சி. ஜெயபாரதன், கனடா
சத்திரம், சாவடி எங்கள் பூமி!
எப்போதும் வற்றாது
வற்றாது
என் கிணறு!
வாசல்
திறந்தே கிடக்கும் உம்மை
வரவேற்க!
வாயை
மூடிக் கொள்ள
தாள்ப்பாள் இல்லை!
வாளேந்தி நிற்கும் வன்முறைக்
காவலர் இல்லை,
கண்காணிப் பில்லை !
எதையும் போடலாம்! யாரும் போடலாம்!
காதல் கடிதங்கள் !
காயிதம், கந்தைத் துணிகள்!
ஆபாச வார இதழ்கள்
வீசி எறிந்த
மோசக் கதை, கவிதைகள் !
உயர்ந்த மதிப்பெண்
வாங்கி
வேலைக்கோ, மேற் படிப்புக்கோ
வீணாய்ப் போட்ட
விண்ணப்பத் தாள்கள்!
வேண்டிய வற்றை
யாரும்
தோண்டிக் கொள்ளலாம்!
எடுக்க எடுக்க
அடுக்காய் வரும்,
அமுத சுரபி
எமது
புதையல் களஞ்சியம் !
திருமணப் பந்தியில்
தின்ன முடியாமல்
வயிறு முட்டி
வாழையில் பல்வகை உணவை
வாரிக் கொட்டி
எனது
வயிற்றை நிரப்பும்
குபேரர் கூட்டம் ஒரு புறம்!
பட்டினியால்
பரிதபித் தென்னை
நாடி வந்து
நாய்களுடன் போட்டி யிட்டு
பசியாறிக் கொள்ளும்
குசேலர் கூட்டம் மறு புறம்!
அதோ பார்!
அப்பன்! அரக்கன்! கல்நெஞ்சன்!
நள்ளிரவில் ஓடி வந்து
கள்ளத் தனமாய்
எனது
அடி வயிற்றில் போடும்
பெண் சிசு!
மழலை
பேசா பிஞ்சு!
பாசமலர் விழிகள்
மூடும் முன்பு
காத்திட முடியாமல் கனல் பற்றி
இதயம்
பொங்குது!
குழலினிய, யாழினிய மொழியில்
இங்கா ? இங்கா ? எனும்
சங்க நாதம்
எழுந்து
அனார்கலி போல்
மோனமாய்
அடங்கும்
தாஜ் மஹாலாய் !
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 26, 2013 [R-3]
arumai