எங்கள் பாரத தேசம்

எங்கள் பாரத நாடு

சி. ஜெயபாரதன், கனடா

*******************************

பாரத நாடு, எங்கள் பாரத நாடு.

பாரினில் ஏது அதற்கிணை ஈடு ?

பாரத நாடு, பரி பூரண நாடு

பண்டைத் திருநாடு பாரத நாடு.

ஆன்மீக ஞானம், ஆயுத ஆற்றல் 

வான்கோள் ஆய்வு செய் நாடு,

புத்தர் பிறந்த புனித நாடு

சத்தியம், சுதந்திரம், சமத்துவம் பேணும்

பித்தர் காந்தி பிறந்த நாடு.

மெத்தகு திருக்குறள் மேவிய நாடு

பாரத நாடு பரி பூரண நாடு

பாரினில் பண்டைத் திருநாடு

பாதுகாப்ப தெங்கள் பொறுப்பு

யாதும் நாடே, யாவரும் கேளிர்.

பாரத நாடு, எங்கள் பாரத நாடு.

பாரினில் ஏது அதற்கிணை ஈடு ?

*************************

ஒன்று பாரத தேசமே

ஒருமைப் பாடெமது பாசமே

உதவி செய்தல் நேசமே

உண்மை தேடலெம் வேதமே

கண்ணியம் எமது பண்பியல்

கடமை எமது உடைமையே

இமயம் முதல் குமரிவரை

எமது பாதம் பதியுமே.

தென்னகத்தின் முப்புறமும்

வண்ணப் பெருங்கடல் அலைகளே.

வடக்கில் நீண்ட மதில் அரண்

வான்தொடும் இமய மலைகளே

புத்தர், நரேந்தர், காந்தியை

புவிக்குப் பெற்ற நாடிதே

குமரி முனையில் வள்ளுவர் சிலை

வையகக் குறள்நெறி காட்டுதே

எந்தையும் தாயும் பலயுகம்

இனிதாய் வாழ்ந்த தேசமே !

எங்கள் ஊனும் எங்கள் உயிரும்

இராப் பகலாய் விழித் திருந்து

என்றும் உன்னைக் காக்குமே !

எங்கள் மூச்சும் எங்கள் பேச்சும்

என்றுமுன் பெயர் ஒலிக்குமே

திங்கள், செவ்வாய் கோள்களை

எங்கள் விண்சிமிழ் சுற்றுதே

பாரத தேசமெனக் கேட்டால்

பூரண உணர்ச்சி பொங்குதே

எங்கள் சுதந்திரத் திருநாடே !

பங்கம் உனக்கு நேர்ந்தால்

எங்கள் உதிரம் கொதிக்குமே !

++++++++++++++