தமிழ் விடுதலை ஆகட்டும் !

tamil-writings

சி. ஜெயபாரதன், கனடா

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)

தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)

 

மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய தமிழரும், தூய தமிழும்

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர், தொல்காப்பியர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

போலித் தமிழர்கள் !  தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன!  இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ?  மகாராஷ்டிராவில் உண்டா ?  தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்;  உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!

என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

***********

தகவல்:

1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html

2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html

3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html

4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html

********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 14, 2008)]

14 thoughts on “தமிழ் விடுதலை ஆகட்டும் !

  1. Dear Jeyabarathan
    Thank you for telling the truth about using PURE Tamil in addressing others or when writting Tamil essays . People who want every thing
    in pure Tamil do not understand that by doing so they are imprisoning Tamil with in a small group.
    I fully agree with your thought about naming Tamil movies.
    Also it is sad to note that we still have to fight to find a school
    where Tamil is taught . it is easy to call bus as bus instead of “Perundhu”.
    But may be i am in a minority and i find it hard to reason with Tamil
    pandits .
    kannapiran

  2. Dear Kannapiran,

    Thnaks for your concurring views on pure Tamil which does not exit anywhere. We have definitely literary Tamil in our literatures. All we need now is scientific Tamil that can be used to write scientific books easily.

    Our present problem is : There are only a few people in Tamil Nadu who can write four Tamil sentences without grammar or spelling mistakes.

    With Kind Regards,
    S. Jayabarathan

  3. Dear sir,
    Your views about pure tamil and scientific tamil are acceptable. As you said, lot of tamilians (particularly youngsters) don’t know basic reading and writing in tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit or Hindi instead of Tamil in schools. The only way to save tamil is to it should be the first language in school exams instead of English as in the Andhra and Karnataka states where their regional language is the First Language.

    With Regards.
    R.Gopalakrishnan
    Neyveli, Tamilnadu

  4. அன்புள்ள செ’யபாரதன் அவர்களே,

    நீங்கள் மீண்டும் மீண்டும் செல்லாத வாதத்தையே
    முன் வைக்கின்றீர்கள் என்பதை வருத்ததுடன்
    தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாரதி “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
    செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்! ”
    என்று அங்கு கூறியது
    *கருத்துகளை, *அறிவியல், *பல்கலைக்
    கருத்துகளை, *அறிவுச் செல்வங்களை!
    நீங்கள் கூறுவது போல பிறமொழி எழுத்துகளை
    அல்ல. helium என்று ஆங்கிலத்தில் சொல்வதை,
    இத்தாலியர் Elio என்கின்றனர். நாம் ஈலியம் என்று
    கூறினால் தவறல்ல. ஈலியம் பற்றிய அறிவுக்
    கருத்துகள் ஆயிரமாயிரமாய் உள்ளன,
    அவற்றை எழுத வேண்டும் என்கிறார் பாரதியார்.
    அவற்றை விளக்கிச் சொல்ல
    எளிமையான ஈலியம் போதும்.
    அதை விடுத்து, அதனை மூச்சு இறைக்க
    கிரந்தம் கலந்துதான் எழுத வேண்டும்
    அப்பொழுதுதான் அறிவியல் விளங்கும்
    என்பது ஒரு சிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
    நீங்கள் எப்பொழுதுதான் உணர்வீர்களோ??!!

    அறிவியல் கருத்துகளைத் தமிழில்
    தமிழர்கள் புரிந்துகொள்ளுமாறு எழுதவேண்டும்
    அதற்காக உலகில் உள்ள மொழிகளில்
    உள்ள எழுத்துகள் எல்லாம் கொண்டு வர வேண்டாம்.
    Fermi என்பதை வெர்மி என்றோ, வெ’ர்மி என்றோ
    ஃபெர்மி என்றோ, ஃவெர்மி என்றோ எழுதலாம்.
    தமிழில் பெருமி என்றுகூட எழுதலாம்.
    இப்படி வழங்குமொழியில் அவர்களுக்கு
    ஏற்றார்போல எழுதி வழங்கும் பெயருக்கு
    exonym என்று பெயர் (தமிழில் புறப்பெயர் – அதாவது
    புறமொழிப் பெயரைத் தமிழில் வழங்கும் பெயர்).
    நம் மொழியில் எதனை, யாரைக்
    குறிக்கிறோம் என்று நாம் அறிந்தால் போதுமானது.
    (வேந்தன் அவர்கள் கூறியபடி “தமிழில்
    காப்பிதான்”, தமிழில் தானே பேசுகிறோம்
    என்றாராம் தன் உறவினரிடம்)

    ஆங்கில விக்கியில் எக்ஃசோனிம் (exonym)
    என்னும் கட்டுரையில் இருந்து:
    (http://en.wikipedia.org/wiki/Exonym)

    For example, London is known as Londres in French, Spanish and
    Portuguese, Londino (Λονδίνο) in Greek, Londen in Dutch, Londra in
    Italian, Romanian and Turkish, Londýn in Czech and Slovak, Londyn in
    Polish, Lundúnir in Icelandic, and Lontoo in Finnish.

    உரோம/இலத்தீன் எழுத்துகளில் எழுதும்,
    அதுவும் ஆங்கிலத்துக்கு நெருக்கமான இனமான மொழிகளிலேயே
    எப்படி இலண்டன் என்னும் நகரத்தின் பெயரை அவர்கள் மொழிக்கு
    ஏற்றார்போல மாற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள். ஏன் எல்லோரும்
    London என எழுதவில்லை? வழங்கும் மொழியின்
    இயல்பை மதிக்க வேண்டும்.
    இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    புரிந்துக்கொள்வீர்களா? மதிப்பீர்களா?

    ஏன் Jesus என்னும் பெயரைக் கூட Hessoos என்று ஒலிக்கிறார்கள்
    எசுப்பானியர்? ஏன் அவர்கள் “ஜ”கரத்தை ஏற்றுக்கொள்ள வில்லை?
    பிரான்சிய மொழியில், இத்தாலிய மொழியில் H ஒலி இல்லை,
    இடாய்ட்சுமொழியில்
    (செருமானிய மொழியில்) “ஜ” ஒலி இல்லையே … இப்படியே
    சொல்லிக்கொண்டே போலலாம்.
    இத்தனைக்கும் இம்மொழிகள் எல்லாம்
    ஆங்கில மொழிக்கு மிக நெருக்கமான மொழிகள்தாம்.
    அவர்கள் எல்லாம் அறிவியல் பயிலவில்லையா?

    ஒரு “அறிவியலாளர்” எட்டுக்கால் பூச்சிக்கு
    காது எங்கே இருக்கின்றது என்று அறிய முற்பட்டாராம்.
    முதலில் Jump என்று சொல்லி குதிக்கப் பழக்கினாராம்.
    பின்னர் ஒவ்வொரு காலாக பிய்த்து
    Jump என்று கூறியபின்னும் குதிப்பதைப் பார்த்தாராம்,
    பின் கடைசி காலைப் பிய்த்த பின்னர் குதிக்காததால்,
    கடைசி காலில்தான் எட்டுக்கால் பூச்சிக்குக்
    காது இருக்குதுன்னு கண்டுபிடித்தாராம்.
    அது போல உள்ளது உங்கள் வாதம்.

    நீங்கள்:
    <>

    இது ஒருசிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
    ஏன் ஐயா நீங்கள் உணரவில்லை?!!
    கருத்துகளைக் கூற புதிய சொல்லாக்கங்கள் தேவைப் படலாம்,
    நுணுக்கமாக எடுத்துச்சொல்ல
    தெளிவான நடை தேவைப்படலாம், ஆனால் ஏன் ஐயா
    மொழி மாறவேண்டும் (அதாவது அதன்
    எழுத்துகள் மாறவேண்டும்)?
    ஈலியம் என்று எழுதினால் அறிவியல் கருத்து மாறிவிடுமா?
    என்ன செல்லாத்தனம் இது!!
    ஹீலியம் என்று எழுதினால்தான்
    அறிவியல் கருத்து மாறாமல் இருக்குமா??!!

    ஈலியம் என்பது தூய தமிழ் அல்ல.
    தமிழ் எழுத்தில் தமிழ் இயல்புக்கு ஏற்ப
    வேற்று மொழிச்சொல்லை எடுத்து ஆள்தல்.

    தூய தமிழ் தூய தமிழ் என்று நீங்களும்,
    தனித் தமிழ் தாலிபான்கள் என்று இன்னும் சிலரும் சாடுவது
    ஒருசிறிதும் நியாயம் அற்றது.

    ஆனாலும் உங்கள் தமிழ் எதிர்ப்புப் பரப்புரைகளை நீங்கள்
    நீறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
    உங்கள் தவறான பரப்புரையைப் பார்த்து நேர்மையாகவும், தனக்காகவும்
    சிந்திக்கத் தெரியாத சிலர் மயங்ககூடும்.

    பாரதிதாசனின்,
    “தேனால் செய்த என் செந்தமிழ்தான்
    திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்! ”

    என்னும் வரிகளை எப்படித் திரித்துக் கூறுகின்றீர்கள்!
    கிரந்தத் திணிப்பிற்கு இது எடுத்துக்காட்டா?!!

    நீங்கள்:
    <>

    ஒருசிறிதும் கடினம் இல்லை. ஈலியம் என்றோ, காசுமீரம் என்றோ,
    எசுட்ரான்சியம் (English Strontium, Spanish Estroncio) என்றோ எழுதலாம்.
    ஒரு மொழி பேசுவோர் தமிழ் மொழியில் இடரின்றி சொல்லி எழுத
    உதவியாய் இருப்பதே நல்லது. கருத்து வேறு சொல் வடிவம் வேறு.
    பெயர்ச்சொற்களில் ஒலிப்புத்துல்லியம் பிறமொழியுடன் ஒத்து இருப்பது
    தேவை அற்றது. புறப்பெயர் (எக்ஃசோனிம்) என்னும்
    கருத்தை ஓர்ந்து பாருங்கள்.

    நீங்கள்:
    <>

    தூய தமிழ் என்பது வேறு கிரந்தம் இல்லாமல் எழுதுவது என்பது வேறு.
    சிரீதரன், கமலம், ஈலியம், நியாயம் என்பன தமிழ் எழுத்துகளில் எழுதும்
    பிறமொழிச்
    சொற்கள் (தூய தமிழ்ச் சொற்கள் அல்ல). இதனை என் போன்றவர்கள்
    எதிர்க்கவில்லை. தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும்
    என்பது
    நேர்மையான எதிர்பார்ப்பு. தமிழில் “காப்பி குடிக்கிறீங்களா?” என்றால்
    போதும்.
    காவ்’வ்வி’ குடிக்கிறீங்களா என்றோ காFFஇ குடிக்கிறீங்களா என்றோ
    எழுதத் தேவை இல்லை. தமிழில் கிரந்த எழுத்துகள் இல்லாமல்
    அனுமன் முதலான பெயர்களை எழுதுவதில்லையா?
    எத்தனை முறை இதனை எடுத்துக்காட்டியுள்ளோம்?!!
    எழுதும் மொழியின் முறைமைகளை
    மதிக்க வேண்டும். நான் உங்கள் வீட்டில் வந்து தங்கி
    இருந்தால், உங்கள் குளியல் அறையில்
    நீங்கள் காட்டிய இடத்தில் தான் குளிக்க வேண்டும்.
    வரவேற்பு அறையில் குளித்தால்
    சும்மா இருப்பீர்களா? சாலை விதிகள் போல மொழியில்
    விதிகளைப் பின்பற்றுதல் அடிப்படைத் தேவை.

    நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள சொற்களுக்கு எத்தனையோ
    முறை தமிழில் எழுதுவது எப்படி என்று காட்டியுள்ளேன். விடாமல்
    நீங்களும் அதே பட்டியலை இன்னும் இரண்டொன்றைச்
    சேர்த்து கேட்கின்றீர்கள்.
    காசுமீரம் என்றால் என்ன ஐயா குறைந்துவிடும்?

    இதோ உங்கள் பட்டியல்:
    <<காஷ்மீர், ஆஸ்திரேலியா,
    ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி,
    கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான்,
    ஆஃப்கானிஸ்தான்,
    ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம்,
    பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின்,
    ஸ்டிரான்சியம்,
    ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர்

    முதலில் எல்லாம் பெயர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
    அறிவியல் வளராமல் தடுக்கும் கருத்துகள் அல்ல.
    மீண்டும் தமிழ் எழுத்துகளில் என் பட்டியல்:

    காசுமீர்
    ஆத்திரேலியா (ஆசுத்திரேலியா)
    ஆத்திரியா (ஆசுத்திரியா)
    எசுப்பானியா (இதுவே அவர்கள் மொழிக்கு நெருக்கமான ஒலிப்பும் கூட)
    இடாய்ட்சுலாந்து (செருமனி. Deutrschland என்பது அவர்கள் நாட்டின் பெயர்.)
    உருசியா (உருசுக்கி என்றும் எழுதலாம்)
    யுகோசுலாவியா
    அங்கேரி (இத்தாலியர் Ungheria என்கின்றனர் (http://it.wikipedia.org/wiki/
    Ungheria); நாம் மாகியார் என்றும் சொல்லலாம். அங்கேரியர் தங்கள் மொழியில்
    Magyar என்கின்றனர்)
    கிரேக்கம் (கிரீசு, அவர்கள் தங்கள் மொழியில் எல்லாதா அல்லது எலாதா
    (Ελλάδα, transliterated: Elláda [e̞ˈlaða] என்கின்றனர்)
    ஆங்க்காங்
    மிசிசிப்பி
    மிசௌரி
    பாக்கித்தான் (பாக்கிசுத்தான்)
    ஆப்கனித்தான் (ஆவ்கனித்தான், ஆவ்கனிசுத்தான்)
    ராச்சசுத்தான், ராயத்தான், ராய்ச்சசுத்தான்
    இந்துக்குழ்சு
    பலுச்சிசுத்தான், பலுச்சித்தான்
    இசுக்காட்லாந்து
    நிப்பான் (சப்பான்)
    இசுலாம்
    பாசுக்கரன்
    புசுப்பா (புட்பா, புழ்சுப்பா)
    குட்சுபு (குழ்சுபு)
    சைலச்சா (சைலசா)
    கத்தூரி
    சரசுவதி
    இசுட்டாலின்
    எசுட்ரான்சியம் (எ.கா: எசுப்பானிய மொழியில் Estroncio)
    இசுபுட்னிக்
    எசுட்டீவன் (இசுட்டீவன்)
    ஆக்கிங் (ஃகாக்கிங், இஃகாக்கிங்)
    பாசுவரசு (பாசுபரசு)
    சியார்ச் புழ்சு
    சேக்சுபியர்

    ஆங்கிலேயர் ஞானசம்பந்தன், வள்ளி, அழகப்பன், மலர்விழி என்னும் பெயர்களை
    எப்படி திரித்து எழுதுவார்களோ, தூத்துக்குடி, திருவனந்தபுரம் என்னும்
    சொற்களை
    எப்படி சுருக்கி எழுதுவார்களோ அப்படித்தான் தமிழிலும் சில திரிபுகளுடன்,
    விரிவுகளுடனும் எழுத வேண்டிவரும்.
    (மேலும் கிரந்தம் கலந்து எழுதுவதிலும் ஒலிப்புத் துல்லியம்
    இல்லை.

    தமிழைக் கெடுக்கும் உங்கள் போக்கை நீங்கள் கைவிடப்போவதில்லை
    என்று அறிந்தும் இதனை எழுதுகிறேன். மற்றவர்களாவது படித்துப்
    பயன்பெறட்டும்.

    உங்கள் கருத்துகள் ஒருசிறிதும்
    செல்லாக் கருத்துகள் என்பதனை நேர்மையுடன்
    கூறிக்கொள்கிறேன்.

    அன்புடன்
    செல்வா

    • Hello Selvakumar.
      I agree with your comments on this post. You really impressed me with your useful information about tamil language.
      Thank you

  5. அன்புள்ள ஜெயபரதன் அவர்கட்கு.

    செல்வகுமார் போன்றோரிடம் விவாதிப்பதில் அணுவளவும் பயன் இல்லை. காலம் அவர்களுக்கு பதிலை தகுந்த முறையில் தரும்.

    இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் என்றுமில்லாத வகையில் ஆங்கில பாவனை ஆக்கிரமித்து இருக்கிறது. வீடுகளிலும் பள்ளிகளிலும்.தொலைக் காட்சிகளிலும் பேசும்போது ஆங்கிலம் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. ஆங்கிலமில்லாத பேச்சை கிராமங்களிலும் இன்று காணமுடியவில்லை. அதைபற்றி இன்றைய அரசியல் வாதிகளுக்கு எள்ளளவும் கவலையில்லை.

    தமிழை பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அரசியலுக்கு மட்டும் தமிழ் வீட்டில் ஆங்கிலம் பேரப்பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலம் என்று கவலை அற்று இருக்கிறார்கள். தமிழை கட்டாய பாடமக்கவும் விரும்புகிறார்களில்லை.
    இந்நிலையில் தமிழில் எங்ஙனம் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்.

    சிறுவயதில் இருந்து எல்லாம் தமிழில் கற்றால் இயல்பாகவே தமிழில் தேவையானது எல்லாம் வந்துவிடும். ஆங்கிலத்தில் கற்றவர்கள் மட்டும்தான இன்று வாகனங்களை ஓட்டவும் திருத்தவும் கற்றுக்கொண்டார்கள் ? மேற்படிப்புக்கு ஆங்கிலம் தேவை என்று தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பேர்களும்ஆங்கிலம் கற்று காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டுமா ?

    எமது தேவைகள் தான் மொழியை உருவாக்குபவை. எங்கள் விருப்பங்கள் அல்ல. செல்லகுமார் போன்ற கிணற்றுத் தவளைகள் முன்னரும் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள். அவர்களால் ஆகக்கூடியது. இப்படிக் கத்திகத்திச் சாவதல்லாமல் வேறொன்றும் இல்லை.

    இவர்களைப்போல் இருப்பவர்கள் தொலை காட்சிகளில் நல்ல ஆங்கிலம் கலவாத தமிழைப் பேசும்படி செய்ய முயற்சிக்கலாமே?

    அப்துல் ஹமீது போன்ற ஒருவராவது தமிழ் நாட்டில் இருக்கிறார்களா?
    விளம்பரங்களிலும் ஆங்கிலமோகம் தான். ok. Peoples என்று தொடங்கும் போத்தீஸ் விளம்பரத்தை பார்த்தீர்களா? கேட்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கும். இதுதான் இன்றைய தமிழ்நாட்டு ஆங்கில மோகம். பெண்கள் அழகுதான். பேச்சுதான் கோபத்தை வரவழைக்கிறது. எந்த தொலைக் காட்சியிலும் அறிவிப்பாளர்கள் எல்லோருமே ஆங்கிலத் தமிழில்தான் பேசுகிறார்கள். அல்லது அவர்களுக்கு பேச்சு வராது !

    எல்லாக் கட்சிக் காரர்களுமே காசுக்கு தம்மை விற்பவர்கள். அவர்களால் தமிழ் வாழப்போவதில்லை. பொதுமகனுக்கு எவ்வளவு தேவை உள்ளதோ அப்பொழுது தான் அந்த அளவுக்குத்தான் தமிழ் வளரும்.

  6. நண்பர் சோதிவேல்,

    தமிழில் தேவையற்ற எழுத்துச் சீர்திருத்தம் செய்ய முயலும் அறிஞர் இப்போது கைவசமுள்ள போதிய எழுத்துக்களையும் சொற்களையும் நன்கு பயன்படுத்தி முதலில் இலக்கிய, விஞ்ஞான நூல்களை ஆயிரக் கணக்கில் படைக்க வேண்டும். அதுவே தமிழருக்குக் குறிக்கோளாய் நிலைக்க வேண்டும்.

    என் கருத்தை வலியுறுத்தும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    நடபுடன்,
    சி. ஜெயபாரதன், கனடா

  7. I’d come to accede with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  8. Excellent! Your post has a ton viewers. How did you get so many bloggers to see your article I’m very jealous! I’m still getting to know all about blogs on the web. I’m going to click on more articles on your site to get a better understanding how to attract more people. Thanks!

  9. பாரதியை சாட்சிக்கு (சாட்சி தமிழ்ச்சொல்) ஏன் தூய தமிழ் வேண்டாம் என்கிறார்? பாரதியாரே ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்சொற்களை ஆக்குவதற்கு முயற்சித்திருக்கிறார். தொல்காப்பியர் பிறமொழிச் சொற்களை தமிழில் எழுதுவதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார். வடசொல்லைச் செய்யுளில் பயன்படுத்துவது பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்ட நெறிமுறை வருமாறு:

    ” வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ,
    எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
    சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்” (சொல்: 5 :6)

    சங்க இலக்கியங்களில் கிரந்த எழுத்துப் பயன்படுத்தப்படவில்லை.

    தொல்காப்பிய விதியைப் பின்பற்றித்தான் கம்பன் லஷ்மணனை இலக்குவன் என்றும் ராமனை இராமன் என்றும் விபீஷணனை வீடணன் என்றும் ஒலிமாற்றம் செய்தார்.
    ஹரி- அரி, ஹரன்-அரன், ராமன் – இராமன், ராஜராஜன் – இராசஇராசன், ராஜேந்திரன் – இராசேந்திரன். மேலும் வடசொற்கள் சிதைந்து வரினும் ( பிரயாணம் – பயணம், ரிஷி – இருடி) நீக்க வேண்டியதில்லை என்கிறார் தொல்காப்பயிர். பவுத்தம், சமணம், வைதீகம் போன்ற பிற சமயங்கள் தமிழ்நாட்டில் புகுந்ததால் வடசொற்கள் பிராகிருத (பாலி, மகராஷ்ட்ரி, மகதி முதலிய) வடிவில் தமிழில் வழங்கின. ப்ரதிமா – படிமை, ஸமரணா – சமயர், இஷ்டம்- இட்டம், நஷ்டம், புஷபம் – புட்பம், – நட்டம், விஜ்ஞாபதம் – விண்ணப்பம்.

    இடைக்காலத்தில் மணிப்பிபாள நடையை வைணவ உரையாசிரியர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

    தமிழின் தூய்மை கெட்டதாலேயே மலையாளம் என்ற கலப்பு மொழி (சமற்கிருதம் – தமிழ்) பிறந்தது.

    பல வடமொழிச் சொற்கள் தூய தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளன. அக்கிராசினர் – தலைவர், காரியதரிசி – செயலர் அல்லது செயலாளர், பொக்கிஷாதர் – பொருளாளர். இதனால் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும்
    அங்கத்துவம் – உறுப்புரிமை

    அங்கத்துவர் – உறுப்பினர்

    அங்கீகாரம் – ஒப்புதல்

    அபிவிருத்தி – மேம்பாடு

    அமுல் – நடைமுறைப்படுத்தல்

    அஞ்சலி – அக வணக்கம்

    ஆரம்பம் – தொடக்கம்

    இராப்போஜனம் – இரவு விருந்து

    ஒப்பந்தம் – உடன்பாடு

    கவுன்சில் – அவை

    சகா – கூட்டாளி

    சந்தேகம் – அய்யம்

    சர்வதேசம் – அனைத்துலகம், பன்னாட்டு

    சுகாதார – நல்வாழ்வு

    நிமிடம் – மணித்துளி
    தினம் – நாள்

    தொலைநகல் – தொலைப்படி

    பிரதிநிதி – சார்பாளர்

    பிரார்த்தனை – வேண்டுகோள்

    பூர்வாங்க – தொடக்க

    பூஜ்யம் – சுழி, சுழியம்

    வர்த்தகம் – வாணிகம் அல்லது வணிகம்

    வர்த்தகர் (கள்) – வணிகர்(கள்)

    வயது – அகவை

    விமானம் – வானூர்தி

    வீதம் – விழுக்காடு

    flexible – ஈவான, ஈவு

    Mortgage – ஈடு, அடகு

    Stall / Store – அங்காடி, கடை

    சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த திருமண அழைப்பிதழ்களுக்கும் இன்ற வருகிற தூயதமிழ் அழைப்பிதழுக்கும் நிறைய வேற்றுமையை காணலாம்.

    அருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா

    தமிழ்த் திருமண அழைப்பிதழ்

    அன்புடையீர்

    நிகழும் திருவள்ளுவராண்டு 2033, ஆவணித் திங்கள் 18 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (18-08-2002) காலை 10 மணி முதல் 12 மணிவரையுள்ள நல்வேளையில்,

    எமது அருமை மகன் எமது அருமை மகள்

    திருநிறைச்செல்வன் திருநிறைச்செல்வி

    அருண்மொழி; தமிழ்ச்செல்வி

    அவர்களுக்கும் அவர்களுக்கும்

    திருமண விழாவுக்குத் தாங்களும் தங்கள் இல்லத்தவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

    இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது. (குறள் -45)

    தமிழைக் கெடுக்க எத்தனை ஜெயபாரதன் வந்தாலும் அது இனிமேல் முடியாது!

  10. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

  11. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.