அழகி அவருக்குப் பிறந்தது அதிசயம் இல்லைதான் ! சொல்லுங்கள் அவளைப் பற்றி !

ரோபக் ராம்ஸ்டன்: உன்னை அவர் மகனாக உண்மையில் எண்ண வில்லை ! ஒருநாள் ஆன்னியை நீ மணந்து கொண்டு . . (அக்டேவியஸ் முகம் செந்நிறமாகிறது) . . வாழ வேண்டும் என்று அவர் கனவு கண்டார் ! அவர் உன்னிடம் சொல்லத்தான் நினைத்தார் ! ஆனால் சொல்லாமல் போனார். நான் அதைச் சொல்லியது தப்புதான் ! அவரே அதை உன்னிடம் சொல்லி யிருக்க வேண்டும் !

அக்டேவியஸ்: எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை ! எனக்குச் செல்வம் திரட்டுவதில் விருப்பமில்லை ! எனக்கு உயர்ந்த இடம், தாழ்ந்த இடம் என்று பாகுபாடு எதுவுமில்லை ! ஆனால் எனக்குத் தெரிந்த ஆன்னி மாறானவள் ! அவளது சிந்தனை விந்தையானது ! ஓர் ஆடவனுக்கு பொருள் திரட்டும் ஆசை இல்லை என்றால் அவன் முழுமையற்ற ஆண் என்று எண்ணுகிறாள். எதையும் தேடிச் சாதிக்காத என்னை அவள் ஏற்றுக் கொள்ள வெறுப்பாள் என்பது என் யூகம் !  என்னைச் சோதாப் பயல் என்று கேலி செய்வாள் !

ரோபக் ராம்ஸ்டன்: [இடைமறித்துப் பேசி] இல்லையப்பா இல்லை ! அவளுடைய வயதில் அவளுக்கு ஆணைப் பற்றி என்ன தெரியும் ? ஆனால் ஆன்னி கடமை நெறி மிக்கவள் ! அவள் எப்போதும் தானாக எதுவும் செய்ய மாட்டாள் ! தந்தை அப்படிச் சொன்னார், தாய் இப்படி சொன்னாள் என்று எப்போதும் பெற்றோர் வார்த்தைக்கே மதிப்பு வைப்பவள் ! அது அவளிடம் உள்ள பெருங்குறை ! சொந்த புத்தியில் சிந்தி என்று பலதடவை நான் ஆன்னியிடம் சொல்லி யிருக்கிறேன்.

அக்டேவியஸ்: மிஸ்டர் ராம்ஸ்டன் ! “உன் தந்தை சொற்படி என்னை மணந்துகொள் என்று ஆன்னியிடம் நான் கேட்க முடியாது !

ரோபக் ராம்ஸ்டன்: அது சரி அக்டேவியஸ் ! அப்படி நீ ஆன்னியிடம் பேசக் கூடாது என்று தெரியும் எனக்கு ! ஆனாலும் உன் முறைப்படி நீ அவளை உன்னுடையவளாய் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் நான் ! அது நீ அவளது தந்தைக்குச் செய்யும் கைம்மாறு என்று கருதுவாய் ! என்ன ? அக்டேவியஸ் ! ஆன்னியை அருகி உன்னை மணந்திட நீ வேண்டிக் கொள்ள மாட்டாயா ?

அக்டேவியஸ்: இப்போது உறுதி அளிக்கிறேன் உங்களுக்கு ! வேறு எவளையும் நான் மணந்து கொள்ள வேண்டுவேனா மிஸ்டர் ராம்ஸ்டன் ? ஆன்னி மீது எனக்குத் தீராக் காதல் !

(தொடரும்)

*********

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan January 5, 2008)]
 
 

2 thoughts on “உன்னத மனிதன்

 1. My companion and i need to say, throughout your research via heaps of weblogs each and every week, the precise concept of your respective site is distinguishable (for the suitable factors). Except you thoughts me individually requesting, which is the brand on that subject and may it be the custom-devised extramarital relationship? It seriously is much better than the specific themes I take advantage of for a lot of my weblogs ;-)

 2. What i don’t realize is in reality how you’re now not
  really a lot more smartly-favored than you may be now. You are very intelligent.
  You recognize thus considerably with regards to this matter, produced me personally
  believe it from so many various angles. Its like women and men aren’t involved unless it is something to accomplish with Lady gaga!
  Your individual stuffs outstanding. Always take care
  of it up!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.