ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Edison Electric Bulb

(1847–1931)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”

தாமஸ் ஆல்வா எடிசன்

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]


படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு!

Edison -4

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

Edison-2

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

Edison -3

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

Edison -1

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.

திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope].  ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

Cover image

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

***********************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 15, 2009

Posted by Jayabarathan S on செப்டம்பர் 15, 2009 at 5:06 பிற்பகல்

24 thoughts on “ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

  1. மதிப்பிற்குறிய ஐயா,

    ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசனின் சுவையான, சுருக்கமான வரலாறு தற்கால இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்து சக்தி. விளக்கொளியைப் பயன்படுத்தும் போதெல்லாம் எடிசனின் நினைவைக் கொணரவைக்க மீண்டும் ஓர் தூண்டுகோலாக இப் படைப்பு அமைந்துள்ளது. இத் தகவல்களைச் சேகரிக்கத் தாங்கள் நிறைய உழைத்திருப்பீர்கள் என்பதைக் காணமுடிகிறது. பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு இளம் தலைமுறையை நல்வழிப் படுத்தும் ஒரு அற்புத சேவை.

    வாழ்க உங்கள் தொண்டு.

    அன்புடன்,
    பெ.தக்‌ஷிணாமூர்த்தி.

  2. அன்புள்ள உங்களது வலைப்பூவைக் கண்டேன் மிகவும் அருமையாக இருந்தது.எனக்கு அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறைப் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.எங்கள் ஊரில் உள்ள கிளை நூலகத்தில் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகத்தில் படித்தேன்.நான் விடுதியில் தங்கி பொறியியல் படித்துக்கொண்டிருப்பதால் பதினைந்து நாளைக்கு ஒரு முறைதான் ஊருக்கு செல்வேன்.ஆகையால் நூலகத்திற்கு தொடர்ந்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.ஆனால் என்னுடைய மடிக்கணினியில் இணைய இணைப்பு உள்ளது.அப்புறம் என்ன உங்களுடைய வலைப்பூதான்.தொடர்ந்து எழுதுங்கள்.நானும் உங்களுடைய நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

    • பாராட்டுக்கு நன்றி கதிர்வேல். வலையில் விஞ்ஞானிகள் பலரது வரலாறுகள் உள்ளன.

      http://www.thinnai.com இலும் அறிவியல் பகுதியில் வந்துள்ளன.

      நீங்கள் எந்தப் பொறியியற் கல்லூரியில் படிக்கிறீர்கள் ?

      நட்புடன்,
      சி. ஜெயபாரதன்

  3. This domain seems to recieve a large ammount of visitors. How do you advertise it? It offers a nice unique spin on things. I guess having something useful or substantial to talk about is the most important thing.

  4. Sir
    Thank you for your dedicated analyzing work in Tamil. We expect much more valuable analysis in Tamil. Make the “Tamil Karuvulam”rich in IT
    Vimala

  5. Incredible! Your blog has a lot viewers. How did you get so many people to view your blog I’m very jealous! I’m still studying all about posting information on the internet. I’m going to view pages on your site to get a better understanding how to get more visable. Thanks for the help!

  6. Rather cool post. I just stumbled upon your blog and wished to say which I possess really favored reading your blog posts. Anyhow I’ll be subscribing to your weblog and I wish you submit again quickly!

  7. NAMMAI THAYIN KARUVIL KANDAR AVAR AVARAIYE NAM KANDUPIDIKKIROM PURIYAVILLAIYA(NAM KADAVULAI KANDU PIDIKKIROM POTHATHHHA) PILLAI PERTRORAI ENRA KATHAI COME ON INDIA

  8. தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை விரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

  9. வணக்கம்.
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  10. இந்த இணையத்தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.அறிவியல் மற்றும் வரலாறு படிக்க படிக்கும்.உங்களுக்கு நன்றி

  11. தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை விரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

  12. தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை
    விரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.