இந்தியா என் இல்லம் !

பீட்டில்ஸ் இசைக் கீதங்கள்

 

ஆங்கில மூலம் : ஜான் லென்னன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

[ பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லென்னன் எழுதிய இந்திய கீதமிது ]

 

ஈர்த்துக்கொள் என்னை உன் நெஞ்சிக்குள்!
பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு!
விடை தேடுகிறேன் நானோர் வினாவுக்கு!
எங்கோ உள்ள தென்னுள் ளத்தின் ஆழத்தில்!
இங்கே காண இயலாதென அறிவேன்!
முன்னமே உள்ள தென்னுடை மனதிலே!
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
எங்கெலாம் எனை இழுத்துச் செல்லினும்!
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
எப்போது நான் அழைக்கப் படினும்!
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்!
ஓம் ! ஓம் ! ஓம் !

 

இந்தியாவே ! என் இந்தியாவே !
என் வேண்டு கோளைக் கேளாய் !
பொறுமை யோடுன் திருவடி பணிவேன்.
ஆற்றங் கரையில் காத்துளேன். ஆயினும்
என் நினைவில், எங்கோ இங்கி லாந்தில்
என்னிதயம் தன்னை இழந்து விட்டேன்,
விட்டுச் சென்ற என் காதலி யோடு,
எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்,
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
எப்போது நான் அழைக்கப் பட்டாலும்,
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்,
இந்தியாவை நோக்கி !

+++++++++++++++++