உலகைச் செதுக்கி, உலகைப் புதுக்கி,
உலகை மாற்றிடும் ஊழ்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம்.
[காந்தீயக் கோட்பாடு]
***********************
காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.
சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.
சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.
அறநெறி, உரிமை, சமநெறி என்ற முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.
*****************************
கற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி
அற்புதத்தைக் காணாத போது ?நெஞ்சின் உயிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
துஞ்சிடும் ஆக்கவினைத் தொண்டு !+++++++++++++++++
இறைவன் எனக்கு ஆயுளை நீட்டும் ஓவ்வோர் நாளும், முடிந்த ஓவ்வோர் ஆண்டும் பயனுள்ளதாக நிகழ எனக்களித்த ஒருமாதவக் கொடைதான்.
அணுவிலிருந்து அகிலம்வரை சிறிதளவு அறிந்து, கண்டுபிடிப்புகளில் நூற்றில் ஒன்றோ, அல்லது ஆயிரத்தில் ஒன்றோ தமிழில் எழுதித் தமிழருக்குக் காட்டஇப்பிறப்பில் எனக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நான்அடிபணிகிறேன்.
ஆண்டவனை நேராகப் பார்க்கனும்
அவனிடம் ஒரு கேள்வி கேட்கனும்
ஏண்டா இந்த பூமியைப் படைச்சே ?
என்னையும் அத்தோடு இணைச்சே ?ஏட்டிலே எழுதி வைத்தேன்,
இணையத்தில் பின்னி வைத்தேன்,
பாட்டிலே இசைத்து வைத்தேன்,
பாறையில் செதுக்கி வைத்தேன்.ஜாதிகள் உள்ளதடி பாப்பா , நமக்கு
ஜாதிச் சகிப்பு வேணும் பாப்பா.
ஜாதிகள் வேலியல்ல பாப்பா, நம்மை
ஜாதிகள் பிரிப்பதல்ல பாப்பா.ஜாதிகள் அரசுச் சின்னமடி பாப்பா.ஜாதிகள் என்றும் அழியாதடி பாப்பா.பட்டம், பதவி, பணம் வாங்க, ஜாதிகள்
பாரத முத்திரை அட்டையடி பாப்பா !ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?
சி. ஜெயபாரதன்
[September 13, 2014]
https://jayabarathan.wordpress.com/
http://kadaisibench.wordpress.com/2014/09/13/தமிழில்-சில-நுட்பம்-சார்/
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
(பிறப்பு : பிப்ரவரி 21, 1934)
ஆதி முதல்வனை, அண்டத் தலைவனை
ஓதி உணர்வேன் என் உள்ளத்தில் – வீதியிலே
இற்றுவிழும் மாந்தர் எழுந்து பயன் பெற நீ
வற்றாத் திறன் ஊட்ட வா.++++++++
போர் வாளை எல்லாம் நெளித்துப்
பயிர்விளைக்க
ஏர் முனை ஆக்கிடு இனி !
பெய்யும் மழைநீரைப் பேரணையில்
சேர்த்தால் ஏன்
வையத்தில் பஞ்சம் வரும் இனி ?
காற்றாடி, சூரியக் கதிர்களும் மின்சக்தி
ஆற்றல் அளிக்கும் அறி.++++++++++
சிலைகள் சுமப்ப தில்லை
சிற்பக் கோபுரத்தை !
வலைகள் பிடிப்ப தில்லை
வசிய முத்துக்களை !
கலைகள் நிரப்பு வதில்லை
காந்தும் பசி வயிற்றை !
அலைகள் குலுக்குவ தில்லை
ஆழ்ந்த சமுத்திரத்தை !++++++++
தோல்விகள் தோள்வரை
ஏறினும் வெற்றி
கால் பாதம் வரை
வராதா ?
மேலேறிச் சிகரம் தொட
மூச்சு வாங்கும் !
நாள் செல்லும் வெற்றியின்
நறுமணம் நுகர !++++++++++
அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன் ! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள் !
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில் !+++++++++++
தொடுவானம்
தோல்விப் படிகளில்
ஏறி வந்தேன், வெகு
தொலைவில்
வானம் வெளுத்ததடா !
காலச் சுழற்சியில்
கோள் உருண்டு, எழும்
காலைக் கதிரொளி
பட்டதடா !கீழே வீழ்ந்தயென்
கால் முறியும், ஆயின்
கிட்டே எனக்கொரு
கோல் தெரியும்.
மேலே எழுந்திட
ஆர்வம் மிகும், நிமிர்ந்து
மீண்டும் முயன்றிட
ஆவல் எழும்.தோல்விக்குப் பின்
கற்றது நான்
கால் பந்தளவு !
வெற்றி பெற்ற பின்
கற்றது நான்
கடுகு அளவு !
+++++++++++++++
தொடுவானுக்கு அப்பால்
தொடுவானுக்கு அப்பால் சென்றால்
தொப்பென வீழ்வோ மெனச்
சொப்பனம் கண்டோம்!
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன்!
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் மீறிச் சென்றார்
கொலம்பஸ்!
புத்துலகு, பொன்னுலகு
அமெரிக்கா கண்டு பிடிக்க
வழி வகுத்தார்!
தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தார்!
உலகம் தட்டை இல்லை
உருண்டை !
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச்சி நெறி ! முயற்சி வழி !
புதியவை கண்டுபிடிக்க
மனித இனத்துக்கு
உறுதி விதி!************
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை இருபத்தி ஏழு தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்], ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள். காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2. அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு]. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் [Echo of Nature] [Environmental Poems]
பிரதமர் இந்திரா காந்தி தந்தையாருக்கு அளித்ததியாகியர் தாமிரப் பட்டயம்எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர். பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர்.. முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனை யில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.செப்டம்பர் 17, 2018