ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2

 

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

 

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மாபெரும் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
ரஷ்யக் கரடிகள் முதன்முதல் 
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான்.  ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]  

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”  

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute] 

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன்.  ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”
 
மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை:  ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன.  நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன.  1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை.  2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன !  1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன.   2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜூலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது.  ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன.  அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93).  ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். 

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழிவினர் செய்த உளவுகள்   

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும்  உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.     

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள்.  விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார்.  அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிலநடுக்கக் கட்டடச் சோதனை அமைப்பு

1.  அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.  

2.  ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார்.  அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.    

3.  நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது.  திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும்.  பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4.  நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம்.  அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.    

அழுத்த நீர் அணுமின் நிலைய அமைப்பு

5.  குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது !  ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.  

6.  அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது.  2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும். 

7.  ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன.  அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

 


 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் !

fig-1-earthquake-near-nuclear-plant.jpg

(ஜூலை 16, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு
 

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!  செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை யிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது!  அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!  செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். னால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !   

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட டினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.  அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.      

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது.  ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார்.  புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன.  ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன.  அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர்.  இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது.  அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது !  அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும்.  அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது.  அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன.  மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

 

 

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் யின.  அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன.  ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது.  அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது.  ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.    

(தொடரும்)

***********************
தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007

பூரண சுதந்திரம் ?

cover-image-indian-flag.jpg

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டி நின்றோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
மும்மூர்த்தி யானது !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !

ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுப் புடவையைப்
பலர்முன் இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
 
 
விட்டு விடுதலை ஆகும் சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
மொட்டு அவிழும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட கனியா சுதந்திரம் ?
சுடாத கனியா ?
 

எட்டித் தொடாத
உச்சியில்
ஓங்கி உயரும் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன்தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித் தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !

++++++++

செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பாறைத் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கும்.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி உள்ளதா என்பது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடலில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடைப்படை ஆர்கானிக் மூலக்கூறுகள்,”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“முதன்முதல் நாங்கள் பயன்படுத்தும் மிக நுட்பக் காமிரா செவ்வாய்த் தள மண்ணின் தூசிகளைக் கூடப் பெரிதாய்ப் படமெடுக்கும்.  தூசிப் புயல் அடித்துக் காமிராக் கண்ணும், மின்சக்தி தரும் சூரியத் தட்டுகளும் மூடிக் குறிப்பணிகள் தடுக்கப் படுவதாலும், செவ்வாய்க் கோளில் தூசிப் பெயர்ச்சியால் அதன் காலநிலைகள், சூழ்வெளி பாதிக்கப் படுவதாலும், தூசிப் படப்பிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  தற்போது செவ்வாய்த் தளத்தில் உளவு செய்து வரும் இரண்டு வாகனங்களும் தூசிப் புயல் அடிப்பால் பரிதியொளித் தட்டுகளில் தூசி படிந்து மின்சக்தி ஆற்றல் குன்றங் கருவிகளின் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.”  

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London]

2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது!  அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!  

ஜெ·ப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]  

முன்னுரை:     2007 ஆகஸ்டு 4 ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வகம் (120-312) மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்யும் செவ்வாய்க் கோளை நோக்கி, ·பீனிக்ஸ் தளவுளவியை டெல்டா-2 ராக்கெட்டில் பிளாரிடா கென்னடி விண்வெளி மையத்தின் கெனவரல் முனையிலிருந்து ஏவியுள்ளது !  விண்ணூர்தியில் அமைந்துள்ள தளவுளவி 2008 மே மாதம் 25 ஆம் தேதியன்று செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஓரிடத்தில் நிலையாக நின்று தள ஆய்வுகள் செய்யு மென்று எதிர்பார்க்கப் படுகிறது..  தளவுளவி மூன்று மாதங்கள் தளத்தைத் தோண்டி இரசாயன, உயிரியல் ஆராய்ச்சிகள் நடத்தும்.  தளவுளவி தடம் வைக்கும் தளம் செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பகுதி.  அப்பகுதி பூமியின் வடதுருவப் பரப்பிலுள்ள பனித்தளம் அலாஸ்காவைப் போன்றது.  420 மில்லியன் டாலர் எளிய செலவில் (2007 நாணய மதிப்பு) திட்டமிடப் பட்ட நாசா விண்வெளித் தேடல் இது.  இதற்கு முன்பு செவ்வாயில் இறங்கிய தள ஆய்வு வாகனங்கள் போல் ·பீனிக்ஸ் தளவுளவி சக்கரங்களில் நகர்ந்து செல்லாது.  நிரந்தரமாக ஓரிடத்தில் நின்று தளவியல் ஆராய்ச்சிகள் நடத்தித் தகவலைப் பூமிக்கு அனுப்பிவரும்.   

ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியதின் குறிக்கோள் என்ன ? 

ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பாறைத் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கும்” என்று அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ·பீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், பீடர் ஸ்மித் கூறினார்.  செவ்வாய் வடதுருவ ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் ·பீனிக்ஸ் பெற்றுள்ள யந்திரக் கரம் (Robotic Arm) துளையிட்டு மூன்று மாதங்கள் மாதிரிகளைச் சோதிக்கும்.  2002 ஆம் ஆண்டில் செவ்வாய் ஆடிஸ்ஸி கோள் சுற்றி விண்ணூர்தி [Mars Orbiter Odyssey] செவ்வாய் ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடித்த பனிச்செழிப்புத் தளங்களே ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பக் காரணமாயின.  மேலும் செந்நிறக் கோளில் உள்ள பனிப்பாறைகளில் நுண்ணுயிர்ப் பிறவிகள் ஒருகாலத்தில் வளர்ந்தனவா என்று கண்டறிய பூர்வீக நீரியல் வரலாற்றை அறியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  ஏழரை அடி [2.4 மீடர்] ஆழம் வரைத் தரையைத் தோண்டி மாதிரிகள் எடுக்க வல்லமையுள்ள யந்திரக் கரம் ஒன்று தªவுளவியில் அமைக்கப் பட்டுள்ளது.  செவ்வாய்த் துருவப் பகுதிகளில் மேற்தளத்திலிருந்து ஒரு சில செ.மீடர் ஆழத்திலே நீர்ப்பனி உள்ளது என்று உறுதியாக நம்பப்படுகிறது.  மேலும் துருவப் பகுதிகளில் முதல் ஒரு மீடர் ஆழத்தில் 50%-70% கொள்ளளவில் பனிபாறைகள் இருக்கின்றன என்றும் கருதப் படுகிறது.  குறிப்பணியின் முக்கிய ஆய்வு அப்பனிப் பகுதி மண்களில் நுண்ணியல் ஜந்துக்கள் வாழ கார்பன் அடைப்படை இரசாயனப் பொருட்கள் (Organics) உள்ளனவா என்று கண்டுபிடிப்பது.

ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைந்துள்ள கருவிகள்
 
2008 மே மாதக் கடைசியில் செவ்வாய்த் தளத்தில் இறங்கித் தடம் வைத்து நிலையாய் பூமிக்குத் தகவல் அனுப்பப் போகும் ஃபீனிக்ஸ் விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள முக்கிய கருவிகள்:

1.  சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm)

ஏழரை அடி ஆழம் வரைச் செவ்வாய்த் தளத்தில் குழி தோண்டும் வலிமை பெற்றது.  சோதனைக் கருவிகளை எடுத்துத் தகுந்த இடத்தில் வைக்கும்.  மண் மாதிரிகளை ஆய்வு செய்ய மற்ற கருவிகளுக்கு மாற்றம் செய்யும். 

2.  இருபுறத் தளக்காட்சிக் காமிரா (Surface Stereoscopic Imager) 

தளவுளவியில் ஓங்கி நிற்கும் கம்பத்தில் அமைந்திருக்கும் காமிரா செவ்வாய்ச் சூழ்வெளியின் கண்கொள்ளாக் காட்சியைப் படமெடுக்கும்.  மற்ற காமிரா தளமண் வண்ணத்தைப் படமெடுக்கும்.

3.  காலநிலைக் கண்காணிப்பு நிலையம் (Meteorological Station)  

செவ்வாய்த் தளத்தின் உஷ்ணம், அழுத்தம், வாயு வேகம் ஆகியவற்றைக் குறித்து இரவு பகல் வேளைகளில் காலநிலைகளைப் பதிவு செய்யும் ஏற்பாடு.    

4.  நுண்ணியல் அளவி, மின்னியல் இரசாயன உளவி, வெப்பக் கடத்தி உளவி (Microscopy, Electrochemistry & Conductivity Analysers) 

செவ்வாய் மண் மாதிரிகளைச் சோதிக்கும் நான்கு இரசாயனக் கருவிகள்.

5.  செவ்வாய்க் கீழ்த்தளக் காட்சிக் காமிரா (Mars Descent Imager)

விண்ணூர்தியிலிருந்து தளவுளவி பிரிந்து, செவ்வாய்த் தளத்தின் ஈர்ப்பாற்றலில் இறங்கும் போது, எப்படி இயங்கித் தடம் வைக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் சாதனம்.

6.  வெப்பம், வாயு வெளிவீச்சு உளவி (Thermal & Evolved Gas Analysers)

கார்பன் அடிப்படை மாதிரிகளைக் (Organic Samples) கண்டுபிடித்து, இரசாயனப் பண்புகளைச் சோதிக்கும் சாதனம்.

நீர்மை வாயு திரண்டுள்ள செவ்வாய்த் துருவப்பனிப் பொழிவுகள்

செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது!  இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன.  ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு.  காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது!  எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது! 

செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது!  குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது!  வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!   

துருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்
 
1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின!  ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும்.  சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின!  ஆறுகளின் அதிவேக நீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன!  அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன!  பூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை!  காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும்!  ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை!  ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.   

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.  

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:  NASA, JPL, & Wikipedia

1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
   [Author’s Article on Mars Missions]
7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007] 
13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007] 
 
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 9, 2007

சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -6

 

மனிதர் படைக்கும்
நச்சு வாயுக்கள் சேர்ந்து
ஓஸோன் துளைகள் உண்டாகும் !
மென்மையில் திண்மை யாகும்
வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
வண்ண நீர்க்கோளம் !
தூயச் சூழ்வெளியில்
பூமியின்
ஆயுள் நீடிக்க வேண்டும் !
ஓஸோன்
ஓட்டைகள் ஊடே
புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
சூட்டு யுகப் புரட்சி
நாடு நகரங்களில்
நர்த்தனம் ஆடும் !
நீரின்றி,
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலம் தவிப்பர்
நில மாந்தர் !

“ஓஸோன் இழப்பால் ஏற்படும் தீவிர விளைவுகளைத் தவறான சூழ்வெளிப் பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தோம். ஓஸோன் பூகோளக் காலநிலை மாற்றத் தூண்டுதலுக்கு ஒரு காரணம் என்பது முன்பு கருதியதை விட இருமடங்கு முக்கியத்துவம் இப்போது பெற்றுள்ளது.”

பீடர் காக்ஸ் [Peter Cox University of Exeter, U.K.]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

 ஓஸோன் வாயுவின் தீவிரப் பண்புகள்!ஓஸோன் வாயு நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் மூலக்கூறு [Oxygen Molecule] வேறுபட்ட மற்றொரு தோற்றம். ஆங்கிலத்தில் அல்லோடிரோபி [Allotropy] என்று அழைக்கப்படும் அம்மாறுதலில் ஆக்ஸிஜென் மூலக்கூறு O2, ஓஸோன் மூலக்கூறாக O3 வேறு வடிவம் பெறுகிறது. மின்னலடி போன்று மின்னியல் வெடிப்புகள் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளின் ஊடே புகும் போது, ஓஸோன் வாயு உண்டாகிறது. பேரிடி மின்னல் காலங்களில் வெள்ளைப் பூண்டு போல் மூக்கைத் துளைக்கும் வாயு சில சமயங்களில் நுகரப்படும். அது காற்றில் மின்னல் தாக்கி உண்டான ஓஸோன் வாயுவே! மின்சார யந்திரங்களின் அருகே நுகரப்படும் காரமான வாயுவும் ஓஸோன் வாயுதான். ஓஸோன் வாயு சிறிதளவு கொள்ளளவில் காற்றில் கலந்திருந்தாலும், அது விஷ வாயு போல் தீங்கை அளிக்க வல்லமை உடையது!

பூமிக்குக் குடை பிடிக்கும் ஓஸோனில் விழும் துளைகள்பூமியின் தட்ப வெப்ப நிலையைக் கட்டுப்படுத்திச் சீராக்கி மனித இனமும், உயிரினமும் பிழைத்துக் கொள்ள உதவுவது, புவியைப் போர்வைபோல் சுற்றி இருக்கும் வாயுக் கோளம். ஒன்பது முதல் பதினைந்து மைல் உயரத்தில் பரிதியிலிருந்து பொழியும் புறயூதா கதிர்வீச்சுகளை [Ultraviolet Radiation] ஆக்ஸிஜென் வாயு விழுங்கி ஓஸோன் பெருத்த அளவில் உற்பத்தியாகி அங்கே சேமிக்கப் படுகிறது. அப்போது வான மண்டலத்தில் ஓஸோனின் பளு 27% பகுதி அளவை நெருங்கி, ஓஸோன் படிவு (Ozone Layer) கோளமாக பூமியைச் சுற்றிலும் உருவாகிறது.

 

பூமியைப் போர்வை போல் போர்த்தி யிருக்கும் ஓஸோன் வாயு, பாதிப்புகள் விளைவிக்கும் பரிதியின் தீவிரமான புறவூதாக் கதிர்களை [Ultraviolet Rays] 95%-99% வடிகட்டி பூமியில் உயிரினங்களைப் பாதுகாக்கிறது. ஓஸோன் படிவு அமைப்பில் ஓட்டைகள் விழுந்தால், வடிகட்டப் படாது செல்லும் புறவூதா கதிர்கள் உயிரினத்தின் [மனிதர், விலங்குகள்] செல்களை [Cells] முறிப்பதுடன், தோல் புற்றுநோய், கண்படல நோய் [Eye Cataract] போன்றவை உண்டாகக் காரண மாகிறது. மேலும் தாவர இனங்களும் பாதிக்கப்பட்டு, அவற்றின் இனவிருத்தி விதைகள் உண்டாவதைக் குன்றச் செய்கின்றன.

 

சிஎஃப்சி எனப்படும் [Chloro Fluro Carbons (CFC)] சில ஆர்கானிக் இரசாயனக் கலவைப் பண்டங்கள் ஆவியாகி, பூமிக்கு அதிக உயரத்தில் போய் சேர்ந்து கொண்டு, பரிதியின் ஒளியால் முறிக்கப்பட்டு, குளோரின் அணுவாகவும், ஃபுளுரின் அணுவாகவும் பிரிகின்றன. அந்த அணுக்கள் ஓஸோன் மூலக்கூறுகளை உடைத்து வெறும் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளாக மாற்றி ஓஸோன் திணிவைக் குன்றச் செய்கின்றன. தொழிற்சாலைகள் வெளிவிடும் கழிவு வாயுக்களிலும், இரசாயன ஆவித்திரவ வீச்சுகளிலும் [Aerosol Sprays] CFC வெளியாகி மேலே சென்று வான மண்டலத்தில் உள்ள ஓஸோன் பந்தலில் ஓட்டைகளைப் போடுகின்றன. 2003 செப்டம்பரில் அண்டார்க்டிகா பகுதியில் விண்வெளித் துணைக்கோள்கள் [Sattelite] மாபெரும் ஓஸோன் துவாரத்தைப் படமெடுத்தது. அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளோரின், புரோமின், ஃபுளூரின் [Chlorine, Bromine, Fluorine] வெளியாக்கும் இரசாயனப் பண்டங்கள் கட்டுப்பாட்டு விதியில் பாதுகாக்கப் பட்டுள்ளன. அவ்விதம் ஆசியக் கண்டங்கள் கட்டுப்பாடு செய்துள்ளனவா என்பது சரிவரத் தெரியவில்லை.

பூமிக்கு 15 மைல் உயரத்தில் இருக்கும் ஸ்டிராடோஸ்பியர் [Stratosphere] வாயு மண்டத்தில் ஓஸோன் சேமிப்பு ஏன் குறைந்து வருகிறது என்பதன் காரணம் இன்னும் பூரணமாக அறியப்பட வில்லை! உலக ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓஸோன் திணிவு 3% குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர்ப் பரப்பில் 8% சுருங்கி யுள்ளதாகக் காணப்படுகிறது. அண்டார்க்டிகா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் உலகின் எல்லாப் பகுதிகளையும் விட மிகுதியாக 50% குன்றி யுள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. பூகோளம் சூடேற வாயுப் புகைமூட்டம் காரணமாவது போல், உயிரினச் செல்கள் சிதைவுக்கும், தாவரங்களின் தளர்ச்சிக்கும் ஓஸோன் வாயுக் குறைவு உதவுகிறது என்பதை அறிந்து, அதைத் தடுக்க முயல்வதில் உலக மாந்தர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் உடன்பாடுசூழ்வெளி வாயு மண்டலத்தின் உஷ்ணக் கட்டுப்பாடுக்கு ஓஸோன் வாயு (Ozone Gas -Oxygen3 – O3) ஒரு முக்கிய பங்கேற்கிறது. ஸ்டிராடோஸ்·பியர் வாயு மண்டலத்தில் 90% சேமிப்பாகியுள்ள ஓஸோன் வாயு, தீங்கு புரியும் பரிதியின் புறஊதா கதிர்களுக்குக் கவசமாக பூமியைப் பாதுகாத்து வருகிறது. ஆனால் பூமியில் மனிதர் உண்டாக்கும் இராசயனக் கூட்டான சியெ·ப்சி [Chloro Fluoro Carbons (CFC)] வாயுக்கள் துருவப் பிரதேசங்களின் குளிர்ச்சிப் பகுதியில் உள்ள ஓஸோனுடன் கலந்து அதைச் சிதைக்கின்றன. அப்போது அப்பகுதிகளில் ஓஸோன் துளைகள் உண்டாகிப் பரிதியின் புற ஊதாக் கதிர்கள் சூழ்வெளியில் பூமியை நோக்கி நுழைகின்றன. அவ்விதம் ஏற்படும் ஓஸோன் துளைகளால் பூகோளச் சூடேற்றம் மிகையாகும். அதே சமயத்தில் மனிதர் உண்டாக்கும் சியெ·ப்சி வாயும் உஷ்ணத்தை ஏற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் தீவிரப் பங்குமுன்பு விஞ்ஞானிகள் எண்ணியது போலின்றி ஓஸோன் வாயு பூகோளக் காலநிலை மாற்றத்தைத் தூண்டும் காரணிகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று விஞ்ஞான இதழ் இயற்கையில் (Nature) வந்துள்ள ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாய்க் கருதப்படும் ஓஸோன் வாயுவின் முக்கிய விளைவுகள் முதலில் கவனமாக எடுத்தாளப் படவில்லை ! பூதளத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களான நைட்டிரஜன் ஆக்ஸைடுகள், மீதேன், கார்பன் மனாக்ஸைடு மீது சூரிய ஒளிபட்டு தளத்தில் ஓஸோன் உண்டாகிறது. பூதளப் பகுதிகளில் பரவிய ஓஸோன் வாயுவால் பயிரினங்கள் சூழ்வெளியில் உள்ள கார்பன் டையாக்ஸைடை விழுங்காதபடிச் சிதைவாகி விடுகின்றன. அதனால் கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டையாக்ஸைடு மென்மேலும் பெருக ஏதுவாகிறது. மனிதத் தூண்டுகோளால் உண்டாகும் CFC போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களால் பூகோளத்தின் உயரத்தில் உள்ள ஓஸோன் சிதைவடைகிறது சொல்லப் போனால் ஓஸோனின் பொறுப்பு பூகோளச் சூடேற்றத்தில் தற்போது இருமடங்கு மதிப்பைப் பெறுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சூழ்வெளியின் உயரத்தில் பரவியுள்ள நேரடி ஓஸோன், பரிதியின் புற ஊதாக் கதிர் உஷ்ணத்தை உட்கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிவார். சூழ்வெளியின் அடிப்பகுதிகளில் ஓஸோன் மறைமுகமாகப் பேரளவுக் கெடுதிகள் விளைவிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் சொல்கிறது. தளப் பகுதிகளில் உள்ள ஓஸோனால் மனிதரின் சுவாச உறுப்புக்களுக்குப் பங்கம் விளையும். மிகையாக உண்டாகும் ஓஸோன் வாயுவால் பயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் கணிப்பது சிக்கலான முயற்சி. CO2 & O3 வாயுக்களை வைத்து ஆய்வாளர்கள் அமைத்த நூறாண்டுக் (1900- 2100) கணினி மாடலில் (Computer Models) விளைவுகள் மதிப்பிடப் பட்டன ! அந்த மதிப்பீடுகளில் உச்ச, தணிவு விளைவுகளாக அறிந்தது: உச்ச மதிப்பு ஓஸோனால் பயிரின விருத்தி 23% குறைத்துக் காணப்பட்டது. ஓஸோனால் தணிவு மதிப்பு பயிரின விருத்தி 14% குறைத்துக் காணப்பட்டது.

பூகோளச் சூடேற்றத்தைக் குறைக்க நாமென்ன செய்ய முடியும் ?கீழ்க் காணும் பத்து முறைகளில் உலகப் பொதுநபர்கள் சூடேறும் பூகோளத்தின் உஷ்ணத்தைக் குறைக்க வழிகள் உள்ளன. ஒவ்வொரு நிவிர்த்தி வழியிலும் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடு வாயு உற்பத்தியைத் தவிர்க்கலாம் என்று காட்டப் பட்டுள்ளது.

1. மின்சார வெளிச்சக் குமிழிக்குப் பதிலாக ஒர் ஒளிவீச்சு மின்குமிழியைப் பயன்படுத்துவதால் (Use Compact Fluorescent Bulb instead of the Regular Light Bulb) ஓராண்டுக்கு 150 பவுண்டு கார்பன் டையாக்ஸைடு (CO2) வாயு உற்பத்தியைக் குறைக்கலாம்.

2. கார் வாகன ஓட்டத்தை ஒருவர் அனுதினமும் குறைப்பதால், ஒவ்வொரு மைல் தூரத் தவிர்ப்புக்கும் ஒரு பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

3. ஒரு வீட்டுப் பழக்கப் பொருட்களால் விளையும் கழிவுகளில் பாதியை மீள்பயன்பாட்டுக்கு (Recycle) அனுப்பிப் புதுப்பித்தால் ஆண்டுக்கு 2400 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

 

 

சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஈரோப்பில் சூட்டுப் பிரளயம் எழுந்தது !
பேரளவு பேய்மழைப் பொழிவு
ஓரிடத்தில் !
வீரிய வேனிற் காலப்புயல்
வேறிடங்களில் !
மீறிய வெப்பக் கனலால்
தானாகக்
கானகத் தீக்கள் பற்றின !
வன விலங்குகள்,
மனிதர் புலப்பெயர்ச்சி !
விரைவாகக் கடல் மட்டம்
ஏறும் போக்கைக்
கூறும் துணைக்கோள் !
சூட்டு யுகப் புரட்சியில் உலகெலாம்
மாட்டிக் கொண்டு வாடுது !
நாட்டு மாந்தர் வயிற்றைக் கலக்கி
வீட்டை விட்டு விரட்டுது !
நீரின்றி, நிலமின்றி
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலத் தவிப்பு !

++++++++++++++++

உலகெங்கும் சூட்டுப் பிரளய அதிர்ச்சிகள் (ஜூலை 2007)

இங்கிலாந்தில் 60 ஆண்டுகளாகக் காணாத பேய்மழை 2007 ஜூலையில் பொழிந்தது ! ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது ! இரண்டு மணிநேரத்தில் கொட்டியது ! பெரு வெள்ளத்தால் மக்கள் புலம்பெயர நேரிட்டது. 350,000 வீடுகளின் குடிநீர் பரிமாற்றம் தடைப்பட்டது ! இருபதாம் நூற்றாண்டில் மனிதர் தூண்டிய சூடேற்றத்தால் உலகில் பூகோளப் மழைப் பொழிவின் போக்கு மாறிவிட்டது என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் இங்கிலாந்தில் பெய்த பேய்மழைக்கு மனிதர் விளைவித்த பூகோளச் சூடேற்றமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்னும் கருத்தும் நிலவி வருகிறது.கடந்த வாரம் தாக்கிய அசுர வேனற்புயல் அடிப்பில் [Heat Wave] ஹங்கேரியில் சுமார் 500 பேர் மாண்டதாக ஹங்கேரிய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளார்கள் ! ருமேனியாவில் 35 பேர் மரணம்.

கிரீஸில் ஒருவர் மரிப்பு. இத்தாலியின் தென்பகுதியில் வெக்கை மிகுந்து கானகத் தீக்கள் தானாகப் பற்றி இருவர் மரணம். ருமேனியாவில் உஷ்ணம் 46 C (115 F) ஏறியது. கிரீஸில் உஷ்ணம் 45 C (113 F). செர்பியாவில் [Serbia, Near Bosnia] உஷ்ணம் 43 C (109 F) ஏறி 50 காட்டுப் பகுதிகளில் தீப்பற்றி 30 பேர் மாண்டனர் ! வெப்பக் கொதிப்புத் தாங்காது செர்பியாவில் 19,000 பேர் மருத்துவ மனைகளுக்குக் கொண்டுவரப் பட்டனர். அதுபோல் 2003 ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் அடித்த வேனிற் கனல்வீச்சில் சுமார் 15,000 முதியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

பூகோளச் சூடேற்றத்தால் உலகில் நேர்ந்த விளைவுகள்

1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினா ஹாட்டெரஸ் முனையில் [Cape Hatteras, North Carolina] கட்டிய கலங்கரை விளக்கு [Light House] கடலிலிருந்து 1500 அடி கரை தூரத்தில் இருந்தது. நூறாண்டுக்குப் பிறகு (1980) கடல் வெள்ளம் பெருகிக் கலங்கரை விளக்கின் அருகே 160 அடிக்குள் வந்து விட்டது. தற்போது அது விழக்கூடா தென்று புதிய இடத்துக்கு மாற்றலாகிக் கட்டப் பட்டிருக்கிறது.

1000 அடிக்கு உட்பட்டிருந்த பிளாரிடா மாநிலத்தின் வேளாண்மைப் பகுதிகளைக் கடல்நீர் தாக்கி நிலவளம் உப்புக் கலவையால் நஞ்சாகி நாசமாக்கப் பட்டிருக்கிறது.

1915-1950 ஆண்டுகளில் ஏறிய கடல் மட்ட உயரத்தால் தென் அமெரிக்காவில் பிரேஸின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் [Region of Recife] ஆண்டுக்கு 6 அடி வீதம் குறைந்து கொண்டு வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1985-1995) கடல் மட்ட உயர்ச்சி விரைவாகி ஆண்டுக்கு 8 அடி வீதம் கடற்கரைப் பகுதிகள் சிறுத்து வருகின்றன.

1997 இல் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் ஓஹையோ நதியில் வெள்ளம் பெருகி 30 பேர் இறந்து, 500 மில்லியன் டாலர் மதிப்பளவுக் கட்டடச் சொத்துக்கள் சேதாரம் அடைந்தன.

1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் 50 ஆண்டுக் கோரமான நிகழ்ச்சியாக வேனிற்கால வெப்பக்கனல் அடிப்பில் 2500 பேருக்கு மேலாக மாண்டு போயினர் !

1998 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் தொடர்ந்து 29 நாட்கள் அடித்த 38.5 C (100 F) உஷ்ணக் கனலில் பயிர் வளர்ச்சி அனைத்தும் வரட்சியால் நாசமாயின.

1999 செப்டம்பர் மாதத்தில் ஹர்ரிக்கேன் ·பிளாய்டு [Hurricane Floyd] தாக்கி பேய்மழையும், மணிக்கு 130 மைல் வேகத்தில் பெரும் புயலும் அடித்து அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப் பட்டு 77 பேர் மடிந்தார். ஆயிரக் கணக்கான நபர் வீடிழந்தனர்.

அண்டார்க்டிகா பனித்தளப் பகுதிகள் சூடாகிக் கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வேனிற்காலப் பனியுருக்க நாட்கள் ஓர் ஆண்டில் மூன்று வாரங்கள் கூடி யிருக்கின்றன.

American CNN.Com News Message (July 24, 2007)

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

 

தகவல்:

(Picture Credits: Time Magazine April 9, 2007)1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference](April 9, 2007)

2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3. The Assault on Reason By Al Gore (2007)

4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

13. The End of Nature By: Bill McKibben [2006]

14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

15. BBC News – Climate Change Around the World.

16. BBC News – Billions Face Climate Change Risk

17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

18. Deadly Heat Wave Grips in Europe [CNN.Com#cnnSTCPhoto]

19. Europeans Struggle to Keep Cool in Heat Wave By Cesar G. Soriano (USATODAY.com)

20. Humans “Affect Global Rainfall ” BBC News

21. Britains Battle Worst Floods in 60 Years By Tewkesbury, England (July 23, 2007)

22. BBC News – Prince Sees Boscastle, (England) Devastation (July 24, 2007)

++++++++++++++++++++