மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட
நினைத்த கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் வேளை
மெய்யாக
வரவில்லை இன்னும்!
சொற்களை
செம்மையாகக் கோர்க்க முடியவில்லை!
வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!
அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகப் படும்
அவனது
பாத ஓசைகள் மட்டும் எனது
காதில் பட்டுள்ளது!
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம் விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இருட்டி விட்டது
இப்போது!
விளக்கேற்ற வில்லை
இன்னும்!
வாராய் வீட்டின் உள்ளே என
வரவேற்க முடியாத
அவதியில் உள்ளேன்!
ஒருநாள் அவனைச்
சந்திப்போம் என்னும்
நம்பிக்கையில் வாழ்கிறேன்!
ஆனால்
சந்திப்பு ஏற்பட வில்லை
இதுவரை!
*****************
Pingback: நெஞ்சில் மின்னிய கீதம் « Rammalar’s Weblog