விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது !

நவம்பர் 20, 2009

(கட்டுரை : 6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வெண்ணிலவின் தென் துருவத்தில்
தண்ணீர் கண்டுபிடித்தார்
நாசா நிபுணர்
ஏவு கணையால்
நிரந்தர
நிழற் குழியைத் தாக்கி !
பனிக்கட்டிப் பாறையாய்
பல யுகங்கள்
பதுங்கிக் கிடக்கும்
புதுமை ! பழமை ! மகிமை !
எரிசக்தி உண்டாக்கும்
அரிய வாயு
ஹைடிரஜன்
வெடிப்பில் வெளியேறும் !
செவ்வாய்க் கோளுக்குச் செல்லும்
பயணிகட்குத்
தங்குமிடம் அமைக்க
வெண்ணிலவில் குளிர்ந்த
தண்ணீர் வசதி !
பிராண வாயு சுவாசிக்க !
எரிசக்தி வாயு !
வரண்டு போன
பாலைவனச் சுடு நிலவில்
பசுஞ் சோலைப் பள்ளத்தில்
நீர்க்கட்டி
நிரந்தரமான தெப்படி ?
இருண்டு போன
ஆழ்குழியில்
பனிநீரைத் திரவ மாக்கி
மேற்தளத்தில்
ஏற்றுவது எப்படி ?

“நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.  அது விண்வெளித் தேடலுக்குப் பின்னால் வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)

“வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

“நிலவில் கண்ட (LCROSS) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)

“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)

வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது

2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது.  லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது.  உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.  அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது.  லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.  நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A).  25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.

காபியஸ் குழியில் புதிராகப் பேரளவு அளவு ஹைடிரஜன் வாயு இருப்பது எதிர்பார்க்கப் பட்டது.  அதுவே நீர் உற்பத்தியாக உதவி இருக்கக் கூடும் என்று யூகிப்பானது.  லகிராஸ் ஏவுகணை நிலவுத் தளத்தைத் தாக்கி வெளியேறிய சிதறல்கள் 30 -100 வினாடிகள்தான் நீடித்தன !  நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.  அது விண்வெளித் தேடலுக்குப் பின்னால் வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.  நிலவில் கண்ட (LCROSS) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.

நிலவை நோக்கி லகிராஸ் ஏவுகணை மோதல்

லகிராஸ் நிலவைத் தாக்கி நீரிருப்பதை நிரூபித்த திட்டத்துக்குச் செலவு 79 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு).  எரிசக்தியுடன் லகிராஸ் விண்ணுளவியின் எடை : 1665 பவுண்டு.  ஏவும் போது 675 பவுண்டு எரிபொருளைத் தாங்கிச் சென்றது.  அந்தத் திட்டத்தில் வீணாக ஒதுக்கி மறையும் சென்டௌர் மேற்தட்டு அட்லாஸ் -5 ராக்கெட் (Upper Stage Centaur Atlas -5 Rocket) முதலில் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள காபியஸ்-ஏ இருட்குழியைத் தாக்கியது !  மோதலில் வெளியேறிய தூசி முகிலில் நீர் இருப்பதின் சமிக்கைகள் சோதிக்கப்பட்டன.  இதற்கு முன்பு 1990 இல் அனுப்பிய இரண்டு இராணுவ விண்ணுளவிகள் நிலவின் தென் துருவத்தில் ஏராளமான கொள்ளளவு ஹைடிரஜன் வாயு இருப்பதைக் கண்டுபிடித்தன.  ஆனால் அதன் இருப்பால் துருவப் பகுதிகளில் நீர் இருக்குமா என்னும் ஐயப்பாடு அப்போது எழவில்லை.  லகிராஸ் திட்டம் முதல் விண்ணுளவிகள் செய்யாமல் விட்ட நீர்ச் சோதனையைப் பூர்த்தி செய்யவே தயாரிக்கப்பட்டது.

வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.

ராக்கெட் ஏவி நான்கு மணிநேரம் கழித்து மேற்தட்டு சென்டௌர் ஏவுகணை இயக்கம் நின்று லகிராஸ் விண்ணுளவியோடு சேர்ந்து நான்கு மாதங்கள் பூமியை நீள்வட்ட வீதியில் சுற்றி வந்தது.  அப்போது சென்டௌர் ஏவுகணையில் ஒட்டியுள்ள ஹைடிரஜன் வாயு வெல்லாம் நீங்கின.  ஏவுகணையுடன் இணைந்துள்ள துணைக்கோளில் வண்ணப் படமெடுக்கும் ஐந்து காமிராக்கள், வினாடிக்கு ஆயிரம் முறை அளவெடுத்து மோதல் சிதறல்களைப் படமெடுக்கும் “·போட்டோ மானி” (Photometer) இரண்டும் அமைக்கப் பட்டுள்ளன.

நிலவை லகிராஸ் ஏவுகணை மோதிய போது நேர்ந்த விளைவுகள்

முடிவாக லகிராஸ் விண்ணுளவி நிலவின் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப் பட்டு மோதலுக்குச் சுமார் 10 மணி நேரத்துக்கு முன்பு சென்டௌர் ஏவுகணை துணைக்கோளை விட்டுப் பிரிக்கப் பட்டது.  துணைக்கோளைப் பிரிந்த ஏவுகணை சந்திர ஈர்ப்பு விசையில் கவரப் பட்டு நிலவின் தளக்குழியை நோக்கி 5600 mph (Miles per Hour) வேகத்தில் மோதியது.  அதன் பின்னால் தொடரும் துணைக்கோள் மோதலில் சிதறி வெளியேறும் துகள்களின் படத்தை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது.  புதுப்பிக்கப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி மோதல் காட்சியைப் படமெடுக்கத் திருப்பப் பட்டது.  ஏவுகணை மோதல் இடியோசையை நிலவில் உண்டாக்கியது.  சிதறல் வெளியேற்றங்களைச் சூரியன் ஒளியூட்டி ஒரு சில வினாடிகள் வான வேடிக்கையாய்க் காட்டியது.  சந்திரனில் விண்கற்கள் புரியும் இத்தகைய மோதல்கள் மாதத்துக்கு 3 அல்லது 4 தரம் நடக்கின்றன !  80 டிகிரி கோணத்தில் ஏவுகணை சாய்ந்து தாக்கிய பள்ளம் சுமார் 66 அடி (20 மீடர்) விட்டம் இருக்கும் என்றும், உடைந்து சிதறிய பாறைத் தூள்கள் 350 மெட்ரிக் டன் எடை இருக்கலாம் என்றும், தரைக்கு மேல் 10 கி.மீடர் உயரம் தாவிடும் என்றும் கணிக்கப் பட்டன.

லாகிரஸ் விண்ணுளவியின் ஒளிப்பட்டை மானிகள் முதலில் மேலாக வெளியேறிய ஹைடிரஜன் வாயுவைக் காட்டின.  குழியின் கீழ்த்தளத்தில் இன்னும் பேரளவு ஹைடிரஜன் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.  அதாவது ஹைடிரஜன் செழித்த பகுதிகளும் ஹைடிரஜன் சிறுத்த பகுதிகளும் குழி உயரங்களில் காணப்படலாம். விளைவுகளைப் பதிவு செய்து வரும் லகிராஸ் துணைக் கோள் இப்போது ஏவுகணைக்குப் பின்னால் 600 கி.மீடர் (370 மைல்) இடைவெளியில் வந்து கொண்டிருந்தது.  துணைக்கோளும் அடுத்து அதே ஆழ்குழியில் மோதும்படி விடப்பட்டது.  அது 14 மீடர் (46 அடி) விட்டமுள்ள பள்ளத்தை உண்டாக்கும் என்று கணிக்கப்பட்டது.  உச்சச் சிறதல்கள் 30 முதல் 100 வினாடி வரை நீடித்தது.  தூசிகள் ஆழ்குழியில் முடிவாகப் படியும் போது பள்ளத்தின் விட்டம் சுமார் 50 கி.மீடர் (30 மைல்) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !  அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

நிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே !  அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களை அமைக்க வேண்டும்.  இப்போது எழும் வினாக்கள் இவை :  பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று எழுவது முதல் கேள்வி !  அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி !  அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி !  அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரிய சக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும்.  இவை யாவும் நாசா செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகள் !  இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது உடனே போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !

*********************

தகவல்:
Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

1. Indian Space Program By: Wikipedia

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

7.  http://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

8.  http://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

9.  Space Expolaration Chembers Encyclopedic Guides (1992

10.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

11.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

12.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

13  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

14. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

15 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

16 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

17 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

18 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

19 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

20. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

21 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

22 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

23. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

24.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

25. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

26  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

27. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

28 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

29.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

30.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

31 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

32 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

33 http://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November 19, 2009)

இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.

நவம்பர் 12, 2009

Cover Image J Narlikar

சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada


“2001 ஆம் ஆண்டில் ஹைதிராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TIFR –Tata Institute of Fundamental Research) நாங்கள் 24 மைல் உயரத்தில் ஏவிய பலூனில் வாழும் உயிரின மூலவிகள் காணப் பட்டன !  அவை எப்படி அந்த உயரத்தில் தெரிந்தன என்பதை விளக்குவது கடினம்.  எரிமலைச் சாம்பல் தூசிகூட 15 மைல் உயரத்தைத் தாண்டிச் செல்லாது !  அவை சில வாரங்கள்தான் அங்கு நிலைத்து உலவக் கூடும்.  நாங்கள் சோதனை செய்த இடங்களில் எந்த எரிமலைச் சீற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை !

டாக்டர் ஜெயந்த் நர்லிகர் (2001)

“பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும்!  வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய ஒருவரின் ஆயுட் காலம் போதாது!  ஆகவே அடுத்தடுத்துத் தொடரும் யுகங்களில்தான் அப்பெரும் மர்மங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும்!  இயற்கை ஒருபோதும் தன் இரகசியங்களை ஒரே சமயத்தில் விடுவிக்க விடுவதில்லை!”

ஸெனேகா (முதல் நூற்றாண்டு ரோமானிய வேதாந்தி)

Fig 1 Search for Extra-terrestrial Life

அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்!  உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர்.  பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

Fig 1A The Biig Bang Theory

ஜெயந்த் நர்லிகர் செய்த பொது விஞ்ஞானச் சாதனைகள்

நர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை” [Conformal Theory of Gravity], “ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்.  குவஸார்ஸ் (போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்), உயர்சக்தி வானியல் பௌதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னகர்ச்சி [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.

1983 இல் ஃபிரெட் ஹாயிலுடன் ஈழத்து விஞ்ஞான மேதை சந்திரா விக்கிரமசிங் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டனர்.  2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் ஹைதிராபாத் TIFR ஏவுதள விண்வெளியில் பலூன்களை 25 மைல் உயரத்துக்கு ஏவி உயிர்க்கிருமிகள் நடமாடி வருவதைப் பிடித்து, அக்கோட்பாடை மெய்ப்பித்துக் காட்டினர்.

Fig 1B Big Bang Theory Events

ஜெயந்த் நர்லிகர் 1972 இல் மொம்பை டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [Tata Institute of Fundamental Research] பேராசிரியராகப் பணியாற்றியவர்.  அடிக்கடி காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தின் கெல்லாக் கதிரியல் ஆய்வகத்திற்கும், விஞ்ஞானத் தொழில் ஆய்வுக் குழுவிற்கும் (Kellogg Radiation Lab, Council of Scientific & Industrial Research, CIT), மாரிலாந்து பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகத் துறையகத்திற்கும் [Dept of Physics & Astronomy, University of Maryland] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானப் பேருரையாளர்.  காலி•போர்னியா, டெக்ஸஸ் பல்கலைக் கழகங்கள், கார்நெல் பல்கலைக் கழகம், கார்டி•ப் பல்கலைக் கழகக் கல்லூரி, பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி ஆகிய விஞ்ஞான நிறுவகங்களின் ஆலோசகராகப் பணிபுரிபவர்.  மேலும் பொதுநபர் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞான விந்தைகளை எளிய இனிய முறையில் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யிருக்கிறார்.

விஞ்ஞான மேதை நர்லிகரின் உன்னத வாழ்க்கை வரலாறு

1938 ஜூலை 19 ஆம் தேதி ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் நகரில் பிறந்தார்.  அவரது தந்தை வாசுதேவ நர்லிகர், வாரனாசி பெனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த கணிதப் பேராசிரியர்.  தந்தையார் புகழ் பெற்ற கணித நிபுணராக இருந்ததோடு, பொது ஒப்புமைத் தத்துவத்திலும் [General Relativity] ஞானியாகத் திகழ்ந்தவர்.

Fig 1C The Panspermia Theory

தாயார் சுமதி நர்லிகர் ஓர் சமஸ்கிருத வித்துவான்.  ஆதலால் சிறு வயது முதலே ஜெயந்த் நர்லிகர் கணிதம், சமஸ்கிருதம் புரளும் ஒரு கல்விமயக் குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர்.  பெனாரஸ் பல்கலைக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பயின்று இறுதி வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார்.  பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் 1957 இல் B.Sc பட்டம் பெற்று முதல்தர விஞ்ஞானியாகப் பேரெடுத்தார்.

ஜே. என். டாடாவின் சிறப்புப்பரிசு மாணவனாக அடுத்து மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.  அங்கே B.A.(1960), M.A.(1964), Ph.D.(1963) பட்டங்களை விரைவில் பெற்றார்.  1960 இல் டைஸன் வானவியல் பதக்கத்தைப் [Tyson Medal for Astronomy] பெற்று, கீர்த்தி வாய்ந்த பேராசிரியர் •பிரெட் ஹாயிலின் கீழ் [Fred Hoyle] ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கவர்ச்சி மிக்க ஸ்மித் பரிசு [Smith Prize (1962)], ஆடம்ஸ் பரிசு [Adams Prize (1967)] ஆகிய இரண்டும் அவருக்குக் கிடைத்தன.  எல்லாவற்றுக்கும் மேலாக தனது 38 ஆவது வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மிக உன்னத D.Sc. [Doctor of Science (1976)] பட்டத்தையும் பின்னால் பெற்றார்.

Fig 1D Dr Fred Hoyle

டாக்டர் ஆஃப் ஸயன்ஸ் [D.Sc.] பட்டம் பெறுவதற்கு முன்பாக 1972 இல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.  அவருக்கு டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தில் [Tata Institute of Fundamental Research (TIFR)] வானவியல் பௌதிகத்தின் பேராசிரியர் பதவி கிடைத்தது.  1966 இல் ஜெயந்த் நர்லிகர் மங்களா ராஜ்வடே [Mangala Rajwade] என்னும் மாதை மணந்து கொண்டார்.  மங்களா மொம்பப் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் டாக்டர் [Ph.D.] பட்டம் பெற்றவர்.  அவர்களுக்கு கீதா, கிரிஜா, லீலாவதி என்று பெயருள்ள மூன்று புதல்விகள் உள்ளார்கள்.

பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார்!  அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்!  ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது ! பெரு வெடிப்பு நியதியே பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

Fig 1E Panspermia

ஆயினும் தன் கொள்கையை விடாமல் பிடித்துக் கொண்டு ஃபிரெட் ஹாயில், ஜியோஃபிரி பர்பிட்ஜ், ஜெயந்த் நர்லிகர் ஆகியோருடன் இணைந்து “பிரபஞ்சத் தோற்றத்திற்கு வேறுபட்ட விளக்கம்” [A Different Approach to Cosmology] என்னும் நூலை 2000 இல் வெளியிட்டார்.  அண்டவெளி மீன்களின் அமைப்பு நியதியையும், அவற்றில் இரசாயன மூலகங்களின் தோற்ற மூலத்தையும் [Theory of the Structure and Origin of the Chemical Elements in Stars] பற்றிப் புதிய கருத்துக்களை வழங்கியவர், ஹாயில்.  ஈழத்து விஞ்ஞான மேதை டாக்டர் சந்திரா விக்கிரமசிங்குடன் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டவர் ஹாயில்.

உயிரினமும், கூறப் போனால் எயிட்ஸ் (AIDS) போன்ற நூதன நோய்களும் கூட அண்ட வெளியிலிருந்து உற்பத்தியாகி, பூமண்டலத்துக்கு இறங்கி வந்துள்ளன என்பது ஹாயிலின் அசைக்க முடியாத கருத்து!  விந்தையான அவரது கருத்துக்களை அவர் எழுதிய இரண்டு நூல்களில் “அண்ட வெளியிலிருந்து வரும் நோய்கள்” [Diseases from Space (1979)], “விண்வெளிப் பயணிகள்: உயிரினங்களின் உதயம்” [Space Travellers: The Origin of Life (1980)] பற்றிய விளக்கங்களைக் காணலாம்!

Fig 1F The Genetic Seeds

ஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த “பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை” [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு!  ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய “நிரந்தரநிலை நியதி” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய “பொது ஒப்புமை நியதியின்” [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப், பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது.

ஃபிரெட் ஹாயில், நர்லிகர் இருவரும் “தூர நிகழ்ச்சிக் கொள்கையைப்” [Concept of Action at a Distance] பயன்படுத்தி, நுட்ப உலகான குவாண்டம் உருவிலும், பிரம்மாண்ட பிரபஞ்சப் பூத வடிவிலும், மின்னகர்ச்சி இயக்கத்தை [Electrodynamics at Quantum and Classical Levels] விளக்கினார்கள்.  அவரது அரிய மின்னகர்ச்சி இயக்கக் கருத்தே, “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதி” [Conformal Theory of Gravity] என்னும் ஒரு புதிய ஈர்ப்பியல் நியதியைப் படைக்க உதவியது.

விண்வெளிச் சூழ்நிலையில் உயிரினங்களின் மூலத் தோற்றம் ! “பான்ஸ்பெர்மியா நியதி” என்றால் என்ன?

2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் அண்ட வெளியில் உயிரினத் தோற்றத்தைக் [Extra-terrestial Life] கண்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்!  நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தவர்கள்.  அந்நுண் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர்!  ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது!  அந்தக் கண்டுபிடிப்பு “பான்ஸ்பெர்மியா கோட்பாடின்” போக்கில் [Panspermia Theory] பல புதிய சவால்களை எதிர்காலத்தில் தொடுக்க வல்லது!

Fig 8 Details of Panspermia

“பான்ஸ்பெர்மியா” என்றால் என்ன?  பிரபஞ்ச மெங்கும், தகுந்த சூழ்நிலையில் விருத்தி யடையும் உயிரின நுண்கிருமிகள் அல்லது ஏகச்செல் ஜீவிகள் உருவில் [Germs or Spores] பரந்து பரவி யுள்ளன!  மேலும் பூமியில் தோன்றிய மனித இனம், விண்வெளியிலிருந்து பூமிக்குப் புகுந்தது என்றும் பான்ஸ்பெர்மியா என்பதற்கு அர்த்தம் கொள்ளலாம்.  ஒரு காலத்தில் [1965-1985] அமெரிக்க உயிரியல் விஞ்ஞான மேதை, கார்ல் சேகன் செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்த தடமிருக்கலாம் என்று அண்டவெளிப் பயணங்களில் ஆழ்ந்து முற்பட்டுத் தோல்வி யடைந்தார். “அண்டக் கோள்களில் உயிரின இருப்பை அழுத்தமாகப் பறைசாற்றும் விஞ்ஞானிகள், அதற்கு அழுத்தமான சான்றுகளைக் காட்ட வேண்டும்” என்று கார்ல் சேகன் அப்போது அடித்துப் பேசினார்!

அவ்விதம் அழுத்தமான சான்றுகளைக் கேட்ட சமயத்தில், ஜெயந்த் நர்லிகர் பின்வருமாறு கூறினார்: “2001 ஜனவரியில் ஹைதிராபாத்தில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [TIFR] பலூன் ஏவுதளத்திலிருந்து பலூன் “பணிப்பளு” [Payload] ஒன்று விண்ணோக்கி ஏவப்பட்டது.  அப்போது 41 கிலோ மீட்டர் [24 மைல்] உயரத்தில்தான் நுண்ணுயிர் ஜீவிகள் இருப்பது அறியப்பட்டது!  அவ்வுயிர்க் கிருமிகள் பூமியிலிருந்து ஒரு வேளை வந்ததாக யூகித்தாலும், எவ்விதம் அந்த உயரத்தில் ஏறியன என்று கணிப்பது மிகவும் கடினமானது!  எரிமலைச் சாம்பல் கூட [Volcanic Ash] 25 கிலோ மீட்டருக்கு [15 மைல்] மேல் ஏறுவதில்லை!  அவ்விதம் ஏறினாலும் ஒரு சில வாரங்களுக்கு மேல், அங்கே தங்க முடிவதில்லை! நாங்கள் சோதனைக்குத் தேர்ந்தெடுத்த இடமோ, எந்த வித எரிமலைச் சீறல்கள் பல மாதங்கள் பொழிவுகள் செய்யாத ஒரு தூயச் சூழ்வெளி மண்டலம்” என்று கூறுகிறார்.

Fig 7 Panspermia from other Celestial Bodies

“பூமியைச் சுற்றிவரும் இயக்கமற்ற செயற்கைத் துணைக்கோள் [Dead Satellites] அல்லது விண்வெளி ராக்கெட்டுகள் வெளியேற்றும் அண்டவெளிப் பயணக் குப்பைகளைக் கணித்ததில், எங்கள் சேமிப்பு அளவுக்கு மாதிரியை இணையாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது!  மாதிரியைச் சேமிப்பதில் நாங்கள் எடுத்துக் கொண்ட கவனம், எச்சரிக்கைகள் மிகையானவை.  எங்களுக்குக் கிட்டிய கிருமி மாதிரி, ஆய்வுக் கூடத்தின் தீண்டலுக்கு அப்பாற் பட்டது!  சாதாரணப் பொது ஊடகங்கள் மூலமாகப் பொரித்து விளைவிக்க முடியாத [Not Cultured with common media] நூதனமான அரிய ஒருவகைக் கிருமிகள் அவை!  சான்றுக் கலன்கள் யாவும் “கிரையோ ஸாம்பிளர்” [Cryosampler] பக்குவத்தில், பூமித் தீட்டுப் படாத [Earth Contamination] முறையில் தூய்மைப் படுத்தப்பட்டவை”.

விண்வெளியில் எந்த விதமான உயிரின வகைகள் நர்லிகர் குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டன?  இரண்டு விதமான நுண்ணுயிர் ஜீவிகளுக்குச் சான்றுகள் கிடைத்தன.  முதலாவது: மாதிரியுடன் நேர்த்துருவச் சாயங்களைக் [Cationic Dyes] கலந்த போது, வளரும் உயிருள்ள செல்கள் [Living Viable Cells] காணப் பட்டன.  இரண்டாவது: நுண்ணுயிர்க் கிருமிகள் குச்சிகள் போல் தோன்றும் பெஸிலஸ், •பங்கஸ் [Staphylococcus Pasteuri (Rod-like Bacillus and Fungus)].  முதல் மாதிரியை நிரூபித்தது, பிரிட்டனில் உள்ள கார்டி•ப் கல்லூரியின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடம் [Molecular Biology Labs of David Lloyd].  இரண்டாவது மாதிரியைச் சோதித்தது, பிரிட்டனில் உள்ள ஷெஃப்பீல்டு ஆய்வுக்கூடம் [Labs in Sheffield by Milton Wainwright].

Fig 9 Planetory Ovum

“அந்த அரிய நூதனக் கிருமிகள் எரிக்கற்கள் [Meteorites], அண்டப் பாறைகள் [Celestial Rocks], அண்டங்கள் [Other Bodies], வால்மீன்கள் [Comets] அல்லது சூரிய மண்டல எல்லையைக் கடந்து அமைந்துள்ள ஓர்ட் முகில்கள் [Oort Clouds] போன்ற எவற்றிலிருந்தும் வீழ்ந்ததாக நிச்சயம் இப்போது கூற முடியாது” என்று நர்லிகர் அழுத்தமாகக் கூறினார். “அவை இரண்டும் பூமியிலிருந்து போனவை யல்ல, விண்வெளியிலிருந்து வீழ்ந்தவை என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்” என்றார். “இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், எங்கிருந்து விழுந்தன என்பதை முதலில் அறிய முடிந்தால்தான் அவற்றின் தற்போதைய பௌதிக நிலையை விளக்க இயலும்” என்றும் நர்லிகர் கூறினார்.  விண்வெளிச் சோதனையில் நர்லிகர் குழுவினர் ஆராய்ந்து வெளியிட்ட “பான்ஸ்பெர்மியா கோட்பாடு” [Panspermia Theory], உலக அரங்கில் உயிரியல் விஞ்ஞானிகளால் முழுவதும் ஒப்புக் கொள்ளப் படாமல், இப்போது கேள்விக்குட்பட்டே இருந்து வருகிறது!

ஜெயந்த் நர்லிகரின் சிறப்பான விஞ்ஞானப் பணிகள்

இந்தியாவுக்குத் திரும்பிய நர்லிகர் அகிலவியல் பற்றியும், வானிவியல் பௌதிகத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றினார். “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியைப்” பயன்படுத்தி, அவர் டாக்டர் பி.கே. தாஸ¤டன் [Dr.P.K. Das of Indian Institute of Astrophysics] உழைத்து “குவசார்ஸின் ஒழுங்கற்ற சிவப்புப் பிறழ்ச்சி” பற்றி [Anomalous Redshifts of Quasars] விளக்கம் தந்தார்.  பேராசிரியர் அப்பாராவ் [K.M.V. Apparao of TIFR], டாக்டர் என். தாதியிச் [Dr.N. Dadhich of Pune University] ஆகியோருடன் பணி செய்து, பிரபஞ்சத்தின் பிரளயப் போக்கிற்குச் [Violent Phenomena in the Universe] சிறிது காரணியான வெடிப்புச் சக்தியின் களஞ்சியங்களை [Explosive Sources of Energy] “வெண் துளைகள்” [White Holes] என்னும் கோட்பாட்டில் விளக்கம் செய்தார்.

Fig 2 Prof J Narlikar

1978 இல் பேராசிரியர் சித்ரேயுடன் [S.M. Chitre of TIFR] வேலை செய்து காலாக்ஸிகள் இடையூறாக உள்ள போது, அவற்றின் ஈர்ப்பியல் ஆற்றல், ரேடியோ அலைகளை வளைப்பதை எடுத்துக் கூறினார்.  பிரபஞ்சத் தோற்ற சமயத்தில் கால-வெளி ஒற்றைப்பாடுகளின் அருகே [In the Vicinity of Space-Time Singularities], குவாண்டம் கொந்தளிப்புகள் [Quantum Fluctuations] நிகழ்வதைப் பற்றி 1977-1985 ஆண்டுகளில் ஆராய முற்பட்டார்.

புனே நகரில் “வானோக்கியல், வானவியல் பௌதிக அகிலப் பல்கலைக் கழக மையம்” [Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA) at Pune] ஒன்றை 1988 இல் பல்கலைக் கழகக் கொடைக் குழு [University Grant Commission (UGC)] நிறுவகம் செய்தது.  UGC அதிபதி பேராசிரியர் யஷ் பால் [Professor Yash Pal] ஜெயந்த் நர்லிகரை அழைத்து அதன் ஆணையாளராக [Director] ஆக்கினார்.

ஜெயந்த் நர்லிகர் தான் எழுதிய நூல் ஒன்றில் காலக்ஸிகளும், காலக்ஸி மந்தைகளும் [Galaxies and Clusters of Galaxies] பிரபஞ்சத்தில் எப்படி உண்டாகின்றன என்று விளக்குகிறார்.  நர்லிகரும் அவரது விஞ்ஞான சகாக்களும் இணைந்து பிரபஞ்சத்தின் விரிவைக் காண, மின்கணனியில் முப்புற “போலியுரு மாடல்” [Computer Simulator 3D Model] ஒன்றை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  அந்தப் போலி வடிவில் ஏதாவது சில இடங்களில் புள்ளிகளைக் குறித்து, அவையே தனிதனிச் “சிறு படைப்பு மையமாக” [Mini-Creation Centre] எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

Fig 3 Narlikar Speaks

அதுவே பிறகு அண்டையில் ஓர் அகிலவியல் நிகழ்ச்சியால் [Cosmic Event] ஒரு புதிய காலக்ஸியை உண்டாக்குகிறது!  அம்முறையில் அந்தப் போலியுரு மாடலை அண்ட வெளியில் விரித்துக் கொண்டே போகலாம்.  ஏனெனில் பிரபஞ்சம் நிலையானதன்று.  அது பலூன் போல உப்பிக் கொண்டே விரியும் ஓர் ஒழுங்கற்ற பொரி உருண்டை.

“பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பில் மட்டுமே உருவானதாக [No Single Big Bang] எங்களது போலியுரு மின் கணனி மாடலில் அமைக்கப்பட வில்லை” என்று கூறுகிறார் நர்லிகர்.  எல்லோரும் உடன்படும் “பொதுவான பெரு வெடிப்பு நியதியை” [Standard Theory] ஏற்காது, மாறுபட்ட “நிரந்தநிலை நியதியைப்” [Steady State Theory] பின்பற்றி வருபவர் நர்லிகர். “அண்டங்களும், பிண்டங்களும் [Planets and Matter], சிறுபடைப்பு நிகழ்ச்சிகளில் [Mini-Creation Events] சிறு சிறு வெடிப்புகளில் [Mini Bangs] உண்டானவை” என்று கூறுகிறார்.

“கனமான ஒரு பேரண்டம் சுழலும் போது, அது சுழலும் ஒரு கருந்துளை போல் [Black Hole] இயங்கி வருகிறது.  அவ்விதம் சுழலும் ஓர் அண்டத்துக்கு அருகில், பிண்டம் [Matter] உருவாக்கப் படலாம் என்றும், அது சுழலும் அச்சின் திசையில் வீசி எறியப்படலாம் என்றும் மின்கணினி போலியுரு மாடலில் காட்டுகிறோம்.  ஆகவே நாமொரு நேர்கோட்டு அமைப்பை [Linear Structure] அங்கே காண்கிறோம்.  ரேடியோ-காலக்ஸிகளில் காணப்படும் பல ஜெட் வீச்சுகள் இந்த நேர்கோட்டு அமைப்புகளையே வலியுறுத்தும்” என்றும் நர்லிகர் கூறுகிறார்.

Fig 5 Narlikar Dadhich Wikramasinghe

நர்லிகர் காட்டும் பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்கள்!

ஜெயந்த் நர்லிகர் பிரபஞ்சத்தின் மகத்தான ஆய்வுப் பயணத்தில் கண்ட ஏழு அற்புதங்களைத் தான் எழுதிய ஒரு நூலில் [Seven Wonders of the Cosmos] கூறுகிறார்.  அது பூமண்டலத்தில் துவங்கி, சூரிய மண்டலக் கோள்களைச் சுற்றி வந்து, அண்டையில் உள்ள காலக்ஸியைக் கண்டு, முடிவில் பிரபஞ்சத்தின் தொடுவான எல்லையைத் தொடுகிறது!  ஒவ்வோர் அற்புதப் படைப்பிலும் பிரபஞ்சத்தின் நூதனக் காட்சி ஒன்று அல்லது புதிரான நிகழ்ச்சி ஒன்று சிறப்புத் தோரணமாக எழுந்து நிற்கிறது!  அந்நூல் அகிலத் தோற்றத்தின் எழிலைக் காட்டி, அதன் விந்தைத் தொழிலை விளக்கி, படிப்போர் நெஞ்சில் துடிப்பை உண்டாக்குகிறது!

முதல் அற்புதம்:  பூமியை விட்டுச் செல்லும் போது, முதல் அற்புத வினா எழுகிறது! “மேற்கிலிருந்து பரிதி மேலே எழுவது நிகழக் கூடிய சம்பவமா?  ஒளிவீசும் சூரியன் உள்ள போதே, வானம் இருண்டு போய்விடுமா?” இவற்றுக்கு நர்லிகர் பதில் தருகிறார்!

இரண்டாம் அற்புதம்:  விண்வெளியில் காணும் குள்ளி விண்மீன்களையும், பூத விண்மீன்களையும் [Giants & Dwarves of the Star World] பற்றியது.  விண்மீன் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றைப் பற்றியது.

Fig 11 Comet Samples

மூன்றாவது அற்புதம்:  ஓர் திரட்சியான விண்மீன் [Solid Star] வெடித்துப் பிரளயப் புரட்சி உண்டாவது.

நான்காவது அற்புதம்:  துடிக்கும் விண்மீன்கள் [Pulsars] என்னும் நியூட்ரான் விண்மீன்களைப் [Neutron Stars] பற்றியது.  அவை சுழலும் போது, கதிர்த் துடிப்புகளை [Emitting Pulses of Radiation] உமிழ்பவை.

ஐந்தாவது அற்புதம்: ஈர்ப்பியல் ஆற்றலால், பிரபஞ்சத்தில் நேரும் நூதன நிகழ்ச்சிகளைப் பற்றியது.

ஆறாவது அற்புதம்:  ஈர்ப்பியல் அழுத்தம் புரியும் சூழ்வெளியில் நடக்கும் மாயையான தோற்றங்கள்.

ஏழாவது அற்புதம்:  இறுதியான அற்புதம் பிரபஞ்சத்தின் முழுமையான, மகத்தான, முடிவற்ற பெருவிரிவு!  நர்லிகர் இவ்விதம் விந்தையான பிரபஞ்சத்தின் மர்மங்களையும், புதிர்களையும் இனிதாக எடுத்துக் காட்டுவதில் பெரும் வெற்றி பெறுகிறார்.  இத்தனை பக்கங்களையும் படித்து விட்டு, இன்னும் பிரபஞ்சம் புரியாத புதிராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் மர்மமான பிரபஞ்சமே! அந்நூலை எழுதிய ஆசிரியர், நர்லிகர் அன்று!

Fig 12 Comets & Origins of Life

நர்லிகர் எழுதிய நூல்கள், பெற்ற வெகுமதிகள்

ஜெயந்த் நர்லிகர் நியதிப் பௌதிகம் [Theoretical Physics], வானவியல் பௌதிகம் [Astrophysics], அகிலவியல் [Cosmology] ஆகிய துறைகளுக்குத் தனது உன்னத படைப்புகளை அளித்துள்ளார். சிறப்பு மிக்க நுணுக்கமான விஞ்ஞானப் படைப்புகளை ஆக்கிய நர்லிகர், விஞ்ஞானத்தைப் பரப்பும் மேடைப் பேச்சாளராகவும், எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். நர்லிகர் 55 நூல்களும், 200 மேற்பட்ட முழு நுணுக்கக் கட்டுரைகளும், 300 அரை நுணுக்கக் கட்டுரைகளும், விஞ்ஞானப் புனை நாவல்களும் இதுவரை எழுதியுள்ளார்.

அவருக்குக் கிடைத்த மதிப்புப் பதக்கங்களும், பட்டங்களும், பரிசுகளும் அநேகம்:  பட்நாகர் பரிசு [Bhatnagar Award for Physical Sciences (1978)], ராஷ்டிர பூஷண் மதிப்பு [FIE Foundation's Rashtrabhusan Award (1981)], பிர்லா பரிசு [B.M. Birla Award (1993)], இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஃபெல்லோ [Fellow of the Indian Academy of Sciences], கேம்பிரிட்ஜ் வேதாந்தக் குழுவின் ஃபெல்லோ [Fellow of the Cambridge Philosophical Society], இந்திய ஜனாதிபதியின் பத்ம பூஷண் மதிப்பு [Padmabhusan by the President of India (1965)]. இந்திரா காந்தி இந்திய விஞ்ஞானக் கழகத்தின் பரிசு [Indira Gandhi Award of the Indian National Science Academy (1990)], ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானப் பண்பாட்டுப் பரிசு [UNESCO Kalinga Award (1996)].

Cover Picture Narlikar

2003 ஜூன் 20-22 இல் பாபா அணுசக்தி ஆய்வுக் கூடம் [BARC] புனே IUCAA நிறுவகத்திலிருந்து ஜெயந்த் நர்லிகர் ஓய்வெடுக்கும் சமயம், “மனிதனும், பிரபஞ்சமும்” [Man and the Universe] என்னும் ஓர் விஞ்ஞானச் சொற்பொழிவுப் பேரரங்கை மொம்பையில் அமைத்து அவருக்கு ஓய்வு மதிப்புவிழா நிகழ்த்தியது. அந்த விழாவில் முன்னாள் பல்கலைக் கழகக் கொடைக் குழுவின் [UGC] அதிபதி பேராசிரியர் யஷ் பால்,  IUCAA இன் விஞ்ஞானி டாக்டர் அஜித் கெம்பாவி போன்றோர் நர்லிகரைப் பற்றி உரையாற்றினர்கள். அறுபத்தியைந்து வயதாகும் [2003] ஜெயந்த் நர்லிகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, பாரதத்தில் மாந்தரிடையே விஞ்ஞானச் சிந்தனா விதைகளைப் பரப்பி, மகத்தான விஞ்ஞானப் பணிகளைச் செய்து வருவார் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

*******************

Dr. Jayanth Narlikar’s Books:

1. An Introduction to Cosmology
2. From Black Clouds to Black Holes
3. Seven Wonders of the Cosmos
4. The Lighter Side of Gravity
5. The Primeval Universe
6. The Structure of the Universe
7. Violent Phenomena in the Universe

********************

தகவல்:

1. The Seven Miracles of the Universe By: Dr. Jayanth Narlikar [German By Helmut Mennichan (June 2001)]
2. If the Big Bang were one Fable [After the passing of Fred Hoyle] Italian Web (August 21, 2001)
3. Biography of Dr. Jayanth Narlikar, Comcom Magazine [www.vigyanprasar.com/comcom/jvn-bio.htm]
4. The Rediff Interview /Jayanth Narlikar [www.rediff.com/news/2002/nov/16inter1.htm] (Nov 2002)
5. Recommendation for the Award of Doctor of Science: Prof Jayanth Narlikar
6. Goa Web News: Astronomer Dr. Fred Hoyle By: Nandakumar Kamat [Aug 2001]
7. Dr. Fred Hoyle, Cadiff University [www.cf.ac.uk/maths/Wickramasinghe/hoyle.html]
8. Micro-organisms in Space -The Vindication of Panspermia Paper I & II, SEM Imaging of Stratospheric Particles of Non-terrestrial Origin By: Walls, Al-Mufti, Wickramasinghe, Rajaratnam and Narlikar [www.astrobiology.cf.ac.uk/cultured.html] [September 10, 2002]
9. The Lighter Side of Gravity By : Jayant Narlikar (1996)
10.  Spectrum : Icons from the World of Science By : S. Ananthanarayanan (July 18, 2004)
11. In Search of Extra-terrestrials (www.rediff.com)  Rediff Interview  of Jayant Narlikar (Nov 16, 2002

******************

Dr. Jayant Narlikar Works :

Besides scientific papers and books and popular science literature, Narlikar has written science fiction, novels, and short stories in English, Hindi, and Marathi. He is also the consultant for the Science and Mathematics textbooks of NCERT (National Council for Educational Research and Training, India).

1. Current Issues in Cosmology, 2006
2.  A Different Approach to Cosmology : From a Static Universe through the Big Bang towards Reality, 2005
3. Fred Hoyle’s Universe, 2003
4. Scientific Edge: The Indian Scientist from Vedic to Modern Times, 2003
5. An Introduction to Cosmology, 2002
6. Quasars and Active Galactic Nuclei : An Introduction, 1999
7. From Black Clouds to Black Holes, 1996
8. Seven Wonders of the Cosmos, 1995
9. Philosophy of Science: Perspectives from Natural and Social Sciences, 1992
10. Highlights in Gravitation and Cosmology, 1989
11. Violent Phenomena in the Universe, 1982
12. The Lighter Side of Gravity, 1982
13. Physics-Astronomy Frontier (co-author Sir Fred Hoyle), 1981
14. The Structure of the Universe, 1977
15. Creation of Matter and Anomalous Redshifts, 2002
16. Absorber Theory of Radiation in Expanding Universes, 2002

++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 12, 2009 (Revised R-1)

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !

நவம்பர் 5, 2009

Fig 6 CERN Particle Smasher

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பூத விரைவாக்கி யந்திரம்
மீண்டும் உயிர்த் தெழுந்தது !
மோத வைத்து உடைக்கும்
புரட்டானை !
கரு வெடிப்பில்
உருவாக்கப் போகிறது
கடவுள் துகளை !
பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சி
ஆய்வ கத்தில்
அரங்கேற்றம் !
கருந்துளை உண்டாக்கி நமது
காசினியை விழுங்காது !
சிகாகோவில் ஃபெர்மி முதலாய்ச்
செய்து வைத்த
அணுப்பிளவுத் தொடரியக்க
ஆய்வு போன்றது !
பரமாணுவுக் குள்ளேயும்
கரகமாடிச் சுற்று மோர்
நுட்ப அகிலம் !
பராமணுக்கள் முட்டை யிட்டுக்
குஞ்சுகள் பொறிக்கும்
கோடான கோடி
குளுவான்கள் ! குவார்க்குகள் !
லிப்டான்கள் !
ஃபெர்மி யான்கள் !
இதுவரை யூகித்திருந்த
கடவுள் துகள்
நுட்பமான ஹிக்ஸ் போஸானை
சுட்டுப் படைத்திடுமா
வட்ட விரைவாக்கி
யந்திரம் ?

+++++++

Fig 1E Particle Detectors

மனித இனம் தொடுவானுக்கு அப்பால் விண்வெளியை நோக்கி அங்கே என்ன உள்ள தென்று எப்போதுமே அறிய விரும்பியுள்ளது ! 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ச்சி ஓர் வரையறைக் குட்பட்ட காலத்தில்தான் எழுந்திருக்கிறது !  அதாவது 15 பில்லியன் ஆண்டுக்கு முந்தி உண்டான வடிவுகளை (Objects) நாம் காண முடியாது !  காரணம் அதுவரைப் பயணம் செய்யும் கால வரம்பு ஒளிக்குப் போதாது !  ஆதலால் இன்னும் ஆழமாய் நோக்கி உளவச் சக்தி வாய்ந்த மிகக் நுண்ணிய மின்னலைகளை (Short Waves) நாம் பயன்படுத்த வேண்டி யுள்ளது.  ஆகவேதான் (செர்ன் போன்ற) பூத விரைவாக்கி யந்திரங்கள் பரமாணுக்களை மிகச் சக்தியூட்டிச் சோதிக்கத் தேவைப்படுகின்றன !

விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டிஃபென் ஹாக்கிங் (பிப்ரவரி 3, 1994)

“புரோட்டான் ஒளிக்கற்றைச் சோதனை துகள் உடைப்புச் சோதனைச் சாதனங்கள் செம்மையாக இயங்குவதைக் காட்டுகிறது.  இந்தச் சாதனை இயக்கம் சீரிணைப்புச் செம்மை வினை (Work of Synchronization).  துரிதக் காந்தங்கள் முதலில் சீரிணைப்பாகி ஒளிக்கற்றை வேகத்தை வளர வைத்து ஒரு விரைவாக்கியிலிருந்து மறு விரைவாக்கிக்கு மாற்றி முடிவில் பெரு உடைப்பு யந்திரத்துக்குத் திருப்ப வேண்டும்.  அப்போது யந்திரத்தின்  சீரிணைப்பும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அத்தகைய நிகழ்ச்சி 100 பிக்கோ வினாடிக்குள் (Pico-sceconds) நேர்ந்து விடும்.” (One Picosecond = 1 /10^12 Sec)

கியான்லுயிகி அர்துயினி (Gianluigi Arduini) (LHC Deputy Head of Hardware Commissioning)

Fig 7 Underground Tunnel

மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

ஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் !  மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் !  பரமாணுக் குள்ளேயும் அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் !

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை !

கார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல் துறை மேதை

CERN Fig. 5

மனதைக் துள்ள வைக்கும் உச்ச சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது.  இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.  அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine)

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles).  அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன.  1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது.  புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

கிளாஸ் ரித் & ஆன்டிரியா சேஃபர் (Klaus Rith & Andreas Schafer)

Fig 1C CERN Atom Smasherமீண்டும் உயிர்த்தெழுந்த பரமாணு உடைப்பு யந்திரம்

2009 அக்போடர் 23 & 25 ஆம் தேதிகளில் பிரான்சில் உள்ள உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் (LHC -Large Hadron Collider) பழுதுகள் நீக்கப்பட்டு மேலும் புதுமையாக்கப் பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்து தணிவு சக்தி ஒளிக்கற்றைக் கதிர்த் துகள்களை (Low Energy Beams of Particle) இரண்டு பகுதிகளில் சோதனை செய்யப் புகுத்தியுள்ளது.  சென்ற ஆண்டு செப்டம்பரில் திடீரென குளிர் வாயு ஹீலியம் பழுதான இணைப்பு ஒன்றில் கசிந்து யந்திரத்துக்குப் பெருஞ் சிதைவு உண்டாக்கியது !  அந்த நிதி விழுங்கிய விபத்திற்குப் பிறகு இப்போதுதான் விஞ்ஞானிகள் மறுபடியும் மிகத் தணிவுக் குளிர் நிலையை [1.9 கெல்வின் (-271 C) (-456 F)] யந்திரத்தில் நிலவிச் சோதனையைத் துவங்கியுள்ளார்.  அந்தக் கடுங்குளிர் நிலை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியை விடத் தணிவுக் குளிரானது !  2009 நவம்பரில் 27 கி.மீடர் (16 மைல்) முழுக் குகைக் குழலில் ஒளிக்கற்றைக் கதிரை அனுப்பத் திட்டமிட்டு உள்ளார்.  சோதனையில் பங்கெடுத்த இரண்டு குகைப் பகுதிகள் ஒவ்வொன்றும் 3.5 கி.மீடர் (2.1 மைல்) நீளமுள்ளது.  இப்போது முதலாக அனுப்பப்படும் சோதனை ஒளிக்கற்றை பின்ன அளவில் 450 பில்லியன் எலெக்டிரான்-வோல்ட் (eV -Electron Volt) சக்தி மட்டுமே !  எதிர்காலக் குறிக்கோள் ஒளிக்கற்றைச் சுற்றி வந்து முடிவில் 3.5 டிரில்லியன் எலெக்டிரான்-வோல்ட் (3.5 Trillion eV -3.5 X 10^18 eV) சக்தி அளவாகும் !  2011 ஆண்டுகளில் 7 டிரில்லியன் எலெக்டிரான்-வோல்ட் சக்தி வரை போகும் திட்டம் உள்ளது !

Fig 1B CERN Huge Magnet

பரமாணு உடைப்பு யந்திரம் ஹைடிரஜன் புரோட்டானை விரைவாக்கம் செய்து அதன் அயனிகளை (Hydrogen Ions) ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் (99.999 % Speed of Light) துரிதப் படுத்தி 27 கி.மீடர் (17 மைல்) நீளமுள்ள ஒரு வட்டக் குகையில் எதிர்த் திசையில் அனுப்பி மோத விட்டு உடைக்கிறது.  அந்த வட்டக் குகை பூமியிலிருந்து 175 மீடர் (580 அடி) ஆழத்தில் பிரான்சுக்கும் ஸ்விட்ஸர்லாந்துக்கும் இடையே நீண்டு கட்டப் பட்டிருக்கிறது.  புரோட்டான் ஒளிக்கற்றைகள் இணையாக எதிர்த் திசைகளில் பாய்ந்து சென்று மோதும்.  மிகச் சக்தி வாய்ந்த மின் கடத்திக் காந்த வளையங்கள் (Powerfull Super-conducting Magnets) ஊடே ஒளிக்கற்றை அயான்கள் செல்லும் போது அவற்றின் வேகம் படிப்படியாக வளர்ச்சி (Particle Acceleration) அடைகிறது.  27 கி.மீடர் குகைக் குழாய்களில் மிகத் தணிந்த குளிர்நிலை (-271 C) திரவ ஹீலியம் நிரப்பி நிறுவப் படுவதால் மின் கடப்புக்கு ஏதுவாகிறது.  ஒளிக்கற்றை காந்தங்களால் வளைக்கப் பட்டு முடிவில் நான்கு பெரும் வெடிப்பரங்கில் (Four Large Chambers) மோதுகின்றன.  அவ்விதம் மோதும் போது பேரளவு வெப்பசக்தி உண்டாகி உஷ்ணம் பரிதியை விட 100,000 மடங்கு பெருகிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பெரு வெடிப்பு நிலைக்கு (Big Bang State) ஒப்பாக நிலவ விடுகிறது !  முடிவாக மோதலில் என்ன நிகழும் என்று ஆர்வமோடு விஞ்ஞானிகள் எதிர்நோக்கி உள்ள போது, பிரபஞ்சப் பெரு வெடிப்பில் எழுந்திருக்கலாம் என்று ஐயப்படும் “ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) எனப்படும் ஓர் அடிப்படைத் துகள் உண்டாகுமா என்பதைக் காணக் காத்துள்ளார்கள் !

Fig 1F Fundamental Particles

மோதும் புரோட்டான்களில் நேரும் விந்தை விளைவுகள்

மோதல் அரங்குகளில் உள்ள முப்புற வடிவுப் படமெடுக்கும் உளவுக் கருவிகள் (3-D Image Detectors) புரோட்டான் மோதல் சிதைவுகளைப் பதிவு செய்து புதிய அடிப்படைத் துகள்கள் எழுகின்றனவா வென்று நுட்பமாக ஆராய்ச்சி செய்யும்.  பரமாணு உடைப்பு யந்திரம் தன் உச்சத் திறனில் ஒரு வினாடிக்குப் பில்லியன் மோதல்களை உண்டாக்கும் வல்லமை கொண்டது.  தரை மட்டத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அரங்கில் 3000 மின்கணினிகள் உடனே அவற்றை 100 மோதல்களாகச் சுருக்கி விளக்கமாக ஆராய்ச்சி செய்ய உதவும்.  அவற்றின் விளைவுகள் உலகில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பட்டு விளக்கமாக ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப் படும்.

அட்லாஸ் என அழைக்கப்படும் நான்கு வெடிப்பு அரங்குகள் (Atlas Collision Chambers) 46 மீடர் நீளம், 25 மீடர் உயரம் உடையவை.  அவற்றின் எடை 7000 டன் (ஏறக் குறைய ஐ·பெல் கோபுரத்தின் எடை Eiffel Tower) !  அவற்றில் உள்ளவை 3000 கி.மீடர் மின்சார வடங்கள் (Cables) !  50,000 டன் காங்கிரீட் ஊற்றிக் கட்டிய அரண் கோட்டை அவை !

Fig 1H God's Particle Higgs Boson

10 மணி நேரம் சோதனை செய்தால் ஒளிக்கற்றை அயான்கள் 10 பில்லியன் கி. மீடர் தூரம் (நெப்டியூன் கோளுக்குப் போய் மீளும் தூரம்) பயணம் செய்யும்.  உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் 120 மெகாவாட் மின்னாற்றல் உபயோகிக்கும் !  அதைக் கட்டி முடிக்க ஆன செலவு 6 பில்லியன் டாலர் (2008 டாலர் மதிப்பு) !

2008 செப்டம்பரில் யந்திரத்துக்கு நேர்ந்த பெரும் விபத்து !

வெற்றிகரமாக முதல் சோதனையைச் செய்து காட்டிய செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் 2008 செப்டெம்பர் 19 ஆம் தேதி நீடித்த கால நிறுத்தத்தை உண்டாக்கும் ஒரு பழுது ஏற்பட்டு உலக விஞ்ஞானிகளைப் பெருத்த ஏமாற்றத்தில் மூழ்க்கி விட்டது ! ஒரு மின்சார இணைப்பு துண்டிப்பால் பிணைப்பு உருகிக் குளிர்ச்சித் திரவ ஹீலியம் கசிந்து “பேரளவு காந்தத் தணிப்பு” (Massive Magnetic Quench) நிகழ்ந்ததால், குளிர்ச்சியில் இருந்த 100 மின்காந்தக் கடத்திகளில் (Superconductor Magnets) உஷ்ணம் உடனே 100 டிகிரி C ஏறிச் சிதைந்து விட்டன !  செர்ன் குகையில் ஒரு டன் ஹீலியம் கசிந்த உடனே தீயணைப்புப் படை வரவழைக்கப் பட்டது.  உஷ்ணம் தணிந்த நிலையில் சோதனையின் போது கண்காணிக்கப்பட்ட 16 மைல் அடித்தளக் குகை சூடாகத் தாமதமானதால் ஆய்வாளரும், தீயணைப்பாளரும் சீக்கிரம் உள்ளே நுழைய முடியவில்லை !  அதற்குள் நூறு காந்தக் கடத்திகள் உஷ்ணப் பெருக்கால் எரிந்து கரிந்து பெருஞ் சேதத்தை விளைவித்து விட்டன !

Fig 1G ATLAS Collision Chamber

எரிந்த காந்தச் சாதனங்களை வெளியில் எடுத்துப் புதிய காந்தங்களை இடுவதற்கும் அபாயம் மீண்டும் நேராதிருக்க மாற்றங்கள் செய்வதற்கும் ஓராண்டு காலம் கடந்து விட்டது !  16 மைல் வட்டச் சுற்றின் எட்டுப் பகுதிகளில் மொத்தம் 1600 மின்காந்தக் கடத்திகள் (Superconducting Magnets) அமைப்பாகி இருந்தன !  அவற்றில் ஒரு பகுதிக் காந்தக் கடத்திகள் (எண்ணிக்கை : 100) அனைத்தும் சிதைந்து விட்டன !  LHC பரமாணு உடைப்பு யந்திரம் முழு வேகத்தில் பறக்கும் ஒரு விமானத்துக்குத் (737 போன்ற) தேவையான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. திடீரென அத்தகைய அளவு ஆற்றல் கசிந்து வெளியேறினால் பெருத்த சேதாரம் விளைந்தது !  தீயணைப்புப் படையினர் பாய்ந்து சென்று கட்டுப்படுத்த முன் வந்தாலும், வெடிப்பு ஏற்பட்டு உலோகமும், கரித்தூசியும் பரவின ! யாரும் உள்ளே புகுந்து விபத்தின் முழுக் கோர விளைவுகளை அறியவே வெகு நாட்கள் ஆயின !  1.5 பில்லியன் டாலர் அமைப்புச் சாதனத்தில் 400 மீடர் பகுதி சிதைந்து போனது !  குளிர்ப் பிரதேசத்தில் அமைக்கப் பட்ட செர்ன் பூத விரைவாக்கியைக் குளிர்காலத்தில் இயக்கும் திட்ட மில்லாததால் குளிர்காலம் போய் 2009 ஆண்டு ஏப்ரலில் மீண்டும் செர்ன் இயங்கத் துவங்கும் என்று அறிவிக்கப் பட்டாலும் மேலும் 6 மாதம் கடந்து போனது.

Fig 1A CERN Starts its First Experiment

பூத விரைவாக்கி யந்திரத்தின் வெற்றிகரமான முதல் சோதனை

2008 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெனிவாவுக்கு அருகில் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள பூதகரமான செர்ன் வட்ட விரைவாக்கி அரணில் முதன்முதல் புரோட்டான் கணைகளை ஒட்டிய ஒளிவேகத்தில் எதிர்த்திசையில் முட்ட வைத்துத் துகள் பௌதிக விஞ்ஞானிகள் (Particle Physicists) வெற்றிகரமாக முதற்படிச் சோதனையைச் செய்து காட்டினார்கள். அந்த ஆராய்ச்சி மூலம் இதுவரைக் காணாத பிரபஞ்சத்தின் மூலாதாரத் துகள், “ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) என்பது விளைந்திடுமா என்று விஞ்ஞானிகள் தேடினர். அப்போது சோதனையில் எழும் பேரளவு உஷ்ணத்தில் பெருஞ் சிதைவு ஏற்பட்டு வெடித்துக் கருந்துளை ஒன்று உருவாகிப் பூமி விழுங்கப்பட்டு விடும் என்று சில விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து ஆராய்ச்சியைத் தடை செய்ய முயன்றார்கள் ! ஆனால் அப்படி ஒரு கருந்துளை உருவாகா தென்று பிரிட்டீஷ் விஞ்ஞான மேதை ஸ்டீ·பென் ஹாக்கிங் ஊக்கம் அளித்தார் !  மேலும் விஞ்ஞானிகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஹிக்ஸ் போஸான் அந்தச் சோதனையில் எழாது என்றும் ஸ்டீ·பென் ஹாக்கிங் நூறு டாலர் பந்தயம் வைத்தார் !  செர்ன் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் துகள் எழாமல் போவதே நல்லதென்றும், அதனால் மற்ற விந்தையான விளைவுகளை உண்டாக்க வழிவகுக்கும் என்று ஹாக்கிங் விளக்கினார். இறுதியில் வெற்றி பெற்றவர் ஹாக்கிங்தான் !  புரோட்டான் ஒளிக்கணைகள் மோதிக் கொள்ளும் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் மூலாதாரத் துகள் ஏனோ விளைய வில்லை !

Fig 2 CERN Control Room -1

முதல் சோதனையில் நல்ல செய்தி என்ன ? பூதப் பரமாணு உடைப்பி எனப்படும் [Large Hadron Collider (LHC)] செர்ன் (CERN) விரைவாக்கிச் சோதனையில் சிக்கலில்லை ! பிரச்சனை யில்லை ! தவறுகள் எதுவும் முதலில் நேரவில்லை !  அசுரக் கருந்துளை உருவாகி நமது அருமைப் பூமியை விழுங்க வில்லை ! அத்துடன் ஹாக்கிங் எதிர்பார்த்தபடி ஹிக்ஸ் போஸான் துகளும் காணப்பட வில்லை !  உலகத்திலே திறமையுள்ள விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாய்க் காத்திருந்து செர்ன் இப்போது மீண்டும் 2009 செப்டம்பரில் ஆரம்பிக்கப் பட்டுத் துவங்கியுள்ளது.  இந்த அசுர யந்திரம் பிரபஞ்சப் பெருவெடிப்பைப் போல் குகைஅரங்கத்தில் உருவாக்கி நுட்ப வினாடியில் வெளியாகுபவை எத்தகைய நுண்துகள்கள் (Tiniest Particles) என்று கருவிகள் மூலம் உளவப் படும்,  புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எதிர்த் திசையில் மோத வைத்துப் பரமாணுக்களின் (Sub-Atomic Particles) வயிற்றை உடைத்து இன்னும் புலப்படாமல் ஒளிந்துள்ள பிரபஞ்சத்தின் நுண்துகள்கள் எவையென்று தெளிவாய் அறியப்படும் !

Fig 4 Particle Accelerators

(தொடரும்)

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
13 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
14 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
15. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
16 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
17 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
18 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
19 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
20 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
21 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)

******************
jayabarat@tnt21.com [November 5, 2009]

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

நவம்பர் 2, 2009

வைகைச் செல்வி

வனம்பாடி, வானம்பாடி, வனராணி

சி. ஜெயபாரதன், கனடா

இது நமது பூமி!
இது நமது வானம்!
இது நமது நீர்வளம்!
முப்பெரும் சூழ் வளத்தையும்
துப்புரவு செய்வது,
நமது பணி!

இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங்களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளை உலகப் பேரவைகளில் உரையாற்றிக் காட்டி வருபவர், வைகைச் செல்வி. ‘கூடுவிட்டுக் கூடு பாயத் தனிப் பறவைக்குக் காலெதற்கு ? சிறகெதற்கு ? ‘ என்று கேட்கும் வானம்பாடி வைகைச் செல்வி, தமிழகத்தில் திருச்சி, நெய்வேலி, மதுரை, சிவகாசி, சென்னை, கரூர், கோவை, திருப்பூர், நாகை போன்ற தளங்களுக்கு அடிக்கடிச் சென்று சூழ்வெளி மாசுப் பிரச்சனைத் தீர்வுகளில் பங்கெடுத்தும், பெண்டிர் உரிமை பற்றிக் கருத்தரங்குகளில் உரையாற்றியும் வருகிறார். தனிப் பறவையாகக் காலில் சக்கரங்கள் பூட்டிக், கைகளில் இறக்கைகளைக் கோர்த்து, இப்பணிகளைக் கனிவோடும், பூரிப்போடும், அயராது, அலுக்காது செய்து வரும் வைகைச் செல்விக்கு இணை எவருமில்லை. ‘செவிக் குணவில்லாத போது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘ என்ற வள்ளுவர் வாக்குப்படி வைகைச் செல்வி, ஊழியப் பணிபுரிந்து ஓய்வான வேளைகளில், எழுத்துப் படைப்புகளில் ஈடுபட்டுக் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வருகிறார். பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்று, வைகைச் செல்வியின், ‘அம்மி ‘ என்னும் ‘கவிதைகள் நாற்பது ‘ புதுயுகத் தமிழ்க் காவியப் பூங்காவில் பூத்த வாடா மலர்கள்!

வைகைச் செல்வியின் சாதனைகள்

வைகைச் செல்வி என்னும் புனைப்பெயர் போர்த்திய ஆனி ஜோஸ்ஃபின் மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரையில் மேற் படிப்பை முடித்து மூன்று கல்லூரிப் பட்டங்கள் [M.A.(Eng.Literature), M.Com., M.B.A.] பெற்றவர். அவற்றிலும் திருப்தி அடையாமல் மேலும் சிறப்பு நுட்பங்களைப் பயின்று வேறு சில மேல்நிலை டிப்ளோமாக்களையும் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) வாங்கியவர். ‘கற்றது கடுகளவு! கல்லாதது கால் பந்து அளவு ‘, என்னும் கல்வி நெறியை மேற்கொண்டு, முனைவர் பட்டப் படிப்புக்குத் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] தன்னைப் பதிவு செய்திருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

பள்ளிபருவம் முதலே கவிதைகள் எழுதத் துவங்கி கடந்த 20 வருடங்களாகக் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள் சிலவற்றிலும், உலக சூழ்மண்டலப் பேரவைகள் சிலவற்றிலும், தமிழ்நூல்கள் வெளியீடுக் கூட்டங்களிலும் பெண்டிர் நிலை மேம்பாடு பற்றிப் பலமுறை உரையாற்றி யிருக்கிறார். 2005 ஜூன் முதல் உதயமாகி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும், ‘வானகமே, வையகமே ‘, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் ‘இது நம்ம பூமி ‘ என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கெளரவ ஆசிரியராகப் பணிபுரிந்து அதற்கு மெருகேற்றி, ஒளியேற்றி வருகிறார்.

2002 டிசம்பரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இவரது முதற் காவியம், ‘அம்மி ‘ என்னும் கவிதைத் தொகுப்பு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக மதிப்புப் பெற்றுள்ளது! பணிபுரியும் பெண்டிர் பாலியல் சீண்டல் இன்னல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி வைகைச் செல்வி ‘பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு ‘ என்னும் ஒரு நூலில் எழுதியுள்ளார். தமிழகத்தின் சில கவிஞர்களைச் சூழ்வெளியைப் பற்றி எழுத வைத்து ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2003 இல் அந்நூல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொண்டுள்ளது. அவரது கதைகளை எல்லாம் ஒன்று திரட்டிக் ‘கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும் ‘ என்னும் தலைப்பு நூலைக் காவ்யா பதிப்பகம் 2004 டிசம்பரில் வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டில் ‘ஊழியப் பணிபுரியும் பெண்டிர் படும் பாலியல் சீண்டல்கள் ‘ பற்றி அவரது கைநூல் ஒன்றும் வெளியானது.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2002 ஆண்டில் வைகைச் செல்வியைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பரிசும் அளித்தது. சிறந்த பெண் எழுத்தாளியாகச் சக்தியின் 2003 ஆண்டுப் பரிசும் அவருக்குக் கிடைத்தது. திருப்பூர் லயன்ஸ் கிளப் 2003 இல் அவரைப் பாராட்டிச் சிறந்த பெண் கவிஞர்ப் பரிசைக் கொடுத்தது. 2006 பிப்ரவரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய, ‘சூழ்வெளியும், சுத்தமய நிலைப்பாடும் ‘ [Environment & Sustainability] எனப்படும் உரை அரங்கில் அவர் வாசித்த, ‘பாரதத்தில் சூழ்வெளிப் பாதுகாப்பு நிலைப்பாடு ‘ என்னும் கருத்துரைப் பத்துச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திருச்சி ஸெயின்ட் ஜோஸஃப் கல்லூரி ஏற்படுத்திய, ‘விஞ்ஞானத் தமிழ் தேசீயச் சொற்பொழிவு விழாவில் ‘ [National Seminar on Scientific Tamil] வைகைச் செல்விக்குச் ‘சூழ்வெளிக் கவிஞர் ‘ [Environmental Poet] என்னும் சிறப்பு விருதை அளித்துள்ளது. திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் அவரை வெற்றிப் பெண்மணி என்று பாராட்டிக் கெளரவித்துள்ளனர். 2006 மார்ச் 8 ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள ‘மாதர் பொதுத்துறைப் பணியகம் ‘ வைகைச் செல்விக்குப் ‘பெண் சாதிப்பாளி ‘ என்னும் விருதைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர், ‘வைகைச் செல்வியின் கவிதைகளில் பெண்ணியம் ‘ பற்றிய ஒரு தெளிவுரையைத் [Thesis] தயாரித்துள்ளார். 2004 டிசம்பரில் நேர்ந்த தெற்காசிய சுனாமிப் பாதிப்பு பற்றிய ஓர் ஆய்வுரையை, 2005 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி முதலாண்டு நினைவுப் பூர்த்தி விழாவில் வைகைச் செல்வி உரையாற்றி வெளியிட்டார். மாதம் ஒருமுறை அண்ணா பல்கலைக் கழக வானொலி நிலைய ஒலிபரப்பில், ‘சக்தி அறிவாயடி ‘ என்னும் வழக்கமான வாயுரையில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சூழ்வெளி மாசுகள் சம்பந்தமாகக் குட்டித் திரைப்பட வெளியீடுகள் சிலவற்றைத் தயாரித்துள்ளார். அவரது கவிதைகளைச் சென்னைப் பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளன. பாமரக் கலைக்கூத்து மூலம் [Folk Arts] தமிழகம் எங்கும் பரப்பும் பயிரின, உயிரினச் சூழ்வெளிக் கலாச்சாரக் குழுப் [Eco Cultural Awareness Team] படைப்புநரும் அவரே.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வைகைச் செல்வியின் சிறப்புப் பணியை மெச்சி அவரை மூன்று மாத மேற்பயிற்சி பெற டென்மார்க் தேசத்திற்கு 2001 ஆண்டு அனுப்பியது. அந்த மகிழ்ச்சியான பயிற்சி சமயத்தில் நோய்வாய்ப்பட்ட அவரது அருமைத் தந்தையார் சென்னையில் எதிர்பாராது காலமாகி, வைகைச் செல்விக்கு அதிர்ச்சி அளித்து ஆறாத துயரை, நெஞ்சில் அழியாதவாறு பதித்து விட்டது!

வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

மதுரை வைகை ஆற்றங்கரையில் துவங்கி, சென்னைக் கடற்கரை வரையில் என் கவிதைகள் பயணம் செய்கின்றன என்று வைகைச் செல்வி தனது ‘அம்மி ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முச்சங்கம் வைத்து, முத்தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்களின் பாதம் பட்ட மதுரை மாநகரில் பிறந்து, வளர்ந்து, கன்னித்தமிழில் புலமை பெற்று, ஒளவையார், ஆண்டாள் வழித்தோன்றலாய் அரியதோர் காவியம் படைத்ததில் பெருமிதம் கொள்கிறார். வெள்ளமோ அல்லது வெற்று மணலோ எது காணப்பட்டாலும், தன் கற்பனைக்கு ஊற்றாய் இருந்ததோடு பெரும்பாலான துயரங்களையும், ஏமாற்றங்களையும் கவிதைகளாக மாற்றயதே அந்த வைகை ஆறுதான் என்று மனதின் உள்ளோட்டத்தைக் காட்டிக் கொள்கிறார்.

பல்வேறு வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், போர்க்கள அவசரத்தில் ஏற்படும் வேதனைக்கு நடுவில் எவ்வித முயற்சியும் செய்யாமலே பல சமயங்களில் தானாக முகையவிழ்ந்த வரிகளே கவிதைகளாகப் பரிணமிதுள்ளன என்று சொல்கிறார். பூவைத் தொடுவது போல், பூவாசத்தை எப்படி ஈர்ப்பது ? கவிதை வரிகளுக்குள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒருமணம் இழையோட வேண்டும் என்று கூறுகிறார் வைகைச் செல்வி. சொல்ல நினைப்பதைச் சொல்ல இயலாமல் ஏற்படும் நெஞ்சுத் துடிப்பைப் போல், கவிதையின் தாக்க மிருக்க வேண்டும். நிரம்ப மெய்ப்பாடும், சிறிது கற்பனையும் கலந்தவை அவரது கவிதைகள். வைகைச் செல்வியின் படைப்புக்கு வித்திட்டவை வானவில், மழை, இலைகள், மரங்கள், மலர்கள், காதல், கனவு, காட்டு வெளி, காலம், நட்பு, சினம், மோதல், அநீதி, சுயநலம், அடிமைத்தனம், பதவி உயர்வு, பொய்வாசம் போன்றவை. அம்மி கூடத்தான் அவரது கவிதைப் பூக்களில் ஒன்றாக மலர்கிறது. படைப்புகள் உள்பட தனது எல்லா முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் சேர்ந்து உழைத்து, காயம் பட்டபோது மனதைத் தேற்றி, போராட்டங்களில் தனக்கு உதவியாகத் தோள் கொடுத்து, மேம்பட்ட கல்வியையும், இறைப்பற்றையும் ஊட்டி, உன்னத நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்தவர், அருமைத் தந்தை திரு. ஆபிரகாம் ஞானமுத்து இஸ்ரேல் என்று தனது முன்னுரையில் போற்றுகிறார், வைகைச் செல்வி.

எது கவிதை ? என்ன செய்யும் கவிதை ?

கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு கவிதையும்… பல கவிதைகளும் ‘ என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல், வரிகள் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிக் கொண்டு உட்கருத்து விளங்காமல் சிக்கலானவை; படிப்போருக்குப் பொருள் மயக்கம் அளிப்பவை; வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார் வைகைச் செல்வி. கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோடிக் கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாகத் தாளமுடன் நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும். வெறும் சொற்களை மட்டும் சுடவிட்டுப் பட்டாசு போல் வெடிக்க விட்டால் பார்க்க விந்தையாகவும், வேடிக்கையாகவும் மனதைத் துள்ள வைக்கும்! ஆனால் அவை எல்லாம் ஒளியற்று விண்ணில் புகையாக மறைந்து, மண்ணில் குப்பையாக நிறைந்து மாசுகளாக மண்டிக் கிடப்பவை!

மரபில் விளையாடி
புதுமைப் பூச்சூடி,
நடந்த இளங் கவிதை
நவீனப் புயலில் சிக்கி விட்டது!….

நவீனத்தில், மேலும்
இடியாப்பச் சிக்கல்கள்!
மடக்கிய வரிகளுக்குள்
அடங்குமோ ஓர் கவிதை ?

என்று சுட்டிக் கேட்டபின் வைகைச் செல்வி தொடர்கிறார்,

பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துருக்கி,
வார்த்தை விதை ஒன்று,
மூளைக்குள் தெறிக்க,
முளை விட்டு உணர்வுக்குள்
கணுக் கணுவாய்ப் பயிர் வளர,

செங்குருதிப் புனல் பாய,
மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
மனசெல்லாம் சர்க்கரையாய்,
நெஞ்சுக் குழிக்குள்ளே,
இறங்கி வழிந்தோடி
உறங்கும் உயிர்ப் பந்தை,
(உசிப்பிப்)
புரட்டுவது கவிதை

என்று ஓர் அரிய விளக்கம் தருகிறார்.

எது கவிதை என்னும் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலிதுதான்: கவிதை என்பது,

உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

பொய்யுலகைக் கண்முன்னே காட்டுவது!
பூரணத்துவம் நோக்கிக்கை நீட்டுவது!
மெய்யுலகைத் தூண்டிலிட்டு மீட்டுவது!
மேம்பாட்டை மின்னல்போல் ஊட்டுவது!

கவிஞர் திலகம் புகாரியின் ‘அன்புடன் ‘ வலையிதழில் எழுந்த ‘எது கவிதை ‘ என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலுடன் பின்னாங்கு வரிகளைச் சேர்த்துள்ளேன்.

கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல். காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு. பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்! தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அவற்றின் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது! நேரமின்றி நோக்கும் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது!

மூச்சை எடுத்துக் கொண்டு கடைசியாக ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்துபோய்த் தொடர்ச்சி அறுபடுகிறது! முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது! அவ்விதச் சிரம மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக் கடலில் மூழ்கி எடுத்தெழுதிய சின்னஞ்சிறு முத்துக்கள்! உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்! உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்! பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது! அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் காவியக் கவிதைகள்! அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் வெறும் குட்டிக்கரணம் போடவில்லை! சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை! வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!

வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை. வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன! கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன! கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு சொல்கின்றன! புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை! காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகப் பதுங்கிக் கொண்டிருப்பதால்தான்! தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை; ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம். படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது கவிதைக் காவியம் படைக்கபட வில்லை!

வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை. கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன. கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன. வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் பிறருக்கு உபதேசிக்க வில்லை! ஒரு கவிதை சங்கை வாயில் வைத்துக் கொண்டு சிங்கம் போல் உறுமிக் கர்ஜிக்கும் போது அதன் சப்தம் செவிப்பறையில் விழுவதற்குப் பதிலாக அதைக் கிழித்துப் போட்டு மூளையில் பதியாமல் நழுவுகிறது. சொல்லாமல் சொல்லும் நெறியும், செய்யாமல் செய்த உதவியும் என்னாளும் மறக்கப் படுவ தில்லை. வைகைச் செல்வியின் வரிகள் வாழ்க்கை நெறியைச் சொல்லாமல் சொல்கின்றன. ஒவ்வொரு கவிதையும் அவரது மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. ‘அம்மி ‘ என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் மின்னல்போல் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது! ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது! சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது!

வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன! மெய்த்துவ வாழ்க்கை முறைகளை மெல்லிய நடையில் சொல்லுகின்றன. சில கவிதைகளில் முடிவில் வரும் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது! சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

பெண்மையும், விடுதலையும்

கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் வைகைச் செல்வி, ‘உள்ளே ஒரு வானவில் ‘ என்னும் கவிதையில்:

தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்,
இல்லையெனில்
மரண வேதனை!
தாழ் திறக்கா விட்டாலும்
மரண வேதனை!

அந்திப் பொழுதின் வானவில்!

பரிதி மறையும் போது செவ்வானின் சிவப்பொளி பட்டால், அந்திப் பொழுதின் வானவில் எந்த நிறத்தில் ஒளிக்கும்! நிச்சயம் ஏழு நிறங்களைக் காண முடியாது! வெண்ணிற ஒளி ஒன்றுதான் மழைத்துளிகளின் ஊடே நுழையும் போது பன்னிற வானவில் தோன்றும். செந்நிற ஒளியில் வானவில்லின் கண்சிவந்து போகும், கதவு திறக்கும் என்று காத்திருக்கும் மங்கையின் விழிகளைப் போல்!

பகலென்று தெரிந்தால்,
சிறகுகளை விரிக்கலாம்!
இரவென்று தெரிந்தால்
கூட்டுக்குள் ஒடுங்கலாம்!

அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
சில்லென்ற குளிர்காற்றும்,
சிங்காரப் பூமணமும்,
உன் முத்தம் தந்திடுமோ ?

கால மயக்கத்தில்
கண் விழித்துப் பார்க்கையில்
பகலா, இரவா ஏதும் புரியவில்லை!
அந்திப் பொழுதின் வானவில் ….

செந்நிறத்தில் மங்கிக் கலங்கிப் போயிருக்கும் மங்கையின் மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.

பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

பாரதத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்! காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன! ஆனால் இந்திய சமூதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்க வில்லை! உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே! அதுவும் யாருக்குக் கிடைத்தது ? பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே! மீதித் தொகையானப் பெண்டிருக்கு ? விடுதலைப் பதில் ஆடவரின் தடுதலை பெண்ணுக்குக் கிடைத்தது! பெண்களின் விடுதலை களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகள் ஆக்கப் பட்டார்! அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவருக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இவ்வுலகம் ஆடவரின் உலகம்! ஆடவர்களால் உண்டாக்கப் பட்ட உலகம்! ஆடவருக்காக உண்டாக்கப் பட்ட உலகம்! பாரத தேச வீடுகளின் கூரையைப் பிரித்துப் பார்த்தால் இப்போதும் பெரும்பான்மையான வீடுகளில், பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். பிறருக்குத் தெரியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் பல்லாயிரக் கணக்கான பாரதப் பெண்டிர், ஆடவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு அடிமைகளாய், சேடிகளாய்ப் பணிசெய்து மெளனக் கண்ணீர் விட்டு ஊமைகளாய் நெஞ்சுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள்!

அன்று

அடிமைச் சிறையில் இருந்தோம்.
காந்தியும், நேருவும், பட்டேலும், ….
பாரதியாரும்,
வீர சுதந்திரம் வேண்டிப்
(போராட)
(சிறைக்) கதவுகள் திறந்தன!
தலைமறைகள் கடந்தோட
(பெண்களாகிய) நாங்கள்,
இன்றும் சிறையில்தான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
சாவி
எங்களிடமே உள்ளது!

பாரத தேசத்தில் பூரண சுதந்திரம் அடைந்தவர் மெய்யாக ஆடவர் மட்டுமே! தேவையான மானிட உரிமைகளுக்குப் போராடி ஏமாற்றம் அடையும் பெண்டிருக்கு எப்படிக் கிடைக்கும் விடுதலை ? எப்போது கிடைக்கும் உரிமைகள் ? அடிமைப் பட்ட பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை படாரென்று உடைக்கவோ அல்லது பூட்டைக் கிளிக்கென்று திறக்கவோ அவரிடமே உறுதியும், சாவியும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவது அவரது புரட்சி மனதை வெளிப்படுத்துகிறது. ஆனால் வல்லமை பெற்ற ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடி, நெஞ்சுறுதியை நசுக்கி வருகிறது என்பது கட்டுரையாளர் கருத்து!

‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ? ‘ என்னும் கவிதையில் வாழ்வின் இன்ப துன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் கூறுகிறார். தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு, வெகு அழகாகக் கூறுகிறார்! வாழ்க்கையில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் அன்னிய ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது, உலவி வருவது முற்றிலும் தவறு; அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது! ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதோடும் தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனிதப் பண்பு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் [ 'தாயின் மடியில் '] கனிவாக வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

‘சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிபோம்! ‘

‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! ‘
‘செந்தீ யணைக்க நீருண்டு!
சினத்தீ யணைக்க யாருண்டு ?

‘மங்கையராகப் பிறப்பதற்குப் பெரும்
மாதவம் செய்திட வேண்டு மம்மா! ‘

என்று பாரதி பாடினார்.

ஆனால் வைகைச் செல்வி பெற்ற தாயைப் பார்த்துப் பெண்ணைப் பெறுவதற்கு நீ மாதவம் செய்யத் தேவையில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்! பெண்ணென்று உளவிப் பெண்கருவை நீக்கும் கண்ணிய மனிதர் வாழும் இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பதே பாபமாகக் கருதப்பட்டுப் பெண்டிர் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

என் தாயே! ..
என்னைப் பெற நீ
மாதவம் செய்திருக்கத்
தேவை யில்லை!
அந்தக் கூட்டத்தில்
எந்தன் பிரிய நண்பன் இருக்கிறான்.
பகற் பொழுதினிலேயே
அவனுடன் நானமர இயல வில்லையே!
(ஆனால்) இவ்விரவில்… ?
அவன் ஓர் ஆணாம்!
நானோர் பெண்ணாம்!
என் மனத்தின் ஆண்மை
யாருக்குப் புரியும் ?
ஆதாமுக்குப் பிறகு ஆடவனு மில்லை!
ஏவாளுக்குப் பிறகு பெண்டிரு மில்லை!
இது இங்கே யாருக்குப் புரியும் ?

நட்பு, சுமை, சுயநலம், மெளனம்!

‘நட்பு ஓர் அழகிய கண்ணாடிக் கிண்ணம்! அது ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்! ஆனால் எளிதில் உடைந்து ஒட்டாமல் போகும் கண்ணாடிக் கிண்ணம் ‘ என்று ஓர் இனிய சிறு கதையைத் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார் நமக்கு.

ஒரு முரட்டுக் குதிரை முட்செடி ஒன்றை மிதித்த பின் கூறுகிறதாம்: ‘தளிர்ச் செடியே! உனது முள் என் காலை யிடறிக் காயப் படுத்தியது; எனக்கு வலித்தது உண்மைதான்! ஆனால் அந்த முள்ளில்லா விட்டால், நான் உன்னைக் கடந்தல்லவா போயிருப்பேன், ‘ என்று தணிவாய்ச் சொன்னது.

குதிரைக் கால் நசுக்கிய முட்செடி கால்பட்டுக் கசங்கினாலும், கசிந்த இலைகள் ஒளியுடன் பலபலக்க, ‘குதிரையே! உன்னைத் தெரியாமல் குத்தி விட்டேன் நான். மன்னித்துவிடு என்னை ‘ என்று கனிவாய் சொல்லியது.

குதிரை வெட்கத்துடன் தலைகவிழ்ந்து, ‘தளிர்ச் செடியே! நானும் உன்னைத் தெரியாமல் மிதித்து விட்டேன், என்னை நீ மன்னித்து விடு ‘ என்று பணிவாய்ச் சொன்னதாம்.

இதுதான் நட்பு என்று தன் குட்டிக் கதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! அவனும் நானும் ஆணும் பெண்ணுமாக அல்லாமல், என்றென்றும் தோழர்களாய், அருகருகே நிற்கிறோம்! ஆயினும் எங்களுக்குள் ஓர் சிறு இடைவெளி, முகக்கண்களின் இடைத்தூரம், எமக்கு நடுவில்! அச்சிறு அகலத்திலே காலநதி கரை புரண்டோடுகிறது, ‘ என்று ஆண்-பெண் இடையே நேரும் புனித நட்பைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்! கணவனின் பிணைப்பிலோ, நண்பனின் உறவிலோ அல்லது ஆண்-பெண் நட்பிலோ பழக்க, வழக்க முறைகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது வெகு வெகு அபூர்வம்! பிரச்சனைகள் தீவிரமாய்ப் பற்றி எரியாமல் இருப்பதற்கு யாராவது ஒருவர் ஊமையாகவோ, செவிடாகவோ அல்லது குருடாகவோ இருக்க வேண்டும்! குதிரையும், முட்செடியும் எதிர் எதிரே நின்று தானிழைத்த தவறை உணர்ந்து வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்வது, ஒரு மகத்தான சமூகக் காட்சி! மெய்யான தம்பதிகளோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ யாரும் அவ்வித அமைதி வழியில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அபூர்வம்!

வாழத் தெரியாத தோழன் ஒருவனுக்கு, ‘மெளனம் ‘ என்னும் கவிதையில் பெண்ணொருத்தி ஓர் ஊசி போடுகிறாள். அவனுக்கு கடிதத்தில் என்ன எழுதுவது ? புறக்கணிக்கும் தன் மனதை எழுத்தில் தோழனுக்கு எப்படிக் காட்டுவது ? கண்ணெதிரே காணும் போது, உறவை முறிக்கப் போகும் பெண்ணொருத்தி எப்படி அதைத் தெரிவிப்பாள் ?

நானுனக்கு
என்ன எழுத வேண்டுமென்று
தெரியவில்லை!
ஆனால் (உனக்கு)
என்ன எழுதக் கூடாதெனத்
தெரிகிறது!

உன்னிடம் நான்
என்ன பேச வேண்டும் என்று
இதுவரையில் தெரிய வில்லை!
ஆனால் (உன்னிடம்)
என்ன பேசக் கூடாதெனத்
தெரிகிறது!

அதனால்தான் நீ
நேரில் இருக்கையில் பேசாமலும்,
தூரப் போய்விட்ட பிறகு
எழுதாமலும் இருக்கிறேன்!

இவ்விதம் வாழத் தெரியாத தோழன் மீது வாளெடுத்து வீசாமல், எளிய வாதத்தின் மூலமாக மெளன ஊசி போட்டு வெளியே தள்ளும் பெண்ணை எவராவது பார்த்ததுண்டா ? தோழனைக் காயப் படுத்தாமல், ‘போயொழி, திரும்பி வராதே ‘ என்று புறக்கணிப்பதை இத்தனை மென்மையாக, மெழுகு மொழியில் எந்தப் பெண்கவி சொல்லி யிருக்கிறார் ?

‘உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும், ‘ என்று கவிஞர் கண்ணதாசன் வெள்ளித் திரைப் படமொன்றில் பாடல் புனைந்தார். பிரியப் போகும் நண்பன் ஒருவன் தனது தோழி மீது பூவை வீசி விட்டாலும், பூவிலுள்ள முள் அவளது கண்ணைக் குத்தி விடுகிறது! அவன் அவளிடம் சொல்லாமல் போகிறான். பிரிவுத் துயரைச் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் மிருகத்தைப் போல் நீங்குகிறான். அதைக் கண்டு மனம் வருந்துகிறாள் ஒரு மாது! படிப்போர் நெஞ்சைத் தொடுகிறது, அவரது பாடலின் பரிவு வரிகளும், ஊசிமொழி நடையும்!

நண்பனே!

எந்நேரத்திலும், எதற்காகவும் நீ
என்னைப் பிரிந்து போகலாம்! அது
உன்னுடைய சுதந்திரம்!
பிறரைப் போல நீயும்,
என் மீது
கல்லெறியலாம்! ….

என்னைக்
காயப் படுத்தலாம்!
கூழாங் கற்கள் முதல்
பாறாங் கற்கள் வரை, எனக்குப்
பரிச்சயமே!
அன்பின் மிகுதியால்
பளிங்குக் கற்களை வீசியவரும் உண்டு!
ஆனால்
உனக்கு உரிமை அதிகம்..!

நண்பனே! நீதான்
கதவைத் திறந்து
(என்னை) எட்டிப் பார்த்தாய்!
ஆச்சரிப் பட்டாய்!
அன்பு காட்டினாய்!
முகம் தெரியாத போதும்,
பெயர் சொல்லி அழைத்தாய்!
பிறகென்ன ?
எல்லா வற்றையும், நீயே மூடலாம்!
ஆயினும்
நீ திறந்தது சாளரக் கதவுதான்!

யாரென்று அறிவதற்குள்
பிரிந்திட்டாய்!
கற்களை வீசியவர்
மத்தியில்
நீயோ பூவை வீசினாய்!
முள்ளொன்று
கண்ணில் தங்கி விட்டாலும்,
என்னில்
ஒருகணம் மென்மை (உணர்ச்சி)!
கண்ணிமைக்க மறந்தது
என் குற்றம்தான்!

என்னைப் போல் நிறமுடைய
அத்தூதனைத் தவிர
வேறெவனும்
எனக்குச் சொந்த மில்லை!
சொல்லாமல் பிரிந்திட்டாய்!
தண்ணிலவும், செங்கதிரும்
யார் அழைத்து வந்தன ?
யார் சொல்லிப் போயின ?
நீயும் பிரிந்து செல்லலாம்,
அது உன் சுதந்திரம்!

என்று கசப்பு மொழிகளை உதிர்த்து, நண்பனுக்கு நிரந்தர ஓய்வை அளிக்கிறார், வைகைச் செல்வி!

சினமென்னும் கொல்லியைப் பற்றிக் கூறும் போது, ஒளவை மூதாட்டி போல் முதுமொழியில் கூறுகிறார்:

செந்தீ யணைக்க நீருண்டு!
சினத்தீ யணைக்க யாருண்டு ?

என்று தீப்பறக்கச் சொல்லும் சொற்கள் மனப்பாறையில் அழுத்தமாகப் பொறிக்கப் படுகின்றன!

எரிமலை வெடிக்க
அக்கினிப் பொறிகள்
சரமாய்ச் சொரியும்! …
மல்லிகை பந்தலில்
அனற் கங்குகள்! …
வெள்ளை உள்ளம்,
மெல்லிய தளிர்க்கொடி எல்லாம்…
கோபத் தீயில் ..
உருகி யோடும்! …
அறிவு மயங்கி, ஆன்மா மறைய
உணர்ச்சிக் கொதிப்பில்… ஆட்டம் போடுது
மனித மிருகம்!

வேரை அழிக்கும் செந்தீக்கு
உன்னில் அசையும்,
உயிர்ப்பூத் தென்றலைச்
சுவைத் தறிய வழியேது ?

தொழிற் துறைகளில் பெண்டிர் பணியாற்றும் போது, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் என்பது பாலைவனக் கனவுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதையில் வருந்துகிறார். ஆடவருக்கு ஊழியப் பயிற்சி அளித்த மூத்த அனுபவப் பெண்ணுக்கு முன்பாக, அதே வாலிபர் பதவி உயர்வு பெற்று அதே பெண்ணுக்கு அதிபதியாக ஆவது, ஆடவர் உத்தியோக உலகில் வழக்கமாக நேரும் அதிர்ச்சி நிகழ்ச்சிகள்.

ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும்… கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் ….!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க ….
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!

காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள் ….
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் ….
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னையும் மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!

என்று மனவேதனைப் படுகிறார்!

‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு ? அதே அந்தப் பெண்களுக்குத்தான்!

‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்!

என் வீட்டு ரோஜாப்பூ
யாருடைய வீட்டு மேஜையிலோ ?
நான் கோர்த்த மணிமாலை
எந்தப் பொம்மை கழுத்திலோ ?
என் தோட்ட மருதாணி
யாருடைய விரல்களிலோ ?
என் வீட்டுத் தென்னங் கீற்று
யார் வாசல் தோரணமோ ?

ஆனால்
யார் யாருக்கோ வரவேண்டிய
வலியும், துக்கமும்
ஒட்டுமொத்தமாய்
(வருவது)
எனக்கு மட்டும்தான்!

பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.

காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே!

என்னைப் பார்த்து
ஊர் கூடிச் சொல்கிறது:
‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘
அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
என் தட்டு மட்டும்
தாழ்ந்தி ருக்கிறது!
நான் மறைந்து விட்டேனாம்!

கட்டைகள் மிதக்கையில்,
கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!….
மலைதான் என்னை இடறிற்று,
கூழாங்கற்கள் அல்ல! ….

ஏறிக் கொண்டிருக்கையில்
ஏணியை எடுத்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்பேன்!

மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.

ஆணவத் தேரேறி

(என்னை)
ஒடுக்கப் பார்த்தாலும்,
கண்ணாடிக் குப்பிக்குள்
(வெடித்து விடும் பெண்மை எனும்)
புயல்காற்று ஒடுங்குமோ ?

என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.

‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.

அச்சம் எனக்கில்லை!
தாழ்வும் எனக்கில்லை!
எதிராளி பலம் பார்த்து (நான்)
போருக்கு வரவில்லை!
இந்நெருப்பில் கைவைக்க
எவர் வந்தால் என்ன ? ….

தொடர்ந்து விழுகின்ற
சம்மட்டி அடிகள்…
உலைக் களத்தில் புரள்கையில் ….
வலியின் கீற்றுகள்
உடலெங்கும் பரவும்!
சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
பறக்கையில்
எனக்கெதற்கு மரக்கால்கள் ?

என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.

ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ?

‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!

உணர்ச்சி முழக்கங்கள்

தீக்குச்சி போலாகி,
மனத்தை உரசுகையில்
(கனல் பற்றி எரிந்து விளைபவை)
ஆறாத ரணங்கள் அம்மா! ….
சமுதாய இருட்டிற்கு
வெளிச்சம் தேவைதான்!

அதற்காக
உன்னை நானும்,
என்னை நீயும்
எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? ….
ரயில்பெட்டி எரித்துச்
சவப்பெட்டி செய்யலாமா ?

என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.

புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.

இனிய இந்தியனே!
பிறனை நேசித்துப்
பிறனைப் புரிந்து கொண்டால்
(உறுதியாய்) நமக்குள்
ஓர் வல்லரசு தோன்றாதா ?

இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.

‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்!

உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா ? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு ? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா ? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று ?

இப்ப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! …தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா ? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!

பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!

‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ? தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.

பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.

‘சென்ற நிமிடம் வரை
நீயும் நானும் காதலித்தது….
உண்மை!
(திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)

இப்போது நீ சொல்கிறாய்,
அண்ணன் ஒரு தண்டச் சோறு,
அவன் வேண்டாமாம்! ….
அணியணியாய்க் கழற்றி
(பொன் நகைகள்)
அத்தனையும் விற்று
என்னைப் படிக்க வைத்த
என்னருமை அம்மா வேண்டாமாம்!
எட்டு விரல்களைத்
தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
என் அக்காள் வேண்டாமாம்!
ஓய்வு பெற்ற பின்னும்
ஒன்னே கால் லட்சத்தை
அன்பளிப்பாய்த் தந்த
(என்னருமை)
அப்பாவும் வேண்டாமாம்!

‘அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே!

கேளடா அறிவு கெட்டவனே!
கல்யாணம் ஆகிவிட்டால்,
கல்லாகி விடுவேனா ?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கை யெனில்
எனக்குப்
பந்தக்கால் தேவை யில்லை!
சொந்தக்கால் போதுமடா!

என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.

வனம்பாடி, வானம்பாடி, வனராணி

வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது. வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி!

‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.

நிலையற்ற இன்பத்தில்
நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
போதை தெளிந்த பின்னும்
புறப்பட மனமில்லை! ….
போதி மரத்தின் கீழ்
பொழுதெல்லாம் தூங்கியதால்
‘நான் ‘ மட்டும்
என்னில் விசுவரூபம் எடுத்தது!
நீதியும், நேர்மையும் ….
ஓங்கி அழைத்தாலும்,
மரத்தின் நிழலே
சுகமாய்ப் போயிற்று!

‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா! தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்!

நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
மனித நாற்றுகளை
மெளனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!

நாள்தோறும் பேருந்து,
வாகனங்கள், வண்டிகளின்
கரிய புகையால்
வெளியை நிரப்பும்! ….
ஓங்கியுயர்
மரங்களை வெட்டி விட்டார்.
மழையும்தான் பொய்க்காதோ
மண்ணுலகம் தன்னில் ? ….

ஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்
சாலைகள் வைத்தார்!
ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
மாணவருக்கு
அங்கே இலவசமாய் அளிக்கப்படும்!

மனிதரால் மாசுபட்ட
வாயு மண்டலத்துக்கோர்
முகமிருந்தால்
அம்மைத் தழும்புகள்
நிறைந்திருக்கும்! ….
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
சத்தமின்றி வருவதால்
யாருக்கும் கவலை யில்லை!
ஊருக்கும் புரிய வில்லை!

சுற்றுப்புறம் என்பது
எங்கோ யில்லை!
என்னைச் சுற்றி …. உன்னைச் சுற்றி
நம்மைச் சுற்றித்தான்.

சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிப்போம்!

வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி! மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.

‘மரங்களே!… ஓ மரங்களே! ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.

மரங்களை நேசிக்கிறேன்,

மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
இனிய வசந்தத்தில்
இலைகள்
பகலில்.. பல்வேறு நிறத்தில்
மெல்லிய மஞ்சலில், ..
அரக்கு வண்ணத்தில்
கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
கண்சிமிட்டிச் சிரிக்கும்!
என்னை அருகே அழைக்க ..
தவம் செய்கின்றன.
அருகிருக்கையில்

தாழக்கிளை பரப்பி, (என்னைத்)
தொட்டுவிடத் துடிக்கும்!
தூரத்தி லிருந்தாலும்
கரமசைத்துக் கூப்பிடும்! ….
என்னைப் போல
நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்!
இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
என்னை நேசிக்கின்றன!

அதனால் சொல்கிறேன்,
மரங்களை வெட்டாதீர்!
வெட்டுகையில்
இதயத் துடுப்பு எனக்கு
மெல்ல, மெல்லக் குறையும்!

இறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து. அவர் கிறித்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவ ராயினும், அவர் தன்னை ஓர் இந்துவாகக் கருதிக் கொண்டு, இறைவனிடம் வரம் கேட்கிறார். வனராணி ஆயினும் வனாந்திரத்தில் பல்லாண்டுகள் முனிவர் போல் தவம் செய்யாது ஓர் வரம் கேட்கிறார்.

இறைவா! ஒரு
வரம் வேண்டும் எனக்கு.
மரமாய் மாற வரம் வேண்டும்!

அந்த மரத்தில்
ஆயிரம் கரங்கள் வரும்!
எதற்கு ? … (கனிகள் பறிக்க)
ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
காக்கை, குருவி தேடி வரும்!
கவிதை சொல்லக் கூடு கட்டும்!

வெட்ட வெளியில் நின்றாலும்,
பட்ட மரமாய் ஆனாலும்,
பூங்கதவாய் உருவெடுப்பேன்!
வெட்ட வரும் மனிதனை
விரட்டிப் பிடித்து
உயரே தொங்க விடுவேன்!

ஏ மனிதா!
நீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,
நீ கட்டிய ஆலைப் புகையால்
மூச்சு முட்டும்!
நீ ஓட்டும்
வாகனக் கரிப் புகையால்,

வாயு மண்டலம் மாசுபடும்!

நானோ
தென்றல் காற்றைத் தவழ விட்டுக்
கொண்டல் தொட்டு
மழை பெய்து,
சுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்!
இறைவன் படைத்த பூமியிது!
இதைத்
தூசுபடுத்த, மாசுபடுத்த
எவர்க்கு மிங்கே உரிமை யில்லை!

மரத்தை வளர்த்திடுவாய்,
பரம்பொருள் கட்டளை
இது வென்பேன்.

(மரத்தை)
வெட்டிப் போட எத்தனித்தால்,
கட்டிப் போடுவேன்
காலமெல்லாம்!

கடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்! ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.

காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது ?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!

‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.

‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை! ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.

உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து எங்கே போனாய் ? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது! அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ? ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை! மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.

என் கூடு எதுவெனத் தெரிய வில்லை!

‘கல்லும், வில்லும்…புல்லாங்குழலும் ‘ என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.

எல்லாப் பறவைகளும்
கூடுகளுக்குப் போய்விட்டன!
அந்தி மயங்கும் வேளையில்
தனிப் பறவையாய் அலைந்தும்
என் கூடு எதுவென
எனக்குத் தெரிய வில்லை!
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?

அத்துவானக் காட்டில்
வேடரைத் தவிர யாருமறியேன்!
உன் கையில்
வில்லையும், கல்லையும்
எதிர்பார்த்தேன்!
(ஆனால் நீ)
புல்லாங் குழலுடன்
வந்தாய்!
கூடு விட்டுக் கூடு செல்ல
காலெதற்கு ? சிறகெதற்கு ?
கலைந்த கூடுகள்
காணாமல் போய்விட்டால்,
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார் ?

நானுனக்குப் பல்லக்குத் தூக்கியல்லவா ?

‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!

நான் உன் நாட்டுக்குத்
திரும்பி வந்த அகதி!
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றைச் சுவாசிக்கிறேன்.
ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
ஒரு குவளை நீருக்கும்
கையேந்தி நிற்கையில்
கட்டிப் பிடித்தென்னை
(நீ) முத்த மிடுகையிலே,
நெஞ்சக்குழி
கண்ணீரால் நிரம்பியது!

உன் சன்னதியில்
நின்றாலும்,
தூபக் காட்டும்
(தீபப் பூசாரி) அல்ல நான்!
நாயகன் பொற்பாதம் கழுவிட
வாசற் படியோரம்
(என்னேரமும்)
காத்திருக்கும் அடிமை நான்!

என் அரசே!
கம்பீரமாக நீ உலா வருகையில்,
உன்னோ டிருப்பதற்கு
கட்டாயத் தகுதி….
(என்ன எனக்கு ?)
பட்டத்து ராணியா ?
ஆமென்று சொல்லாதே!
(பாமரனே!)
பல்லக்குத் தூக்கி யன்றோ ?
எந்நாளும் நானுனக்கு ?

அடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:

பக்கத்தில் வந்தால் …
பல்லிளிக்கும் பச்சோந்தி…!
விரட்டிப் பயனில்லை!
ஒன்று பலவாய்ப் பெருகி
கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
போராடிப் போராடி
எதிர்க்கப் பலமின்றிச்
சடலம் சரியும்!
காக்கையும் காத்திருக்கும்,
நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

பெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.

கேட்பாரற்ற தொரு
அழுக்கு மூட்டையாக,
வேண்டாத குப்பையாகத்தான்
ஒரு மூலையில் கிடக்கிறேன்!
கப்பலிந் சுமை
மிதமிஞ்சிப் போனாலும்
என்னை.. நடுக் கடலில்
எறிந்து விடாதே! …
பிணைப்புக் கயிறை
அறுத்து விடாதே!

‘கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ ? ‘

என்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.

பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர்! ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான்! ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்!

ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:

மனிதன் படைக்கப் பட்டதோ
தேவ சாயலில், அவன்
உருமாற்றம் ஆனதோ
ஹிட்லராய்,
முசோலினியாய்!
இன்றவன்
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை!

மனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்!

கடவுளும், மனிதனும்
ஒன்றிணைந்த அற்புதம்,
என்பதை நினை வூட்டவே
இன்று [கிறிஸ்மஸ் தினத்தில்]
மறுபடி பிறக்கிறது,
பெத்லகேம் குழந்தை.

என்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.

அம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.

இறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள்! ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்! நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.

தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++

வைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,
[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை: 600 024

+++++++++++++++
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 10, 2006)]

சீதாயணம் (முழு நாடகம்)

அக்டோபர் 30, 2009

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

தீண்டப்படாத சீதா

~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

++++++++++++

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

+++++++++++

முதலாம் காட்சி:

சீதா நாடு கடத்தப்படல்

****

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவும் மில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று

நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனித்ததை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

****

(இரண்டாம் காட்சி தொடரும்)

தகவல்:

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001]

3. The Wonder that was India By: A.L. Basham [1959]

Picture Credits: Kishan Lal Verma

காட்சி இரண்டு

வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்


[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.

நேரம்: பகல்.

பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]

[அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!

சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க மேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?

இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?

சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டுவிட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கியனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!

இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!

சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?

இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.

சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?

இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!

சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?

இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.

சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?

இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!

சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!

இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!

சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).

இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.

[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]

மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.

சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.

இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.

[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]

++++++++++

Scene -3 Seetha with Twins

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு


இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.

நேரம்: மாலை

அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனர் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்! வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது! சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

***********

Scene -4 Ashvametha Yaga

காட்சி நான்கு

அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்

இடம்: அயோத்திய புரி அரண்மணை

நேரம்: மாலை

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.

[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிட்டுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.

அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. 'பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு இராம வேந்தருக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தை காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும் '.போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]

சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.

Scene -4 Twins catch the Horse

லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை விட்டுப் போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!

[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!

[எச்சரிக்கை அம்பைக் கவனாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்குகிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

************

Scene -5 Rama meets the Twins

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

இடம்: காட்டுப் போர்க்களம்.

நேரம்: மாலை

பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.

அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது!

[வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்]

அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப்போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்தன! இராமப் பிரபுவின் கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியன் நான்தான்!

Scene -5 Twins hit Bharathan

லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதி நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்! ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!லசா: என் பெயர் லசா! இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டையர்! அன்னை ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் ? [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்! இராமன்: [சிரித்துக் கொண்டு] உங்கள் யுத்த தர்மத்தை மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடரும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், ஏன் நீங்கள் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார். நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? சிறுவருடன் போரிடக் கூடாது எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது முறையன்று.

லவா, குசா: அது சரி மாமன்னரே! எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்ய பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்படார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும் அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையைக் கொண்டு வராதீர்கள். … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள்!

இராமன்: அதில் ஒரு சிக்கல் உள்ளது! நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை. அவசியம் தேவை. அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை! அவருக்கு நேரமுமில்லை! அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம். அவர் பெரிய பராக்கிரமசாலியாம்! அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … ஆனால் எங்கள் தாயை அவர்தான் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்! கடும் கல்நெஞ்சக்கார மனிதர்! அவர் எங்கள் தாயைக் காட்டுக்குத் தனியே அனுப்பியது தர்மமாகாது.

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அவரைக் காண நேரிட்டால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து] இந்த அம்புகளால் அவரது நெஞ்சைப் பிளப்போம்! …. [சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று அப்போது சீதை ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] …. அதோ எங்கள் அன்னை! எங்களை நோக்கி வருகிறார். …. [சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப்பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா தாயைத் தொடர்கிறார்கள்]

Scene -5 Twins tie Hanuman

சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ? உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்! [லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து சீதாவைக் கும்பிடுகிறான்]

அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.

லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!

+++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

Scene -6 Valmiki with Rama & Twins

இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.

நேரம்:  மாலை வேளை

பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது.

(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)

லவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.

இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது  உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும்  அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை  ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற  எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ?  போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது!  எடுங்கள் உங்கள் வில்லை!இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம்  அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம்  கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ?  எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை  குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!

Scene -6 Valmiki with Seetha & Twins

லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே  போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.)  வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள்  அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள்  கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள்  அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால்,  தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும்  தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத்  தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ?  எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான்  யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள்  பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத்  தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை  நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன்  எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக்  காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள்  தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள்  தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்!  [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத்  தயக்கமா ? உங்கள் புதல்வர் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது  வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர்  உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து]  பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என்  புதல்வர்களா ?

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு]  சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும்  தந்தைக்குக் குறைய வில்லையே!

Scene -6 Seetha left by Rama with Twins

வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன்,  விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே!  அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என்  ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள்.  லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக்  கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ  அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும்  இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன்  முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று  வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல்,  சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின்  எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன்  எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில்  பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச்  சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார்  ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும்  எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க  எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக்  கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள்  அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ  சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன்,  அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன்  பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை  போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை  இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின்  இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி  இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா  விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன்  அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன்  அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து  விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை  அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து  இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக்  கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ?  தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று  பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!

லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின்  கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன்,  இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)

வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம்  முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி  இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல  வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல  வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.

சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட  ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ  விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள்  ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள  வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!

வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு  அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள்  உன் மடிமீது விளையாட வேண்டியவர், இப்புழுதி மண்ணில் விளையாடிக்  கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு  அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய்  உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை  கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும்  எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ?  எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.

சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி  யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.

பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை  கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.

இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! லவா, குசா இருவரையும் நிச்சயம்  கூட்டிச் செல்கிறேன்.

இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவு, கண்ணியம்,  கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது  உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்தபோது ஜனக  மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும்  அறத்துடன் நடப்போம்.

லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால்  அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப்  போவதில்லை. இதுவரை தந்தைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக்  காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ?  தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல்  என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை  வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி  வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து  எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!

Scene -6 Rama leaves Seetha with Twins

இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல  நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள்  வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!

லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர்  எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டார்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள்  கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.

வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை  சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி  இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.

இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை!  ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது  ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை  எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான்  மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி  என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும்  அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை  பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக்  கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?

சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ  தீண்டப்படாதவள் ஆகிவிட்டேன்!  அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை  விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா  நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய  மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று  அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று  நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல  எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத  சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள்  பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்!  (கோவென்று அழுகிறாள்)

லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை  விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்!  சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள்  பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி  விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு  குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால்  உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண்  தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும்  தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?

சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல்  மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர்  கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை!  நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல்,  அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில்  இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும்,  என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள்  சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே  காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி  மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது!  ஆனால் அவரது நெஞ்சில் யாரில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக  பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச்  சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும்  போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது  தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட  அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக  அரண்மனையில் காட்சி தரக் கூடாது!

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை  அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ  விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர்  விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத  பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர்  என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை  ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை!  அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப்  போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த  பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான்  முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு  மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு  அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம்  அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில்  போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான்  கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப்  பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி  என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு  மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை  யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி!  கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும்  இடம்பெற முடியவில்லை!

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு  என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி!  மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப்  போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற  மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத்  துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த  வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள்  வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன்.  மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! ..  ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப்  பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில்  இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை  ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ?  நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு  தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று கனவு கூடக்  காணவில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு  விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட  அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப்  பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவைச் சிறைத் தண்டனை,  பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில்  அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி! என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன  மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில்  என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே  வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே  இருக்கட்டும்.

பரதன்: அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்!  அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி  வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே  பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்! பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்!  உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக்  கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும்  புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க  வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம்  இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே  விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால்  தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத்  திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால்  உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும்  வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க  அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப்  போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன  இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள்  புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று அழைத்துச்  செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம்  என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்!  அப்போது எல்லாரது பிரச்சனைகளும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை  எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) ….  அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு  வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை  வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து  விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு  காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!..  நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே  நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப்  பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான்  தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … [வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக்  குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க  ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாறையில் அடிபட்டு  அவளது ஆத்மா பிரிகிறது].

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக  வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான்  நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது  ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம  கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை  சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான்.  இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி  அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப்  பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர்  துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய  உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்!  வாழப் பிறந்தவர் நீங்கள்!

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும்  உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள்  நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை  வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தமன்  என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு  மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு  பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர்  துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?

Scene -6 Seetha kills herself

[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன்,  அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி  சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின்  துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா,  குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

(நாடகம் முற்றிற்று)

********

சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை


பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல  மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச்  சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும்  பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல்  கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப்  பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத்  தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும்  புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான  அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில்  எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல்  மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன்  அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த  தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்  போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன்  வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து  மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர்  புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும்  இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது  வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப்  பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த  தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட  அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம்  பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை.  கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத  நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப்  பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத  வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில்  அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச  பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும்  தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப்  பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும்  பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்  மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள்  காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல்  இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து  கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித்  தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற  காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல்  நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை  இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.தெய்வத்தைத்  தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று  சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க  வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய்  கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி,  கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத்  தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும்  பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை  எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின்  அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே,  வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி  யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை  மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க  வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச  பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து  இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை  நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில்  நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான்.  பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான்.  இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக்  கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன்  எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம்  செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும்  பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும்,  சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ  அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக்  குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர்,  விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம  கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில்  யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை.  அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன்,  இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி  முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை  திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின்  புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி  அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது  வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை  ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத  ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும்  தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய  பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று  கருதவும் இடமிருக்கிறது.

இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும்  பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று  மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச்  சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை  என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின்  அவதாரப் பணி முடிந்துவிட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு  இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட  வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில்  இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக்  காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின்  முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக  வளர்ந்து, மனிதனாகவே வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கருத்து!

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில்  இரட்டையர் பிறந்து இளைஞரான சமயத்தில் தந்தை இராமனைச் சந்திக்கிறார்கள்.  பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன் சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும்,  சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக்  கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண  கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர்  பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி  வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக  மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப்பட்டது! இந்த நாடகத்தில் வரும்  இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்  படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை!  தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும்  கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக சீதாயண  நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த  அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதுகிறேன். காட்டில்  தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு  ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய  இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது  என் கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில்  வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து.  பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக்  கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு  உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி  மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க்  கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி  முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி  வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர  வால்கள் ஆகியவற்றை வடிகட்டி நீக்கி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக்  கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக படைத்தால் இராம கதை இனியதாய்,  எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று  எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும்,  வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய நபராக  இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும்,  தெளிவாகவும், மெய்யானதாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச்  சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க பரதன் இளையவனை  அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக்  காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை  தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன்  மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார்  படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான்  அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றிலிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.  கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை  மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை  இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்!  காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக்  குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் போதிக்கும் முக்கிய பாடம், இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்;  அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர்  புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய  புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில் கோயில் எழுப்புவது வட நாட்டில்  மதப்போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் மக்கள்  கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமன் எந்த  இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது,  பிரச்சனையான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம  பக்தர்கள் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான  கேள்வி!

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

**************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 30,  2009)]

பரிதி மைய நியதியை நிலை நாட்டிய காபர்னிகஸ்

அக்டோபர் 29, 2009

Fig 1 Quotation of Copernicus

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா


முடிவாகச் சூரியனைப் பிரபஞ்சத்தின் மையத்தில் வைப்போம்.  முழுப் பிரபஞ்சத்தின் சீரிணைப்பு அமைப்பாலும் அதில் சீராக இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதாலும் நாம் கண்களை விழித்துக் கொண்டு நோக்கும் போது மெய்ப்பாடுகள் நமக்கு எதிர்ப்படுவதால் இவ்விதம் எடுத்துரைக்கப் படுகிறது.

நிக்கலஸ் காபர்னிகஸ்

மதத்திற்கு எதிரான கோட்பாடு என்று முதலில் குற்றம் சாற்றப் பட்டு, முடிவில் மூட நம்பிக்கை என்று தள்ளப் படுவது, புதிய மெய்ப்பாடுகளுக்கு ஏற்படும் வழக்கமான தலை விதி !

தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley]


ஐரோப்பிய மதாதிபதிகளின் ஆதிக்கம், அதிகாரம், அடக்குமுறை!

1616 ஆம் ஆண்டு ரோமா புரியில் ஐந்தாம் போப்பாண்டவர் பால் [Pope Paul V] நூல் பதிப்பு ஆசிரியர் ஒருவருக்கு கடுமையான ஓர் கண்டன அறிக்கையை வெளியிட்டார்!  ‘நிகோலஸ் காபர்னிகஸ் எழுதிய’அண்டக் கோள்களின் சுற்றுக்கள்’ [Revolutions of the Heavenly Globes] என்னும் நூலின் நியதியை உமது செய்தித்தாள் வெளியிட்டிருப்பது, எமது கவனத்திற்கு வந்துள்ளது! பரிதி பிரபஞ்ச நடுவில் அமர்ந்திருப்பதாகவும், பூமி உள்பட மற்ற கோள்கள் அதைச் சுற்றுவதாகவும், அந்த நியதி அறிவிக்கிறது!  படைப்பின் கருத்தை எடுத்துரைக்கும் பைபிளைப் பின்பற்றும் மதக்கோயில் உபதேசத்தை அந்த நியதி நேரடியாக எதிர்க்கிறது! தோற்ற அடிப்படைகளைக் கூறும் வேதநூல், பண்டைய டெஸ்டமன்ட் [Book of Genesis] பூமிதான் பிரபஞ்ச மையம், சூரியன் இல்லை என்று தெளிவாகக் கூறுகிறது!

Fig 1A Ptolemy Earth Centered System

பைபிளை அவமதிக்கும் அந்நூல், இன்றிலிருந்து படிக்க படாத நூலாக ஒதுக்கப் பட்டிருக்கிறது! அந்த நூலை ஆதரிப்போர், கிறிஸ்துவ மதத் துரோகியாகக் [Heresy] கருதப்பட்டுக் கடும் தண்டனைக் குள்ளாவார் என்று அறிவிக்கிறோம்! மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்பது நன்றாய் உமது நினைவில் இருக்கட்டும்!  இவ்வறிப்பைக் கேள்விப் பட்டதும், நீவிர் இனிமேல் காபர்னிகஸின் கருத்தை உமது செய்தித் தாளில் ஒருபோதும் பதிப்பிக்காது, உமது தவறைத் திருத்திக் கொள்வீர் என்று உறுதியாக நம்புகிறோம்’.

புரட்சி மூட்டிய காபர்னிகஸின் புதிய நியதி புறக்கணிப்பு!

1543 ஆம் ஆண்டில் மரணப் படுக்கையில் அவதியோடிருந்த காபர்னிகஸ் கையில் அவர் எழுதிய ‘அண்டக் கோள்களின் சுற்றுக்கள்’ என்னும் நூலின் முதற் பிரதி அளிக்கப் பட்டது! ‘பரிதி மைய நியதியை’ வலியுறுத்தி 1530 இல் ஆக்கிய நூலைக் கிறித்துவ மடாதிபதிகளின் எதிர்ப்புக்கும், பலியீட்டுக்கும் அஞ்சி, காபர்னிகஸ் அச்சிடாமலே வைத்திருந்து, தான் இறந்த பின்புதான் அது வெளியிடப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்! மறைவாக அந்நூல் ஜெர்மனிக்கு எடுத்துச் செல்லப் பட்டு, நூரம்பர்கில் [Nuremberg] அவரது பாதிரி நண்பர், கெய்ஸ் ஆஃப் குல்ம் [Bishop Giese of Kulm] என்பவர் உதவியால் 1543 இல் பதிப்பானது! ரோமாபுரி மடாதிபதிகள், காபர்னிகஸ் நூலைப் பல நூற்றாண்டுகள் தடை செய்து, கி.பி.1616 முதல் 1835 வரைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்தனர்! டாலமியின் பிழையான ‘பூமையக் கோட்பாடை ‘ ஐரோப்பிய மதாதிபதிகள் சுமார் 1500 ஆண்டுகளாகப் பழைய பைபிள் வேதமாகக் கடைப் பிடித்து வந்தார்கள்! பைபிள் கருத்தை நிராகரித்துக் காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடை ஆதரிப்போரை மடாதிபதிகள் சிறையில் இட்டனர்! சித்திரவதை செய்தனர்! ஏன் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினர்!

Fig 1B Copernican Solar System

பிரபஞ்சத்தில் சூரியனை நடுவே கொண்டு மற்ற அண்டங்கள் சுற்றி வருகின்றன என்னும் காபர்னிகஸின் கோட்பாடைப் பின்பற்றியவர் நான்கு வானியல் மேதைகள்!  அவரில் கிறித்துவ மதாதிபதிகளின் நேரடிச் சினத்துக்கு ஆளானவர் மூவர்! காபர்னிகஸ் இறந்த பின் மூன்றாண்டுகள் கழித்துப் பிறந்த டென்மார்க் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)], ஐந்தாண்டுகள் கழித்துப் பிறந்த இத்தாலிய ஞானி  கியோர்டானோ புருனோ [Giordano Bruno (1548-1600)], 21 ஆண்டுகள் கழித்துப் பிறந்த  இத்தாலிய மேதை காலிலியோ [Galileo (1564-1642)], 28 ஆண்டுகள் கழித்துப் பிறந்த  ஜெர்மன் கணித மேதை ஜொஹான் கெப்ளர் [Johannes Kepler (1571-1630)]. பரிதி மைய நியதியை ஆறு தொகுப்புகளில் விளக்கிய காபர்னிகஸ் தனது புதிய நூலை வெளியிட முடியாது தவித்தார்! அடுத்து அக்கோட்பாடை விருத்தி செய்த புருனோவை இத்தாலிய மத வாதிகள் கைது செய்து, மதத் துரோகி என்று குற்றம் சாட்டி 1600 இல் உயிரோடு எரிக்கப் பட்டார்! காலிலியோவும் இத்தாலிய மதாதிபதிகளால் கைதி செய்யப் பட்டு, நான்கு தரம் விசாரணைக் குள்ளாகி, சாகும் வரை மடச் சிறையில் வைக்கப் பட்டார்!  ஜொஹான் கெப்ளர் மதப்பலிக்குப் பயந்து வேலையை அடிக்கடி மாற்றிக் கொண்டு நகர் விட்டு நகருக்கு ஓடிக் கொண்டிருந்தார்!

1500 ஆண்டுகளாக மதப்பலிக்குக் காரண மாயிருந்த டாலமியின் ‘பூமையக் கோட்பாடு’ பிழையான தென்று கிறிஸ்துவ மடாதிபதிகளுடன் போராடிய காபர்னிகஸ், புருனோ, பிராஹே, கெப்ளர், காலிலியோ போன்ற மேதைகள் 300 ஆண்டுகளாக உயிர் கொடுத்தும், உயிர் காத்தும், உயிர் பிழைத்தும் வந்துள்ளார்கள்!

Fig 1C the Zodiac Astrology Chart

வானியலே பண்டைய மாந்தரின் பூர்வீக விஞ்ஞானம்!

6000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய ஈராக் நாட்டில் வாழ்ந்த சுமாரியன் பாதிரிகள் [Sumerian Priests] சூரிய சந்திர கோளங்களையும், வானவெளிக் காட்சிகளையும் வழிபட்டு வந்திருக்கிறார்கள்! சூரிய சந்திர கிரகணங்கள் [Solar & Lunar Eclipse] வரும் போது பயந்து, வால்மீன்கள் [Comets] தோன்றும் போது மிரண்டு தீவினை வருமோ வென்று அஞ்சினார்கள்! கால நகர்ச்சி முன்னேறி வருவதைக் கணக்கிட, வானத்தை நோக்கிக் கண்பட்ட அறிகுறிகளையே பின்பற்றி வந்தார்கள்! அனுதினமும் நேரத்தை, நாட்களை அறிய சூரியனின் உதயம், உச்சிப் பொழுது, மறைவு ஆகியவை பயன் பட்டன. சந்திரனின் அமாவாசை, பெளர்ணமியைப் பின்பற்றி மாதக் கணக்கைக் குறிப்பிட ஏதுவாயின. சூரியன் போக்கில் நிகழும் வசந்தம், வேனில், இலையுதிர், குளிர் போன்ற கால வேறுபாடுகள் வருடத்தை நிர்ணயம் செய்ய குறிக்கப் பட்டன. சூரிய மாதத்திற்கும் [365/12], சந்திர மாதத்திற்கும் [29 நாட்கள்] உள்ள வேறு பாடுகள் கிரீஸ், எகிப்து, அரேபியன், இந்தியா, சைனா ஆகிய தேசங்களில் ஒவ்வொரு மாதிரி திருத்தம் செய்யப் பட்டது! இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் சூரிய நகர்ச்சியை நிழலின் திசை, கோணம், நீளத்தை அளந்து, காலநிலைகளைக் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள்!

பாபிலோனியர்கள் பண்டை காலத்திலிருந்தே வானை நோக்கி விண்மீன்களைத் தொழுது வந்தவர்கள்! 2700 ஆண்டுகளுக்கு முன்பே, கிரகங்களின் நகர்ச்சிகளைக் குறித்து, ஜோதிடத் துறையை வளர்த்தவர்கள்! ஒவ்வொரு இரவிலும் கண்ணுக்குத் தெரியும் அண்டங்களின் இடத்தைக் களிமண் தட்டுகளில் எழுதி வைத்தார்கள்! அப்பதிவு விபரங்களிலிருந்து, எந்தக் கோள் எப்போது வரும், இரண்டு அல்லது மூன்று கோள்கள் எச்சமயம் கூடும் போன்ற நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கும் திறமை பெற்றார்கள்! சுமார் 18 ஆண்டுகளில் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது வரும் என்ற அளவுக்கு அவர்கள் புள்ளி விபரங்கள் குறித்து வைத்துள்ளார்கள்! அந்தக் காலத்தில் வானியலும், ஜோதிடமும் ஒன்றாகவே கருதப் பட்டன! 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின், வானியல் தூய விஞ்ஞான மாக மாறியதும், ஜோதிடக் கலை அற்று விடப் பட்டது!

Fig 5 Jantar Mantar Observatory

கிரேக்க ஞானிகளின் பண்டைய வானியல் கருத்துக்கள்

பண்டைக் காலத்திய கிரேக்க ஞானிகளின் சித்தாந்தக் கருத்துக்கள் வானியல் விஞ்ஞானம் வளர பல வழிகளில் அடிகோலின. பாபிலோனியன், எகிப்திய முனிவர்கள் வானியல் கருத்துக்களை வெளிப்படுத்தாது, தமக்குள்ளே மறைத்து வைத்திருந்தனர்!  அதே சமயம் ஞானப் பித்தர்களான கிரேக்க வேதாந்திகள், தர்க்கம் புரிந்தோ அன்றிப் பேரவைகளில் விரிவுரைகள் ஆற்றியோ, தம் கருத்துக்களை வெளிப்படையாகப் பறைசாற்றினர்! வானவெளி அண்டங்களையும், எண்ணற்ற விண்மீன்களையும் பல்லாண்டுகள் உற்று நோக்கி, கண்ணோட்டக் கருத்துக்களையே கோட்பாடுகளாக வெளியிட்டனர்! முக்கியமான கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus  (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் முதலில் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun- centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்!

அடுத்து, கிரேக்க கணித மேதை எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவு, ஆரம், சாய்வு ஆகியவற்றை முதலில் கணித்தார்! பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, அது 24,000 மைல் என்று கணக்கிட்டார்!  மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis], அத்துடன் சூரியனின் உயரத்தை வானில் ஒப்பிட்டு, பூமியின் விட்டத்தை 7850 மைல் என்று 50  மைல் துல்லியத்தில் கணித்தார்!

Fig 2 The New Solar System

அரிஸ்டாடில், டாலமியின் பிழையான பூமையக் கோட்பாடு

பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் குரு கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில்  [Aristotle (384-322 B.C.)] கண்ட பிரபஞ்சம் இதுதான்: வெங்காயம் போன்று அடுத்தடுத்த ஏகமைய வட்ட அடுக்குகள் [Concentric Circular Layers] கொண்ட அமைப்பைக்  கொண்டது, பிரபஞ்சம்! நடுவே பூகோளம் நிலையாக இருக்கிறது. பாறையான உட்கருவின் மேற்தளத்தின் மீது நீர், காற்று, அனல் மண்டலம் அடுக்கடுக்காக உள்ளது.  பூமியியைச் சுற்றியுள்ள ஒரு கூண்டில், நிலா உலவி வருகிறது. அக்கூண்டுக் குள்ளே வானவில், எரி விண்மீன்கள், வால்மீன்கள் போன்றவை வந்து மறைகின்றன! நிலவுக்கு அப்பால் உள்ள கோள கூண்டுகளில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் வட்ட வீதிகளில், சீரான வேகத்தில், என்றென்றும் சுற்றி  வருகின்றன! அவை யாவற்றையும் தாண்டி கோடான கோடி விண்மீன்கள் விண்வெளிக் கோளத்தில் நிலையாக அமைந்துள்ளன! இந்த பிரபஞ்ச அண்டங்கள் யாவும் ஓர் ‘தெய்வீக ஆளுநர்’ [Divine Mover] நேரடி ஆட்சியின் கீழ் இயங்கி வருகின்றன!  விண்மீன்கள் அமைந்த புறக்கூண்டு [Outer Sphere] ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றி வரும். அப்போது அந்நகர்ச்சி மற்ற கூண்டுகளுக்கும் ஒப்பாகத் தொடர்கிறது.

Fig 3 The Copernican Solar System

கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க ஞானி டாலமி [Ptolemy] அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth-centered] அமைப்பான பிரபஞ்சத்தைக் கடைப்பிடித்தார்! டாலமி எழுதிய ‘மாபெரும் வானியல் ஞானி’ [The Great Astronomer], அல்மகெஸ்ட் [Almagest] என்னும் இரண்டு நூல்களில் அவரது கோட்பாடு விளக்கப் பட்டிருக்கிறது. டாலமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்மீன்களைக் கண்டு குறிப்பிட்டுள்ளார். பூமியே பிரபஞ்சத்தின் மையமானது! அது நகலாமல் நிலைத்து நிற்கிறது! எல்லா அண்டங்களும் பிரபஞ்சத்தின் மையத்தை [பூமி] நோக்கி விழுகின்றன!  பூமியை நடுவாக வைத்து நிலவு, புதன், வெள்ளி, பரிதி, செவ்வாய், வியாழன், சனி எனக் கூறப்படும் அந்த வரிசையில், வட்ட வீதியில் சீரான வேகத்தில் சுற்றி வருகின்றன! அடுத்து அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள்கள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அவ்வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு! அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு, வேதநூல் பைபிளிலும் இடம் பெற்றது!

Fig 7 Giant Sundials

பூர்வீக  இந்தியாவின் வானியல் விஞ்ஞான மேன்மை

கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம்.

முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி

1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலசத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

Fig 9 Jantar Mantar at Delhi

கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.  ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500/57,753,336 = 27.396) துல்லியமாகக் கணித்தார்.

அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை !

யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களைக் அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.  இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

Fig 8 The Samrat Yantra

18 ஆம் நூற்றாண்டில் இந்திய வானியல் ஆராய்ச்சி

ராஜஸ்தான் ஜெய்பூரைத் தலைநகராக வைத்து 1727-1734 ஆண்டுகளில் அரசாண்ட ராணா இரண்டாம் ஜெய்சிங் ஜெய்பூர், டெல்லி போன்ற ஐந்து இடங்களில் வானியல் ஆய்வுச் சாதனக் கருவிகளை அமைத்தார்.  அவற்றில் ஜெய்பூரில் உள்ளதே எல்லாவற்றிலும் பெரியது.  அவையே ஜந்தர் மந்தர் (Jantar Mantar) எனப்படும் வானளவுக் கட்டடக் கருவிகள் (Architectural Astronomical Instruments).  ஜந்தர் என்றால் கருவி என்று பொருள்.  மந்தர் என்றால் கணிப்பு என்று அர்த்தம்.  ஜந்தர் மந்தர் என்றால் கணிப்புக் கருவி என்று சொல்லலாம்.  அந்தக் கருவிகள் இந்திய ஜோதிட நிபுணருக்கும் பயன்படும் மதச்சார்பான கணிப்பாக உதவின.

இந்த வானோக்குக் கட்டடக் கருவிகள் பருவக் கால நேரங்கள், கிரகண (Eclipse) அறிவிப்புகள், சுற்று வீதிகளில் நகரும் விண்மீன்களைக் குறிப்பிடுதல், கோள்களின் சாய்வுக் கோணங்களை அளத்தல், சூரிய நகர்ச்சியைத் தொடர்ந்து கணித்து நோக்குதல் போன்ற   வானியல் தகவல் சேகரிக்கும் 14 வரைவியல் சாதனங்கள் (Geometrical Devices)  கொண்டவை.  ஸம்ரத் யந்திரம் (Samrat Yantra) என்பது 90 அடி உயரமுள்ளது.  எல்லா வற்றிலும் பெரியது.  அதனுடைய நிழற் சாய்வு அனுதின நேரத்தைக் காணப் பயன்படும்.  அதன் உச்சியில் உள்ள “இந்து சத்திரி” (Hindu Chhatri or Small Cupola) கிரகண (Eclipse) வருகையையும், மழைப் பருவக் கால நெருக்கத்தையும் காட்டுகிறது ஓர் அரங்க மேடையாக உள்ளது.

Fig 6 The Samrat Yantra

பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்த காபர்னிகஸ் நியதி!

1473 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] போலந்து நாட்டில் தோர்ன் என்னும் நகரில் பிறந்தார். வியாபாரியான அவரது தந்தையார் ஜெர்மன் குடியினன் ஆகிய ஸ்லாவ் [Slavak] நாட்டினர். தாயார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். போலந்து, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் மேதை காபர்னிகஸ் தம்மினத்தவர் என்று உரிமை கொண்டாடின! பாதிரியான அவரது தாத்தா காபர்னிகஸ் சிறந்த கல்வி பயில வேண்டுமென விழைந்தார். 1491 இல் கிராகோவ் பல்கலைக் கழகத்தில் [Krakow Academy] நான்கு வருடங்கள் படித்து மருத்துவம், சட்டம் பயில, இத்தாலிக்குச் சென்றார். 1497 இல் ரோமன் காதோலிக் சட்டம் [Canon Law] படிக்கப் பொலோனா பல்கலைக் கழகத்தில் [University of Bologna] சேர்ந்தார். கணிதப் பேராசிரியர், டாமினிகோ நோவாரா [Domenico Novara] இல்லத்தில் காபர்னிகஸ் தங்கி இருந்தார்.

வானியல், பூகோளம் ஆகியவற்றில் ஆர்வம் எழக் காபர்னிகஸைத் தூண்டியவர், பேராசிரியர் நோவாரா. இருவரும் சேர்ந்து வானில் விண்மீன்களை நோக்குவதும், சந்திர கிரகணத்தை ஆராயவும் செய்தனர். டாலமியின் நூல் ‘மகத்தான வானியல் அமைப்பு’ [The Great Astronomical System], மற்ற கிரேக்க ஞானிகளின் வானியல் கொள்கைகளை  நோவாரா அவருக்குப் புகட்டினார். காபர்னிகஸ் டாலமியின் பூமையக் கோட்பாடைப் படித்து, அதை ஒப்புக் கொள்ளவில்லை! ஆனால் டாலமிக்கு முன் வாழ்ந்த மேதை அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus] கூறிய பரிதி மையக் கருத்து, மெய்யாகத் தோன்றியது!  1500 ஆம் ஆண்டில் ரோமா புரியில் வானியலைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது, காபர்னிகஸ் இருவிதக் கருத்துக்களைப் பேசினார்! மருத்துவப் படிப்பைத் தொடராது, வெறும் மதச்சட்டத்தில் [Canon Law] டாக்டர் பட்டம் வாங்கிப் போலந்துக்கு மீண்டார். அங்கே பிரெளன்பர்க் என்னும் நகரில் கிறிஸ்துவப் பாதிரியாக நியமனம் ஆகிப் பணி புரிந்து வந்தார்!

Fig 4A Copernican System

காபர்னிகஸ் 1517 இல் ஆரம்பித்து அவரது வானியல் நூல் ‘அண்டக் கோள்களின் சுற்றுக்கள் ‘ 1530 இல் எழுதி முடிக்கப் பட்டது. அவரது கோட்பாடு இதுதான்: ‘பூமி தினமும் தன்னச்சில், தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொண்டு, சூரியனையும் ஓராண்டில் சுற்று வருகிறது. அச்சமயம் பூமி பம்பரம் போன்று, தலை சாய்ந்து [Wobbles] ஆடுகிறது! பிற அண்டங்களும் பரிதியை நடுவாகக் கொண்டு சுற்றி வருகின்றன. பிரபஞ்சத்தின் மெய்யான மையம் சூரியன், பூமி இல்லை! பரிதியை விண்கோள்கள் வட்ட வீதியில் சீரான வேகத்தில் [Uniform Motion in Circular Orbits] சுற்றி வருகின்றன’ என்று ஆணித்தர மாகக் கூறினார்!

‘பிரபஞ்சம் ஒரு கோள வடிவானது! மாபெரும் கொள்ளளவு [Volume] உடையது ஒரு கோளமே! முழுமை பெற்றது கோளம்! ஒட்டு இணைப்புகள் அற்றது கோளம்! அதுவே சூரியன், சந்திரன், விண்மீன்கள் அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் தகுதி உடையது! பூமியும் கோள வடிவானதே. அதன் ஒவ்வொரு புறமும் அதன் மையத்தை நோக்கி தன்னை இழுத்துக் கொள்கிறது. வளர்பிறைத் தேய்பிறைக் காலங்களில் பரிதியின் ஒளி வீசிப் பூமியின் நிழல், நிலவின் மீது விழும் போது, வளைவாகத்  தெரிகிறது! பூமி கோளமாக இருந்தால்தான், அதன் நிழலும் வளைந்து அவ்வாறு காணப்படும்’.

‘அண்ட கோளங்களின் நகர்ச்சி ஒழுங்கானது! சீரானது! வட்ட வீதியில் செல்வது!  அந்நகர்ச்சி முடிவில்லாதது! அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன ‘ என்று விளக்கமாகக் கூறினார்!  டாலமி கூறிய பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth-centered] உறுதியாக நம்பிய ஐரோப்பிய மதாதிபதிகள், புதிய காபர்னிகஸ் கோட்பாடைக் கேள்விப் பட்டுக் கொதித்து  எழுந்தனர்! ஜெர்மன் மதாதிபதி மார்டின் லூதர் [Martin Luther (1483-1546)] காபர்னிகஸை ‘வானியல் விஞ்ஞானம் முழுவதயும் தலைகீழாக மாற்றும், முட்டாள்’ என்று திட்டினார்!

Kepler

உயிரோடு எரிக்கப் பட்ட உன்னத மேதை புருனோ!

புனித மாது ஜோன் ஆஃப் ஆர்க் [Joan of Arc] பிரென்ச் பாதிரிமாரால் மதப் பகையாளி [Heresy] எனக் குற்றம் சாற்றப் பட்டு மரக் கம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்கப் பட்டது போல், இத்தாலியப் மதாதிபதிகளால் கியோர்டனோ புருனோ மத எதிரி என்று பழி சாற்றப் பட்டு, 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இல் எரிக்கப் பட்டார்! புருனோ புரட்சிகரமான தனிப்பட்ட கருத்துக்களைத் தைரியமாய் வெளியிட்ட ஒரு மறுமலர்ச்சி வேதாந்தி; கற்பனைச் செழிப்பில் காவியம் படைத்த கவிஞர். அவரது படைப்புகளின் சிறப்பு அவர் உயிரோடு எரிக்கப் பட்டதால் உன்னத மகிமை பெற்றது! ஆனால் உயர்ந்த படைப்பாள விஞ்ஞானியின் ஆயுள் 52 வயதிலே, அநாகரிக மற்ற மத வெறியர்களால் வெட்டிவிடப் பட்டது!

கியார்டனோ புருனோ 1548 ஆம் ஆண்டு இத்தாலியில் நேபில்ஸ் நகருக்கு அருகில் நோலா [Nola near Naples] என்னும் இடத்தில் பிறந்தவர்! புருனோவின் முரண்பாடான ‘பரிதி மையப் பிரபஞ்சக் கோட்பாடு’ தடை செய்யப் பட்டதால் 1576 இல் இத்தாலியை விட்டு ஓடினார்! ஜெனிவா, டெளலஸ் [Toulouse], பாரிஸ் போன்ற நகரங்களில் திரிந்தார்! இறுதியில் பிரென்ச் பிரதிநிதி [Ambassidor] பாதுகாப்பில் லண்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கினார். அப்போது பிரிட்டிஷ் கவிஞர் ஸர் பிலிப் ஸிட்னியுடன் [Sir Philip  Sidney] பழகினார். புருனோவின் ‘எல்லையற்ற பிரபஞ்சம், உலகங்கள் ‘ [On the Infinite Universe & Worlds (1584)], ‘காரணம், கொள்கை, ஐக்கியம் ‘ [On the Cause, Principle & Unity (1584)] என்னும் அரிய நூல்கள் அக்காலங்களில்தான் உருவாயின! அவரது ஆக்கங்கள் காலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன் ஆகியோரின் படைப்புகளுக்கு அடிப்படை யாகின!

Fig 10 Nicolaus Copernicus

புருனோவின் மகத்தான சித்தாந்தம்: ‘விண்வெளி எல்லை யற்றது! பிரபஞ்சத்தில் சூரிய மண்டலம், அதன் கோள்கள் போன்று மற்றும் பல ஏற்பாடுகள் உள்ளன! ஏன் ?  நம்மைப் போல் தெளிவுள்ள அல்லது நம்மை விட அறிவு மேம்பட்ட இனங்கள் கூட வேறு உலகங்களில் வாழக் கூடும்!’ என்று பறைசாற்றினார்! ‘எண்ணற்ற உலகங்களைக் கொண்டுள்ள எல்லை யற்ற பிரபஞ்சம் ‘, என்னும் அகிலாண்டத்தின் காட்சி அவரது  தீர்க்கமான, தெளிவான கற்பனை வளத்தைக் காட்டுகிறது! ‘பிற அண்டங்களில் அறிவு மிக்க உயிரினங்கள் வாழாவிடின், கடவுள் அண்டங்களை வீணாகப் படைத்து விட்டார் என்று குறிப்பிடலாம்”! பரிதி பூமிக்கு மிக நெருங்கி யிருக்கும் ஓர் சாதாரண விண்மீன் என்று கருதினார், புருனோ! அதைப் போல் எண்ணற்ற பரிதிக் குடும்பங்கள் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்! பிரபஞ்சத்தில் ஒருவித ‘ஐக்கிய முறைகள்’ [Patterns of Unity] இருக்க வேண்டுமென அவற்றைத் தேடினார்! “ஒரு வடிவத்தின் சிறப்பு முறைப்பாடு, அதனுள்ளேயே அடங்கி யுள்ளது! அதில் உள்ள பிண்டம் [Matter] குறிப்பான மோனாடு அல்லது துகள் [Monads or Minima] என்னும் அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது”! புருனோவின் தத்துவங்களை டச் வேதாந்த மேதை ஸ்பைனோஸா [Spinoza (1632-1677)] பின் தொடர்ந்தார். அவையே பின்னால் நவீன வேதாந்தத்தின் [Modern Philosophy] முன்னோடி ஆயின! மத வெறியர்கள் கொடுமைக்குப் பலியான புருனோ, தியாக விஞ்ஞானியாக வரலாற்றில் தனித்துவம் அடைகிறார்!

Galileo

காபர்னிகஸ் நியதியின் குறைகளும் நிவிர்த்தியும்!

காபர்னிகஸ் விளக்கிய பரிதி மையக் கோட்பாடில், டாலமியின் நியதிபோல் சில தவறுகளும் இருந்தன! அண்டக் கோள்கள் யாவும் ‘வட்ட வீதியில் சீரான வேகத்தில்’ [Uniform Motion in Circular Orbits] சுற்றி வருவதாக அவர் கருதினார்! டாலமியும் அதே கருத்தைக் கூறினார்! பரிதிக்கும், கோளுக்கும் உள்ள தூரங்கள் சுற்றும் போது மாறுபடுவதை அவரது நியதி விளக்க முடியவில்லை! அதுபோல் கோள்கள் பரிதியை நெருங்கும் போது விரைவான வேகத்திலும், அப்பால் விலகும் போது குறைவான வேகத்திலும் செல்வதை அவரது நியதி விளக்க முடியவில்லை! அவரது கோட்பாடு மெய்யான தென்று பின்பற்றி மென்மேலும் விருத்தி செய்தவர்கள் புருனோ, கெப்ளர், காலிலியோ போன்ற வானியல் மேதைகள். புருனோ முடிவற்ற பிரபஞ்சத்தை விவரித்து, அங்கே எண்ணற்ற உலகங்கள் இருக்கலாம் என்றார்! டைசோ பிராஹே இருபது ஆண்டுகளாய் ஆராய்ந்து சேகரித்த கோள்களின் நகர்ச்சி அட்டவணையைப் பயன்படுத்திக் கெப்ளர், ஒப்பற்ற ‘அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைப்’ [Laws of Planetary Motion] படைத்தார்! கெப்ளரின் அரிய முப்பெரும் விதிகள் காபர்னிகஸ் நியதியின் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கியன! அண்டங்கள் நீள் வட்ட வீதிகளில் [Elliptical Orbits] சுற்றுவதாக கெப்ளர் எடுத்துக் காட்டி, வட்ட வீதியில் ஏற்படும் வேக, தூரப் பிரச்சனைகளை நீக்கினார்!

காபர்னிகஸ், கெப்ளர் தோள் மீது நின்று கொண்டு, காலிலியோ தான் செய்த தொலைநோக்கி வழியாக முதன் முதல் வெள்ளியைப் [Venus] பிறை வடிவில் கண்டு, அது பரிதியைச் சுற்றி வருகிறது என்று நிரூபித்துக் காட்டினார்! கெப்ளர், காலிலியோ ஆகியோர் தோள் மீது நின்று கொண்டு, ஸர் ஐஸக் நியூட்டன் தனது அண்டக்கோள் யந்திரவியல் [Celestial Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravity], ஒளியியல் [Optics] போன்ற புதிய கணித விஞ்ஞானத் துறைகளைப் படைத்தார்!

Fig 11 Nicolaus Copernicus

காபர்னிகஸ் 1543 மே 24 ஆம் நாள் காலமானார். நாசா [NASA] 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 இல் காபர்னிகஸ் பெயரில் சுழல்வீதி விண்வெளி நோக்ககம் [Orbiting  Astronomical Observatory, OAO-3] ஒன்றை ஏவியது! அது ஒளி மின்னியல் பட்டைமானி [Photo-electric Spectrometer] ஒன்றையும் 31′ விட்டமுள்ள தொலை நோக்கியையும்  தூக்கிக் கொண்டு அண்ட கோளங்கள், விண்மீன்கள், ஒளிமயப் பால்வீதிகள் ஆகியவற்றின் உட்துகள்களை [Components] எட்டாண்டு காலம் ஆராய்ந்தது!

++++++++++++++++

தகவல் :

1.  Wikipedia Document : Jantar Mantar Jaipur Observatory (Oct 25, 2009)

*************

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  October 29, 2009.

விண்வெளி மீள்கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா

அக்டோபர் 22, 2009

Kalpana Chawla

(1962-2003)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா


நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு!

திருவள்ளுவர் [நிலையாமை]


விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!

2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள்’ என்னும்  புத்தகத்துக்குக் கல்பனா செளலாவை நேர்முக வினாக்கள் கேட்ட கனடாவின்  எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: “கல்பனா விண்வெளித்  தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக்  கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும்  வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா  பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் பட்டார்!  மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில்  ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி  புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்!” இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப்  போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடாரென மின்னல் போல்  மறைந்தது!

Fig 1 Kalpana Chawla -1

பாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது  விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில்  விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு அமெரிக்கா நோக்கிச்  சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace  Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில்  விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று,  நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனா செளலாவைப்  போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறாரா ?

எட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை  விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும்  சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ?  “காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை  நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது! இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு! இனிய கனவு! அதுவும் மற்றும் ஒரு முறை!”  கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க் கனவிலிருந்து விடுபட்டு நம்மைக் காண மீண்டும் விழிக்கவே வில்லை!

Fig 2 Kalpana Chawla Group Astronauts

பாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு  வருந்தல் தந்தி அனுப்பினார்: “இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர்  அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர்  பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து,  பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது!”

மீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்!

கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி  நுணுக்க யந்திரம்! 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன! தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில்  விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே! அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்!

Fig 3 Bye Bye Every Body

ஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ?  விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது ?

நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும்  கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம்  நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்! பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா செளலா விண்கப்பலில் வந்து  இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி  நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்!

Fig 4 The Beginning of the End

கொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி,  வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன்  [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச்  சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல்  கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா செளலா  [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில்  மாண்டனர்! ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி! மற்ற ஆறு பேரும் அமெரிக்கர்! இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா செளலா இரண்டாம் முறையாக  விண்கப்பலில் பயணம் செய்தவர்!

விண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது!

1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space  Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida]  ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது!  விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள்  [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்!

Fig 5 The other Crew Astronauts

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர்,  இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது! பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது!

ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! பிழைத்திருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளைச் செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது.  இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது!

Fig 7  Kalpana chawla in the Control Console

காலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு’  [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார்! கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்..  விண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.  பூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு,  பூமண்டல ‘மீட்சிக்கு’ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது! உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph.  ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்!  உச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.  பூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன! கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது!

Fig 8 Kalpana Chawla inside the Space shuttle

விண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன ?

கொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன!  அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை’ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும்,  வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம்! 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது  இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள்’ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண  அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது  சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன! கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம்  [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது! ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்!

கொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன! அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன! கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue]  பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6'x6', தடிமன்: 0.5'-3.5'] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன!  விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச  ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை! அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை! 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓட்டைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும்  ஏற்படாது! விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா! அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced  Carbon] அவை மூடப்பட்டுள்ளன.

Fig 9 Kalpana Chawla with the Group

வெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும்! விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு! அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம்  சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம்! கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின்  நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று  ஒரு கருத்து உலவி வருகிறது! அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம்! வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல  உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்! இறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது!  பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல  மாதங்கள் ஆகலாம்!

விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்

கொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல்  [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர்.  1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை  விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன்  இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர்! அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச்  சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்! திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Fig 10 Kalpana in Spacehab

வில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை  ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர்.  அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  இரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம்! மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம்!  அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு!

கொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன்  அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி. விண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம். இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று  புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.

Fig 11 Ramon Floating

பாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை

நாற்பத்தி ஒன்று வயதான கல்பனா செளலா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர்! முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா!  இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்!

‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா  [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா’ என்று கல்பனா செளலா ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை! டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர்! இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள்! விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத் துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்!

Fig 12 Kalpana Chawla Remembered

1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace  Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார்! கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்! அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].

முதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames  Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows  around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission]  பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission  STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு  செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்!

Fig 13 Space Shuttle Exploding Scenerio

1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார்! ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்!  2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது! விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107]!  அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்!

கொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்

1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில்’ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.

2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]

3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]

4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]

5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]

6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]

Fig 14 Spaceship Fallen Parts

7. சீர் போக்குப் புகைத் தணல் அடுப்புச் சோதனை [Combustion Module with Laminar Soot Processes]

8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]

9. கீழ் லூயிஸ் எண்ணில் தீக்கோள அமைப்புச் சோதனைகள் [Structures of Flame Balls Experiments at Low Lewis-number]

10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]

11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]

12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]

Fig 15 Space Shuttle Columbia

விண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்

1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது!  விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது!  ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்!

Fig 16 Johnson Space Center

1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன!  விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code  Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன!

சென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும்,  பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில்  பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத்  துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்!  விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்!

Fig 18 Kalpana Chawla Bidding Bye

கொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது! 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது! 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100  விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்து போய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத்  தொகையும் மறைந்து போனது! எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்!

****************

S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  (October 22, 2009)

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

அக்டோபர் 22, 2009

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“நோய் பீடித்துள்ளது
பூகோளத்தை !
குணமாக்க
மருத்துவம் தேவை !
காலநிலை மாறுதலுக்குக்
காரணங்கள் பல்வேறு !
கரங் கோத்துக் காப்பாற்ற
வர வேண்டும்
பல்லறிஞர் !
சிந்தனை யாளர் பங்கெடுப்பும்,
எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும்,
செல்வந்தர் நிதி அளிப்பும்,
புவிமாந்தர்
கூட்டு ழைப்பும்
தேவை ! தேவை ! தேவை !”

ஜெஃப்ரி குளூகர்,
டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர்
[Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

சூடு காலம் வருகுது !
புவிக்குக்
கேடு காலம் வருகுது !
நாடு, நகரம், வீடு, மக்கள்
நாச மாக்கப் போகுது !
புயல் எழுப்ப வருகுது !
பூத மழை பொழியப் போகுது !
நீரை, நிலத்தை, குளத்தை,
பயிரை, உயிரை, வயிறை
முடக்கிப் போட வருகுது !
கடல் வெப்பம்,
நீர் மட்டம் ஏறி
கரை நகர் மூழ்கப் போகுது !
மெல்ல மெல்ல ஏறி
வெப்பம்,
மேலே மீறிப் போகுது !
சூட்டு யுகப் பிரளயம்,
வீட்டை நோக்கித் தாக்குது !
உன்னை, என்னை, உலகின்
கண்ணை ஒன்றாய்ப்
பிதுக்கப் போகுது !


“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

“ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

“கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆ·பிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

(தொடரும்)

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

4.  BBC News "China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

5.  BBC News "Humans Blamed for Climate Change." (June 1, 2007)

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 22, 2009)

விண்வெளி மீள்கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா

அக்டோபர் 19, 2009


Kapana Chawla

Kalpana Chawla Ph.D.
(1962-2003)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா


நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு!

திருவள்ளுவர் [நிலையாமை]


விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!

2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா செளலாவை நேர்முக வினாக்கள் கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் பட்டார்! மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்! ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடாரென மின்னல் போல் மறைந்தது!

Kalpana Chawla Group Astronauts

பாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில் விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு அமெரிக்கா நோக்கிச் சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று, நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனா செளலாவைப் போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறாரா ?

எட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும் சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ? ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது! இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு! இனிய கனவு! அதுவும் மற்றும் ஒரு முறை! ‘ கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க்கனவிலிருந்து விடுபட்டு மீண்டும் விழிக்கவே வில்லை!

பாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு வருந்தல் தந்தி அனுப்பினார்: ‘இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர் அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர் பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து, பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது! ‘

மீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்!

கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்! 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன! தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே! அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்!

Kalpana Chawla in Training

ஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ? விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது ?

நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும் கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம் நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்! பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா செளலா விண்கப்பலில் வந்து இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்!

Kalpana Chawla inside the Space shuttle

கொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி, வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன் [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச் சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல் கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா செளலா [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில் மாண்டனர்! ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி! மற்ற ஆறு பேரும் அமெரிக்கர்! இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா செளலா இரண்டாம் முறையாக விண்கப்பலில் பயணம் செய்தவர்!

விண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது!

1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது! விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது! பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது!

ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது!

காலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு ‘ [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார்! கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்.

விண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.

பூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு, பூமண்டல ‘மீட்சிக்கு ‘ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது! உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph. ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்!

உச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.

பூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன! கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது!

Kalpana chawla in the Control Console

விண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன ?

கொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன! அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம்! 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன! கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது! ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்!

கொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன! அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன! கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 'x6 ', தடிமன்: 0.5 '-3.5 '] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன! விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை! அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை! 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது! விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா! அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced Carbon] அவை மூடப்பட்டுள்ளன.

வெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும்! விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு! அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம்! கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது! அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம்! வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்!

இறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது! பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்!

விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்

கொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல் [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். 1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன் இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர்! அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்! திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Husband, Ramon, McCool

இரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம்! மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம்! அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு!

கொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன் அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி.

விண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம்.

Brown & Anderson

இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.

பாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை

நாற்பத்தி ஒன்று வயதான கல்பனா செளலா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர்! முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா! இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்!

Dr. Clark

‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா ‘ என்று கல்பனா செளலா ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை! டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர்! இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள்! விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்!

Kalpana Chawla

1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார்! கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்! அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].

Kalpana Chawla Remembered

முதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission] பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்!

1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார்! ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்!

2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது! விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107]! அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்!

கொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்

1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில் ‘ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.

2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]

3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]

4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]

5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]

6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]

Kalpana Chawla with the Group

7. சீர் போக்குப் புகைத் தணல் அடுப்புச் சோதனை [Combustion Module with Laminar Soot Processes]

8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]

9. கீழ் லூயிஸ் எண்ணில் தீக்கோள அமைப்புச் சோதனைகள் [Structures of Flame Balls Experiments at Low Lewis-number]

10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]

11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]

12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]

Kalpana in Spacehab

விண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்

1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது!

விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது! ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்!

Kalpana Chawla -1

1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன! விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன!

சென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்!

கொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது! 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது! 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது! எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்!

Kalpana Chawla Bidding Bye

****************

jayabarat@tnt21.com (October 19, 2009)  S. Jayabarathan

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு !

அக்டோபர் 16, 2009

Cover Image Huge Ring

(கட்டுரை: 65)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


அணுவின் வடிவைக் கண்டோம்
அணுவுக்குள் கருவான
நுணுக்கக் குவார்க்குகள்
அறிந்தோம் ! ஆனால்
கோடி மைல் விட்ட முள்ள
வாடாத மாலை -
வானத்துப் பூத வளையத்தைக்
காணாமல் போனோம் !
அண்டவெளிக் கப்பல்களும்
விண்நோக்கி விழிகளும்
கண்மூடிப் போயின !
சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட
பனித்த வெளி
மங்கொளி மாலையா ?
அல்லது
ஒளித் தலை வட்டமா ?
பரிதிக் கோள் மண்டத்தில்
பிரமாண்ட மான
சொப்பன ஒளி வளையம் !
இப்பெரு
ஒப்பனை வளையத்தை
எப்படிச்
சனிக்கோள் தன் கழுத்தில்
அணிந்தது ?

Fig 1 Saturn' Biggest New Ring

“ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.  அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.”

ஆன்னி வெர்பிஸெர் (Anne Verbiscer, Scientist, University of Maryland)

“அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத்துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

Fig 1A NASA Spitzer Telescopeஇதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவிக் கப்பலே உன்னத வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது.  மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.

டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனி நிலவு, பூர்வீகப் பூமி உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் !

டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

Fig 1B Cassini-Huygens Spaceship

சனிக்கோளின் ஒளிந்திருந்த பூத உரு வளையம் !

2009 அக்டோபர் 6 ஆம் தேதி அமெரிக்க மேரிலாண்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் நாசா ஸ்பிட்ஸர் விண்ணோக்கி மூலம் (NASA Spitzer Space Telescope) பரிதி மண்டலத்திலே மிகப் பெரிய மங்கலான ஒளிவளையம் ஒன்று சனிக்கோளைச் சுற்றி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.  இந்த மகத்தான ஒளிவளையம் இதுவரைச் சாதாரண தொலைநோக்கியின் விழிகளுக்குத் தென்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம் !  அடுத்து 21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் உட்சிவப்புக் கருவியுடைய ஸ்பிட்ஸர் தொலைநோக்கி (Infrared View Spitzer Space Telescope) அதைக் கண்டுபிடித்துப் படமெடுத்தது ஒரு விந்தை !  அந்தக் கண்டுபிடிப்பு சனிக்கோள் சந்திரன்கள் இரண்டின் 300 ஆண்டு வானியல் புதிரை விடுவித்தது அடுத்து எழும் ஒரு பெருவியப்பு !

“ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.

Fig 1A Cassini-Huygens Path

அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.” என்று மேரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானி ஆன்னி வெர்பிஸெர் கூறினார்.  2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது.

மேலும் ஆன்னி வெர்பிஸெர் கூறியது : “சனிக்கோளைச் சுற்றிவரும் மற்றோர் சந்திரனின் புதிரையும் நாங்கள் தீர்க்க முடிந்தது !  ஐயாபீடஸ் (Iapetus) என்று அழைக்கப்படும் சனிக்கோளின் நெருக்கச் சந்திரன் ஒரு நூதனத் தோற்ற முகப்பு கொண்டிருந்தது.  வானியல் விஞ்ஞானிகள் அதை ‘இன் யாங் சந்திரன்’ (Yin Yang Moon) என்று விளித்தனர் !  காரணம் அதற்கு ஒளிமுகம் ஒருபுறமும், கருமுகம் மறுபுறமும் காணப் பட்டது !”  முன்னூறு ஆண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் இதற்குக் காரணங்களைக் காண முடியவில்லை !  ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஃபோய்பி சந்திரனுக்கும், ஐயாபீடஸ் சந்திரனுக்கும் ஒரு தொடர்பு உள்ளதாக ஒரு கொள்கை உருவானது.  இப்போது கண்டுபிடித்த சனிக்கோளின் பூத வளையமே அவ்விரண்டு சந்திரன்களுக்கும் உள்ள முக்கிய இணைப்பைக் காட்டியது !

Fig 1D Saturn's Rings Discovery

சனிக்கோள் பூத வளையத்தின் அளவுகள் & உட்துகள்கள்

“ஃபோய்பி சந்திரனில் ஏற்பட்ட விண்கற்களின் தாக்குதல்களில் சிதறுய தூசி, துகள்களே பூத வளையத்தின் உட்துகள்களாகப் படிந்தன,” என்று மைக்கேல் ஸ்குரூட்ஸ்கி கூறினார்.  பூத வளையத்தின் தூசி துகள் அல்லது ஃபோய்பி சந்திரனின் தூசி துகள் ஐயாபீடஸில் பட்டு ஒருமுகத்துச் தூசியாய் ஒட்டி இருக்கலாம் என்று கருதுகிறார்.  பூத வளையக் கண்டுபிடிப்பு இப்போது அதற்கு உட்துகள் அளித்த ஊட்டுச் சேமிப்பையும் நிரூபித்தது !  பரிதி மண்டல வரலாற்றில் பல செ.மீடர் அல்லது மீடர் அளவு தூசிகள் ஃபோய்பி சந்திரனில் படிந்திருக்கலாம் என்றும் மைக்கேல் கூறினார்.

“பூத வளையத்தின் அளவு மிகப் பெரியது” என்று ஆன்னி வெர்பிஸர் கூறினார்.  “நீங்கள் பார்க்க முடிந்தால் அந்த அசுர வளையம் பூமியின் ஒரு நிலவைச் சனிக்கோளின் ஒவ்வொரு புறமும் வைத்தால் எத்தனை அகற்சியில் தென்படுமோ அத்தனை அகண்ட விட்டம் உடையதாக இருக்கும்.  அந்த விரிப்புக் கோளத்தில் சுமார் ஒரு பில்லியன் பூமிகளை இட்டு நிரப்பலாம்.  பூத வளையத்தின் அகலம் 20 சனிக்கோள்களை ஒன்றின் மீது ஒன்றை அடுக்கிய அளவுக்குத் தடிப்புள்ளது !  புதிய வளையத்தின் விட்டம் சனிக்கோளின் விட்டத்தைப் போல் சுமார் 300 மடங்கு நீளமிருக்கும் !

Fig 2 Saturn Rings

சனிக்கோளின் பழைய வளையங்களுக்கும் புதிய பூத வளையத்திற்கும் முக்கியமான வேறுபாடுகள் இரண்டு.  மேலும் ·போயிபி சந்திரன் சுற்றுப் பாதையும் மற்ற சந்திரன்களை விட வேறுபடுகிறது.

1.  புதிய வளையம் பழைய வளையங்களின் சுற்றுத் தள மட்டத்திலிருந்து 27 டிகிரி கோணத்தில் சரிந்து சனிக்கோளைச் சுற்றுகிறது.

2. புதிய வளையம் சனிக்கோளின் பழைய வளையங்களுக்கு எதிரான வட்டப் பாதையில் சுற்று கிறது.

3. புதிய வளையத்தின் உள்ளே அதே திசைப்போக்கில் அத்துடன் சனியைச் சுற்றும் ·போய்பி சந்திரன் சனிக்கோளின் மற்ற சந்திரன்களுக்கு எதிராகச் சுற்றி வருகிறது.

4. பூத வளையத்தின் மறை முகில் தோற்றம் (Ghostly Appearance) விந்தையானது.  அது ஒரு முகில் வளையம்.  சாதாரணப் புகையை விட அந்த முகில் வளையம் ஒரு மில்லியன் மடங்கு கீழான
ஒளி ஆழம் (Optical Depth) உடையது !

5.  புதிய முகில் வளையத்துக்குப் புதுப் பெயரிடுவது அகில நாட்டு வானியல் ஐக்கிய அவையின் (International Astronomical Union) பொறுப்பு.  பெயர் பின்னால் வெளியிடப்படும்.

Fig 2 Saturn's Biggest Ring & Two Moons

புதிய முகில் வளையத்தின் இருப்பும் பண்பாடுகளும்

பூத வளையம் வெளிப்புறச் சந்திரன் ·போயிபி சுற்றும் பாதையில் சனிக்கோளிலிருந்து சுமார் 12.5 மில்லியன் கி.மீடர் (7.5 மில்லியன் மைல்) தூரத்தில் உள்ளது !  சனிக்கோளின் பழைய வளையங்களில் அடுத்துப் பெரிய ‘ஈ’ வளையம் (‘E’ Ring) சனிக்கோளிலிருந்து சுமார் அரை மில்லியன் கி.மீடர் (0.3 மில்லியன் மைல்) தொலைவில் இருக்கிறது. சனிக்கோளின் முக்கிய பழைய வளையங்கள் ஏழு (Rings : A to G).  அவற்றில் இருப்பவை :  பனிப் பாறைகள், பனித் தூசி, பனித் துகள்கள்.  அவற்றுள் இடைவெளிகளும் உள்ளன.  ·போயிபி சந்திரன் சனிக்கோளிலிருந்து சுமார் 13 மில்லியன் கி.மீடர் (7.8 மில்லியன் மைல்) தூரத்தில் சுற்றுகிறது.

பூத வளையத்தின் குளிர்ந்த உஷ்ணம் : 80 டிகிரி கெல்வின் (- 316 டிகிரி F). அந்த தணிந்த உஷ்ணத்தில் புது வளையம் வெப்பக் கதிர்வீச்சால் (Thermal Radiation) ஒளிவீசுகிறது.  பூத வளையத்தின் பளு மிக்க பகுதி சனிக்கோளின் விளிம்பிலிருந்து 6 மில்லியன் கி.மீடரில் (3.7 மில்லியன் மைல்) ஆரம்பித்து 12 மில்லியன் கி.மீடர் (7.4 மில்லியன் மைல்) தூரம் வரை நீள்கிறது என்று ஒரு விஞ்ஞானத் தகவல் கூறுகிறது.

The Ring System

சனிக்கோளுக்கு 60 சந்திரன்கள் (2009 ஆண்டு வரை) இருப்பதாக இதுவரை அறியப் பட்டுள்ளது.  ·போயிபி சந்திரன் சிறியது.  அதன் விட்டம் 200 கி.மீடர் (124 மைல்).  ஐயாபீடஸ் சந்திரன் சற்று பெரியது.  அதன் விட்டம் : 1500 கி.மீடர் (932 மைல்).

2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஸ்பிட்ஸர் விண்ணோக்கி சனிக்கோளை நோக்கித் தகவல் அனுப்பும்.  அதிலும் 20 நாட்கள்தான் முக்கிய பகுதிகளை உளவி அறிய முடியும் என்று ஆன்னி வெர்பிஸெர் கூறுகிறார்.

Fig 5 Saturn's Old Rings

சனிக்கோளின் தனித்துவ மகத்துவ ஒளிவளையங்கள்

சூரிய மண்டலத்திலே நீர்மயமான பூமியைப் போல் தனித்துவம் பெற்றது ஒளிமய வளையங்கள் அணிந்த எழிலான சனிக்கோள் !  நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது !  சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712].  முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை ! கால வேறுபாட்டால் பிறகு சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்!

Fig 6 Saturn's 60 Moons

1655 இல் ஹியூஜென்ஸ் முதன்முதல் சனியின் துணைக்கோள் டிடானைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்ற தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்!  1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.

அதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணிதஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் வளையங்கள் தெரியாது சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது!

Fig 1C Gaseous Saturn

சனிக்கோள் வளையங்கள் எப்படி உருவாயின என்பது புதிரே

பனித்தோல் மூடிய துணுக்குகள், தூசிகள் நிரம்பிய சனியின் வளையங்கள் பரிதியின் ஒளியை எதிரொளிக்கின்றன !  அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன.  ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது.  பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை !  பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள்.  அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது !  செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங்களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடியவில்லை !  சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது !  பேராசிரியர் மிசியோ காக்கு கூறியது போல் இந்த புதிய நூற்றாண்டில் சனிக்கோளின் அந்த நூதனப் புதிரை யாராவது ஒரு விஞ்ஞானி விடுவிக்கப் போகிறார் என்று நாம் எதிர்பார்க்கலாம் !

Fig 6 Sunrise over Saturn Planet

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
15 Skymania.com : Saturn’s Biggest Ring is Out of Hiding By : Paul Southerland (October 7, 2009)
16 Associated Press : NASA Telescope Discovers Giant Ring Around Saturn (October 6, 2009)
17 The Cavalier Daily : University Researchers Find Large Saturn Ring By : Katherine Raichlen (October 8, 2009)
18 NASA Release : NASA Space Telescope Discovers Largest Ring Around Saturn By : Whitney Clavin (October 6, 2009)
19 Astronomers Discover Solar System’s Largest Planetary Ring Yet Around Saturn (Update) By : John Matson (October 7, 2009)
20 NASA Report : The King of Rings – Saturn’s Infrared Ring (October 6, 2009)

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 15, 2009